வாசல் தேடி வந்த வசந்தம்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
இணைய வெளியீடு: November 16, 2026
முதற்பதிப்பு: 2026
பார்வைகள்: 21 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4

திரும்பி வந்த உறவுகள்

“பல வருடங்களாகப் பிரிந்த பாசம்… மீண்டும் ஒரு வாசல் தேடி வந்த நாள்…”

“உங்க அத்தை டவுன்ல இருக்கிற காலேஜுக்குப் படிக்கப் போனா. கடைசி வருடப் படிப்பு முடிய இன்னும் ஆறு மாசம் இருக்கும் போதே, நம்ம சொந்தத்துல இருந்து பொண்ணு கேட்டு வர ஆரம்பிச்சுட்டாங்க.”

வெங்கட்ராமன், லஷ்மிக்குக் குடிக்கத் தண்ணீர் எடுத்துத் தந்துவிட்டு தொடர்ந்தார்.

“உங்க பாட்டியோட தூரத்து சொந்தத்துல இருந்து பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்கறதுன்னு பேசி முடிவாயிடுச்சு. நிச்சயதார்த்தத்துக்கு நாளும் குறிச்சிட்டோம்.

அதுக்கப்புறம் எல்லாரும் கல்யாண வேலைக்கு அலைஞ்சுட்டு இருந்தோம்.

நிச்சயதார்த்தத்துக்கு முதல் நாள்…

உங்க அத்தை, உன் அப்பாவை கோயிலுக்கு அழைச்சுட்டுப் போய்…

‘தம்பி… இந்தக் கல்யாணம் நடக்காது. ஏன்னா… நான் ஒருத்தரை லவ் பண்றேன். கட்டிக்கிட்டா அவரைத்தான் கட்டிக்குவேன். எனக்கு அவர் மேல நம்பிக்கை இருக்கு. ஆனா அவர் நம்ம சமூகத்தைச் சேர்ந்தவர் இல்ல. அதனால நம்ம அப்பா, அம்மா கண்டிப்பா சம்மதிக்க மாட்டாங்கன்னு எனக்குத் தெரியும். அதனாலதான் நாங்க ரெண்டு பேரும் நாளைக்கு காலையில கல்யாணம் பண்ணிக்க முடிவு பண்ணியிருக்கோம்.

இப்பவே நான் கிளம்பி வந்துட்டேன். இதை உன்கிட்ட சொல்லணும்னுதான் இங்க அழைச்சுட்டு வந்தேன்.

நீதான் இந்த விஷயத்தை கொஞ்சம் பக்குவமா அம்மா, அப்பாகிட்ட சொல்லி மத்த ஏற்பாடுகளைப் பார்த்துக்கணும். ப்ளீஸ்… என்னை மன்னிச்சிடு, ரவி…’ன்னு சொல்லிட்டு…”

என்று குரல் தடுமாறி நிறுத்தினார்.

“உங்க அத்தை அந்தப் பையனோட போயிட்டா…”

என்று சொல்லிவிட்டு லஷ்மி அழ ஆரம்பித்தார்.

“அதுக்கப்புறம் வீட்டுக்கு வந்த உங்க அப்பாவுக்கு என்ன செய்வதுன்னே தெரியல.

இங்க உங்க தாத்தா விஷயம் கேள்விப்பட்ட உடனே ரொம்ப கோபப்பட்டாரு.

‘அருவாள எடுத்துட்டு வா… நான் அவள வெட்டிப் போட்டுட்டு வர்றேன்…’ன்னு குதிச்சாரு.

எனக்கோ அழுகையும் ஆற்றாமையும் தாங்க முடியாம அப்படியே தரையில விழுந்து கிடந்தேன்.

உங்க அப்பா ரவிதான்…

‘இனி நேரம் இல்ல’ன்னு சொல்லி மாப்பிள்ளை வீட்டுக்குப் போன் பண்ணி நடந்த விஷயத்தைச் சொன்னான்.

அதைக் கேட்டவங்க ஒரு மணி நேரத்துல கார்ல வந்துட்டாங்க.

பூரணியின் அப்பா, என் கையைப் பிடிச்சுக்கிட்டு,

“எனக்கு அண்ணன் முறையான சண்முகண்ணன். நீங்க ரெண்டு பேரும் எதையும் நினைச்சு கவலைப்படாதீங்க. பேசுன மாதிரி இந்தக் கல்யாணம் நடக்கும்…” என்று ஆறுதல் சொன்னார்.

அவங்க அக்கா செஞ்ச தப்புக்கு ஏன் மாப்பிள்ளை கஷ்டப்படணும்?

என் பொண்ணுதான் இந்த வீட்டு மருமக.

உங்க வீட்டு பொண்ணுதான் என் மருமக…’ன்னு சொன்னாரு.

எனக்கு ஒன்னுமே புரியல.

அப்ப அவர் சொன்னாரு…

‘தாயி… கவிதா மட்டும்தான் உம்பொண்ணா?

உன் தங்கச்சி மக குமுதா இருக்காளே.

அவ அம்மா சின்ன வயசுலயே இறந்ததுக்கப்புறம், அவளுக்கு அம்மா இல்லாத குறை தெரியாம நீதானே தாய்க்குத் தாயா வளர்த்துட்டு வர்ற?

அவளுக்கு சம்மதம்னா, நான் என் வீட்டு மருமகளா ஏத்துக்கத் தயாரா இருக்கேன்.

ஊர் ஆயிரம் பேசும்.

அதைப் பற்றி நாம ஏன் கவலைப்படணும்?’ன்னாரு.

அதே மாதிரி…

‘கவிதாவுக்கு நம்ம குடும்பத்தோட வாழ கொடுத்து வைக்கலன்னு நினைச்சுக்கோ.

கொஞ்ச நாள்ல எல்லாமே சரியாகிடும்.

நீங்க அவங்களைத் தொந்தரவு செய்யாதீங்க.

அவங்க எங்கேயோ போய் நல்லா இருக்கட்டும்…’ன்னு சொல்லிட்டு போயிட்டாரு.

மறுநாள்…

ஊர்ல இருந்தவங்க, விசேஷத்துக்கு வந்தவங்க ஆயிரம் கேள்வி கேட்டாங்க.

ஆனா யார்கிட்டயும் எதுவும் பேசாம உங்க தாத்தாவும் நானும் அழுதுகிட்டே இருந்தோம்.

உங்க அத்தை ரோஷக்காரி.

கட்டுன புடவையோடதான் வெளியே போனா.

நாங்க கவிதாவுக்கும் குமுதாவுக்கும் தனித்தனியா நகை எடுத்து வைச்சிருந்தோம்.

கவிதாவோட நகைகள் அப்படியே பெட்டியிலேயே இருந்துச்சு.

உங்க அம்மாவும் சின்ன அத்தையும்,

‘இது கவிதாவுக்குச் சேர வேண்டியது.

அவங்க கண்டிப்பா ஒரு நாள் வருவாங்க.

அப்ப அவங்ககிட்ட ஒப்படைக்கணும்…’ன்னு தெளிவா சொல்லிட்டாங்க.

அதுக்கப்புறம் நல்லபடியா ரெண்டு கல்யாணமும் நடந்து முடிஞ்சது.

மனசு உடைந்து போன உங்க தாத்தா…

இந்த வீட்டுல கவிதாவைப் பற்றின அடையாளம் எதுவும் இருக்கக் கூடாதுன்னு எல்லா போட்டோக்களையும் கழட்டி ஒரு பெட்டியில போட்டு பரண் மேல வைச்சுட்டாரு.

உங்க அம்மா பூரணி இங்க வந்த நாள்ல இருந்து ஒரு நாள் கூட இதைப் பற்றி பேசினதே கிடையாது.

எல்லாரும் மனசுக்குள்ளேயே அழுதுகிட்டு இருந்தோம்…”

– தொடரும்…

கல்பனா ராஜகோபால் பெயர்: கல்பனா ராஜகோபால்வயது: 56எழுதிய சிறுகதைகள்: 25பிரசுரமானவை: 12 கல்கி/மங்கையர் மலர் ஆன் லைன்: 11 கதைகள் கல்பனா ராஜகோபால் ஆரம்ப எழுத்தாளரான நான் கடந்து ஒரு வருட காலமாக கட்டுரைகள் மற்றும் கதைகளை கல்கிக்கு எழுதி வருகிறேன்.மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *