கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: March 1, 2026
பார்வையிட்டோர்: 940 
 
 

(1970ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6

1. கட்டிலறையில் ஒரு மிருகம்! 

குளிர்ச்சியான முழு நிலவு வானத்தில் தவழ்ந்து வந்துகொண்டிருந்தது.

இன்பக் கிளுகிளுப்பை உண்டுபண்ணும் இரவு நேரம் அது. மனித அரவம் பெட்டிப் பாம்புபோல் அடங்கிவிட்ட அமைதியான சூழ்நிலை.

மீனா தன் உடலை ‘சில்லென்று’ பனிக்காற்று தழுவுவதை உணர்ந்தாள். பசுமையான மெத்தைக் கட்டிலில் மல்லாந்தபடியே படுத்திருப்பதைப் போன்ற நினைவு – பலவித நறுமணத்தை வாரியிறைக்கும் பூந்தோட்டம் அருகிலேயே இருப்பதைப் போன்ற பிரமை…

முற்றிலும் புதிய வசதி நிறைந்த ஆடம்பரப் பொருட்களுடன் கூடிய ஓர் அறையினுள்தான் இருக்கிறோம் என்ற எண்ணம் இயல்பாகவே அவளுக்கு இருந்தது.

அவள் இமைகளை விரிக்க படுபிரயாசை – பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தாள். கண்களைத் திறக்க நினைத்தபோதிலும் இமைகள் ஒத்துழைக்கவில்லை.

“எனக்கு என்ன ஆயிற்று? நான் இங்கே எப்படி வந்து சேர்ந்தேன்?” என்று அவள் தன்னைத்தானே கேட்டுப் பார்த்துக் கொண்டாள்.

பதில் கிடைக்கவில்லை. கனவுலகத்தில் மயக்க நிலையிலேயே சஞ்சரித்துக்கொண்டிருப்பதைப் போன்ற ஒரு பிரமை உண்டாயிற்று.

சூரிய வெளிச்சத்தின் வெப்பம் அதிகரிக்க – அதிகரிக்க பனித்துளிகள் கரைந்து மறைவதைப்போல் நேரம் செல்லச் செல்ல ஓரளவு தெளிவு பெற்றாள்.

மீனா…!

அதுதான் அந்தப் பருவ மாதுவின் பெயர்! காட்டில் மலர்ந்த அந்த முல்லையை ஓர் அயோக்கியன் பறித்துக்கொண்டு வந்து விட்டான்.

அவளுக்கே அது தெரியாது. என்ன நடந்திருக்கிறது என்பதைக் கற்பனை செய்து பார்க்கும் திறனும் அவளுக்கில்லை. ஆனால் தனக்கு ஆபத்து காத்துக்கொண்டிருக்கிறது என்பதை மட்டும் அவள் புரிந்து கொண்டாள்.

ஆபத்து என்ற உணர்வுகள் மூளையைத் தாக்கியதும் அவள் ஓர் அதிர்ச்சியுடன் கண்களைத் திறந்து கொண்டாள்.

புகையின் நடுவே நின்று கொண்டிருப்பதைப் போல் மங்கலாகத் தெரிந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் புகை மறைந்து பரிபூரணத் தெளிவு உண்டாயிற்று.

அது இரட்டைக் கட்டில்கள் கொண்ட படுக்கையறை ஆடம்பரத்தை எதிரொலிக்கும் விதத்தில் அங்கேயுள்ள பொருட்கள் காணப்பட்டன.

அவள் இதுவரையில் இப்படியொரு மெத்தைக் கட்டிலைப் பார்த்ததே இல்லை. ஊது புறாவின் மெனமையான தூவல்களைப்போல் அல்லவா பசுமையாக இருக்கிறது.

மீனா இனம் தெரியாத திகிலோடு, நெஞ்சு ‘பக்கென்று’ அடித்துக்கொள்ள எழுந்து உட்கார்ந்து அறை முழுவதும் பார்வையை ஓடவிட்டாள்.

அது விசாலமான அறை.

தரையைப் பார்க்க முடியாதபடி விரிப்பு போடப்பட்டிருந்தது. சோபாக்கள் பரப்பப்பட்டிருந்தன. சுவர்களில் பல அரை நிர்வான ‘ஹிப்பி’ அழகிகளின் வர்ணப் படங்கள்.

குளிர்ந்த காற்று தாள ரீதியான ஓசையின் பின்னணியுடன் இலேசாகத் தவழ்ந்து வந்து கொண்டிருந்தன.

அது ஏர்கண்டிஷன் அறை.

“கிராமத்தில் குடிசை வீட்டில் அம்மாவுடன் வாழ்ந்துவந்த நான் இங்கே எப்படி வந்தேன்?” என்று அவள் எழுந்து நின்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டவாறு எதிரில் தெரிந்த நிலைக் கண்ணாடியில் தன்னுடைய தோற்றத்தைப் பார்த்தாள்.

வழக்கத்தைப் போன்ற எளிமையான தோற்றம் தான். எடுப்பான இளமையின் பிடிப்பு அழகை எடுத்துக் காட்டுவதற்குப் பேருதவி புரிந்தது. இந்த அளவுக்கு முகத் தோற்றத்தையும் நிலைக் கண்ணாடியில் பார்ப்பது இதுதான் முதல் தடவை. அதனால் தன்னைப் பார்க்கும்போது முற்றிலும் மாறுபட்ட பருவச் செழிப்புடன் கூடிய ஒரு பெண்ணைப் பார்ப்பது போன்ற உணர்வே உண்டாயிற்று. உரமிட்டு வளர்க்கப்பட்ட தென்னங்கன்றுபோல் காணப்பட்டாள்.

தன் தோற்றத்தைப் பார்க்கப் பார்க்க ‘இவ்வளவு அழகாகவா இருக்கிறோம்’ என்ற மனப் பூரிப்பு உண்டாயிற்று.

அவள் இன்னும் நெருக்கமாகக் கண்ணாடியின் அருகில்போய் நின்று பார்த்தாள்.

எதையோ அவள் கழுத்தில் பார்த்துவிட்டாள்.

கருநாகப் பாம்பு கழுத்தில் மாலையைப்போல் கிடக்கிறதா? படமெடுப்பதைப்போல் தோன்றுகிறதே!

அவள் பீதியுடனும், பேரிடி தாக்கியதைப் போன்ற அதிர்ச்சியுடனும் பார்த்தாள்.

அது.. அது… தாலிக்கயிறு அல்லவா? பொன் சரட்டில் திருமாங்கல்யம் கோர்க்கப்பட்டிருக்கிறதே!

தன் கழுத்தில் கிடப்பது மாங்கல்யம் என்பதையும், அது ஒருவனுக்கு உரிமையானவளாக ஆக்கப்பட்டிருக்கும் அடிமைச் சாசனம் என்பதையும் தெரிந்து கொண்டாள்.

இது யார் கட்டிய தாலி? இந்த ஆடம்பர வாழ்வு யாரால் எப்படிக் கிடைத்தது? கிராமத்தில் ஏழ்மையான வாழ்க்கை நடத்தி வந்த தன்னை இங்கே கொண்டு வந்தது யார்?

அவள் இப்படி தனக்குள் கேட்டுக்கொண்ட போது குளியல் அறையின் கதவைத் திறந்துகொண்டு ஒரு மனிதர் எல்லா பற்களும் தெரியும்படியாகச் சிரித்தவண்ணம் வந்தார்.

அவள் நெஞ்சு பகீரென்றது.

அவர் அரைக் கிழவர் கண்ணபிரான் ஆயிற்றே? கிராமத்தில் தன் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருந்த அவர் இங்கே எப்படி வந்தார்? வீட்டுக்கு வந்து அம்மாவுடன் இரண்டொரு தடவை பேசிக் கொண்டும் இருந்திருக்கிறாரே!

“மீனா…பயப்படாதே… நான்தான் இந்த ரூமை ‘புக்’ பண்ணியிருக்கின்றேன். சென்னையிலேயே இதுதான் பெரிய ஹோட்டல். இங்கே எல்லா வசதிகளும் உண்டு.”

அவர் இப்படிச் சொன்னதும் தன்னை வாலிபராக மனத்தில் நினைத்துக் கொண்டார் போலும். நெஞ்சை வேறு நிமிர்த்திக்கொண்டார். சட்டையோ, பனியனோ இல்லாமல் வெற்று உடம்பில் பத்து பவுன் தங்கச் சங்கிலி மினுமினுத்தது.

கண்ணபிரான் தன்னை புது ,மாப்பிள்ளை போல் நினைத்துக் கொண்டு சரிகை வேட்டி சரசரக்க ராஜநடை நடந்தார். வெற்றிக்குரிய ஆனவப் புன்னகை நெளிந்தோடியது. விஷமத்தனமாக அவளை ‘உர்ரென்று’ பார்த்தார்.

இதற்கு முன்னால் அவர் சதைப்பிடிப்புள்ள பெண்களையே பார்த்திருக்க மாட்டாரோ?

அவள் தன்னுடைய நிலைமையைப் புரிந்து கொண்டாள். இந்தச் சண்டாள அரைக் கிழவன்தான் எப்படியோ தாலியைக் கட்டிவிட்டான்.

தன்னுடைய தாயாரும் இந்த அயோக்கியனுக்காக சதி செய்துவிட்டாளோ?

மீனா தன்னுடைய ஆபத்தான நிலையைப் புரிந்து கொண்டதும் தடுமாற்ற மடைந்தாள். நின்றுகொண்டிருக்க முடியாமல் தள்ளாடினாள். சோபாக்கள் சுற்றுவதைப் போலிருந்தன. கட்டிக்களும் சுழலுவதைப் போன்ற பிரமை. அந்த அறையே சக்கரம்போல் சுழல்கிறதா?

அவள் கீழே விழுந்துவிடாமல் இருக்க தரை விரிப்பில் உட்கார்ந்து, “ஐயா. என்ன நடந்தது? என் கழுத்தில் தாலி கட்டியது யார்?” என்று கேட்டாள். கண்ணீர் பொங்கியது.

“ஐயையோ… அதற்குள் தரையில்போய் உட்கார்ந்து கொண்டாயே…! கட்டில் எதற்காகப் போடப்பட்டிருக்கிறது என்பதை மறந்துவிட்டாயா?” என்று சொன்ன கண்ணபிரான தன் பக்கத்தில் உட்காரும்படி கொஞ்சினார்.

அவருடைய விபரீதமான ஆசை, நடந்து கொண்ட விதம் அவள் உள்ளத்தில் பெரும் கொந்தளிப்பை உண்டு பண்ணியது. இரண்டில் ஒன்றைப் பார்த்துவிடத் துணிந்தாள்.

கோழைகளாக ஒதுங்கியே வாழ நினைக்கும் பெண்களுக்கு கோப உணர்ச்சி வந்துவிட்டால் ஆபத்து எந்தக் கோணத்திலிருந்து வந்தாலும் துணிந்து விடுவார்கள்.

தன் வாழ்க்கையை அந்த அரைக்கிழவர் பாழாக்கிவிட்டாரே என்பதை உணர்ந்து கொண்டதும் அடிபட்ட பெண்புலிபோல் சீறிக் கொண்டு அவள் எழுந்து நின்றாள்.

“என் கழுத்தில் தாலி கட்டியது யார்?” என்று அவன் பொன் தாலியைப் பிடித்து இழுத்துக்கொண்டே கதறினாள்.

“என்னைத் தவிர வேறு யார் உனக்கு கணவனாக முடியும்? நான்தான் தாலி கட்டினேன். வயது உன்னைவிட அதிகமான போதிலும் இன்னும் நான் வாலிபத்தைக் கடந்து விடவில்லை என்பதை என்னால் உறுதிகூற முடியும்”. அவர் எல்லா பற்களையும் இழித்தார்.

கோபம் பொங்கிக்கொண்டு வரும் அவள் முகத்தைப் பார்ப்பதற்கு அவருக்குப் பேரானந்தமாக இருக்கவேண்டும்.

எவ்வளவு ஆணவமும், திமிரும் நிறைந்த பேச்சு அது? பெண்களை மண்ணில் நெளியும் புறாக் கூட்டமாக அவர் நினைத்து விட்டாரா? பணம் இருக்கிறதே என்ற அகந்தையினால் சமூகத்தின் கட்டுத் திட்டங்கள் எல்லாவற்றையும் தகர்த்துவிடலாம் என்று முடிவுகட்டிக் கொண்டாரா?

மீனா தனக்குவந்த ஆபத்தைப் புரிந்துகொண்டதும் முகத்தை இரு கைகளால் மூடிக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதாள். தன் கழுத்தில் கட்டாயத் தாலி கட்டியிருக்கும் அந்தக் கீழ்த்தரமான இழிந்த மிருகத்தை எப்படி கணவனாக ஏற்றுக்கொள்ள முடியும்?

அதிலும் நேர்மையான முறையில்கூட தாலி கட்டவில்லையே- கடத்திக் கொண்டுவந்து, மயக்கமடையச் செய்து தன்நிலை மறந்த சூழ்நிலையில் அல்லவா தாலி என்ற பெயரால் கழுத்தில் விலங்கை மாட்டியிருக்கிறான்!

அவள் அழுது ஓய்ந்த பின்பு, “நீங்கள் என்னை எப்படியோ நினைத்துக் கொண்டீர்கள் போலிருக்கிறது. நான் தமிழ்ப் பெண்தான். கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்று எண்ணும் உயர்ந்த மரபைச் சார்ந்தவள்தான். ஆனாலும் உணர்ச்சிகளைச் சாகடித்து யாருக்கும் தெரியாமல் தாலி என்று ஒன்றைக் கட்டியதை நான் அங்கீகரிக்கத் தயாராக இல்லை. நீங்கள் என் கணவர் இல்லை”.

ஒரு பெண் தூங்கிக்கொண்டிருக்கிற நேரத்தைப் பார்த்து ஒருவன் தாலி கட்டிவிட்டால் உடனே மனைவியாகிவிட முடியுமா? முடியும் என்றால் பெண்களின் வாழ்க்கை முழுவதும் என்றைக்கோ சீரழிந்து சின்னாபின்ன மாகியிருக்குமே!

