சரசுவின் சௌந்தர்ய லஹரி
கதையாசிரியர்: கவிஞர் கண்ணதாசன்
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 18, 2026
பார்வையிட்டோர்: 141
(1980ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அத்தியாயம் 25-27 | அத்தியாயம் 28-30
28. கரகரப்ரியா

சிவ காரியங்களில் சில மனிதர்களுக்கு ஐயம் நோன்றும். ஆனாலும் அதைச் செய்தே தீருவதென்று ஒரு நாள் மாலை முடிவு கட்டிக் கொள்வார்கள். மறுநாள் காலையில் மீண்டும் ஒரு அச்சம் தோன்றும். வேண்டாம் என்று முடிவு கட்டுவார்கள். ஒவ்வொரு கணத்திலும் அவர்கள் புத்தி மாறிக்கொண்டே போகும். அதுபோலவே அவர்கள் செய்ய விரும்பும் காரியமும் தள்ளிக் கொண்டே போகும்.
சரசு, இந்த நிலையில்தான் இருந்தாள். திடீர் முடிவுகள் அவளை மாறி மாறி அலைக்கழித்தன.
‘என்னதான் நீயும் அவரும் சேர்ந்து வாழலாம் என்று பாமா சொன்னாலும், அவள் நெஞ்சிலே மீண்டும் ஒரு பயம் தோன்றிற்று. கட்டிய கணவன் மீண்டும் ஒருமுறை அவளைத் தொட்டுவிட்டதால் தோன்றிய பயம், அது.
இந்த விஷயத்தில் பாமாதான் இப்போது பெரிய ராட்சசியாக விளங்கினான். ராஜேந்திரன் எதிலும் குறுக்கிடவில்லை. ஜெயசந்திரன் எதுவும் பேசவுமில்லை.
மளமளவென்று கோடைக்கானலுக்குச் சென்றதும், தாங்கள் இருந்த வீட்டில் ஒரு பகுதியையே ஒதுக்கி கொடுத்துவிட்டாள் பாமா.
பழைய மெத்தையில் புதிய விரிப்புகள். ஜன்னலுக்கும் புதிய திரைச் சிலைகள் எல்லாம் போட்டு முடித்தபோது, பாமாவுக்குத்தான் திருப்தியாக இருந்தது. சரசுவுக்கு உடம்பு ஏதோ செய்வது போல் தோன்றிற்று.
திடீரென்று அவள் வாந்தி எடுத்தாள். அவள் வாந்திக்கு என்ன அர்த்தம் என்று அவளுக்குத் தெரியும்!
தாய் அறியாத கர்ப்பமா?
சாந்தி முகூர்த்தம் நடந்து ஐந்து மாதங்களாகி விட்டன. சரசு தான் கருவுற்றிருப்பதைத் தெய்வம் இவ்வளவு தாமதமாக உணர்த்திற்று.
அக்காளின் தலையைப் பிடித்து விட்டாள், பாமா. தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள். வாந்திக்குக் காரணம் எதுவானால் என்ன? இருவரையும் வாழவைத்து விடுவது என்றுதான் அப்போதும் முடிவு கட்டினாள்.
ஆனால் மசக்கை நிலையில் ஒருவருக்குத் தரித்த குழந்தையோடு, இன்னொருவரிடம் உடலுறவு கொள்வதை அவள் மனச்சாட்சி ஒப்புக் கொள்ளவில்லை.
தனது விதி மிகவும் கடுமையாக இருப்பது போல் அவளுக்குத் தோன்றியது.
கல்யாணம் முடித்து கணவனோடு நன்றாகவே வாழத் தொடங்கிய அவளுக்கு, இந்தப் பூர்வ ஜன்ம ஞாபகம் ஏன் வர வேண்டும்? அது வேறு பாதையில் அவளை ஏன் தள்ள வேண்டும்? தள்ளிவிட்ட இடத்திலும் தவறி விடாமல் ஏன் காப்பாற்ற வேண்டும்?
சில விதிக்கோடுகள் நான்கு திசைகளையும் நோக்கிப் பயணம் செய்கின்றன. மனிதர்களின் புத்தியை அவை மயங்க அடிக்கின்றன. சரசு ஒரு கேள்விக்குறியில் ஆழ்ந்தாள்.
அந்தக் கேள்விக்குறி வேறு யார் மீதும் விழவில்லை.
ஒருவனிடமிருந்து இன்னொருவனிடம் போய் வாழ்வது என்று முடிவு கட்டிவிட்ட பிறகு, அதிலே வயிற்றிலிருக்கும் குழந்தையை யார் கவனிக்கிறார்கள்? அந்தக் குழந்தையின் மீது கறைபடுமே என்று யார் கவலைப்படுகிறார்கள்?
ஆனால், சரசு கவலைப்பட்டாள். ‘தனக்கு இரண்டு பக்கமுமே வாழ்வில்லை’ என்று முடிவு கட்டிக் கொண்டாள்.
இப்போது தற்கொலை செய்து கொள்வதென்றால், அது ஒரு கொலையோடு போகாது. இன்னொரு குழந்தையையும் சேர்த்துக் கொல்ல வேண்டியிருக்கும். கணவனிடம் போக முடியாது. ஜெயசந்திரனோடு வாழ்ந்தாலும் பிறக்கப் போகும் குழந்தைக்கு சமூக அந்தஸ்து இருக்காது.
அல்லாடினாள், ஊசலாடினாள்.
ஆனால் இப்போது அவளிருந்த இடத்தில் பாமா இருந்தாள்.
எது நடந்தாலென்ன வாழ்க்கைதான் முக்கியம் என்பதில், பாமா தான் அதிக அக்கறை காட்டினாள். உலகத்தையும், சமூகத்தையும் எதிர்த்துப் போரிட அவள் தயாராக இருந்தாள்.
ஆனால் கேள்விக்குறி அவளைச் சுற்றி விழவில்லையே?… சரசுவைச் சுற்றியல்லவா விழுந்துவிட்டது.
மயங்கிய நிலையில் கட்டிலில் படுத்திருந்த சரசுவிடம், அவள் தன் துணிச்சலான வாதத்தை ஆரம்பித்த போது. “சரி, எல்லாம் நாளைக்குப் பேசிக் கொள்ளலாம்” என்று சொல்ல மட்டுமே சரசுவால் முடிந்தது.
இந்தப் பிரச்னைகளில் குழம்பிப் போன ஜெயசந்திரன் தன்னுடைய அறைக்குப் போய்விட்டான்.
அன்று இரவு நடுநிசியில், ஏதோ ஒரு கனவு சரசுவை உலுக்கிறது. நடுங்கும் குளிரில் யாருக்கும் தெரியாமல் எழுந்து அவள் வெளியேறினாள்.
மீண்டும் அதே கோவில்.
ஆளரவமற்ற கோடைக்கானல் மலையில் சரசு ஒரு துணிச்சல்காரி போல் சென்று கொண்டிருந்தாள்.
அவள் தானாக நடக்கவில்லை. ஏதோ ஒன்று அவளை நடத்திற்று. தூக்கத்தில் நடப்பதைப் போலத்தான் நடந்து சென்றாள்.
வழக்கம் போலவே அங்கு அகல் விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்தது. முன்புறத்துப் பளிங்குத் தரையில் பனி படர்ந்திருந்தது. தேவியின் முன்னால் படுத்து சரசு அழுதாள்.
அவளுக்கு ஆறுதல் சொல்ல இப்போது யாருமில்லை. கல்யாணமே செய்து கொள்ள விரும்பாத அவளை இவ்வளவு தூரம் வம்பில் இழுத்து விட்ட சாரதாம்பாளையும் காணவில்லை.
பொழுது விடிந்துவிட்டது.
வீட்டிலே பாமா சரசுவுக்குக் காப்பி கொடுப்பதற்காகத் தேடினாள். கட்டிலில் அவளைக் காணாமல் திடுக்கிட்டாள்.
‘காவடி காணாமல் போய் விட்டால் குன்றக்குடியில் தேடு’ என்பார்கள். சரசு காணாமல் போனால் தேடக் கூடிய இடம் தேவியின் கோவில் ஒன்று தானே!
ராஜேந்திரனை இழுத்துக் கொண்டு அங்கே ஓடினாள் பாமா.
அங்கே குப்புறப்படுத்து மயங்கிக் கிடந்தாள் சரசு.
“இதோ பார் அக்கா, இன்னும் இந்த தேவியிடம் உனக்கு என்ன நம்பிக்கை? இனி நாம் நம்மைத்தான் நம்ப வேண்டும். அர்த்தராத்திரியில் எப்படித்தான் எழுந்து பயங்கரமான இந்தப் பாதைகளில் நடந்து வந்தாயோ? உன் வாழ்க்கை இப்படியா ஆகவேண்டும்? சரி. வா! எது வந்தாலும் சரி என்று வாழ்ந்து பார்த்துவிடு!” என்றாள் பாமா.
சிலர் இரும்பாக இருக்கிறார்கள். சிலர் மெழுகாக இருக்கிறார்கள். சில மெழுகுகள், வெய்யிலில் கூட உருகி விடுகின்றன. மற்றவர்களுடைய தைரியத்தைப் பார்த்தால் அந்த தைரியம் கூட நமக்கில்லையே என்ற ஆதங்கம் அவர்களுக்கு வருகிறது.
பாமா விடவில்லை. மேலும் மேலும் அக்காளை கரைத்தாள். காரணம் அக்காள் நிம்மதியாகச் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே!
வழக்கமான பழமொழி ஒன்று உண்ட ‘கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்’ என்று. சரசுவும் ஓரளவு கரைந்து விட்டாள்.
நீதி, நியாயம் பார்த்து நமக்கென்ன நியாயம் கிடைத்து விட்டது? ‘போன வழி போவோம். ஆனவழி ஆகட்டும்’ என்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பாமா சொன்ன படி தன்னை அலங்கரித்துக் கொண்டாள்.
“இதோ பார், பாமா! கொஞ்ச நாட்களாக நான் சௌந்தரிய லஹரியை மறந்து போய் விட்டேன். இப்போது அதைப் படிக்க வேண்டும் போல் எனக்குத் தோன்றுகிறது. எங்கே அதை எடு!” என்றாள் சரசு.
பாமா அதைக் கொண்டு வந்து கொடுத்தாள். அதிலிருந்து சில சுலோகங்களை சரசு பாடினாள்.
அவள் பாடிக் கொண்டிருக்கும் போதே உடனே புறப்பட்டு வரும்படி ஜெயசந்திரனுக்கு டெலிபோன் செய்தாள் பாமா.
ஜெயசந்திரன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டு வந்தான். அவன் வரும் வழியில் மூன்று சாலைகள் பிரியும் ஒரு இடம் உண்டு. மூலச் சாலையிலிருந்து பாக்கி இரண்டு சாலைகளும் பள்ளத்தில் இறங்கும் சாலைகள்.
நேரே அவன் வத்து கொண்டிருந்த போது, எதிரே முரட்டு லாரி இரும்புக் கம்பிகளை ஏற்றி வந்தது. இரண்டுக்கும் இடைவெளி கொஞ்ச தூரம் இருக்கும் லாரியின் முன் சக்கரம் வெடித்தது.
லாரி தன்னை நோக்கி வருகிறது என்பதைக் கண்ட ஜெயசந்திரன் பளிச்சென்று தன் காரைப் பள்ளத்தில் இறக்கினான். இறக்கிய வேகத்தில் ஒரு சிறிய மரத்தின் மீது மோதி அது நின்றது.
மோதிய வேகம் சற்று அதிகமாக இருந்ததால் காரின் முன்பகுதி காருக்குள்ளே நகர்ந்தது. அதனால் ஜெயசந்திரனின் இடது கால் நசுங்கிற்று.
அவன் வலி தாங்காமல் துடித்தான்.
எப்படியோ தன் லாரியை நிறுத்தி விட்ட லாரிக்காரன் ஓடி வந்து காருக்குள் சிக்கிக் கொண்டிருந்த ஜெயசந்திரனை வெளியேற்றினான்.
இடது கால் முன் பகுதியில் ரத்தம் பெருகிக் கொண்டிருந்தது. லாரிக்காரன் ஜெயசந்திரனின் விலாசத்தை விசாரித்தான்; பாமாவின் வீட்டு விலாசத்தை அவன் சொன்னான்.
ஆனால், உடனேயே, “அங்கே போக வேண்டாம்; ஆஸ்பத்திரிக்குப் போ!” என்றான் அவன்.
வழியில் வந்த கார்களில் ஒன்றை நிறுத்தி ஜெயசந்திரனை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனான் லாரிக்காரன்.
ஆஸ்பத்திரியில் இருந்தவர்கள் பாமாவுக்கு டெலிபோன் செய்தார்கள்.
பாமா பதறிப் போய் சரசுவிடம் விஷயத்தைச் சொன்னாள். சரசுவுக்கு விரக்தி கலந்த ஒரு சிரிப்பு வந்தது. சௌந்தரிய லஹரியை அவள் மூடி வைத்தாள்.
பாமா வற்புறுத்த சரசு தானும் ஆஸ்பத்திரிக்குப் புறப்பட்டாள்.
ஆஸ்பத்திரிக்குப் போய்ச் சேரும் வரை அவளொரு பைத்தியக்காரியைப் போலவே இருந்தாள்.
இத்தகைய நிகழ்ச்சிகளெல்லாம் ஏன் நடக்கின்றன என்று திட்டவட்டமாக அவளால் முடிவு கட்ட முடியவில்லை.
ஆனால் ஜெயசந்திரனை நேருக்கு நேர் பார்த்ததுமே அவள் அழுதுவிட்டாள். அவன் மயங்கிய நிலையில் இருந்தான்.
அவனிடம் யாரும் பேச்சுக் கொடுக்கக் கூடாது! என்று டாக்டர்கள் கண்டிப்பாகக் கூறி விட்டார்கள்.
ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் ஒரு பெண்மணி என்றும், பெயர் கமலாதேவி என்றும் சரசுவிடம் சொன்னார்கள்.
சரசுவும் பாமாவும் பெரிய டாக்டரைப் பார்ப்பதற்கு அனுமதி கேட்டார்கள். சில நிமிஷங்கள் கழித்து அவர்களுக்கு அனுமதி கிடைத்தது.
ஜெயசந்திரனின் கால் காப்பாற்றப்பட்டதா? என்ற. ஆதங்கத்தோடு இருவரும் பெரிய டாக்டரின் அறைக்குள் நுழைந்தார்கள். அங்கே டாக்டராக உட்கார்ந்திருந்தது சாரதாம்பாள் அம்மையாரே!
29. மத்யமாவதி
சரசுவுக்கு இப்போது திகைப்பும் வரவில்லை; கோபமும் வரவில்லை. இது அவளுக்கு மிகவும் பழக்கமாகி விட்டது.
முக்கியமான இடங்களிலெல்லாம் ஒரே உருவத்தைச் சந்திப்பது ஒரு வாடிக்கையாகி விட்டது.
பல நேரங்களில் அவள் ஆச்சரியப்பட்டது போலவே இப்போதும் ஆச்சரியம்தான் அடைந்தாள்.
கோவிலுக்குப் போனாலும், மாமியார் வீட்டுக்குப் போனாலும் காணப்படும் உருவம், ஆஸ்பத்திரியிலும் டாக்டராக இருக்குமானால் ஆச்சரியம் தானே பிறக்கும்? ஆனால் அந்த டாக்டரோ சரசுவைத் தெரிந்தவர் மாதிரி காட்டிக் கொள்ளவில்லை.
கண்களிலே தங்க பிரேம் போட்ட கண்ணாடி. கருப்புக் கரை போட்ட வெள்ளைப்புடவை, வெள்ளை ரவிக்கை, கழுத்திலே ஒரு துளசி மணிமாலை; நெற்றியில் விபூதி குங்குமப் பொட்டு. அந்தக் குங்குமப் பொட்டில் இருந்து அவர் விதவையல்ல என்பதையும், வெள்ளை சேலை டாக்டருக்கான உடை என்பதையும் சரசு தெரிந்து கொண்டாள்.
ஆனால் பாமாவுக்குத்தான் அந்த அம்மையாரைப் பார்ப்பது என்னவோ போல இருந்தது.
‘அவர் தங்கள் வாழ்க்கையில் விளையாடும் விதி’ என்று பாமா எண்ணினாள்
மூக்குக்கண்ணாடியை சற்றே மேலே தூக்கியவாறு. ”என்ன வேண்டும்?” என்று கேட்டார் அந்த அம்மையார்.
“இங்கே காரில் அடிபட்டு ஜெயசந்திரன் என்பவரைக் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். அவர் என் மைத்துனர். காயம் எப்படி இருக்கிறது என்பதை நீங்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டும்” என் நாள் பாமா.
“அதைக் கவனிப்பதற்கு நல்ல டாக்டர்கள் நிறைய இருக்கிறார்கள். இருந்தாலும் நானும் கவனிக்கிறேன். கொஞ்சம் அங்கே உட்காருங்கள். பத்து நிமிஷத்தில் இந்தப் பைலைப் பார்த்து முடித்து விடுகிறேன்” என்றார் அந்த அம்மையார்.
எப்போதுமே ஒருவரின் அவசரம் மற்றவர்களுக்கு சுலபத்தில் விளங்காது. ‘உயிர் போகிறதே’ என்று நோயாளி துடிக்கும் போது டாக்டர்கள், ரொம்ப நிதானம் காட்டுவார்கள்.
‘என்ன ஆகுமோ’ என்று கட்சிக்காரன் உயிரை விட்டுக் கொண்டிருக்கும் போது, வக்கில் கல்யாணம் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்.
வீட்டுக்குப் போய் உலை வைக்க வேண்டுமே என்று அரிசி வாங்க வரும் பெண்ணிடம், கடைக்காரன் மிகவும் நிதானமாக அரிசி அளப்பான்.
‘எருது வலி காக்கைக்குத் தெரியுமா?’ என்பார்கள்.
ஆஸ்பத்திரி பெரிய டாக்டரின் நிதானம் அவர்களுக்கு ஆத்திரத்தை மூட்டினாலும், சரசுவும் பாமாவும் பேசாமல் தான் நிற்க வேண்டி இருந்தது.
திடீரென்று அறையின் பாதிக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த பெரிய டாக்டர், சரசுவைப் பார்த்து, “எஸ். எஸ். கமான்” என்று சொன்னபடி, முன்னால் நடந்தார்.
அங்கே ஜெயசந்திரன் மயங்கிய நிலையில் வலி தாங்காமல் துடித்துக் கொண்டிருந்தான்.
அறுவை சிகிச்சை டாக்டர்கள் சிலர், அப்பொழுது தான் அவன் காலை எக்ஸ்ரே எடுத்து அங்கே கொண்டு வந்து போட்டிருந்தார்கள்.
பெரிய டாக்டரும், அவர்களும் பேசிக்கொண்டதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாக சரசுவுக்குப் புரிந்து விட்டது.
ஜெயசந்திரனின் இடது காலை எடுக்க வேண்டுமாம். காரணம், சேர்த்து ஓட்ட முடியாதபடி எலும்புகள் நொறுங்கிவிட்டனவாம்.
பாமா கலங்கிப் போய்விட்டாள். சரசு அழுது விட்டாள்.
அவள் ஏற்படுத்திக் கொண்டது புதிய பந்தமல்ல. அது அபரஞ்சிக்கும் நவகோடிக்கும் ஏற்பட்ட பந்தமல்லவா?
அவன் ஜெயசந்திரனுக்காக அழவில்லை. தனது முற்பிறப்புக் கணவன், நவகோடிக்காகவே அழுதாள்.
அன்று முழுவதும் அவர்கள் சாப்பிடாமலேயே அங்கே உட்கார்த்திருந்தார்கள்.
ஜெயசந்திரனின் இடதுகால் துண்டிக்கப்பட்டு விட்டது. முழுக்கப் பிரக்ஞைபற்ற ஜெயசந்திரனைப் பார்ப்பதற்கு ராஜேந்திரன், பாமா, சரசு மூன்று பேரும் அனுமதிக்கப் பட்டார்கள்.
தனக்குப் பிரியமான நாய்க்குட்டி துடிப்பதைக் கூட சில மனிதர்களால் தாங்க முடியாது. முழங்கால் வரை துண்டிக்கப்பட்ட ஜெயசந்திரனைப் பார்த்ததும் எப்படி அவர்களால் தாங்கிக் கொள்ள முடியும்?
சரசுவுக்கு தெய்வ நம்பிக்கையே குறையத் தொடங்கிற்று. வாழ்க்கை முழுவதிலும் தன்னைத் திசை திருப்பும் தெய்வத்திற்கு ‘பூஜை என்ன பூஜை?’ என்று கூட எண்ணினாள்.
அப்பொழுது பெரிய டாக்டர் அவளை மட்டும் அழைப்பதாக நர்ஸ் செய்தி கொண்டு வந்தாள்.
“ஏன் பாமாவும் வந்தாலென்ன?” என்று கேட்டாள் சரசு.
“அதென்னவோ தெரியவில்லை. உங்களை மட்டும் தான் அழைக்கிறார்கள்” என்றாள், நர்ஸ்.
“சரி. நீ போய் வா அக்கா!” என்றாள், பாமா.
சரசு போய்ப் பார்த்தபோது பெரிய டாக்டர் பட்டுச் சேலை கட்டியிருந்தார். அப்போது ஒரு புதிய அனுபவம் சரசுவுக்கு ஏற்பட்டது. முதற்தடவை பார்த்த போது ஏற்படாத அனுபவம் அப்பொழுது ஏற்படுவது போலத் தோன்றிற்று. ஒரு பயமும் பக்தியும் உருவாயின. கையைக் கட்டிக் கொண்டு அவர் சொல்வதை யெல்லாம் கேட்க வேண்டும் போல் தோன்றிற்று.
“கொஞ்சம் உட்காரம்மா?” என்றார் டாக்டர்.
சரசு உட்கார்ந்தாள்.
“இதோ பார்! என்னை உனக்குத் தெரியாதே தவிர உன்னை எனக்குத் தெரியும். நீ பத்துக்கோடிக்கு ஒருத்தியாக அவதரித்திருப்பவள். அபூர்வமாகச் சில பேருக்கு முன் ஜென்மத்தைப் பற்றிய எண்ணங்கள் தோன்றும். உனக்கு அது தோன்றியதில் வியப்பில்லை. ஆனால் உனக்குத் தோன்றிய நினைவுகள், உனக்கு விதிக்கப்பட்ட சோதனை. அதனால் தான் உனக்குத் திருமணமாகி, சாந்தி முகூர்த்தம் நடக்கும் வரை அந்த ஞாபகம் தோன்றாமல், எல்லாம் ஆன பிறகு தோன்றி இருக்கிறது. மூன்றாவது ஜென்மத்திலும் உன் வாழ்க்கை முழுத்தோல்வி யடைந்து விட்டது. இரண்டு ஜென்மங்களில் பத்தினிப் பெண்ணாக அவதரித்த நீ மூன்றாவது ஜென்மத்தில் கெட்டுப்போய் விடக் கூடாதே என்பதற்காகத்தான் விரும்பும் ஒருவனது காலை இறைவன் பறித்துக் கொண்டான். ஆனால் இன்னும் கூட உன் வாழ்க்கையில் சில வளைவுகளும் திருப்பங்களும் இருக்கின்றன; அவை என்ன வென்று நீயே தெரிந்து கொள்ளும் வரை நான் சொல்லாமல் இருப்பதுதான் நல்லது. ஒன்றே ஒன்றை மட்டும் சொல்கிறேன். குலசேகரப்பட்டணத்தில் ஒரு சாமியார் இருக்கிறார், சாது நித்தியானந்தா என்பது அவரது பெயர். அவர் இலை போட்டுச் சாப்பிடமாட்டார். கையிலே தான் கவளம் வாங்கிச் சாப்பிடுவார். நீ போய் அவரைப் பார்! ஏதும் வாங்கிக் கொண்டு போகத் தேவையில்லை. உன் துன்பங்களுக்கெல்லாம் மொத்தப் பரிகாரம் அவரிடம் கிடைக்கும்!” என்றார், அந்த அம்மையார்.
ஏதோ ஒரு குருவிடம் பாடம் கேட்டு விட்டு வெளியே வந்த சிஷ்யனைப் பார்ப்பது போல், அவளைப் பார்த்தாள் பாமா.
“பெரிய டாக்டர் என்ன சொன்னார்கள்?” என்று கேட்டாள் பாமா.
பெரிய டாக்டர் சொன்னது முழுக்க அவள் நினைவில் இல்லை. குலசேகரப்பட்டணம், சாது நித்தியானந்தா என்ற இரண்டு வார்த்தைகள்தான் நினைவில் நின்றன. அதைத் தவிர வேறொன்றும் அவர் பேசாதது போலவே அவளுக்குத் தோன்றியது.
”ஏதோ குலசேகரப்பட்டணமாம்! சாது நித்தியானந்தாவாம்!” என்றாள் சரசு.
பாமாவுக்குக் கெட்ட கோபம் வந்து விட்டது.
“பழையபடியும் சாமியாரா? இந்த நாட்டில் இப்படி யொரு கேலிக்கூத்து, நமது மத தர்மமே இது மாதிரி சாது சந்நியாசிகளால் தான் பாழாகி விட்டது. இனி ஒரு சாமியாரும் வேண்டாம். இறங்கியது இறங்கியாகி விட்டது. வருவதை அனுபவிப்போம். ஒரு கால் போனாலும் சரி. எடுத்துக்கொண்ட வாழ்க்கையை நடத்திவிடு” என்றாள் பாமா.
இப்போது ராஜேந்திரனுக்கே கோபம் வந்துவிட்டது.
“அக்கா கெட்டுப் போவதற்கு தங்கையா இப்படி வழி சொல்வது? இதில் ஏதோ தெய்வக் குற்றம் இருக்கிறது. கணவனை விட்டு இன்னொருவனோடு உன் அக்காள் வாழப்போவதை, தெய்வம் அங்கீகரிக்கவில்லை போல் தெரிகிறது. பேசாமல் அவள் தன் புருஷன் வீட்டுக்கு திரும்பிப் போவதுதான் மரியாதை!” என்றான் ராஜேந்திரன்.
‘அது இனி நடக்கக் கூடிய காரியமல்ல’ என்று சரசு சொல்வதற்கு முன்னால், பாமாவே சொல்லிவிட்டாள்.
சரசுவின் நெஞ்சுக்குள்ளே குலசேகரப்பட்டணமும் சாது நித்தியானந்தாவுமே உலாவிக் கொண்டிருந்தார்கள், அவள் திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்தாள்.
”யார் இந்த டாக்டர். இந்தப் பைத்தியத்தை உண்டாக்கிவிட்டது? அவரிடமே கேட்டு விடுவோம்!” என்று பாமா டாக்டரின் அறைக்குள் நுழைந்தாள்.
அப்போது அங்கே வெள்ளைப் புடவை கட்டி டாக்டர் தான் உட்கார்ந்திருந்தார்.
“டாக்டர்! என் அக்காளிடம் என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டாள்.
“உன் அக்காளா…? யாரது…?” என்று கேட்டார், டாக்டர்
”கொஞ்ச நேரத்திற்கு முன் இங்கே வந்தார்களே. அவர்கள் தான்” என்றாள் பாமா.
”இங்கு யாரும் வரவுமில்லை. யாரோடும் நான் பேசவுமில்லை. தயவு செய்து வெளியே போகிறீர்களா…?” என்றார், டாக்டர்.
பாமா திகைத்தாள்.
30. மங்களம்
திரும்பி வத்த பாமா, “இவள் என்ன டாக்டரா சந்தியாசினியா? இல்லை, பேய் பூதமா?… ஒன்றும் புரிய வில்லை எனக்கு” என்றாள்.
“சேச்சே! அப்படியெல்லாம் சொல்லாதே! அவர்கள் கட்டியிருக்கிற பட்டும் இட்டிருக்கிற பொட்டும் தெய்வாம்சம் என்பதைக் காட்டுகின்றன” என்றாள் சரசு,
“பட்டா? உனக்கும் பைத்தியமா? அவர்கள் வெள்ளைப் புடவைதான் கட்டி இருக்கிறார்கள்! சரி. போகட்டும். எந்தப் புடவையாயிருந்தாலென்ன? அதற்காக ஏன் இப்படிச் சீறி விழவேண்டும்? நாம் போகுமிடமெல்லாம் யாராவது மாறுவேஷம் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அது என்ன தலையெழுத்தோ தெரியவில்லை?” என்று அலுப்பாகச் சொன்னாள் பாமா.
ஜெயசந்திரன் அறையிலிருந்து ராஜேந்திரன் ஓடி வந்தான். “வாருங்கள், வாருங்கள்? ஜெயசந்திரனுக்கு ஏதோ வலிப்புப் போலிருக்கிறது. உடலெங்கும் மழை போல் வியர்வை கொட்டுகிறது” என்றான்.
இருவரும் பதறிப் போய் உள்ளே ஓடினார்கள். அங்கே கண்கள் மேலே செருகிய நிலையில் வியர்வையில் மிதந்து கிடந்தான் ஜெயசந்திரன். அவன் யாரையும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை. உடனடியாக அவசர சிகிச்சையில் டாக்டர்கள் முனைந்தார்கள்.
காணப்பட்ட அறிகுறிகளிலிருந்து அது மாரடைப்பு என்பதை உணர்ந்து கொண்ட டாக்டர்கள் அதற்கான சிகிச்சையில் ஈடுபட்டார்கள்
நவீனவசதிகள் ஓரளவே இருந்த அந்த மருத்துவமனையில் டாக்டர்களின் முயற்சி பெரும் முயற்சியாகத்தான் இருந்தது.
சரசு அவசர அவசரமாக பெரிய டாக்டரிடம் ஓடினாள். ஆனால் அங்கே பெரிய டாக்டர் இல்லை.
அவர் அப்பொழுதுதான் புறப்பட்டு வெளியூர் போயிருப்பதாக மற்றொரு பெண் டாக்டர் கூறினார்.
“எந்த ஊர்?” என்று கேட்டாள் சரசு.
“குலசேகரப்பட்டணம்” என்று கூறி விட்டு அந்தப் பெண் டாக்டர் போய்விட்டார்.
சரசு திரும்பி ஜெயசந்திரன் அறைக்கு ஓடிவந்தாள்.
அங்கே டாக்டர்களின் முயற்சி பலிக்கவில்லை என்பதும், இறைவனே ஜெயித்துவிட்டான் என்பதும் பாமாவும், ராஜேந்திரனும் மேலே விழுந்து அழுததிலிருந்து தெரிய வந்தன.
சரசு அழவில்லை. தான் கடலில் விழுந்தும் சாகாது இருப்பது போல் அவளுக்குத் தோன்றிற்று. நீந்தத் தெரிய வில்லை. மூச்சுத் திணறுகிறது. ஆனாலும் சாகவில்லை.
ஒரு கவலை வந்தால் கண்ணீர் வரும்? மறு கவலையும் சேர்ந்து வந்தால் ‘ஓ’வென்று அழத் தோன்றும். கவலை மேல் கவலை வந்தால் நாம் மரத்துப் போவோம்.
அவள் ஜெயசந்திரனைத் தொடவில்லை. ஏனோ தொட்டுக் கட்டியழ வேண்டும் போல் அவளுக்குத் தோன்றவில்லை.
உருப்படியாக இருந்த அவனது காலை தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்ட போது சரசுவின் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் வந்தது. அது அவள் தனது முற்பிறப்புக் கணவனுக்குச் செலுத்தும் கடைசிக் காணிக்கை.
ஜெயசந்திரன் சடலத்தின் மீது வணிகன் நவகோடியின் படம் ஓடிக்கொண்டிருந்தது. தாசிமகள் அபரஞ்சிதான் அங்கே நின்று கொண்டிருந்தாள்.
ஜெயசந்திரனின் சடலம் கோடைகானலிலேயே எரிக்கப்பட்ட போது பிடிவாதமாக “நான்தான் கொள்ளி வைப்பேன்” என்று கூறிவிட்டாள் சரசு.
கணவனுக்கு மனைவி கொள்ளி வைக்கலாமா? இந்து சாஸ்திரங்களில் அதற்கு இடம் உண்டா?
விவாதிக்க யார் இருக்கிறார்கள்?
ஒரு தாய்க்கு ஆண் வாரிசு இல்லையென்றால் அவளது. மகளே கூடக் கொள்ளி வைப்பதுண்டு. சாஸ்திரத்தில் இதற்கு இடமில்லாவிட்டாலும் சம்பிரதாயங்கள் இதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
எரியூட்டப்பட்ட ஜெயசந்திரனின் சடலத்தின் மீது ‘அவனது எல்லா ஜென்மங்களும் முடிந்துவிட்டன’ என்பது போல் ஒரு பிரமை சரசுவுக்குத் தோன்றிற்று.
பாமா அறவே தெய்வ தெய்வ நம்பிக்கையற்றவளாகி விட்டாள்.
“கண்ணாமூச்சி விளையாடும் சிறு பிள்ளைக்குத் தெய்வம் என்று பேரா?” என்று பேசத் தலைப்பட்டு விட்டாள்.
ஆனால் சரசு அந்த நிலைக்குப் போய்விடவில்லை. ‘எந்தப் பட்டமும் ஒரு நோக்கத்திற்காகவே பறக்கிறது’ என்றவள் கருதத் தொடங்கினாள்.
மூன்று நாட்கள் அவர்கள் தங்கி இருந்த வீடு மயானம் போலவே காட்சியளித்தது.
யார் யாரோடு எதைப் பற்றி பேசுவது? அங்கே ஊமைகளே நடமாடிக் கொண்டிருந்தார்கள்.
கடைசியாக சரசு தன் முடிவை பாமாவுக்குக் சொன்னாள்.
“ஏதோ காரணத்திற்காகவே என் வாழ்க்கை இப்படி அலைக்கழிக்கப்படுகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் அந்தச் சாரதாம்மையார் சொன்ன விஷயங்களை நான் கடைப் பிடித்து வந்திருக்கிறேன். இந்தத் தடவையும் கடைசியாக அவர்கள் வாக்கைச் சோதித்துப் பார்த்து விட நான் விரும்புகிறேன். குலசேகரப்பட்டணத்துக்குச் சென்று சாது நித்தியானந்தாவைச் சந்திக்கும்படி அவர்கள் கூறினார்களே. அதில் என்ன தான் ரகசியம் அடங்கி இருக்கிறது? அதையும் பார்த்து விடுகிறேன்” என்றாள் சரசு.
பாமா சிரித்தாள். வேண்டுமென்றே ஓங்கிச் சிரித்தாள்.
“உன்னுடைய விரக்தி எனக்குப் புரிகிறது பாமா, ஆனால் நான் அவ்வளவு சீக்கிரத்தில் நம்பிக்கை இழந்து விட முடியாது. நான் பாடிக்கொண்டிருந்த சௌந்தர்ய லஹரியில் மயங்கி, அம்பிகையே சில காரணங்களுக்காக என்னை திசை திருப்புகிறாள் என்று கருதுகிறேன். அவரது கட்டளைகளில் இதுவே கடைசிக் கட்டளை என்றெண்ணி குலசேகரப்பட்டணம் போய் வருகிறேன். எனக்கு கார் ஒன்றும் வேண்டாம். பஸ்ஸிலேயே போய்விடுகிறேன்” என்றாள், சரசு.
‘அவளைத் தடுத்து இனி ஆகப்போவது என்ன? அவளுக் கென்றே இனி என்ன தான் பாக்கி இருக்கிறது? இந்த ஆசைக்கு நாம் ஏன் குறுக்கே நிற்க வேண்டும்?’ என்று எண்ணிய பாமா, “உன் இஷ்டம் அக்கா. உனது பூர்வ ஜென்மக்கதைகளும் அவற்றில் ஏற்பட்ட தோல்விகளும் உண்மையானால் இனி ஜென்மமே எடுக்கக்கூடாது என்று அம்பிகையை வேண்டிக்கொள். ஒரு ஜென்மத்தில் தோல்வி அற்றவர்கள் மறு ஜென்மத்தில் வெற்றி பெறுவார்கள் என்ற இந்து சம்பிரதாயமே தோல்வியுற்று விட்டது போலவே எனக்குத் தோன்றுகிறது. இவற்றுக்செல்லாம் ஏதோ ஒரு காரணம் இருப்பதாக நீ கருதுகிறாயே, அதையும் சோதித்துப்பார்த்து விடு. தனியாகப் போனாலும் நீ தைரியமாகப் போகக் கூடியவள் தான். ஆனாலும் நானும் அவரும் துணைக்கு வருகிறோம்” என்றாள், பாமா.
“உங்களுக்கு ஏன் வீண் சிரமம்? இதுவரை நான் உங்களுக்கு கொடுத்த தொல்லைகள் போதும். இனிமேலும் மேலும் உங்களை நான் சோதிக்க வேண்டாம். நான் அங்கு சென்று என்ன நடக்கிறது என்பதைத் தெரிவிக்கிறேன். பிறகு வேண்டுமானால் நீங்கள் வாருங்கள்” என்றாள் சரசு.
“சரி, அவர்களைத் தடுக்காதே” என்றான் ராஜேந்திரன்.
சரசு தான் மட்டுமே. தனியாகவே குலசேகரப்பட்டணத்துக்குப் புறப்பட்டாள்.
பிரக்ஞையற்ற நிலையிலேயே அவள் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தாள். குலசேகரப்பட்டணம் போவதற்கு இரண்டு இடங்களில் பஸ் மாறவேண்டும். அதுகூட ஞாபக மில்லாமல் ஆங்காங்கே உட்கார்ந்திருந்த சரசுவை பஸ் கண்டக்டர்கள் தான் இறக்கிவிட வேண்டியிருந்தது.
குலசேகரப்பட்டணத்தில் சாது நித்தியானந்தாவின் ஆசிரமத்தை விசாரித்தாள் சரசு.
ஆற்றங்கரையின் மீது ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் அந்த ஆசிரமம் கட்டப்பட்டிருந்தது. பிரம்மாண்டமான கோவில் ஒன்று உள்ளே எழுப்பப்பட்டிருந்தது. சாது நித்தியானந்தாவுக்காக ஒரு சிறிய ஓலைக்குடிசையே போடப்பட்டிருந்தது. பத்துப் பதினைந்து சீடர்கள் மட்டுமே அங்கே இருந்தார்கள்.
சரசு உள்ளே நுழைந்ததிலிருந்து கோவில் மணி இடைவிடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது.
அவள் போனதும் போகாததுமாக ஒரு சீடன் எதிர்ப் பட்டு. “சுவாமி உங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்றான்.
‘நான் வருவதுதான் யாருக்கும் தெரியாதே? எப்படி அவர் நம்மை எதிர்பார்க்க முடியும்?’ என்று திகைத்தாள், சரசு.
பதமாகவும், இதமாகவும் சீடர்கள் எல்லாம் கைகளைக் கட்டிக்கொண்டு தலைகுனிந்து வணங்கி அவளை வரவேற்றார்கள்.
‘ஒருவேளை சாரதாம்மையார் தன் வருகையை தெரிவித்திருக்கக்கூடும்’ என்று அவள் கருதினாள்.
சுவாமிஜியின் குடிலுக்குள் அவள் நுழைந்தாள். அங்கே புலித்தோல் ஆசனத்தின் மீது சுவாமிஜி வீற்றிருந்தார், பக்கத்தில் ஒரே ஒரு சீடன் மட்டும் நின்றபடி விசிறி வீசிக்கொண்டிருந்தாள்.
“இப்படி உட்காருங்கள்” என்று கையைக் காட்டினார் சுவாமி.
சுவாமிகளுக்கு முன்னால் யாரும் உட்காருவது சாதாரணமாக வழக்கமல்ல. தன்னை அவர் உட்காரச் சொன்னதே போதுமானதாக அவளுக்குத் தோன்றிற்று. சரசு உட்கார்ந்தாள். உடனே சுவாமி எழுந்து நின்று கொண்டார்.
‘ஏன்?’ என்று கேட்க சரசுவுக்குத் தோன்றவில்லை. தன்னைப் பற்றிய ஒரு பெருமிதமான உயர்வும் தனக்குள் எழுவதை அவள் உணர்ந்தாள்.
சாது நித்தியானந்தா தன் கைகளை மடித்துக் கட்டிக் கொண்டார். திடீரென்று சரசுவுக்கு முன்னால் நின்று தரையைத் தொட்டு வணங்கினார். சரசு, விலகிக்கொண்டாள்.
”அபரஞ்சி!” என்று அழைத்தார், சுவாமி.
சரசு விழித்தாள்.
“என்னைத் தெரியவில்லையா உனக்கு?” என்று கேட்டார், சுவாமி.
அவர் முகத்தைக் கூர்ந்து நோக்கினாள் சரசு.
“ஏதோ தோன்றுகிறது….முழுக்க விளங்கவில்லை” என்றாள்.
”அன்று, காவிரி ஆற்றுப்படுகையில் உன் கற்பைப் பறித்துக் கொண்டானே சோழ இளவரசன், அவன் மீண்டும் இந்த பூமியில் ஜென்மமெடுத்திருக்கிறான். அவனை உனக்கு அடையாளங் காட்டவே, உன்னை இங்கே அழைத்து வர விரும்பினேன். என் அன்னை சாரதா தேவி அதனால் தான் உன்னை வரும்படி பணித்திருக்கிறார்கள்” என்றார் சுவாமி.
மீண்டும் அந்த இளவரசன் பிறந்திருக்கிறான் என்பதைக் கேட்ட சரசு அவனைப் பழிவாங்கவே தான் பிறந்திருப்பதாக ஒரு கணம் நினைத்தாள்.
அவள் மேலும் சிந்திப்பதற்குள் சுவாமி குறுக்கிட்டார்.
“முற்பிறப்பைப் பற்றிய உணர்வு எல்லோருக்கும் தோன்றி விடுமானால் ஒரு ஜென்மத்துப் பாவிகள் மறு ஜென்மத்தில் நீதிமான்களாகி விடுவார்கள். துரதிருஷ்ட வசமாக அது சிலருக்கே தோன்றுகிறது. அவர்கள் போன ஜென்மத்துப் பாவங்களை இந்த ஜென்மத்தில் தீர்த்துக் கொள்ள விரும்புகிறார்கள். யார் அடிக்கடி பிறக்க வேண்டும் என்று இறைவன் விரும்புகிறானோ, அவர்களுடைய ஆசையை ஒவ்வொரு ஜென்மத்திலும் நிறை வேறாமலேயே செய்து விடுகிறான். நியாயமான வாழ்க்கையை ஒருவன் நடத்தி முடித்துவிட்டால், அந்தப் பிறவியோடு அவன் பிறவி எடுப்பதும் முடிந்து விடுகிறது. உன்னுடைய ஆசைகள் பூர்த்தி யடையலில்லை. உனக்கு இன்னொரு ஜென்மம் இருக்கிறது. ஆனால் சோழ இளவரசனின் ஆசை பூர்த்தியடைந்து விட்டது. அவனுக்கு இதுதான் கடைசி ஜென்மம்” என்றார் சுவாமி.
சரசு அவ்வளவையும் மவுனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கிருந்த வஞ்சம் தீர்க்கும் எண்ணமும் போய்விட்டது.
”அந்தச் சோழ இளவரசனிடம் என்னை அழைத்துச் செல்லுங்கள் சுவாமி” என்றாள் சரசு.
”அழைத்துச் செல்கிறேன். அதற்காகத்தானே அழைத்துவரச் செய்தேன்! அவனைக் கண்டதும் உனக்கு ஆத்திரம் தோன்றும். ஆனால் அவனோ உன்னைக் குருவாக ஏற்றுக்கொண்டு உன் பாதம் பணிவான். அவனைச் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்!” என்றார் சுவாமி.
“தேவிக்கு எது நியாயமோ, அதை நான் செய்வேன்” என்றாள் சரசு.
சுவாமி ஒரு விபூதி சம்புடத்தை எடுத்து, அவள் கையில் கொடுத்தார்.
காரணம் புரியாமல் அவள் அதை வாங்கிக்கொண்டாள்.
சுவாமி அவள் எதிரே அமர்ந்தார்.
”எனக்கு விபூதி பூசி சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றார் சுவாமி.
பளிச்சென்று எழுந்தாள் சரசு. அவள் உடல் வியர்த்தது, ஆனால் தான் ஒரு உச்ச நிலையில் இருப்பது போல அவளுக்குத் தோன்றிற்று. ஒருபிடி விபூதியை அள்ளி சுவாமியின் தலையில் தெளித்துவிட்டு வெறி பிடித்தவள் போல் வெளியில் ஓடினாள்.
கோவிலுக்குள் நுழைந்தாள். அது என்ன கோவில் என்று அப்பொழுதுதான் பார்த்தாள்.
அது சாரதா தேவிக்காக எழுப்பப்பட்ட கோவில், அம்பிகையின் சிலையில் ஓர் அமைதியும், புன்னகையும். தோன்றிற்று.
கோவிலில் மணியடித்துக் கொண்டிருந்தவனைக் கவனித்தாள். மீண்டும் அவள் உடல் வியர்த்தது.
அங்கே மணியடித்துக் கொண்டிருந்தது அவளுடைய கணவன் தணிகைவேலன்.
சாரதா தேவியின் சிலையிலிருந்து ஜோதி கிளம்புவது போல் அவளுக்குத் தோன்றிற்று.
தன்னையறியாமல் அவள் பாடத் தொடங்கினாள். சௌந்தர்யலகரி முழுவதையும் பாடினாள்.
அவள் பாடப் பாட கோவில் மணி ஒங்கி ஒலித்துக் கொண்டே இருந்தது.
என்றைக்கும் இல்லாத கூட்டம் கோவிலில் கூடத் தொடங்கிற்று. வந்தவர்களெல்லாம் சரசுவின் காலைத் தொட்டு வணங்கினார்கள்.
சாரதா தேவியின் சிலையில் தான் சந்தித்த சாரதாம்மையாரே அமர்ந்திருப்பதாக சரசு கருதினாள்.
அவ்வளவு பெரிய கூட்டத்துக்கிடையிலேயே சாது நித்தியானந்தா ஓடி வந்து சரசுவின் காலில் விழுந்து வணங்கினார்.
மறுநாள் காலைப் பத்திரிகையில் ‘தெய்வாம்சம் பொருந்திய மங்கை’ என்ற தலைப்பில் சரசுவைப் பற்றிய செய்திகள் வெளியாகியிருந்தன.
புகழ் பெற்ற சுவாமிகள் அவளையே குருவாகக் கொண்டு விட்டதாகச் செய்திகள் குறிப்பிட்டன.
‘தன் முற்பிறப்பை உணர்ந்தவர், புனிதர், சரஸ்வதி தேவி’ என்று அவை குறிப்பிட்டன.
ஆசிரமத்தில் கூட்டம் வெள்ளம் போல் பெருகலாயிற்று.
அந்தக் கூட்டத்திலிருந்த பாமாவும், ராஜேந்திரனும் தங்களுக்குள் ஒரு சபதம் எடுத்துக் கொண்டார்கள்.
அதுதான் நாள்தோறும் சௌந்தரியலகரி படிப்பது என்பது.
(முற்றும்)
– 1978 – 1979, தினமணி கதிர் வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது.
– சரசுவின் சௌந்தர்ய லஹரி, முதற்பதிப்பு: பிப்ரவரி 1980, வானதி பதிப்பகம், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
நாடகம் போட்டுப்பார்
மெரீனா
October 18, 2026
தானியங்கி பண இயந்திரம்
ரா.நீலமேகம்
October 18, 2026
பதவிப் பரிதாபங்கள்…
காரை ஆடலரசன்
October 18, 2026