கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி திராவிடநாடு
கதைப்பதிவு: December 3, 2025
பார்வையிட்டோர்: 510 
 
 

(1948ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நீண்டகாலமாகக் கலனாகிக் கிடந்த வீட்டை, மிகச் சிரமப்பட்டு, செலவிட்டு, பழுதுபார்த்து, குடி இருப்பதற்குத் தக்கவிதமானதாக்கினார் தருமலிங்கம். வீடு, மண்மேடாகித்தான் போகும் – அதைப் பழுது பார்ப்பதற்குப் பணமும் நேரமும் சிரமமும் அதிக வேலை. இதைவிடப் புதிய, அருமையான, வீடே கட்டிவிடலாம். தருமலிங்கம் வீண்வேலையில் ஈடுபடுகிறார்- சிரமம்தான் பலன்! என்று கூறினர், பலர். இருக்கும் வீட்டையே சரியாகப் பார்த்துக் கொள்ள முடியாத உல்லாச வாழ்வினர்.

“பாம்புப் புற்று புறக்கடையில்; தெரியுமோ!”

“ஆமாம்! அதற்கு அருகே ஒரு பாழுங் கிணறும் உண்டு; பார்த்திருக்கிறேன்.”

“கடைக்கால் மட்டும், பலமானதாம்.”

“என்ன பலம்! ஏதோ, இரண்டு தலைமுறைகளுக்கு முன்னாலே, அந்தக் காலத்திலே பலமானவை என்று கருதப்பட்ட சாமான்களைப் போட்டு, கடைக்கால் அமைத்திருக்கிறார்கள்.”

“சுவரிலே, பல இடம்..”

“பிளந்து போயிருக்கிறது; தரையிலே எங்கே பார்த்தாலும் குழிகள்; கூரை ஒழுக்கல்.”

“பேசாமல், அதை அப்படியே விட்டுவிட்டால், தானாக, மண்மேடாகி விடும்.”

“பிறகு, கத்தரியோ, வெண்டையோ, பயிரிடலாம்.”

“இதைப் போய், பழுது பார்த்து, வீடாக்கிக் குடி போகிறேன் என்று கூறுகிறாரே, தருமலிங்கம்!”

“பழுது பார்த்து,வீடாக்கி, குடிபோகிறார்!”

“பைத்யக்காரராக இருக்கிறீரே! குடிபோய் விட்டார் அங்கே! அங்குக் குடி இருந்து கொண்டே, பழுது பார்க்கப் போகிறாராம்.” பலரும் பேசினர் – சிலர், தருமலிங்கத்திடமே கூறினர். அவரோ, பழுதுபார்க்க முடியும் – வேண்டுமானால் பாருங்கள் – என்னால் முடியும் – அதற்கு இன்னின்ன வழிகள் உண்டு, என்றெல்லாம் பேசவில்லை.

“கஷ்டந்தான்! வீண் தொல்லைதான்! ஆனால், கவனிக்காம லிருந்துவிட்டால், குட்டிச்சுவராகத்தானே போகும். கள்ளி காளான் முளைத்து. கழுதை மேயுமிடமாகி, ஊருக்கே கேடாகப் போகுமே!” என்று கூறிவிட்டு,

பழுது பார்ப்பதற்காக, அங்கேயே சென்று தங்கி, சிரமப் பட்டு, வீட்டைச் சரியாக்கி, குடியிருப்பதற்கு இலாயக்கானதுதான் என்று (முன்பு குறை கூறினவர்கள் கூடக்) கூறும்படியான நிலையை உண்டாக்கினார்.

ஆற்றலாலும், ஓயாத உழைப்பாலும், இந்த மகத்தான காரியத்தைச் செய்து முடித்தவரைப் பாராட்டவும், அவரால் திருத்தி அமைக்கப்பட்ட வீட்டைக் காணவும். பலர் வந்தனர். வந்தவர்களில் ஒருவர், வீட்டின் புறக்கடைக்குப் போகும் வழியில், ஒரு மரத்துண்டு, இருக்கக் கண்டார்.

“இது என்ன செம்மரமா?” என்று கேட்டார் தருமலிங்கத்தை.

தருமலிங்கம், அப்போதுதான், அந்த மரத்துண்டைப் பார்த்தவர் போலப் பேசலானார்.

”இருக்கும்! அல்லது, வேறு ஏதாவது வகையான மரமாகவும் இருக்கும்” என்றார்.

இதற்குள் புதியவர், மரத்துண்டைப் பார்வையிட்டு. “இல்லை, தருமலிங்கம்! இது தேக்குத்தான்! நல்லவிதமாகவே இருக்கிறது. சரியான அளவு! அழகான சரம் செய்யலாமே, இதைக் கொண்டு!” என்றார்.

“ஆமாம்..” என்று, அர்த்தமற்ற முறையிலே, பேசினார் தருமலிங்கம்,

இதற்குள் புதியவர், தூண் செய்து, இந்த இடத்தில் நிறுத்தி, அதற்கு ஏற்றபடி, இன்னவிதமாக ஒரு சிறு மாடம் அமைக்கலாம். கட்டடம் அழகாகத் தோற்றமளிக்கும் என்றெல்லாம் புதிய விளக்கமே கூறலானார். தருமலிங்கம் தலை அசைத்தார்.

நாட்கள், மாதங்கள், ஆண்டுகளும் ஓடின! மரத்துண்டு. அங்கேயே கிடந்தது.

“சரங்கள் போடலாமே! வாசலில், அழகு வளைவுகளுக்கு உபயோகிக்கலாமே! அதைச் செய்யலாமே, இதைச் செய்யலாமே! -என்று எவ்வளவோ பேர், எத்தனையோ யோசனைகளைக் கூறினர் தருமலிங்கத்திடம், அவர் எதற்கும் இசையவுமில்லை- மறுக்கவுமில்லை “ஆமாம்! அது சரி! ஆகட்டும்! பார்ப்போம்!” என்ற அளவோடேயே, பேச்சை முடித்துவிடுவார்.

மரத்துண்டு, இருந்த இடத்திலேயே கிடந்தது.

விவரமறியாதவர்கள், “இது இன்ன சரியான மரமல்லவா!” என்று கேட்பர்; தருமலிங்கம், “இதுவா! அருமையான மரம்! உபயோகமானது! நல்ல மரம்” என்று பாராட்டுவார். அவர்கள் ஆச்சரியமடைந்து, “அப்படியானால், ஏன் இதை, இப்படியே போட்டு வைத்திருக்கிறீர்? உபயோகப்படுத்துவதுதானே!” என்று கேட்பர். தருமலிங்கம், அவர்களிடமும்,ஆமாம் – செய்ய வேண்டும்” என்றுதான் கூறுவார்.

குப்பை கூட்டவேண்டிய நேரங்களிலோ-அல்லது. இடுக்கிலே தேளோ, வேறு ஏதேனும் விஷப் பூச்சியோ பதுங்கும் போதோ, மரத்துண்டை, நகர்த்துவார்கள் வேலை முடிந்ததும், மீண்டும் மரத்துண்டு, இருந்த இடத்துக்கே போய்ச் சேரும்.

“இந்தக் கட்டையை இங்கேயே போட்டு வைத்திருப்பதால், போக வர வழிக்குக்கூட இடைஞ்சலாக இருக்கிறது. குப்பை, கூளம், இடுக்கிலே சேருகிறது” – என்று. வீட்டினர் குறைகூறிப் பார்த்தனர்.

“அது ஒரு பக்கமாக இருக்கிறது அதனாலே, உனக்கென்ன இடைஞ்சல் வழியை அது அடைத்துக் கொண்டில்லை” என்று கூறிவிடுவார் தருமலிங்கம்.

நல்லமரம் வேலைப்பாட்டுக்கு ஏற்றது – அழகான பல பொருள் செய்யலாம் அதைக் கொண்டு – என்று பலர் பேசிய பிறகும், இருந்த இடத்திலேயே, கிடந்தது, மரத்துண்டு, எனவே முதலில், அதை உபயோகமான பொருள் என்று எண்ணின வர்களில் சிலருக்கு, அது, வெறும், ‘கட்டை’யுமாகி விட்டது அதை வெட்டி, விறகு ஆக்கினால், அடுப்படிக்கு நல்லது, என்று கூட எண்ணினர் அவரிடமும் கூறினர். அவரோ “அடுப் பெரிக்க உங்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லையோ! இதைப்போய், விறகு ஆக்கும்படி சொல்கிறீர்களே! உங்களுக்கு ஏதாவது மரச்சாமான்களின் தரமும், உபயோகமும் தெரிந்தால் தானே” என்று சற்றுக் கண்டித்துப் பேசுவார்.

“ஒரு காரியத்துக்கும் இதை உபயோகப்படுத்தாம லிருக்கவே, விறகுக்காவது ஆகட்டுமே என்று சொன்னோம்” என்று அவர்கள் விளக்கம் கூறுவர்.

”சரிசரி, எனக்குத் தெரியும், நீங்கள் போங்கள்” என்று கோபிப்பார் தருமலிங்கம்.

மரத்துண்டோ, அங்கேயே கிடந்தது. மரத்துண்டுதானே!

தேள் ஒடும் அதன்மீது – பல்லி ஒடும்! குப்பைகூளம் பக்கத்திலே சேர்ந்து உறவு கொண்டாடும். ஆனால், மரத்துண்டு, அதனால் பாதிக்கப்படவில்லை. தேள் கொட்டினால் என்ன! அது மரத்துண்டுதானே!

“தருமலிங்கம் வீட்டிலே பார்த்தேன், ஒரு நல்ல மரத்துண்டு! அது கிடைத்தால், நமது காரியத்துக்கு, பொருத்தமாக இருக்கும்.”

”ஆமாம் நானும் பார்த்திருக்கிறேன் நீண்ட ட நாளாக அவரிடம் இருக்கிறது.”

“ஏதேனும் காரியமாகத்தான் அவர் அதை வைத்துக் கொண்டிருப்பார்.”

“அப்படித் தெரியவில்லையே! இவ்வளவு நாளாகவா, அவருக்கு, அதைக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாம லிருக்கும்!”

“யாருக்கும் தரவும் மாட்டார்!”

என்றும், ஊரிலே, பலர் பேசிக்கொண்டனர். தருமலிங்கம், மரத்துண்டை இருந்த இடத்திலேயே போட்டு வைத்தார்- மரத்துண்டுதானே, அது எப்படி, இடம்விட்டு இடம் நகரும்! அங்கேயே கிடந்தது!!

காற்றுமழை அடித்தது ஒருநாள்! மண் சுவர்கள் கரைகிற நிலைமை! ஜன்னல்கள் படார்-படார்-என அடித்துக் கொண்டன, தருமலிங்கத்தின் வீட்டின் சமயலறைச்சுவர், வீரலிட்டது. சாய்ந்து விடுமோ சரிந்து விடுமோ என்று கவலைப்படும் நிலைமை.

“சுவர் சாய்ந்து விடும் போலிருக்கிறதே” என்று கூவினர் வீட்டினர்.

தருமலிங்கம், யோசனையில் இருந்தார். காற்றும் மழையும் கலந்து அடிக்கிறது சுவர் சரிவதற்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்டது! தருமலிங்கத்துக்கும் யோசனை உதித்தது, வீட்டினரில் சிலரைக் கூப்பிட்டார்! “டே! மரத்துண்டு இருக்கிறதே, அதைப் பிடித்துக் கொண்டுபோய், சுவருக்கு, முட்டுக் கொடுங்கள் என்றார். செய்தனர். சுவர் சரியவில்லை! காற்றும் மழையும், கொஞ்ச நேரத்திற்குப் பிறகு, நின்றுவிட்டது. தருமலிங்கம் வீட் டிலே, சமயற்கட்டுச் சுவர், பலமில்லாதது பிளவு உள்ளது ஆகவே இந்தக் காற்று மழைக்கு, கீழே விழுந்து போயிருக்கும். என்று எண்ணிக் கொண்டனர் சிலர். அவர்களிலே ஒருவர், மழை விட்ட பிறகு வந்தார் – தருமலிங்கத்தைக் காண சுவருக்கு மரத்துண்டு, முட்டு’ கொடுக்கப்பட்டு இருப்பதைக் கண்டார்.

“இதற்காகத்தானா, இந்த மரத்துண்டை இவ்வளவு காலமாக, எதற்கும் உபயோகிக்காமல் வைத்திருந்தீர்” என்று சிரித்துக் கொண்டே கேட்டார். தருமலிங்கம் “ஆமாம் என்றார் – அதுவும் ஒப்புக்கு. மரத்துண்டுக்குத் தெரியாது தன்னைப் பற்றியும், அவர்கள் இருவரும் பேசியது! எப்படித் தெரியும்! அது மரக்கட் டைதானே!! சரியும் சுவருக்கு, ‘முட்டு’ ஆகி நிற்கும் நிலைமையும் அதற்குத் தெரியாது. மரக்கட்டைதானே!!

சரிய இருந்த சுவரைப் பழுது பார்த்து, பலமானது மாக்கினார் தருமலிங்கம். பிறகு ‘முட்டு’ தேவையில்லை – எனவே பழையபடி மரத்துண்டு, கீழே கிடத்தப்பட்டது.

நாளாவட்டத்திலே, அந்த மரத்துண்டிலே, ‘செல்’ பிடிக்கலாயிற்று மரத்துண்டுதானே! உள்ளேயே தின்று கொண்டிருந்தது, கரையான் கூட்டம், மரக்கட்டைக்கு இயல்பாக இருந்த தரமும் வலிவும் போய்விட்டது.

அந்த நிலையிலே, வீட்டுக்கு வந்த ஒருவர், மரத்துண்டைக் காட்டிக் கேட்டார், “இது என்ன, பயனில்லையா?” என்று. கேட்டுவிட்டு, அருகே சென்று மரத்துண்டைத் தள்ளிப்பார்த்தார்- செல் ஏறியிருக்கக் கண்டு, “ஒஹோ ஹோ! இதனால்தானா இதை எதற்கும் உபயோகிக்காமலே இருந்து விட்டீர்கள்” என்று கேட்டார். தருமலிங்கம் குறிப்பாக ஒருபதிலும் கூறவில்லை. “நான் திடமாக இருந்தேன் – பயன்பட்டிருப்பேன் பலர் எதிர்பார்த்தனர் – எடுத்துரைத்தனர் – பயன்படுத்தவில்லை – – மூலையில் கிடந்தேன் – இப்போது கரையான் தின்று கொண்டிருக்கிறது- அதற்கு நான் என்ன செய்ய” என்று கேட்க, வாய் ஏது மரத்துண்டுக்கு!

– 13-6-1948, திராவிடநாடு.

Peraringnar_Anna காஞ்சீபுரம் நடராஜன் அண்ணாதுரை (C. N. Annadurai) (15 செப்டம்பர் 1909 - 3 பெப்ரவரி 1969), தமிழ் நாட்டின் ஆறாவது முதலமைச்சராவார். அண்ணா, காஞ்சீபுரத்தில், மத்திய தர நெசவுத் தொழிலாளர் குடும்பமொன்றில் பிறந்தார். அவர், சென்னை பச்சையப்பன் உயர் நிலைப் பள்ளியிலும், பின்னர் பச்சையப்பன் கல்லூரியிலும் கல்வி கற்றார். பரவலாக அவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். அரசியலில் காங்கிரசல்லாத திராவிடக்கட்சிகளின் முதல் பங்களிப்பாளராக அண்ணாதுரை விளங்குகின்றார். முதன்முதலில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *