கண்கள் உறங்காவே!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 12 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தக் காட்டில் குடிவந்திருக்கும் குடியேற்ற வாசிகளின் குழந்தைகளுக்கென நடாத்தப்படும் அரசாங்கப் பாடசாலையின் தலைமையாசிரியர்தான் பொன்னுத்துரை.

அப் புதிய கிராமத்தின் எல்லையில் ஒதுக்குப்புறமாய் இருந்த பாடசாலையின் மறுபுறம் அடர்ந்த காடு.

தலைமையாசிரியர்க் குரிய ஜாகையில் தனியாகக் கிடந்து புரண்டு கொண்டிருந்த பொன்னுத்துரைக்கு இரவு 11 மணியாகியும் தூக்கம் வரவில்லை. ஆம்! அவர் ஆவலுடன் எதிர்பார்த்துக்கிடந்த அந்தச் சத்தம் காதில் படும்வரை அவரால் தூங்கமுடியாது.

வெள்ளியென்ன; சனியென்ன! அந்தச் சத்தம் கேட்டால் தான் நித்திரை. பொன்னுத்துரை ஒரு தடவை புரண்டு படுத்தார். பூட்டியிருந்த அவர் ஜாகைக்கு மிக அருகில் காட்டு மரங்களைச் சடசடவென யானை ஒன்று முறிக்கும் அரவம். ஆனாலும் அந்தச் சடசடப்பையும் ஊடுருவிக்கொண்டு எழவேண்டிய அந்தச் சத்தத்துக்காக அவர் செவிகளைக் கூரேற்றி வைத்துக்கொண்டு கிடந்தார்.

காட்டுமரத்தின் உச்சிக் கிளைகளில் குரங்குகள் சண்டை போடும் கீச்சு மூச்சு! சலசலப்புக்கள்! இடைக்கிடை வயல்களில் பன்றி, யானை, கரடிகள் நுழைந்து பயிர்களை அழிப்பதைத் தடுக்க வென நள்ளிரவின் அமைதியைக் கீழித்துக்கொண்டு அவ்வப்போது வயல்வெளிப் பரண்களிலிருந்து பயிர்க் காவலரளர் கிளப்பும் ‘ஹுய்! காய்! உய்யா! கூக்குரல்கள்.

நேரம் மணி பன்னிரண்டாகி, ஒன்றும் ஆகிவிட்டது. ஆனால் அந்தச் சத்தம் இன்னும் எழவில்லையே!

பொன்னுத்துரை விரக்தியோடு எழுந்து ஒரு சுருட்டை மூட்டிக்கொண்டபோது “டுமீல்” ஆகா! அவர் ஆவலோடு எதிர்பார்த்துக்கிடந்த சத்தம்! பொன்னுத்துரைக்கு உச்சி நின்று உள்ளங்கால் வரை இனித்தது.

ஆமாம்! மரனோ, மரையோ, பன்றியோ முயலோ விழுந்திருக்கிறது. நாளைக்கும் தவறாமல் ஒரு குடலை ஓசி இறைச்சி அவரைத் தேடிவரும். சுருட்டை வாயில் வைத்தபடியே பொன்னுத்துரை நிம்மதியாக உறங்கி விட்டார். 

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *