முதிர்ச்சி

திங்கட் கிழமை . மாலை நேரம். முகூர்த்த நாள் அல்லாத நாள். ஆஷா திருமண மண்டபத்தின் செக்யுரிட்டி மூத்த குடிமகன், வெள்ளை கேசம், மழித்த முகம் கனமான உருவம் கொண்ட ராஜமாணிக்கம், கல்யாண மண்டபத்திலிருந்து அருகில் உள்ள டீக்கடைக்குச் சென்றார்.
இவர் போன சமயத்தில், டீக்கடையில் ஆட்கள் யாருமில்லை என்பதால் , டீக்கடை டீ மாஸ்டர் நடுத்தர வயது ஒற்றை நாடி உருவம் கொண்ட தாடி முகம் மணி, பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு செய்தித்தாளைக் கையில் எடுத்த ராஜமாணிக்கத்தின் வாயைக் கிளறினார் –
“என்னய்யா , போரடிக்குதுன்னு இங்க வந்துட்டியா … பெவிக்கால் போட்டு ஒட்டினா மாதிரி மண்டபத்தை விட்டு நகர மாட்டியே…”
“யோவ் அந்த பக்கத்து டீ ஸ்டாலுக்குப் போகாம உன் கடைக்கு வந்தேன் இல்ல நீ இதுவும் பேசுவ … இதுக்கு மேலயும் பேசுவ … ஸ்ட்ராங்கா ஒரு டீய போடு…”
“போட்டு தர்றேன் இரு … ரொம்ப நாளா கேட்கணும்னு நெனச்சது … அது எப்படி வயசாளி உனக்கு இளம் வட்ட பையன் சிநேகிதமா இருக்கு உன்னை தேடி வந்து பார்க்குது …. அப்படி என்ன வசியம் பண்ணிட்டே … “
“மகேஷ் தம்பிய சொல்றியா? வசியமும் இல்ல மண்ணாங்கட்டியும் இல்ல.. நான் முன்னாடி அவங்க வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற ஒண்டு குடித்தன வீட்ல இருந்தேன். அப்ப அந்த பையனோட அப்பா தாத்தா ரொம்ப பழக்கம். வீட்ல சின்ன சின்ன வேலைக்கு அவங்க தாத்தா என்னைத்தான் கூப்பிடுவாரு. உதவிக்கும் என்னைத்தான் கூப்பிடுவாரு. மகேசோட அப்பா போனப்பவும் தாத்தா போனப்பவும் நான் அந்த பையன் கூடவே இருந்தேன். அதுல அந்த பையன் என் கிட்ட ஒட்டிகிச்சு…. அது உன் கண்ணை உறுத்துதா?”
“எனக்கு என்ன உறுத்தல்? எப்படி அவரு சிநேகம் உனக்குன்னு ஒரு ஜெனரல் நாலெட்ஜுக்காக கேட்டேன். அதோ.. அந்த தம்பியே வராரு..பாரு..”
“அப்ப ரெண்டு டீயா போடு … “
டிசர்ட் பேன்ட் அணிந்த கட்டுடல், தாடி இளைஞன் மகேஷ் , ராஜமாணிக்கத்தின் அருகில் வந்தமர்ந்தான். அவனுடைய கையில் லேப்டாப். ராஜமாணிக்கம் அவனைப் பார்த்து புன்னகை பூத்தார்.
“வாப்பா மகேசு … என்ன இந்த நேரத்துல வெளில ஆபீஸ்ல தானே இருப்பே…”
“அதை ஏன் கேட்கற மாமா… அப்பா போனப்புறம் கூட யாரும் தேடி வரல தாத்தா போனப்புறம் தினம் ஒருத்தர் வந்து தாத்தா பணம் தரணும்னு வந்து நிக்கறாங்க அம்மாவாலயும் பாட்டியாலயும் பஞ்சாயத்தை சமாளிக்க முடியல .. தாத்தா , பாட்டி கிட்ட ஒண்ணும் சொல்லிட்டும் போகல … வர்ற ஆளுங்க கிட்ட பேசி அனுப்பறதுக்காக நான் ஒர்க் ப்ரம் ஹோம் வாங்கிட்டேன்… வீட்ல இருந்தா பாட்டி கிட்ட அக்கம்பக்கத்து பெண்மணிகள் வந்து பேசிட்டு இருக்காங்க … ஒன்னோட மண்டபத்துல இன்னிக்கு பங்ஷன் இல்ல இல்ல அதான் அங்க வந்து வேலை செய்யலாம்னு வந்தேன் .. “
“அதுக்கு என்ன ஆபீஸ் ரூம் திறந்துதான் இருக்கு அங்க அமைதியா உன் வேலைய பாரு… டீ ய குடி போகலாம்..”
மணி அவர்கள் இருவரிடமும் தேநீர்க் கோப்பைகளை அளித்தார். தேநீரைப் பருகிய பின்னர் இருவரும் ஆஷா திருமண மண்டபத்தை நோக்கிச் சென்றனர். மகேஷ் , ஆஷா
திருமண மண்டபத்தின் வலப்பக்கத்தில் இருந்த பாழடைந்த கட்டிடம் அருகே பெரிய பெரிய கார்கள் நின்றிருப்பதைப் பார்த்தான்.
“யோவ் மாமா … இது என்னய்யா பாழடைந்த கட்டிடத்து முன்னால இத்தனை கார் நிக்குது…”
“அதானே எனக்கும் என்னன்னு தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கு.. நீ சத்திரத்து உள்ளே போய் உட்காரு நான் கமுக்கமா நோட்டம் பார்த்துட்டு வரேன்…”
மகேஷ் மண்டபத்திற்குள் சென்றான்.
மண்டபத்தின் அலுவலக அறையில் மேலாளர் இருக்கைக்கு எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்து மேசையில் லேப்படாப்பை வைத்துக் கொண்டு அலுவலில் ஈடுபட்டிருந்தான் மகேஷ். சில நிமிடங்கள் கழித்து
ராஜமாணிக்கம் பதட்டமான முகத்துடன் அவனருகில் வந்தார்.
மகேஷ் , ஆன்லைன் உரையாடலில் இருந்தவரிடம் அனுமதி கேட்டு நிறுத்தி விட்டு ராஜமாணிக்கத்தைப் பார்த்தான்.
“என்ன மாமா ஏன் முகத்துல இத்தனை கலவரம்?“
“அநியாயம்பா… ஒரு லேடி.. நாலைஞ்சு பௌன்சர்ஸ் , ஒரு சின்ன பொண்ண கடத்திகிட்டு வந்து அவளோட காதலனை மறந்துடணும்னு அவன் வழியில வரக் கூடாதுன்னு டார்ச்சர் பண்ணிகிட்டு இருக்காங்கப்பா வேப்பிலை அடிச்சிகிட்டு இருக்காங்க.. போய் அந்த பொண்ண காப்பாத்துப்பா… “
“யோவ் மாமா வீட்ல டிவிய அலற விடறாங்க பேசிகிட்டே இருக்காங்கன்னு ஈவினிங்ல உன் இடத்துல வந்து வேலை செய்யலாம்னு வந்தா … என்னை அவங்களோட கோத்து விடறே … மாற்றான் வலிமை தன் வலிமை இதெல்லாம் தெரியாம யார்கிட்டயும் மோதக் கூடாதுன்னு திருவள்ளுவர் சொல்லி இருக்காரு..“
“அதெல்லாம் சரிதான்.. அப்பா பேசறதுக்கு நேரமில்ல அது உன் தங்கச்சி ப்பா சினிமா மாதிரி பைட் பண்ண வேணாம் நயமா பேசி அந்த பொண்ண மீட்டு அதை அவங்க வீட்ல விட்டுட்டு வா..“
“யோவ் மாமா என்னய்யா உளர்றே … எனக்கு ஏதுய்யா தங்கை என் குடும்பத்தை பத்தி தெரிஞ்சவன்தானே நீ”
“தெரிஞ்சதாலேதாம்பா சொல்றேன். ஒங்க தாத்தா பரமேஸ்வரோட தம்பி ராஜசேகரன் ன்னு பெரிய புள்ளி அவரோட பேத்திப்பா அங்க மாட்டிகிட்டு இருக்கிற பொண்ணு … வனிதா..“
“ஆமாம் அவர் எங்க வீட்டுக்கு எப்பவாது வருவாரு … அஞ்சு நிமிசம் உட்கார்ந்துட்டு போய்டுவாரு.. தாத்தா சொல்லி இருக்காரு ஒன் சின்ன தாத்தா ன்னு …. ஆனா அவர் அவங்க அண்ணன் எங்க தாத்தா போனப்பவே வரலை அதுக்கு அப்புறமும் வந்து விசாரிக்கல… நான் ஏன் அவர் பேத்தி விசயத்துல மூக்கை நுழைக்கணும்…”
“நான் ராஜசேகர் வீட்ல செக்யுரிட்டியா இருந்து இருக்கேன். அது அவரோட பேத்தி தான் அது ஒங்க பரம்பரை பொண்ணுதானப்பா… அப்படி எல்லாம் நெனக்காதே.. அசம்பாவிதமா ஆயிடப்போவதுப்பா.. போய் காப்பாத்துப்பா…”
சரி என்ற மகேஷ் , ஆன்லைனில் உரையாடலில் இருந்தவரிடம் அனுமதி கேட்டு விட்டு லேப்டாப்பின் இயக்கத்தை நிறுத்தினான். எழுந்து நின்றான். பக்கத்து கட்டிடத்தை நோக்கி விரைந்து சென்றான்.
அன்று இரவு ஏழு மணி . பெரிய புள்ளி ராஜசேகரனின் வீடு. மிகப்பெரிய கூடத்தில் மகேஷ் நின்று கொண்டிருந்தான். கோட்சூட் அணிந்த , ஒல்லியான , மழித்த முகம் கொண்ட நடுத்தர வயது நபர் அவர் அருகில் வந்து நின்றார்.
“தம்பி.. நீங்க..”
“அய்யாவ பார்க்கணும் … நான் அவரோட ரிலேட்டிவ் …மகேஷ் … “
“ஜாடை தெரியுதே.. எங்க பாசோட அண்ணன் பேரன் தானே நீ ..நீங்க.. நான் போய் சொல்லிட்டு வரேன்..”
அத்தனை பர்னிச்சர், ஆசனங்கள் இருந்தும் மகேஷ் உட்காராமல் நின்று கொண்டிருந்தான். சில நிமிடங்கள் கழித்து, டிப்டாப் நபர் அவன் அருகில் வந்தார்.
“தம்பி … பாஸுக்கு இன்னிக்கு நிறைய விசிட்டர்ஸ். தலைவலின்னு …. உங்களுக்கு என்ன உதவி வேணும்னு பாஸ் கேட்க சொன்னாரு…”
மகேஷின் முகம் மாறியது. உள் எழுந்த சினத்தை அடக்கிக் கொண்டு பேசினான் –
“சார் எங்க குடும்பத்தோட ப்ரெட்வின்னிங் பார்த்துக்க என்னால முடியும் எங்க தாத்தா வெச்சிட்டுப் போன கடனை அடைக்கவும் என்னால முடியும் நான் சின்ன தாத்தா கிட்ட நிதி உதவி கேட்டு இங்க வந்து நிக்கல அவரோட பேத்திய , தூள் படத்துல வர்ற சொர்ணா அக்கா மாதிரி ஒரு லேடி கடத்தி வெச்சிருந்தாங்க எங்க ஏரியால இருக்கிற ஒரு பாழடைஞ்ச கட்டிடத்துல நான் எதேச்சையா அந்த பக்கம் போனப்ப பாழடைஞ்ச கட்டிடம் முன்னால ஏன் இத்தனை கார்னு போய் பார்தேன். காதலனை இவ மறக்கணும்னு மிரட்டிகிட்டு இருந்தாங்க ஒங்க ஐயாவை விட மிகப்பெரிய புள்ளியோட மகனை இவ காதலிக்கறா போல… நான் அந்த சொர்ணா அக்கா கிட்ட நயமாவும் மிரட்டலாவும் பேசி வனிதாவை மீட்டு மாடில அவ ரூம்ல விட்டுட்டு வந்திருக்கேன். … ஒங்க பாஸ் கிட்ட சொல்லிடுங்க … அவளை பத்திரமா பாத்துக்க சொல்லுங்க நான் வரேன் இல்ல போறேன்” என்றான் மகேஷ்.
அந்த கூடத்தின் நடுவே உள்ள அறையிலிருந்தபடி மகேஷ் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டுக்கொண்டிருந்த அவனுடைய சின்ன தாத்தா சபாரி அணிந்த கனமான சரீரம், மழித்த முகம் கொண்ட பெரியவர் ராஜசேகரன் வெளிப்பட்டார்.
அவர் பேராண்டி மகேசு என்றழைத்தார். மகேஷ் திரும்பிப் பார்க்காமல் மாளிகையின் வாயிலை நோக்கி விரைவாக நடந்தான்.
(இந்தப் புனைகதையின் சூழலும் கதை மாந்தரும் முற்றிலும் கற்பனையே. எவரையும் குறிப்பிடுவன அல்ல)
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: December 8, 2025
பார்வையிட்டோர்: 88
