மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் (1883 – ஜூன் 27, 1962) தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி, எழுத்தாளர் மற்றும் திராவிட இயக்கச் செயற்பாட்டாளர் ஆவார். தேவதாசி முறை ஒழிப்பு, பெண்ணுரிமை மற்றும் சாதி ஒழிப்புக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய இவரைப் பேரறிஞர் அண்ணா “தமிழகத்தின் அன்னி பெசன்ட்” எனப் புகழ்ந்துள்ளார்.
இளமைக் காலமும் மாற்றமும்
- பிறப்பும் வளர்ப்பும். 1883-ஆம் ஆண்டு திருவாரூரில் கிருஷ்ணசாமி – சின்னம்மாள் இணையருக்கு மகளாகப் பிறந்தார். குடும்ப வறுமை காரணமாகச் சிறுவயதிலேயே மயிலாடுதுறை அருகேயுள்ள மூவலூரைச் சேர்ந்த ஆச்சிக்கண்ணு என்பவரிடம் வளர்க்கப்பட்டார்.
- சுயமரியாதைத் திருமணம். தேவதாசி முறைக்கு ஆட்படுத்தப்பட இருந்த நிலையில், அதனைத் துணிச்சலுடன் எதிர்த்தார். தனக்கு இசையும் நடனமும் கற்றுக்கொடுத்த ஆசிரியரான சுயம்பு பிள்ளையைத் திருமணம் செய்துகொண்டு, அக்கொடிய முறையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்.
சமூக மற்றும் அரசியல் பங்களிப்புகள்
- தேவதாசி முறை ஒழிப்பு. 1917-இல் மயிலாடுதுறையில் தனது முதல் போராட்டத்தைத் தொடங்கிய இவர், 1925-இல் இசைவேளாளர் மாநாட்டைக் கூட்டித் தேவதாசி முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தார். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கொண்டுவந்த தேவதாசி முறை ஒழிப்புச் சட்டத்திற்கு (1947) இவரது களப்பணிகளும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் பெரும் பக்கபலமாக இருந்தன.
- சுயமரியாதை இயக்கம். தொடக்கத்தில் காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்திருந்த இவர், 1925-இல் பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறியபோது அவருடன் இணைந்து சுயமரியாதை இயக்கத்தின் முதன்மைப் பிரச்சாரகராக மாறினார்.
- மொழிப்போர். 1938-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உறையூர் முதல் சென்னை வரை 42 நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டு 87 பொதுக்கூட்டங்களில் உரையாற்றினார்; இப்போராட்டத்திற்காக ஆறு வாரங்கள் சிறைத் தண்டனையும் அனுபவித்தார். பின்னர் 1949-இல் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு (தி.மு.க) ஆதரவளித்தார்.
- காங்கிரஸ், நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற அரசியல் கட்சிகளில் அவரின் ஈடுபாடு இருந்தாலும், சமூக நீதிக்கான போராட்டங்களிலேயே அவரின் தீவிர செயல்பாடு இருந்தது. தன்னுடைய சமூகப் போராட்டத்தை வலுப்படுத்திக் கொள்ளும் ஒரு கருவியாகவே இலக்கியத்தைக் கையாண்டார்.
இலக்கியப் படைப்பு
- தாசிகளின் மோசவலை. 1936-ஆம் ஆண்டு இவர் எழுதிய ‘தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்’ என்ற சுயசரிதைத் தன்மை கொண்ட புதினம், தேவதாசிப் பெண்களின் அவல நிலையையும் சமுதாயச் சுரண்டலையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த முக்கியப் படைப்பாகும்.
- இவர் எழுதிய ஒரே சிறுகதை ‘தமயந்தி’ (1945).
- இஸ்லாமும் திராவிடர் இயக்கமும் (கட்டுரை).
கதைகள்
நினைவும் போற்றுதலும்
- அரசுத் திட்டங்கள். இவரது சமூகப் பணிகளைப் போற்றும் வகையில், 1989-ஆம் ஆண்டு தமிழக அரசு ஏழைப் பெண்களுக்கான ‘மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தை’ தொடங்கியது. பின்னர் 2022-ஆம் ஆண்டு இத்திட்டம் பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ‘புதுமைப் பெண்’ (உயர்கல்வி உறுதித் திட்டம்) திட்டமாக மாற்றியமைக்கப்பட்டது.