விபசாரி மோசத்தைக் கண்டுபிடித்தது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 19, 2025
பார்வையிட்டோர்: 121 
 
 

(2006ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒருவன் ஸ்த்ரீகளைக் கலியாணம் செய்தால் விபசாரம் பண்ணுவானென்று வெகுநாள் வரைக்கும் கலியாண பண்ணாமல் இருந்தான். 

ஒருநாள் ஒரு விபசாரி அவனைக்கண்டு, மற்ற ஸ்த்ரீகளைப் போல என்னை நினைக்காதே. நான் கற்புடையவளாயிருப்பேன்” என்று தன்னிடத்தில் நம்பிக்கை வரும்படி சொன்னாள். 

அவள் வாய்மொழிகளை நம்பி அவளைக் கலியாணம் பண்ணிக்கொண்டான். சிலநாள் பொறுத்துத் தன் புருசனுடனே, “நீ வெளியிலே போய்வருகிற வரைக்கும் கதவைத் திறவாமல் தாள்பூட்டி இருப்பதற்கும், நீ வருகிற குறிப்பை அறிந்து கதவைத் திறந்துவைப்பதற்கும் நீ இருக்கிற ஏற்றத்தில் ஒரு மணிகட்டி வைத்தால் நலமாயிருக்கும்” என்று சொன்னாள். 

அது நல்ல யோசனையென்று அப்படியே செய்தான். அவன் மணி அசைக்கிறவரைக்கும் எதிர்வீட்டிலிருக்கும் ஒருவனை உள்ளே அழைத்து ஏகபோகமாக இருந்து கொண்டு, மணி நின்றால் அவனை வெளியிலே அனுப்பிவைத்துக்கொண்டிருந்தாள். 

ஒருநாள் இராயரும் அப்பாச்சியும் அந்த வழியாக வரும்பொழுது “ஏற்றத்தில் மணி கட்டியிருக்கிறது என்ன ஆச்சரியம்?” என்று அப்பாச்சியைக் கேட்க, அப்பாச்சி “இதோ தெரியப்படுத்துகிறேன். அந்த விசித்திரத்தைப்
பாருங்கள்” என்று ஏற்றத்தின் மேலே மிதிக்கிறவனை அழைத்து, “இவ்வேற்றத்தில் மணி கட்டுதற்குக் காரணமென்ன?” என்று கேட்க, அதற்கு அவன், என் பெண்சாதி தன் கற்புக்குக் குறைவராமல் நான் வீட்டுக்கு வருவதை அறிந்து கதவைத் திறக்கவும் மற்ற வேளை மூடிவைக்கவும் செய்யச் சொன்னது என்றான். 

அதுகேட்டு அப்பாச்சி, “என் எசமானுக்குத் தாகமாயிருக்கிறது. உங்கள் வீட்டுக்குப்போய் ஒரு சொம்பு மோர்கொண்டுவா” என்றான். 

“அந்தமட்டுக்கும் ஏற்றம் நிற்குமே எப்படி?” என்றான். அந்தமட்டும் நான் ஏறி மிதிக்கின்றேன். நீ போய்க் கொண்டுவா” என்றான். அப்படியே அப்பாச்சியை ஏற்றத்தின்மேலே ஏற்றிவிட்டுத் தான் வீட்டண்டையிலே போய்க் கதவைத் தட்டும்போது தன் பெண்சாதியும் எதிர்வீட்டுக்காரனும் சரசம் பண்ணிக்கொண்டிருந்தார்கள். 

கதவைத் திறந்தால் விபசாரம் தெரிந்துபோமென்று சீக்கிரத்தில் அந்த சோர புருஷனை அங்கிருந்த பாயில் சுருட்டிவைத்து மோர் பானையண்டையிலே வைத்துவிட்டுக் கதவைத் திறந்தாள். 

இவன் சீக்கிரமாக மோர் கொண்டுவரவேண்டுமென்ற அவசரத்தில் செம்பையெடுத்துக் கொண்டு மோர்ப் பானையண்டையிலேபோய் அதன்மேலே சாத்தியிருக்கும் பாயைத் தள்ளிவிட்டு மோர் மொண்டான். 

அந்தப் பாய்க்குள்ளிருக்கும் மனிதன் திடீரென்று கீழே விழும்பொழுது, அவன் தலை அம்மிக் கல்லிலே பட்டு உடைந்தது. அவன் மிகவும் கூச்சலிட்டான். அப்புறம் விசாரிக்கும்போது, தன் பெண்சாதிக்கு வேஷக்காரனென்றும் நெடுநாளாக இருவரும் கலப்பாக இருக்கிறார்களென்றும் அறிந்து விசனப்பட்டுக் கொண்டே மோர் கொண்டுபோனான். 

அந்த மோரைச் சாப்பிட்டு, இராயர் “ஏனப்பா இந்நேரம்?” என்று கேட்டார். அதைச் சொல்லுகிறதற்கு வாய் எழாமல் மரம் போலே நின்றான். 

“நீ ஒன்றுக்கும் அஞ்சவேண்டாம். உள்ளதைச் சொல்” என்றார். அப்புறம், தான் கலியாணம் பண்ணாமலிருந்த விதமும் மறுபடியும் பண்ணிக்கொண்ட சங்கதியும், தன் பெண்சாதி தன்னை மோசம் செய்ய யோசித்துத் தன்னை ஏற்றத்தில் மணிகட்டச் சொன்ன உபாயத்தையும் தான் மோருக்குப் போகும்போது பிரத்தியச்சமாகத் தான் கண்ட சாட்சியும் சொன்னான். அதைக் கேட்டு, “லோகத்திலே ஸ்த்ரீகளை” நம்பக்கூடாது. ஆகையால் விசனப்படாதே” என்று சொல்லிவிட்டு, இராயரும் அப்பாச்சியும் அப்புறம் அவ்விடம் தாண்டின பிற்பாடு, இராயர் மெச்சினேன் உன்னை என்று அப்பாச்சியை கட்டிக்கொண்டார்.

– இராயர் அப்பாஜி கதைகள், இரண்டாம் பதிப்பு: செப்டம்பர் 2006, பதிப்பாசிரியர்: முனைவர் ய.மணிகண்டன், சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூர்.

இராயர் அப்பாஜி கதைகள் பதிப்பாசிரியரின் முகவுரை - செப்டம்பர் 2006 முன்னுரை :  மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், இராயர்-அப்பாஜி கதைகள் முதலியன வாய்மொழி இலக்கிய இயல்புகள் நிரம்பப் பெற்றவை. இலக்கிய அழகு மிகுந்த இவை மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத் திகழ்பவையாகும். குறிப்பாகச் சிறுவர்களை ஈர்க்கும் திறம்படைத்தவை இவை.  இவற்றில் மரியாதைராமன் கதைகள் ஏற்கனவே என்னால் பதிப்பிக்கப் பெற்றுச் சரசுவதி மகால் நூலக வெளியீடாக வெளிவந்துள்ளது. மரியாதைராமன் கதைகள் குறித்த நெடிய ஆய்வுக் கட்டுரையொன்று மகால்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *