முடிந்தால் கண்டுபிடி பார்ப்போம்

0
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
இணைய வெளியீடு: November 23, 2026
பார்வைகள்: 21
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

வாரத்தின் முதல் பணி நாளான திங்கட் கிழமை . முற்பகல் வேளை.

சென்னை நந்தனம் பகுதியில் அண்ணா சாலையில் அமைந்திருந்த மிகப் பெரிய அலுவலக வளாகத்தின் நான்காம் மாடியில் உள்ள ஜேகே குரூப் நிறுவனங்களின் தலைமை அலுவலகத்தில் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரின்

அறையின் முன்னால் உள்ள பார்வையாளர்களுக்கான சின்னஞ்சிறு நாற்காலிகளில் ஒன்றில் கஷ்டப்பட்டு அமர்ந்து இருந்தான் கனமான சரீரம் , மழித்த முகம் கொண்ட விவேக் . நேர்முகத் தேர்வுக்காகத் தான். அலுவலகத்தை சுற்றும் முற்றும் பார்த்தபடியே இருந்த போது , ஒரு பெண் குரல் கேட்க திரும்பிப் பார்த்தான் விவேக்.

ஐந்து நட்சத்திர ஓட்டலின் வரவேற்பில் இருக்கும் பெண்மணி போல் கண்ணைக் கவரும் உடை அணிந்திருந்த ஒடிசலான அந்தப் பெண்மணி , அவன் கருத்தையும் கவர்ந்தாள். அவள் அவனுடைய பள்ளி காலத் தோழி அனிதா.

“நீ தானாப்பா இன்ட்டர்வியூக்கு வந்து இருக்க ..விவேக்ன்னா வேற யாரோன்னு நெனச்சேன்… ” அனிதா பேசினாள்.

அவள் பேசியதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் பளிச்சென்று மலர்ந்த முகத்துடன் இருந்த அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் விவேக் .

“ஹலோ உன்னைத் தான் “

“வணக்கம் அனிதா … டீனேஜ் காலத்தை விட இப்பத்தான் நீ ரொம்ப அழகா இருக்க … அதான் தடுமாறிட்டேன் … “

அவன் கூறியதை கேட்டு உள்ளூற ரசித்தாலும் அனிதா அதைக் காட்டிக் கொள்ளாமல்

“இப்படி தேவை இல்லாததை ஃபேர் செக்ஸ் ஆளுங்க கிட்ட பேசறதே பொழப்பா இருக்கு உங்களுக்கு எல்லாம். நீதான் ஒரு கார்ப்பரேட் கம்பெனில வேலையில இருக்கேன்னு குமார் சொன்னாரு … அப்புறம் ஏன் இங்கே …. அட்மின் மேனேஜர் வேலைக்கு …. “ என்றாள்.

“பெட்டர் ப்ராஸ்பெக்ட்ஸ்க்கு தான் …. மேம் .. சிஎம்டி எப்ப கூப்பிடுவாரு … “

“சிம்எம்டி இங்க இல்ல … “

“அப்ப இன்ட்டர்வியூவுக்கு வீடியோ கால்ல பேசிடலாம் இல்ல… “

“பார்றா அதை நீ முடிவு பண்ண முடியுமா ? “

“முடியாதா? ? என்னதான் வழி ? “

“அப்படி பணிவா கேளு …. மேற்கு மாம்பலம் ஆர்ய கவுடா ரோட்ல ஶ்ரீதேவி கல்யாண மண்டபத்துக்கு போ அங்க மேனேஜர் ரூம்ல எங்க சிஎம்டி சந்திர குமார் இருப்பாரு… போய் பாரு … உடனே … “

“ திருமண மண்டபத்துல வெச்சு இன்ட்டர்வியூவா … இது வரைக்கும் நான் இப்படி கேள்விப்பட்டதே இல்லையே … “

“ உனக்கு எங்க கம்பெனில வேலை வேணுமா … இல்ல என் கிட்ட பேசிக்கிட்டே இருக்கணுமா ? “

“ வேலை தான் வேணும் …. நான் உடனே கிளம்பறேன் … வரேன் … மேம் தேங்க்ஸ் “

“ ஆல் த பெஸ்ட் “


சில நிமிடங்களில் விவேக் , அனிதா குறிப்பிட்ட ஶ்ரீதேவி திருமண மண்டபத்துக்கு வந்து சேர்ந்தான். மண்டபத்தின் மேலாளர் அறைக்கு வெளியே மர பெஞ்சில் அமர்ந்து இருந்த கோட் சூட் அணிந்த நபரைப் பார்த்தான். அந்த நபர் உள்ளே சென்று திரும்பி வந்து சார் உங்கள வர சொல்றாரு என்றான்.

வயதைக் கணிக்க முடியாத தோற்றம் கொண்ட தொழில் அதிபர் சந்திர குமார் ,

மேலாளர் இருக்கைக்கு எதிரே இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து இருந்தார். விவேக் வணக்கம் சார் என் பேரு விவேக் என்றான். அவர் கையில் இருந்த டேப்லட்டைப் பார்த்தபடியே அவனை அருகில் உள்ள நாற்காலி ஒன்றில் அமரும்படி சைகை காட்டினார்.

“இப்பத்தான் இந்த புக்கை டவுன்லோடு பண்ணேன். இந்த ஒரு சேப்ட்டரை படிச்சு முடிச்சுட்டு வரேன் ” என்றார் அவர்.

ஏசி இல்லாதது மட்டும் அல்ல ஃபேனும் நன்றாக ஓடாத அறையில் அவர் அமர்ந்து இருப்பது அவனுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

சில நிமிடங்களில் அவர் டேப்லட்டிலிருந்து விடுபட்டு அவனிடம் பேசத் தொடங்கினார் –

“இன்னிக்கு இங்க என்னோட நண்பரோட மணி விழா . அதனால தான் … “

விவேக் , தன் கையில் இருந்த பைலை அவரிடம் நீட்டினான்.

“அதெல்லாம் ஹெச் ஆர் டிபார்ட்மென்ட் பார்த்துப்பாங்க …. வேலை உறுதியானப்புறம் அவங்க கிட்ட காட்டுங்க … எனக்கு டைம் இல்ல ஒங்களயும் அங்கே இங்கேன்னு அலைக்கழிச்சுட்ட்டேன் . சாரி … ஒரே ஒரு கேள்வி தான் கேட்பேன் … அதுக்கு பதில் சொன்னா …. நீங்க அப்ளை பண்ண வேலை உங்களுக்குத்தான் …. “

“கேளுங்க சார் …. “

“எங்க ஆபீஸ்ல நீங்க பார்த்த அல்லது கவனிச்ச விஷயம் என்ன ? அதனோட பின்னணி என்னவா இருக்கும் ஒங்களோட அனுமானம் என்னன்னு நீங்க சொல்லணும் …. ஒரு சினிமால கண்ணாடிய திருப்பி வைச்சா ஆட்டோ ஓடும் ங்கறா மாதிரி இதுக்கும் அட்மின் ஜாப்புக்கும் என்ன சம்பந்தம் ங்கற ஒங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது …. அந்த மாதிரி எல்லாம் யோசிச்சா வேலை கிடைக்காது. .. அஞ்சு நிமிசம் தான் டைம் . நான் உள்ள போய் விருந்துல சாப்பிட்டேன்னு பேர் பண்ணிட்டு வேற இடத்துக்குப் போய் ஆகணும் …. “

விவேக் அந்த அலுவலகத்தில் என்ன பார்த்தோம் என்று நினைத்துப் பார்த்தான்.

“சார் ஒங்க ஆபீஸ்ல ப்ரண்ட் ஆபீஸ்லேந்து ஒங்க கேபின் வரைக்கும் சில

இடங்கள்ல பயாஸ்கோப் கருவி படம் இருந்ததை பார்த்தேன். “

“கிட்ட வந்துட்டிங்க …எங்க குரூப் போட பிசினஸ்க்கும் பயாஸ்கோப்புக்கும் தொடர்பு இல்ல … ஆனா எதுக்கு அந்த படம் …. ? “

“இது என்ன சார் வேதாளம் , விக்கிரமாதித்தன் கிட்ட கேட்கிற கேள்வி மாதிரி இருக்கு … “

“அப்ப நீங்க விக்கிரமாதித்தன் நான் வேதாளமா ? … “

“சாரி சார் …. நான் அப்படி மீன் பண்ணல சரி என்னோட யூகமா சொல்றேன்… அந்தக் காலத்தில ஒங்க தாத்தாவோ கொள்ளுத் தாத்தாவோ பயாஸ்கோப் காரரா பயாஸ்கோப் காமிச்சு வருமானம் ஈட்டி இருக்காங்க …. அதற்கு அப்புறம் பட்டினத்திற்கு வந்து வேற தொழில், வியாபாரங்கள் எல்லாம் பார்த்து படிப்படியா முன்னேறி நல்ல நிலைய அடைஞ்சு ஒசந்து இருக்காங்க … அவங்க பயாஸ்கோப்போட இருந்த போட்டோ ஒங்களுக்கு கிடைக்காததால விதம் விதமா பயாஸ்கோப் படத்தை ஒங்க அலுவலகத்தில் டிஸ்ப்ளே பண்ணி இருக்கீங்க …. என்னோட ஊகம் சரியா சார் ? “

தொழில் அதிபர் சந்திர குமார் மலர்ந்த முகத்துடன் எழுந்து நின்றார். விவேக்கும் எழுந்து நின்றான்.

“எங்க கொள்ளுத் தாத்தா இல்ல தாத்தா தான் அப்படி உழைப்பால் உயர்ந்தவர் இதே கேள்விய என் மேனேஜ்மென்ட் டீம் மெம்பர்ஸ் எல்லார் கிட்டயும் கேட்டிருக்கேன். யாருமே சொல்லவே இல்ல… நீ தான்யா கரெக்ட்டா சொல்லிட்டே ” என்று கூறிக் கொண்டே சந்திர குமார் அறையை விட்டு வெளியே வந்தார்.

“ரமேஷ் .. இவரோட மெயில் ஐடிக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் அனுப்ப சொல்லுங்க …. விவேக் ஆல் தி பெஸ்ட் வாழ்த்துக்கள் ” என்று கூறி விட்டு அவர் மண்டபத்திற்குள் சென்றார். ரமேஷ் அவனைப் பின் தொடர்ந்தான். விவேக் ,

ஒரு விதமான இன்ப அதிர்ச்சியில் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

– பயாஸ்கோப் கதைகள்.

எஸ்.மதுரகவி

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில்...

மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *