காதல் போயின்…
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: செம்மலர்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 7, 2025
பார்வையிட்டோர்: 1,466
(1986ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வீட்டு முற்றத்தில் சைக்கிளை நிறுத்தி துடைத்துக் கொண்டிருந்த சந்தானத்துக்கு, தேங்காயெண்ணெய் வேண்டும். இரண்டு தடவை கூப்பிட்டும் எட்டிக்கூடப் பார்க்காத லட்சுமியை நினைக்க நினைக்க எரிச்சல்.
‘ச்சே…! இவளோட பெரிய தொல்லையாப் போச்சு. ‘கூப்புட்டோம், வந்தோம்’னு இருக்கமாட்டா. மசமசன்னு அசமந்தம் பிடிச்சுப்போய். இவா பிறவியே இப்படியாகிப் போச்சு. எருமை மாட்டுப் பிறவி.’
பொறுமையிழந்து போன மனசுக்குள், முணுமுணுப்பாகத் திட்டிக்கொண்டே மூன்றாவது தடவையாக கோபக் கத்தலாய்க் கத்தினான். “ஏய்…லட்சுமீ…
“என்ன?” – அசரீரியாக மனைவியின் எதிரொலி. பதற்றமில்லாத ”என்ன?”; அசிரத்தையான “என்ன?”; மழை கொட்டினாலும் அசைந்து கொடுக்காத மந்தமான எருமையின் “என்ன?”.
நினைத்தாலே சந்தானத்துக்கு தீயாய்ப் பற்றிக்கொண்டு வந்தது. என்ன என்ற அசரீரிக்குப் பிறகு, சில நிமிஷங்கள் கழித்தே லட்சுமியின் உருவம் நிதானமாக வாசலில் தெரிந்தது.
எரிந்து விழுவதற்காக நிமிர்ந்த சந்தானம், உணர்ச்சியின் வாலைச் சுருட்டிக் கொண்டான். வாயைச் சப்புக் கொட்டிக் கொண்டான்.
“அந்தத் தேங்காயெண்ணெய் பாட்டிலை எடுத்துட்டு வா.”
சங்கடத்துடன் வேலை செய்கிற கடுப்பும், எரிச்சலும் அவள் மூகத்தில். உதடுகளில் மெல்லிய சுளிப்பு. சந்தானம் நிர்ப்பந்தமாய் சாந்தமாக வேண்டிய அவலம்.
பொங்கிப் பெருகிய ஆத்திர உணர்ச்சி,சீறி வெளிப்பட வழியற்று, உள்ளுக்குள் இறங்கியபோது… மனசின் சகல விளிம்புகளையும் தகித்துக்கொண்டே பரவியது. வாழ்க்கையே அநியாயமாகப் பலியாகிவிட்டது. சுரணையற்ற ஒரு ஜென்மத்துக்குப் புருஷனாகி… மனப்புழுக்கத்துடன் மாரடிக்கிற பிழைப்பாகிவிட்டது. தாம்பத்யம் இந்த லட்சணத்துலேயே பத்து வருஷம் ஓடிப்போச்சு. இரண்டு பிள்ளைகளையும் பெற்றாகி விட்டது. சே!
ஒரு யுகத்துக்குப் பிறகு வந்து சேர்ந்தது, தேங்காய் எண்ணெய். பேச்சில்லை, மூச்சில்லை.
“ச்சே, சுரணைகெட்ட சோம்பேறி… எருமை ஜென்மம்.”
உள்ளுக்குள் திரும்பிய லட்சுமி, புருஷனின் அனல் முணு முணுப்பைக் கேட்டாள். மனசைச் சுடுகிற வசவுகள். மனசில் வடுவாகிவிட்ட புண்ணைச் சுடுகிற வசவுகள். தன் கனவுகளை யெல்லாம்- வசந்தத்தையெல்லாம்- அள்ளி விழுங்கிப் புதைத்துக் கொண்ட சமாதியின் வசவுகள்.
மனசுக்குள் ஊசி குத்திப் பிடுங்கியதைப்போல வலி. இமைகளை நெறித்துக்கொண்டு பிதுங்கி வழிகிற கண்ணீர். அழக்கூட உரிமையற்றுப்போன ஆன்மா. அடிபட்ட வேதனையில் வடிக்கிற ஊமைக்கண்ணீர். அடுப்பங்கரைக்குள் லட்சுமி வந்து விழுந்தாள். அடுப்புக்கு வெளியே வந்திருந்த நெருப்பை, உள்ளே தள்ளி விட்டாள். சோறு கொதிக்கிற சள சள சத்தம். அறைக்குள் மூட்டி மோதுகிற புகை மூட்டம். முக்காலியில் உட்கார்ந்திருந்த லட்சுமி, மன அயர்ச்சியோடு சுவரில் சாய்ந்தாள். கன்னத்தில் வழிகிற கண்ணீரைக் கூட துடைக்க மனமில்லை. மனசெல்லாம் எங்கோ… தூரத்தில்… காலத்தை விழுங்கிய தூரத்தில்… மனசுக்குள் முட்டி மோதுகிற நினைவு மூட்டங்கள்…
அது தைமாதம். நெல் அறுவடை நடக்கிற காலம். செல்வராஜ்தான் கொத்தன். அறுவடைக்கான கூலி பேசுவது, வாங்குவது எல்லாம் இவன் பாடுதான். ஆணும் பெண்ணுமாய் சில ஆள்களைச் சேர்த்துக் கொண்டு வேலையை முடித்துக் கொடுப்பது- வாங்கிய கூலியைப் பகிர்ந்து தருவது எல்லாம் இவன் பொறுப்பு.
இவனும் சமமாக வேலை செய்வான். வேலைக்கொரு பங்கு. கொத்தன் என்பதால், அதற்குத் தனியாக ஒரு பங்கு.
காலை நாலு மணிக்கெல்லாம் வயக்காடு புறப்பட்டுவிடணும். அறுப்பை துவக்கினால், ஏழு மணிக்கெல்லாம் முடித்துவிடணும். அப்புறம்தான் சாப்பாடு. பிறகு களத்துக்குச் சுமப்பது, கதிரடிப்பது- ஒதுக்குவது என்று, வேலை இரவு ஏழு மணிவரை நீளும்.
முதல் நாள் அறுப்பிலேயே, பதினெட்டு வயசு லட்சுமி எல்லோரையும் முந்திக்கொண்டு போனாள். புயல் வேகச் சுறுசுறுப்பு. இடது கையால் தாளைப் பிடிப்பதுவும்-வலதுகை அரிவாளால் அறுப்பதுவும், கண்ணால் பார்க்கவே முடியவில்லை. அத்தனை வேகம்.
கொத்தன் செல்வராஜ், கொஞ்ச நேரம் அவளுடன் போட்டி போட்டுப் பார்த்தான், ரகசியமாக. ஊஹும்…முடியவில்லை. கௌரவமாய் தோல்வியை உணர்ந்து ஒதுங்கிக்கொண்டான். லட்சுமி அறுப்பு வேகத்தில் காட்டிய தீவிரம், இவனை அசத்திவிட்டது.
இவன் மனதில் அவளது வேர்கள்…
மறுநாளிலிருந்து காலை 4 மணிக்கு லட்சுமியை முதல் ஆளாக எழுப்பிவிடுவதே இவன்தான். கதவைத் தட்டினால் லட்சுமியின் அம்மாதான் “யாரது?” என்பாள்.
“என்ன அத்தை, நாந்தான். லட்சமியை எழுப்பி விடுங்க.”
லட்சுமி இல்லாவிட்டால் அறுப்பு வேலையே நடக்காது என்று பயப்படுகிற அளவுக்குப் பிரமித்தான். ஒருநாள்-
காலை ஏழு மணிக்கு மேலாகிவிட்டது. வேர்க்க விறுவிறுக்க அறுத்துக் கொண்டிருந்த லட்சுமி, தனது நிரையை எல்லோருக்கும் முந்தி அறுத்து முடித்துவிட்டு, முதல் ஆளாகச் சாப்பிடப் புறப்பட்டாள். தூக்குச் சட்டிகள் வைத்திருந்த இடத்துக்கு வந்தாள்.
தன் சட்டி என்று நினைத்துத் திறந்தாள். சோறு கெட்டுப் போயிருந்தது.
கொதிக்கக் கொதிக்க உள்ளே சோறு வைத்து மூடியிருக்கிறார்கள். புழுங்கி வியர்த்துக் கொட்டியிருந்தது. சாப்பிட ஆகாது. சாப்பிட்டால் ‘வாயாலே, வயித்தாலே’ போகும். அதாவது வாந்தி பேதி.
சட்டியைத் திறந்தபிறகுதான், அது கொத்தன் தூக்குச்சட்டி என்று தெரிந்தது. பாவம், தாயில்லாதவன், இவனோட அய்யாதான் சமையல். அவர் ஆக்கிவைத்த சோறுதான். பசியோடு ராத்திரி வரைக்கும் ஒரு மனுசனாலே எப்படி வேலை செய்ய முடியும்?
தாய்மைத் தன்மையுள்ள பெண்மை உணர்ச்சி. இரக்கத்தில் நனைந்து மனசே சங்கடப்பட்டது. வேறு எதையும் சிந்திக்கவில்லை. அவன் சோற்றைக் கீழே கொட்டிவிட்டு, தனது சோற்றில் பாதியை அந்தச் சட்டிக்குள் வைத்து மூடினாள். மீதிச் சோற்றைக் கரைத்துக் குடித்துவிட்டுப் புறப்பட்டாள். எல்லோரும் சாப்பிட கூட்டமாய் வந்தனர்.
“அதுக்குள்ள சாப்பிட்டாச்சா…? துடியானவதான்டி நீ.’
இவள் தலையாட்டினாள். இவளைக் கடந்து பின்சென்ற அவர்களின் இரைச்சல். கேலியும் கிண்டலுமாய் சிரிப்புச் சத்தங்கள். கோபமாய்க் கத்துகிற சத்தங்கள். கோபத்தைப் பொருட்படுத்தாமல், சீண்டி விளையாடுகிற இளமைச் சத்தங்கள்.
எல்லோரையும் சாப்பிட அனுப்பிவிட்டு, கடைசியில் வந்த கொத்தனை, பொழியில் எதிர்கெண்டாள் லட்சுமி. மனசுக்குள் தயக்கம். என்ன சொல்வானோ…எப்படி நினைப்பானோ…
“உங்க சோறு வேர்த்துப் போச்சு.” கூச்சத்தில் தலை தாழ்த்திக் கொண்டாள்.
“சாப்புட ஆகாதா?”
“சாப்புட்டா…வாயாலே… வயித்தாலே போகும். அதான் கீழே கொட்டிட்டேன்.”
“ஐயய்யோ! எனக்கு?”
“ஏஞ் சோத்துலே பாதியை உங்க சட்டியிலே வைச்சிருக்கேன்.”
“ஒனக்கு?’
“சாப்பிட்டுட்டேன்.”
அதற்குமேல் அவளால் நிற்க முடியவில்லை. அறுத்துப் போட்டதை, அரித்துக் கட்டுவதற்குப் போய்விட்டாள்.
செல்வராஜ்,அப்படியே நெக்குருகிப் போய்விட்டான்.
பசியறிந்து சோறு தருகிற- முகம் பார்த்து ஆறுதல் சொல்கிற- ருசியறிந்து பதறிப் பதைத்து தயார் செய்து பரிமாறுகிற அம்மாவை- இவன் பார்த்ததில்லை. தாய்மையின் பாசத்தை – பரிவை-இவன் அனுபவித்ததேயில்லை. தாய்மை ததும்புகிற இந்தப் பெண்மையின் மிருதுவான காரியம், அவன் நெஞ்சின் ஆழத்தைத் தாக்கி உலுக்கிவிட்டது.
அக்கறைக்குரியதாகப்பட்ட இதயத்தில், இந்த உணர்ச்சிதான் வருமா? அன்பு செலுத்தப்பட்டவனின் மனசு, இப்படித்தான் நெகிழ்ந்துபோகுமா? மனசையே நனைத்து ஈரப்படுத்தி- குழைத்துவிட்ட இந்தச் சின்ன விஷயம், அவனைத் திக்குமுக்காடச் செய்தது.
கோடையில் பெருமழையைக் கண்ட மானாவாரிச் சம்சாரியைப் போல, ஆச்சரியத்தில் தவித்தான். ஆனந்த நதியின் மோதலில் திகைத்தான்.
தன்வசம் இழந்துவிட்டான்.
அவளது சுறுசுறுப்பான உழைப்பைக் கண்டு பிரமித்திருந்த அவன், இயல்பான தாய்மையன்பு செலுத்த முடிகிற இந்தக் கனிந்த இதயத்தை தொட்டுணர்ந்த அனுபவத்தில்… இனம் புரியாத மர்ம உணர்ச்சிகளுக்கு ஆளாகிவிட்டான். கனவுகள், அவன் அனுமதியில்லாமலேயே பூத்துச் சிரித்தன.
அன்று அவன் நன்றியோடு பார்த்த ஈரப்பார்வையை, லட்சுமி பெருமிதமாய் ஏற்றுக்கொண்டு கூச்சமாய் சிரித்தாள். அதுவே மோகப் பார்வையாக பரிணமித்தது… அந்தப் பங்குனியிலேயே இந்தப் பண்ணைக்காரர் புதிதாக டிராக்டர் வாங்க, டிரைவராகி விட்டான். அது மட்டுமல்ல, விவசாயம் முழுவதையும் கவனித்துக்கொள்கிற மேற்பார்வையாளனாக – நம்பிக்கைக்குரியவனாக ஆகிவிட்டான்.
இப்போதெல்லாம்…
இவர்கள் கண்களுக்கு பாஷை பேசுவது இயல்பாகிவிட்டது. வாய்பேசிய வார்த்தைகள் காற்றில் கரைந்துவிட, உணர்வுகள் மட்டுமே மனசில் உரைகின்றன.
லட்சுமியின் நடையில், புதிதாகத் தெரிகிற துள்ளல். சேலை கட்டுவதில் தனிக் கவனம். ஜாக்கெட் எடுத்துப் போடுவதில், கலர் பொருத்தம் கண்டுபிடிப்பதற்குள் திணறிப்போகிறாள். கண்களில் நிரந்தரமாக ஜொலிக்கிற மின்னல். கனவுகளைக் குழைத்துப் பூசியது போல முகத்தில் இன்ப மலர்ச்சி. பருவக்கிளர்ச்சியின் ஆர்ப்பரிக்கிற அலைகள் உறைந்து உருப்பெற்றதுபோல, உடம்பெல்லாம் ஒரு மெருகு, மிருதுவான ஒரு புதிய வெளிச்சம்.
இரவுகளில் நெஞ்சுக்குள் வந்து, லட்சுமியின் உறக்கத்தைப் பறித்துக் கொள்கிற செல்வராஜ். டிராக்டரை ஓட்டுகிறபோதே அவன் நினைவுகளை எங்கோ இழுத்தடித்து விளையாடுகிற லட்சுமி. தண்ணீர் எடுக்க வரும் லட்சுமியோடு புன்னகை பாஷையில் பேசிக்கொள்வதற்காகவே, மாலைகளில் மடத்துத் திண்ணையில் தவம் கிடக்கிற செல்வராஜ். இவனை நேரில் பார்த்து, நாலு வார்த்தைகள் பேசி, உணர்வுகளைப் பரிமாறிக் கொள்கிற தவிப்புக்காகவே… இவன் வேலை செய்கிற பண்ணைக்கு பதிவாக வேலைக்கு வருவது என்று ஆக்கிக்கொண்ட லட்சுமி.
