யாழ்ப்பாணத்தைச் சார்ந்த பருத்தித் துறைக்கு அண்மையிலுள்ள அல்வாய் என்னும் ஊரிலே தோன்றிய வர் இவர். பயிற்றப்பட்ட தமிழாசிரியராய் விளங்கிய இவர், பழைய தமிழ் மரபு வழுவாத வகையில் அரிய கவிதைகள் யாப்பதில் வல்லவராய் விளங்கினார். ‘ஈழ கேசரி’ வார இதழ் தொடங்கப்பெற்ற காலத்திலிருந்து ‘அநுசுயா’ என்னும் பெயருடன் நகைச்சுவைக் கட்டுரைகள் பலவற்றை எழுதி வந்தவர். இலங்கை வானொலித் துறையினரால் நடாத்தட்பட்ட கவிதைப் போட்டியிலே, இவர் இயற்றிய ‘புதிய வண்டுவிடு தூது’ என்னும் கவிதை முதற் பரிசினைப் பெறுவ தாயிற்று. இவர், ‘வளர்பிறை’ ‘குமாரவேள் பதிகம்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.
அல்வாயூர் மு. செல்லையா (அக்டோபர் 7, 1906 – பெப்ரவரி 9, 1966) என்பவர் 1930-1960 காலகட்டங்களில் ஈழத்துத் தமிழ் இலக்கியப் பரப்பில் வாழ்ந்த ஒரு மிக முக்கியமான கவிஞர், தமிழ்ப் பண்டிதர் மற்றும் எழுத்தாளர் ஆவார். யாழ்ப்பாணத்தின் அல்வாய் என்னும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
இவரைப் பற்றிய முக்கியக் குறிப்புகள்:
- பணிகள்: இவர் ஒரு பயிற்றப்பட்ட தமிழாசிரியராகவும், பாடசாலை அதிபராகவும் பணியாற்றியவர். கவிதை எழுதுவதோடு மட்டுமல்லாமல் ஜோதிடக் கலையிலும் வல்லவராகத் திகழ்ந்தார்.
- கொள்கைகள்: தீவிர காந்தியவாதியான இவர், மாமிசம் உண்ணாதவராகவும், சமூகத்தில் சாதியொழிப்புக் கொள்கைகளில் தீவிர ஈடுபாடு கொண்டவராகவும் விளங்கினார். ஈழத்தில் மகாகவி பாரதியாரின் புகழைப் பரப்பிய முன்னோடிகளில் இவரும் ஒருவராவார்
சிறுகதைகள்
கவிஞரின் நூல்கள்.
1. தேசிய கீதங்கள்
2. சுகாதார சுலோகங்களும் கும்மியும்
3. “வளர்பிறை” கவிதைத் தொகுதி
4. குமராபுரக் குமரவேள் பதிகம்
5. “வண்டு விடு தூது”
6. தங்கத்தமிழ்க் கண்
7. கதிர்காமக் கந்தப்பெருமான் வேல் வெண்பா
8. முருகமூர்த்தி தோத்திரக் காரிகை
9. பாஷைப் பயிற்சி 1965. (ஜீ.சீ.ஈ.கலிய. உயர்தர வகுப்புகளுக்கு )
10. கந்தவனநாதாட தோத்திரக் காரிகை
11. செல்வச்சந்நிதி சுப்பிரமணிய சுவாமி துதி
12. வற்றாப்பளை அம்மன் துதி
13. அல்வாய் வேவிலந்தை அம்மன் பதிகம்
14. கவிதை வானிலே ஒரு வளர் பிறை
கவிஞர் அவர்களின் வளர்பிறைக் கவிதைத் தொகுதியை விமர்ச்சித்து நயம்பட இரசிகமணி திரு. கனக. செந்திநாதன் அவர்களால் வரதர் வெளியீடாக வெளி வந்த நூல்.
பதிப்புரை – 2018
கலாநிதி சுப்பிரமணியம் குணேஸ்வரன்
மார்க்கண்டு செல்வதாஸ்
நூற்பெயர்
“அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள்” என்ற மகுடம் தாங்கி வெளிவரும் இப்பெருந் திரட்டு 20 ஆம் நூற்றாண்டின் ஈழத்துக் கவிஞர்களில் ஒருவரான, சைவமும் தமிழும் காந்தீயமும் சமூக விடிவும் எனும் நால்வகை மணிகளையும் தம் அறிவின் அணிகலன்களாகக் கொண்டு வாழ்ந்த கவிஞர், கட்டுரையாசிரியர், கதாசிரியர். நல்லாசிரியர், சமூகமுன்னோடி என்றெல்லாம் ஈழத்து இலக்கியப் பரப்பில் முத்திரை பதித்த மு. செல்லையா (1906.10.07-1966.12.09) அவர்களின் எழுத்துக்கள் அடங்கிய முதற்பெருநூல் ஆகும்.
நூலாசிரியர்
மு.செல்லையா அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் முதற்தசாப்தமாகிய 1906 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 07 ஆந் திகதி யாழ்ப்பாணம் வடமராட்சியின் அல்வாய்க் கிராமத்திலே முருகர் குஞ்சரம் தம்பதியருக்கு இரண்டாவது புதல்வராகப் பிறந்தார். வைத்திலிங்கம், பொன்னையா(அண்ணாவியார், கலைப்போதனாச்சுடர்), தங்கரூபம், சின்னத்தங்கம் ஆகியோர் இவரின் உடன்பிறப்புக்கள். துணைவியார் நாகமுத்து ஆவார்.. விவேகானந்தன், சபாலிங்கம், பாரதி ஆகியோரை நன்மக்க ளாகப் பெற்றார்.
மு. செல்லையா அவர்கள், சைவப்பெரியார் கா. சூரனின் மாணாக்கர் பரம்பரையின் முதல் வித்து. அவரிடம் சமயம். மொழி, இலக்கியம், ஆகியவற்றைக் கற்றதோடல்லாமல் தமிழில் விசேட தேர்ச்சி பெறும்பொருட்டு கரவெட்டிப் பண்டிதர் திரு க.மயில்வாகனம் உபாத்தியாரிடம் இலக்கண இலக்கிய நூல்களை யும் சமய அறிவுக்கு அடிப்படையாகப் புராணத்தையும் சைவப் பெரியார் சூரன் அவர்களின் வழிகாட்டலிலேயே கற்றுத் தேர்ந்தார். பிற்காலத்தில் மதுரைப் பண்டிதர் பரீட்சைக்காக பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்களிடமும் வித்துவான் ந. சுப்பையாபிள்ளையவர்களிடமும் பாடங்கேட்டார்.
1927 ஆம் ஆண்டு கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சியை நிறைவுசெய்து கொண்டு வெளியேறினார். தேவரையாளிச் சமூகத்தின் மத்தியில் இருந்து தோன்றிய முதலாவது பயிற்றப்பட்ட சைவஆசிரியன் என்ற பெருமையும் பெயரும் மு.செல்லையா அவர்களுக்கே உரியது. தேவரையாளி சைவவித்தியாசாலையில் ஆசிரியராக, தலைமை யாசிரியராக 24 வருடம் சேவையாற்றினார். பண்டிதர், ஆசிரியர், தலைமையாசிரியர், கவிஞர், கட்டுரையாளர், நாடகாசிரியர், சோதிடர், பேச்சாளர், சமூக விடுதலை விரும்பி, சமூக முன்னோடி ஆகிய பல்பரிமாண ஆளுமை மிக்கவர். 1927 இல் மகாத்மா காந்தியை யாழ்ப்பாணத்தில் தரிசிக்கும் வாய்ப்புப் பெற்றவர். சைவசமய அபிமானியாகவும் காந்தீயக் கொள்கை களின்பால் ஈர்க்கப்பட்டு ஆராக் காதல் கொண்டு கதர் உடைய ணிந்து காந்திய வாதியாகவே தன் வாழ்வை மேற்கொண்டவர்.
கவிஞர் மு.செல்லையா அவர்கள் அல்வாய் சிறிலங்கா வித்தியாலயத்தை அல்வாய் வடக்கு க. முருகேசு உபாத்தியாயர் அவர்களுடன் இணைந்து தோற்றுவித்து வித்தியாலயத்தின் தலைமையாசிரியராகவும் பணியாற்றியவர். (ஆதாரம்: யா/அல்வாய் சிறீலங்கா வித்தியாசாலை வெள்ளிவிழா மலர்,1980) தீண்டாமைக்கெதிராகக் குரல்கொடுக்க 30.05.1934 இல் உருவாக்கப்பட்ட “ஹரிசன வாலிபர் சங்கம்”, வாலிபர் மகாநாடு தொடக்கம் காந்தியடிகளைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட “காந்திய சேவா சங்கம்”, மற்றும் “வடஇலங்கை சைவ சமரச சங்கம்” ஆகியவற்றின் உருவாக்கத்திற்கு உழைத்து சமூகப் புரட்சியை ஏற்படுத்தினார். சிறுபான்மைத் தமிழர் மகாசபை, யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் முதலான சமூக அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளார். இவற்றுடன் யாழ் இலக்கிய வட்டத்தில் உறுப்பினராகவும், 1963 இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் தலைவராகவும் இருந்து இலக்கியபணிக்கு உதவியுள்ளார். “அல்வாய் மனோகரா சனசமூக நிலையம்” உருவாக்கத்திற்கு உழைத்ததோடல்லாமல் 1940 களில் உருவாக்கப்பட்ட “மனோகர கான சபா”, அல்வாய் சாமணந்தறை ஆலய பரிபாலனசபை முதலான பொது அமைப்புக்களின் உருவாக்கத்திலும் தொடர் வளர்ச்சியிலும் முன்னின்று உழைத்திருக்கிறார்.
கவிஞர் அவர்களை நினைவுபடுத்தும் சில குறிப்புக்களை இவ்விடத்தில் மேலும் பதிவுசெய்யலாம். 1973 ஆம் ஆண்டு அல்வாய் சாமணந்தறை ஆலய முன்றலில் “கவிஞர் செல்லையா அரங்கு” அமைக்கப்பட்ட காலந்தொடக்கம் சிவராத்திரி காலத்தில் வருடாந்தம் கலைநிகழ்வுகள் நிகழ்த்தப்படுகின்றன. வருடாந்தம் நவம்பர் 09 ஆந் திகதி லீலா பஞ்சாங்க நாட்காட்டியில் அன்னாரது நினைவுதினம் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. 1972 ஆம் ஆண்டுமுதல் அல்வாய் கிராம நுழைவாயிலில் “கவிஞர் செல்லையா வீதி” என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளமை. தேவரை யாளி இந்துக்கல்லூரியின் மண்டபம் ஒன்றுக்கு “கவிஞர் செல்லையா மண்டபம்” என்ற பெயர் சூட்டப்பட் டுள்ளமை. இவையாவும் அன்னாரின் சேவைகளை வரலாற்றில் நினைவுபடுத்துவனவாக அமைந்துள்ளன.
தனது பணிக்காலத்தில் அல்வாய், வதிரி, தேவரையாளி, கொற்றாவத்தை, கரவெட்டி மற்றும் அயற்கிராமங்களில் வாழ்ந்த பிள்ளைகளின் கல்விவளர்ச்சியிலும் கலை வளர்ச்சியிலும் சமயம், பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை கொண்டு உழைத்திருக்கிறார். ஆசிரியர் ஆ.ம செல்லத்துரை, அண்ணாவியார் தம்பிஐயா. எழுத்தாளர் தெணியான், பொறியியலாளர் வே.சிவயோகன், பேராசிரியர் மா.கருணாநிதி, கணக்காளர் க.கமலேஸ்வரன் முதலான நீண்ட பட்டியல் ஒன்று கவிஞரின் மாணக்கர் பரம்பரையைக் கொண்டது. தனது பணிக்காலத்தில் சைவப்புலவர் சி. வல்லிபுரம், முருகேசு உபாத்தியாயர், ஆ.ம செல்லத்துரை ஆசிரியர், க.கிருஷ்ணபிள்ளை ஆசிரியர் முதலானோரை நல்ல நண்பர்களாகவும் வரித்துக் கொண்டு சமூகத்தின் உயர்வுக்காக உழைத்திருக்கிறார் என்பது இன்றைய தலைமுறைக்கு நல்ல எடுத்துக்காட்டாக உள்ளது.
நூலாசிரியர் இலக்கியத்திறன்
1930-1950 கள் வரை ஈழத்து இலக்கியப் பரப்பில் காலூன்றி நின்ற ஈழகேசரிக் காலக் கவிஞர்களில் ஒருவராகக் கணிப்புப் பெற்றார். கவிதைகளுடன் கட்டுரைகள் கதைகள் எழுதிய போதிலும் கவிதைகள் ஊடாகவே இலக்கிய உலகில் அடையாளம் காணப்பட்டார். 1952 ஆம் ஆண்டு தனிக் கவிதைகளையும் பிரபந்தங்கள் சிலவற்றையும் உள்ளடக்கி வெளிவந்த “வளர்பிறை” என்ற கவிதைத்தொகுதி தமிழ்த் தென்றல் திரு வி. கல்யாணசுந்தரமுதலியார் அவர்களாலும் நாமக்கல் வெ.இராமலிங்கம்பிள்ளை அவர்களாலும் பாராட்டப் பட்டது. அவர் எழுதிய “அம்மா வெளியே வா அம்மா” எனத் தொடங்கும் “வளர்பிறை” எனும் தலைப்பிலான ஈழத்தின் புகழ்பெற்ற கவிதையை எழுதியதன் மூலம் முக்கியமான குழந்தைக் கவிஞராகவும் தன்னை நிலை நிறுத்தினார்.
மரபுக் கவிதைகளையே அதிகம் யாத்தவர். தூது. பதிகம், பிள்ளைத்தமிழ், உலா. திருப்பள்ளியெழுச்சி முதலான பிரபந்த வடிவங்களில் பல பிரபந்தங்களை ஆக்கியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். வெண்பா, விருத்தம் ஆகிய யாப்புக்களைக் கையாண்டு பெரும்பாலான கவிதைகளை எழுதியுள்ளார். நாட்டார் வடிவம் சார்ந்த பாடல்களையும் பொதுமக்களிடம் அதிகம் வரவேற்பைப் பெற்ற சிந்து, கும்மி ஆகிய வடிவங்களையும் தனது கவிதைகளில் கையாண்டுள் ளார். எளிமையும் இனிமையும் சந்தமும் பொருந்திய இன் தமிழில் அமைந்த பிரபலமான பாடல்மெட்டுக்களில் (நந்தவனத்தி லோராண்டி.., தேசம் ஞானம் கல்வி…) அமைந்த கவிதைகளை யும் யாத்துள்ளார்.
கவிஞர் மு. செல்லையாவின் மற்றுமொரு ஆளுமையை அவர் எழுதிய கட்டுரைகள் ஊடாகக் கண்டு கொள்ளலாம். குறித்த கட்டுரைகளின் பொருளும் அவற்றை வாசகர்களிடம் கொண்டுசேர்க்கும் மொழிநடையின் வசீகரமும் செல்லை யாவுக்குத் தனித்துவமான நடையினை உருவாக்கின. இதற் குரிய களத்தை ஈழகேசரி மிகத் தாராளமாக வழங்கி ஊக்குவித் துள்ளது. அநுசுயா, அபூதன், முருகவரோதயன் ஆகிய புனை பெயர்களிலும் மு. செல்லையா என்ற தனது இயற்பெயரிலும் ஈழகேசரியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள் ளார். எளிமையும் எள்ளலும் கோபமும் நிறைந்த அவரின் கட்டுரைகள் மொழி, சமயம், சமூகம், அரசியல், பண்பாடு, இலக்கியம் குறித்தவையாக அமைந்துள்ளன.
கவிஞர் அவர்கள் பழமையின் பிடிப்பில் லயித்திருந்த வராயினும் புதுமையை வரவேற்கவும் துணிந்தவர். இதனா லேயே அவருடைய படைப்புக்களில் கவிதைகள், சிறுகதைகள் கட்டுரைகள், இலக்கணம், பத்தி எழுத்து ஆகிய பல்வகை வடிவங்களை கண்டு கொள்ள முடிகின்றது.
கவிஞர் மு.செல்லையா அவர்கள் ஆசிரியராகப் பணி செய்யக் கிடைத்த நற்பேறால் தமிழ் கற்கும் பிள்ளைகளின் தமிழ் இலக்கண ஆற்றலை மேம்படுத்தும் விதத்தில் “பாஷைப்பயிற்சி” என்ற இலக்கணப் பகுதி ஒன்றினையும் எழுதியுள்ளார். இது பாடத்திட்டத்துடன் தொடர்புபட்ட வகையில் பிள்ளைகளின் கற்ற லுக்கு உதவக்கூடிய உசாத்துணை நூலாக அமைந்திருக்கிறது.
இந்த வகையில் மு. செல்லையா அவர்களின் இலக்கியத் திறனுக்கு ஊடாக தமிழ்ச் சமூகத்தின் சமூக, பொருளாதார, பண்பாட்டு, அரசியற் பின்னணியை அறிந்து கொள்ள முடிகிறது. மக்களின் வாழ்வுநிலையும் காலமும் செல்லையாவின் படைப்புக் களின் ஊடாக மிகத் தெளிவாகப் புலப்படுவதனை இத்தொகுப்பி னூடாக அறிந்து கொள்வதற்கு ஆதாரநூலாக இது மிளிரும் என நம்பலாம்.
பெரும்பதிப்பின் தேவை
1930 களின் ஈழத்துக் கவிதை வரலாற்றில் கவிஞர் மு. செல்லையாவுக்கு முக்கியமான இடமுண்டு. எனினும் இதுவரை அவர் எழுதிய கவிதைகள் முழுமையாகத் தொகுக்கப் படவில்லை. அதேபோல் மொழி, இலக்கண வளர்ச்சியிலும் அவரின் பங்களிப்பு முக்கியமானது. இந்த நோக்கங்களைக் கருதி மு. செல்லையா எழுதிய படைப்புகள் அனைத்தையும் தொகுக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே, முழுமையாகக் கொண்டு வரவேண்டியது காலத்தேவையும் இலக்கிய வரலாற்றுக்குப் பயனுள்ள முயற்சியுமாகும் என்று எண்ணி னோம்.
இத்தொகுதிக்கு முன்னர் அவருடைய சில படைப்புகள் நூல்களாக வெளிவந்துள்ளன. அவற்றுள் “பொலிகண்டி கந்தவனநாதர் தோத்திரக் காரிகை” (1932), “தேசிய கீதம்” (1932), “வளர்பிறை” (1952), “குமாரபுரக் குமரவேள் பதிகம்” (1955), “தங்கத் தமிழ்க்கண் (1961), “புதிய வண்டுவிடு தூது” (1963), “பரீட்சைச் சித்திக்கேற்ற பாஷைப்பயிற்சி” (1963), “மேலைக்கரம்பன் முருகமூர்த்தி தோத்திரக் காரிகை” (1965), (கிடைக்கப்பெறாதவை : அல்வாய் வேவிலந்தை அம்மன் பதிகம். வற்றாப்பளை அம்மன் துதி, சுகாதார சுலோகங்களும் கும்மியும், கதிர்காமக் கந்தப்பெருமான் வேல்வெண்பா) ஆகியன கவிஞர் வாழ்ந்த காலத்தில் வெளிவந்தவையாகும். அவர் பத்திரிகை களிலும் சஞ்சிகைகளிலும் மலர்களிலும் எழுதிய படைப்புகளும் மேற்குறித்த கோயிற் பிரபந்தங்களும் ஏனையவையும், தனித்தனிப் பிரசுரங்களாக சிறிய நூல் வடிவில் வெளிவந்து இன்று கிடைப்பதற்கு அரிதாகிவிட்டன.
அண்மைக்காலத்தில் ஈழத்து இலக்கியப் பரப்பில் புலமை யாளர் பலரின் படைப்புகள் அரும்பாடுபட்டுத் தேடி எடுக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டு மீள்பதிப்பாக வெளிவரும் ஆரோக்கிய மான சூழல் காணப்படுகிறது. அச்சூழலில் செல்லையாவின் எழுத்துக்களும் மீள்பதிப்பாகக் கொண்டு வந்து ஈழத்து இலக்கியத் திற்கு வளம்சேர்ப்பது சமூக மற்றும் இலக்கியக் கடமைகளில் முதன்மையானது எனக் கருதியமையால் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக இப்பணிக்காக உழைத்து வெளிக் கொணர்ந்துள்ளோம்.
நூல் அமைப்பு
இந்நூல் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், பத்தி எழுத்துக்கள், மொழி இலக்கணம். பின்னிணைப்பு, அநுபந்தம் ஆகிய ஏழு பகுதிகளைக் கொண்டது.
அதன் முதற்பகுதியில் கவிதைகள் அமைந்துள்ளன. கவிஞர் எழுதிய பிரபந்தங்களும் தனிப்பாடல்களும் உள்ளடங்க லாக 88 தலைப்புகளில் கவிதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கடவுளரைப் பாடியவை. தமிழைப் பாடியவை. பெரியோரைப் பாடியவை, சமூகத்தைப் பாடியவை, தேசத்தைப் பாடியவை, சிறாருக்குப் பாடியவை, இதழ்களைப் பாடியவை. பல்வகையாகப் பாடியவை ஆகிய எட்டுத் தலைப்புக்களில் பொருள் அடிப்படையில் அவை வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இரண்டாவது பகுதியில் சிறுகதைகள் அமைந்துள்ளன. 1938 முதல் 1966 வரை எழுதியவற்றுள் 15 சிறுகதைகளை இவ்வகைப்பாட்டுக்குள் இனங்கண்டு கால அடிப்படையில் உள்ளடக்கியுள்ளோம். இவற்றுள் பெரும்பாலனவை ஈழகேசரி யில் வெளிவந்தபோது அநுசுயாவின் கட்டுரைகள் என்ற பொதுப்பெயரிலேயே பலராலும் அழைக்கப்பட்டு வந்துள்ளன.
– அல்வாயூர்க் கவிஞர் மு.செல்லையா படைப்புகள் (சிறுகதைகள்), பதிப்பாசியர்: கலாநிதி சு.குகேஸ்வரன், மா.செல்வதாஸ், முதற் பதிப்பு: 09.12.2018, அல்வாயூர்க் கவிஞர் செல்லையா நிறுவனம் வெளியீடு.