சத்தியம் செய்த சதி
கதையாசிரியர்: ச.வே.பஞ்சாட்சரம்
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: October 5, 2026
பார்வையிட்டோர்: 84
(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பார்வையிழந்து குரூடாகிவிட்ட விழிகள்! பசி குடைந் தெடுக்கும் வயிறு! கந்தைக் கோலம் – பெஞ்சமின் கைத்தடியால் பாதையைத் தட்டித்தடவி நகர்ந்து கொண்டிருக்கிறான். பாழடைந்த மண்டபம் போலாகி விட்ட உடல் நடுங்கித் தடுமாற ஓர் ஓடையைக் கடந்து கைத்தடியில் தட்டுப்பட்ட மலைப் படிக்கட்டு ஒன்றில் களைத்துக் களைத்து ஏறிச் சென்றவன் ஒரு வீட்டு முற்றத்தையடைந்த போது அசதி தாங்காமல் விழுந்தே விடுகிறான்.
“இங்காவது ஒரு பிடி சோறு கிடைக்குமா?” என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டு அவன் சுருண்டு கிடக்கையில் “ஐயோ பாவம்!” என்றொரு பெண் குரல்!
அக்குரலில் சிலிர்த்தெழுந்த அவன் சிந்தனையில் நீறு பூத்துக்கிடந்த ஞாபகங்கள் மின்னுகின்றன. பெஞ்சமின் 8 வருடங்களுக்கு முன் எஞ்சினியரிங் கல்விக்காக இங்கிலாந்து பயணமான போது வானுலகத் தேவதை போன்ற சுகிர்தாவை அவன் இதயத்தரசியைப் பிரிய முடியாமல் கண்கள் கலங்கியது; அவன் விருப்பப்படி அவள் “உங்கள் கண்கள் மேலாணையாக உங்களை நான் மறந்து நடக்கமாட்டேன்” என்று அவன் கையிலடித்துச் சத்தியஞ் செய்து, தன் கையால் அவன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விம்மியது;
அவன் லண்டனில் மூன்று ஆண்டுகளாக மாத மொரு கடிதமனுப்பி, ஒரு கடிதம் பெற்று மகிழ்ந்தது, இறுதியாக சுகிர்தா ஒரு அதிர்ச்சி தரும் கடிதத்தை அவனுக்கெழுதி, “உங்களை நம்பி நான் இங்கே காத்திருந்து கண்ணீர் வடிக்க, நீங்கள் உவ்விடம் யாரோ வெள்ளைக்காரப் பெண்ணோடு உறவு வைத்து உல்லாசமாக வாழ்கிறீர்கள், இங்கு எல்லோரும் பேசிக்கொள்வதைக் கேட்டு நான் கதறி அழுது தீர்த்து விட்டேன். இனி நீங்கள் யாரோ நான் யாரோ!” என்று அவனைக் குற்றஞ்சாட்டியது.
பெஞ்சமின் பதறித்துடித்து, “அது வெறும் பொய்! கட்டுக்கதை!” என்று ஆயிரம் சத்தியங்கள் செய்து கடிதம் எழுதியும், பதில் கிட்டாது போனது;
ஒருநாள் ஆய்வு கூட்டத்தில் ஆய்வுக் குழாய் வெடித்து அவன் கண்களை இழந்து, படிப்பை முடிக்காமலே குருடனாகத் தாய் நாடு திரும்பியது; அவனைக் குருடனாக்கிச் சத்தியத்தை மீறிய சுகிர்தா மலை நாட்டுப் பக்கம் ஆசிரியப் பணியேற்றுச் சென்றதாக அவன் கேள்விப் பட்டது ஐந்து வருடம் தம்பியர் நிழலிலிருந்து இறுதியில் பித்துப் பிடித்து வீட்டை வீட்டுக் கிளம்பி ஊரூராக அலைந்து இந்த ஊருக்கு வந்து சேர்ந்தது;
எல்லாம் ஞாபகத்துக்கு வர பெஞ்சமின் தன்னை மறந்து “சுகிர்தா! ஒரு பாவமும் அறியாத என்னைக் கெட்டவனாக எண்ணி என் கண்களையும் வாழ்வையும் சேர்த்துப் பறித்து விட்டாயே அம்மா!” என்று வேதனையோடு முனகிய பொழுது,
“ஐயோ என் பெஞ்சமின் என்னை மன்னித்து விடுங்கள்” என்ற அலறலைத் தொடர்ந்து ஒரு மாராப்பு மேனியும் வாழைத்தண்டுக்கைகளும் அணைத்த அணைப்பில் அவன் சிக்கிக்கிடந்து பதறுகிறான்.
அவன் விழிகளை இழந்து விட்டாலும் விழி நீரை இழக்கவில்லை.
– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.
தொடர்புள்ள சிறுகதைகள்
அவள் கேட்ட கேள்வி
இரஜகை நிலவன்
October 12, 2026
காதல் மழை
புஷ்பராஜ் கந்தசாமி
October 9, 2026
அபூர்வ கிறிஸ்துமஸ் பரிசு
ஜூனியர் தேஜ்
October 9, 2026