அவள் இப்படித்தான் பேசுவாள் என்பதை கண்ணபிரான் எதிர்பார்த்திருந்தார். அதனால் அதிர்ச்சியோ, பயமோ அடைய வில்லை. அதற்குப் பதிலாகச் சிரித்து மகிழ்ந்து கொண்டு இருந்தார்

“மீனா, உன் அம்மாவின் சம்மதத்தின் பிறகே நம் திருமணம் நடந்தது. உன் அப்பா கேட்டுயிருந்த பத்தாயிரம் ரூபாயையும் ரொக்கமாக கொடுத்து தான் உன்னை என் சட்டரீதியான மனைவியாக ஆக்கிக்கொண்டேன்”

அவளுக்கு எல்லாமே விளங்கிவிட்டது. அப்பாவினால் ஏற்பட்ட பத்தாயிரம் ருபாய் கடனுக்காக அம்மா பகலும் இரவும் முழுதும் வேதனைகளை அனுபவித்து வந்தது உண்மை. கடன் கொடுத்தவன் வீட்டை ஏலத்துக்கு கொண்டுவந்து விட்டான். இந்த நேரத்தில் குடும்பத்தின்  மானத்தைக் காப்பாற்றும் பொருட்டு கண்ணபிரான் உதவி செய்திருந்தால் கூட ஆச்சிரியப்பட முடியாது.

ஆனாலும் பணம் கொடுத்து தமி செய்தார் என்பதற்காக அவருக்கு மனைவியாகிவிட முடியுமா?

தியாகம் விலைமதிப்பற்றது தான்! ஆனால் அந்தத் தியாகம் அர்த்தமின்றி செய்யப்படுவதைக் கூட அவள் விரும்பவில்லை. அதற்குப் பெயர் தியாகமும் ஆகாது.

“உங்களுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டால் என்னை விட்டு விடுவீர்கள் அல்லவா?”

அவர் ‘இடி இடி’ என்று சிரித்தார் “பைத்தியக்காரப் பெண்ணே! பேரம் முடிந்தபிறகு அதற்கு மறு விலை கிடையாது. இப்பொழுது நான் உன் கணவர். இன்றிரவு நமக்கு முதல் இரவு. அதிலும் முழு நிலவுடன் கூடிய இந்த இந்த இரவே நமக்கு முதல் இரவாக அமைவது என்றால் அதைவிடவும் நமக்கு ஆனந்தம் வேறு எதுவுமே இருக்க முடியாது.”

முழு நிலவாம்? முதல் இரவாம்! பாதிக் கிழவரின் பேராசையை நினைக்க நெஞ்சக்குள் வெடிகுண்டு வெடித்து விட்டதைப் போலிருந்தது, அவளுக்கு.

அவள் ஆவேசமடைந்தவளாய், “நீங்கள் பெரிய மனிதர் என்பதால் மரியாதைக் கொடுத்துப்பேசுகிறேன். என்னை விட்டுவிடுங்கள். என்றைக்காவது ஒரு நாள் நீங்கள் கொடுத்த பணம் முழுவதையுமே திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று சொன்னாள்.

அதை அவர் ஏற்றுக்கொள்ளவேண்டுமே! ஏற்கனவே மது போதையுடன் இருந்த அவர், மாதுவைக் கண்டதும் இன்னும் போதை வெறிக்குள்ளாகி தலைகால் தெரியாமல் ஆடத்தொடங்கி விட்டார்.

அவள் கனியானாள். அதைப் பிழியும் கட்டைகள் ஆனார் கண்ணபிரான்.

“திருப்பிக் கொடுத்து விடப்போகிறாயா? பரிதாபத்திற்குரிய பேதைப் பெண்ணே! இது நம்முடைய முதல் இரவு! இந்த இரவில் நாம் ஆனந்தமாக இருக்கவேண்டும். நமக்குள் எந்தவிதமான சண்டை சச்சரவுகளும் கூடாது.”

இப்படிச் சொன்ன அவர் இரு கைகளையும் அகலமாக விரித்துக் கொண்டு அவளை நோக்கி ஓடி வந்தார். நாக்கில் எச்சில் சுரந்து உதட்டுக் கோணத்தில் வழிந்தது.

மீனா அதைக்கண்டு, பருந்தைக் கோழிக்குஞ்சைபோல் ஒரு முலையில் பதுங்கிடம் குலை நடுங்கும்

அவர் ஓடிவந்து முழங்கைக்கு மேலே புஜத்தை அழுத்தமாகக் கவ்விப் பிடித்துக்கொண்டார்.

அவ்வளவுதான்! மீனாவுக்கு எங்கிருந்துதான் இவ்வளவு கோபம் பொங்கியதோ தெரியவில்லை. சட்டென்று தலையால் அவருடைய நெஞ்சை முட்டித்தள்ளி விடுவித்துக்கொண்டு தாலிக்கயிற்றை வெடுக்கென்று அறுத்து அவர் முகத்திலேயே  வீசி எறிந்தாள்.

அந்தச்செய்கை – அவளுடைய ஆவேசம் காதல் கலையில் கை தேர்ந்த பேர்வழியான கண்ணபிரானை நிலைகுலைய வைத்தது. துடித்துப்போய்விட்டார்.

வாய்க்குள் பிடிபட்ட நண்டு தன்னுடைய காலால் கொக்கின் கழுத்தைத் துண்டித் விட்டதைப் போன்ற பேரதிர்ச்சி அவர் பச்சை இரத்த வெறிபிடித்த கொடூரமான மிருகமாகவே மாறிவிட்டார்.

அவர் மிருகபலத்துடன் அவள்மீது பாய்ந்து குஸ்தி பிடிப்பது போல் தரையில் கிடந்து உருண்டார். மிகமிக ஆவேசமான உணர்ச்சி மயமான போராட்டம் – எவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டாவது அவளுடைய புனிதத்தைச் சூரையாடிவிடவேண்டும் என்ற துடிதுடிப்பு.

அவர் இரத்தம் சூடேறி நரம்புகள் வெடித்துவிடுதைப்போல் முறுக்கேறி இருந்தன. கைகளும் கால்களும் இரும்புத் தூண்களாயின. தளர்ந்து போயிருந்த உடல் இப்பொழுது தேக்குமரமாகி யிருந்தது.

மீனா தனக்கு வந்திருக்கும் ஆபத்தை உணர்ந்து கொண்ட வரையில் கைகளாலும், கால்களாலும் அடித்துத் தள்ளி வீட்டு கடிக்க லானாள்.

‘அவள் கடித்து விடுவாள்’ என்பதை எதிர்பார்க்காத கண்ணபிரான் ‘ஆ’ என்று அலறி சற்றே விடுவித்ததும், அவள் துள்ளி எழுந்து மேஜையில் இருந்த மதுப்புட்டியைக் கையில் எடுத்தாள்.

“என் பக்கத்தில் வராதே. இனியும் என்னைத் தொட்டால் இதைக்கொண்டே உன் மண்டையைப் பிளந்து விடுவேன். உயிர் வாழவேண்டும் என்ற ஆசை இருந்தால் நெருங்காதே”.

அவள் கத்தினாள்.

அவருடைய காதுகள் அடைத்துக் கொண்டன. அவளுடைய இளமையைச் சுவைக்கவேண்டும் என்ற பசிகொண்ட ஆவேசத்தை தவிர வேறு எதுவுமே அவருக்கில்லை. கொஞ்சம் ஏமாந்தால்கூட உடனே அவள் கதவைத் திறந்துகொண்டு ஓடிப் போய் விடுவாள்.

கண்ணபிரானுக்கு ஒரு மனப்பான்மை உண்டு. அதாவது தோல்வி என்றால் கொஞ்சம்கூட அதைத் தாங்கிக்கொள்ள மாட்டார். அப்படிப்பட்ட மனப்பக்குவமும் அவருக்குக் கிடையாது

மறுபடியும் இரண்டு பேர்களும் போராடினார்கள். கீரியும் பாம்பும் பின்னிப் பிணைந்துகொண்டு சண்டை போடுவதைப்போன்ற போராட்டம் தொடர்ந்து நீடித்தது.

இனியும் ஏமாந்தால் அவர் தன்னுடைய பருவத்தை ருசி பார்த்து விடுவார் என்று அவள் பதறி பின்னால் வரப்போகும் விளைவுகளைப்பற்றிக் கொஞ்சம்கூட கவலைப்படாமல் மதுப்புட்டியை எடுத்து அவருடைய மண்டையில் முழு பலத்துடன் ஒருபோடு போட்டாள்.

“அய்யோ” என்ற அலறல்.

கண்ணபிரான் மண்டையைப் பிடித்துக் கொண்டு மரம்போல் அப்படியே நின்றார். நாற்புறமும் இரத்தக் கோடுகள் வழிந்தன. உச்சந்தலையிலிருந்து இரத்தம் பீறிட்டுக்கொண்டு பொங்கியது.

சில விநாடிகள் வரையில் செயலற்றுப்போய் பிரேதம்போல் நின்றுகொண்டிருந்த கண்ணபிரான் அப்படியே சாய்ந்து தரையில் குப்புற விழுந்தார்

வெட்டிப்போட்ட மரம் சாய்ந்ததைப்போல் இருந்தது. அவரிடம் மூச்சுப்பேச்சு எதுவுமே இல்லை.

அவர் இறந்து விட்டாரா? உடலில் உயிர் ஒட்டிக்கொண்டிருப்பதாகவே தெரியவில்லையே?

பீதியும் பதட்டமும் அடைந்த அவள் குனிந்து பார்த்தாள்.

கண்ணபிரானின் கண்கள் ஆடுபோல் வெளுத்திருந்தன. ஆட்டின் கண்களையே நினைவுபடுத்தின.

அவர் இறந்துவிட்டார் என்பதைத் தெரிந்து கொண்டதுதான் தாமதம், அவளை பயம் பிடித்துக் கொண்டது.

அந்த மனிதன் தன்னை எப்படியோ கடத்திக்கொண்டு வந்து பலவந்தமாகக் கெடுக்க முயற்சி செய்தது உண்மை. ஆனால் அதற்குப் பதிலாக அவரைக் கொலை செய்வது சரியில்லையே!

அவள் தனக்கு வந்திருக்கும் ஆபத்தை உணர்ந்து கொண்ட வரையில் ஒருகணம் அப்படியே நின்றாள். பிணத்தை மாறிமாறிப் பார்த்தாள். பீதியுற்றவளாய் ‘ஓ’வென்று வாய்விட்டுக் கதறி அழுதாள்.

கொலை நடந்திருக்கும் விஷயம் வெளியே உள்ளவர்களுக்குத் தெரிந்ததும், அடுத்த கணமே செய்தி போலீஸாருக்கு எட்டிவிடும். அதன்பிறகு ஆபத்து எப்படி எப்படி வரும் என்று விளக்கத் தேவையே இல்லை.

அவள் குலைநடுக்கத்துடன் தோள்ப்பட்டையைக் குலுக்கிக் கொண்டாள். கண்ணெதிரில் தூக்குக்கயிறு தொங்குவது அவளுக்குத் தெரிந்தது. அந்தக் கயிறை நோக்கி பரபர வென்று இழுத்துச் செல்வதைப் போன்ற மனப்பிராந்தி.

“ஐயோ நான் செய்வேன்? ஒரு மனிதனைக் கொன்று விட்டேனே”.

இப்படி அவள் அலறியவளாய் கதவுப் பக்கமாக வந்து நின்றாள். மெல்லக் கதவைத் திறந்து வெளியே பார்த்தாள்.

அதிர்ஷ்டவசமாக வராந்தாவில் யாருமே இல்லை.

உடனே அவள் வெளியே வந்து கதவைச் சாத்திவிட்டு பூனை போல் சந்தடி செய்யாமல் நடந்து அங்கிருந்து வெளியேறினாள்.

2. இருளில் நடந்தது…? 

ஒரு மனிதனைக் கொன்றுவிட்டோமே என்ற பய உணர்ச்சி மீனாவைப் பேயாக அடித்தது. இந்த உலகத்தில் உள்ள மாந்தர்கள் எல்லோரும் கையை நீட்டிச் சுட்டிக் காட்டியவாறு, ‘நீ ஒரு கொலை காரி’ என்று கூவுவதைப்போல் மனத்தை அச்சுறுத்திக்கொண்டே இருந்தது.

கண்ணபிரான் செய்திருக்கும் காரியம் சாதாணமானதல்ல. தன்னை மயக்கமடையச் செய்து ஊரிலிருந்து எப்படியோ கடத்திக் கொண்டு வந்து கழுத்தில் கட்டாயத் தாலியும் கட்டிவிட்டார். அது மட்டுமல்ல; முதல் இரவை ஆடம்பரமான ஹோட்டலிலேயே வைத்துக் கொள்ளவும் திட்டமிட்டு வேலை செய்தார். அவரை மட்டும் அடித்துக் கொல்லாமல் இருந்திருந்தால் நல்லபாம்பின் தலையை ‘நறுநறு’ என்று கடித்துத் தின்னும் கீரிப்பிள்ளையைப்போல் தன்னுடைய இளமையையும் சுவைத்துப் பார்த்திருப்பார்.

அவள் சென்னை நகரத்து பிரகாசமான வீதிகள் வழியாக சாலைகள் நெடுக அதிவேகமாக நடந்துகொண்டே இருந்தாள்.

இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் இருக்கலாம். எனவே வீதிகளும் சாலைகளும் வெறிச்சோடிக் கிடந்தன. சில ரிக்ஷாவண்டிக்காரர்கள்தான் வண்டிகளிலேயே உட்கார்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

அவள் ஒரு ரிக்ஷாவண்டிக்காரரிடம் ரெயில்வே ஸ்டேஷன் எங்கே இருக்கிறது என்று விசாரித்தாள்.

வண்டிக்காரர் அவள் நின்றிருந்த நிலை ஒருமாதிரியாக இருந்ததால் தனிமையைக் கண்டு விசாரித்தார்.

அவள் ஒரு மனிதரை மதுப்புட்டியினால் அடித்துக் கொன்று போட்டுவிட்டு தப்பித்து வந்திருக்கும் விபரத்தைச் சொல்லவில்லை. சொன்னால் அதுவே பெரும் ஆபத்தில் வந்து முடிந்துவிடுமே!

“ரெயில்வே ஸ்டேஷன் பக்கத்தில்தான் இருக்கிறது. வண்டியில் ஏறிக்கொள். நொடிப்பொழுதில் கொண்டுபோய் விட்டுவிடுகிறேன்.” என்றார் வண்டிக்காரர்.

அவளிடம்தான் காசே இல்லையே. எப்படி அவள் ரிக்ஷா வண்டியில் சவாரி செய்யமுடியும்?

அவள் வேறு வழியின்று தன் நிலையை விளக்கியதும் “ஏறிக்குந்து அம்மா. பணம் இல்லாவிட்டால் போகிறது. மனுஷாள்தான் முக்கியம்.” என்று சொன்னான்.

ஏழைகள் தான் இரக்கமனப்பான்மை கொண்டவர்கள். இரக்க குணத்துக்கும் பணத்துக்கும் தான் ஏழாம் பொருத்தம் ஆயிற்றே. இரக்கம் இருக்கும் இடத்தில் பணம் ஒரு போதுமே வந்து சேராது. அப்படியே வந்து சேர்ந்தாலும் இரக்கம் காரணமாகக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துவிடும்.

அவன் அவளைத் தன்னுடைய வண்டியில் ஏற்றிக்கொண்டான். அவளைப் பற்றி விசாரித்தான்.

மீனா மிகவும் பக்குவமாக நடந்துகொண்டாள். கொஞ்சம் கூட சந்தேகத்தை வரவழைத்துக்கொள்ளவில்லை. எதுவுமே நடக்காததைப் போலவே வெளிப்பார்வைக்குக் காணப்பட்டாள்.

ஸ்டேஷன் வந்தது. அவள் இறங்கிக்கொண்டாள்.

அடுத்து என்ன செய்வது?

பிளாட்பாரத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு பாசஞ்சர் ரயில் வண்டியில் டிக்கட் எடுக்காத பிரயாணியாய் ஏறிக்கொண்டாள்.

வண்டியில் சில ஆண்களும் பெண்களும் உட்கார்ந்து தூங்கி வழிந்துகொண்டிருந்தார்கள். பெண்களுக்குப் பக்கத்தில் மீனாவும் உடகார்ந்து ஜன்னல் விளிம்பில் தலைவைத்தவாறு தூங்க ஆரம்பித்தாள்.

மனத்தில் ஏற்பட்ட வலியும், உடல் தளர்ச்சியும் உடனே அவளைத் தூங்கச் செய்தன

அதன்பிறகு அவள் கண்விழித்துப் பார்த்தபோது ரயில்வண்டி போய்க்கொண்டிருப்பதுதான் அவளுக்குத் தெரிந்தது. ஒரு சிலர் எழுந்து உட்கார்ந்திருந்தார்கள். சிலர் ஒருவர் மேல் ஒருவராக விழுந்து புரண்டுகொண்டிருந்தார்கள்.

ரயில் நகரத்தின்  எல்லையைத் தாண்டியது.

ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்றது. உட்கார்ந்தபடியே அது என்ன ஸ்டேஷன் என்று பார்த்தாள்.

காட்டுப்பாக்கம்.

இதுதானே ஊர்…?

அவள் உடனே அவசரம் அவசரமாகக் கீழே இறங்கினாள், நல்லவேளையாக டிக்கட் பரிசோதகரிடம் அவள் மாட்டிக்கொள்ளவில்லை. வேறு வழியாக வந்து தப்பித்துக்கொண்டாள்.

மீனாவின் கோபம் முழுவதும் தன் அன்னையின் மீதே இருந்தது. அவள்தானே பணத்துக்காகத் தன்னைப் பலியிட்டவள். அவளுடைய சம்மதத்தின் பேரில்தானே கண்ணபிரான் கடத்திச் சென்றான். பலவந்தமான முறையில் மனைவியாக்கிக் கொள்ளவும் முயற்சி செய்தான்.

அவள் வேகமாக ஒற்றையடிப்பாதை வழியாக ஓடினாள், நகரத்தில் நெஞ்சை உலுக்கிக் கொண்டிருந்த பயம் இப்பொழுது கொஞ்சம்கூட அவளுக்கில்லை. அவள் பிறந்து வளர்ந்து ஆடி ஓடித் திரிந்த பகுதியல்லவா இது!

மீனா தன் குடிசையை அடைந்து சாத்திக் கிடந்தக் கதவைத் தட்டி, “அம்மா…அம்மா” என்று கூப்பிட்டாள்.

அது ஊரின் கடைசிக் கோடியில் உள்ள குடிசை. மற்ற குடிசைகளின் தொடர்பு இல்லை. அதனால் மீனா அங்கே வந்து கதவைத் தட்டியதை யாரும் பார்த்திருக்க முடியாது.

உள்ளே இருந்து பதில் இல்லை. காலைவேளையாக இருப்பதால் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாளா?

அவள் கல்வரமடைந்த போதிலும் மறுபடியும் கதவைத் தட்டினாள்.கூப்பிட்டாள்.

வீட்டினுள் தாயார் இல்லையா? பதிலே இல்லையே…

சந்தேகத்துடன் பூட்டு தொங்குகிறதா என்று கதவைப் பார்த்தாள்.

பூட்டு இல்லையே!

தாயார் வீட்டினுள்தான் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டதும் அவள் கதவைப் பலமாகத் தள்ளிப் பார்த்தாள்.

கதவு திறந்துகொண்டது.

உள்ளே பூட்டப்படவில்லை.

அவள் உள்ளே குனிந்து வந்தாள். எதையும் பார்க்க முடியாத கும்மிருட்டாக இருந்தது. ஆனாலும் அது பதினெட்டு மாதங்களாக வாழ்ந்த குடிசை என்பதால் உள்ளே தயக்கமின்றி நடந்துவந்து வழக்கமாக அம்மா படுத்துக்கொள்ளும் இடத்தைத் துலாவினாள். தடவினாள்.

அவளுடைய தாயார் குறிப்பிட்ட அதே இடத்திலேயே படுத்துக்கிடந்தாள். ஆனால் அவளுடைய தாயாரைத் தொட்டு உசிப்பிய போதுண்டான உணர்ச்சி முற்றிலும் மாறுபட்டு இருந்ததே. தாயாரைத் தொட்டது போன்ற உணர்வே உண்டாகவில்லையே.

அவள் பீதியும், கலவரமும் அடைந்தவளாக, “அம்மா” என்று கூவிவிட்டு தோள்ப்பட்டையைப்பிடித்து குலுக்கினாள்.

விறைத்துப்போயிருந்த ஏதோ ஒன்றைத் தொட்டுவிட்டதைப் போன்ற உணர்ச்சி. மரக்கட்டையா?

உயிருள்ள ஒரு ஜடப்பொருளைத் தொடுவதைப் போன்ற உணர்ச்சி கைக்கு உண்டாகவில்லை.

அவள் பயந்தவளாய் கையைப் பிடித்தாள். பனிக்கட்டியாகக் குளிர்ந்திருந்தது.

அவ்வளவுதான்! “அய்யோ அம்மா” என்று கதறினாள் மீனா. தன்னுடைய தாயார் இறந்துவிட்டாள் என்று அவளுக்கு நன்றாகவே தெரிந்தது.

“அம்மாவை யாராவது கொன்றுபோட்டுவிட்டார்களா?” இப்படியொரு எண்ணம் மனத்தை உந்தித்தள்ளியதும். அவள் “அம்மா…அம்மா..”என்று கதறி அழுதவாறு வெளியே ஓடிவந்து கூப்பாடு போட்டாள். ஓலமிட்டு அழுதாள்.

அந்தக் கூக்குரலைக் கேட்டு தூங்கிக் கொண்டிருந்தவர்கள் என்னவோ ஏதோ என்று பதறியவர்களாய் ஓடிவந்து கூடினார்கள். ஒருவர் கையில் லாந்தர் விளக்கு இருந்தது.

“என்னது…என்ன நடந்தது?” என்று ஆளுக்கொரு விதமாகக் கேட்டார்கள், கிராமத்துக்காரர்கள்

என் அம்மா செத்துவிட்டாள் போலிருக்கிறது. தயவு செய்து வீட்டுக்குள் வந்து பாருங்களேன்.” என்று அவள் கூறி அழுது கொண்டு முன்னால் ஒரு குடிசையினுள் மறுபடியும் நுழைந்தாள்.

மற்றவர்களுடன் பரபரப்புடன் உள்ளே வந்தார்கள்.

லாந்தர் விளக்கு வெளிச்சத்தில் மீனாவின் தாயார் பிணமாகச் சுருண்டு கிடப்பது தெரிந்தது.

அவள் கண்கள் முட்டைகளைப்போல் வெளியே பிதுங்கிக் கொண்டு வந்திருந்தன. நாக்கு வெளியே நீண்டிருந்தது. கழுத்து நெரிக்கப்பட்டிருப்பதற்கு அறிகுறியான தடயங்கள் தென்பட்டன.

மீனா மற்றவர்கள் தடுத்தும் கேட்காமல் தாயாரின் பிணத்தின் மீது விழுந்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு கதறிக் கதறி அழுதாள். “எந்தப் பாவிகளோ என் அம்மாவைக் கொன்றுவிட்டார்களே” என்று கதறினாள்.

அதற்குள் கிராமத்தலைவர் அங்கே வந்துவிட்டார். முதல் வேலையாக அவர் குடிசையில் இருந்தவர்களை எல்லாம் வெளியேற்றினார்.

நடந்திருப்பது கொலை அல்லவா?

மீனா வாசலுக்கு வெளியே உள்ள வேப்பமரத்தின் அடியில் தலைவிரிகோலமாக உட்கார்ந்துகொண்டு, “அம்மா…என்னை அனாதை யாக்கிவிட்டு நீ போய்விட்டாயே…” என்று கூவிக் கூவி அழலானாள்.

மற்ற பெண்களும் அவளைக் கட்டிக்கொண்டு ஒப்பாரி வைத்தார்கள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் விடிந்து விட்டது. சூரிய வெளிச்சம் எங்கும் பரவியது.

மீனா எல்லாவற்றையும் தெரிந்துகொண்டாள். தன்னைக் கடத்திச்சென்ற கண்ணபிரான்தான் தாயாரையும் கொன்றுவிட்டான் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் இதை எப்படி வெளியே சொல்லமுடியும்? கண்ணபிரான் உயிரைத்தான் அவள் குடித்துவிட்டு வந்திருக்கிறாளே! தான் கடத்திச்செல்லப்பட்டதையோ, கழுத்தில் கட்டாயத்தாலி கட்டப்பட்டதையோ, முதல் இரவின் பிடியிலிருந்து தப்பித்து வந்ததையோ சொன்னால் கூட ஆபத்துதான்!

அவள் தனக்கு இப்படியொரு கெட்ட நேரம் வந்ததைக்கண்டு ‘பொருமிப் பொருமி’ அழுதாள். எவ்வளவு விரைவில் வாழ்க்கை சீர்குலைந்து விட்டது இப்படி நடக்கும் என்று அவள் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.

மீனா ஏழையாக இருந்தபோதிலும் கிடைத்ததை வைத்துக் கொண்டு அமைதியான முறையிலேயே வாழ்க்கை நடத்தி வந்தாள். வித்தியாசமான எண்ணம் கொண்ட ஆண்களுடன் பழகும் சூழ்நிலை என்றைக்குமே வந்ததில்லை.

ஆனால் இப்பொழுது……?

ஒரை இரவுக்குள் அவள் எல்லாவற்றையும் மொத்தமாகவே அனுபவித்துவிட்டாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டரும், போலீஸ்காரர்களும, போலீஸ் இலாகாவைச் சேர்ந்த உதவியாளர்களும் அங்கே விரைந்து வந்தார்கள்.

அவர்களைப் பார்த்ததும் மீனா நடுங்கினாள். தன்னை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் போலவே அவளுக்குத் தோன்றியது. தன்னைக் கைது செய்து கொண்டு போய் விடுவார்களோ என்ற மரணப் பீதி.

இனிமேல் காக்கிச் சட்டை போட்ட யாரைப் பார்த்தாலுமே பயந்து தானே ஆகவேண்டும். எந்த நேரத்தில் என்ன ஆகும் என்று எப்படிச் சொல்லமுடியும்?

கிராம மக்கள் எல்லோருமே அங்கே கூடியிருந்தார்கள்.

போலீஸார் அவர்களை விலக்கிக்கொண்டு பிணத்தைப் பார்வை யிட்டார்கள். அது சம்பத்தமான குறிப்புகளைத் தயாரித்தார்கள்.

மீனா இன்னும் அழுதுகொண்டே இருந்தாள். கண்களிலிருந்து கண்ணீர் தொடர்ந்து வழிந்துகொண்டே இருந்தது.

பிணத்தை ஒரு வண்டியிலேற்றி போலீஸார் எடுத்துச் சென்றதும், விசாரணைக்காக மீனாவையும், மற்றுமுள்ள முக்கியமானவர்களையும் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்,

3. காலையில் முனைத்த காளான்

மீனா தொடர்ந்து கண்ணீர் வடித்துக்கொண்டே இருந்தாள். தன்னுடைய தாயாரைக் கொலை செய்தவனை தானே கொன்றுவிட்ட தால் அது சம்பந்தமாக யாருடனும் மூச்சுவிட முடியவில்லை.

பத்து மாதம் சுமந்து பெற்ற தாய் அன்று மாலையில் தகனம் செய்யப்பட்டாள்.

இந்த உலகத்தில் வாழ்ந்து அல்லல்கள் பல பெற்றுவந்த ஒரு தாயின் கதை அத்துடன் முடிந்துவிட்டது.

மீனா அன்றிரவு தன் சொந்தக்காரர்களின் வீட்டில் படுத்துக் கொண்டாள். தாயார் இல்லாத வீட்டில் இருக்கவே அவளுக்குப் பிடிக்கவில்லை.

காலையில் அவள் கண்விழித்து மற்றவர்கள் வற்புறுத்தியதின் பேரில் ஏரிக்கு குளிக்க போனபோது அங்கே வந்த ஓர் ஆசாமியைக் கண்டதும் திடுக்கிட்டாள்.

ஏனென்றால் அந்த ஆள் பார்த்த பார்வை முரட்டுத்தனமாகவும், மூர்க்கத்தனமாகவும் இருந்தது.

மீனா தனக்குத் துணையாக சிறுமி ஒருத்தியை அழைத்து வந்திருந்தாள்.

அவள் பிறந்த ஊர் இதுவாகவே இருந்தபோதிலும், பர்மா தான் அவளை வளர்த்து ஆளாக்கியது. பர்மாவுக்கு தன் தாய் தந்தையோடு பிழைக்கப்போன அவள் தந்தையை அங்கேயே பறிகொடுத்தாள். அகதிகளாக அதன்பிறகு வெளியேற வேண்டிய கட்டாயம் அதன்பிறகு அவர்களுக்கு உண்டாயிற்று.

பிறந்த ஊரிலேயே அவளும் அவள் அம்மாவும் மறுபடியும் வாழ்க்கையைத் துவக்கினார்கள். பதினெட்டு மாதங்கள், வறுமையுடன் போராடினார்கள். ஏற்கனவே அவர்கள் பட்டிருந்த கடன் சுமை நெருங்கியது. கடன் கொடுத்தவன் தினசரியும் வந்து கழுத்தை அறுத்தான். அவர்களுடைய வாழ்க்கை போராட்டக்களமாக மாறியது.

இறுதியில் கண்ணபிரான் என்ற கிழட்டுப் பணக்காரன் அவளைக் கடத்தி வந்து கழுத்தில் கட்டாயத்தாலியும் கட்டிவிட்டான். அதன் காரணமாக இரு உயிர்களும் பறந்தன.

ஏற்கனவே நொந்து நொடிந்துபோயிருந்த மீனா, முரட்டுப் பார்வை பார்த்துக்கொண்டு வரும் அறிமுகம் இல்லாத அந்த ஆசாமியைப் பார்த்ததும், அதற்குமேல் நடக்கமுடியாத நிலையில் பயந்து போய் நின்றாள்.

எதிரில் வந்து நின்ற அவன், அவளை மேலும் கீழுமாக ஆராய்ந்துவிட்டு, “உன் பெயர்தான் மீனாவா?” என்று கேட்டான்.

அவள் பரிதாபமாக தலையை உயர்த்திப் பார்த்தாள். அவன் தன்னைத் தேடிக்கொண்டு வந்திருக்கும் பட்டணத்து ஆசாமியாகத் தான் இருக்கவேண்டும்.

கண்ணபிரானை அடித்துக் கொன்ற செய்தியை அறிந்து வஞ்சம் தீர்த்துக்கொள்ளும் நோக்கத்துடன் இங்கே வந்திருக்கிறானா? தான் வேறு ஒருத்தி என்று சொல்லித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்தபோதிலும் மனம் அதற்கு இடம் தரவில்லை. “என் பெயர்தான் மீனா… உங்களுக்கு என்ன வேண்டும்?”

“ஓ..நீதான் மீனாவா? நீ இப்படித்தான் இருப்பாய் என்று ஆரம்பத்திலேயே கற்பனை செய்து வைத்திருந்தேன். சீக்கிரமாகக் குளித்துவிட்டு வா. உன்னிடம் மனம்விட்டுப் பேசவேண்டும்.”

“இப்பொழுதே சொல்லிவிடலாமே.”

“பரவாயில்லை, முதலில் குளியல் வேலை முடியட்டும்.”

மீனா தன்னுடன் வந்திருந்த சிறுமியின் கையைப் பிடித்த வாறு சென்று ஏரியில் பாய்ந்து குளித்தாள். சில நிமிடங்களில் குளியல் வேலையை முடித்துக்கொண்டு மாற்றுப்புடவை உடுத்தி வந்தாள்.

ஒரு மரத்தடியில் அந்த ஆசாமி. நின்று கையிலிருந்த கத்தியினால் ஒரு கிளையைச் சீவிக்கொண்டிருந்தான்.

“வா மீனா… என்னுடைய அவசரத்தைப் புரிந்துகொண்டு சீக்கிரமாகவே குளித்துவிட்டாய் இனி என்னுடன் புறப்படுவதற்கு எந்தவிதமான தடையும் இருக்காது என்று நினைக்கிறேன்.”

அவன் இப்படிப் பேசுவான் என்று மீனா எதிர்பார்க்காததால் மறுபடியும் பேரதிர்ச்சிக்குள்ளானாள். “என்னை எங்கே கூப்பிடுகிறீர்கள்?” என்று கேட்டாள்.

“நான் போலீஸ் இலாகாவைச் சார்ந்த ஹெட்கான்ஸ்டபிள். உன்னைக் கைது செய்து கொண்டு போவதற்காக வந்திருக்கிறேன். கிராமத்தில் பரபரப்பு உண்டுபண்ணக்கூடாது என்பதற்காக நான் மட்டும் தனியாக வந்தேன்” என்றான் அவன்.

அதைக் கேட்டதும் அவளுக்கு மூச்சு முட்டியது. கடுமையான அதிர்ச்சிக்குள்ளானாள். கண்ணபிரான் கொலையுண்ட செய்தி போலீஸாருக்கு எட்டிவிட்டது என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை.

அவள் குளித்திருந்த போதிலும் உடலெங்கும் வியர்ப்பதை உணர்ந்தாள். “என்னை எதற்காக கைது செய்ய வந்திருக்கிறீர்கள்? நான் தப்பு செய்தேன்?”

“எல்லாவற்றையும் நான் சென்னையில் போய் ஸ்டேஷனில் வைத்துப் பேசிக்கொள்ளலாம். கிராமத்தில் உள்ள யாரிடமாவது ஏதாவது சொல்ல விரும்புகிறாயா?”

அவள் ‘இந்த வெட்கக்கேடான விஷயத்தை யாரிடமும் சொல்ல விரும்பவில்லை’ என்பதைப்போல் பரிதாபமாக தலையை அசைத்தாள்.

அகதிகளாக பர்மாவிலிருந்து வந்தாள். இடையிலோ வறுமை – இப்பொழுதோ வேதனை – ஒரு விநாடி நேரம்கூட நிம்மதியே இல்லாத நிலைமை.

சிறுமியை அனுப்பிவிட்டு மீனா அந்த தலைமைப் போலீஸ்காரருடன் சென்றாள்.

சாலையின் ஓரமாக கார் நிறுத்தப்பட்டிருந்தது.

அவளை பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு காரை வெகுவேகமாக ஓட்டிச்சென்றார் அந்த தலைமைப் போலீஸ்காரர்.

சென்னைக்குப்போய் அந்தக் கார் காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்னால் போய் நின்ற பிறகுதான் அவளுக்கு உண்மை புரிந்தது. தன்னை ஏமாற்றிக்கொண்டு வந்திருப்பது போலீஸ்காரர் அல்ல என்பதைத் தெரிந்து கொண்டாள்.

சுற்றிலும் காம்பவுண்டுச் சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. வெளியே உள்ளவர்களால் பார்க்க முடியாத அளவுக்கு சுவர்கள் இருந்தன.

காரை விட்டுக் கீழே இறங்கிய மீனா, ‘இது போலீஸ், ஸ்டெஷன் இல்லையே… நாம் வேறு எங்கேயோ வந்திருக்கிறோம் போலிருக்கிறதே.’ என்று பயந்தாள்.

“இது பெரிய போலீஸ் அதிகாரியின் பங்களா. உன்னைத் தனிப்பட்ட முறையில் நோடியாகவே விசாரிக்க விரும்புகிறாய்.” என்று சொன்னான் அவன்.

இனி அவள் என்ன பேசமுடியும்! வாழ்க்கையில் பலவிதமான இன்னல்களை ஏற்று நொந்துபோயிருக்கும் அவள் நல்லது கெட்டது பற்றி எப்படிச் சித்திக்க முடியும்.

அவள் பயந்து பயந்து மாளிகையின் என் ஹாலினுள் நுழைந்ததுமே அங்கே சோபாவில் சாய்ந்து கிடந்த மனிதரைக் கண்டதும் தூக்கிவாரிப் போட்டதைப்போன்ற நிலையில் திடுக்கிட்டாள்.

யாரைக் கொலை செய்துவிட்டதாக அவள் நினைத்துக்கொண்டிருக்கிறாளோ, அதே ஆள்தான், கண்ணபிரான் தான் அங்கே உட்கார்ந்திருந்தார். தலையைச் சுற்றிலும் துணியினால் கட்டுப்போடப் பட்டிருந்தது.

அவள் தன்னையும் அறியாமல், “நீங்களா” என்று கூவினாள்.

பின்னால் அவளை அழைத்து வந்திருந்தவன் நின்று கொண்டிருந்தான். அவன் கையில் பளபளக்கும் கத்தி மின்னிக்கொண்டிருந்தது. அவள் ஓட எத்தனித்தால் அந்தக்கணமே கத்தி அப்படியே ஓடை முதுகினுள் இறங்கிவிடும்.

கண்ணபிரான் மறுபடியும் எல்லா பற்களையும் காண்பித்துக் கொண்டு, “நீ எங்கே போனாலும் உன்னை விடமாட்டேன். என்றென்றுமே நீ எனக்குச் சொந்தமானவள்”, என்று சொன்னான்.

அவள் அப்படியே நின்று கொண்டிருந்தாள். தன்னை அபகரித்துக் கொள்வதற்காக தாயாரின் உயிரையும் எடுத்துக் கொண்டார்களே என்பதை நினைத்துக் கொண்டதும் கோபம் சீறியது.

மீனா தன் தாயார் கொலையுண்டதைச் சொல்லிவிட்டு, “என் குடும்பத்தையே நாசமாக்கியது போதும் என்னை விட்டுவிடு.” என்று அழுதாள்.

“உன் அம்மாவை நான் கொன்றுவிட்டேனா, ஆளைவிட்டு? அது தவறு. எனக்கு எதுவுமே தெரியாது. நாங்கள் யாருமே அந்தக் குற்றத்தைச் செய்யவில்லை.” என்றார் கண்ணபிரான்.

“அப்படியானால் என்னுடைய அம்மாவைக் கொலை செய்தது யார்?” என்று கத்தினாள் மீனா.

“எங்களுக்கு எதுவும் தெரியாது. ஆனாலும் உன் தாயாரை, அதாவது என்னுடைய மாமியாரைக் கொலை செய்தது யார் என்பதைக் கண்டுபிடிக்க உடனடியான முயற்சிகளை மேற்கொள்கிறேன்.” என்றார் கண்ண்பிரான்.

மாமியார் என்ற எழுத்துக்களை அவர் அழுத்திச் சொன்ன விதம் அவளுக்குக் கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. ஆனாலும் அவனிடமே வந்து ஆபத்தான நிலையில் மாட்டிக் கொண்டிருக்கும் போது என்ன தான் செய்ய முடியும்?.

அவள் தீர்மானமாக ஒரு முடிவுக்கு வந்து சொன்னாள். “என் அம்மாவைக் கொலை செய்தது யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். அவனுக்குரிய கூலியை கடவுள் கொடுத்துக் கொள்வார்.”

கண்ணபிரான் சிரித்துவிட்டு நெற்றி வலிக்கவே கையினால் அழுத்திக் கொண்ட்ார்.

“என்னை எதற்காக ஏமாற்றி இங்கே கொண்டுவந்திருக்கிறீர்கள்?”

“அதை இன்னுமா உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லை? நான் உன் கணவன். கழுத்தில் தாலி கட்டியவன். நீ அந்தத் தாலியை அறுத்து எறிந்துவிட்ட போதிலும் நமக்குள் இருக்கும் கணவன்-மனைவி என்ற உறவை கடவுளே வந்து குறுக்கிட்டால் கூட அறுக்க முடியாது.”

கண்ணபிரான் இப்படிச் சொல்வதற்கும் ‘பேப்பர்’ என்ற குரலோடு தினசரிப் பத்திரிகை உள்ளே ‘சரேலென்று’ வந்து விழுவதற்கும் சரியாக இருந்தது.

ஒன்பது மணிக்கு என்ன பத்திரிகை?

அவர் விழிக்க, “இன்றைக்கு மெயில் லேட்டுங்க…” என்று சொன்னவாறு வாசல் பக்கமாக வந்து நின்று உள்ளே கட்டிலை பார்த்தான் வாலிபன் ஒருவன்.

அவன் சுறுசுறுப்புடன் இயங்கும் துடிப்பு நினைந்தவனாகக் காணப்பட்டான்.

மீனா சட்டென்று திரும்பி அவனைப் பார்த்தாள். கண்கள் அவனை நோக்கிக் கொஞ்சுவதைப் போலிருந்தன.

“ஏய்…நீ இங்கேயா இருக்கிறாய்? உன்னைத் தேடிக்கொண்டு நான் எத்தனை விதமாக சென்னை முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறேன் வா” என்று சொன்னவன் சட்டென்று அவள் கையைப் பிடித்து இழுத்தான்.

கண்ணபிரானும், அவனுடைய கையாளும் செய்வதறியாது திகைத்தார்கள். இப்படியொரு நிகழ்ச்சி நடைபெறும் என்பதை அவர்கள் எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்?

மீனா கையை விடுவித்துக் கொள்ளவில்லை. இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தித் தப்பித்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்து “மச்சான்.. நீங்கள் இங்கேயா இருக்கிறீர்கள்? உங்களைத் தேடிக் கொண்டுதானே நாங்கள் பர்மாவிலிருந்தே வந்தோம்.” என்று உற்சாக நடிப்புடன் பொங்கினாள்.

இதுதான் தக்க வாய்ப்பு என்பதைப் புரிந்து கொண்டவனைப் போல் அந்த வாலிபன் கையை விட்டுவிடாமல், “கடவுள்தான் நம்மை ஒன்று சேர்த்திருக்கிறார். அவருக்கு நாம் நன்றி சொல்வோம்.” என்று சொன்னான்.

கண்ணபிரான் நிலைகுலைந்த போதிலும் சுதாரித்துக் கொண்டு “என்னடா ராஜாமணி இதெல்லாம்…?” என்று கேட்டார்.

“இவள் என் அத்தை பொண்ணுங்க… இவளைத்தான் தினசரியும் நான் தேடிக்கொண்டிருந்தேன். உங்கள் வீட்டில் வைத்து நாங்கள் சந்திக்க வேண்டும் என்ற விதி இருந்திருக்கிறது.”

அவன் அவர் எதையோ சொல்ல உதடுகளைக் குவிப்பதற்குள் கையைப் பிடித்தபடி ‘பாபர’வென்று இழுத்துச் சென்றான்.

கண்ணபிரானும், அவனுடைய கையாளும் என்ன செய்வது என்று தோன்றாதவர்களாக விழித்துக் கொண்டிருந்தார்கள்.

– தொடரும்…

– முழுநிலவில் முதலிரவு! (திடுக்கிடும் மர்ம நாவல்), முதற் பதிப்பு: 1970, கலைப்பொன்னி, மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *