கரையெல்லாம் செண்பகப்பூ

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 12,541 
 
 

(1980ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 7-8 | அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-12

அத்தியாயம் – 9

கல்யாணராமனுக்கு இருட்டில் சிரிப்பு வந்தது. ராத்திரி மௌனத்தில் ‘எப்படிப்பட்ட பெண் இவள்?’ என்று யோசித்தான். தூக்கம் வரவில்லை. கித்தாரை எடுத்து வைத்து கொண்டு கிளாஸிகல் வாசிக்க, “ஏய்! ஷட்… அ அ அ…ப்” என்று சினேகலதாவின் குரல் கேட்டது. மருதமுத்து வராந்தாவில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். நான் நேராக நடந்து அவள் அறைக்கதவைத் தட்ட முடியும். ‘சினேகலதா ஹௌ எபவுட் இட்!” 

“தப்பு! ம்ஹும் கூடாது. தூங்கு… தூங்கு…!” 

டிராக்டர் நிறுத்தியிருக்க, மருதமுத்துவும் சினேகலதாவும் வெள்ளியும் கல்யாணராமனும் அதைச் சுற்றி ஓடிவர பெரியாத்தாவும் ரத்தினாவதியும் ‘வேகமா வேகமா’ என்கிறார்கள். இரைக்கிறது. ரத்னாவதி சவுக்கைச் சொடக்குகிறாள். ‘நிக்கக் கூடாது! நின்னா வேட்டியை உருவி விடுவாக’ என்கிறாள் பெரியாத்தா. கழுத்தில் சுருக்குக் கயிறு மாட்டி ரத்னாவதி தொங்க…’எப்படி இருக்கிறது?’ 

‘முதல்ல கொஞ்சம் வலிக்குது. அப்புறம் போகப் போகப் பழகிப் போய்டுது. கால்தான் விலுக் விலுக்குனு அடிக்குது. கொஞ்சம் மூத்திரம் வருது’. 

வர, விழித்துக் கொண்டு விட்டான். வெளியே நிலா ஏறக்குறைய உச்சத்தில் இருந்து காடு மலையெல்லாம் முலாம் பூசியிருந்தது. கல்யாணராமன் கதவைத் திறந்து தாழ்வாரத்தில் வெட்ட வெளியில் நின்று கொண்டு பிளாடரைக் காலி செய்தான். புளியமரம் நின்று பெரிதாகப் பரவி, அதற்குள்ளிருந்து, ‘கொட்டு கொட்டு’ என்று ஆந்தப் பிள்ளை கூப்பிட்டது. சின்னச் சின்ன சப்தங்களுடன் அவ்வப்போது மெலிய காற்றில் சலித்துக் கொண்டது மரம். 

ரத்னா! சவுக்கடிபட்டு மாண்டுக்கிட்டு மாண்ட ரத்னா!

அதோ, அந்த இருட்டில், “கல்யாணராமன்! வா! என் கதை சொல்லுதேன்! வா! வாய்யா சொல்லுதேன். நான் சீரளிஞ்சதைச் சொல்லுதேன்.” 

“திருச்செந்தூர் ஊர்லே 
தேரு நல்ல அலங்காரம்
தேவடியாள் கொண்டையில
பூவு நல்ல அலங்காரம்
காலையிலே கம்பிவேட்டி 
மத்தியானம் மல்லுவேட்டி 
சாயந்திரம் சரிகைவேட்டி
சந்தியெல்லாம் வைப்பாட்டி
மானத்துச் சூழ்ச்சியரே 
மழைக்கு இரங்கும் புண்ணியரே
வைப்பாட்டி வைக்கப் போயி 
வந்ததய்யா பஞ்சம் நாட்டில்” 

அவள் சிரிப்பும் பாட்டும் எதிரொலித்தது மரத்திலா அல்லது மனத்திலா? 

கல்யாணராமன் மெதுவாக அருகே சென்றான். வால்ட்ஸ் சங்கீதம் ஒளித்தது. ஜமீன்தார் வீட்டு ஹாலில் பெரிய பார்ட்டியிலிருந்து சப்தங்கள் கேட்டன. இன்னும் அருகே சென்றான். யாரோ நடக்கிறார்கள். ரத்னா பேசுவதாவது? எல்லாம் பிரமை! இப்போது கேட்பது காலடியோசை! ஆள் நடமாட்டம்! தினம் இரவு வரும் அதே ஆசாமி! சப்தம் வருவது அந்த மரத்திலிருந்து இல்லை. மரத்தின் கிளைகள் தொட்டுக் கொண்டிருக்கும் மாடிப் பக்கத்தில், மெதுவாக மாடிக் கைப்பிடிச் சுவரிலிருந்து ஒருவன் மரக்கிளைக்குத் தாவி மெதுவாகக் கீழே இறங்க, ஏதோ ஓர் அசட்டுத் 

(88, 89ஆம் பக்கம் கிடைக்கவில்லை, உங்களிடம் இருந்தால் அனுப்பவும்)

“அந்தப் புளிய மரத்தில ஏதோ இருக்குதுங்க!” என்றான் கான்ஸ்டபிள். 

“புளிய மரத்தில் ஒரு…ம் கிடையாது. ராத்திரி ஒருக்கா வந்து பாத்துரு. சைக்கிள்ல லைட்டிருக்கா?” 

“வெள்ளி, சுடுதண்ணி ஒரு பாட்டில கொண்டுட்டு வந்துரு. அய்யா உடம்பு தொடைச்சுக்குவாங்க!” 

“நான் தகடா ரெண்டு பயலுவளை ராத்திரி காவலுக்குக் கூட்டியாரனுங்க. இனி வந்தாப் புடிச்சுரலாம். ஏட்டய்யா புள்ளை குட்டிக்காரரு. ஒண்ணு கிடக்க ஒண்ணு ஏதாவது ஆயிடுச்சுன்னா ரெண்டு சம்சாரமும் என்ன செய்வாங்க?” 

மணியக்காரர் அசம்பாவிதமாகச் சிரித்தார். கான்ஸ்டபிளும், மருதமுத்து! சும்மாக் கெட!” என்று அதட்ட, தங்கராசு “பைக்குள்ள என்னங்க- புங்கங்காயா?” என்றான். 

வெள்ளி சினேகலதாவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அந்த சம்பாஷணைகள் குழப்பமாகக் காதில் விழுந்தன. காப்பியை விழுங்கும்போது தொண்டை வலித்தது. ஜுரம் வரப்போகிறது. எப்போது அவர்கள் புறப்பட்டார்கள்? 

மாலை ஜுரம் எகிறியிருந்தது. சினேகலதா வந்து பார்த்தாள். கொண்டு வந்திருந்த ஸிபால்ஜின் எரித்ரோ பைஸின் என்று வர்ஜ்யா வர்ஜ்யமில்லாது விழுங்கினான். வைத்தியர் மணிக் கட்டைப் பிடித்துப் பார்த்து, “பித்த நாடி பேசுதுங்க. பட்னி போட்டுருங்க. இந்தச் சூரணத்தைத் தேனில கொளைச்சு சாப்பிடுங்க. கொஞ்சம் மஷ்டு வெளியவரும். சரியாப் போயிடும்” என்றார். சாப்பிட வில்லை. சினேகலதாவின் பர்ஃயூம் வாசனை உறுத்தியது. 


இரண்டாம் தினமோ, மூன்றாம் தினமோ சற்றுத் தெளிந்திருந்தான். அறை அலங்கோலமாக இருந்தது. காய்ந்த ரொட்டி, மாத்திரைப் பட்டைகள், சட்டியில் ஆறின வெந்நீர், மஷ்டு வைத்தியரின் பொட்டணங்கள், “சினேகலதா!” பதில் இல்லை. ஜூரம் சுத்தமாக விலகி இருந்தது. 

கைக்கடிகாரம் நின்றிருந்தது. பிற்பகலாக இருக்கலாம். பசித்தது. அறைக்குள் நடந்தான். நீண்ட சதுர அறையின் மேல்புரத்தில் சுவரோரத்தில் ஜமீன்காலத்து மர பீரோ பூட்டி தாழ்ப்பாள் கொக்கி எல்லாம் துருவேறியிருந்தது. பொழுது போகாமல் பீரோவுக்கும் கட்டிலுக்குமாக நடந்தான். பீரோவில் தாளம் போட்டுப் பார்த்தான். சுவருடன் ஒட்டியிருந்த பீரோவை நகர்த்திப் பார்த்தான். அதன்பின் ஒரு அறைக்கதவு தெரிந்தது. சற்று ஆர்வம் ஏற்பட்டு, மர பீரோவை முழுதும் நகர்த்தினான். சிறிய அந்தக் கதவு உட்புறம் தாளிடப்பட்டிருந்தது. அழுத்திப் பார்த்தான். உள்ளே ஏதோ உதிரும் சப்தம் கேட்டது. இடித்தான். ‘படக்’கென்று உள் தாழ்ப்பாள் பிராணனை விட்டது. கதவு ஒருக்களித்துத் திறந்து கொண்டது. உள்ளே ஏதோ தடுத்தது. சிரமப்பட்டு ஒரு ஆள் நுழைவதற்கு இடைவெளி பண்ணிக் கொண்டு அறைக்குள் எட்டிப் பார்த்தான்! 

மெல்லிய இருட்டு. மேலே ஒரு அறை. ஜன்னல் சொற்ப வெளிச்சம் தர, கண்கள் பழக அங்கே இருந்த கண்டா முண்டா சாமான்கள் தெரிந்தன. இரும்புக் கட்டில், தொட்டில், குமிழ் வைத்த அழகான நடைவண்டி; படங்கள்- இயற்கைக் காட்சி, ராமபட்டாபிஷேகம், வினோ ஒயிட்ரோஸ் சோப்பில் வெள்ளைக்காரி- என்று கதம்பமாகப் படங்கள். நடக்க இட மின்றி அறை முழுவதும் கன்னா பின்னா சாமான்கள், கட்டில் மேல் பலப்பல புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்களின் குப்பல்கள்; அவற்றைத் தொட, மூக்கில் புழுதி ஏறி, ‘அஸ்க்’ என்று ஒரு தடவை தும்மினான். சின்ன போட்டோக்கள். பத்து வயசுப் பையன் அவன் தம்பியுடன் மேல்நாட்டுத் தொள தொள உடை அணிந்து காமிராவைப் பார்த்து நாணமாக நிற்க, அவர்களில் ஒருவன் சினேகலதாவின் தகப்பனாக இருக்கலாம் என்று நினைத்தான். ரத்னாவதியின் சின்ன போட்டோ ஒன்றில் ஹாலில் தெரிந்த அதே பயப் பார்வை தென்பட்டது. புத்தகங்களில் ரத்தினபுரி ரகசியம், திகம்பர சாமியார், இங்கிலீஷ்- தமிழ் ஒக்கபிலேரி, மதனகாமராஜன் கதை. பத்மாவதி சரித்திரம், சூளாமணிவசனம்… பிரித்தான். ‘பின்பு திவிட்ட நம்பிக்கும் சுயம் பிரபை நங்கைக் கும் மங்கல மணநாள் இன்றென மங்கல முரச மெங்குமதிர வெறித்தனர். யாண்டு நோக்கினும் ஆடல் பாடலபிநயம் முதலியன நிகழ்ந்தன. மூடிவிட்டு நோட்டுப் புத்தகம் ஒன்றை எடுத்தான். பிரித்தான். ‘அசல் ரசீது ந.தேதி 19…ம் ஸ்ரீ…மீ … உ அடியிற் கண்டபடி ரூபாய்-அணா மாத்திரம் பெற்றுக் கொண்டேன்… வேறொரு நோட்டை எடுத்துப் பிரித்தான்.

“ரத்னாவதி, ரத்னா, ரத்தம்!” அருகில் செங்கல் சிவப்பில் ரத்தக்கறை. புரட்டினான். 

“எத்தனை நாள் முத்தம்மா? – ஒரே ஒரு வரி புரட்டினான்.

“வைரத்தைப் பொடி பண்ணி உட்கொண்டால், உடனே மரணம்”. 

மறுபடி ஒரே ஒரு வரிதான் பக்கம் முழுவதும்.

பிறிதோர் பக்கத்தில் அடர்த்தியாக எழுதியிருந்தது.

“எனக்கு எத்தனையோ வருசம் பின்னால் இதை வாசிக்கிறவர்கள் உண்டு என்றால் அவுகளுக்காக ஞாபகப்படுத்த ரத்னா எழுதிக் கொடுக்கும் சின்ன சமாசாரம்”. 

ரத்னாவின் எழுத்தா? ஆர்வம் மேலிட மேலே படித்தான்,

‘நான் பொறந்து வளர்ந்தது மேற்கே மேகலாபுரத்தில். சின்னப் பிள்ளையில எங்க வீட்ல காரில் அளைச்சுப் போய் படிப்பிச்சாங்க. ஒன்பது வயசுவரைக்கும் எங்க பாட்டி தங்கப் பேலாவில் சோறு ஊட்டுவாங்க. நாலு கிளாஸ் படிச்சதும் படிப்பெதுக்குன்னு விலக்கிப்பிட்டாங்க. புஷ்பவதியாறதுக் குள்ள கல்யாணம். திருக்கல்யாணம். இங்க வந்து பதினெட்டு வயசுக்குள்ள மூணு கர்ப்பம். தவறிப் பொறந்ததும் தப்பிப் பொறந்ததும் பொண்ணு பொண்ணுன்னு ஒவ்வொரு முறையும் உசிரை விட்டதும் நினைச்சுப் பார்க்க கடினமா இருக்குது. என் கண் முன்னாலேயே சாராயப் பானங்கள் ஏத்துக்கறதும் வெள்ளைத் தோல் மோகமும் சீட்டு – வைப்பாட்டிகளும் பார்த்தாச்சு. Rathna good girl. Rathna not happy. என்னை விட உயரம் அவரு. சாக்கடைகளைத் தேடிப் போனவரு. என் பெத்தோர்கள் கொடுத்த நகைகள்… 

“அய்யா, அய்யா!” என்று குரல் கேட்டுத் திடுக்கிட்டு நோட்டை எடுத்து மறைத்துக் கொண்டு வெளியில் வந்தான். 

“என்ன வெள்ளி இந்தப் பக்கம்?” 

“அவரு வந்தாரா?” 

“இல்லையே… காலைல இருந்தே மருதமுத்துவைப் பார்க்கலியே” 

“அம்மா?”

“இல்லையே!” 

வெள்ளி தயங்கினாள். கீழப் பார்வை பார்த்தாள். உதடுகள் துடித்தன. என்னவோ சொல்ல விரும்பினாள். 

“என்ன வெள்ளி?” 

“உடம்பு நேராயிடுச்சுங்களா?” 

“பரவாயில்லை… ஏன் ஒரு மாதிரி இருக்கே? அழறியா என்ன?” 

“அய்யா, அவரு என்னை மறந்துட்டாருங்க!”

“நீ என்ன சொல்றே?” 

“வராரு போறாரு, வாசலில் நிக்க மாட்டங்கறாரு. எப்ப பார்த்தாலும் அவளையே பத்திப் பேசறாரு. என்னங்க சகவாசம் இது? சமீன் பேத்தியா இருந்தா சதா அந்தச் சிறுக்கி பின்னாலேயே சுத்திக்கிட்டு இருக்கணுமா? குதிரை வாலிக்கருது போல நானிருக்கேன். குறத்தியைப் புடிச்சிக்கிட்டு அலையுறாரே! இங்கிலிசு கத்துத் தாராங்களாம். பொஸ்தவத்தை எடுத்துக்கிட்டு தோப்பாண்டை போவுறதும், சைக்கோளைப் போட்டுக்கிட்டு அந்தக் கூறு கெட்ட மனுஷன் சாமவழிப் போவுறதும் அவ சிரிக்கறதும் அவரு பதிலுக்குச் சல்லிசா சிரிச்சு பணியாரம் – வாங்கிட்டாரதும்… எனக்குப் பொறுக்கலிங்க. என்னதான் இவகிட்ட இருக்குன்னு இந்தா அலை அலையுதாரு? என்னை மறக்க ஏதோ பொடி போட்டுட்டாங்க.. சககளத்தில, மூதேவி!” என்று பத்து விரல்களையும் சொடுக்கி சினேகலதாவின் அறை வாசல் மேல் ஏவினாள். 

“வெள்ளி அந்தப் பொண்ணு அப்படி இல்லை!” 

“என்னங்க நீங்க? அது போட்டுக்கற சட்டையைப் பார்த்தீங்களா? எல்லாம் வெளியே தெரியுது. எப்பவாவது சீலை. உடுத்துதா சொல்லுங்க! அந்த வட்டக்காலையும் எலிக் கண்ணையும் வெச்சுக்கிட்டு ‘துருதுரு’ன்னு ஆம்பிளையாளுக்கு அலையுதே. அவருகிட்ட நீங்க புத்தி சொல்லிப்போடுங்க. ஊரு சனம் மொத்தமும் சிரிக்குது. அவரு செய்யுறது நல்லால் லேன்னு சொல்லிப் போடுங்க.” 

“அதை நீயே சொல்லிடேன் வெள்ளி” 

அவள் சிணுங்கினாள். “என்னைப் பார்க்கவே வரதில்லையே. மூணு நாளா அவ பின்னாலேயே சுத்திக்கிட்டிருக்காரே. நான் அந்தப் பொண்ணு வந்ததும் கேக்கத்தான் போறேன்.. ‘இத பாரம்மா! அத்தாப்பு வீடு கட்டி அதுல ரெண்டு ஜன்னல் வெச்சு எட்டிப் எட்டிப் பார்த்தாலும் என் புருஷன் என் புருஷன்தான்!” 

“புருஷனா?” 

“அவரு எனக்குத்தானணு பஞ்சாயத்தில தீர்மானமான விசயமில்ல! அவரை என் புருசனாத்தான் நினைச்சுக்கிட்டிருக்கேன். அவருதான் உறவைக் குறைக்கிறாரு. எல்லாம் இந்த சாணியுருண்டை செய்யற சிங்காரம். கேட்டுறத்தான் போறேன்” வெள்ளி சம்பிரமாகத் தாழ்வாரத்தில் உட்கார்ந்து கொண்டாள். உடல் நடுங்கியது. கண்களில் தயாரர்கக் கண்ணீர் வைத்திருந்தாள். தன் சங்கிலியை அடிக்கடி கடித்துக் கொண்டாள். அடிபட்ட புலியின் தன்மை தெரிந்தது. தன் புண்களை நக்கிக் கொண்டிருந்தாள். 

“இத பார் வெள்ளி! அந்தம்மா கொஞ்சம் வெகுளி. பட்டணத்துப் படிச்ச பொண்ணுங்க எல்லாம் இப்படித் தான் எல்லார் கிட்டேயும் சகஜமா பேசிப் பழகுவாங்க. இதை நீ தப்பா எடுத்துக்கக் கூடாது.” 

“தொட்டுத் தொட்டுப் பேசறதும் சினிமாக் கொட்டாய்க்கு அளச்சுட்டுப் போறதும்… ராத்திரி வராரு உடம்பெல்லாம் செண்ட்டு மணக்குது. வாடி! எங்கே போயிருவே? வூட்டுக்கு வந்துதான ஆவணும்!” 

தயக்கத்துடன் சொன்னான். “அப்படிப் பார்த்தா நான்கூட உன்கிட்ட அன்னிக்கு அசட்டுத்தனமா நடந்துண்டேன்” 

“அப்ப நான் என்ன செஞ்சன்? பட்டுனு ஒரு சொல்லில விலக்கிப்பிட்டன் இல்லிங்களா? எதுக்காக? இந்த ஆளுமேல இருக்கிற விசுவாசத்தாலதானே? அதே விசுவாசம் உனக்கு வேணாம்? அவதான் உம்மேல வந்து விளுதான்னா உம் புத்தி எங்கய்யா போச்சு? காத்த விரியன் மாதிரி ஏ..ன்னு சிரிச்சிக்கிட்டே ஓடுறியே! வரட்டும் தீர்த்து வெச்சுறலாம்” இப்போது ஏறக்குறைய தனக்குள்ளேயே பேசிக்கொண்டாள். “எனக்கும் எங்கப்பாரு எவ்வளவோ எடம் பார்ப்பாரு. பத்து விரலிலயும் மோதிரம் போட்டு மீசை வெச்சு வில்லு வண்டிக்காரங்க ஆம்பிளைங்க எவ்வளவு பேர் என்னைக் கேக்குறாங்க. தூக்கி எறியறதுக்கு எத்தனை நேரம்?” 

“தூக்கி எறிஞ்சுடேன்!’ 

“பாவி மனசு கேக்கலியே! எத்தனை நா உறவு!” 

கல்யாணராமன் பயப்பட்டான். அவர்கள் வந்ததும் வெள்ளி அனல் கக்கப் போகிறாள். இந்த எளிய பெண்ணின் உணர்ச்சிகள் மிக ஆதாரமானவை. சங்க காலத்தவை. காதல் பொறாமை. கைப்பொம்மை கவரப்பட்ட சின்னக் குழந்தையின் ஆத்திரம். மாலை மாலையாகக் கண்ணீர். மூக்கைச் சிந்தினாள். சைக்கிள் மணி கேட்டுக் கல்யாணராமன் துணுக்குற்றான். நல்ல வேளை பின்னால் உட்கார்ந்திருந்தாள் சினேகலதா. “ஒவ் ஓவ்!” என்று குதிரை வண்டிக்காரன் போல அவள் சொல்ல, பேக் பெடல் செய்து வேகத்தைக் குறைத்து வெள்ளிக்கு அருகே வந்து நிறுத்தினான் மருதமுத்து. காலர் வைத்த சட்டை அணிந்திருந்தான். பாண்ட் போட்டுக் கொண்டிருந்தான். சுருள் முடியைச் சீவியிருந்தான். 

“ஹாய் வெள்…ளி… ஸ்வீட் கர்ள்/” என்றாள். வெள்ளி இடுப்புப் புடவையைச் சுற்றி இறுக்கி முடிந்து கொண்டு, “இறங்குய்யா!” என்று அதட்டினாள். 

“என்ன வெள்ளி?” என்றான் சிரிப்புடன். 

“ஷி இஸ் வெரி மச் அப்ஸெட்.” 

“அம்மா, நீங்க பெரிய எடத்துப் பொண்ணு; இந்தாளை இப்படி ஊர் பூரா இளுத்துக்கிட்டு அலையறீங்களே… இது நல்லா இருக்கா?” 

ஸ்விட்ச் போட்டாற்போல் அந்த இடத்துச் சூழ்நிலை மாறியது. “வெள்ளி, த பாரு! யார்கிட்ட எப்படிப் பேசற புள்ள?”
 
“சும்மாருய்யா!” 

“இவனை இழுத்துக்கிட்டு நான் அலையறேனா?”

“ஆமாம்! இந்தாளை நான் கல்யாணம் கட்டிக்கப் போறேன்!”

“கட்டிக்க! கங்கராஜுலேஷன்!” 

“வெள்ளி!” – அதட்டல். 

“இவரோட நீங்க இப்படி அலையறது நல்லால்ல!”

“நான் இவரோட சுத்தறேனா! இது எந்த ஊர் நியாயம்?”

“தொட்டுப் பேசறதும் இளிக்கிறதும் தோப்பாண்டை ஒதுங்கறதும் எந்த ஊர் நியாயமுன்னு நான் கேக்கறேன்!” 

“லே! வெள்ளி! கிறுக்கு,மூதேவி, போட்டன்னா தெரியுமா?”மருதமுத்து அவளை அடிக்க கை ஓங்கினான். 

“அடிப்பியாய்யா? கை நீட்டி அடிப்பியா? துண்டு துண்டா வெட்டிப்புடுவேன் கையை!” 

“மருதமுத்து, என்ன இது?” என்றான் கல்யாணராமன்.

“நீங்க இதில நுளையாதிங்க? சும்மாருங்க. ஏய் அறிவு கெட்ட முண்டம்! அந்தம்மா யாரு தெரியுமா?” 

சினேகலதா, “இரு மருதமுத்து! வெள்ளி, குதிக்காதே! உன் ஆளுதான் என் பின்னாலே அலையறான். நான் ஒண்ணும் அவனை வருத்தி அழைக்கலை. அண்டர்ஸ்டேண்ட்? உனக்கு சாமர்த்தியமிருந்தா அவனை அடக்கிவை. எங்கிட்ட வந்து சத்தம் போடாதே! நான் யாரு தெரியுமாடி, கண்ட்ரி புரூட்! என் கால் தூசிக்கு சமான மில்லை நீ!” 

“நீ யாராயிருந்தா எனக்கென்னடி சிறுக்கி, ஓடுகாலி, சாணியுருண்டை!” வெள்ளி அழுதுகொண்டே அவளுக்குத் தெரிந்த திட்டு வார்த்தைகளை அடுக்கினாள். “சாக்கடை!” 

“மருதமுத்து, இதையெல்லாம் நான் கேட்டுக்கிட்டிருக்கணுமா? 

“கூறு கெட்ட ஆம்பளைப் பாப்பாத்தி!” 

“என்ன சொன்னே யூ ப்ளடி பிட்ச்!” சினேகலதா கீழேயிருந்த கல்லை எடுத்து அவள் மேல் எறிந்தாள். நெற்றியில் பட்டது.

மருதமுத்து, வெள்ளியைத் தரதரவென்று இழுத்து “இப்ப வீட்டாண்டை போறியா, பல்லெல்லாம் எகிறிப் போய்டும்” என்று வெளியே தள்ளினான். 

கீழே விழுந்த வெள்ளி நெற்றியைப் பிடித்துக் கொண்டு சாபமிட்டாள், “நீ உருப்படுவியா? இந்தப் பழி உன்னை சும்மா விட்டுருமா? மாரிமாயி வாரிக்கிட்டுப் போமாட்டாளா? சாலாச்சி சபிக்கமாட்டாளா; உன் உடம்பெல்லாம் கோனூசி குத்திக் குத்தி ரத்தம் வராதா? உன் வீடு பத்தி எரியாதா…?” 

எழுந்தாள். “இந்தய்யா! உன்னைய நடுத்தெருவில் நிக்க வெச்சு புளிய மிளாறில வீறச் சொல்றேன் எங்கப் பாரை! தொட்டு அடிச்ச இல்லை?” 

“சரிதான் போடி! உங்கப்பன் ஓதை!” 

வெள்ளி புலம்பிக் கொண்டே சென்றாள். ஏழெட்டுப் பேர் கூடிவிட்டார்கள்: “என்னங்க தகராறு? 

“போய்யா போய்யா! வேலையைப் பார்த்துக்கிட்டுப் போங்க!” என்று விரட்டினான். 

மருதமுத்து மத்தியில் நின்றான். சினேகலதாவைப் பார்த்து அசட்டுத்தனமாகச் சிரித்தான். 

“சிரிக்காதே! நல்லால்லே! இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம் நான் கேட்டதே இல்லை! வீட்டுக்குப் போய்யா! இனிமே வராதே!” 

“சினேகம்மா, சினேகம்மா! அது ஏதோ அறியாத பொண்ணு, நீங்க படிச்சவங்க! மன்னிச்சுடுங்க. கால்ல வேணா விழறேன்!”

“அவளை வந்து கால்ல விழச் சொல்லு! அப்புறம் என்னோட பேசு!” 

கல்யாணராமன் மௌனமாக நின்று கொண்டிந்தான். 

அத்தியாயம் – 10

மருதமுத்து செய்வதறியாது பாதிவழியில் நின்றான். சினேகலதா, “இந்தப் பொண்ணு என்ன பேச்சுப் பேசினா பார்த்தீங்களா கல்யாணராமன்?” என்றாள். அவள் குரல் நடுங்கியது. “நீங்களே சொல்லிக் கொடுத்திருப்பீங்க”. 

“சரிதான்! மிச்ச சண்டையை என்னோட போடணுமா?”

மருதமுத்து, “அம்மா, அது என்னவோ உளறிச்சுங்க. நீங்க கண்டுக்காதீங்க…” என்றான். 

“அடப் போய்யா? எல்லாம் உன்னாலதான்!” 

“அப்ப அதை உங்க காலில் வந்து உளச் சொல்லணும்; அவ்வளவுதானே?” 

“அவ எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்ன? செருப்பால அடிச்சிருப்பேன். டீஸன்ஸி இல்லாத பொண்ணு!” 

“என் மனசு கிடந்து அல்லாடுதும்மா! உங்களைப் போய் இப்படி அவ பேசும்படியா ஆய்டுச்சேன்னு கிடந்து பதைக்குது. செவிட்டில ஒண்ணு விட்டிருப்பேன்! பொம்புளை பாருங்க… அதனால தயங்கிட்டேன்!” 

“போய்யா… என்னோட பேசாதே! இனிமே இங்க வராதே! நான் ஏதோ ஒரு வாரத்துக்கு வந்தவ… கொஞ்சம் ஒரு ஆசாமியோட சுமூகமாகப் பேசினா, இப்படியெல்லாம் விபரீதமா அர்த்தம் பண்ணிக்கிட்டு… சக்களத்தி கிக்களத்தின்னு சாக்கடை பாஷையெல்லாம் பேசி… சேச்சே!” 

“அம்மா! நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க. அந்தப் பொண்ணு சகவாசத்தை நிறுத்திப் போடறேன்!” 

“நீ எதுக்காக நிறுத்தணும்? நல்லா தாராளமா கல்யாணம் பண்ணிக்கிட்டு எட்டுக் குழந்தை பெத்துத் தள்ளு. ஐ டோண்ட் கேர்! இனிமே இங்க வராதே!” 

“அம்மா! என்னை வராதேன்னு சொல்லாதீங்கம்மா! எனக்கு உங்களைப் பார்க்காம இருக்க முடியாதம்மா! யாரு வேணா என்ன வேணா பேசிக்கிடட்டும் – மருதமுத்துவுக்கு கவலை இல்லைம்மா! நீங்க எப்பேர்ப்பட்ட குடும்பம்! உங்க கால் தூசி ஆவாளா அவ…!” – மருதமுத்து உணர்ச்சி வசப்பட்டு, கண்களில் நீர் திரையிட உட்கார்ந்தான். 

“சினேகம்மா! என் மேலே கோவமில்லேன்னு சொன்னாத் தான் இந்த இடத்தை விட்டு நான் போவேன்!” 

சினேகலதா உள்ளூற இந்த விவகாரத்தை ரசிக்கிறாளோ வெள்ளியின் மேல் ஒரு விதமாகப் பழி வாங்குகிறாளோ என்று தோன்றியது. 

“சரி, கோவமில்லே. போயிட்டு வா”

“இங்கிலீஷ் கத்துக்க வரலாமுங்களா?” 

“ம்” 

“டிராக்டரு ஓட்டக் கத்துக்கணும்னீங்களே!” 

“வா!” 

“ராத்திரி படுத்துக்க?” 

“வா!” 

அவன் சந்தோஷத்துடன் சைக்கிளில் பாய்ந்து சென்றான்.

“சரியான லூஸ்!” 

“லூஸ் இல்லை. ஹி லவ்ஸ் யூ!” 

“அண்ட் ஐ லவ் யூ! கைல என்ன நோட்டு? நாட்டுப் பாடலா?” 

“இல்லை. ஒரு சுவாரஸ்யமான விஷயம்! உங்க குடும்பத்தைப் பத்தி… ரத்னாவதியின் கதை! டயரி மாதிரி எழுதியிருக்காங்க, ரிமார்க்கபிள்!” 

சினேகலதா மிகுந்த ஆர்வத்துடன் அவன் மேல் ஏறக்குறைய பாய்ந்து அதை ‘லபக்’ கென்று பறித்துக் கொள்ள முற்பட, அவன் சட்டென்று அதைப் பின்னுக்கிழுக்க, “குடுங்க குடுங்க” என்று மூர்க்கத்தனமாகவே பிடுங்கினாள். அவள் நகம் அவன் கையில் கீறிவிட்டது. 

“ரத்னாவதி உயிரோட தென்படறா இதில. அவ தற்கொலை பண்ணிண்டு செத்துப் போயிட்டாள்னு பெரியாத்தான்னு ஒரு கிழவி என்கிட்ட சொன்னா! அதன் பின்னணி தெளிவாகத் தெரியுது. நான் இன்னும் முழுக்கப் படிக்கலை!”
 
அவள் அவன் சொன்னதைக் கவனிக்காமல், அந்த நோட்டுப் புத்தகத்தைப் பிரித்துப் படித்துக் கொண்டே தன் அறைக்குப் புறப்பட்டாள். 

“நீங்க படிச்சுட்டு உடனே எனக்குத் தர்றீங்களா?” 

நின்றாள். சற்று யோசித்தாள். 

“குடும்ப விஷயம். இருந்தாலும் தரேன்! ஆன் ஒன் கண்டிஷன்”. 

“கண்டிஷன் என்னன்னு எனக்குத் தெரியும். மாட்டேன்.” 

“ஏன் இவ்வளவு உணர்ச்சியற்று இருக்கீங்க…? இல்லை, உங்களுக்கு உணர்ச்சி உண்டு. ஸ்பெஷலா ஒரு ஆசாமி மேல. கிராமத்துச் சரக்கு ஃப்ரெஷ்ஷா இருக்குன்னு எதிர்பார்க்கறீங்க இல்லே! அந்த மருதமுத்து அவளை வயல் வாப் பெல்லாம் புரட்டி எடுத்திருப்பான், அய்யரே!”
 
“சில வேளையில ரொம்ப அசிங்கமாப் பேசறீங்க!” 

“நீங்க என்னா ஒஸ்தி ஜாதி?… இந்த அடி மட்டத்து பொண்ணுக்கு உருமறிங்களே!” 

“இப்ப அத்து மீறிப் பேசறீங்க!” 

அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்: “இந்தக் கிராமத்தில என்னைப் பார்த்தவங்க சிலபேர் அசடு வழியறாங்க. மருதமுத்து என் கடைக்கண் பார்வைக்குக் காத்துக்கிட்டு இருக்கான். பஞ்சாயத்துக்கார தங்கராசு இருக்கானே – அவன் சீமை மாடு பார்க்க வாங்கன்னு கூப்ட்டுக்கிட்டே இருந்தான். போனேன். தொழுவத்தில் கையைத் தொட்டான், உடம்பெல்லாம் பல்லா சிரிச்சான். ‘தங்க ராசு! உனக்குக் கல்யாணம் ஆய்டுச்சு இல்ல! ஏறக்குறைய என் வயசில உனக்கொரு பொண்ணு இருக்கில்ல? நான் இன்னிக்கு மாட்டுத் தொழுவத்தில நடந்ததை உன் பெண்சாதிக்கிட்ட சொல்லப் போறேன். எங்கே அவள்னேன். ‘டவுனுக்குப் போயிருக்கான்னான். ‘டவுனிலேருந்து வந்ததும் சொல்றேன்னேன். அவன் மூஞ்சி பேயறைஞ்சாப்பல ஆய்டுத்து. மாமனார்கிட்ட நிறைய கடன் வாங்கி இருக்கானாம். இந்தக் கிராமத்தில பற்பல ஆண் பிள்ளைகளும் ஏறக்குறைய என் கைல பொம்மை மாதிரி ஆயிட்டாங்க. ஒருத்தர் தான் பாக்கி.” 

“என்னை மட்டும் விட்டுடுங்க.” 

“அவ்வளவு சுலபத்தில் விட்டுடறதா” என்று அறைக்குள் சென்றாள். 

வசீகரமான பெண்தான். வெள்ளி அவ்வளவு தூரம் திட்டினதற்கு சினேகலதாவின் எதிர்க்கோபம் போதவில்லை என்று தோன்றியது. எப்போதும் சுலபமாக சிரிக்கும் பெண். பட்டணத்துப் பாலிஷ். எல்லாமே விளையாட்டு இவளுக்கு. டிராக்டர் கற்றுக் கொள்வது, கல்யாணராமனைக் காதலிப்பது – எல்லாமே ஒரு முறை முயன்று பார்க்க வேண்டிய சமாசாரங்கள். 


தன் அறைக்குச் சென்றான். பசித்தது. காய்ந்த ரொட்டித் துண்டுகள்தான் கிடைத்தன. சமைக்கத் திராணியில்லை. யோசித்தான். 

“கல்யாணராமன்! கொஞ்சம் வர்றீங்களா?” 

அங்கே சற்று தயக்கத்துடன் சென்றான். ‘புதிதாக என்ன ஆரம்பிக்கப் போகிறாள்?’ 

ரத்னாவதியின் புத்தகத்தை மடியில் பிரித்து வைத்திருந்தாள். அவனைப் பார்த்ததும் அதைக் கவனமாக இரண்டு கைகளாலும் உயர்த்தி, “இதைப் பாருங்க” என்றாள். 

நோட்டுப் புத்தகத்தின் அந்தப் பக்கத்தின் மத்தியில் செத்துப் போன பூ ஒன்று இருந்தது. ‘நீண்ட இதழ்கள் வருஷங்களாக அந்தப் புத்தகத்தில் சிறைப்பட்டுக் கிடந்ததில் கரு ரத்த நிறத்தில் அப்படியே சப்பையாக ஒட்டிக் கொண்டிருந்தது. அதன் கறை பக்கங்களின் இரு புறத்திலும் பட்டிருந்தது. 

“இது என்ன பூ சொல்ல முடியுமா உங்களால்?” 

கல்யாணராமன் கவனித்து, “செண்பகப்பூ” என்றான். ‘அடையாளம் வெச்சிருக்கன்’ -ரத்னாவதியின் வார்த்தைகளை அருகில் படிக்க முடிந்தது. அதற்குள் பட்டென்று மூடிவிட்டாள். 

“செண்பகப்பூவா அது?” 

“சாதாரணமா மஞ்சளா இருக்கும். அதிக நாள் இருந்ததில ஏறக்குறையக் கருப்பாயிடுத்து. வடிவத்தைப் பார்த்தா செண்பகப்பூ மாதிரிதான் தெரியுது.” 

“செண்பகப்பூ?” அவள் ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள்.

“என்ன?”

“ஒண்ணுமில்ல!” 

“முழுக்கப் படிச்சீங்களா?” 

“கொஞ்சம் படிச்சேன். சுவாரஸ்யமா இருக்கு. ரத்னாவதி ரொம்ப ஸஃபர் பண்ணியிருக்காங்க. அந்த மனுசன் கிட்ட ஒருவிதமான ஸாடிஸம் தெரியுது.” 

“சூழ்நிலையைப் பாருங்க. இங்கிலீஷ் மோகம். ஃப்யூட லிஸம். அறியாத பெண்ணை சின்ன வயசில் கல்யாணம் கட்டிண்டு வந்து போலி நாகரிகத்தைப் பலவந்தமா புகட்டி அவளோட உணர்ச்சிகளையும் ஆசைகளையும் பத்திக் கவலைப் படாம, அவ முன்னாலேயே பெண்களோட கூத்தடிச்சு, குடிச்சு, நடனமாடி…!” 

“எல்லாத்தையும் படிச்சுட்டிங்களா?” “இன்னும் இல்லை.” 

“இந்தப் பூ வெச்சிருக்கிற பக்கம்?” 

“அதுவரைக்கும் இன்னும் வரலை.” 

“என்ன எழுதியிருக்காங்க?” 

“எனக்குப் புடிச்ச பூ இதுன்னு அடையாளம் வச்சிருக்காங்க! புஸ்தகத்துக்குள்ளே, ஹௌ பொயட்டிக்!” 

“நீங்க படிச்சுட்டு எனக்குத் தரீங்களா?” 

சற்றே தயக்கம். “தரேன்.” 

“அதுக்கு முன்னால் பிஸ்கட் தரீங்களா? பசிக்கிறது.”

“தரேன்.” 

அந்தப் புஸ்தகத்தைத் தன் பெட்டிக்குள் வைத்துப் பூட்டினாள்! 


மறுதினம் மாலை அந்த வினோதமான ஊர்க் கூட்டத்தில் மாட்டிக் கொண்டான் கல்யாணராமன். தோப்புப் பக்கம் காலார நடந்து சென்று கொண்டிருக்கும் போது தங்கராசுவும் இன்னும் சிலரும் அவனை நோக்கி அவசரமாக வந்தார்கள். “கொஞ்சம் அரசமரத்தண்டை வரீங்களா?” 

“என்ன தங்கராசு?” 

“மருதமுத்துப் பய வெள்ளியைக் கன்னம் கன்னமா அடிச்சுட்டானாமே! நீங்க பார்த்தீங்களா?” 

“அடிச்சான்னு சொல்ல முடியாது தங்கராசு. அவளை வீட்டுக்குப் போன்னு…” 

“தள்ளிவிட்டானாமில்ல?” 

“ஏன்? எதுக்குக் கேக்கறீங்க?” 

“வெள்ளியோட அப்பாரு பிராது கொடுத்திருக்காரு. ஊர்க் கூட்டத்தில் விசாரிக்கப் போறம்! நீங்களும் வாங்களேன்!” 

“அட! நான் எதுக்கு?” 

“வந்து சும்மா வேடிக்கை பாருங்களேன்! ஒண்ணுஞ் சொல்ல வேண்டாம்.” 

“நான் சாட்சி கீட்சி சொல்ல மாட்டேன்!” 

“அட! பயப்படாம வாங்க!” 

அரசமரத்தடியில் சோம்பேறித்தனமாக ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர். சிறுவர்கள் மரத்தில் ஏற முயன்று கொண்டிருக்க, “அது ஏதோ சொந்த வெவகாரம். களுதையை விட்டுத் தள்ள வேண்டியதுதானே!” என்று ஒரு ஆள் மைய மாகப் பேசிக் கொண்டிருக்க, தங்கராசு வந்ததும் சற்று ஒதுங்கிக் கொண்டார்கள். பெரும்பாலும் சட்டையில்லாதவர்கள் உட்கார்ந்தனர். 

“மருதமுத்துவை எங்க காணும்?”

“கூட்டியார ஆள் போயிருக்கு!” 

“சமீன் பேத்திக்குக் கெச்சை வாங்கியாரப் போயிருப்பான்.”

“லே சும்மாருலே! கேட்டு வெக்கப் போவுது.” 

“டெண்டுக் கொட்டாயில் நாடோடி மன்னனுங்க. ஒரு ஆளு தெரைக்குப் பக்கத்தில் நின்னுக்கிட்டுப் பூப்போடுதான். பெரியவரு வர்றாரு. பேசாம ரத்து பண்ணிப்புட்டு வேற எடம் பார்த்துறது நல்லது!” 

“அந்தப் பொண்ண இந்த ஊர்ல யாரும் கட்ட மாட்டான்.”

வெள்ளியின் அப்பா இவராகத்தான் இருக்க வேண்டும். அவள் மூக்கு அவரிடம் இருந்தது. நெற்றியில் தழும்பு இருந்தது. வாட்ட சாட்டமாகப் பச்சை நரம்பும் தசைகளுமாக இருந்தார்.பனியனில் வயிற்றுப் பக்கம் பை இருந்தது அதில் மணிபர்ஸ் தெரிந்தது. முரட்டுச் செருப்பு சப்தமிட நடந்து வந்து ஓரத்தில் உட்கார, தற்காலிகமாக கூட்டத்தில் அமைதி ஏற்பட்டது. 

“ஆரம்பிக்கலாமா…? இந்த வருசம் கொடைக்கு அவுங் கவுங்க அஞ்சு ரூபாயாவது தரணும்.” 

கூட்டத்தில் சலசலப்பு. 

“இருங்க.இந்த வருசம் கொடையெடுக்கிறது யாரு?”

“மருதமுத்து!” 

“அதை ரத்து பண்ணிப்புடணும்.” 

“அதெப்படிங்க…? தீர்மானமாய்டுச்சில்ல!” 

“அவன் செஞ்சதுக்கு அவனை முதல்லே ஒதுக்கி வெச்சுறனும்!” 

“வரேன் வரேன்! கொடை வேற; உங்க விவகாரம் வேற!”

“அண்ணே! மருதமுத்து வந்துரட்டுமே!” 

“ஆள் போயிருக்கு.” 

“வரதுக்குள்ள நம்ம காளியையும் அவம் பொஞ்சாதியையும் கூப்பிடலாம். அய்யாத்துரை! கொஞ்சம் முந்தி வந்து புத்தி சொல்லிப் போடுங்க!” 

காளியும் அவன் மனைவியும் வந்து நிற்க, அய்யாத்துரை, “புருஷன் பொஞ்சாதின்னா எவ்வளவோ இருக்கும். நீங்க ரெண்டு பேரும் இப்படி அடிச்சுக்கறது நல்லால்ல!” என்றார். 

“இவதாங்க குடத்தால நெத்தில அடிச்சா!” 

“அய்யா! இந்தாளு தண்ணியடிச்சுட்டு வந்து செய்யற அக்கிரமத்தை யாரு சொல்றதுங்க! ஏய்யா நீ பானைக்குள்ள பணத்தைத் திருடலை? புள்ளையைப் போட்டு அடிக்கலை?”

“இருங்க! இருங்க! சமாதானமாப் போவணும். இத பாரு புள்ள, கட்ன புருஷனை அடிக்கிறது நல்லதில்ல! இந்தா விபூதி, இட்டுங்க!” 

“ஏய்! பொஞ்சாதிக்கு விபூதி கொடுறா!” 

மருதமுத்து இரண்டு அடியாட்களுடன் கையைக் கட்டிக் கொண்டு நடந்து வந்தான். கூட்டம் அவனை எதிர்பார்த்தது. 

“என்னய்யா எதுக்கு ஊர்க் கூட்டம்?” 

“வெள்ளியை நீ தொட்டு அடிச்சியாமில்ல?” 

“அடிச்சனா? எந்த… ரான் சொன்னான்?” 

“என்ன பேச்சுப் பேசுதான் பார்த்திங்களா?” 

“அந்தப் பொண்ணு சமீன் பேத்தியை என்ன பேச்சுப் பேசினா தெரியுங்களா? அய்யா நிக்கறாரு. அவரைக் கேளுங்க.”

சட்டென்று எல்லோர் பார்வையும் தன்மேல் பட, கல்யாணராமன் திகைத்தான். 

“அய்யா, நீங்க என்ன சொல்றிங்க?” 

மருதமுத்து, வெள்ளியின் அப்பா, எங்கோ ஒரு ஜன்னலுக்குள் வெள்ளி, ஊர் ஜனங்கள் எல்லோரும் அவனை எதிர் பார்த்துக் காத்திருந்தார்கள். ‘என்ன சொல்வது? நடந்ததைச் சொல். நீ பார்த்ததைச் சொல்.’ 

“வெள்ளி ஜமீன் வீட்டுக்கு வந்து ஜமீன் பேத்தியைத் திட்டினது நிஜம். அதில கோபம் வந்து மருதமுத்து அவளைப் பிடிச்சு இழுத்துக் கீழே தள்ளினதும் நிஜம்” என்றான். 

“கேட்டிங்களா என் பொண்ணைத் தொட்டு அடிச்சிருக்கானா, இல்லையா?” 

“யோவ்… அடிக்கலய்யா!” என்றான் மருதமுத்து. 

“ரெண்டு பொம்பளையாளுங்க வாக்கு வாதம் செஞ்சுக்கிட்டு இருக்கிறபோது இப்படிக் குறுக்க வந்து இழுத்துத் தரைல போட்டுப் பொரட்டறது நியாயந்தானா?” 

‘மருதமுத்து! நீ ஏன் அவளைத் தொட்டு அடிச்ச?”

“சும்மார்றா… பயலுவளா!” 

“என்ன நாக்கு நீளுது? ஊர்க்கூட்டத்தில் இந்த மாதிரி வார்த்தை வரலாமா?” 

“சரிதான் போடா பொறுக்கி…” எட்ஸெட்ரா, விளிக்கப் பட்டவன் மருதமுத்துவின் மேல்பாய, அவன் அவனை உதறித் தள்ள, அமைதி குலைந்தது. 

தங்கராசு மருதமுத்துவைப் பிரித்துத் தனியே நிறுத்தினான்.

“மருதமுத்து! கேளு! நீ பொண்ணுக்குச் செஞ்சது நியாய மில்ல! அதுக்காக நீ மன்னிப்புக் கேட்டுக்கிடனும். மேலும் குத்தத்துக்கு நீ பஞ்சாயத்துக்கு ஒரு ரூவா பைன் கட்டிரணும். என்னங்க நான் சொல்றது…” 

பஞ்சாயத்து ஆமோதித்தது. 

“இந்த வருஷம் அவன் கொடை எடுக்க விடக் கூடாது.”

“ஆமா, ஆமா!” என்றன சில குரல்கள். 

“என்னது! கொடை நான் எடுக்கக் கூடாதா? இதப்பாரு தங்கராசு,நீ சினேகம்மாவுக்குச் செஞ்சதை இங்க சொல்லிப் போட்டா நாறிப் போயிடும்! அது வேற விசயம். பைனடிக் கிறீங்களா? கொடுக்க மாட்டேன், கொடுக்கமாட்டேன். அப்புறம் வேற எவனாவது கொடை எடுக்கறேன்னு வந்தா கையைக் கால வெட்டிப் போட்டுருவன்! சாக்கிரதை!” என்று துண்டை உதறிக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு விருட்டென்று நடந்து சென்றான். 

“முரண்டு பண்றாப்பல! ஒதுக்கி வெச்சுற வேண்டியதுதான்!” 

“நான் எடுக்கறன் கொடை! என்ன செய்யறான், பார்த்துடலாம்” என்றார் வெள்ளியின் அப்பா. 

ஊர்க் கூட்டம் இப்போது முடிச்சு முடிச்சாகக் கூடிக் கலவரமாகப் பேசிக் கொண்டிருக்க, கல்யாணராமன் சற்றுத் திகைப்புடன் நடந்தான். மெள்ள மெள்ள ஒரு விரோதம் உருவாகிக் கொண்டிருக்கிறது. சினேகலதாவின் வரவு இந்த தூங்கும் கிராமத்தின் வானிலையை மெதுவாக மாற்றிக் கொண்டிருக்கிறது. 

மெள்ள கோயிலை அடைந்தான். பிள்ளையாரைத் தாண்டி, பயாஸ்கோப்புக்காரனைக் கடந்து, உள்ளே நுழையும்போது அந்த சப்தம் அவனைத் தாக்கியது. அந்தக் காட்சி அவனை உறைய வைத்தது. 

தலை மட்டும் வெட்டப்பட்டு ஒரு கோழி தன் மரணத்தின் கடைசிக் கணங்களில் மிச்சமிருந்த ரிஃப்ளெக்ஸ் ஆணைகளால் கன்னாபின்னாவென்று தரையில் சிதறி ஓடியது. அதன் கழுத்து வெட்டப்பட்ட இடத்தில் ‘குபுக்குபுக்’ என்று பொங்கியதில் பூமியில் ரத்தக் கோலங்கள் அமைந்தன. 

– தொடரும்…

– கரையெல்லாம் செண்பகப்பூ, எண்பதுகளில் ஆனந்த விகடனில் தொடர்கதையாக வெளிவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *