ஒல்லிக்குச்சி உடம்புக்காரி!
கதையாசிரியர்: அன்னூர் கே.ஆர்.வேலுச்சாமி
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: December 6, 2025
பார்வையிட்டோர்: 786

கவினாவுக்கு கவிதை என்றால் உயிர். ஆனால் எவ்வளவு முயன்றும் தனக்கு கவிதை எழுதவே வரவில்லை என்பதை புரிந்த போது நன்றாக கவிதை எழுதும் ஒருவனைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள்.
ஏழு தலைமுறைக்கு தீராத சொத்துக்களை தந்தை சேர்த்து வைத்திருந்தார். நம்மிடம் எது இல்லையோ அதைப்பெறவே மனம் ஏங்கும். பணம், கார், வீடு, வேலையாட்கள் என செல்வச்செழிப்பு இருந்தாலும் வித்தியாசமான திறமையுள்ள, அதிலும் ஒரு கவிஞரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்பினாள்.
தந்தை மேட்ரிமோனி மூலமாக ஜாதகப்பொருத்தமும் பார்த்து தேர்ந்தெடுத்திருந்த பத்து வரன்களுக்கும் ஓரிடத்தில் கவிதைப்போட்டி வைத்தாள்.
தன் மனம் கவரும் கவிதைக்கு சொந்தக்காரரை கைப்பிடிக்கப்போவதாக மன்னர் காலத்தில் சுயம்வரத்தில் இளவரசிகள் வரனைத் தேர்ந்தெடுப்பது போன்ற நினைப்பில் அறிவித்தாள்.
அதில் கரண் எனும் பெயர் கொண்ட வரனை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தாலும் கவிதை போட்டியிலும் அவன் வெல்ல வேண்டும் என போட்டியில் மற்றவர்களுடன் அவனையும் கலந்து கொள்ள வைத்தவள், அவர்கள் எழுதிய கவிதைகளை எடுத்து ஒவ்வொன்றாக அவளே படித்தாள்.
அழகே…., ஓவியமே… என சாதாரண வார்த்தைகளை பலரும் ஒரே மாதிரி எழுதியிருந்தார்களே தவிர, கவினாவின் மனதை ஒருவரும் கவரவில்லை. கடைசியாக எதிர்பார்ப்புடன் கரணின் கவிதையைப்படித்தாள்.
ஒல்லிக்குச்சி உடம்புக்காரி
தள்ளி தள்ளி போகாதடி
ஒத்தையா நீயும் வாழ்ந்தா
உடம்புக்கு ஆகாதடி-உன்
உடம்புக்கு ஆகாதடி.
கவினாவின் புருவம் உயர்ந்தது.
நித்தம் நித்தம் வித்தைகளை
கற்றுக்கொள்ள வேணுமடி
மெத்தையில கொலுசு சத்தம்
கேட்கவே தோணுதடி-எனக்கு
கேட்கவே தோணுதடி.
இதுவரை கண்டிராத வெட்கம் அவளது முகத்தை ஆக்கிரமித்தது.
பள்ளிப்பாடம் கற்றுத்தாரேன்
பக்குவமா நானடி-உன்
சொல்லு வரும் உதட்டுலதான்
வடிந்திடும் தேனடி
ஜொல்லு விட்டு திரியறேனே
நானும் உன் பின்னாடி.
படித்தவள் சொக்கிப்போனாள்.
தில்லாக இருந்ததெல்லாம்
உன்னப்பார்க்கும் முன்னாடி
சில்லாக உடைந்ததே- என்
மனக்கண்ணாடி.
முள்ளாக இருக்காதடி- என்னை
கொல்லாமல் கொல்லாதடி
பொல்லாத அழகி தான்- உன்னை
அள்ளிக்கொள்ளத்தோணுதடி.
திடீரென ‘க்ளுக்’ என மகிழ்ச்சி வெடிக்கச்சிரித்தாள்.
ஜாதகம் பார்த்தாச்சு
பாதகம் இல்லையடி
கவிதையை எழுதுகிறேன்
கருணை காட்ட வேணுமடி-எனக்கு நீயும்
கருணை காட்ட வேணுமடி.
கரணின் முகத்தை காதலோடு பார்த்தாள்.
பெத்தவங்க சம்மதத்தோட
கெத்தாக நானும் வந்து-உன்னை
கொத்தாக தூக்க வேணும்
ஒத்துப்போக வேணுமடி-நீயும்
ஒத்துப்போக வேணுமடி.
கவிதையாக கரண் எழுதிய காதல் வரிகளை முழுவதும் படித்ததும் அவனிடம் தன் மனதை முழுமையாக ஒப்படைத்து விட்டாள் கவினா.
![]() |
ஆசிரியர் குறிப்பு: கோவை மாவட்டம் அன்னூரில் 1998 முதல் ஜோதிடம்,எண்கணிதம்,வாஸ்து ஆலோசனைகள் சொல்லி வருகிறார். அடிப்படையில் இவர் விவசாய குடும்பத்தைச்சேர்ந்தவர். தந்தையார் பெயர் ரங்கசாமி கவுண்டர் . தாயார் பெயர் ராமாத்தாள். பூர்வீகம் அன்னூர் அருகே உள்ள கரியாக்கவுண்டனூர். சிறுவயதிலேயே தந்தை காலமானதன் காரணமாக,படிப்பு தடை பட்டுப்போனதால்,பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி மூலமாக இளங்கலை வரலாறு தமிழ் வழியில் பயின்றுள்ளார். தாய் 2020ல் காலமாகி விட்டார். மனைவி டிப்ளமோ…மேலும் படிக்க... |
