கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 18, 2024
பார்வையிட்டோர்: 1,424 
 
 

(1978ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பஸ்ஸைவிட்டு இறங்கினபோதுதான் வெயிலின் உஷ்ணம் அவனுக்குப் புரிந்தது. வெயில் வருவதற்கு முன் பஸ்ஸில் ஏறினவன். உடம்பு சட்டென வேர்த்துப் புழுங்கியது. பனியன் நனைந்து உடம்பு ஜில்லிட்டது. மணிக்கட்டுகளில் முத்துக்களாய் வியர்வை. மணி ஒன்பதுகூட ஆகவில்லை என்று பஸ் ஸ்டாண்டில் கடிகாரம் சொல்லியது. 

சுரங்கத்துக்குப் போகும் பஸ்கள் ஒவ்வொன்றாய் வந்து மக்களை நிரப்பிக் கொண்டு சுரங்கத்தை நோக்கி ஓடின. 

அவை பெரும்பாலும் சுரங்கத்தில் இருந்து வந்தவை போல தோற்றம் தந்தன. காக்கிச் சட்டையிலும் பேண்ட்டிலுமாய் தன்னை நுழைத்துக் கொண்டிருந்த தொழிலாளிகள் வண்டிகளில் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தார்கள். அவன் அவர்களையே பார்த்தவாறு நின்றான். 

காலப் பிரக்ஞை அவனை உசுப்ப, தான் செல்ல வேண்டிய இடத்துக்கு வழி கேட்டவாறு அவன் நடந்தான். ‘வாயில் இருக்கும் வழி’ என்று அவன் அப்பா, அவன் புறப்படுகிற போது சொன்னது ஞாபகம் வந்தது. வழி வாயில் இல்லை, மனசில்தான் இருக்குது என்று திடீரென அவனுக்குத் தோன்ற, இது ஒரு கவி வாசகம் போல தொனிக்க, அவ்வரிகளை அசை போட்டவாறு அந்தத் தெருவையும் அந்த வீட்டையும் நெருங்கி நின்றான் அவன். 

“யாரு?” என்றாள் வீட்டுக்குள் இருந்து எட்டிப் பார்த்த நடு வயது ஸ்திரீ ஒருத்தி. 

“நான்தான்” என்றான் இவன். 

“நான்தான்னா?” என்றாள் அவள். 

“நான்தான் ராஜரத்தினம். பாண்டிச்சேரியிலிருந்து வர்றேன்…” என்றான் அவன். 

“பாண்டிச்சேரியில் யார் வீடு?” என்று கேட்டபடி நடைக் கதவைத் தாண்டி, கூடத்துக்கு வந்தாள் அவள். அவன் தன் அப்பா பேரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான். 

“அடடே, உள்ள வாப்பா! இதை முதல்லயே சொல்றத்துக்கு என்னா, முழிக்கிறியே” என்றாள் அவள். அதுவரை திறக்காமலேயே இருந்த கூடத்துக் கதவைத் திறந்துவிட்டாள். நடையில் இருந்த பிரம்பு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்தான் அவன். 

“அவர் இல்லீங்களா?” 

“குளிக்கிறாரு…” என்று சொல்லிவிட்டு உள்ளே போனாள் அவள். 

இரண்டு மூன்று, காலமான அரசியல்வாதிகளின் படமும் சுவரில் தொங்கிக் கொண்டிருந்தன. அலமாரியும், சோபாக்களும் புத்தம் புதுசாய்க் கூடத்தை நிறைத்து இருந்தன. ‘அவன் என்னடா, நிமிந்துட்டான்’ என்று அப்பா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. 

அவள் டம்ளரில் சூடாக எடுத்துக் கொண்டு வந்து அவனிடம் நீட்டி, “காப்பி சாப்பிடு” என்றாள். அவள் காப்பி என்று அதைச் சொல்லவில்லை என்றால் அது என்ன பானம் என்றே அவனுக்குப் புரிந்திருக்காது. 

“அம்மா சௌக்கியமா?” 

“ஊம்…”

“அப்பா…?” 

“ஊம்…” 

“ராமு சித்தப்பா சௌக்கியமா இருக்காங்களா?’ 

“உம்…?” அவன் நெற்றி சுருங்கியது. 

“ஆதாம்பா, உங்க அம்மாவோட ஒன்று விட்ட சித்தி ஊட்டுக்காரரு…” 

“தெரியாது.” 

“தெரியாதா… என்ன நீ சொந்தம் பந்தமெல்லாம் தெரிஞ்சு வச்சிக்கிறது இல்லியா?” 

“எனக்குச் சொந்தக்காரங்களையெல்லாம் அவ்வளவா தெரியாது.” 

