ஒரு முழம் பூ
கதையாசிரியர்: வினோதா ராமன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: June 23, 2026
பார்வையிட்டோர்: 196

அதிகாலை ஐந்து மணி.
அலாரம் அடிக்கும் முன்பே கண் விழித்தாள் கனகா. ஒரு இல்லத்தரசியின் நாள் எப்போதும் சூரியன் உதிப்பதற்கு முன்பே தொடங்கிவிடும். சமையலறையில் அடுப்பு பற்றியது. குக்கரில் சாதம், அடுப்பில் சாம்பார், குழந்தைகளுக்குத் தோசை, கணவருக்குக் காபி, மதிய உணவுக்கான டிபன் என்று அவளது கைகள் ஓய்வே இல்லாமல் இயங்கின.
“அம்மா… என் வாட்டர் பாட்டில்?”
“கனகா… என் ஆபீஸ் ஃபைல் எங்கே?”
எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டே, வீட்டையே சுறுசுறுப்பாகச் சுற்றினாள்.
கணவரை அலுவலகத்திற்கும், குழந்தைகளை பள்ளிக்கும் அனுப்பிவிட்டு, வாசலைப் பெருக்கி கோலம் போட்டாள். வீட்டுக்குள் வந்து ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தபோதுதான், “அப்பாடா…” என்று சற்று நிம்மதியாக மூச்சுவிட்டாள்.
அன்று அமாவாசை.
“கோவிலுக்குப் போயிட்டு வந்தா மனசு கொஞ்சம் லேசாக இருக்கும்…” என்று நினைத்தபடி அருகிலிருந்த கோவிலுக்குப் புறப்பட்டாள்.
கோவில் வாசலருகே இருந்த பூக்கடையில் நின்றாள்.
“என்னம்மா… ஒரு முழம் மல்லிகையா?” என்று கேட்டார் பூக்காரர்.
கனகா பதில் சொல்லாமல் ஒரு நொடி நின்றாள். அவள் கண்களில் பூ இல்லை… மாதச் செலவுகள்தான் ஓடிக்கொண்டிருந்தன.
“இந்த மாதம் மின்கட்டணம்… குழந்தைக்குப் பள்ளி ஃபீஸ்… வீட்டுக்கடன்… மளிகை… இன்னும் எத்தனை செலவு…”
என்று மனதுக்குள் கணக்குகள் ஓடின.
“அரை முழம் போதும்… கடவுள் அதுக்காக கோபப்பட மாட்டாரே… பூவின் அளவை விட மனசுதானே முக்கியம்…” என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.
“அண்ணா… அரை முழம் போதும்.”
பூவை அளந்துக் கொடுத்த பூக்காரர் சிரித்தபடி,
“அம்மா… அமாவாசை நாளாச்சே. ஒரு முழம் வாங்கிக்கோங்க. செருப்பையும் இங்கேயே விட்டுட்டுப் போங்க. நான் பார்த்துக்கறேன். கோவில் வாசல்ல வச்சா சில நேரம் காணாம போயிடும்.”
கனகா மெதுவாக சிரித்தாள்.
“அரை முழம் வாங்கினாலே இந்த மாதம் இருபது ரூபாய் மிச்சம். சின்ன சின்ன சேமிப்புதான் வீட்டை ஓட்டுது…”
“பரவாயில்லை அண்ணா… அரை முழம் போதும்.”
என்று சொல்லிவிட்டு நடந்தாள்.
பூக்காரர் சொன்னதைக் கேட்டும், “இவ்வளவு நேரத்துக்கெல்லாம் என்ன ஆகிடப் போகுது?” என்று நினைத்தபடி, கோவில் வாசலில் மற்ற செருப்புகளுடன் தன்னுடைய செருப்பையும் கழற்றி வைத்துவிட்டு உள்ளே சென்றாள்.
மணி ஓசை காதில் விழுந்தது.
கண்களை மூடி இறைவனை மனமுருகி வணங்கினாள்.
“என் குடும்பம் நல்லா இருக்கணும்… குழந்தைகள் நல்லா படிக்கணும்… இந்த மாதமும் எந்தக் குறையும் இல்லாம கடந்து போகணும்…”
என்று அமைதியாக வேண்டிக்கொண்டாள்.
வழிபாட்டை முடித்துவிட்டு வெளியே வந்தாள்.
வாசலில் தெரிந்த தோழி ஒருத்தி எதிரே வந்தாள்.
“ஏய் கனகா! எப்படி இருக்க?”
இருவரும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டனர். குடும்பம், குழந்தைகள், விலை ஏற்றம், வாழ்க்கை என்று பேச்சு நீண்டது. பேசிவிட்டு மனம் சற்று லேசானது.
பிறகு செருப்பு வைத்திருந்த இடத்திற்குச் சென்றாள்.
ஒருமுறை பார்த்தாள்.
மீண்டும் பார்த்தாள்.
அவள் செருப்பு இருந்த இடம்…
வெறுமையாக இருந்தது.
சுற்றிலும் இருந்த எல்லா செருப்புகளையும் கண்களால் தேடினாள்.
அவளுடையது மட்டும் இல்லை.
அந்த நொடி…
அவள் முகத்தில் எந்தப் பதற்றமும் இல்லை.
எந்தக் கோபமும் இல்லை.
எந்த வார்த்தையும் இல்லை.
ஒரு நீண்ட அமைதி மட்டும்.
மெதுவாக தன் கையில் இருந்ததைப் பார்த்தாள்.
அவள் கையில்… கோவில் பூசாரி கொடுத்திருந்த ஒரு முழம் பூ.
அந்தப் பூவை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தாள்.
தொடர்புள்ள சிறுகதைகள்
உறுப்புகளைத் தேடி…
காரை ஆடலரசன்
June 23, 2026
வானத்தில் உதிரும் எரிநட்சத்திரங்கள்
சீ.முத்துசாமி
June 23, 2026
எங்கெங்கு காணினும் சக்தியடா
எஸ்.மதுரகவி
June 20, 2026