விழிப்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 6, 2024
பார்வையிட்டோர்: 1,505 
 
 

(1944ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

பத்து வருஷங்களுக்கு முந்தி ஒரு அமாவாசை. நானும் என் தகப்பனாரும் ஆற்றங்கரைக்குச் சென்று ஸ்நானம் செய்துவிட்டுப் படிக்கட்டேறினோம். ஆற்றங் கரை மண்டபத்தில் காவித்துணி தென்பட்டது. என் தகப்பனாருக்கு சந்நியாசியென்றால் பிராணன். நாங்கள் அருகில் சென்றோம். ஒரு அதிவர்ணாச்சிரமி தென்பட் டார். காவிக் கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு சுகாசனத்தில் அமர்ந்திருந்தார். தண்டம், கமண்டலம் யாதொன்றையும் காணோம். பக்கத்தில் ஒரு கயிற்றுக் கொடியில் இரண்டு காவிச் சவுக்கங்கள் உலர்த்தப்பட் டிருந்தன. அவருடைய முகத்தின் பரம சாந்தத்தை எதிலும், எங்கும் நான் கண்டதில்லை. தகப்பனாரும் நானும் வந்தனம் செய்தோம். 

‘எங்கள் வீட்டிலே பிக்ஷை செய்யவேண்டும்’ என்று என் தகப்பனார் கேட்டுக்கொண்டார். 

‘என்ன ஐயர்வாள் ! ஈரவேஷ்டியோடு சொல்லு கிறீரே’ என்று சுவாமிகள் சிரித்தார். 

தகப்பனார் வெட்கிப்போய்விட்டார். ‘மன்னிக்க வேண்டும், தெரியாமல் செய்துவிட்டேன்.’ 

‘நான் விளையாட்டுக்குச் சொன்னேன். நீங்கள் வீட் டுக்குப் போய் உலர்ந்த வேஷ்டி கட்டிக்கொண்டு வாருங் கள்; பேசுவோம்.’ 

நாங்கள் வீட்டுக்குப்போய்த் திரும்பி வந்தோம். சுவாமிகள் சொன்னார் : 

‘அப்பா, என்னைப் பிக்ஷைக்கு அழைத்தவரையில் சந்தோஷம். நேற்று இரவுதான் இந்த இடத்துக்கு வந் தேன். அதுமுதல் நீ ஒருவன் தான் வந்து இந்த சந்நியாசியைப்பற்றி சிரத்தை காட்டியிருக்கிறாய். அது உனக்கு நல்லது. ஆனால் ஒன்று சொல்வேன். இந்த ஊர் உருப் படாது. என்னைப் பற்றியவரையில் கவலையே கிடை யாது. நான் சாப்பிடுவதில்லை. வேறு யாராவது கர்ம சந்நியாசிகள் வந்து கவனிப்பாரற்று இங்கு கிடந்தால் எப்படி இருக்கும் ! மஹாராஜாக்களைப் போன்ற மடாதி பதிகளுக்குப் போய் கொட்டிக்கொடுக்கும் ஜனங்கள் ஏழை சந்நியாசிகளைத் திரும்பிப் பார்க்கவில்லையென்றால் பாபம் யாரைச் சாரும்?” 

நாங்கள் சும்மா இருந்தோம். 

‘நாழியாகிறது. நீங்கள் போய்ச் சாப்பிட்டுவிட்டு வரும்பொழுது கொஞ்சம் பொறியிருந்தால் கொண்டு வாருங்கள், போதும். அவ்வளவுதான் ஆகாரம்’ என்று சொன்னார். 

அன்றுமுதல் பள்ளிக்கூட நேரம் தவிர என்னைச் சுவாமிகளண்டைதான் காணமுடியும் – எனக்கு அவரிடம் அவ்வளவு அபாரமான பிரேமை உண்டாகிவிட்டது. நான் தான் தினம் அவருக்கு அவலோ பொறியோ எடுத் துக்கொண்டு போவேன். அவர் பாட்டுக்கு ஆற்று ஜலத் தைப் பார்த்துக்கொண்டு ஆனந்தமாய் மணிக் கணக்காக உட்கார்ந்திருப்பதும், வெண் நிலவில் கட்டையைப் போல் அரச மரத்தடியில் படுத்துக்கிடப்பதும், நிராசை யாய்க் காலம் தள்ளுவதும் எனக்கு ரொம்ப இன்பமா யிருக்கும். அவர் பாடிக் கேட்கவேண்டும், சதாசிவேந் திரருடைய கீர்த்தனைகளை அவருக்கும் என்னிடம்,மிகுந்த அன்பு. 

ஒரு நாள் அவரை, ‘உங்களுடன் வந்துவிடுகிறேனே’ எனக் கேட்டேன். 

‘அதற்கென்ன பிரமாதம்!’ 

அடுத்த நாள் எஸ்.எஸ்.எல்.ஸி. பரீக்ஷை தேறியவர் ஜாப்தா வந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். எனக்கு பகீரென்றது. இரண்டாவது வருஷம். இந்தத் தடவை யேனும் பரீக்ஷை தேறவேண்டுமே என்று கடவுளைப்பிரா ர்த்தித்துக்கொண்டே பள்ளிக்கூடத்திற்குப் போனேன். 

தலைமை உபாத்தியாயர் அறையில் நான் நுழைந்ததைப் பார்த்தும்கூட அவர் என்னை கவனிக்கவில்லை. ‘சார்! எனக்கென்ன ஆயிற்று?’ என்று நம்பரைச் சொல்லிக் கேட்டேன். 

 அவர் ஜாப்தாவைப் புரட்டிப் பார்த்துவிட்டு உதட் டைப் பிதுக்கினார். அவ்வளவுதான். பள்ளிக்கூடத்தை விட்டு வெளியே வந்தேன். தெருவிலே தோழர்கள் கூட்டங் கூட்டமாய் நின்றுகொண்டிருந்தனர். இராக் காலத்து தூங்குமூஞ்சி மரங்களின் இலைகளைப்போல் ஒடுங்கி துன்பப்பட்ட முகங்கள் எவ்வளவு! அந்திநேரத்து மந்தாரைபோல் விரிந்து மகிழ்ச்சியடைந்த முகங்கள் எவ்வளவு ! என் மனதிலே வேதனை குடைந்தது. ஆனால் ஒரே கணத்தில் அது மறைந்து, பரவிவரும் ஒளியைப் போல் ஓர் எண்ணம் தானே எழுந்தது. அதுதான் கடவுள் காட்டும் வழியெனத் துணிந்து நேரே ஆற்றுக் குச் சென்றேன். 

மண்டபத்தில் சுவாமிகளைக் காணோம். கொடிக் கயிற்றையும் காவித்துணியையும் காணோம். வெறிச் சென்று குழந்தையில்லா வீடுபோலிருந்தது. பரீக்ஷை தவறியதுகூட அவ்வளவு துன்பம் தரவில்லை. எனக்குத் தெரியாமல் சுவாமிகள் சென்றுவிட்டது என்னை வதைத் தது. அவருடன் கூட வந்துவிடட்டுமா என்று முந்திய நாள் நான் கேட்டதிலிருந்து பயந்துகொண்டு கிளம்பி விட்டாரோ என்னவோ என்ற சந்தேகம் தோன்றிய பொழுது என் துயரம் மட்டிழந்தது.பரீக்ஷையோ தவறி விட்டது. தகப்பனார் முகத்திலேயோ விழிக்கமுடியாது. பிறர் வந்து பையனுக்குப் பரீக்ஷை தேறவில்லையா என்று அவரை துக்கப் பிரச்னை கேட்கும்பொழுது எப்படி அதே வீட்டிலிருந்துகொண்டு சகித்துக்கொள்ளமுடியும்? இதை எல்லாம் உத்தேசித்து ஒரே வழிதான் உண்டு, ஏ மனமே! என்று நிச்சயப்படுத்திக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன். 

ஒரு வாரம் வரையில் எங்கெல்லாமோ சுற்றினேன். எப்படியெல்லாமோ சாப்பிட்டேன், உறங்கினேன். கடைசியாக எட்டாம் நாள் மாலை அவரைக் கண்டேன். கண்டதும் அப்படியே சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ் கரித்தேன். 

‘என்ன குழந்தை!’ என்றார். 

‘என்னை ஏமாற்றப் பார்த்தீர்களே–நான் என்ன பிசகு செய்தேன்?’ 

‘அசட்டுப் பையா! நாளைக்கு இன்னது வருமென்று தெரியாதா? அப்புறம் பழியை என்மீது சுமத்துவார்க ளென்று கிளம்பிவிட்டேன்.’ 

‘இனிமேல் விடமாட்டேன், நான் உங்களோடேயே வருவேன். உங்களைப்போலவே நானும் ஆகவேண்டும்.’ 

‘உனக்கெல்லாம் வேண்டாமடா அந்தத் தலை எழுத்து. அது ரொம்ப ரொம்ப ரொம்பக் கஷ்டம்.’ 

‘சுவாமிகளே! எனக்கோ புத்தி கட்டை. படிப் பென்றால் பிடிக்கவில்லை. வரவுமில்லை. இந்தத் தடவை யும் பரீக்ஷை தவறிவிட்டது. வயிற்றுக்காகத்தானே படிப்பு. பசியால் யாரும் செத்துப் போய்விட்டதாகக் கேள்விப்பட்டதில்லை. எனக்கு உலக வாழ்க்கையே வேண்டாம். ஆனந்தமாய் நீங்கள் எனக்குக் காவி கொடுத்து விடவேண்டும்.’ 

‘குழந்தை! இந்த ஆஸ்ரமத்தை-அதுவும் இந்த நாட்களில்… பரிபாலிப்பது கடினம்…உனக்குப் பக்குவம் போதாது, சொல்வதைக் கேளு. 

‘என்ன சொன்னாலும் திரும்பிப்போகப் போவதில்லை.’ 

‘உன் தகப்பனார் தேடமாட்டாரா?’ 

மூன்று பிள்ளைகளில் ஒன்று குறைந்தால் மோசமா? பரீக்ஷையில் தேறாவிட்டால் அவர் முகத்தைப் பார்க்கக் கூடாதென்றிருக்கிறார்…நான் உங்களை விட்டுப் போக மாட்டேன்.’ 

சுவாமிகள் என் பிடிவாதத்தைப் பார்த்தார். கருணை ததும்பும் குரலில் ‘நாளைக்குத் தெரியும் நான் சொல்வ தன் உண்மை’ என்றார். 

அதுமுதல் அந்தச் சுவாமிகளோடு எவ்வளவு நாடு களும் காடுகளும் சுற்றியிருக்கிறேன் ! நள்ளிரவில் பயமற்று எவ்வளவு மலைக்குகைகளிலிருந்திருக்கிறேன்! குகை யில் எதிரொலி எழுப்பும் எவ்வளவு கடுங்குரல்களைக் கேட்டிருக்கிறேன்! இப்படியே சஞ்சாரம் செய்து கொண்டு இரண்டு வருஷங்களுக்கு முந்தி ஹிமோத்கிரிக் குப் போய்ச் சேர்ந்தோம். ‘இவ்வளவு காலம் ஊர் சுற் றியது போதும், கொஞ்ச காலம் சமாதி பழகுவோம்’ என்றார். 

மலைச்சாரலில் ஒரு அழகிய குகை. பக்கத்தில் ஒரு சிறு நீர்வீழ்ச்சி. தலையை எடுத்து நிமிர்ந்து பார்த்தால் விண்ணை முட்டும் மரங்கள். இன்னும் எட்டாக்கையில், நீறு பூசிய நெற்றிபோன்று மேகங்கள் கவிந்த மலைச் சிக ரங்கள். அது ஏற்ற இடமென்று எங்கள் ஆஸ்ரமத்தை அங்கு அமைத்தோம். எங்களைப்போலவே வேறு சிலர் களும் அந்தப் பிரதேசத்தில் ஆஸ்ரமங்களை அமைத் திருந்தனர். 

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் எழுந்து ஸ்நானம் செய்துவிட்டுச் சற்று சும்மா உட்கார்ந்திருப்பேன். அதற் குப் பெயர்தான் தியானமென்றிருந்தேன். சுவாமிகள் பாட்டுக்கு ஒரே இடத்தில் உட்கார்ந்து கிடப்பார். அவர் கண் மூடியிருக்கும். பிறகு நான்குகையைவிட்டுக் கிளம்பி ஒரு மைல் தூரத்திலுள்ள தர்மசாலைக்குச்சென்று பாலும் சப்பாத்தியும் வாங்கிக்கொண்டு வருவேன். சுவாமிகள் கண்விழித்தபொழுது அவரெதிரில் அவற்றை எடுத்து வைப்பேன். வேண்டியதை எடுத்துக்கொண்டு பாக்கியை அவர் வைத்துவிடுவார்.நான் கொஞ்சம் எடுத்துக்கொள் வேன். நடுப்பகலில் படுத்திருப்பார்; ஆனால் தூங்கமாட் டார். நான் சிலநாள் தூங்குவேன். இல்லாவிட்டால் அடுத்த ஆஸ்ரமத்திற்குச் சென்று ஏதேனும் தத்வ விசா ரம் செய்துவிட்டுத் திரும்புவேன்; மாலை நான்கு மணிக் குப் பிறகு எட்டு மணிவரையில் அவர் சமாதியிலிருப் பார். நான் நீர்வீழ்ச்சிக்கருகே உட்கார்ந்துகொண்டிருப் பேன். சுக்லபக்ஷ இரவாயிருந்தால் நிலவில் லயித்தும், கிருஷ்ண பக்ஷமாயிருந்தால் காளிமீது கீர்த்தனங்கள் பாடியும் பொழுதைக் கழிப்பேன். 

இப்படியிருக்கும்பொழுது அனாமானந்த் என்ற பைராகியின் பழக்கம் எனக்கு ஏற்பட்டது.அவர் அடுத்த ஆஸ்ரமக்காரர். அவர் எனக்கு ஒரு பைராகினியை அறி முகம் செய்துவைத்தார். அவளுக்கு இருபது வயதுக்கு மேலிருக்காது. கடைந்தெடுத்ததுபோன்ற உடல். கார்த் திகை மாதத்து ஆற்றுப்பெருக்கில் மிதக்கும் விளக்கைப் போல் சுடர்விட்டெறியும் கண்கள். அவள் முழுத்தோற் றத்திலே ஒரு தனி சோபையும் அலக்ஷியமும் வழிந்து கொண்டிருந்தது. அவளுடைய முந்திய வாழ்க்கையைப் பற்றி விசாரித்ததில் அவள் கணவன் சிலவருஷங்கள் அவ ளோடு இருந்துவிட்டுத் திடீரென ஓரிரவில் கிளம்பிப் போய்விட்டார். எங்கோ சந்நியாசியாய், காஷ்ட மௌ னத்தைக் கைக்கொண்டு பனிக்கட்டி நிறைந்த பிரதேசத் தில் இருப்பதாய்க் கேள்விப்பட்டுத் தானும் பைராகினியாய் விட்டாள். 

யோகினிதேவி பைராகினியாகி இரண்டு மூன்று வருஷங்களாகியும் எங்கெங்கோ சாதுக்களையெல்லாம் தரிசனம் செய்து உபதேசம் பெற்றும் மனதில் இன்பம் பிறக்கவில்லை. இப்படித் தவித்துக்கொண்டிருந்த பொழுதுதான் அனாமானந்த் எங்கள்சுவாமிகளைப் பார்த் துப் பரம திருப்தியடைந்து யோகினிதேவியிடம் அவ ரைப்பற்றிச் சொல்லியிருந்தார். 

ஒருநாள் சுவாமிகளைத் தரிசனம் செய்யும்பொருட்டு யோகினிதேவியை அனாமானந்த் அழைத்துவந்தார். அப் பொழுது காலை நேரம். சுவாமிகள் குகையில் சமாதியில் இருந்தார். குகைக்குள் எட்டிப்பார்த்துவிட்டு யோகினி தேவி தான் கொணர்ந்த பழத்தையும் புஷ்பத்தையும் வைத்துச் சென்றாள். மறுநாள் நடுப்பகலில் வந்தாள். நானும் சுவாமிகளும் சேர்ந்தாற்போல், 

‘கேலதி பிண்டாண்டே–பகவான் 
கேலதி பிண்டாண்டே’ 

என்று பாடிக்கொண்டிருந்தோம். யோகினிதேவியைப் பற்றி அனாமானந்த் சுவாமிகளுக்குத் தெரிவித்தார். 

அதுமுதற்கொண்டு யோகினிதேவி அடிக்கடி சுவாமி களைப் பார்க்க வந்துகொண்டிருந்தாள். சில நாட்களுக்குப் பிறகு சுவாமிகள் அவளுக்குப் பஞ்சதசாக்ஷரியும் லலிதா சஹஸ்ரநாமமும் உபதேசம் செய்துவைத்தார். 

அதிலிருந்து யோகினிதேவி வலுவாகச் சாதனை செய் யத் தொடங்கிவிட்டாள். இரண்டு மூன்று மாதங்களுக் குள்ளே அவள் மனது நன்றாய் ஒருமுனைப்பட்டு இன்பத் தின் ஊற்றுக்கண்ணைத் தொட்டுவிட்டது. 

அந்த நாட்களில் என் மனது பளிங்குபோலாகி விட் டதாக நான் நினைத்துவந்தது கனவென்றறிந்தேன். யோகினிதேவியின் பால்யமும் அழகும் என் மனதை எங்கேயோ வேரறுத்துவிட்டது. மனதிலே இந்த மாதிரி குழப்பம் தோன்றிய மறு நிமிஷமே என் அறிவு பட மெடுத்துச் சினங்கொள்ளும். நான் பாறையில் முட்டிக் கொள்வேன் ; கன்னத்தில் அறைந்துகொள்வேன். என்ன பயன்? இயற்கையின் மாயாஜாலத்தைக் கண்டவர் அநேகர்; வென்றவர் ஒரு சிலரே. நான் முதல் வகுப்பி னன். இயற்கையின் மகாசக்திக்கு முன்னே நான் எம் மட்டு? இப்படியே மனது தெளிவதும் குழம்புவதுமாய்க் காலத்தை ஓட்டினேன். 

ஒரு பௌர்ணமி. பட்டப்பகலைப்போல் நிலவெரித் துக்கொண்டிருந்தது. ஆற்று நீரில் நீந்திச் செல்பவர் களின் அவிழ்ந்த தலைமயிரைப்போல் நிலவு வெள்ளத் தில் மரங்களின் கிளைகள் மிதந்துகொண்டிருந்தன. காற்று முயல் பாய்ச்சலில் சென்றது. பிரும்மாண்டமான உப்பு முட்டுகள்போல் மலைத்தொடர்கள் எழுந்தன. 

எங்கள் குகைக்கு வெளியே ஒரு தடுக்கைப் போட் டுக்கொண்டு இயற்கையின் வனப்பைப் பருகிக்கொண் டிருந்தேன். என் உள்ளக்கூட்டிலே ஏதோ தத்தளித்துக் கொண்டிருந்தது. மர நிழல், வெண் நிலவு இவற்றி னிடையே பிறந்து இன்பத்தையும் துன்பத்தையும் தூண்டுகிறதல்லவா மர்மமான குழலோசை ஒன்று ? ஜனச்சந்தடியும் இயற்கையின் மௌனமும் நம்மைப் பித்தாக்குகிறதல்லவா? 

அப்பொழுது என்றுமில்லாதவாறு சுவாமிகள் எங்கோ சென்றிருந்தார். என்னருகில் ‘பாபா!’ என்று குரல் கேட்டது. யாரெனத் திரும்பினேன். சிறிய நீர் வீழ்ச்சியைப்போல் நின்றாள் யோகினிதேவி. பிரமித்துப் போய்விட்டேன். அன்னை என்றல்லவா நினைத்திருக்க வேண்டும்? மனது மான்போலத் தாவிற்று. தடுக்கை விட்டு எழுந்திருந்து கிட்டத்தில் நகர்ந்தேன். ஆ! என்ன ஏமாற்றம்! ஒருவரையும் காணோம். இந்த மாதிரி விருத்தி எப்படிப் பிறந்ததென்று யோசனை செய்தேன். இருவருடைய சித்தம் ஒருமைப்பட்டால் பரஸ்பர எண் ணங்களும் அவாவும் சித்தக் கண்ணாடியில் பிரதிபலிக்கு மென்ற மனோதத்வம் ஞாபகத்திற்கு வந்தது. ஒருவேளை யோகினிதேவியும் என்னைப்பற்றி அதே நேரத்தில் நினைத்துக்கொண்டிருக்கிறாளோ என்று எண்ணி அவள் ஆஸ்ரமத்தின் பக்கம் நோக்கிக் கிளம்பினேன். 

ஆசிரமத்தின் கதவு ஒருக்களித்திருந்தது. சந்தடி செய்யாமல் உள்ளே நுழைந்தேன். ஒரு தர்பாசனம் மட்டும் மேலேயிருந்து தொங்கிக்கொண்டிருந்தது. தரை யிலே ஒரு கமண்டலம் முற்றத்தைப்போன்ற ஒரு இடை வெளியின் நடுவிலே ஒரு சிறுத்தைத் தோலின்மீது கண் களை மூடியவாறு யோகினிதேவி இன்பநிலவின் அதிஷ் டான தேவதைபோல் பத்மாசனத்தில் உட்கார்ந்து தியானம் செய்து கொண்டிருந்தாள். அவள் கட்டி யிருந்த காவித்துணி முழங்கால்மட்டும்தான் வந்திருந் தது. உடலிலே துணியில்லை. பக்கத்தில் ஒரு காவிச் சவுக்கம் கிடந்தது. 

அப்படியே நின்று கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படிப் பார்க்கலாமா? மகா பாப மில்லையா என்றால் வாஸ்தவம்தான். ஆனால் என்னை உணர்ச்சியல்லவா விழுங்கியிருந்தது? ஜகத்தில் இரண்டு பால்களையும் அவற்றுள் ‘கவர்ச்சியையும் படைத்த மூல சக்தியல்லவா என்னுள் இயங்கிக்கொண்டிருந்தது. அந் தச் சக்தியை வென்ற பெரியோர் எங்கள் சுவாமிகளைப் போல் வெகு சிலரே. எனக்கு வல்லமை ஏது?….. அப் படியே அந்தக் காட்சியில் லயித்துப்போய்விட்டேன் . நடு விலே நடுவிலே, என் மனக் கண்ணின் முன்பு அங்கே யோகினிதேவி தோன்றியதுபோல் இங்கே அவளுடைய அகக்கண்ணின் முன்பு என் உருவம் தோன்றித் தோன்றி மறைந்துகொண்டிருக்கக் கூடுமல்லவா என்ற எண்ணம் தலைகாட்டிக்கொண்டிருந்தது. 

கூரையிலிருந்து மரப்பல்லி ஒன்று தொப்பென்று விழுந்தது. யோகினிதேவி உலுக்கிவிழுந்து கண்ணைத் திறந்து பார்த்தாள்–முதலில் என்னையும் பிறகு பல்லி யையும். ஆனால் வாயைத் திறக்கவில்லை. உடலின்மீது துணியைப் போர்த்துக்கொள்ள முயலவுமில்லை. 

என் எண்ணத்திற்கு ஆதரவிருப்பதுபோல் உணர்ந் தேன். அடி எடுத்துவைத்து அவளண்டை நெருங்கி னேன். அவளுடைய சூடான மூச்சு என்மீது பட்டது. 

‘பாபா!’ என்றாள் யோகினிதேவி. 

உயர்ந்த வீணையின் மேல் ஸ்தாயிகளில் சஞ்சாரம் செய்துகொண்டிருக்கும்பொழுது தந்திக்கம்பிகள் 

அறுந்து போனால் பிறக்கும் நெட்டுயிர்ப்பின் துயரம் அவள் குர லில் தொனித்தது. 

அவளுடைய நீண்ட கண்களால் என்னைப் பார்த் தாள். தலையைச் சற்று பின்புறமாகத் தள்ளி ஒரு நொடி கண்ணை மூடினாள். அந்த நிமிஷத்திலே எழில் நிறைந்த உமையின் தவக்கனல் அவள் முகத்திலே வீசிற்று. அவ ளுடைய நெற்றியிலிருந்த விபூதி கற்பூரம் ஏற்றிவைத்த தைப்போல் பிரகாசித்தது. 

என் நெஞ்சிலே அற்புதமான வேதனை ஒன்று பிறந் தது. ‘ஜே! மாதா!’ என்று சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தேன். என் கண்ணீர்த்துளிகள் அவள் காலில் பட்டன. ‘அரே பாபா!’ என்று என்னைத் தூக்கி நிமிர்த்தப் பார்த்தாள். எடுத்தேன் ஓட்டம். 

திரும்பக் குகைக்கு வந்தபொழுது சுவாமிகள் ஒரு தடுக்கைப் போட்டுக்கொண்டு வெளியே உட்கார்ந்திருந் தார். அவரைப் பார்த்ததும் என் துயரம் கரைபுரண்டு விட்டது. அப்படியே அவர் காலில் விழுந்து கோவென்றழுதேன். 

‘சுவாமி! வெறும் கட்டக்கசுங்காய். தங்கள் நிழல் மீது என் நிழல்கூடப் படக்கூடாது-அவ்வளவு கேவ லம்! இதைத்தான் நீங்கள் ஆதியிலேயே குறிப்பிட்டீர் கள். நான் பிடிவாதம் செய்தேன். இப்பொழுது தெரி ந்துவிட்டது. யோகினிதேவியின் முகத்திலும் உங்கள் முகத்திலும் விழிக்க எனக்கு யோக்யதை கிடையாது. நான் போய்விடுகிறேன்.. உத்தரவு கொடுங்கள்’ என் றேன். 

‘அப்பா குழந்தாய்! நீ விழித்துக்கொண்டு விட் டாய்…இனி அபாயம் வராது’ என்று சமாதானம் சொன்னார். 

‘இந்த மனதை இனி நம்பமாட்டேன்’ என்று கிளம்பி விட்டேன். 

இப்பொழுது கொஞ்சம்கூட பயமில்லை. மிதந்தாலும் அமிழ்ந்தாலும் கவலையில்லை. ஏனெனில் நான் ஒரு நாடோடி. 

– பதினெட்டாம் பெருக்கு (சிறுகதைகள்), முதல் பதிப்பு: 1944, ஹிமாலயப் பிரசுரம். இரண்டாம் பதிப்பு: ஜூன் 1964, எழுத்து பிரசுரம், சென்னை. இந்த கதைகள் சுதேசமித்திரன், மணிக்கொடி, கலைமகள் முதலிய பத்திரிகையில் வெளியானவை.

ந.பிச்சமூர்த்தி வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *