அண்டங் காக்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 10, 2026
பார்வையிட்டோர்: 81 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சோழ வளநாடு சோறுடைத்து’ எனக் கேட்டிருக்கிறோம். சோழ நாடு நீர்வளமும் நிலவளமும் உடையது. அவற்றுடன் கல்வியால் பெருமைபெற்ற அறிஞர்களையும் உடையது. அச் சோழ நாட்டில் சில நூற்றாண்டுகளுக்குமுன் புலவர் ஒருவர் தோன்றினார். அவரது பெயர் ‘நிரம்ப அழகியர்’ என்பதாகும். அவர் சிறந்த கல்வி அறிவு உடையவர்; பாடல் இயற்றும் திறம் படைத்தவர்; அழகற்ற தோற்றம் உடையவர்; மிகவும் குள்ளமானவர்; மிகுந்த கருமை நிறம் பொருந்தியவர். 

நிரம்ப அழகியர், ஒருமுறை பாண்டிய நாட்டுக்குச் சென்றார். அந்நாட்டில் ஆண்டு வந்த சிற்றரசன் ஒருவனுடைய அவைக்குச் சென்றார். அரசன் அவரது குள்ளமான உருவத்தைப் பார்த்தான். கருமையான அவர் நிறத்தைக் கண்டான். அழகற்ற அவரது தோற்றத்தைக் கண்ட மன்னன் இகழ்ச்சியாகச் சிரித்தான். அவரை யார் என்று அரசன் அறிந்து கொள்ளவில்லை. அவையினரை நோக்கி, ‘இவர் அண்டங் காக்கைக்குப் பிறந்தவர் போன்றுள்ளார் இகழ்ந்து பேசினான். அதனைக் கேட்ட அவையினர் அனைவரும் ‘கொல்’ எனச் சிரித்தனர். மன்னன் தம்மை இகழ்ந்து உரைத்தமை குறித்துப் புலவர் மனம் வருந்தினார். அரசனுக்கு நல்லறிவு புகட்ட விரும்பினார். 

நிரம்ப அழகியர். அரசனைப் பார்த்து, “மன்னரே அண்டங் காக்கைக்குப் பிறந்தவர் நீங்களே அன்றி நான் அல்லேன்” எனக் கூறினார். அரசனும் அவையினரும் இதனைக் கேட்டனர். மன்னன் மனம் புழுங்கினான். அவையினர் மன்னனை ஏளனமாகப் பார்த்து மனத் திற்குள் உவகை பூத்தனர். தன்னுடைய அவையில் புகுந்து தன்னையே இகழ்ந்து பேசியதைக் கேட்டு மன்னன் பெரிதும் வருந்தினான். அவையினா தன்னைப் பார்த்துச் சிரிக்கும்படியாகப் பேசியது குறித்து மிகுந்த கோபம் கொண்டான். நிரம்ப அழகியரைம் பார்த்து, “எம் அவையில் புகுந்து இந் நாட்டு மன்னன் என அறிந்திருந்தும் எம்மை நீர் இகழ்ந்து பேசினீர். அரசனை இகழ்ந்த குற்றத்திற்கு என்ன தண்டனை தெரியுமா?” எனக் கேட்டான். 

உடனே புலவர் ‘அரசே! ‘ஆறுவது சினம். ஏன் வீணாகக் கோபப்படுகிறீர்? நான் உங்களை இகழ்ந்து கூறியதாக நீங்கள் தவறாக எண்ணிவிட்டீர்கள். நான் உங்களை மனமாரப் புகழ்ந்துதான் கூறியுள்ளேன்’ என்றார். இதனைக் கேட்டதும் அரசனுக்கு மேலும் சினம் பொங்கிற்று. புலவர் தன்னை இகழ்ந்தது மட்டும் அல்லாமல் புகழ்ந்து உரைத்ததாக வேறு சொல்கிறாரே என எண்ணினான். “என்ன ஆணவம் உங்களுக்கு? எம் அவையில் எம்மையே இகழ்ந்து பேசிவிட்டு மேலும் புகழ்ந்து உரைத்ததாகக் கூறுகிறீர்கள்” எனக் கோப மாகச் சொன்னான். அவையில் இருந்தவர்கள் என்ன நிகழுமோ என அஞ்சினர். அரசன் மரணதண்டனை விதிப்பானோ என எண்ணிக் கலங்கினர். 

நிரம்ப அழகியர் கொஞ்சமும் அஞ்சாமல் நெஞ்சத் துணிவுடன் இருந்தார். அரசனைப் பார்த்து, “மன்னா நான் கூறியதில் பிழை இல்லை. ‘அண்டம்’ என்றால் ‘உலகம்’. ‘காக்கை’ என்றால் ‘காத்தல்’. ‘அண்டங் காக்கைக்குப் பிறந்தவர்’ என்றால் ‘உலகத்தைக் காப்ப தற்காகப் பிறந்தவர்’ என்பதே பொருள் ஆகும். நீங்கள் இந்த நாட்டைக் காக்கும் அரசர்தாமே. அதனால்தான் நான் உங்களை அவ்வாறு கூறினேன். இப்பொழுது சொல்லுங்கள் உலகைக் காக்கப் பிறந்தது நானா? நீங்களா?” என்றார். 

புலவர் உரைத்ததைக் கேட்ட மன்னன் தன் அறியாமையை எண்ணித் தலைகுனிந்தான். உரு வத்தைப் பார்த்து இகழ்ந்தமைக்காக மனம் வருந் தினான். அவையினர் புலவரின் அறிவாற்றலைக் கண்டு மகிழ்ந்தனர். அரசன் புலவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். நிரம்ப அழகியருக்குப் பொன்னும் பொருளும் பரிசாக அளித்தான். 

“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து
.” – திருக்குறள்

– கதைத் திரட்டு, ஆறாம் வகுப்பு, முதற் பதிப்பு: 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.

புலவர் த.முருகேசன் புலவர் த. முருகேசனார் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறந்த தமிழறிஞரும், மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் முக்கிய ஆளுமையும் ஆவார். புலவர் த. முருகேசனார் (24.06.1921 -18.02.2005) - முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிதம்பரம் புலவர் த. முருகேசனார் அவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன: மாநாடுகள் ஒருங்கிணைப்பு: இவர் 1954 ஆம் ஆண்டில் மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் நான்காவது மாநாட்டினை அண்ணாமலை நகரில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *