வை.மு.கோதைநாயகி அம்மாள் (1901–1960) தமிழ் இலக்கிய உலகில் “நாவல் ராணி” எனப் போற்றப்பட்ட புகழ்பெற்ற எழுத்தாளர், இதழாசிரியர், இசைக் கலைஞர் மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழில் துப்பறியும் புதினம் (Detective novel) எழுதிய முதல் பெண் எழுத்தாளர் மற்றும் தமிழ் இதழொன்றின் ஆசிரியர் குழுவில் இடம்பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமைகளுக்குரியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
- பிறப்பும் குடும்பமும். 1901-ஆம் ஆண்டு டிசம்பர் 1-ஆம் தேதி காஞ்சிபுரம் அருகிலுள்ள நீர்வளூரில் என்.எஸ்.வெங்கடாச்சாரி – பட்டம்மாள் இணையருக்கு மகளாகப் பிறந்தார். இளம் வயதிலேயே வை.மு.பார்த்தசாரதி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.
- கல்வி. பள்ளிக்குச் சென்று முறைசார் கல்வி கற்காவிட்டாலும், கணவர் மற்றும் உறவினர்களின் துணையோடு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.
- சிறப்புப் பட்டங்கள். இவரது எழுத்துத் திறமையைப் பாராட்டி சமகால எழுத்தாளர்கள் இவரை ‘நாவல் ராணி’, ‘கதா மோகினி’, ‘ஏக அரசி’ எனப் போற்றினர்.
இலக்கிய மற்றும் இதழியல் பங்களிப்புகள்
- புதினங்கள் மற்றும் சிறுகதைகள். 115-க்கும் மேற்பட்ட நாவல்கள், பல சிறுகதைகள் மற்றும் நாடகங்களை எழுதியுள்ளார். இவரது முதல் நாடகம் இந்திர மோகனா மற்றும் முதல் நாவல் வைதேகி (1925) ஆகும்.
- ஜகன்மோகினி இதழ். சுமார் 35 ஆண்டுகள் ‘ஜகன்மோகினி’ என்ற மாத இதழைத் தனி ஒருவராக வெற்றிகரமாக நடத்தி, பல புதிய பெண் எழுத்தாளர்களை ஊக்குவித்தார். ‘நந்தவனம்’ என்ற இதழையும் நடத்தியுள்ளார்.
- நாட்டுடைமை. இவரது இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் வகையில் 2009-ஆம் ஆண்டு தமிழக அரசால் இவரது படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
‘வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி’ என்பது முழுப் பெயர். தமிழில் முதலில் துப்பறியும் புதினம் எழுதிய பெண் எழுத்தாளர். இந்திய சுதந்திரத்துக்கான விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றவர். மேடைப் பேச்சாளர், கவிஞர், பத்திரிகை ஆசிரியர், சமூக சேவகி என பன்முகத் தன்மையோடு செயல்பட்டவர். விறுவிறுப்புக் குறையாத எழுத்துக்குச் சொந்தக்காரர். 115 புதினங்களை எழுதியிருக்கிறார். இரு சிறுகதைத் தொகுதிகள், மூன்று நாடகங்கள், இரண்டு உரைநடை நூல்களும் வெளி வந்திருக்கின்றன. ‘நாவல்ராணி’, ‘கதா மோகினி’, ‘ஏக அரசி’ என்றெல்லாம் போற்றப்பட்டவர். செங்கல்பட்டு மாவட்டம் நீர்வளூரில் 1901, டிசம்பர் 1ம் தேதி பிறந்தார். ஒரு வயதில் தாயை இழந்தார். சித்தப்பா ராகவாச்சாரியிடம் தேவாரம், திருவாசகம், கம்பராமாயணம், திருவாய்மொழி உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களைக் கற்றார். 1907ல் ஐந்தரை வயதில் திருமணம். கணவர் வை.மு.பார்த்தசாரதி, சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர். கோதை நாயகி அம்மாளுக்கும் திருமணத்துக்குப் பிறகு ‘வை.மு.’ என்ற அவர்களின் குடும்பப் பெயர் சேர்ந்து கொண்டது. அவருடைய செயல்பாடுகளுக்கும் வெற்றிகளுக்கும் பார்த்தசாரதி துணையாக இருந்தார். பள்ளிக்குச் சென்று படித்திராதவர் கோதைநாயகி. மாமியாரிடம் தெலுங்கு மொழியை கற்றுத் தேர்ந்தார். கணவர் அழைத்துச் சென்ற நாடகங்களைப் பார்த்து நாடகங்களின் மேல் ஈடுபாடு கொண்டார். சரியாக எழுதத் தெரியாத நிலையில், ‘இந்திரமோகனா’ என்ற நாடகத்தை உருவாக்கினார். இவர் சொல்லச் சொல்ல, அவருடைய தோழி பட்டம்மாள் அதை எழுதினார். அது நூலாகவும் வெளியானது. அதற்குக் கிடைத்த பாராட்டு மற்றும் வரவேற்பினால், தானே எழுதக் கற்றுக்கொண்டு வேறு சில நாடகங்களை எழுதினார்.
‘ஜகன்மோகினி’ என்ற இதழ் நின்று போயிருந்த சமயம் அது. அதை விலை கொடுத்து வாங்கி, வெளியிடத் தொடங்கினார். 35 ஆண்டு காலம் அந்தப் பத்திரிகை வந்தது. இந்து-முஸ்லிம் ஒற்றுமை, பெண் விடுதலை, தேசப்பற்று, விதவைத் திருமணம், மதுவிலக்கு ஆகியவற்றைத் தன் எழுத்துகளில் வலியுறுத்தினார். 1937ல் சொந்தமாக ஓர் அச்சகத்தையும் நிறுவி நடத்தி வந்தார். கர்நாடக இசைப்பாடல்களைப் பாடுவதிலும் வல்லவர். கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு சிறை சென்றார். 6 மாத சிறைத்தண்டனை. அபராதம் கட்டத் தவறியதால் மேலும் 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. 1932ல் அந்நியத்துணி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக வேலூர் சிறை சென்றார். சிறையில் இருந்தபடியே இரு புதினங்களை எழுதினார். திரைப்படத் தணிக்கைக்குழு பிரிவில் உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. இவருடைய புதினங்கள் ‘அனாதைப்பெண்’, ‘சித்தி’, ‘ராஜமோகன்’, ‘தியாகக்கொடி’, ‘நளினசேகரன்’ என்ற திரைப்படங்களாக மலர்ந்தன. இறுதிக் காலத்தில் காசநோய்க்கு ஆளாகி துன்பப்பட்டார். 1960, பிப்ரவரி 20ம் தேதி மறைந்தார்.