முடவன்நடை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 1, 2026
பார்வையிட்டோர்: 19 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

 
 (2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுப்பிரமணியம் ஸ்ரீகுமரன் என்பது இயற்பெயர் சுன்னாகத்தைச் சேர்ந்த இவர் 05 -04-1971 இல் பிறந்தவர். ஆசிரியராகவுள்ளார். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, விமர்சனம் பத்திரிகைத்துறைகளில் ஈடுபாடுள்ள இவருடைய உகைப்பு குறுநாவல் சுபமங்களா தேசியகலை இலக்கிய பேரவை உலகளாவிய ரீதியில் நடாத்திய ஈழக்குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது. சுவடுகள் (நாவல்) அற்றுப்போன அழகு (கட்டுரை) நூலுருப் பெற்றுள்ளன. இவரது கதைகளில் சமூக மாற்றத்துக்கான அழைப்பைக் காணலாம். 


நிலம் வெளுக்கவும் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டான். வாசலில் அம்மா ‘முழுவியளம்’ பார்த்து வழியனுப்பினாள். யாழ்ப்பாண நகரம் ஏழு மைல் தொலைவிலுள்ளது, எதிர்க்காற்றை வலித்துச் செல்லவேண்டும். அங்கிருந்து முதல் பஸ்ஸில் போனால்தான் பருத்தித்துறையிலிருந்து அன்றைக்கே திரும்பமுடியும். 

வீட்டிலிருந்து பிரதான வீதிக்கு ஏறும் பாதை மூடப்பட்டு விட்டதால், வீடுகளுக்கிடையே ஏற்படுத்திய புதிய ஒற்றையடிப்பாதை யாலேயே பயணங்கள். கிளியண்ணை வீட்டின் கேற்றைத் திறந்து கொண்டு இவன் போகும்போது, தூக்கக் கலக்கத்துடன் படியில் அமர்ந்திருந்த அவரது மகன் பெயர் சொல்லி அழைத்தான். இவன் திரும்பிச் சிரித்துவிட்டுச் சென்றான். 

பிரதான வீதியிலேறி தடையணையருகே வந்தபோது வரிசையில் நிறையப்பேர் காத்திருந்தனர். மரக்கறிச் சுமையும் வாழைக்குலைகளுமாக விவசாயிகள் தான் அதிகம். 

ஏழு மணிக்குப் பாதை திறக்கப்பட்டது. சைக்கிளை வேகமாக மிதித்தான். வீதியில் மெல்ல மெல்ல ஆட்கள் தலைகாட்டத் தொடங்கியிருந்தனர். இராணுவ ரோந்து அணியொன்று இருகரைகளாலும் சீரான இடைவெளியில் சென்று கொண்டிருந்தது. இடையில் எதிர்ப்பட்ட முகாம்களில் இறங்கி, சைக்கிளை உருட் டியபடி போய்ப் பின் ஏறிச் சென்றான். 

நகரத்து நுழைவாயில் தடையரணிலும் நிறையக் கூட்டமிருந்தது. அரச ஊழியர் வரிசையிற் சென்றதால் விரைவாகவே சோதனையிடப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டான். உள்ளேயும் பல இடங்களில் இறங்கி ஏறிச்செல்ல வேண்டியிருந்தது. பாதுகாப்பு நிலையமொன்றில் சைக்கிளை விட்டுவிட்டு, பஸ். நிலையத்திற்கு வந்தபோது பஸ்ஸைத் தவற விட்டிருந்தது தெரிந்தது. இரண்டு மணி நேரங் கழித்தே அடுத்த பஸ். காலை உணவை முடிப்பதற்காக இவன் கடையொன்றுக்குள் நுழைந்தான். 

திரும்பி வந்தபோது மினிபஸ்ஸொன்று நின்றது. எட்டரைக்குப் புறப்படுமென்றார்கள். இவனைப்போல -அரசபேரூந்தைப்பார்த்து விட்டு பலரும் ஏறிக் கொண்டனர். பஸ் புறப்பட எட்டே முக்காலாயிற்று. 

வின்ஸர் சந்தியில் இறங்க வேண்டியிருந்தது. இவன் ஒன்று என எண்ணிக் கொண்டான். சோதனைச் சாவடியில் அடையாள அட்டையைக் காட்டிவிட்டு, சற்றுத் தள்ளிப்போய் மற்றவர்களுடன் நின்றுகொண்டான். பஸ் வந்து எல்லோரையும் ஏற்றிப் புறப்படுகையில் கையைக் காட்டியபடி பெண்ணொருத்தி அறுபது வயதிருக்கும் – அவசரமாக ஓடி வந்தாள். பருத்த உடலைத் தூக்கி அவள் ஓடி வருவது சுவாரஸ்யமாய்ப் பட்டது இவனுக்கு. யாரையோ திட்டியபடி ஏறிக் கொண்டாள். 

இவனுக்கருகே கைக்குழந்தையுடன் இருந்தவளைக் கண்டுவிட்டு அவளருகே வந்து ‘எடி கலாப்பெட்டை’ என்றாள். அவள் சிரித்தபடி அழைத்து இவனுக்கும் தனக்குமிடையில் அமர்த்தினாள். நேற்றுக் காலையில் வந்து சுவிஸிலிருக்கும் தனது மகனுடன் ரெலிபோன் கதைக்கப் பதிவுசெய்துவிட்டு இரவெல்லாம் விழித்திருந்து ‘கோல்’ கிடைக்காததையும் அப்பெண் புலம்பித் தீர்த்தாள். அடிக்கடி ‘கோதாரி விழுவான்கள்’ எனத் திட்டினாள். 

அடுத்த சென்றியில் இறங்கினார்கள். அறுபது வயதுக்காரி திட்டியபடி இறங்காமலே இருந்தாள். இவன் இரண்டு என எண்ணிக்கொண்டான். சோதனை முடிந்து அப்பால் போய் நின்றபோது ‘கொண்டக்டர்’ ஓடி வந்தான். 

“ஆற்றையப்பா அந்த உரப்பை?”

ஒருவர் தன்னுடையது தானென்றார்.

“ஓடப்பா கெதியா… ஆமிக்காரன் கேட்கிறான் கழட்டிக்காட்டு.” 

மீண்டும் அனைவரும் ஏறிக்கொள்ளப் பஸ் புறப்பட்டது. கல்வியங்காட்டில் எல்லோரும் இறங்கவேண்டுமென்று ட்றைவர் நச்சரித்தான். அறுபது அவனை ஏசியபடி இறங்கினாள். உரப்பைக்காரன் இம்முறை பையைச் சுமந்து கொண்டு வந்தான். பஸ் புறப்படும்போது இரண்டு இராணுவத்தினரும் ஏறி புட்போட்டில் நின்று கொண்டனர். இவனருகே இருந்தவளின் பிள்ளை அவர்களைப் பார்த்து வீறிட்டு அலறியது. அறுபது அவளிடமிருந்து குழந்தையை வாங்கிப் பலத்து “ஆராரோ…” சொன்னாள். அது மேலும் அலறியது. மீண்டும் குழந்தை அவளிடம் போனது. இப்போது முதல் முறையாக அவள் இவனைப் பார்த்துச் சிரித்தாள். 

அடுத்த சென்ரியில் இராணுவத்தினர் இறங்கிக்கொண்டனர். பெண்ணொருத்தி கையில் ஒரு குழந்தையுடன் ஏறினாள். மறுகையில் பெரிய பையொன்றையும் வைத்திருந்து ஏறமுடியாமல் தத்தளித்து தூக்கித்தருமாறு குரல் கொடுத்தாள். ஒருவன் பையைத் தூக்கி உதவினான். பின்னால் ஐந்து பிள்ளைகளும் ஏறிக்கொண்டனர். மூத்த பையனுக்கு ஒன்பது வயதிருக்கும். ஒரு பெண் பிள்ளையைத் தூக்கி வைத்திருந்தான். ஓரிரு வயது இடைவெளிகளில் பிறந்த பிள்ளைகளாய் இருக்கவேண்டும். 

இடமில்லாமல் தவித்தாள் அப்பெண். இவன் எழுந்தபோது “நீங்கள் இருங்கோ அவ இருந்திட்டா” என்றாள். இளம்பெண். பிள்ளைகளையும் கூப்பிட்டு பைகளையும் வைத்து அந்த இடம் முழுவதையும் அடைத்திருந்தாள் அப்பெண். பக்கத்தில் இருந்தவர் சினத்து ஏதோ சொல்லி ஏசினார். அவளும் பதிலுக்கு ஏதோ சொல்லிச் சமாளித்தாள். கொண்டக்டர் காசு வாங்கினார். 

“என்ன அநியாயம்…….சீ.ரீ.பி.யிலை போயிருக்கலாம்” என்றாள் பெண். 

“போயிருக்கலாந்தான்’ என்றுவிட்டு, தாட்காசை வாங்கி விரல்களுக்கிடையே புதைத்துக் கொண்டான். 

புத்தூர் கழித்து இறங்கி ஏறியபோது இவனது சீற்றை வேறொரு பெண் ஆக்கிரமித்திருந்தாள். இவனைப்பார்த்துவிட்டு தெரியாததுபோல வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள். இளம்பெண் இவனைநோக்கி பரிதாபந் தொனிக்க முறுவலித்தாள். 

வாகனம் பெரும்பாலும் நிறைந்துவிட்டது. இந்த நெரிசலுக் கிடையேயும் ஏழெட்டுப்பேர் ஏற்றப்பட்டனர். அவர்களது உடைகள் மங்கலநிகழ்வொன்றிற்குச் செல்வதைப் பறைசாற்றின.நேரே முன்சீற்றில் இன்னும் திருமணக்களை மாறாத இளங்குடும்பமொன்று இருந்தது. இருவரும் கிறக்கத்துடன் ஒருவரையொருவர் நோக்கியும் சீண்டியும் கொண்டிருந்தனர். இவன் திரும்பி இளம்பெண்ணைப்பார்த்தான். நிமிர்ந்தவள்- இவன் பார்ப்பதைக் கண்டு விட்டுச் சிரித்தாள் பின்தலைகுனிந்தாள். 

“எங்கைபோட்டு வாறியள்”? இவன் கேட்டான். 

நிமிர்ந்து வினாக்குறிப்புடன் சிரித்தாள். இவன் மீண்டும் கேட்டான்.

“ஃபோன்லை கதைச்சிட்டு வாறன்” 

“ஆரோடை…?” 

“அவரோடை”

“எந்த நாடு?” 

“ஜேர்மன்லை நிண்டவர். இப்ப போடர் கடந்து ‘சுவிஸிக்’கை போட்டாராம், அதாலை அவரோடை கதைக்க முடியேல்லை”. 

“இரவு எங்கை தங்கினீங்கள்…?” 

“ரெலிபோன் கதைக்கிற இடத்திலைதான். நிறையப்பேர் இருந்தினை. நித்திரையுமில்லை. நுளம்பு வேறை பிள்ளையோடை சரியான கரைச்சல் பட்டிட்டன். இனி வீட்டைபோய்த்தான் எல்லாம்.” சிரித்தாள் அவள். 

வல்லையில் அடையாள அட்டைகளை இராணுவத்தினர் வாங்கிக்கொண்டனர். பதிலுக்கு சிங்களத்தில் எழுதப்பட்ட அட்டையொன்றைத் தந்தனர். மீண்டும் பயணம். சனநெரிசலில் வியர்த்துக் கொட்டியது. இந்த நேரம் பார்த்து ‘காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்’ என்ற பாடலைப் போட்டு எரிச்சலூட்டினான் ட்றைவர். பிறகு தனக்குள் சிரித்துக் கொண்டான். 

மந்திகைக்கருகே இறங்கி ஏறும்போது இதுதான் கடைசி என்றான் கொண்டக்டர். இவன் பதினொன்று என்று எண்ணிக் கொண்டான். பருத்தித்துறையில் இறங்கி வழக்கமான கடற்கரைப்பாதை மூடப்பட்டுள்ளதால் குச்சொழுங்கைகளுக்கால் வளைந்தும் நெளிந்தும் ஒரு மைல் தூரம் சென்று, அந்த வீட்டிற்குள் நுழைந்ததும் “கொஞ்சம் தண்ணி தாங்கோ” என்றான் ஆவலுடன்; துக்கம் விசாரிக்காமலே. 


சுகதுக்க விசாரிப்புகள், நாட்டுநிலமை, அரசியல் எதிர்காலம் பற்றிய பகிர்வுகள் என ஒரு மணி நேரமிருந்து விட்டு ஒன்றரை மணிக்குப் புறப்பட்டான். ஒரு மணித்தியாலம் இருக்கவே வந்தனீர்” எனக் கனகண்ணை கேட்டார். இவன் பதிலேதும் சொல்லாமல் சிரித்துவிட்டுப் புறப்பட்டான். 

பருத்தித்துறையில் பஸ்ஸேதுமில்லை. இப்போது தான் பஸ் சென்றது எனக் கூறினார்கள். இவனைப் போலவே வேறுமிருவர் சோர்வுமேலிட நின்றனர். பக்கத்தில் ஒரு சிறு வான் நின்றது. இவனைக்கண்டதும் “அண்ணை யாழ்ப்பாணமா என்றான் ஒருவன். அவன்தான் வானின் சொந்தக்காரனாயிருக்க வேண்டும். இவன் தலையசைத்தா ன். அண்ணையும் அம்பது ரூபா தருவார். அரை மணித்தியாலத்தாலை போவம் ” ஐம்பது ரூபா என்றதும் இவன் ஏற்கவில்லை. அவன் பல்வேறு நியாயங்கள் சொன்னான். விவாதப் பட்டுக்கொண்டிருந்தபோது ஆபத்பாந்தவனாக ஒரு சீ.ரீ.பி. பஸ் வந்தது. இவனும் மற்றவர்களும் அதில் ஏறிக் கொண்டனர். 

இரண்டரைக்கு பஸ் புறப்பட்டது. இடையிடையே பலரும் ஏறிக்கொண்டனர். பல்கலைக்கழகப் பிள்ளைகள் தான் அதிகம். வல்லை வெளியில் அட்டையைக் கொடுத்து விட்டு அடையாள அட்டையை வாங்கிக் கொண்டான். ஆவரங்காலில் இராணுவத்தினர் சிலரும் ஏறிக் கொண்டனர். 

“டேய், சிறீ!” குரல் கேட்டு இவன் திரும்பிப் பார்த்தான். இவனோடு சிறுவகுப்பில் படித்த நண்பன். ஆவலோடு விசாரித்தான். இவன் அவனை அழைத்து அருகமர்த்தினான். அவன் சுவாரஸ்யமாய்க் கதைத்துக் கொண்டே வந்தான். திடீரென பஸ் சிறிச்சென பிறேக் போட்டு நின்றது. என்னவென இன்னும் பலரும் பதைப்புடன் பார்த்தனர். இராணுவத்தினரில் ஒருவரது தொப்பி கழன்று விழுந்து விட்டமை தெரிய வந்தது. 

“அட இதே” நண்பன் சலிப்புடன் சிரித்தான். 

யாழ்ப்பாணம் வந்து சேர ஐந்தே முக்காலாகி விட்டது. இந்நேரம் ‘பண்ட்’ மூடப்பட்டிருக்கும். இனி பலாலி வீதி வழியாகவே செல்ல வேண்டும். பார்க்கில் இவனது சைக்கிள் மட்டுமே நின்றது. கிழவன் அவனையே எதிர்பார்த்திருந்ததாகக் கூறினான். இவன் காசைக் கொடுத்துவிட்டு சைக்கிளிலேறி மிதித்தான். ஒருநாள் பொழுது வீணாகி விட்டதாக இவன் சலிப்புடன் தனக்குள் சொல்லிக் கொண்டான். 

ஆரியகுளச் சந்தியைத் தாண்டும்போது பெருமாள் கோயிலடிப் பக்கமாக வேட்டுச் சத்தங்கள் கேட்டன. சென்றிகளுக்குள் நின்ற படையினர் துப்பாக்கிகளுடன் வெளியே வந்து அங்குமிங்குமாக நிலையெடுத்தனர். அந்த வழியால் செல்லாததற்காகத் தன்னை மெச்சியபடி இவன் வேகமாகச் சைக்கிளைச் செலுத்தினான். 

வீட்டையடைந்தபோது நன்றாக இருண்டிருந்தது. வாசலில் அம்மா நின்றாள். 

“ஒரு இடத்துக்குப் போனா வேளைக்கு வாறேல்லையே ! நானிஞ்சை நெஞ்சிடிச்சுக்கொண்டு நிக்கிறன்” என்று சொல்லி மேலும் ஏசினாள். இவன் வெறுமையுடன் சிரித்தபடி சைக்கிளை நிறுத்தி னான். சோர்வுடன் போய் குந்தில் அமர்ந்து கொண்டான். 

– இங்கிருந்து… பன்னிரண்டு சிறுகதைகள், முதற் பதிப்பு: 2001, நண்பர்கள் வெளியீடுபதிப்பகம், நல்லூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *