அம்மாவின் பழைய புகைப்படம்
கதையாசிரியர்: வேலு இராஜகோபால்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: October 29, 2025
பார்வையிட்டோர்: 2,884

அதுவரை இருட்டிக்கொண்டு இருந்த மேகம், திடீரென்று பெருங்காற்றுடன் மழையாகக் கொட்டத் தொடங்கிவிட்டது. படபடவென ஜன்னல் கதவுகள் மூடித் திறந்தது, ஏதோ நடக்கக் கூடாதது நடந்தது போன்ற பதட்டத்தை ஏற்படுத்தியது. மழைத் தூறல்கள் ஜன்னல் வழியே இறைத்ததில், வீட்டுக்குள் மழைநீர் கோடு போடத் துவங்கிவிட்டது. சோபாவில் உட்கார்ந்திருந்த சதீஷ் விருட்டென எழுந்து போய் ஒவ்வொரு ஜன்னலாக மூடினான். கொஞ்ச நேரத்தில் காற்றின் வேகம் குறைந்து மழை இன்னும் தீவிரமடைந்தது. ‘சோவென’ மழையின் இரைச்சலில் வேறெந்த ஒலியும் கேட்கவில்லை. காதடைப்பது போல் உணர்ந்தான். பக்கத்துவிட்டு ஸ்டீல் கூரை ஷெட்டில் மழை தடதடவென பெரும் ஓலமிட்டுக் கொண்டிருந்தது.
‘ஆன்’ நிலையில் இருந்த டி.வி சுவிட்சை ‘ஆஃப்’ செய்தான். இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு முன் கோவில்பட்டியில் அம்மா வீட்டில் பெரிய பெட்டிக்குள் அடைபட்டிருந்த டயனோரா டிவியின் பூச்சிகள் பறக்கும் ஒளித்திரை புஸ்ஸென்ற ஒலியுடன் கருகிப் புகைந்து நாற்றம் அடித்த ஞாபகம் வந்தது. மஹாபாரதம் வந்து கொண்டிருந்த நேரம். அடுத்த ஞாயிற்றுக் கிழமைக்குள் இன்ஸ்டால்மெண்டில் ‘சோனி’ பதினாலு இன்ச் கலர் டி.வி. வாங்கிவிட்டாள், அம்மா.
அந்தக் காலத்தில், சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவன் டி.வி. பார்க்க வேண்டுமென்றால், அவன் வாடகைக்கு இருந்த வீட்டின் சொந்தக்காரருடைய வராண்டாவிலிருந்து எட்டிப் பார்க்க வேண்டும். விம்பிள்டன், கிரிகெட் ஃபைனல் மேட்சுகளைப் பார்க்க நின்று கொண்டிருப்பான். அவருக்கு ஒரு மகள் இருந்தது பிரச்சனை. தவிர்த்துவிடத்தான் பார்ப்பான். தன்னுடைய கற்பையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.
அம்மாவும் அவள் தோழி சுந்தரி டீச்சரின் அம்மாவும் டீ.வி. யை ஏதோ எக்சேஞ்ச் செய்ததில் குளறுபடியாக சண்டை வந்து, கொஞ்ச நாள்கள் பேசாமல் இருந்ததும் ஞாபகம் வந்தது. திடீரென்று வீட்டிலிருந்த பிரேம் போட்ட பழைய போட்டோக்கள் என்ன ஆயின என்று மீண்டும் கேள்வி எழுந்தது. பல வருடங்களாகத் தேடி வந்தான். அம்மா இறப்பதற்கு முன்னால், அவள் வீட்டை மாற்றிக்கொண்டு தங்கை வீட்டில் குடியேறிய காலத்திற்குப் பிறகு அவன் அந்த போட்டோக்களைப் பார்க்கவில்லை. அவற்றில் அவனுடைய சிறுவயதுப் படங்கள் பல இருந்தன. அக்காவுக்கும் தங்கைக்கும் சிறுவயதுப் புகைப்படங்கள் எதுவும் கிடையாது என்பது ஞாபகம் வந்தது. ஏன் என்று அவனுக்குத் தெரியவில்லை. இப்போது பழைய படங்கள் எதுவும் இல்லை.
அம்மாவின் ஒன்றிரண்டு புகைப்படங்கள் அவனுக்கு நன்றாக ஞாபகம இருந்தன. இருபது வயதுக்குள் இருக்கும் ஒரு புகைப்படம். அவளுடைய நீண்ட கூந்தல் பின்புறம் இருந்த கண்ணாடியில் தெரியுமபடி, அவளை நிற்க வைத்து எடுத்த படம். அதில் அம்மாவின் முகத்தில் அப்பாவித்தனமும் சோகமும் பூசியிருக்கும் விதம் அவனைக் கலக்கும். அம்மாவின் இளமைக் காலத்தைப் பற்றித் தெரிந்ததனால் அவனுக்கு அப்படித் தோன்றுகிறதோ? இன்னொரு படம் தூத்துக்குடி காம்பவுண்ட் வீட்டில் அவளையொத்த வயதுடைய இரு பெண்களுடன் எடுத்த படம். அந்தக் காலத்து நடிகை தேவிகாவின் சாயலில் மூவரும் அலங்காரம் செய்து, முடியை இரட்டைப் பின்னலில் போட்டிருந்தனர். கழுத்துவரை மட்டும் தெரியும் படம். அது தேவிகா ஸ்டேய்ல் என்று அவனுக்குத் தெரியவரும் போது அம்மா இறந்து போய் இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அம்மாக்கள் இருக்கும் போது அவர்களது அழகும் குணமும் முழுவதாகத் தெரிவதில்லை. அன்றாட வேலைகளில் கவனம் குவிந்து விடுகிறது.
மழை ஏனோ திடீரென்று நின்றுவிட்டது. சதீஷ் வீட்டில் தனியாக இருந்தான். அவனுடைய மனைவி சாவித்திரி ஒரு பெண்கள் குழுவுடன் மதுரை போயிருந்தாள். இருவர் மட்டும் வசிக்கிற பெரிய வீட்டில் ஒருவர் இருந்தால் அமைதி கழுத்தை நெறிக்கிறது. மனைவி இருந்தாலும் இருவரும் அதிகம் பேசிக் கொள்வதில்லை. ஆனாலும் அவள் அருகில் இருப்பது ஒரு ஆசுவாசமாக இருக்கிறது. வீட்டை ஒரு முறை சுற்றி வந்தான். எல்லாச் செடிகளும் மரங்களும் அதனதன் இடத்தில் இருந்தன. ரோஜாச் செடிகள் இன்று அதிகம் பூத்திருந்தன. ஒரு மாமரம் இன்னும் பூக்கத் தொடங்கவில்லை. கொய்யா மரத்தில் சிறு சிறு காய்கள் நிறையத் தொங்கினாலும், அத்தனை காய்களிலும் பூச்சி விழுந்திருந்தது. பறித்துத் தின்னத் தயக்கம் கைகளைத் தடுத்தது. நெட்டையாக வளர்ந்திருந்த பெருநெல்லி மரத்தின் உச்சியில் மட்டும் கிளைகளும் இலைகளும் ஏனோ தானோ என்று வளைந்து வருத்தத்துடன் தொங்கிக் கொண்டிருந்தன.
அம்மா இருந்திருந்தால் பெரிய வீட்டையும், தோட்டத்தையும் பார்த்து ரசித்திருப்பாள். இறந்த போது தொண்ணூற்றி இரண்டு வயது. இதற்குமேல் எத்தனை ஆண்டுகள்தான் இருப்பாள்? ஆசைதான். இருந்தாலும் இருவரும் சண்டை போட்டுக் கொண்டுதான் இருப்பார்கள். இருவருக்கும் அப்படி ஒரு ராசி. எல்லாவற்றிலும் அம்மாவுக்கு எதிராகப் பேசிக் கொண்டிருந்தான். அவள் பேச்சுக் குறைந்த போது சண்டையும் குறைந்துவிட்டது. அவளுடைய நீட்சிதான் அவன். அவள் உள்ளே இருக்கிறாள்.
கால்களை மிதியடியில் தட்டிவிட்டு, வீட்டுக்குள் வந்து, டிரான்ஸிஸ்டரை எடுத்து ஆன் செய்தான். அதிசயமாக மிகத் தெளிவாகக் கேட்டது. சுதா ரகுநாதன் ‘சலமேலரா’ பாடிக் கொண்டிருந்தார். மழை நின்று இடி மின்னல் இல்லாததால் மெல்லியதாக இசை அறையை நிரப்பிக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் தவளைகள் கத்தத் தொடங்கிவிடும். பாடலில் கவனம் செலுத்தினான். அம்மாவுக்குப் பிடித்த பாடல்களில் ஒன்று. மனதை நிரப்பிக் கொண்டிருந்தது. குரலில் இனிமையாக மென்மையாகக் குழைந்து வழிந்தோடியது. அவனுக்கு அந்தக் காலத்தில் அது பிடிபட்டதில்லை. பதின் பருவத்தில் பெரும்பாலான இரவுகளில் இருவருக்கும் ஒன்பதரை மணிக்குச் சண்டை வரும். அகில இந்திய சங்கீதக் கச்சேரி ஒலிபரப்பாகும் நேரம். அவனுக்குச் சினிமாப் பாட்டுக் கேட்க வேண்டும். அம்மா மிகவும் வருத்தத்துடன் விட்டுக் கொடுப்பாள். இப்போது நினைத்தான். அவளுடைய விருப்பத்துக்கு விட்டிருக்கலாம். அந்த நேரம் ஒன்றுதான் அவளுக்கும் கலைக்கும் தொடர்பு உள்ள ஒரே நேரம். ஆனந்த விகடன் கல்கி படிப்பாள். அப்பாவுக்கு கர்னாடக இசை சுத்தமாகப் பிடிக்க்காது. ஆனால், ‘வதனமே சந்ர பிம்பமோ’ பிடிக்கும். இரண்டுக்கும் வேறுபாடு பின்னாளில் புரிந்தது.
அம்மாவுக்கு அவன் ‘அவாளாத்துப்’ பையனாக வேண்டும் என்று பேராசை. சிறுவயதிலிருந்து அப்படியே வளர்த்தாள். ஆனால் யாரும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவனுக்குப் புரிந்தது. சைவ உணவைத் தவிர வேறு எதுவும் வீட்டில் கிடையாது. ‘கஜானனம்’ வலுக்கட்டாயமாக சொல்லிக் கொடுத்து, அவளுக்குத் தெரிந்தவர்கள் வரும்போது சொல்லச் சொல்லிக் கட்டாயப்டுத்துவாள்.
அதனாலெல்லாம் எதுவும் மாறப் போவதில்லை என்று அவனுக்கு அந்த வயதிலேயே புரிந்திருந்தது. அம்மாவின் வற்புறுத்தலுக்காகச் விபரம் புரியாத நாளில் அவள் சொன்னதையெல்லாம் செய்தான். அம்மாவின் ஜாடை. அம்மாவுக்கும் தாத்தாவுக்கும் என்ன சண்டை என்று அவ்வப்போது சொல்லியிருக்கிறாள். தன் அப்பாவின் மீது, கடுமையான வெறுப்பும் கோபமும் கொண்டிருந்தாள். ஆனாலும் அவருடன் பேச வேண்டும் என்ற ஆசை இருந்தது போல் அவன் உணர்ந்திருக்கிறான். அந்த விஷயத்தில் இரண்டு எதிரெதிரான உணர்ச்சிகளில் பிழம்பாக இருந்தாள். மேல்ஜாதியில் இணைத்துக் கொள்ள யாருக்குத்தான் பிடிக்காது? அவனுக்கும் சிறுவயதில் இந்தக் குழப்பம் இருந்தது. அப்படி இருந்தால் எப்படி இருக்கும்? இப்படி இருந்தால் என்ன? பல வருடங்கள் அதில் உழன்றான். ‘ஜாதி’ என்ற சொல் அவனிடம் சிறுவயதில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. கலப்புத் திருமணம். அம்மாவும் அப்பாவும் ஏதோ குற்றம் செய்துவிட்டார்கள். இப்போது அது சிரிப்பிற்குரிய விஷயமாகப்படுகிறது. அந்தக் காலத்தில் அதை மறைத்துக் கொள்ளவே விரும்பினான். அதற்குப் படாதபாடுபட்டான். எந்த இடத்திலும் ‘பேரென்ன?’ என்ற கேள்விக்குப் பின்னால் வரும் அடுத்த கேள்வி அவனை இன்றும் ஊமையாக்கிவிடுகிறது. அது ஒரு ஷாக் அடிக்கும் கேள்வி. ஒவ்வொரு முறையும் அதை மீறி எழ முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. அதனால் இந்த உலகம் முதலில் இருந்தே பிடிக்கவில்லை. அவனை அவமானப்படுத்திக் கொண்டே இருக்கிறது. ஏதாவதொரு ஜாதியைச் சொல்லியிருக்கலாம். ஆனால் எதையும் சொல்வதற்கு அவனால் முடிந்ததில்லை.
இன்று அம்மா இல்லை. அலமாரிகளையும், மேஜை டிராயர்களையும் சும்மா குடையத் தொடங்கினான். அவன் பெரியவனான பின் எடுத்த புகைப்பட ஆல்பங்கள் கிடைத்தன. பிள்ளைகள், மனைவி, ஊட்டி, கொடைக்கானல், பம்பாய், கல்கத்தா புகைப்படங்கள் பல இருந்தன. அம்மாவின் கடைசிக்காலப் புகைப்படங்கள் கிடைத்தன. பழைய படங்களைத் தேடினான். கிடைக்காது என்ற போதும் தேடினான். ஒரு படம் ரொம்ப நாளாகக் கிடைக்கவில்லை. அதுமட்டுமல்ல அம்மாவின் சிறுவயதுப் படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவனுடைய சிறுவயதுப் படங்களும் எங்கோ போய்விட்டன. அவன் மனதில் அச்சாகி நின்றுவிட்ட அந்தப் படம். அதில் பெரிய அக்கா இரட்டைச் சடை பின்னியிருப்பாள். அவளுக்கு ஆறு ஏழு வயதிருக்கும். பட்டுச் சட்டையும் பட்டுப்பாவாடையும் கட்டியிருப்பாள். மறுபுறம் அவன் ஸ்டுடியோ கட்டைக் குதிரையில் அமர்ந்திருப்பான். அம்மா நடுவில் மடிசார் பட்டுப் புடவை கட்டி ஸ்டூலில் அமர்ந்திருப்பாள். அம்மா மடிசார் கட்டியிருக்கும் ஒரே படம் அதுதான். அது அவளுக்கு ஒரு கனவாக இருந்திருக்கும். மற்ற நேரங்களில் அவள் ஒருபோதும் மடிசார் கட்டியதில்லை.
தங்கையிடமும் அக்காவிடமும் பல முறை கேட்டுப் பார்த்துவிட்டான். இருவரும் அந்தப் படம் தங்களிடம் இல்லை என்றே சொன்னார்கள். அவன் பேங்க் வேலையில் இருந்ததனால் இந்தியாவின் பல ஊர்களுக்கு டிரான்ஸ்ஃபரில் போய்வந்தான். தங்கைதான் அம்மா இறந்தபின் வீட்டைக் காலி செய்து கொண்டு வந்தவள். கேட்டுப் பார்த்தான். ஒவ்வொரு முறையும் ‘தெரியவில்லை’ என்று சொல்லிவிட்டாள். ஆனால் அந்தத் தெரியவில்லைக்குப் பின்னால் ஏதோ இருந்தது. அவனுடைய சிறுவயதுப் புகைப்படங்கள் இருந்தன. தங்கைக்கு சிறுவயதுப் படங்கள் குறைவு என்று நினைவுக்கு வந்தது.
அம்மா ‘மடிசார்’ கட்டிய புகைப்படம் இனி கிடைக்காது என்று தோன்றியது. அவளுடைய கனவு அது. முடிந்துவிட்ட எதையோ நினைவூட்டிய படம். காணாமல் போனது நல்லது. அதை யாரிடமாவது காட்டவேண்டும் என்று ஆசை. ஆனால் அதனால் என்ன ஆகிவிடப் போகிறது? அலமாரிகளைக் குடைவதை விட்டு மீண்டும் சோபாவுக்கே வந்தான்.
இடையில் இன்னொரு முறை மழை பெரிதாகப் பெய்துவிட்டு இரண்டு நிமிடத்தில் நின்றுவிட்டது. பிறகு நன்றாக மழை வெறித்துவிட்டது. மஞ்சள் வெய்யில் பளபளத்தது. நிமிடங்களில் மாறிவிடும் இயற்கையின் அதிசயம். ஜன்னல் வழியே மஞ்சள் வெய்யில் மரங்களின் பச்சை இலைகளில் வினோதமாக ஒளிவிடுவதைக் கண்டான். டி.வி.யின் ரிமோட்டைக் கையில் எடுத்தான்.