பழஞ்சோறு

நாளைக்கு காலைல இருக்கிற பழைய சோறுதான்.
கார்த்திகாவின் இந்த திடீர் அறிவிப்பு வீட்டில் எல்லோருக்குமே பிடித்திருந்தது.
நேற்று மிச்சம் வைச்ச மீன் குழம்பு சுட வைச்சு சாப்பிடலாம். சொல்லப் போனா எல்லாருக்கும் இந்தக் combination ரொம்பப் பிடிக்கும். காலைச் சாப்பாடு ரெடி.
நேரத்துக்கு எழும்பத் தேவையில்லை. நாளைக்கு கொஞ்சம் அதிகம் தூங்கலாம்.
எப்போதுமே விடியற் காலைல அஞ்சரை ஆறு மணிக்கு எழும்பினா எல்லாம் செய்து முடிக்க இரவு ஒன்பதைத் தாண்டும்.
கார்த்திகா செய்வதற்கு நிறையவே இருக்கும், அதைப் பட்டியல் போட்டால் இரண்டு பக்கத்துக்கு நீளும். எப்பவுமே கார்த்திகா தன் வேலைப் பழுவைக் complaint பண்ணுவதேயில்லை.
அதைப் பழுவாக உணருவதே கிடையாது. அது தன்னுடைய பணி என்று உணர்ந்து இயல்பாகவே செயல் பட்டுக் கொண்டிருப்பாள், battery charge இருக்கிற வரைக்கும் ஓடிக் கொண்டேயிருக்கிற கடிகாரம் போல.
சக்தியிருக்கிற வரைக்கும் சுத்திக் கொண்டேயிருப்பாள். Sunday to Saturday உழைக்கிற கார்த்திகா களைப்படைந்து சோர்வாக உணரும் போதுதான் மூளையை துணைக்கழைப்பாள். எப்பவுமே காலை உணவுக்கு என்ன என்று இராத்திரியே போடும் பிளான் தான், இவளின் தூக்கத்தை வேளைக்கு கலைக்கும்.
இயந்திரத்துக்கும் ஓய்வு தேவை இவளுக்கு தேவைப் படாதா? இவளாக உணரும் வரை ஓய்வு என்பதை சோம்பேறித்தனம் என்று குறைத்து மதித்தாள்.
வயது அறுபது ஆகும் வரை ஓய்வு என்பதை இவளது மூளையும் இவளைப் போல்தான் குறைத்து மதித்தது. இப்போதுதான் உறைக்கத் தொடங்கியிருக்கிறது. கொஞ்சம் ஓய்வும் தேவை.
அதுதான் இந்தப் பிளான். நாளைக்கு காலைல பழஞ்சோறும் மீன் குழம்பும்.
விடிந்தது, அத்தனை பேரும் அவளுக்கு முன்னமே எழுந்து ஹாலில் கூடினார்கள். இன்றைக்கு மீன் குழம்பும் பழைய சோறும் என்ற கார்த்திகாவின் நேற்றைய அறிவிப்பு எல்லோரையுமே அடிக்கடி விழித்து விடிந்து விட்டதா என்று பார்க்க வைத்திருக்கிறது.
கார்த்திகாவுக்காக ஹாலில் காத்திருந்தார்கள் எழுந்து வந்த கார்த்திகாவுக்கு இந்தக் காட்சி உற்சாகம் கொடுத்தது, மூளைக்குள் ஒரு மொட்டு விரிந்து மெட்டுப் பாடியது.
பழஞ்சோறு ஐடியா இன்னொரு நாளுக்கும் மெல்ல நீண்டது.
ஏகமாக ஏற்கவும் பட்டது.
இனி வாரத்தில் இரண்டு நாட்கள் கொஞ்சம் அதிகமாகத் தூங்குவாள் கார்த்திகா.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: December 6, 2025
பார்வையிட்டோர்: 376