அப்படிப் பார்த்து, பேசிச் சிரித்து, மனம் மயங்குகிற இன்பக் கணத்தில், உலகமே ஒரு பொய்யாகத் தோன்றி புகையாகக் கலைய, இவர்கள் மட்டுமே இவர்களது உலகமாய்த் தோன்றுகிற வினோதப் பிரேமை…
பார்க்காத நிமிஷங்கள் யுகங்களாகக் கனத்து, மனசை வதைக்கிறது. ஸ்பரிசித்து பேசிய நிமிஷங்கள், யுகங்களைத் தாண்டி நீடித்து நிலைக்கிற இன்ப உணர்ச்சியாக மனசுக்குள் தோன்றி, மீண்டும் மீண்டும் அந்தச் சந்திப்புக்காக ஏங்கி ஏங்கித் துடிக்கிற இளமை இதயங்கள்…
லட்சுமிக்குள் பரபரப்பு. காந்த இழுப்புக்கு ஆட்பட்ட இளமைத் துடிதுடிப்பு. அவசர அவசரமாய் சடையைப் பின்னிப் பின்னுக்குத் தூக்கி வீசினாள். பின்பக்கமாய் கையை நீட்டி, சடையை லேசாக இழுத்து முதுகோடு படியவைத்தாள்.
ஹேர்பின்களை எடுத்து, மயிர்க் கற்றைகளில் திணித்து சரி செய்தாள். முகத்தைக் கழுவி, உள் பாவாடை நுனியால் அழுந்தத் துடைத்தாள். ஈரத்துணியில் சுற்றி வைத்திருந்த பூவை எடுத்து கச்சிதமாக வைத்தாள். கையகலக் கண்ணாடியில் உற்று உற்றுப் பார்த்து பொட்டு வைத்துக் கொண்டு, உதட்டைப் பல்லால் கடித்து ஒரு ஈரக்கனிவை வரவழைத்தாள்.
“எம்மா, சோறு வைச்சிட்டீயா?”-கூப்பாடு போட்டாள்.
“என்னடி,இப்படிப் பறக்கே? விடிஞ்சும் விடியாம் இந்தப் பறப்பா?”
“வேலைக்குப் போகணுமா, வேண்டாமா?”
“போனாலும்… இந்தக் கூத்தா ? எதுக்குத்தான் இப்படித் துள்ளுறே?”
“அப்பச் சரி… நா வேலைக்குப் போகலே.”
“இப்ப நா என்ன சொல்லிட்டேன்? கோவிச்சுக்கிட்டே ரொம்பத் துள்ளாதேடி. துள்ளுற மாடு பொதி சுமக்கும்.”
”துள்ளாத மாடும் பொதிதான் சுமக்கும். பொம்பளைக கதியே அதுதான்.”
”வாயைப் பாரு. ரொம்ப நீளுதடி. வந்து சாப்புடு.”
லட்சுமிக்குள் செல்வராஜின் புன்சிரிப்பு. கறுத்த முகத்தில் கூச்சமாய் சிரிக்கிறபோது துல்லியமாகத் தெரிகிற பல்வரிசை. மனசைச் சுண்டியிழுக்கிற குறும்பான ஆழ்ந்த பார்வை. டக்கரில் (டிராக்டர்) அவன் ராஜாவைப்போல உட்கார்ந்துகொண்டு, கிராமத்துப் புழுதியைக் கிளப்பிக்கொண்டு ஓட்டுகிற கம்பீர்யம்.
மயங்கித் திளைத்த மனசின் பரபரப்பு உடம்பெல்லாம் பரவ, அது கால்களுக்கும் புரிய… வேகமாய் நடந்தாள், வயல்காட்டுக்கு.
வயல்காட்டுப் பருத்திக்குள் களைவெட்டு நடந்து கொண்டிருந்தது. நிறைய பெண்கள். கிழவிகளும், குமரிகளுமாய், குசுகுசுத்த பொரணிப் பேச்சுக்கள். நையாண்டிகள். வேலிக்காட்டு மறைவில் ஒதுங்கிய பறவைகள் பற்றிய ரகசியங்கள்…
எதிலும் பட்டுக்கொள்ளாமல் எல்லாரையும் முந்தி வெட்டிக்கொண்டு போகிறாள் போகிறாள் லட்சுமி. இறுகிப்போன வயல்காட்டுத்தரை, சுரண்டியை எத்துகிறது. உதறுகிற சுரண்டியை அழுத்தி வெட்டினால்தான் புல்லும் சாகும்; புழுதியும் புரளும்.
நிமிராமல் வெட்டிக்கொண்டு போகிற லட்சுமிக்கு, கையெல்லாம் வலிக்கிறது. மூக்கு நுனியில் தொங்குகிற வியர்வை முத்து, அவள் அசைவிலேயே சிதறி தரையில் விழுகிறது. கன்னமெல்லாம் வியர்வைக் கோடுகள். காய்ந்த உப்பு.
பம்ப்ஷெட் ரூமில் செல்வராஜ் இருப்பான். மதியக் கரண்டு. கரண்டு வந்தவுடன் நீர் பாய்ச்சுவான். மனசுக்குள் விசிலடிக்கிறான். மற்றவர்களுக்கு இரண்டு மூன்று பாத்திகள் கிடக்க, இவள் வெட்டி முடித்துவிட்டு,அடுத்த நிரையில் சுரண்டியைப் போட்டுவிட்டு-
“தண்ணி குடிச்சுட்டு வாரேன்” என்று ஒப்புக்குப் பொதுவாகச் சொல்லிவிட்டு, பம்ப் ஷெட் ரூமை நோக்கி நடந்தாள்.
“தண்ணி குடிக்கவா போறா? தம் பியைப் பாக்கப் போறா” முதுகுக்குப் பின்னால் கேட்ட கிசுகிசுப்பை, இவள் பொருட் படுத்தவில்லை.
இவளால் தண்ணி குடிக்காமல் இருக்க முடியாது. மனசுக்குள் தாகம். முகம் பார்த்து நாலு வார்த்தை பேச ஆசைப்படுகிற தவிப்பு, அவனது சிரிப்பு- கேலியை-குத்தலான கிண்டலை கேட்டு ரசிக்க ஆவல்படுகிற மனசின் துள்ளல். இவளது நடையில் அதே துள்ளல். பம்ப் ஷெட் ரூமுக்குள்-
குடத்தில் இருந்த தண்ணீரைக் குடித்தாள். செல்வராஜை கவனிக்காதவளைப்போலத் திரும்பினாள். அவள் கையைப் பிடித்து இழுத்தான்.
“ஏய்…”
“ந்தா…சும்மாயிருங்க. ஆளுக இருக்காக.”
“அவுக பாக்க முடியாது.”
“பாக்காட்டாலும்… நெனைப்பாக.”
சட்டென்று இழுத்தான்… திமிறிய அவளை, விடாமல் அழுந்த அணைத்து, இறுகத் தழுவி… அவள் உடம்பெல்லாம் வியர்வை நசநசப்பு.
கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு, லேசாகக் கடித்தான். ‘ச்சீய்…ச்சீ’ என்று மறுத்த உதட்டிலும் முத்தமிட்டான். அவளை விட்டதும்,
”த்தூ… த்தூ” என்று துப்பினான். முகத்தில் போலியான அசூயை.
துள்ளி விலகிக்கொண்டு “ஆளைப் பாரு ஆளை” என்று, செல்லமாய்க் கடிந்துகொண்ட லட்சுமி, ‘என்ன?’ என்பதுபோல கண்ணால் கேட்டாள்.
குறும்பு அவன் கண்களில் மின்னியது.
“முத்தம்னா இனிக்கும்னு சொல்வாக. இதென்ன ஒரே உப்புக்கரிப்பு?”
கோபித்துக்கொண்டு அடிக்கக் கையை ஓங்கினாள். ‘மூஞ்சைப்பாரு மூஞ்சை” என்று பழிப்புக் காட்டினாள். அவன் சுதந்திரமாய்ச் சிரித்தான்.
”காக்காக்களுக்கு உப்புக் கரிக்கத்தான் செய்யும்” என்று பதிலுக்கு, அவன் நிறத்தைச் சாடினாள்.
“அம்மா தாயே, சுண்டுனா ரத்தம் வர்ர சிவப்பா, நீ ? நா கட்டெறும்பு நிறம். நீ சித்தெறும்பு நிறம், அம்புட்டுதானே வித்தியாசம்?”
”கட்டெறும்புக்கும், சித்தெறும்புக்கும் ஒத்துவராது.”
”நாம ஒத்துமையா காலம் பூராவும் வாழத்தானே போறோம்.” ‘ஆசைப்பட்டா மட்டும் போதுமா? காரியம் ஆக வேண்டாமா?”
“ஏன்? ஒன்னை எனக்குக் கட்டிக்குடுக்க மாட்டாகளா? நா எதுலே குறை?’
“உங்களுக்கு காடுகரை இருக்கா? காலமெல்லாம் ஒரு வீட்லே கைகட்டி நிக்கிற கூலிப் பொழப்பு தானே?’
“நீங்க மட்டும் என்ன வாழ்றீகளாம்?”
“நா கூலி வேலைக்கு வந்தாலும், எங்கய்யா சம்சாரி. காடு இருக்கு. கிணறு இருக்கு. பரம்பரை வீடு இருக்கு.’
“நா ஒன்னைக் கொத்தாம விடப்போறதுல்லே. உனக்குத் தெரியுமா லட்சுமி? கீழக் காட்டுல மூணு குறுக்கம் நிலம் விலை பேசியிருக்கேன். அடுத்த மாசம் பத்திரம் பதியப்போறேன்.’
“நெசமாவா…”
“ஆமா…ஐயாவை லேசுன்னு நெனச்சியா?”
“ராசாதான். சரி.. சரி… நா களை வெட்டப் போறேன்.”
“இன்னும் கொஞ்சம் தண்ணி குடிச்சுக்கோ…” என்றான் அர்த்தமுள்ள தாபத்துடன்.
“ஆசையைப் பாரு, தண்ணி உப்புக் கரிக்கும்” என்று அர்த்தத்துடன் பதில் கொடுத்துவிட்டு, கேலிச் சிரிப்பு கலகலக்க ஓட்டம் பிடித்தாள்.
அவனும் அசட்டுத்தனமாய்ச் சிரித்துக்கொண்டான்.
மானைப்போலத் துள்ளித் துள்ளி அவள் ஓடுகிற ஓட்டம். மனசுக்குள் தீ மூட்டுகிற அவளது சுறுசுறுப்பு. உழைப்பை நேசிக்கிற அவளது பண்பு. விட்டுக்கொடுத்து ஒத்துப்போகிற மனப்பாங்கு. இளமை. அழகு. கபடமோ, பாசாங்கோ இல்லாத வெளிப்படையான அவளது மனசு. கேலி, கிண்டல், வசவுகள்…
இவனை மயக்கிக் குழைய வைத்த, அவளது, மோக ராகங்கள்.
பச்சைப் பசேலெனப் படர்ந்திருக்கிற பருத்திச் செடிகளுக்குள், லட்சுமி குதித்துக் குதித்து ஓடுவதையே இமை தட்டாமல் பார்த்தான். மண்ணில் கால் பாவாமல் ஒரு தேவதை மிதந்து செல்வதைப்போல… இவளுக்கு மெதுவா நடக்கவே தெரியாதா…?”
உள்ளுக்குள் குறுநகைத்துக் கொண்டான்.
உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் லட்சுமி. மனசுக்குள் செல்வராஜ் ‘கிச்சலம்’ காட்டிக் கொண்டிருந்தான். சிரிக்காமல் இருக்கவும் முடியாமல், சிரித்து விடவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.
அம்மாவிடம், அய்யா பேசுகிற சத்தம்:
“நாளைக்கு ராசகுலராமன் போறேன், பத்திரம் பதியுறதுக்கு.”
”யாருக்கு?”
“நம்ம செல்வராஜ் மாப்புள்ளைதான் நிலம் வாங்கியிருக்கார். அவருதான் கூப்புட்டார். வாறேன்னு சொல்லிட்டேன்.”
“இங்க கிடக்குற வேலையை யாரு பாக்குறது?”
“அடக் கிடக்கட்டுமா. மாப்புள்ளை நல்ல பையன். சின்ன வயசிலேயே எம்புட்டு அக்கறை. பாடுபடுகிற ஆசை. நாலு காசு சேத்து வைக்கணும்ங்கிற பொறுப்புணர்ச்சி. இந்தக் குணத்துக்காக வாவது கூடப் போகவேண்டாமா?”
அய்யாவின் வெள்ளந்தியான வார்த்தைகள். லட்சமியின் மனசுக்குள் பூக்களை அள்ளி அள்ளித் தூவின. சந்தோஷ நதிகளாக அவளுள் பெருக்கெடுத்தோடி, உணர்வுகளையெல்லாம் சிலிர்க்கச் செய்தன.
தங்கள் கல்யாணத்திற்கு அவர் போடுகிற அட்சதை அரிசிகளாக, அந்த வார்த்தைகள். கனவுகளில் நனைந்து புல்லரித்துப் போனாள். லட்சுமியின் மனசெல்லாம் நந்தவனமாய், பூக்களின் வர்ணப் போரொளி. நம்பிக்கை நாற்றுகளுக்கு நீர் பாய்ச்சுகிற நினைவுகள். ‘நாளைக்கு இதை அவர்கிட்டே சொல்லணும்.’ ஒரு மாதத்திற்குப் பிறகு-
அய்யா,அம்மாவிடம் சொன்னார்:
“சிவகாசியிலேருந்து நம்ம சின்னச்சாமி வந்துருந்தான். நம்ம லட்சுமிக்கு நல்ல இடம் ஒன்னு இருக்குன்னு சொன்னான்.”
“நீங்க என்ன சொன்னீக?”
லட்சுமி,சட்டென்று அங்கே உற்பத்தியானாள்.
“எனக்குக் கல்யாணமும் வேண்டாம். மாப்பிள்ளையும் பாக்க வேண்டாம்”- வெடுக்கென்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டாள்.
திகைத்துப்போன அந்தக் கிழடுகள், அந்த வார்த்தைகளுக்கு அவர்கள் அகராதிப்படி அர்த்தப்படுத்திக்கொண்டனர்.
தனிமையில் அம்மா, இவளை நோண்டிப்பார்த்தாள். அன்பான வார்த்தைகளால், பரிவான சொற்களால், மனசின் மூலைகளைத் துழாவினாள். இவளும் செல்வராஜைப் பற்றி அரைகுறையாகச் சொல்லிவிட்டாள்.
அய்யா பூகம்பமாய் வெடித்து, பூமிக்கும், ஆகாயத்துக்குமாய் குதிப்பாரோ என்று அம்மா பதறிப் பதைத்தாள். நல்ல வேளை அப்படியொன்றும் ஆகிவிடவில்லை. ரெண்டு நாட்களாக வீட்டுக்குள் ஒரே குசுகுசுப்பாகக் கிடந்தது.
அய்யா சம்மதித்துவிட்டார். செல்வராஜ் அய்யாவும்கூடத் தலையை ஆட்டி ஆமோதித்துவிட்டார்.
“ஏதோ… பொம்பளையில்லாம இருண்டு கெடக்குற வீட்லே, லட்சுமி வந்து விளக்கேத்தி வைச்சா… எனக்கும் நிம்மதிதான்.”
லட்சுமியும், செல்வராஜும் சந்தோஷத்தில் தலை கால் புரியாமல் தவித்தனர். கனவுகள் இத்தனை சீக்கிரமாய் – சுலபமாய் கைசேர்ந்ததில் அவர்களுக்கே ஆச்சர்யம். ஆனந்தக் கற்பனை வானில் இன்பச் சிறகசைத்தனர்…
ரெண்டு தகப்பனார்களும் ஒரு நாள், ‘பொருத்தம் பார்க்க’ பக்கத்து ஊர் ஜோஸ்யரிடம் போயிருந்தனர். பிரபலமான ஜோஸ்யர். மதுரையிலிருந்துகூட இந்தக் குக்கிராமத்துக்கு ஆட்கள் வருகிற அளவுக்குப் புகழ் வாய்ந்தவர். அவர் சொன்ன ஜோஸ்யம் எதுவுமே பொய்யானதில்லை என்ற நம்பிக்கையில், கிராமத்து ஜனங்கள்’ தெளிவாக இருந்தனர். இவரைவிடத் தெளிவான ஜோஸ்யர் உ உலகத்திலேயே கிடையாது என்ற வைரம் பாய்ந்த நம்பிக்கை.
அன்று ராத்திரி வந்து அய்யா சொன்ன செய்தி, ஆயிரம் தேள்களாக அவளைக் கொட்டியது போலிருந்தது.
பெயர் பொருத்தம் – நட்சத்திர பொருத்தம் எதுவுமே அமையவில்லையாம். அதை மீறி கல்யாணம் செய்தால்… இருவரில் ஒருவருக்கு மரணம் சம்பவிக்குமாம். இரண்டு குடும்பத்துக்குமே பீடையாம்.
செல்வராஜ் கொதித்தான்:
“இதெல்லாம் என்ன ஐயா, கூறுகெட்ட பேச்சு? அந்த ஜோஸ்யர்கிட்டே போய், ‘ஒமக்கு என்னைக்குச் சாவு வரும்’னு கேளுங்க.’தெரியாதும்’பார். அவனவன் விதியைக்கூட தெரிஞ்சுக்காத ஜோஸ்யர்க, நம்ம விதியைப் பத்திச் சொல்றது, என்ன வேதவாக்கு? இதை நம்புறது, வெவரம்கெட்ட பைத்தியக்காரத்தனம். நா பைத்தியக்காரனா இருக்கமாட்டேன். நா தாலிகட்டுனா, லட்சுமிக்குத்தான். இல்லேன்னா இல்லே…!
இன்னும் எம்புட்டோ சொல்லிப் பார்த்தான். தாவிப் பார்த்தான். தகராறு செய்தான். நாட்கணக்கில் சாப்பிடாமல் இருந்து பார்த்தான். அவனது அய்யா, ‘கட்டன் ரைட்’டாகச் சொல்லிவிட்டார்.
“ஜோஸ்யக்காரர் ‘இது கெணறு’ன்னு தெளிவா சொல்லிட்டாரு. அதுக்குப்பெறகும் அதுலே விழுந்து சாகுறது கிறுக்குத்தனம்.நீ லட்சுமிக்குத்தான் தாலி கட்டணும்னா ஒன்னு செய், நா செத்த பிறகு, கருமாதியை முடிச்சிட்டு தாலியைக் கட்டு. ரொம்ப அவசரம்னா… என்னைக் கொன்னுட்டு இந்தக் கல்யாணத்தை நடத்திக்கோ…”
எந்த அய்யாவைக் கொல்றது? இவரையா? அம்மா செத்தபிறகு, ஒற்றை மகனுக்காக வாழ்க்கையையே பாலைவனமாக்கிக்கொண்ட இவரையா? இன்றுவரை சமையல் கட்டுக்குள் – அடுப்புக்குள் விறகாக எரிந்து கருகிக்கொண்டிருக்கிற இந்த அய்யாவையா? இந்த மனுச அற்புதத்தையா?
அவன் மனசால் நடுங்கிப் போனான். ஆனால் ஒடுங்கிக்கொள்ள முடியவில்லை.
லட்சுமி அழவில்லை. கதறவில்லை. ஒரு சொட்டுக் கண்ணீரைக் கூடச் சிந்தவில்லை. உறைந்துபோன சோகச் சிலையாக ஒடுங்கிப் போனாள். அந்த இறுகிப்போன மௌனத்தைக் கண்டுதான் அம்மா நடுங்கினாள்.பயந்து பயந்து அழுதாள்.
“ஒரு மூச்சாவது அழுது முடிம்மா” என்று சொல்லிப் பார்த்தாள்.
ஊஹும்! அழவில்லை. அது மௌனம் உறைந்து இறுகிப்போன மௌனம். கருமருந்து கிட்டித்த வேட்டுபோல, அபாயமான மௌனம். அம்மாவின் பயம் பொய்யாகிவிடவில்லை.
‘லட்சுமி அரளிக் கொட்டையை அரைத்துக் குடித்து விட்டாள்’ என்ற செய்தியில், ஊரே பதறிப் பதைத்தது. அல்லோல கல்லோலப்பட்டது. ‘அடப் பாதரவே, இப்படியும் கொடுமை உண்டுமா’ என்று கலங்கிக் கரைந்தது.
‘வண்டியைப் பிடி’, ‘மாட்டைப் பிடி’ என்று கிராமமே சிறகு கட்டிப் பறந்தது. சுறுசுறுப்பாக இயங்கியது.
டவுன் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய்ச் சேர்த்து, பிழைக்க வைத்து விட்டனர். ஒரு மாதம் கழித்து, ஊருக்குத் திரும்ப வரவழைக்கப்பட்டாள்.
செல்வராஜ், எங்கோ ஓடிப்போய்விட்டான் என்ற செய்தி கிடைத்தது.
அதற்குப் பிறகுதான் ‘கோ’வென்று கதறியழுதாள். வெடித்துச் சிதறினாள். ஜோஸ்யக்காரனைச் சபித்தாள். அடிபட்ட பறவையாகத் துடித்தாள்.
நாளொரு நிகழ்ச்சியும், பொழுதொரு உணர்ச்சியுமாக காலமகனின் துரித ஓட்டத்தில் காயங்கள்- ரத்தமெல்லாம் உலர்ந்து, வாடி, வடுக்களாய் மாற… வாழ்க்கையை உணர்ந்து சிலரும், யந்திரமாய் பலருமாய் வாழ்ந்து கழிக்க-
இரண்டு வருஷம் கழித்து, அந்த ஊருக்குப் பெண் கேட்டு வந்தான் சந்தானம்.
…அடுப்பங்கரைக்குள் யந்திரமாகிவிட்ட -பழுதான பழைய யந்திரமாகிவிட்ட லட்சுமி,புகை மூட்டத்திற்குள் மூச்சு முட்டிப் போயிருந்தாள்.
சந்தானம் மறுபடியும் அழைக்கிற சத்தம்: “லட்சுமி…”
என்ன என்று கேட்கக்கூட மனசில் உயிரில்லை. ஏதோ புருஷன் – ஏதோ உறவு-ஏதோ குடும்பம். உயிரில்லாத பிரேத வாழ்க்கை. மனசின் உணர்ச்சிகளற்ற யந்திர வாழ்க்கை. ஊருக்காக- உறவு முறைக்காக – பிறருக்காக -இவள் இவளாக இல்லாமல், பொய்யாக வாழ்கிற மலட்டு வாழ்க்கை.
பத்து வருஷத்திற்கும் மேலாக வாழ்ந்துவிட்ட தாம்பத்யத்தில், மனசைக் குளிர்ச்சியாக்குகிற உணர்ச்சிகள் இருந்ததே இல்லை. ஈரப்பதமே இல்லை. பள்ளிக்கூடம் போயிருக்கிற இரண்டு புள்ளைகள்தான், இவளுக்கு நிஜமானவை. நிஜமாக இன்னும் இவளை உயிர் வாழ வைத்துக்கொண்டிருப்பதே… அந்த ரத்த பந்தங்கள்தான்.
மீண்டும் பலமாகக் கூப்பிடுகிற சந்தானம்.
“லட்சுமீ…ஏய் லட்சுமீ… இங்க வந்து பாரேன். உங்க ஊர்க்காரர் செல்வராஜ் அண்ணன் வந்துருக்காரு.’
உடலெங்கும் பற்றிக்கொண்ட தீயில், உயிர் பெற்றுவிட்டதா உயிர்? முகத்தில் குளிர் நீர் பீய்ச்சியதைப்போல, மனசெல்லாம் குலுங்கிப்போன அதிர்ச்சி.
வசந்தகாலத் துளிர்களாக அவள் முகத்தில் சட்டென்று விகசித்த மலர்ச்சி. யந்திர கதியிலல்ல-பறவையின் உயிர்ப்பான வேகத்தில் வாரிச் சுருட்டிக்கொண்டு வெளியே பாய்ந்து வந்தாள்.
திண்ணையில் உட்கார்ந்திருந்தான் செல்வராஜ். பக்கத்தில் எட்டு வயதுப் பெண் குழந்தை. வாழ்வின் கால்களால் உதைபட்டவனைப் போல, குன்றிப்போயிருந்தான் அவன்.
“எப்ப வந்தீக…?”
“இப்பத்தான்.”
”உள்ளே வாங்க. உள்ளே வந்து உக்காரச் சொல்லுங்க.”
புயலாக உள்ளே ஓடினாள். அடுத்த நிமிஷத்தில் எல்லோருக்கும் காபி கொடுத்தாள். சந்தானம் திகைத்துப்போனான்.
அவன் பார்த்தறியாத சுறுசுறுப்பில் லட்சுமி, அவன் பார்த்தறியாத மலர்ச்சியில் லட்சுமி. ஒரு நாள்கூட அனுபவித்தறியாத ஒளி,மனைவியின் கண்ணில்.
திகைப்பு மாறாமல், மனைவியையே பார்த்தான். பார்த்துக் கொண்டிருக்கிற அளவுக்கு, ஒரு இடத்திலா நிற்கிறாள்? வசந்த காலத்துச் சிட்டுக் குருவியைப்போலப் பறந்து பறந்து, மின்னலாய் தோன்றித் தோன்றியல்லவா மறைந்துகொண்டிருக்கிறாள்!
திகைப்பை மறைத்துக்கொண்டு, செல்வராஜிடம் ஆரம்பித்தான் சந்தானம்.
– செம்மலர்.1986.
– மேலாண்மை பொன்னுச்சாமி கதைகள் (பாகம்-2), முதற் பதிப்பு: 2002, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