“ஐயயெய்ய… பாடாமே விட்டது ராகம், போகாமே விட்டது உறவுன்னு சொன்னது சும்மாவா. நம்ம மனுஷாளயெல்லாம் நாம்ம தெரிஞ்சு வக்காம… இந்தக் காலத்துப் பிள்ளைகளே அப்பிடித் தான்_’ 

‘அவள் இன்னும் குளிக்காமல் இருக்கிறதாக அவனுக்குத் தோன்றியது. ஒரு மாதிரியான வாசனை அவளிடமிருந்து வந்தது. 

“வாப்பா..” என்றவாறு அவர் வந்தார். இடுப்பில் துண்டு சுற்றிக் கொண்டிருந்தார். தலை துவட்டியதால் முடி பரந்து கிடந்தது. அவரிடமிருந்து லக்ஸ் வாசனை வந்தது. 

“அப்பா நல்லா இருக்காரா?” 

“ஊம்…நல்லா இருக்கார்.” 

“போன வாரம் பஸ் ஸ்டாண்டுல அவரைப் பார்த்தேன். ரொம்ப இளைச்சுப் போயிட்டாரு- அப்போதான் சொன்னாரு நீ வேலை இல்லாம இருக்கேன்னு… எதுவரைக்கும் படிச்சிருக்கே நீ….?” 

“பி.எஸ்.சி.” 

“இங்கே வேலை பார்க்கிறியா?” 

“அதுக்குத்தான் வந்திருக்கேன்.” 

“இரு, வந்துட்டேன்.” 

அவர் உள்ளே போய் காக்கிப் பேண்ட்டும், வெள்ளை சட்டையுமாய் வந்தார். 

“சாப்பிட்டியா?” 

“ஊம்…” 

“எங்கே?” 

“இங்கதான்…” 

“இங்க வந்துட்டு ஓட்டல்லே- எதுக்கு சாப்பிட்டு வர்றே சொந்தக்காரங்க வீடு இருக்கப்போ? காசு தெண்டம்.” 

“அதுக்கு ராமு சித்தப்பாவைத் தெரியாதாம்… பார்த்துக்குங்க.”

“அவ்வளவோ அபிமானம்.” 

அவர் டேபிளை இழுத்துப் போட்டுக்கொண்டு அவன் முன்னால் அமர்ந்தார். அவள் பரிமாறினாள். அசைவ வாசனை; சுகமான வாசனை; எறா வறுத்திருந்தாள். 

அவனுக்குப் பசித்தது. பொய் சொல்லி இருக்க வேண்டாம் போல் உணர்ந்தான். 

“இங்க எல்லாம் யூனியன் ரொம்ப பவர்ஃபுல். யூனியன் நினைச்சா ஒருத்தனை வேலைக்கு வைக்கலாம். ஒருத்தனை வேலையைவிட்டு எடுக்கலாம், தெரியுதா? முதல்லே நீ யூனியன் செக்ரடரியப் பாக்கணும்; நானும் வர்றேன். அவரு நம்ம சொந்தக் காரரு, தெரியுமில்ல? பாவாடை முதலியார்ன்னு ஒருத்தர் இருந்தார் இல்லே, நம்மூர்ப் பக்கம், அதாம்பா சேலியமேடு முதலியார்ன்னு சொல்லுவாங்கல்ல அவரோட மச்சினனுக்கு இவர் சகலன். யாரு நம்ம யூனியன் செக்ரடரி. இவரு எனக்குத் தம்பி முறையானது. சொல்லிப் பாப்போம். போன வாரம் கூட என் கொழுந்தியா மகனைச் சேத்துவிட்டேன். நம்மளவங்கன்னா அவருக்கு உசுரு. ஜாதி ஜனம்ன்னா ரொம்பப் பிரியம். கொஞ்சம் குழம்பு ஊத்து. கட்டாயம் நான் சொன்னா செய்வாரு.” 

“அவரு கம்யூனிஸ்டுன்னு கேள்விப்பட்டனே.” 

“ஆமாமா – அந்தக் கட்சிதான் அவரு – நல்ல மனுஷம்பா — எந்தக் கட்சியில் இருந்தாத்தான் என்னா – நல்லா இருக்கணும்.  அதைப்பார்த்து நாம்ப ஸந்தோஷப் படணும். எந்த நிலைக்குப் போனாலும் நம்ம ஆளுகநாலு பேருக்கு உதவியா இருந்து கை தூக்கி விடணும். ஊருல என்ன நடக்குதுங்கறே, இப்போ ஐயரு மானேஜ் மண்ட்க்கு வந்தப்ப ஐயரு பசங்களா வேலைக்கு வந்தாங்க பின்னால நல்லமுத்து கவுண்டரு வந்தாரு – ஊருல உள்ள வன்னியன் எல்லாம் தலையே நிமித்திக்கிட்டு நடந்தான். இப்போ முதலியார் வந்திருக்காரு – நம்ப செக்ரடரியும் முதலியாரு ஒண்ணுக்குள்ளே ஒண்ணு. இப்போ எல்லாரும் சௌகரியமா இருக்காங்க நம்ப செக்ரடரி சொந்தம்மா வீடு கட்டிட்டாரு. கொஞ்சம் காசு கையில் இருக்கே – ஆளு நிமிந்துடுவாரு ஆமா, பணம் ஏற்பாடு பண்ணி இருக்கியா?” 

“ரெண்டாயிரம் தரமுடியும்ன்னு அப்பா சொல்லச் சொன்னாங்க — அதுக்குள்ளே பாத்து முடிக்கணும்ன்னு சொல்லச் சொன்னாங்க.” 

“நம்பளவங்க அதுக்கு மேல கேக்க மாட்டாங்க. மோரு போடு- மோரு சாப்பிடறியா” 

“வேணாம்.” 

“சரி, வா.” 

அவரும் அவனும் ரோட்டில் நடக்கிற போது, பலர் அவருக்கு வணக்கம் சொன்னார்கள். போலீஸ்காரன்கூட அவருக்கு சல்யூட் வைத்தான். 

“ஊருல நமக்கு மதிப்பு ஜாஸ்தி தெரியுமா- வேற ஒண்ணுமில்லே ‘செங்குந்த முதலியார் சங்கம்ன்னு’ ஒண்ணு ஆரம்பிச்சிருக்கேன் – சங்கம் ஆரம்பிச்ச பின்னால் அவனவன் நடுங்கிக் கிடக்கின்றான்க.” 

திடீரென்று அவரை சந்தோஷப்படுத்த வேண்டும்போல் அவனுக்குத் தோன்றியது. 

“இந்த ஊரு சேர்மன்கூட நம்பளவங்களாமே” என்றான்.

“சேச்சே…யார் சொன்னது- அவரு வேற முதலியார் இல்லே – நமக்கும் அவருக்கும் கொள்வினை கொடுப்பினை கூட இல்லே… அந்த ஜாதிக்குமே இல்லே. எல்லாமே முதலியாரா-” 

“முதலியார்ன்னு பட்டத்தைப் பார்த்து நம்பளவங்கன்னு நெனைச்சுப்புட்டேன்.” 

“அவங்கள அச்சரபாக்கத்து முதலியார்ன்னு சொல்லுவாங்க.”

“ஓகோ…” 

“அதெல்லாம் வித்தியாசம் உண்டு. பெரியவங்க காரணமில்லாம செய்ய மாட்டாங்க.” 

சங்கத்தின் கட்டடம் வந்து சேர்ந்தார்கள். ஒரு பெரிய மேஜைக்கு முன்னால் மற்றவர்களைக் காட்டிலும் பிரகாசமாகவும், சிவப்பாகவும், வெள்ளை வெளேரென்று உடுத்தியும் ஒருவர் இருந்தார். “வாங்க முதலியார்” என்று அவரை வரவேற்றார். 

“நம்ம பையன்” என்று அவனை அவர் செகரடரிக்கு அறிமுகப் படுத்தி வைத்தார். “நம்ப” என்கிற வார்த்தைக்கு விசேஷ அர்த்தத்தை அந்தச் சூழ்நிலை நன்கு எடுத்துக்காட்டியது. 

“உக்காருங்க…” என்றார் அவர். 

நாங்கள் உட்கார்ந்தோம். 

“அப்போ நாங்க வர்றோம்-” என்று அந்த அறையில் இருந்தவர்களெல்லாம் கிளம்பினார்கள். 

“வாங்க — நாளைக்கு சாயங்காலம் மீட்டிங்கில டிசைட் பண்ணிற வேண்டியதுதான். ஒரு நூறு பேரு கூட இல்லே. அந்த ‘பிசாத்து’ சங்கத்துல – அவன் ஒரு ஸ்டிரைக் அடிக்கிறான்னா நம்ம என்ன செரைக்கவா சங்கம் வச்சு இருக்கோம். நாம்பளும் நம்ப ‘ஸ்டெண்த்தைக்’ காட்டிடறதுக்காவது ஒரு ஸ்டிரைக் அடிக்கணும் – அப்போ வாங்க” செகரடரி எழுந்து நின்று கும்பிட்டு அவர்களை வழி அனுப்பி வைத்தார். 

“சொல்லுங்க” 

“இவன் நம்ப பையன் அண்ணாச்சி. பி.எஸ்.சி. வரைக்கும் படிச்சிருக்கான். உள்ளே தள்ளி விட்டுடணும்-” 

“நம்ப பையன்னா?” 

“உத்ரவேல் முதலியார்ன்னு சொல்லுவேனே – நம்ப ஒண்ணுவிட்ட பங்காளி பையன்.” 

“ஓகோ- பாண்டிச்சேரியா?” 

“ஆமா, அண்ணாச்சி.” 

“நம்ப வஜிரவேலு சௌக்கிமா…” 

அவர் அவனைப் பார்த்துக் கேட்டார். 

அவன் விழித்தான். 

“அதாம்பா – டிப்டி கலைக்டரா இருந்து ரிடையர் ஆனாரே – அவருதான். நம்ப பக்தவச்சலம் காலத்துல ரொம்ப செல்வாக்கா இருந்தார். இப்போ உங்க ஊருலதான் வீடு வாங்கிக்கிட்டு வந்துட்டார்ன்னு சொன்னாங்களே.” 

அவன் அவரை அறியமாட்டான். 

அவர் அவனுக்கு வக்காலத்து வாங்கினார். 

“இந்தக் காலத்துப் பையன்களுக்கு ஜாதி குலம் தெரியறது இல்லே. அவன் உண்டு, அவன் வேலை உண்டு.” 

“அப்படியெல்லாம் இருந்துறக் கூடாதுப்பா – ஜாதி, உறவு, சொந்தம், பந்தம்ன்னுல்லாம் எதுக்கு ஏற்படுத்தி இருக்காங்க- ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக்குத்தானே- என்னையே எடுத்துக்கோ – நான் வாங்காத அடியா உதையா – போகாத ஜெயிலா — என்ன லாபம் வந்தது எனக்கு? நாலு பொண்ணுங்க சமைஞ்சு வீட்டுல நிக்குது நான் பண்ண தியாகம் எனக்குச் சோறா போட்டுச்சு – எனக்கு டீ வாங்கியாந்து கொடுத்த பய எல்லாம் எம்.எல்.ஏ. இன்னிக்கு. ஏதோ தெய்வாதீனமா நம்பளவரு மானேஜ் மெண்ட்டுக்கு வந்தாரு என்னையும் கைதூக்கி விட்டாரு நானும் நாலு காசு மிச்சம் பிடிக்க முடிஞ்சது ஒரு வீட்டை சொந்தமா கட்ட முடிஞ்சது… நாலு பேரு என்னை மதிக்கிறான் மேலிடத்திலே இப்பத்தான் என்னை ரெக்கக்னைஸ்’ பண்ணான் இந்தப் பதவியக் கொடுத்தான். என் தியாகம் எனக்குச் சோறு போடல்லே ஜாதிதான் எனக்குச் சோறு போடுது.” 

“நல்லா கேட்டுக்க” என்றார் அவனுடன் வந்தவர். 

அவன் பெயர் முகவரி, படிப்பு எல்லாவற்றையும் எழுதி வாங்கிக் கொண்டார் அவர். இன்னும் ஒரு வாரத்தில் பதில் எழுதுவதாகச் சொன்னார். 

அவனை சங்கத்துக்கு வெளியே விட்டு விட்டு அவர் மட்டும் உள்ளே சென்று செக்ரடரியோடு கொஞ்சம் தனித்துப் பேசிவிட்டு வந்தார். 

அவர் அவனோடு பஸ் ஸ்டாண்டு வரைக்கும் வந்தார். 

“வீட்டுக்குப் போயி உன் ஜாதகத்தை அனுப்பி வை.” 

“ஜாதகமா, எதுக்கு?” 

“செக்ரடரி கேட்டார். உன்னை அவருக்குப் பிடிச்சுப் போச்சு. உன்னை மாப்பிள்ளை ஆக்கிக்கலாம்ன்னு நெனைச்சுக்கிட்டாரு. அதிர்ஷ்டக்காரன்தான் நீ. உத்தியோகத்துக்கு உத்தியோகம்; பொண்ணுக்கும் பொண்ணு. நான் அப்பாவை அடுத்த வாரம் வந்து பார்க்கிறேன்னு சொல்லு.” 

“சரி…” 

“ஜாதகத்தை மறந்துடாதே. ஒண்ணை மட்டும் நல்லா ஞாபகத்துல வச்சுக்கோ. நீ நல்ல நெலமைக்குப் போனா நம்ப பையன்களைப் பார்த்துக் கைதூக்கி விடணும். எல்லா ஜாதிக் காரனும் அதான் பண்றான். நாம்பளும் அதான் பண்ணனும்…” 

“உம்…” 

வண்டியில் அவனுக்கு முன்னால் அவர் அமர்ந்து கொண்டார். 

“படிச்சி முடிச்சி ரெண்டு வருஷம் ஆச்சே. இது வரைக்கும் சும்மாதான் இருக்கியா…” 

“ஆமா… ட்ரை பண்ணிக்கிட்டுதான் இருக்கேன்- வேல கெடைக்கல்லே…” 

“ஏதாவது யூனியன் ஆரம்பிச்சிருக்கலாம்… சௌகர்யமா இருந்தி ருக்கலாம். உங்க ஊருலதான் நாலு மில் இருக்கே. ஆனந்து எப்பிடி இருந்தான். இப்ப எப்படி இருக்கான். சொந்த பங்களா மாதிரி வீடு. ஸ்கூட்டர், பாங்க் பேலன்ஸ் எல்லாம் யூனியன் லீடர் ஆனப்பறம்தான்…” 

அவர் சொல்லும் ஆனந்துவை அவனுக்குத் தெரியும். உண்மைதான். 

“முன்னெல்லாம் கவி எழுதுவியே- இப்பவும் எழுதுவியா?”

“எப்பவாவது…” 

“ஒட்டக்கூத்தர் தெரியுமா?” 

“ம்… யாரு?” 

“அதாம்பா, சோழ ராஜாகிட்டே ஆஸ்தான கவியா இருந்தாரே அந்த ஒட்டக்கூத்தர்.” 

“அவரா…. தெரியும். ‘உலா’ பாடினவர்.” 

“அது எனக்குத் தெரியாது. அவரு நம்ம ஆளு. 

“நம்ம ஆளா?” 

“ஆமா, நம்ப ஜாதிக்காரு.” 

“ஓகோ…” 

“ஆமா… இதெல்லாம் தெரிஞ்சுக்காம என்ன நீ படிக்கிறே…” 

அவரைத் திருப்திப்படுத்த வேண்டும்போல அவனுக்குத் தோன்றியது. 

“கம்பர் கூட நம்ப ஆளா?” 

“அவன் வெள்ளாள முதலிப்பா. நம்ப ஆளு இல்லே.” 

“அது எப்படிச் சொல்றீங்க?…” 

“கம்பனை வைச்சு ஆதரிச்சவரு சடையப்ப முதலி. அவரு வெள்ளாளர். அதனால கம்பனும் வெள்ளாள முதலியாராத்தான் இருக்கணும். வேற ஜாதியானை ஆதரிக்கிறதுக்கு சடையப்ப முதலிக்குப் பைத்தியமா பிடிச்சு இருக்கு.” 

“ஓகோ…” 

“ஆமா, இதெல்லாம் ரொம்பப் பழைய சமாசாரம். இந்தா, இதை வச்சுக்கோ…” 

அவர் ஒரு புஸ்தகத்தை நீட்டினார். 

“இதுல நம்ப ஜாதியாருங்க எங்க, யாரு யாரு என்னென்ன பதவி வகிக்கிறாங்கன்னு எழுதி இருக்கு… உனக்கு எதிர்காலத்துல ரொம்பப் பிரயோஜனமா இருக்கும்…” 

அவன் புரட்டிப் பார்த்தான். கலெக்டர், கவர்ன்மெண்ட் செக்ரடரி, ஆபீஸர்கள் பெயர் எல்லாம் முதலியார் பட்டத்தோடு இருந்தன. 

“சரி.. எனக்கு டைம் ஆவுது. அப்பாவைக் கேட்டதா சொல்லு… உங்க அப்பா எனக்குச் செஞ்ச உதவியாலதான் நானும் மனுஷனா இருக்கேன். உங்க அம்மா போட்ட சோறுதான் என் உடம்பில் இரத்தமா ஓடுது. நீ வாழ்க்கையில நல்ல நிலைமைக்குப் போனா நம்ப பையன்களைக் கை தூக்கி விடணும்… தெரிஞ்சுதா?” 

”சரி.” 

“நான் வர்றேன்… ஞாபகத்துல வச்சுக்கோ… ஜாதகம் மறத்திடாதே.” 

”சரி.” 

அவர் போனார். 

வண்டி நகர்ந்தது. 

சௌகரியமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு யூனியன் செக்ரடரி பெண்களைப் பற்றிக் கற்பனை பண்ண ஆரம்பித்தான் அவன். 

வெயில் இல்லை. 

– 1978

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

பிரபஞ்சன் பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *