மறுபக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 18, 2026
பார்வையிட்டோர்: 110 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

அந்தி இருள் அறையை நிரப்பியிருக்க, தோளில் தூங்கும் தன் குழந்தையை மெல்லத் தாலாட்டிக் கொண்டிருந்தாள் அவள், நந்தினி.

திடீரென கதவு திறக்கும் சத்தம் கேட்க, தன் அலுவல் பேக்கை கையில் வீசியபடியே உள்ளே வந்தான் அவளது கணவன் ரமேஷ்.

“நந்தினி… பிள்ள தூங்கிட்டாளா?” என்று மெல்லிய குரலில் கேட்டபடி அவளருகே வந்தான்.

“ஹ்ம்ம்… இப்பதான் தூங்குனா,” என்று புன்னகைத்தாள் நந்தினி.

ரமேஷ் அவளது முகத்தையே சில நொடிகள் உற்றுப் பார்த்தான். அவளது புன்னகைக்கு பின்னால் மறைந்திருக்கும் ஏதோ மெல்லிய அமைதியை அவன் எப்போதும் அறிவான்.

“என்ன ரமேஷ்… அப்படி பார்க்குறீங்க?”

ரமேஷ் அவள் தோளை மெதுவாகத் தொட்டு, “இன்னைக்கு ஆபீஸ்ல வெளி ஊர் இருந்து புது பிராஞ்ச் மேனேஜர் ஒருத்தர் வந்திருக்காரு நந்தினி. அவர் பேரு… தாஸ்.. அர்ஜுன் தாஸ். உனக்கு அந்தப் பேரை கேட்டா எதுவும் ஞாபகம் வருதா?” என்று மெதுவா கேட்டான்.

நந்தினியின் இதயத் துடிப்பு ஒரு கணம் நின்று நிதானித்தது. கையில் இருந்த குழந்தை லேசாக அசைந்தது. நந்தினி திகைப்போடு ரமேஷைப் பார்த்தாள்.

“ரமேஷ்… நீங்க…”

“எனக்கு எல்லாமே தெரியும் நந்தினி,” என்றான் ரமேஷ் மிகத் தெளிவான குரலில். “கல்யாண மேடையில தாலி கட்டுற கடைசி நிமிஷம் வரைக்கும் உன் கண்கள் மண்டபத்து வாசலையே தேடுச்சு. அன்னைக்கே எனக்குப் புரிஞ்சிடுச்சு… உன் மனசுல வேற ஒருத்தன் இருக்கான். ஆனா, நான் உன்னை எந்தக் கேள்வியும் கேட்கல. ஏன்னா, உன் அன்பையும் நம்பிக்கையையும் நான் உள்வாங்குவேன் என நினைச்சேன்.”

நந்தினியின் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் மெல்ல அரும்பின.

“ரமேஷ், நான்… நான் உங்களை ஏமாத்தல…” என்று குரல் இடறப் பேசினாள்.

“நந்தினி..” என்று அவளது கரங்களைப் பற்றிக் கொண்டான் ரமேஷ். “நீ என்னை உண்மையா காதலிக்கிறாய் அது, எனக்குத் தெரியும். நீ காதலில் தோற்றிருக்கலாம்… ஆனா, காதலிப்பதில் ஒருபோதும் தோற்கல!”

நந்தினி தலையைக் குனிந்து அழத் தொடங்கினாள்.

“இன்னைக்கு அவரோட பேசினேன் நந்தினி…” என்றான் ரமேஷ்.

நந்தினி சட்டென நிமிர்ந்து, “அவரா… அவர் எப்படி இருக்காரு? அன்னைக்கு ஏன்… ஏன் அவர் என்னைத் தேடி வரல?” என்ற கேள்விகள் அவளுள் வெடித்தன.

சில நிமிடங்கள் கழிந்து..

ரமேஷின் முகம் சற்றே கனத்தது. “அன்னைக்கு அவருக்கு வேலை கிடைச்சத சொல்றதுக்காக ஊருக்கு பஸ்ல வந்தப்போ, ஒரு பெரிய ஆக்சிடென்ட் நந்தினி. அந்த விபத்துல அவரோட உயிரைக் காப்பாத்தினாலும்… அவரோட ஆண் உறுப்புலயும் விதைப்பைகள்லயும் பலத்த காயம். அங்க கடுமையா பாதிக்கப்பட்டு, அவரோட ஆண்மை முற்றிலுமா பறிபோயிடுச்சு.”

நந்தினி அதிர்ச்சியில் உறைந்து போனாள். “ரமேஷ்… என்ன சொல்றீங்க?!”

“ஆமா நந்தினி… தாஸ்ட அக்கா புருஷனுக்கும் இதே போல பிரச்சனை இருந்தப்போ, அவரோட அக்கா பட்ட அவமானங்கள், கண்ணீர், நரக வேதனைகள் எல்லாத்தையும் கார்த்திக் தன் கண்ணாலேயே பார்த்தவர். தன் அக்கா பட்ட அந்த வலி, தன்னால தன் காதலி நந்தினிக்கு ஒருபோதும் வரக்கூடாது, நினைச்சு துடிச்சுப்போயிட்டாராம்.”

ரமேஷ் தொடர்ந்தான், “கண் முழிச்சுப் பார்த்ததும் தன் உடம்புல நடந்த இழப்பை நினைச்சு அழுது துடிச்ச அவரு… மெல்ல மெல்ல குணமானதும், உன்னைத் தேடி உன் ஊருக்கு வந்திருக்கார். ஆனா, உன் முன்னாடி வந்து நிக்கல. ஏன்னா, அவரால உனக்கு ஒரு கணவனா முழு தாம்பத்திய வாழ்க்கையைக் கொடுக்க முடியாது. தன் அக்கா பட்ட நரகத்தை நீ படக் கூடாது என்றல்லாம் நினைச்சு, ‘தான் ஏமாத்திட்டதா’ நீ நினைச்சாலும் பரவாயில்லை ன்னு உன்னை விட்டே விலகிப் போயிட்டார். உனக்குக் கல்யாணம் ஆகி நீ சந்தோஷமா இருக்கிறத தூரத்துல இருந்து பார்த்துட்டுதான் திரும்பியிருக்கார். இன்னைக்கு வரைக்கும் அவர் கல்யாணமே பண்ணிக்கல.”

நந்தினியால் தன் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. இத்தனை வருடங்களாக “ஏன் என்னை ஏமாற்றினான்?” என்ற கேள்விக்கான விடை கிடைத்த கணத்தில், அவளது நெஞ்சம் சுக்குநூறாக உடைந்தது.

“அவர் உன்னை உயிரை விட அதிகமா காதலிச்சிருக்கார் நந்தினி… உன்னோட எதிர்காலத்துக்காகத் தன்னோட காதலையே தியாகம் செஞ்சிருக்கார்,” என்றான் ரமேஷ்.

“அவர்… அவர் என்னை ஏமாத்தல… எனக்காகவே வாழ்ந்திருக்கார்…” என்று விம்மினாள் நந்தினி.

நந்தினி தன் குழந்தையை மெல்லத் தொட்டிலில் வைத்தாள். அவளது நெஞ்சில் இருந்த பல வருட பாரம், வலி, ஏக்கம் எல்லாமே கண்ணீராகக் கரைந்து ஓடியது. தன் காதலன் துரோகி இல்லை, தன் மகிழ்ச்சிக்காகத் தன்னையே தியாகம் செய்த உன்னதமானவன் என்ற உண்மை அவளுக்குள் ஒரு புனிதமான அமைதியைத் தந்தது.

ரமேஷ் மெதுவாக அவளருகே வந்து, அவளது கண்ணீரைத் துடைத்து, அவளைத் தன் மார்போடு சேர்த்து ஆழமாகக் கட்டி அணைத்துக் கொண்டான்.

அந்த அணைப்பின் கதகதப்பில், ரமேஷின் தோளில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு, நந்தினி தன் மனதிற்குள் மெல்லிய குரலில் சொன்னாள்… “நீ என்னை ஏமாத்தலங்கிற இந்த உண்மையே எனக்குப் போதும். நீ எனக்குக் கொடுத்த இந்த வாழ்க்கை, நீ செஞ்ச தியாகம் வீண்போகல. என்னை உயிரா நேசிக்கிற ஒரு நல்ல கணவனோட நான் சந்தோஷமா வாழறேன்… உன் நினைவு என் நெஞ்சின் ஓரம் என்னைக்கும் ஒரு புனிதமானதா இருக்கும்…”

ரமேஷின் பேரன்பின் அணைப்பிலும், தாஸ்ஷின் தியாகத்தின் நிம்மதியிலும்… நிலவின் வெளிச்சத்தில் அந்த அறை முழுமையான அன்பால் நிறைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *