ஆவலின் அடிச்சுவடுகள்
கதையாசிரியர்: முத்தமிழ்ப்பித்தன்
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2025
பார்வையிட்டோர்: 157

ஜெயரஞ்சனி தனது வீட்டில் இருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும், தடித்தும், பெருத்தும், அழகாய் வளர்ந்திருக்கும், அந்த நாவல் மரம் இருக்கும் திசையையே ஆசையோடு உற்றுப் பார்த்தபடியே சில நிமிடங்களை கரைய விட்டாள். ஆசை அவளுக்குள் அலை அடிக்க, கண்கள் அதில் கட்டுமரம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தது. நேற்று இரவு, வானம் இடி இடித்தபடி, காற்றும் மழையும் கலந்து வருவது போல இருந்தது. ஆனால் வானம் ஏமாற்றிவிட்டது.
காலையில் வீட்டு வேலைகளை முடித்த பின் மாலையில் சென்று நாவல் கனிகளை பறித்து வரலாம் என எண்ணியபடி அவள் சற்று கண் அயர்ந்தாள். அவள் எழுந்த போது அந்தி பொழுது வந்த வேலையை முடித்துக் கொண்டு சொந்த வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தது. அவள் அவசர அவசரமாக தனது சிறு பரிவாரங்களோடு புறப்பட்டு நாவல் மரத்தை நெருங்கினாள்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு அவசரக்காரனுக்கு அரிவாள் வெட்டு என்பது போல அவள் முக்கியமான துரட்டியை அவசரத்தில் வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டாள். திரும்ப வீட்டிற்கு திரும்பிச் செல்ல மனம் இல்லை. . இன்னும் சிறிது நேரத்தில் எங்கும் இருள் சூழ்ந்து விடும். . அவள் யோசித்தாள்.
அதிக உயரம் கொண்டு நன்கு விரிந்து படர்ந்திருந்த அந்தப் பெருநாவல் மரத்தை, ஜெயரஞ்சனி சில நிமிடங்கள் பார்த்தபடியே இருந்தாள். அதில் கொத்துக்கொத்தாய் நாவல் பழங்கள், பளபளப்புடனும் அடர்கருமை நிறத்துடனும், மகளிர் அணியும் தொங்கட்டானைப்போல் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருந்தன.
ஜெயரஞ்சனி தனது சேலையை அழகாக இழுத்து, இடுப்பில் அழுத்தமாக சொருகிக் கொண்டு, மூன்றடி உயரத்தில் இருந்த கீழாகச் செல்லும் தாழ்வான மரக்கிளையில், தாவி ஏறி, தனது கால்களால் மரக்கிளையை கவ்விக்கொண்டு அமர்ந்தபடி மேலே மெதுவாக அண்ணாந்து அந்த நாவல் கனிகளை மிகுந்த ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஜெயரஞ்சனி அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து சுமார் 5 அடிகள் தள்ளி கீழே பாரி, ஓரி இருவரும் மேலே நாவல் மரக்கிளையில் அமர்ந்திருக்கும் அவளது அகன்றதும் வளமை நிறைந்ததுமான மார்பு கோலங்களை ஏக்கத்துடன் பார்த்தபடி இருந்தனர். ஜெயரஞ்சனியின் கவனம் அந்த நாவல் கனிகளை எப்படி பறிப்பது என்பதை பற்றியே சுற்றிக் கொண்டிருந்தது. அதனால் அவள் கீழே இருக்கும் அந்த இருவரின் பார்வையையும் அலட்சியப்படுத்தியபடியே இருந்தாள்.
அந்த இருவரின் இதமான பார்வையும் திரும்பத் திரும்ப ஜெயரஞ்சனியின் மார்பு பகுதியில் மையம் கொண்டிருந்தது. அந்த இருவரில் ஒருவன், தனது கையை சற்று உயர்த்தி அவளை அழைக்க முயன்றான். ஜெயரஞ்சனின் மேல்நோக்குப் பார்வை எந்தவித மாற்றமும் அடையாமல் இருந்தது.
அந்த தாழ்வான மரக்கிளையில் இருந்தவாரே, நாவல் பழங்களை எளிதாகப் பறிப்பதற்கு அப்போது அவளிடம் எதுவும் இருக்கவில்லை. அதற்குமேல் மரத்தில் ஏறுவதற்கும் அவளுக்கு துணிச்சல் இல்லை. எப்படியாவது பழங்களைப் பறிக்க வேண்டும் என்ற ஆவலும் சில பழங்களையேனும் பறிக்காமல் கீழே இறங்கக்கூடாது என்ற வைராக்கியமும் அவளிடம் வலுவாகவும் வளமாகவும் இருந்தது. அவள் பொறுமையாக மரக்கிளையில் அமர்ந்தபடியே நாவல் பழங்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.
திடீரென்று காற்று தனது வேகத்தை கூட்டிக் கழித்து, சுழன்று சுழன்று அடிக்க ஏராளமான பழுத்த நாவல் பழங்கள் கீழ்நோக்கி பயணித்து, புல்படர்ந்த பரப்பில் சற்று பழுதாகி கிடந்தன. ஆனந்த பரவசத்தில் அவள் அவசர அவசரமாய் கீழே இறங்கி நாவல் பழங்களை பக்குவமாய் பொறுக்கினாள். தான் எடுத்துவந்த ஒரு துணிப்பையில் அவற்றை பத்திரப்படுத்திக்கொண்டு மரத்தின் அகன்ற அடிப்பகுதியில் சாய்ந்தவாறு அமர்ந்துகொண்டு, தனது சேலையை தளர்த்தியப்படியே தனது மார்புகளின் இறுக்கத்தையும் தாராளமாய் தளர்த்தினாள்.
பாரியும், ஒரியும் ஆசையுடன் கைகளை ஆட்டிக்கொண்டு அவளை நெருங்க, அந்த ஒரு வயதுடைய இரட்டைக் குழந்தைகளை அவள் வாரி அணைத்தபடி தனது இருபக்க பாலகங்கள் வழியே அவர்களுக்கு பால் புகட்ட ஆரம்பித்தாள்.
ஜெயரஞ்சனி தான் பறித்த நாவல் கனிகளில் இரண்டினை நாவில் போட்டு சுவைத்தபடி இருக்க, பாரி, ஓரி இருவரும் பாலை பருகியபடியே கைகளை அசைத்துக் கொண்டு ஆ.. ஊ.. ஓ.. என்று மழலை மொழியில் தங்கள் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் தெரிவித்தபடி இருந்தனர். அப்போது எங்கிருந்தோ வந்த ஆண்மயில் அதன் மகிழ்ச்சியை தோகை விரித்தாடி வெளிப்படுத்தியது
திடீரென்று வன்மையாக வடிவம் எடுத்த காற்று, சில நிமிடங்களில் மென்மையை மேலாடையாய் அணிந்து கொண்டு, மெல்ல மெல்ல மேற்கு நோக்கி பயணிக்க, அந்த மூவரும் தங்கள் வீடுகளை நோக்கி மகிழ்ச்சியுடன் பயணிக்க ஆரம்பித்தனர்.
| என்னைப் பற்றி சில வரிகள்: நான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு எழுத ஆரம்பித்து கடந்த 22.02.2025 அன்று எனது இசையின் எதிரொலிகள் எனும் சிறுகதை தொகுப்பினை வெளியிட்டுள்ளேன். கடந்த 12.11.2025 அன்று எனது "மாமோய்"எனும் சிறுகதை ராயகிரி சங்கர் அவர்கள் நடத்தும் மின் இதழில் வெளிவந்துள்ளது. எனது"விலை போகும் உறவுகள்", "மாற்றத்தின் சீற்றங்கள்"மற்றும்"மயக்கத்தின் மறுபக்கம்"ஆகிய மூன்று சிறுகதைகளும் தங்களது"சிறுகதைகள்" மின் இதழில் கடந்த 18.11.25 இன்றும் அன்றும் 24.11.25 அன்றும்,30.11.25…மேலும் படிக்க... |