நிழல்
(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘கூ ஊஊ!’ என்று நீட்டி முழக்கிய ஆலைச் சங்கின் ஒலி அடங்கியதும் தொழிலாளர்கள் அனைவரும் அணை திறந்த வெள்ளம்போல் அலை அலையாக வெளியே வந்துகொண்டிருந்தார்கள்.
அப்போது மணி பன்னிரண்டரை.
சாப்பாட்டுக்கான இடைநேரம். மணி ஒன்றரை ஆனதும் இடைவேளை முடிந்து விட்டதை அறிவிக்க மீண்டும் சங்கு ஊதப்படும். இந்த ஒரு மணி நேர இடைவேளை தான் தொழிலாளர்களின் இன்ப நேரம்.
அதுவரை வெறிச்சோடிக் கிடக்கும் ஆலையின் வெளிப் புறச் சூழ்நிலையில் சங்கு பிடித்ததும் ஒருவிதப் பரபரப்பும் கலகலப்பும் தோன்றிவிடும். சாப்பாட்டுக் கூடைகளும், அவற்றிலுள்ள பளபளக்கும் பித்தளை டிபன் காரியர்களும் ஆங்காங்கே பளிச்சிடும்.
சாரங்கா மில்லைச் சுற்றிலும் நிழல் மரங்களுக்குக் குறைவில்லை. காட்டு வாழை, தூங்குமூஞ்சி, செந்நிறப் பூக்களைக்கொண்ட கலியாண முருங்கை ஆகிய பல்வேறு மரங்கள் குளிர் நிழலைப் பரப்பிக் கொண்டிருக்கும்.
அந்த மரங்களுக்கு அடியில்தான் தொழிலாளர்கள் உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம். நாய்கள் நாக்கை நீட்டிய படியே அவர்கள் உண்ணும் உணவைக் கண்கொட்டாமல் கவனித்துக் கொண்டிருக்கும். மரங்களின்மீதும், சுவர்களின் மீதும் உட்கார்ந்துள்ள காக்கைகள் மேலிருந்தபடியே எதைக் கொத்திச் செல்லலாம் என்று குறி பார்த்துக் கொண்டிருக்கும்.
பூண்டு சேர்த்த மசாலாக் குழம்பின் நெடி சுற்றிலும் சூழ்ந்து வீசும்.
அன்று சங்கு ஊதியதும் தொழிலாளர்கள் அனைவரும் அவரவர்கள் வழக்கமாக உட்காரும் டங்களில் போய் அமர்ந்து விட்டார்கள்.
அதோ, அந்த வேப்ப மரத்தடியில் நிற்கும் கன்னிப் பெண் யார்? அவள் யாரைத் தேடுகிறாள்? யார் வரவை அத்தனை ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக் கிறாள்?
மில் தொழிலாளி நாராயணசாமி நிதானமாக வெளியே வந்து கொண்டிருந்தான். அவன் கண்கள் யாரையோ தேடின.
வழக்கமாக அவனுக்குச் சாப்பாடு கொண்டு வரும் கிழவி எங்கே? நாராயணசாமியின் வரவை எதிர்நோக்கி வேப்ப மரத்தடியில் நின்றுகொண்டிருந்த அப்பெண்ணின் கண்களில் அவனைக் கண்டதும் ஒருவித ஒளி தோன்றியது. முகத்தில் மகிழ்ச்சி பிரதிபலித்தது. இதழ்கள் முறு வலித்தன.
அந்தப் பெண்ணைக் கண்டதும் நாராயணசாமிக்கு எத்தனை மகிழ்ச்சி! வேப்ப மரத்தை நோக்கி வேகமாக நடந்து சென்றான் அவன்.
“பாப்பா! இந்த வெயில்லே நீயா சாப்பாடு எடுத்துக் கிட்டு வந்தே? தார் ரோடிலே கால் சுட்டுப் போயிருக்குமே! ஏன், அந்தக் கிழவிக்கு என்னவாம்?” – அன்பும் பாசமும் கனிந்த குரலில் கேட்டான் நாராயணசாமி.
“அதுக்கு வூட்ல வேலை இருக்குதாம். புள்ளைக்குக் காய்ச்சலாம். வரலேன்னு சொல்லிடுச்சு. அதனாலே நான் எடுத்தாந்தேன்” என்றாள் பாப்பா.
வேப்ப மரத்துக்குச் சற்றுத் தூரத்தில் காம்பவுண்டுச் சுவர் திருப்பத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த கண்ணம்மாவின் முகம் கறுத்துச் சிறுத்தது. இதயத்தில் பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. அவர்கள் இரு வருக்கும் உள்ள உறவின் தன்மையை அறிந்து கொள்ளத் துடித்தாள் அவள்.
பாப்பா இளையைப் போட்டுப் பரிமாறினாள். அன்று அமாவாசையானதால் வெறும் மரக்கறி உணவுதான். நாராயணசாமிக்கு அவ்வளவாகப் பிடித்தமில்லாத சாப் பாடு. அவன் புட்டியில் நிரப்பிக்கொண்டு வந்திருந்த தண்ணீரை இடையிடையே குடித்துக்கொண்டே சாப் பாட்டை விழுங்கித் தீர்த்தான்.
“அம்மா எட்டணா வாங்கியாரச் சொல்லிச்சு.” – அந்தப் பெண் அவனிடம் பணம் கேட்டாள்.
“எதுக்குப் பணம்?”
“அது எதுக்கோ? என்னைக் கேட்டா?”
அவன் தன் சட்டைப்பைக்குள் கையைவிட்டு எட்டணாச் சில்லறையை எடுத்துப் பாப்பாவின் கையில் கொடுத்தான். அவள் உற்சாகத்துடன் கூடையைத் தூக்கித் தலையில் வைத்துக்கொண்டு புறப்பட்டு விட்டாள்.
கண்ணம்மா சாப்பாட்டை முடித்துக்கொண்டு மில்லில் வேலை செய்யும் தன் சிநேகிதிகளுடன் ‘தாயம்’ ஆடிக் கொண்டிருந்தாள். நாராயணசாமி அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தான்.
கண்ணம்மா கடைக்கண்ணால் அவனைப் பார்த்தும் பார்க்காதது மாதிரிச் சட்டென முகத்தைத் திருப்பிக் கொண்டு, விளையாட்டில் கவனம் செலுத்துவதுபோல் பாசாங்கு செய்தாள்.
“எப்போதும் தன்னைச் சிரித்த முகத்துடன் பார்க்கும் அவள் இன்று ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறாள்?” நாராயணசாமிக்கு ஒன்றும் புரியவில்லை.
அவன் அவளை அணுகிப் பேசியிருப்பான். ‘அவள் முகம் கொடுத்துப் பேசத் தயாராயில்லாதபோது தான் மட்டும் ஏன் அவளிடம் பேச வேண்டும்?’ என்ற எண்ணம் அவனைத் தடுத்தது.
மில் சங்கு மீண்டும் ஒலித்தது. ஆலையைவிட்டு வெளியே. வரும்போது எல்லாருக்கும் பின்னால் நிதானமாக வந்த நாராயணசாமி இப்போது எல்லாருக்கும் முன்னால் வேகமாக உள்ளே சென்றான்.
இயங்கும் விசைக் கருவிகளிலிருந்து பிரிந்த மெல்லிய நூல் இழைகள் இடையறாமல் ஓடிக் கொண்டிருந்தன.
இயந்திரங்களின் பேரிரைச்சல் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது. நாராயணசாமி ஏதோ செய்துகொண்டே எதையோ சிந்தித்துக்கொண்டிருந்தான். அவனிருந்த இடத் துக்கு அடுத்த பக்கத்தில் பெண்கள் வரிசையாக அமர்ந்து வேலை செய்து கொண்டிருப்பதைக் கண்ணாடி ஜன்னல் வழி யாகக் காண முடியும். கண்ணம்மா எப்போதும் நாராயண சாமியும் தானும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் கோணத்தில் உட்கார்ந்திருப்பது வழக்கம். ஆனால் இன்று மட்டும் ஏனோ வேறு இடத்தில் போய் உட்கார்ந்திருக்கிறாள்? தன்மீது அவளுக்கு என்ன கோபம்? இலேசாகத் தலையில் வெண்பஞ்சு படிந்திருக்கும் அவள் முகம் அவனுடைய மனக் கண்முன் தோன்றியது.
‘பாவம், கண்ணம்மா கிழவியாகி விட்டால் அவள் தலை இப்படித்தான் நரைத்து வெளுத்துவிடும்!’ என்ற ஒரு விசித்திரமான எண்ணம் அவன் உள்ளத்தில் தோன்றியது.
அதை நினைக்கும்போது அவனுக்குத் தன்னை அறியாமல் சிரிப்பு வந்துவிட்டது.
இடைவேளையில் எப்போதும் கண்ணம்மா தன்னைப் பார்க்காமல், பேசாமல், சிரிக்காமல் போக மாட்டாளே? இன்று என்ன வந்துவிட்டது அவளுக்கு?
ஒரு வேளை பாப்பாவைப் பார்த்துவிட்டுக் கண்ணம்மா தப்புக் கணக்குப் போட்டிருப்பாளோ?
தினமும் சாப்பாட்டு வேளையில் கீரை மசியல் அல்லது மீன் குழம்பு என்று ஏதாவது ஒன்றைக் கொண்டு வந்து கொடுப்பாளே ? இன்று அவள் தன்னைத் திரும்பியும் பார்க்க வில்லையே !
இன்று வேலை செய்யும் இடத்திலும் வேண்டுமென்றே இடம் மாறி உட்கார்ந்திருக்கிறாள். எதையோ மனத்தில் எண்ணிக் கொண்டுதான் இப்படிப் பேசாமல் இருக்கிறாள்.
எத்தகைய துன்பங்களையும் பொறுத்துக் கொள்ளக் கூடிய நாராயணசாமிக்குத் தன்னுடைய காதலி கண்ணம் மாவின் போக்கு பெரும் வேதனையை அளித்தது.
2
ஆலையின் காரியாலயப் பகுதியில் ஏதோ ஒருவித இருள். படர்ந்த சூழ்நிலையின் அறிகுறி தென்பட்டது.
மில் முதலாளி சாரங்கபாணியின் அறையிலிருந்து ஒலித்த மணி ஓசையில் எப்போதும் தொனிக்கும் இனிமை இல்லை. துயரத்தின் ஓலமாகவே தொனித்தது.
பியூன் வேணுகோபால் ஓடிச்சென்று மானேஜர் ரங்க. சாமியிடம் முதலாளி அழைப்பதாகக் கூறினான்.
ரங்கசாமி தயாராக வைத்திருந்த ஆலைத் தொழிலாளர் களின் பட்டியல், அவர்களுடைய சம்பளம், சர்விஸ் காலம் முதலிய விவரங்கள் அடங்கிய ‘பைலு’டன் முதலாளி அறைக்குள் புகுந்தார். இதற்குள்ளாகவே ஆபீசுக்குள் விஷயம் புகையத் தொடங்கிவிட்டது. ஆலையில் ஆள் குறைப்பு நடக்கப் போகிறது’ என்னும் இரகசியம் கிட்டத் தட்ட எல்லாருடைய செவிகளுக்கும் எட்டிவிட்டது.
“ஏதோ என்னுடன் முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசவேண்டும் என்று நேற்று சொன்னீர்களே, என்ன விஷயம்?” என்றார் சாரங்கபாணி, மானேஜரிடம்.
“ஸார், வியாபாரிகளிடமிருந்து போதிய பருத்தி கிடைக்காததாலும், இரண்டு இயந்திரங்கள் உபயோக மற்றுப் போய்விட்டதாலும் இரண்டு வருட காலமாகவே நம்முடைய மில்லில் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுக்கொண் டிருக்கிறது. இந்த வருடம் ஏற்பட்டுள்ள நஷ்டம் இலட்சத்து அறுபதாயிரம் ரூபாய். இதோ ‘பாலன்ஸ் ஷீட்'” என்றார் ரங்கசாமி.
புருவத்தைக் சுளித்தபடி அதைக் கவனித்தார் சாரங்கபாணி. “நஷ்டம் ஏற்படாமலிருக்க என்ன செய்யலாம்?”
“ஆட்களைக் குறைப்பதைத் தவிர வேறு எந்த வழியுமே தோன்றவில்லை. மொத்தத்தில் ஐந்நூறு ஆட்களைக் குறைத்தால்தான் நம்முடைய மில் மீண்டும் பழையபடி இலாபத்தில் வேலை செய்யத் தொடங்கும்” என்றார் மானேஜர்.
“எவ்வளவு? ஐந்நூறு பேரா? அப்படியானால் நம் மில்லில் வேலை செய்பவர்கள் மொத்தம் எத்தனை பேர்?” – இதயமே நின்றுவிடும் போன்ற அதிர்ச்சியுடன் கேட்டார் சாரங்கபாணி.
“பார்சல் செக்ஷனிலிருந்து ‘கிளரிகல்’ செக்ஷன்வரை மொத்தம் ஆயிரத்து நூற்று எழுபது பேர் இருக்கிறார்கள். இவர்களில் பெண் தொழிலாளர்கள் இருநூற்று அறுபது பேர்” என்றார் மானேஜர்.
முதலாளி ஈன சுரத்தில், ‘உம், உம்’ என்று முணு முணுத்தபடியே, மானேஜர் கொடுத்த பட்டியலை வாங்கிப் பார்த்தார்.
அவர் மேஜைமீது கொண்டு வைக்கப்பட்டிருந்த காப்பி சில்லென்று ஆறிப்போய், ஏடு தட்டிக் கொண்டிருந்தது.
“கூடாது. கூடாது, கூடாது! – தலையை இப்படியும் அப்படியும் அசைத்தார் அவர்.
“ஐந்நூறு பேரை ஒரு நாளும் எடுக்கக்கூடாது. நமக்கு இலாபம் என்பதே வேண்டாம். நஷ்டம் இல்லாமல் நடந்து கொண்டிருந்தால் அதுவே போதும். நஷ்டமில்லாமல் நடத்துவதற்குக் குறைந்தபட்சம் எத்தனை ஆட்களைக் குறைத்தால் போதுமோ, அவ்வளவு பேரை மட்டுமே வேலையி லிருந்து எடுத்தால் போதும்.”
“அதற்கும் இதோ ஒரு கணக்குப் போட்டு வைத்திருக்கிறேன்.. நூற்று முப்பது பேரைக் குறைத்தால் போதும். மில்லை இலாப நஷ்டமின்றி நடத்த முடியும்” என்றார் மானேஜர்.
“ஐந்நூறு பேரை அனுப்பிவிட்டு அதனால் கிடைக்கும் இலாபம் எனக்கு வேண்டவே வேண்டாம். அதைக் காட்டிலும் நூற்று முப்பது பேரை மட்டுமே குறைக்கலாம். மில் மீண்டும் இலாபத்தில் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டால் அவர்கள் அத்தனை பேருக்கும் முதலில் வேலை கொடுத்து விடலாம். இங்கு வேலை செய்யும் மற்றத் தொழிலாளர்களின் நன்மையை உத்தேசித்து இப்போதைக்கு இந்தக் காரியத்தைச் செய்வதைத் தவிர வேறு வழியே புலப்படவில்லை.எங்கே, இப்படிக் காட்டுங்கள் அந்த லிஸ்ட்டை” என்று அந்தப் பட்டியலை வாங்கிப் பார்த்தார் சாரங்பாணி. அதில் வரிசையாக எழுதப்பட்டிருந்த பெயர்களுக் கிடையில் நாராயணசாமி என்னும் பெயரும் இருந்தது. அதைக் கண்டதும் அவர் திடுக்கிட்டார்.
“யார், இந்த நாராயணசாமி நம் மில்லில் போர் மேனாயிருந்த பாண்டுரங்கத்தின் மகனா?”
“ஆமாம்” என்றார் ரங்கசாமி.
“பாண்டுரங்கம் இந்த மில்லில் முப்பது வருட காலம் உழைத்து, உடல் தேய்ந்து, காச நோயால் பாதிக்கப்பட்டு எலும்புக்கூடாகி உயிர் நீத்தவன். தன் வாழ் நாளெல்லாம் இந்த மில்லின் வளர்ச்சிக்காகவே பாடுபட்டவன். நேர்மை, ஒழுக்கம், உழைப்பு, விசுவாசம், கடமை உணர்ச்சி முதலிய அரிய நற்பண்புகளுக்கெல்லாம் உறைவிடமாக விளங் கியவன். அவனுடைய ஒரே மகன்தான் நாராயணசாமி. எனக்கென்னவோ இவனை வேலையிலிருந்து விலக்குவது அவ் வளவு நியாயமாகப் படவில்லை. காலமெல்லாம் இந்த மில்லுக்காகவே உழைத்துப் பாடுபட்ட பாண்டுரங்கத்தின் குடும்பத்துக்கு நாம் செய்யும் பிரதி உபகாரம் இதுதானா?”
முதலாளியின் குரலில் விவரிக்க இயலாத வருத்தமும் வேதனையும் வெளிப்பட்டன.
“தாங்கள் சொல்வது உண்மைதான். ஆயினும் நாராயணசாமியை வேலைக்கு வைத்துக்கொண்டால் அதனால் பல இடையூறுகள் ஏற்படுமே! அவனுக்கு முன்பாகவே வேலையில் சேர்ந்தவர்களை யெல்லாம் நீக்கிவிட்டு, அவனை மட்டும் வேலைக்கு வைத்துக் கொள்வது சரியாகாதே?” என்றார் மானேஜர்.
மானேஜர் வாதம் நியாயமாகப்பட்டது சாரங்கபாணிக்கு.
“அப்படியானால் அவனை வேலையிலிருந்து நீக்கி விட வேண்டியதுதானா? வேறு வழியே இல்லையா? நாராயண சாமிக்குப் பிறகு வேலைக்கு வந்தவர்களை மட்டும் நீக்கிவிட்டால் என்ன?” என்று கேட்டார் அவர்.
“அவனுக்குப் பிறகு முப்பது பேர்களைத்தானே வேலைக்குச் சேர்த்திருக்கிறோம்” என்றார் மானேஜர்.
முதலாளியின் நெற்றியில் சுருக்கங்கள் அலைந்தன.
“சரி இந்த நூற்று முப்பது பேருக்கும் ‘நோட்டீஸ் கொடுத்து விடுங்கள். நோட்டீஸ் போர்டிலும் ஆள் குறைப்பு பற்றி விவரமாக அறிக்கை ஒன்றைத் தயார் செய்து ஒட்டி விடுங்கள் ” என்றார் சாரங்கபாணி அரை மனத்துடன்.
அடுத்த சில நிமிடங்களில் காரியாலயத்தில் இருந்த டைப் ரைட்டர்கள் அத்தனையும் நெல் பொரிவதைப் போல் ‘பட் பட பட் டென்று எழுத்துக்களைப் பொறித்துக்கொண்டிருந்தன.
“போதிய பருத்தி கிடைக்காததாலும் இரண்டு இயந்திரங்கள் உபயோகமற்றுப் போய்விட்டதாலும் நம்முடைய மில் இரண்டு வருடமாக நஷ்டத்தில் நடைபெற்று வருகிறது. நஷ்டத்தைத் தவிர்க்க வேறு வழியே இல்லாததால் கீழ்க் கண்ட 130 பேரையும் வேலையிலிருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதைக் குறித்து நான் மிகவும் வருத்தப்படு கிறேன். இதர தொழிலாளர்களின் நன்மையை உத்தேசித்து வேலை இழக்க நேரிடும் தொழிலாளர்கள் இதனை ஒரு தியாகமாக மதித்து மன அமைதி பெற வேண்டுகிறேன். மீண்டும் மில் இலாபகரமாக நடக்கத் தொடங்கியதும் வேலை இழந்தோர் அனைவருக்குமே வேலை கொடுப்பதாக உறுதி அளிக்கிறேன். அத்துடன் வேலை இழக்கும் எல்லோருக்கும் சட்டப்படி கொடுக்க வேண்டியதற்கு மேல் மூன்று மாதச் சம்பளம் கொடுத்தனுப்பவும் முடிவு செய்திருக்கிறேன்.
சாரங்கபாணி.”
அன்று மாலை சங்கு ஊதியதும் தொழிலாளர்கள் அனைவரும் வழக்கம்போல் ஆலையை விட்டு வெளியே செல்ல வில்லை. அந்த நோட்டீஸ் போர்டு இருந்த இடத்தில் போய்ச் சூழ்ந்து கொண்டார்கள்.
நாராயணசாமி தனக்கு வந்த அந்த நோட்டீசைப் பிரித்துப் படித்துக்கொண்டே தளர்ந்த நடையுடன் ஆலையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தான். இதற்குள் கண்ணம்மாவுக்கு விஷயம் எட்டிவிட்டது. அந்தப் பேரிடி போன்ற செய்தியைக் கேட்ட அவள் துடிதுடித்துப் போனாள். சற்றுத் தொலைவில் எட்டி நின்றபடியே கசங்கிய கண்களுடன் தன் காதலன் செல்லும் திக்கையே பரிதாபத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் அவள்.
3
ரேடியோப் பெட்டிகளைப்போல் வரிசை வரிசையாகக் கட்டப்பட்டிருந்த சாரங்கா நகர்’குவார்ட்டர்ஸில் சுமார் நூற்றைம்பது வீடுகள் இருந்தன.
பெரும்பாலும் ஆலையைச் சேர்ந்த ஊழியர்களே அந்த வீடுகளில் வாழ்ந்து வந்தனர். இரண்டாவது பிளாக்கைச் சேர்ந்த முதல் தெருவில்தான் நாராயணசாமி குடியிருந் தான். அவன் வீட்டுக்கும் மில் முதலாளி சாரங்கபாணியின் பங்களாவுக்கும் அதிக தூரம் இல்லை. பங்களாவுக்கு நேர் எதிரில் அமைந்திருந்தது அவன் வீடு.
நாராயணசாமி, அவனுடைய தங்கை பாப்பா, தாயார் மூவர்மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்தனர்.
மறைந்துபோன பாண்டுரங்கத்தின் புகைப்படம் ஒன்று அந்த வீட்டுக் கூடத்தில் மாட்டப்பட்டிருந்தது. வெள்ளிக் கிழமைதோறும் பாப்பா அந்தப் படத்துக்கு மாலை தொடுத் துப் போடுவது வழக்கம்.
அன்று வெள்ளிக்கிழமையானதால் பாப்பா பூ வாங்கி வரும் பொருட்டுக் கடைத்தெருவுக்குப் புறப்பட்டாள்.
கடைத்தெருவுக்குச் செல்ல இரண்டு வழிகள் உண்டு. மெயின் கேட் வழியாகவும் போகலாம். இன்னொரு வழி யாகவும் போகலாம். பாப்பா மெயின் கேட் வழியாகவே சென்றாள்.
ஏனெனில், மெயின் கேட்டுக்கருகில்தான் அவளுடைய அத்தை மகன் மில் குவார்ட்டர்ஸ் வாச்மேன் வடிவேலு நின்று கொண்டிருப்பான்.
பாண்டுரங்கத்தின் சிபாரிசின் பேரில் வடிவேலுவுக்கு. அந்தக் குவார்ட்டர்ஸில் வாச்மேன்’ வேலை கிடைத்தது. இப்போது அவனுக்கு நாலைந்து வருட ‘சர்விஸ்’ ஆகி விட்டது. அவன் வேலைக்கு வந்து சேர்ந்த சமயம் பாப்பா பன்னிரண்டு வயதுச் சிறுமியாக இருந்தாள்.
இப்போது?…
பாவாடை சிற்றாடையாக மாறி, சிற்றாடை சேலையாகி விட்ட பருவம். அவள் பார்வை, நடை, பேச்சு எல்லாமே அவனை மயங்கச் செய்தன.
வடிவேலு பாப்பாவையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
வாச்மேன் ஐயா! என்ன அப்படிப் பார்க்கிறீங்க ?” என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் பாப்பா.
“இல்லை, உன்னை ‘வாச்’ பண்றேன்’’ என்றான் வடிவேலு.
‘உனக்கு எப்போதும் குறும்புப் பேச்சுத்தான்… நான் போறேன்…”
‘‘எங்கே?…”
“வாங்க; இன்னைக்கு வெள்ளிக்கிழமையாச்சே. அண்ணன் வரதுக்குள்ளே அப்பாரு படத்துக்குப் பூ தொடுத்தும் போட்டு வைக்கணும்” என்றாள் அவள்.
”பாப்பா? உனக்கு சங்கதி தெரியாதா?”
“என்ன?…”
“மில்லிலே நூற்றுமுப்பது பேரை வேலையிலிருந்து எடுத்துட்டாங்க.”
“என்னா? நம்ப மில்லுலேயா? இருக்காதே! முதலாளி ரொம்ப நல்லவராச்சே!” வியப்பும் திகைப்பும் மேலிட்டவளாய்க் கேட்டாள் அவள்.
“நல்ல முதலாளிங்களுக்குத்தானே சோதனையெல்லாம் வந்து சேருது. மில்லிலே இரண்டு வருசமா இலட்சக்கணக்கிலே நஷ்டமாம். முதலாளி என்ன செய்வாரு? அவர் நல்லவர்தான். ஆனால், எத்தனை நாளைக்குத்தான் நஷ்டத்திலே நடத்துவாரு? மறுபடியும் இலாபம் வருகிறபோது எல்லாரையும் வேலைக்கு எடுத்துக்கிறதாக வாக்குக் கொடுத்திருக்காராம்”.
“அது சரி, நமக்குத் தெரிஞ்சவங்க யாருக்கானும் வேலை போயிடுச்சா என்ன?”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது உங்க அண்ணன் பேருகூட அதிலே இருக்குதுன்னு கேள்வி” என்றான் வடிவேலு. பாப்பா திடுக்கிட்டாள்.
வடிவேலுவைக் கண்டதும் பாப்பாவின் கண்கள் கலங்கி விட்டன. அதைக் கண்ட வடிவேலு, “அழாதே பாப்பா! கவலைப்படாதே !” என்று அவளைத் தேற்றினான்.
“அத்தான் ! அண்ணனை வேலையிலிருந்து நிறுத்திட்டாங்களே, அப்படின்னா நாங்க குடியிருக்கிற வீட்டையும் காலி பண்ணிடச் சொல்லுவாங்களா?” என்று கேட்டாள் பாப்பா.
“முதலாளி அப்படி யெல்லாம் செய்ய மாட்டாரு. அவர் ஒரு தெய்வப் பிறவி. வேலை இழந்த ஏழைத் தொழிலாளிங்களுக்கு வேறு எப்படி உதவி செய்யலாம்னுதான் யோசிச்சுக்கிட்டிருப்பாரு. நீ கவலைப்படாதே. பூ வாங்கிக்கிட்டு அண்ணன் வரத்துக்கு முன்னாலே நீ வூட்டுக்குப் போய்ச் சேரு” என்று கூறி அனுப்பினான்.
அப்போது மணி ஆறு.
4
சாரங்கபாணி தம் பங்களாவுக்குத் திரும்பி வந்ததும் ‘மள மள’ வென்று மேல் மாடிக்குச் சென்றவர் அப்படியே படுக்கையில் சாய்ந்துவிட்டார். அவர் இதயம் கனத்தது. தலையை ஏதோ ஒரு பெரும் பாரம் அழுத்தியது. செய்யக் கூடாத ஒரு குற்றத்தைச் செய்துவிட்டதாக அவர் மனம் உறுத்தியது. படுக்கையை விட்டு எழுந்தார்; நின்றார்; உட்கார்ந்தார்; இப்படியும் அப்படியும் நடந்தார். எதிலும் அமைதி ஏற்படவில்லை. இத்தகைய ஒரு துன்பத்தை அவர் இதற்குமுன் அநுபவித்ததே இல்லை.
‘நியாயமாகச் செய்ய வேண்டிய காரியத்தைத்தானே செய்திருக்கிறோம்? இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது ?’ என்று தனக்குத்தானே சமாதானம் கூறிக்கொண்டது அவர் மனம். அப்போது பங்களாவுக்கு முன்னால் மில் தொழி லாளர்களின் குழந்தைகள் கூச்சலிட்டு விளையாடிக் கொண் டிருப்பது அவர் காதில் விழுந்தது. மாடியிலிருந்தபடியே அவர்களை எட்டிப் பார்த்தார் அவர்.
குழந்தைகள் குதூகலத்தோடு ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
ஒரு குழந்தை கையில் மசால்வடையுடன் நின்றுகொண் டிருந்தது. மரத்திலிருந்த காக்கை ஒன்று சட்டெனப் பறந்து வந்து அக் குழந்தையின் கையிலிருந்த வடையைக் கொத்திக்கொண்டு போய்விட்டது. வடையைப் பறி கொடுத்த குழந்தை வீறிட்டு அழுதது. அந்தக் காட்சி சாரங்கபாணியின் இதயத்தை வாள்கொண்டு பிளப்பதைப் போல் இருந்தது. வேலை இழந்த அத்தனை தொழிலாளர் களும் தங்கள் வருமானம் பறிபோய் விட்டது குறித்து அழுவதுபோல் தோன்றியது அவருக்கு.
அவர் கண்களில் நீர் பெருகிக் கொண்டிருந்தது.மில் குவார்ட்டர்ஸ்களில் எரிந்துகொண்டிருந்த விளக்குகளிலிருந்து வீசிய ஒளிக் கதிர்கள் கண்ணீர்த் துளிகளாய் மாறிச் சிதறுவதுபோல் தோன்றின. தெருக் கோடியில் போர்மேன் பாண்டுரங்கத்தின் மகன் நாராயணசாமி தலை குனிந்த வண்ணம் மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தான். அவனைக் கண்டபோது அவருக்கு உடம்பெல்லாம் என்னவோ செய்தது.
சத்தியத்தின் சின்னமாக, உழைப்பின் உருவமாக, கடமையின் தோற்றமாக விளங்கினான் பாண்டுரங்கம். ஒழுக் கத்திலும் நேர்மையிலும் தந்தைக்கு மகன் சற்றும் தாழ்ந் தவனன்று என்ற பெயருடன் விளங்கினான் நாராயணசாமி. அவனைக் கண்டதும் பாண்டுரங்கத்தின் நினைவு வந்துவிட்டது சாரங்கபாணிக்கு.
ஒரு சமயம் சாரங்கபாணி பாண்டுரங்கத்தினிடம், உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமென்று நான் வெகு நாட்களாக எண்ணிக் கொண்டிருக்கிறேன். எது வேண்டு மானாலும் சொல்” என்று கேட்டபோது “எனக்கு என்னங்க வேணும்? என் மகனுக்கு உங்க மில்லிலேயே ஒரு வேலை போட்டுக் கொடுத்து என் குடும்பத்தைக் காப்பாத்துங்க ” என்று திருப்தியுடன் அவன் கூறிய பதிலும் அப்போது அவர் நினைவுக்கு வந்தது.
“அந்தப் பாண்டுரங்கத்தின் மகனையா இப்போது வேலை யிலிருந்து நீக்கி அவன் குடும்பத்தைத் தத்தளிக்க விட்டு விட்டேன்?” சாரங்கபாணி தம் தலையை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்துக்கொண்டார்.
“அம்மா!” என்று அழைத்துக்கொண்டே உள்ளே நுழைந்த நாராயணசாமியை அவன் தங்கை பாப்பாவும் தாயாரும் எதிர்கொண்டழைத்தார்கள்.
“முதலாளிக்கு ரொம்ப நஷ்டம் வந்துட்டுதம்மா. அப்பா உயிரோடு இருந்தால் இதைக் காதால் கேட்கவே ரொம்பக் கஷ்டப்படுவாரு. நல்ல வேளை! அவர் இப்ப இல்லை.”
”உன்னைக்கூடவா அந்த முதலாளி வேலையை விட்டு அனுப்பிச்சுட்டாரு?’ என்று ஆத்திரமும் கோபமும் பொங்கக் கேட்டாள் அவன் தாயார்.
“ஆமாம்மா! நான் மட்டும் என்ன ஒசத்தி? எனக்கு முன்னாலே புடிச்சு வேலை செய்யறவங்களையே எடுத்துட்டப் புறம் என்னை மட்டும் எப்படி வெச்சிருக்க முடியும்? முதலாளி ரொம்ப நியாயமாத்தாம்மா செய்திருக்காரு…”
“ரொம்ப நியாயத்தைக் கண்டுட்டே நீ! உங்க அப்பாரு. உழைச்ச உழைப்புக்கு முதலாளி செய்யற உபகாரமா இது? இப்போ நானே நேரில் போய் அவரைக் கேக்கறேன். அவர் என்ன பதில் சொல்றாங்கறதைப் பார்க்கலாம். என் குடும்பத்தை நடுத் தெருவிலே தவிக்கவிட்ட அந்த முதலாளி நல்லாயிருப்பாரா?”
”அம்மா! அந்த உத்தமரைப்பற்றி இந்த மாதிரி இன்னொரு தடவை பேசாதே! நீங்க என்னைப் பெற்ற அம்மாங்கறதாலே பொறுத்துக்கிட்டிருக்கேன். நீங்க போய் அவரை இப்ப ஒண்ணும் கேக்க வேண்டாம். இந்தச் சமயத்திலே, அவரை ஏதாவது கேட்டீங்களானால் ஏற்கெனவே நொந்து போயிருக்கிற அவர் மனசு மேலும் புண்பட்டுப் போகும்.”
“நமக்கு அவர் தனியாக எந்தச் சலுகையும் காட்டறதை நான் விரும்பவில்லை.அப்பாரு கஷ்டப்பட்டு உழைச்சாரு; உண்மைதான். அவர் பிள்ளைங்கறதாலே எனக்கு வேலை கொடுக்கலையா முதலாளி? நம்ப வடிவேலுக்கு வேலை கொடுக்கலையா? இப்போ மில் நஷ்டத்துலே நடக்குது. யார் என்ன செய்ய முடியும்? மறுபடியும் இலாபம் வர ஆரம்பிச்சதும் வேலைக்கு எடுத்துக்கறேன்னு எழுத்து மூலமாகவே வாக்குக் கொடுத்திருக்காரே. இதைவிட நியாயமா எப்படி நடந்துக்க முடியும்? இப்போ நீ போய் அவரிடம் என்ன கேட்கப் போறே ? என்னை மறுபடியும் வேலைக்கு வைத்துக் கொள்ளணும்னு சொல்லப் போறயா? அதுக்கு நான் தயாராயில்லை. என்னோடு வேலை இழந்தவங்க அத்தனை பேருக்கும் வேலை கொடுத்தப்புறம்தான் நான் வேலைக்குச் சேருவேன். அதுவரைக்கும் அந்த மில் பக்கமே போக் மாட்டேன்.”
“பக்கத்து வீட்டு முருகேசனுக்கு நாலு குழந்தைங்க. அவன் படற கஷ்டத்தை விடவா நம் கஷ்டம் பெரிசு ? மற்ற வங்க படற கஷ்டத்தை நாமும் படுவோம்.” உறுதியுடன், பிடிவாதத்துடன், தீரத்துடன், தன்னம்பிக்கையுடன் கூறினான் நாராயணசாமி.
மாடியில் நின்றபடியே இதையெல்லாம் கேட்டுக்கொண் டிருந்த சாரங்கபாணியின் உடல் சிலிர்த்தது. நாராயண சாமியின் உணர்ச்சி மிக்க பேச்சு அவர் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்தது.
‘பாண்டுரங்கத்துக்குப் பிறந்தவன் வேறு எப்படி இருப்பான்?’
வேலை இழந்து தவிக்கும் ஏழைகளின் கதியை எண்ணிய போது அவர் உடல் பதறியது. மகத்தான குற்றம் இழைத்து தீராத பழிக்கு ஆளாகி விட்டவர்போல் தம்மைத் தாமே நொந்து கொண்டார்.
“ஸார்!” என்ற குரல் கேட்டுத் தலைநிமிர்ந்து பார்த்தார் சாரங்கபாணி. அவருடைய காரியதரிசி அங்கே கையில் ஒரு காகிதத்துடன் நின்று கொண்டிருந்தார்.
“என்ன அது?”
“ஒன்றுமில்லை. வேலையிலிருந்து நீக்கப்பட்ட வங்களிலே சில பேர் நம்ம ‘குவார்ட்டர்’சிலே குடியிருக்கிறவங்க. அவங்களுக்குத்தான் வேலை போய் விட்டதே! இனிமே அவங்க குவார்ட்டர்சைக் காலிபண்ணச் சொல்லி தோட்டீஸ் கொடுத்துவிட வேண்டியதுதானே?”
“அப்படின்னு எந்தச் சட்டத்திலே சொல்லியிருக்குது? தொழிலாளிங்களை வேலையை விட்டுத்தான் அனுப்பி விட்டோம். இந்தச் சமயத்திலே அவங்க ‘குவார்ட்டர்சை’ யுமா காலிபண்ணச் சொல்வது? அவங்களை நடுத் தெருவிலே நிற்கச் சொல்றீங்களா ? இதுகூடத் தெரியாதா உமக்கு? என்ன மனுஷரய்யா நீங்க! சரி, சரி, நீங்கதான் என்ன பண்ணுவீங்க? நீங்க சொல்ல வேண்டியதைச் சொன்னீங்க” என்றார் சாரங்கபாணி. அந்த அதிர்ச்சியில் அப்படியே மயக்கமுற்றுக் கீழே சாய்ந்து விட்டார் அவர்.
5
கண்ணம்மாவுக்குக் கோபம் ஒருபுறம், துக்கம் ஒரு புறம்.
அன்று பகல் இடைவேளையின்போது, நாராயணசாமி பாரோ ஒரு புதுப் பெண்ணிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதுமுதல் அவளுக்கு அவன்மீது உள்ளூறக் கோபம் பொங்கிக் கொண்டிருந்தது.
“ஐயோ, இந்தச் சமயம் பார்த்து அவரிடம் கோபித்துக் கொண்டோமே? அவரை எப்படிப் பார்த்துப் பேசுவது? எங்கே சந்திப்பது?” என்று தவியாய்த் தவித்தாள் அவள். திடீரென்று தன் காதலனுக்கு ஏற்பட்ட கதியை எண்ணிய தும், அவள் கோபமெல்லாம் மில் முதலாளியின்மீது திரும்பியது. மில் முதலாளிக்கு விரோதமாகக் கிளர்ச்சி செய்து, அதன்மூலம் மீண்டும் நாராயணசாமிக்கு வேலை வரங்கிக்கொடுத்துவிட விரும்பினாள். ‘கிளர்ச்சி’, ‘புரட்சி’ என்பதெல்லாம் அத்தனை எளிய காரியமா? தன்னைப்போன்ற ஒரு பெண்ணினால் சாதிக்கக்கூடிய காரியமா!” என்றும் போசித்தாள்.
ஏன் முடியாது ?
இரண்டொரு பெண்களிடம் அவள் மெதுவாகப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தாள்.
“முதலாளி செஞ்சது ரொம்ப அக்கிரமம்னு ஊரிலே பேசிக்கிறாங்களே, தெரியுமா அஞ்சுகம் உனக்கு?” என்று தன்னுடன் வேலை செய்யும் பெண்ணொருத்தியுடன் மெதுவாகப் பேச்சைத் தொடங்கினாள் கண்ணம்மா.
“ஆமாம், முதலாளி செஞ்சது ரொம்ப அநியாயம்னு தான் பேசிக்கிறாங்க” என்றாள் அஞ்சுகம்.
வேலை இழந்தவர்களில் அஞ்சுகத்தின் அண்ணனும் ஒருவன். எனவே அவளுக்கும் முதலாளிமீது கோபம் இருந்ததில் வியப்பில்லை அல்லவா?
இவர்கள் பேச்சை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த இன்னொருத்தி, “முதலாளி ரொம்பத் தங்கமானவரு. அவர் பேரிலே என்ன தப்பு? நஷ்டம் வந்தால் வேறு என்ன செய்வாங்களாம்?” என்று கேட்டாள். தன்னுடைய விரோதி ஒருவனுக்கு வேலை போனதால் ஏற்பட்ட திருப்தியில் அவள் முதலாளி பக்கம் பேசினாள்.
“உன்னை நியாயம் கேட்கல்லே. நீ சும்மா இரு” என்று அவள் வாயை அடக்கினர் கண்ணம்மாவும் அஞ்சுகமும்.
“அஞ்சுகம், இந்த விசயத்தை இப்படியே விட்டுவிடக் கூடாது. இன்றுவேலை இழந்தவர்களுக்கு நேர்ந்த கதிதான் நாளைக்கு நமக்கும் நேரும்” என்றாள் கண்ணம்மா.
“ஆமாம்; இந்த ஆம்பிள்ளைங்களுக்கு ரோசமே இல்லையே; எல்லாரும் சும்மா இருக்காங்களே!” என்றாள் அஞ்சுகம். இருவரும் சேர்ந்து போய் நாலுபேரைத் தூண்டி விட்டார்கள். அந்த நாலுபேர் தங்களுக்குத் தெரிந்தவர் களைத் தூண்டி விட்டனர். இப்படியே ஒருவருக்கொருவர் தூண்டி விட்டுக் கிளர்ச்சியை வலுக்கச் செய்தனர். கடைசியில் எல்லாத் தொழிலாளர்களுமே முதலாளிக்கு விரோத மாகத் திரும்பும் நிலை ஏற்பட்டு விட்டது ; ஆனால் இத்தனை புகைச்சலுக்கும் மறைமுகமான காரணம் கண்ணம்மாதான் என்பதை யாராலுமே அறிந்துகொள்ள முடியவில்லை.
தொழிலாளர்கள் இடைவேளையில் சிறுசிறு கூட்டமாகப் பிரிந்து முதலாளிக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்க லாம் என்பதுபற்றி ஆலோசிக்கும் அளவுக்குக் குழப்பம் வளர்ந்து விட்டது. கடைசியில் லேபர் கமிஷனருக்கு ஆள் குறைப்பு விஷயத்தைத் தெரிவித்து விசாரணை நடத்தும்படி கடிதம் எழுதுவதென்று முடிவு செய்தார்கள்.
தான் ஊத்திவிட்ட சிறு பொறி பெருந்தீயாக வளர்ந்து விட்டதை அறிந்த கண்ணம்மாவுக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
தன் காதலன் நாராயணசாமியைச் சந்தித்து, அவனுக் குச் சாதகமாக மில்லுக்குள் தான் செய்துவரும் இரகசியக் கிளர்ச்சியைப்பற்றிப் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டு மென்று நினைத்தாள். ஆனால், அவன் அதைப்பற்றி அறிய நேர்ந்தால் தன்னையே வெறுக்கக்கூடும் என்ற பயமும் இருந்ததால் அவனைப் பார்க்காமலேயே இருந்துவிட்டாள்.
சாரங்கா மில் மாஜித் தொழிலாளர்களில் ஒருவன் முருகேசன். அவனும் மில்லில் வேலை இழந்த இன்னும் சிலரும் மில் தொழிலாளர்களுக்குச் சாப்பாடு கொண்டு வந்து கொடுத்து அதன்மூலம் கிடைக்கும் சொற்ப வருவா யில் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தனர். வழக்கம்போல் அன்றும் முருகேசன் சாப்பாட்டுக் கூடையைக் கொண்டு வந்தான்.
கண்ணம்மா அவன் தலையிலிருந்த பளுவை இறக்கிக் கொண்டே நீங்கள்ளாம் சீக்கிரமே வேலைக்குத் திரும்பி வந்துடலாம். இம்மாதிரி கஷ்டப்படவேண்டாம்” என்றாள்.
”ஏன்…?” என்று ஆவலுடன் கேட்டான் அவன்.
“ஆமாம், தொழிலாளிங்களெல்லாம் சேர்ந்து லேபர் கமிஷனருக்கு எழுதியிருக்கோம். அநேகமாக எல்லாரையும் திருப்பி வேலைக்கு வெச்சுக்கும்படிதான் உத்தரவு போடு வாங்களாம். உங்க பக்கத்து வூட்டுக்கார ஐயாவைப் பார்த்தாச் சொல்லு” என்று உற்சாகத்துடன் கூறினாள் கண்ணம்மா.
“யாரு, நாராயணசாமி கிட்டேதானே? இவ்வளவு நல்ல சமாசாரத்தைச் சொல்லாமல் இருப்பேனா?”
“ஆமாம்; இவ்வளவு தூரத்துக்கு முயற்சி பண்ணி மேலுக்கு எழுதிப்போட்டது யாரு?” என்று கேட்டான் முருகேசன்.
“இங்கே வேலை செய்யற எல்லாருமேதான் முயற்சி எடுத்துக்கிட்டோம். ஏன்? நான்தான் செஞ்சேன்னு வேணாலும் வச்சுக்கயேன்” என்றாள் கண்ணம்மா.
6
மறு நாள் காலை.
மணி எட்டு இருக்கும்.
சாரங்கா மில் ரோடு வழியாகச் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தான் நாராயணசாமி.
சாலையில் அவனுக்குத் தெரிந்த தொழிலாளர்களெல் லாம் சாரி சாரியாக வந்துகொண் டிருந்தார்கள்.
இரண்டு மைல் தூரத்தில், கூட்டுறவுப் பால் பண்ணை ஒன்று இருந்தது. அந்தப் பண்ணையிலிருந்து பால் வாங்கி, வீடுகளுக்குச் ‘சப்ளை’ செய்தால் மாதம் முப்பது நாற்பது ரூபாய் கிடைக்கும் என்ற தகவலை அறிந்திருந்த கண்ணம்மா, தன் காதலனுக்காக அந்த வேலைக்கு முயன்று கொண்டிருந் தாள். அந்தப் பண்ணையில் கண்ணம்மாவின் அக்காள் புருஷன் கன்னியப்பன் மானேஜராயிருந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்னால் கண்ணம்மா தன் அக்காள் புருஷனைப் போய்ப் பார்த்து நாராயணசாமிக்கு அந்தப் பண்ணையில் ஏதாவது வேலை போட்டுக் கொடுக்கும் படி கேட்டுக்கொண்டாள்.
“இப்ப ஒண்ணும் ‘சான்ஸ் ‘ இல்லையே. பால் சப்ளை செய்யறத்துக்கு மட்டும் ஆள் தேவை. ஆனா அதுக்கும் சைக்கிள் இருக்கணும். சைக்கிள் அலவன்ஸ்னு பத்து ரூபாய் கொடுப்பாங்க. அது தவிர, படிக்கு ஓரணா கமிஷன் கொடுப்பாங்க. பால் டின்னுங்களைச் சீல் வெச்சுதான் கொடுப்போம். சம்மதம்னா புதன்கிழமை வந்து பார்க்கச் சொல்லு.. ஆமாம்; யாரு அந்த நாராயணசாமி?” என்று விசாரித்தார் கன்னியப்பன்.
கண்ணம்மாள் நாணத்துடன் தலையைக் கவிழ்ந்து கொண்டே, எனக்குத் தெரிஞ்சவரு. மில்லிலே வேலை செஞ்சிக்கிட்டிருந்தாரு. இப்ப வேலை போயிடுச்சு” என்றாள்.
கன்னியப்பன் விஷயத்தைப் புரிந்துகொண்டார். “சரி, புதன்கிழமை காலம்பர ஒன்பது மணிக்குள்ளற வந்து என்னைப் பார்க்கச் சொல்லு” என்று கூறி அனுப்பினார்.
கண்ணம்மா சாப்பாடு கொண்டு வரும் முருகேசனிடம் பால் பண்ணை வேலையைப்பற்றி நாராயணசாமிக்குத் தகவல் அனுப்பி யிருந்தாள்.
முருகேசன் மூலம் அந்தத் தகவலை அறிந்ததும் நாராயணசாமி பால் பண்ணைக்குப் போய்க் கொண்டிருந்.தான்.
“சங்கு பிடிக்கும் நேரம் ஆயிற்றே, ஒரு வேளை கண் ணம்மா எதிரில் வருவாளோ? அல்லது இதற்குள் மில்லுக் குப் போய் விட்டிருப்பாளோ?” என்ற எண்ணத்துடனேயே சைக்கிள் பெடலை உதைத்துக் கொண்டிருந்தான்.
அவன் எதிர்பார்த்தபடியே கண்ணம்மா சற்றுத் தொலைவில் வந்துகொண்டிருந்தாள்.
சைக்கிளை நிறுத்தி அவளுடன் பேசுவதா அல்லது ‘பிகு வாகப் பேசாமலே போய் விடுவதா என்ற அவசரப் பிரச்னை ஒன்று தோன்றிவிட்டது அவனுக்கு. இதற்குள் கண்ணம்மா அவன் சமீபமாக நெருங்கி வந்துவிட்டாள்.
நாராயணசாமியைப்பற்றி அவள் இதயத்தில் மூன்று: விதமான உணர்ச்சிகள் கதம்பமாய்க் கலந்துகிடந்தன.
ஒன்று அன்பு.
மற்றொன்று கோபம்.
இன்னொன்று அநுதாபம்.
அவனைக் கண்டதும் அவள் கோபமெல்லாம் எங்கோ பறந்துவிட்டது. கண்ணீர் சிந்தியபடியே மௌனமாக நின்று கொண்டிருந்தாள்.
“அழாதே கண்ணம்மா! எனக்கு என்ன ஆண்டவன் கொடுத்த கைகால் இல்லையா, உழைச்சுப் பிழைக்க ? கூட்டுற வுப் பால் பண்ணையிலே ஏதோ வேலை இருக்குதுன்னு முருகேசன் கிட்டே சொல்லி அனுப்பியிருந்தயே, அங்கே தான் போறேன்” என்றான் அவன்.
“முதலாளி கொஞ்சங்கூட நன்றி இல்லாத மனுசன், உங்களை வேலையிலிருந்து விலக்கியது என்னா நாயம்? மில்லிலே எல்லாரும் பேசிக்கிறாங்க. உங்க அப்பாரு உழைச்சு ழைப்புக்கு, உங்க குடும்பத்தைத் தலைமுறை தலைமுறை யாகக் காப்பாத்தக் கடமைப்பட்டிருக்காராம்.”
“ஏன்? எங்கப்பாரு சம்பளமே வாங்கிக்காமல் வேலை செய்தாராமா? கண்ணம்மா! யாரோ பொறுப்பில்லாத வங்க பேசற பேச்சைக் கேட்டுக்கிட்டு வாய்க்கு வந்தபடி யெல்லாம் உளறாதே! யாரோ கூன் மனசைக் கெடுத்திருக் காங்க. அந்தத் தங்கமான மனுசரைப்பற்றி எவனாவது தவறாகப் பேசினா நான் அவங்களைச் சும்மாவிட மாட்டேன். ஆமாம்.. என் பேரிலே உனக்கு அன்பு இருக்கலாம். அதுக்காக நீ யாரையும் தப்பாப் பேசக்கூடாது.”-நாராயணசாமி உணர்ச்சியோடு பேசினான்.
கண்ணம்மா ஏதோ சொல்ல வாயெடுத்தாள்.இதற்குள் மில் சங்கு ஊதிவிட்டது.
“போ, போ நேரமாயிடுச்சு. வேலைக்கு லேட்டாப் போகக்கூடாது. ஏன்? என்னா தயங்கறே?” என்று கேட்டான் அவன்.
“ஒண்ணுமில்லே; அண்ணைக்கு உங்களுக்குச் சாப்பாடு எடுத்து வந்தாளே…”
“ஓகோ! அவ யாருன்னு கேக்கறயா? எனக்குத் தெரிஞ்சவதான்.”
“அது தெரியுது. தெரியாதவளா அத்தனை அன்பா சோறு எடுத்தாந்து போடுவா? யாருன்னு கேட்டேன்.
“ஏன்? உனக்குப் பொறாமையாயிருக்குதா?”
“எனக்கென்ன பொறாமை?” அவள் கண்கள் சிவந்து உதடுகள் நெலிந்தன.
“பின்னே ஏன் பேசாமலே இருந்தியாம்! பயித்தியம்; அது யாருமில்லே. என் தங்கச்சிதான். பாப்பான்னு பேரு…”
“உங்க தங்கச்சியா அது? நான் யாரோன்னு பயந்துட் டேன். இவ்வளவு பெரிய தங்கச்சி இருக்காளா உங்களுக்கு? அழகாயிருக்காளே! உங்க தங்கச்சி பின்னே எப்படி இருப்பாளாம்? உங்களைத் தப்பா நினைச்சு உங்க கிட்டே பேசாமல் இருந்ததுக்கு என்னை மன்னிச்சுடுங்க…”
“பெண் புத்திதானே? அதிலும் நீ எப்பவுமே அவசர புத்திக்காரின்னுதான் எனக்குத் தெரியுமே!”
“உங்க தங்கச்சிக்குக் கலியாணம் ஆயிடுச்சா?”
“இந்த வருசம் அதுங்கலியாணத்தெ முடிச்சுடலாம்னு தான் இருந்தேன். ஆனால் அதுக்குள்ளேதான் இப்படியெல்லாம் ஆயிடுச்சே? எப்படியும் அடுத்த வருசத்துக்குள்ளே யாவது செஞ்சுடுவேன்.”
“அப்புறம்தான் உங்க கலியாணமா?…”
“அதைப்பற்றி இப்ப என்ன? வேலை கெடச்சப்புறம் யார்த்துக்கலாம். ஏன், அதுக்குள்ளே அவசரமோ?”
“அவசரம் ஒண்ணுமில்லே; எவ்வளவு நாளானாலும் காத்திருப்பேன்.”
“சரி, நீ போ நேரமாயிடுச்சு.”
கண்ணம்மா மில்லை நோக்கி விரைந்தாள்.
நாராயணசாமி கொஞ்ச தூரம் போனதும் எதிரில் வந்த முருகேசனும், ரத்னசாமியும் அவனைத் தடுத்து நிறுத்தினார்கள்.
“என்ன பண்றே முருகேசா? எங்கயாச்சும் வேலை கிடைச்சுதா?”
“வேலையா? மறுபடியும்தான் எல்லாருமே மில்லுக்குப் போகப் போறோமே, உனக்குத் தெரியாதா?”
“முதலாளி எல்லாரையுமே திரும்பச் சேத்துக்கறதாச் சொல்லியிருக்காரா?”
“இல்லை. மில் தொழிலாளிங்க எல்லாரும் சேர்ந்து பெட்டிஷன் போட்டிருக்காங்களாம். நாளைக்கோ, மறு நாளைக்கோ, மேலிடத்திலிருந்து அதிகாரிங்க வந்து விசாரணை நடத்தப் போறாங்கன்னு எல்லாரும் பேசிக்கிறாங்களே! அநேகமா எல்லாரையுமே திருப்பி எடுத்துக்கணும்னு உத்தரவாயிடும்னு கூடச் சொல்றாங்களே! முதலாளிக்கு எதிரா மில்லுக்குள்ளேயே பெரிய கிளர்ச்சி நடந்துக்கிட்டிருக்குதே… இதெல்லாம் உனக்குத் தெரியவே தெரியாதா?”
நாராயணசாமிக்குக் கோபமும் ஆத்திரமும் பொங்கி வந்தன.
“என்னது? கிளர்ச்சி செய்யறாங்களா? யாரு அவனுங்க? அவங்க யாருங்கறதை இப்பவே கண்டுபிடிச்சு ஆகணும். அவங்களைச் சும்மா விடக்கூடாது. அமைதியா நடக்கிற மில்லிலே கலவரத்தை ஏற்படுத்தி முதலுக்கே மோசம் செய்யப் போறாங்களா? இந்தக் கிளர்ச்சிக்கெல்லாம் யாரு காரணம்? அவங்களைச் சொல்லு, நான் போய்ப் பார்க்கிறேன்.”
“அதுதான் இப்ப உன்னோடு பேசிட்டுப் போனாளே கண்ணம்மா, அவள்தான்” என்றான் ரத்னசாமி.
”யாரு? கண்ணம்மாவா? உங்களுக்கு எப்படித் தெரியும் அது?”
“அவளேதான் சொன்னாள். பெட்டிஷன் போட்டதே அவதானாம்.”
நாராயணசாமிக்கு ஒரே குழப்பமாயிருந்தது. கண்ணம்மாவா? அவளா இப்படியெல்லாம் செய்தாள்? அவனால் நம்பவே முடியவில்லை அதை.
7
“அம்மா, நாளையிலிருந்து நான் பால் விக்கப் போறேன் ” என்று கூறிக்கொண்டே வந்த நாராயணசாமி சைக்கிளைத் தாழ்வாரத்தில் கொண்டுபோய் நிறுத்தினான்.
“பால் விபாபாரமா? அது பாவமான தொழிலாச்சே! இலாபம் வேணும்னா தண்ணி கலந்தாத்தான் முடியும். அப்படி மோசம் செய்து பிழைக்கிற பால் வியாபாரம் நமக்கு வேணாம்” என்றாள் நாராயணசாமியின் தாய்.
“நான் விக்கப்போறது சீல் வெச்ச பாலம்மா; பால் டிப்போவிலேயே பாத்திரத்தை மூடி, சீல் வெச்சுக் கொடுத்துவிடுவாங்க. இலாபம் நம்மைச் சேர்ந்தது. பாவம் பால் டிப்போவைச் சேர்ந்தது. அதிருஷ்டம் இருந்தா மாசம் அம்பது ரூபாகூடக் கிடைக்கும். அம்மா, டிப்போவிலே தயிர்கூடக் கொடுக்கிறாங்க. நீ அதை வாங்கி விற்கலாம்” என்றான் நாராயணசாமி.
“தயிரா? அப்படின்னா நீ பால் வாங்கும்போதே அதையும் வாங்கிக்கிட்டு வந்துடு. நான் நாலு இடங்களில் வாடிக்கை பிடிச்சு வித்துட்டு வரேன். மானத்தோடு வாழணும். எந்த வேலை செய்தா என்ன?” என்றாள் அவன் தாயார்.
“அண்ணா! எனக்குத் தையல் வேலை தெரியும். நானும் சும்மா இல்லாமல் தையல் வேலை செய்யப் போறேன். நாம் மூணு பேருமே பாடுபட்டு உழைச்சா கடவுள் நமக்குப் படி அளக்காமலா போயிடுவாரு!” என்றாள் பாப்பா.
தினமும் எட்டு மைல் தூரம் சைக்கிளில் போய், பண்ணை யிலிருந்து பாலும் தயிரும் கொண்டு வந்தான் நாராயண சாமி. காலையிலும் மாலையிலும் அலைந்து திரிந்து உழைத்தான்.
அவன் தாயாரும் தயிர் வியாபாரம் செய்து வந்தாள். பாப்பர் வீட்டோடு தையல் வேலை செய்து வந்தாள்.
சாரங்கபாணி தம் பங்களாவிலிருந்தபடியே பாண்டு ரங்கத்தின் மனைவி மக்கள் படும் துன்பங்களைக் கண்டு மனம் நெகிழ்ந்தார். மற்ற குடும்பங்களிலும் இப்படித்தானே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள்? இதற்கெல்லாம் யார் காரணம்? செய்யக்கூடாத ஒரு பெரும் குற்றத்தைத் தாம் செய்துவிட்டதாக எண்ணிக்கொண்டு தமக்குத் தாமே சங்கடப்பட்டார் அவர். பாண்டுரங்கத்தின் குடும் பத்துக்குத் தன்னால் எந்த விதத்தில் உதவ முடியும்? அவர்கள் துன்பத்தைத் துடைக்கக்கூடிய, துயரத்தைப் போக்கக் கூடிய, வசதியும் சந்தர்ப்பமும் தமக்கு இல்லவே இல்லையா?
ஏன் இல்லை ?
ஆனால் நாராயணசாமி அதற்கு ஒப்ப வேண்டுமே! தன்னிடமிருந்து அவன் எவ்வித உதவியையும் ஏற்றுக்கொள்ள மாட்டானே! அப்பனைப் போலவே அவனும் கண்டிப்பு மிக்கவனாயிற்றே! அன்று அவன் தாயாருடன் பேசிக் கொண்டிருந்ததெல்லாம் அவர் நினைவில் பளிச்சிட்டன்.
நாராயணசாமி வெளியே புறப்படக் காத்திருந்தான். அவனுடைய கிழிந்துபோன சட்டையைத் தைத்துக் கொண்டிருந்தாள் பாப்பா.
“அப்போது, நாராயணசாமி இருக்காரா?” என்று கேட்டுக் கொண்டே வந்தான் சாரங்கபாணியின் பியூன். நாராயணசாமி வாசலுக்கு வந்து பார்த்தான்.
“முதலாளி உங்களைக் கையோடு அழைத்து வரச் சொன்னாரு” என்றான் பியூன்.
அவசர அவசரமாக, பாப்பா தைத்துக் கொடுத்த சட்டையை வாங்கிப் போட்டுக்கொண்டு, முதலாளி பங்களாவுக்குப் புறப்பட்டான் நாராயணசாமி.
சாரங்கபாணி அவனை அன்போடு அழைத்துக் கனிவோடு பேசினார்.
“தம்பி, அன்றைக்கு நீயும் உன் தாயாரும் பேசிக்கிட்டிருந்ததைக் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். நான் உனக்கு எந்த வேலை கொடுத்தாலும் நீ அதை ஒப்புக்க மாட்டேங்கறது எனக்குத் தெரியும். நம் மில் ‘காண்டீனு’க்கு நாளையிலிருந்து நீ பால் சப்ளை செய். நானும் எனக்கு வேண்டிய பால் தயிரை இனி உன்னிடமே வாங்கிக்கிறதுன்னு முடிவு செஞ்சிருக்கேன். எனக்குத் தெரிஞ்சவங்க கிட்டேயும் சிபாரிசு செய்யறேன். இதுக்கு உனக்கு ஆட்சேபனை கிடையாதே?”
“உங்க உபகாரத்துக்கு நன்றி! இதிலே ஆட்சேபனைக்கு என்ன இருக்கு? உங்க அன்புதான் முக்கியம்” என்றான் நாராயணசாமி.
“நாராயணசாமி! நான் ஒண்ணு சொல்றேன் ; அதைத் தட்டமாட்டாயே?”
“சொல்லுங்க ஐயா!”
“இப்ப நீ இருக்கிற வீட்டுக்கு எவ்வளவு வாடகை கொடுக்கிறாய்?”
“முப்பது ரூபாய்.”
“கொஞ்ச நாளைக்கு நீ வாடகையே கொடுக்க வேணாம்.”
“அது கூடாதுங்க. எனக்கு மட்டும் எதுக்கு நீங்க வாடகை இல்லாமல் சலுகை காட்டணும்? என்னை மன்னிச்சிடுங்க. இது எனக்கு இஷ்டமில்லிங்க. நான் வரேன்” என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டான் அவன். சாரங்கபாணி அதற்குமேல் பேசவில்லை.
அவன் அப்பால் சென்றதும் காரியதரிசி அவர் எதிரில் வந்து நின்றார். எங்கோ கவனமாயிருந்த சாரங்கபாணிக்குத் தம் காரியதரிசி எதிரில் வந்து நிற்பதுகூடத் தெரியவில்லை.
“கூப்பிட்டீர்களா?’ என்று குரல் கொடுத்தார் காரியதரிசி.
“ஆமாம்; நம்ம குவாட்டர்ஸிலே உள்ள வீட்டுக்கெல்லாம் என்ன வாடகை?”
“முப்பது ரூபாய்.”
“சரி. இந்த மாதத்திலேருந்து எல்லா வீட்டுக்கும். வாடகையைப் பதினைந்து ரூபாயாக்கி விடுங்கள்; போங்க, அதுக்குத்தான் கூப்பிட்டேன்.”
சாரங்கபாணியின் மனம் ஓரளவு நிம்மதியடைந்தது. நாராயணசாமி குடியிருக்கும் வீட்டுக்கு மட்டும் தனியாக வாடகையைக் குறைத்தால் அவன் அதை ஒப்புக்கொள்ள மாட்டான் என்றே எல்லா வீடுகளுக்கும் வாடகையைக் குறைத்துவிட்டார். இந்தச் செய்கை அவர் மனத்துக்குப் பெருத்த ஆறுதலை அளித்தது.
காரியதரிசி போய்விட்டார். சற்று நேரத்துக்கெல்லாம் டெலிபோன் மணி ஒலிக்கவே சாரங்கபாணி எழுந்து போய் ரிஸீவரைக் கையில் எடுத்தார்.
“ஸார், நம் மில்லுக்கு லேபர் ஆபீசர் வந்திருக்கிறார். ‘ரிட்ரெஞ்ச்மெண்ட்’ விஷயமா உங்களோடு பேசணுமாம்” என்றார் மில் மானேஜர்.
“அப்படியா கொஞ்ச நேரத்திலே நான் அங்கே வரேன்” என்று பதில் கூறிவிட்டு உடனே மில்லுக்குப் புறப்பட்டார் சாரங்கபாணி.
8
“இதோ, இந்த ரிக்கார்டுகளை யெல்லாம் தாங்கள் நன்றாகப் பார்த்துவிட்டுப் பிறகு முடிவு செய்யுங்கள். நான் செய்தது சரியா தவறா என்பது தங்களுக்கு அப்போது தான் தெரியும், இரண்டு வருடங்கள் மில்லை நஷ்டத்தில் நடத்திய பிறகே இந்த முடிவுக்கு வந்தேன். 130 பேரை எடுத்தால்தான் மற்றத் தொழிலாளர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற நிலை ஏற்பட்டதாலேயே இந்தக் காரியத் தைச் செய்தேன். இதை ஆட்சேபித்து லேபர் இலாகாவுக்கு. யாரோ சிலர் ‘பெட்டிஷன்’ எழுதிப் போட்டிருக்கிறார்கள். தாங்கள் எல்லா விவரங்களையும் ஆராய்ந்து பார்த்து, விசாரிக்க வேண்டியவர்களை விசாரியுங்கள்; கடைசியில் தாங்கள் எந்த முடிவுக்கு வந்த போதிலும் அதை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். இரண்டு இயந்திரங்கள் உபயோகமற்றுப் போய் விட்டன. மேலும் பருத்தி அதிகமாகக் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நான் என்ன செய்வது? தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியதில் என்னைக் காட்டிலும் வருத்தப்படுகிறவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர்களை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்வதற்குத் தங்களுக்கு ஏதேனும் வழி புலப்பட்டாலும் சொல்லுங்கள்; மகிழ்ச்சியுடன் நிறைவேற்றி வைக்கிறேன்.” சுருக்கமாகவும் விவரமாகவும் எடுத்துக் கூறினார் சாரங்கபாணி.
அவருடைய நியாயமான பேச்சைக் கேட்ட லேபர் ஆபீஸர் மௌனமாகத் தலையை ஆட்டியபடியே உட்கார்ந்திருந்தார். சாரங்கபாணியிடம் அவரால் எவ்விதக் குற்றத்தையும் காண முடியவில்லை.
“நான் என் கடமையைச் செய்யவே இங்கு வந்திருக்கிறேன். தங்கள் நிலை என்ன என்பது பற்றி எனக்கு நன்றாகப் புரிகிறது. தங்கள் குணத்தைப்பற்றியும் நான் ஏற்கெனவே அறிந்திருக்கிறேன். எதற்கும் வேலையிழந்த தொழிலாளர் களில் சிலரையும் பார்த்துப் பேச முடிவு செய்திருக்கிறேன். தங்களுக்குச் சிரமம் கொடுப்பதற்காக மன்னிக்கவும்” என்றார் லேபர் ஆபீஸர்.
லேபர் ஆபீஸர் கேட்கும் எல்லா ரிக்கார்டுகளையும் எடுத்துக் காட்டும்படி மானேஜருக்கு உத்தரவு போட்டு விட்டு வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார் சாரங்கபாணி. இதற்குள் ஆதாரமற்ற வதந்தி ஒன்று மில் முழுதும் பரவி விட்டது.
‘எல்லாரையும் மறுபடியும் வேலைக்கு வெச்சுக்கச் சொல்லி லேபர் ஆபீஸர் உத்தரவு போடப் போறாராம்’ என்பதே அந்த வதந்தி. இந்த ஆதாரமற்ற வதந்தியைப் பத்திரிகைகள் உண்மைச் செய்தி போல் திரித்துக் கொட்டைத் தலைப்பில் கீழ்வருமாறு பிரசுரம் செய்தன:
“சாரங்கா மில் தகராறு !
சர்க்கார் தலையீடு!”
“வேலையை விட்டு அனுப்பப்பட்டவர்கள் எல்லாரையும் மீண்டும் வேலைக்கு வைத்துக் கொள்ளும்படி லேபர் கமிஷனர் உத்தரவு!”
9
வாச்மென் வடிவேலு மெயின் கேட்டுக்கருகில் உட்கார்ந் தபடியே மலபார் முண்டு விற்கும் காக்கா ஒருவனிடம் பேசிக் கொண்டிருந்தான்.
தூரத்தில் பாப்பா வருவதைக் கண்டதும் வடிவேலு வுக்குக் காக்காவிடம் பேசிக்கொண்டிருக்கப் பிடிக்கவில்லை. என்வே, அவள் வருவதற்குள் எப்படியோ அவனிடம் பேச்சை. முறித்து அனுப்பிவிட்டான்.
“இன்னிக்கு என்னைப் பார்த்தா ஏதாவது புதிசாத் தெரியுதா உனக்கு?” என்று கேட்டாள் பாப்பா.
“அப்படி ஒண்ணும் தெரியல்லியே?”
“ஆமாம். உனக்கு எங்கே தெரியப் போவுது? இந்தப் புல்லாக்கைப் பாத்தியா.? எங்க அம்மாவுது இது. இத்தனை நாளாப் பெட்டியிலே இருந்தது, காலையிலே எதுக்கோ பெட்டியைத் திறந்தபோது இந்தப் புல்லாக்கு அதிலே கிடந்தது. ‘நீதான் எடுத்துப் போட்டுக்கோயேன்’ னு அம்மா சொன்னாங்க போட்டுக்கிட்டேன். எப்படி இருக்குது?”
“இந்தப் புல்லாக்குக்காகவே நீ பிறந்த மாதிரி அவ்வளவு பொருத்தமா இருக்குது!” என்று அவள் புல்லாக்கைத் தொட்டுப் பார்க்கும் சாக்கில் வடிவேலு அவள் கன்னத்தைத் தொட்டான்.
“நேரமாச்சு. நான் வரட்டுமா?” என்று அவன் கையை அப்பால் தள்ளிவிட்டாள் பாப்பா.
”எங்கே?” என்று கேட்டான் வடிவேலு.
“கடைக்கு நூல்கண்டு வாங்கப் போறேன்.”
“அதுக்கு ஏன் இவ்வளவு பெரிய கூடை?”
“அப்படியே வீட்டுக்குக் காய்கறியும் வாங்கிக்கிட்டு வருவேன். அண்ணனும் அம்மாவும் பால் தயிர் விக்கறாங்க. நான் தையல் வேலை ஆரம்பிச்சிருக்கேன்.”
“அது எப்பத் தெரிஞ்சுக்கிட்டே? எனக்குத் தெரியவே தெரியாதே!”
”ஏன்? உனக்குத் தெரிஞ்சுக்கணும்னு ஆசையாயிருக்குதா? நான் கத்துக் கொடுக்கட்டுமா?”
“அட, நீ ஒண்ணு; உனக்குத் தையல் வேலை தெரியுங்கற தகவல் எனக்குத் தெரியாதேன்னு சொன்னேன்.”
பாப்பா சிரித்துவிட்டாள்!
“ஆமாம்; தெரிஞ்சிருந்தா மட்டும் என்ன செஞ்சுடப் போறயாம்!”
“நேற்று என் காக்கிச் சட்டையிலிருந்த கிழிசலைத் தைக்க டைலருக்கு இரண்டணா கொடுத்தேன். நீ தைப்பேன்னு தெரிஞ்சிருந்தா எனக்கு அந்த ரெண்டணா மிச்சமா யிருக்குமே!”
“அதான் முடியாதுன்னேன். நான் யாருக்கும் காசு வாங்காமல் தைச்சுக் கொடுக்க மாட்டேன்”.
“எனக்குக்கூடவா?”
“யாராயிருந்தாலும் சரித்தான்.”
“நம்ம ரெண்டு பேருக்கும் கலியாணம் ஆனப்புறம் கூடவா?”
“அதைப்பற்றி அப்போது யோசிச்சுக்கலாம்.”
“இப்பவே யோசிக்க வேண்டியதுதான். எங்கப்பாரும் அம்மாவும் உங்க வூட்டுக்கு இன்னைக்கு வரப்போறாங்களாம்.”
“எதுக்கு வரப் போறாங்க?”
“எனக்குத் தெரியாது.”
“வந்தால் வரட்டுமே!”
“சாயந்திரம் வீட்டிலேயே இரு; எங்கேயும் போயிடாதே.”
“ஏன்?”
“நம்ம கலியாண விசயமாத்தான் பேச வராங்க. சீக்கிரமே முகூர்த்தம் வெச்சுக்கப் போறாங்களாம்.”
“எங்க அண்ணனுக்கு ஒரு நல்ல வேலை கெடச்சப்புறம் தான் என் கலியாணப் பேச்செல்லாம்.”
“அதான் கூடாது; உங்கண்ணன் வேலையில்லாமல் இருக்கப்போ உனக்கும் சோறு போடணும்னா கஷ்டம் தானே? நமக்குக் கலியாணம் ஆயிடுச்சுன்ணா நீ என் வூட்டுக்கு வந்துடலாம் பாரு. ஆமாம்; இப்பவெல்லாம் உன் அண்ணனைப் பார்க்கவே முடியல்லியே,எங்கே போயிடறாரு?”
“மில்லிலே யாரோ ஆபீஸரு வந்து யார் யாரையோ கூப்பிட்டு விசாரணை செஞ்சுக்கிட்டு இருக்காராமே, தெரியாதா? அண்ணன் அதே கவலையாயிருக்காரு. சந்தர்ப்பம் கிடைச்சால்? வேலை போனவங்களை யெல்லாம் கூட்டிக்கிட்டு அந்த ஆபீஸர்கிட்டே போய் ‘முதலாளி செஞ்சது ரொம்ப நியாயம். நாங்க எல்லாருமே அதை ஆமோதிக்கிறோம்’னு சொல்லப் போறாராம். அதுக்காகத்தான் நாலு நாளா வீட்டிலேயே தங்காமல் அலைஞ்சுக்கிட்டிருக்காரு” என்றாள்
“பாவம்! யாரோ முதலாளி பேரிலே அநியாயமா ‘பெட்டிஷன்’ எழுதிப் போட்டிருக்காங்களாம். அவர் செஞ்சதிலே என்ன தப்பு? அவராலே எத்தனை நாளைக்குத்தான் நஷ்டப்பட முடியும்? மொத்தமா மில்லை மூடி எல்லார் வயிற்றிலேயும் அடிக்காமல் இந்த வரைக்கும் செஞ்சதே எவ்வளவோ புண்ணியமாச்சே! ஆனால் நியாயத்துக்கு இது ஏது காலம்? சரி, பாப்பா ! நேரமாச்சு. நூல்கண்டு விலை ஏறிடப் போவுது, ஜல்தி போ” என்று கூறி அனுப்பினான் வடிவேலு.
10
வேலை இழந்த சாரங்கா மில் தொழிலாளர்கள் அனைவரும் நெடுஞ்சாலை ஆலமரத்தடியில் கூடியிருந்தார்கள். அவர்களைப் பார்த்து நாராயணசாமி உணர்ச்சியோடு பேசிக் கொண்டிருந்தான்.
“தோழர்களே, உங்க எல்லாரையும் நான் இங்கே கூடும்படி கேட்டுக்கொண்டதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. நம் முதலாளிக்கு விரோதமா ‘பெட்டிஷன்’ போயி ருக்கிற விஷயம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். இது யார் செய்த வேலையாயிருந்தாலும் சரி. நாம் அவங்களைக் கண்டிக்கக் கடமைப்பட்டிருக்கோம். சமயம் கிடைக்கறப்போ லேபர் ஆபீஸரிடம எல்லாரும் கூட்டமாப் போய் ‘முதலாளி செய்தது சரி’ன்னு சொல்லிடணும். மில்லிலே நடக்கிற குழப்பத்தைத் தடுத்து நிறுத்தாவிட்டால் நாம் முதலாளிக்குத் துரோதம் செஞ்சவங்களாவோம். நம்ம மில்லுக்குக் கெட்ட பேர் ஏற்படறதைப் பார்த்துக்கிட்டு நாம் பேசாமல் இருக்கலாமா? யாருடைய சூழ்ச்சிக்கும் இதிலே இடம் தரக் கூடாது. நீங்க என்ன சொல்றீங்க?”
“நாராயணசாமி! நீ சொல்றபடியே நடக்கறத்துக்கு நாங்க தயார்” என்று கூட்டத்திலிருந்த அத்தனை பேரும் குரல் கொடுத்தனர்.
“நீங்க இத்தனைப் பேரும் நியாய உணர்ச்சியோடு இருப்பதைப் பார்க்கறப்போ எனக்கே உற்சாகமாயிருக்குது. நம் முதலாளிக்கு இது தெரிஞ்சா ரொம்பச் சந்தோஷப் படுவாரு. அவர்மேல் எந்தவிதமான பழியும் வராமல் பார்த்துக்கறதுதான் இப்ப நம்முடைய முதல் வேலை” என்று கூறிவிட்டு நாராயணசாமி சைக்கிளில் ஏறி, பால் பண்ணையை நோக்கிப் புறப்பட்டான்.
சற்றுத்தூரம் சென்றதும் எதிரில் கண்ணம்மா வந்தாள். நாராயணசாமியை எதிர்பாராதவிதமாக அந்த இடத்தில் சந்தித்ததில் அவளுக்கு அளவற்ற மகிழ்ச்சி! வேறு சமயமா யிருந்தால் நாராயணசாமியும் கூடச் சந்தோஷப்பட்டிருப்பான். இப்போது அவனுக்கு அவள்மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
“என்னங்க! ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? வேலை போயிட்டதுக்காகவா வருத்தப்படறீங்க? நான்தான் அதுக்கெல்லாம் வழி பண்ணிட்டேனே. சீக்கிரமே நீங்களெல்லாம் மறுபடியும் மில்லுக்கு வந்துடலாம். லேபர் ஆபீஸர் உங்க ளுக்கெல்லாம் சாதகமாக இருக்காராம்” என்று உற்சாகம் பொங்கக் கூறினாள் அவள்.
“நீ செய்தது பெரிய தப்பு, கண்ணம்மா! சே! உன்னை என்னவோன்னு நெனைச்சேன். இவ்வளவு மோசமா நடந்துக்குவேன்னு நான் சொப்பனத்திலேயும் கருதல்லே!” – கோபமும் ஆத்திரமும் கலந்த குரலில் வார்த்தைகளை வீசினான் அவன்.
“ஆமாம், நான்தான் இவ்வளவுக்கும் காரணம். எல்லாம் உங்க நன்மைக்குத்தான். மில்லைக் கெடுக்கறதிலே எனக்கு என்ன இலாபம்?”
“உன்னாலே மில்லுக்கே கெட்ட பேரு. முதலாளிக்கே அவமானம். உன் முகத்திலே முழிக்கிறதே பாவம்.”
“நான் செஞ்சது நியாயமா, நீங்க சொல்றது நியாயமாங்கறது லேபர் ஆபீஸர் முடிவு சொன்னப்புறம் தெரியும். பார்த்துக்கிட்டே இருங்க.”
“தெரியட்டும்; அதையும்தான் பார்த்துடுவோம்; லேபர் ஆபீஸர் முடிவு ஒரு நாளும் உனக்குச் சாதகமாக இருக்காது” என்று கோபத்துடன் கூறிவிட்டுப் போய் விட்டான் நாராயணசாமி.
11
சாரங்கபாணி காகிதத்தில் ஏதோ கணக்குப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார். புள்ளி விவரங்கள் இலட்சக்கணக்கில் இருந்தன. அப்போது டெலிபோனில் மில் மானேஜர் அவரை அழைத்து, “பம்பாயி லிருந்து இலட்சுமி மில் முதலாளி ஜயந்தி லால் ஜோஷி வந்திருக்கிறார். பங்களாவுக்கு அழைத்து வரட்டுமா?” என்று கேட்டார்.
“வேண்டாம்; இதோ நானே மில்லுக்கு வந்து விடுகிறேன்” என்று பதில் கூறிவிட்டு மில்லுக்குப் புறப்பட்டார் சாரங்கபாணி. ஜோஷி அவருடைய பழைய நண்பர். சாரங்கபாணி இரண்டு வருடங்களுக்குமுன் பம்பாய்க்குப் போயிருந்தபோது அவரைப் பார்த்தது. மீண்டும் இப்பொழுதுதான் சந்திக்கிறார்.
மனத்துக்குகந்த பழைய நண்பர்களை அபூர்வமாகச் சந்திக்கும்போது ஏற்படுகிற இன்பமே தனி அல்லவா? ஜோஷியைக் கண்டதும் சாரங்கபாணிக்கு ஆனந்தம் தாங்கவில்லை.
அன்று சாரங்கபாணியின் வீட்டில் ஜோஷிக்குப் பலமான விருந்து நடைபெற்றது. வடக்கத்தி பாணியில், ஜாமூன், சப்பாத்தி, எலுமிச்சம்பழம் கலந்த வெங்காயத் துருவல் ஆகிய தினுசுகள் பரிமாறப்பட்டன. ஜோஷி அவற்றை ரசித்துச் சாப்பிட்டார். இருவரும் சாப்பிட்டபடியே பழைய கதைகளையெல்லாம் பேசினார்கள். ஜோஷியின் வழுக்கைத் தலையைக் கண்ட சாரங்கபாணி, “உன் தலையில் இப்போது ஒரு மயிர்கூட இல்லையே!” என்று வியப்புடன் அவரை நோக்கினார்.
“ஆமாம்; பம்பாய்த் தண்ணீரின் விசேஷம் அது. பம்பாயில் நூற்றுக்கு அறுபது பேர் ‘பால்டு’தான்” என்றார் ஜோஷி. பேச்சுக்கிடையில் சாரங்கபாணி, “ஆமாம்; உங்க மில்லை மூடிவிடப் போவதாகக் கேள்விப்பட்டேனே, வாஸ்தவமா?” எனக் கேட்டார்.
“ஆமாம்; எனக்கு வயசாகி விட்டது. மில்லை வைத்து. ‘மானேஜ்’ பண்ண முடியவில்லை. அத்துடன், என் மாப்பிள்ளை ஏதோ புதுசாக ‘எக்ஸ்போர்ட்’ பிஸினஸ் ஆரம்பிக்கப் போறானாம். அதற்கு நிறைய கேபிடல் வேண்டுமாம். அதனாலே மில்லை விற்று வரும் பணத்தை மாப்பிள்ளையிடம் கொடுத்துவிட உத்தேசித்திருக்கிறேன்” என்றார் ஜோஷி.
“அப்படின்னா உங்க மில்லிலிருந்து எனக்கு இரண்டு இயந்திரங்களை விலைக்குக் கொடுக்க முடியுமா? நான் என்னுடைய மில்லைப் பெரிதாக விஸ்தரிக்கலாம் என்று யோசனை செய்து கொண்டிருக்கிறேன்” என்றார் சாரங்கபாணி.
“தேவையான பருத்தி கிடைக்காததால் ஏக நஷ்டம். அதனாலே நூறு பேருக்குமேல் ஆள் எடுத்துட்டேன்னு லெட்டர் போட்டிருந்தீங்களே? இப்ப எதுக்குப் புதுசா மெஷின் வாங்கப் போறீங்க?”
“இப்ப பருத்தி நிறையக் கிடைக்குது. அதனாலே இரண்டு மெஷினை வாங்கிப் போட்டால், வேலையிலிருந்து நீக்கப் பட்டவங்களுக்குத் திரும்பவும் வேலை கொடுக்கலாமென்று பார்க்கிறேன்.”
“அது சரி; இப்போது இயந்திரம் வாங்கப் பணம் ஏது உங்களுக்கு?” என்று கேட்டார் ஜோஷி.
“பணத்துக்கு ஏதாவது வழி பண்ணிடறேன். எப்படி யாவது மில்லைப் பெரிசாக்கலாம்னு நினைக்கிறேன்.”
“சாரங்கபாணி! இயந்திரங்களை உங்களுக்கு விலைக்குக் கொடுப்பதில் எனக்குத் தடையில்லை. ஆனால் எனக்கு உடனடியாகப் பணம் வேண்டும். அது உங்களால் முடியுமா?” என்று கேட்டார் ஜோஷி.
“அந்த இரண்டு இயந்திரங்களும் என்ன விலை ஆகும்?”
“இரண்டரை இலட்சத்துக்குக் குறையாது.”
‘இரண்டரை இலட்சமா?’ ஒருகணம் யோசித்த சாரங்க பாணி, “சரி, நான் என் மானேஜரைக் கலந்துகொண்டு சாயந்திரம் சொல்கிறேன்” என்றார்.
ஜோஷி சாப்பிட்டுவிட்டு நன்றாகக் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் சாரங்கபாணி தமது மில் மானேஜரைக் கூப்பிட்டு, “ரங்கசாமி, நம்மிடத்தில் இப்போது எவ்வளவு பணம் இருக்கிறது?” என்று கேட்டார்.
“காஷ் பாலன்ஸ் குறைவாக இருக்கிறது. பாங்கிலும் ஓவர் டிராப்ட் வாங்கி, பருத்தி ‘ஸ்டாக்’ பண்ணியாயிற்று” என்றார் மானேஜர்.
சாரங்கபாணி சற்று யோசித்தார்.
“ரங்கசாமி! நம் மில் குவார்ட்டர்ஸை அப்படியே விலைக்கு வாங்கிக் கொள்வதாகக் கல்கத்தா ஆசாமி ‘ஆபஃர்’ கொடுத்திருக்கிறார். மூன்று இலட்சத்துக்குக் கேட்கிறார். அதை விற்றுவிடலாம்னு முடிவு செய்திருக்கிறேன். உங்க அபிப்பிராயம் என்ன?” என்று கேட்டார்.
“நீங்க எது செய்தாலும் அது நாலு பேருக்கு நன்மை யாத்தான் இருக்கும்” என்றார் மானேஜர்.
“சரி; இப்ப நம்ம குவார்ட்டர்ஸைப் பாக்கறதுக்காக அந்தக் கல்கத்தா ஆசாமிங்க இன்னும் கொஞ்ச நேரத்திலே இங்கே வரப் போறாங்க” என்று சாரங்கபாணி முடிப்பதற் குள்ளாகவே, “அதோ வராங்களே, அவங்கதான் போலிருக்குது” என்றார் மானேஜர்.
கலகத்தாவிலிருந்து சௌத்ரி என்பவரும் அவருடன் இன்னும் இரண்டு பேரும் காரில் வந்து இறங்கினார்கள்.
“என்ன, குவார்ட்டர்ஸைப் பார்க்கப் போவோமா? ரெடியா?” என்று கேட்டுக்கொண்டே வந்தார் சௌத்ரி.
“என்னுடைய காரியதரிசி உங்களோடு வந்து குவார்ட் டர்ஸைக் காட்டுவார். நீங்க பார்த்துட்டு வரலாம். ஆமாம்; உங்களுக்குக் குவார்ட்டர்ஸ் எப்போது முதல் தேவை?” என்று கேட்டார் சாரங்கபாணி.
“இன்னும் பதினைந்தே நாட்களில் தேவை. கல்கத்தா விலிருந்து எங்கள் ஆட்கள் வருகிறார்கள். ரொம்ப அவசரம்” என்றார் சௌத்ரி.
சாரங்கபாணியின் முகம் சட்டென மாறியது.
“சரி, முதலில் வீடுகளைப் பார்த்துவிட்டு வாருங்கள். மற்ற விஷயங்களை அப்புறம் பேசிக் கொள்ளலாம்” என்றார்.
12
இச்சமயம் டெலிபோன் மணி ஒலிக்கவே, சாரங்கபாணி ரிஸீவரை எடுத்து விசாரித்தார். மில்லிலிருந்து லேபர் ஆபீஸர் பேசினார்.
“என்ன ஸார் என்ன வேண்டும்?” என்று கேட்டார் சாரங்கபாணி,
“ஒன்றுமில்லை ; நான் வந்த வேலை முடிந்துவிட்டது. தகுந்த காரணத்துடன்தான் தாங்கள் 130 பேரை வேலையை விட்டு நீக்கியிருக்கிறீர்கள் என்பதில் எனக்குத் துளியும் சந்தேகம் இல்லை. ஆகையால் சாரங்கா மில் ஆள் குறைப்பு விஷயம் நியாயமாகவே நடந்திருக்கிறது என்று நான் மேலிடத்துக்குத் தெரியப்படுத்தி விட்டேன். இதைச் சொல்வதற்காகத்தான் தங்களைக் கூப்பிட்டேன்” என்றார் அந்த ஆபீஸர்.
“இவ்வளவுதானா? அந்த 130 பேரையும் மீண்டும் வேலை யில் சேர்த்துக்கொள்வதற்கு எப்படியும் தாங்கள் ஒரு யோசனை கூறுவீர்கள் என்றல்லவா எதிர்பார்த்தேன்? ஒரு வழியும் புலப்படவில்லையா?…ம்… சரி … பார்க்கலாம்” என்று கூறிவிட்டு ரிஸீவரைக் கீழே வைத்தார் சாரங்கபாணி.
“ஐயா!…”
அவர் காதுகளுக்குப் பழக்கமான குரல் அது!
“யார் அது?” – சாரங்கபாணி வாசலுக்கு வந்தார். தட்டில், வெற்றிலை, பாக்கு, புஷ்பம் இவற்றுடன் நின்று கொண்டிருந்தான் நாராயணசாமி.
“நாராயணசாமியா?…வா, வா…என்ன இதெல்லாம்?”
“தங்கச்சிக்குக் கலியாணம் நிச்சயம் செய்திருக்கேன். வாச்மேன் வடிவேலுக்குத்தான் கொடுக்கப் போறேன். என் தந்தை உயிரோடு இருக்கப்பவே முடிவு செஞ்ச சம்பந்தம் இது. நீங்க கிட்ட இருந்து நடத்தி வைக்கணும். வீட்டிலே பெரியவங்க இல்லாத குறையை நீங்கதான் தீர்த்து வைக்கணும். இத்தனை நேரம் இங்கே நடந்த பேச்சு எல்லாத்தையும் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்.உங்க நல்ல குணத்துக்கு ஒரு கெடுதலும் வராதுங்க. ஆனால்…” என்று இழுத்தான் நாராயணசாமி.
“ஆனால், என்ன சொல்லு?”
“இந்தக் கலியாணம் நடக்கிற சமயம் பார்த்து வீடு நம்ம கையை விட்டுப் போகுதேன்னுதான் வருத்தமாயிருக்குது. எங்க அப்பாரு காலத்திலேருந்து அந்த வீட்டிலே இருந்துக்கிட்டிருக்கோம். திடீர்னு இப்படி முடிவாயிட்டுது. அதுக்கு நீங்க என்ன செய்வீங்க? எங்களுக்கெல்லாம் உதவி செய்யணுங்கிற நோக்கத்தோடுதானே விக்கறீங்க? இந்தப் ‘பெட்டிஷன்’ எழுதிப் போட்ட ஆசாமிகளுக்கு இதெல்லாம் எங்கே விளங்குது?” என்றான் நாராயணசாமி.
“எப்போது முகூர்த்தம் வைத்திருக்கிறாய், நாராயணசாமி?”
“அடுத்த மாதம் அஞ்சாந்தேதி..”
“ஏன், கலியாணத்தை என் வீட்டிலேயே நடத்தி விடேன். நானே உனக்கு வேண்டிய ஒத்தாசைகளைச் செய்யறேன்.”
“வேண்டாங்க ; இவ்வளவு பெரிய பங்களாவிலே கலியாணத்தை நடத்தறதுன்னா அதுக்குத் தகுந்த மாதிரி செலவு செய்ய வசதி வேணாமா? அவ்வளவு தூரத்துக்கு நான் எங்கே போவேன்? நீங்க இவ்வளவு சொன்னதே போதும். உங்க புண்ணியத்திலே பால் வியாபாரத்திலே கொஞ்சம் பணம் சேர்த்து வெச்சிருக்கேன். போதாததற்கு என் தாயார் நகைகளையும் வித்துடப்போறேன். கலியாணத்தைக் கோயில்லேயே நடத்திடறேன். நீங்க அவசியம் கலியாணத்துக்கு வந்து என்னைக் கௌரவப் படுத்தணும். அதுதான் முக்கியம்.”
வெற்றிலைப் பாக்குத்தட்டை மில் முதலாளியிடம் கொடுத்துவிட்டு மரியாதையுடன் கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டே, “நான் போய் வரேனுங்க!” என்றான் அவன்.
கண்களில் நீர் மல்க, நெகிழ்ந்த நெஞ்சத்துடன் அவனுக்கு விடை கொடுத்து அனுப்பினார் சாரங்கபாணி.
இப்படி நான் செய்யும் காரியம் ஒவ்வொன்றும் பாண்டுரங்கத்தின் குடும்பத்துக்கு இடையூறாக முடிந்து கொண்டிருக்கிறதே ! – இதை எண்ணியபோது அவர் இதயமே வெடித்து விடும்போல் ஆகிவிட்டது, திடீரென்று மயக்க முற்றுக் கீழே சாய்ந்தார் அவர். மனக்கவலை அதிகரிக்கும் போதெல்லாம் அவருக்கு இம்மாதிரி மயக்கம் வருவது உண்டு.
13
“பாப்பா, உனக்குச் சங்கதி தெரியுமா?” என்று கேட்டான் வடிவேலு.
“சொன்னாத்தானே தெரியும்?”
“முதலாளி பேரில் எந்த விதமான தப்பும் இல்லே. மில்லிலே ஆள்குறைப்பு செய்தது ரொம்ப நியாயம்தான்னு லேபர் ஆபீஸர் தீர்ப்புக் கூறிட்டாராம். வேறே என்ன சொல்வாரு? நான் லேபர் ஆபீஸராயிருந்தாலும் இந்த முடிவைத்தான் சொல்லியிருப்பேன்” என்றான் வடிவேலு.
“முதலாளிக்கு விரோதமாப் ‘பெட்டிஷன்’ போட்டவங்களுக்கு ரொம்ப வருத்தமா யிருக்கும், பாவம்” என்றாள் பாப்பா.
“அதுதான் இல்லேன்னேன். தீர்ப்பு முதலாளிக்குச் சாதகமானதிலே எல்லோருக்குமே சந்தோசம்தான். ஒருத்தருக்குமே முதலாளிக்கு விரோதமாக எழுதிப் போடறதிலே விருப்பம் கிடையாது. ஆனால் எல்லோரும் சேர்ந்து ஒரு காரியம் செய்யறப்போ, தான் மட்டும் தனியாப் பிரிஞ்சு இருக்க முடியாமல்தான் எல்லோருமே அப்படிச் செய்தாங்க. பார்க்கப்போனா ஒவ்வொருத்தரும் மனசுக்குள்ளே வருத்தப்பட்டுக்கிட்டேதான் இருந்தாங்க. இது ஒரு சிலருடைய முயற்சியாலே நடந்ததுதானே?” என்றான் வடிவேலு.
“அண்ணனுக்கு இந்தச் சமாசாரம் தெரிஞ்சா ரொம்பச் சந்தோஷப்படும்” என்றாள் பாப்பா.
“அண்ணன்தான் இப்போ எனக்கு இதைச் சொல்லி விட்டுப் போனாரு. அது சரி… நம்ம கலியாணம் எங்கே நடக்கப் போவுது தெரியுமா, உனக்கு?” என்று கேட்டான்.
“ஏன்,எங்க வூட்லேதான்.”
“அதான் இல்லே. முருகன் வூட்லே!”
“அது யாரு முருகன்? பக்கத்து வீட்டு முருகேசனைச் சொல்றயா?”
“இல்லே ; முருகன் கோயில்லே நடக்கப் போவுதுன்னேன், குவார்ட்டர்ஸை முதலாளி யாரோ வெளியூர்க்காரருக்கு வித்துட்டாராம். அதனாலே இனிமே வாச்மேன் தேவையில்லேன்னு எனக்கும் நோட்டீசு கொடுத்துட்டாங்க. ஆனால் அதைப்பற்றி நான் கொஞ்சங்கூடக் கவலைப் படல்லே. உண்மையா உழைக்கிறவனுக்கு உலகமெங்கும் வேலை” என்றான் வடிவேலு.
“முதல்லே அண்ணனுக்கு வேலை போச்சு. இப்ப உனக்கும் வேலை போயிட்டுதா?” – பாப்பா கண் கலங்கினாள்.
“இதுக்கு நீ ஏன் அழுவறே? சந்தோஷமாயிரு, முதலாளி நமக்கெல்லாம் ஏதாவது வழி செய்யாமல் இருக்க மாட்டாரு. பாவம், கொஞ்சநாளா அவருக்கு மனசே சரி யில்லையாம். பாவம்! அடிக்கடி மயக்கம் வேறே வருதாம்!”
“நம்ம கலியாணத்துக்கு வருவாரு, இல்லையா?”
“என்ன அப்படிக் கேக்கறே ? கண்டிப்பா வருவாரு. அவர் வந்தப்புறம்தான் உன் கழுத்திலே நான் தாலி கட்டுவேன்” என்றான் வடிவேலு.
14
ஞாயிற்றுக் கிழமை. அன்றுதான் பாப்பா – வடிவேலு வின் திருமணத் திருநாள். முருகன் கோவிலில் உள்ளூர் நாதசுரக்காரர் சக்கைப்போடு போட்டுக்கொண்டிருந்தார். நாராயணசாமி குறுக்கும் நெடுக்கும் அலைந்து கொண்டிருந் தான். மில் தொழிலாளர்கள் அனைவரும் கலியாணத்துக்கு வந்திருந்தார்கள். கண்ணம்மா தன் சொந்த வீட்டுக் கலியா ணம்போல் இங்குமங்கும் அலைந்து வேலை செய்துகொண் டிருந்தாள். குறுக்கே வந்த நாராயணசாமியைப் பார்த்து, “அதோ முதலாளி கார் வருது” என்றாள். நாராயணசாமி ஓடிப்போய்க் கார்க் கதவைத் திறந்து முதலாளியை எதிர் கொண்டு அழைத்து வந்து புதுப்பாயில் உட்காரவைத்தான். வடிவேலுவும் பாப்பாவும் திருமணக் கோலத்துடன் முதலா ளியின் முன்வந்து கும்பிட்டு நின்றனர். முதலாளி அவர் களை மனமார வாழ்த்திவிட்டு மாப்பிள்ளையை உற்று நோக்கி னார். வாச்மேன் வடிவேலுதான் மாப்பிள்ளை என்கிற விஷயம் அப்போதுதான் அவர் நினைவுக்கு வந்தது. அடாடா அவனுக்கும் அல்லவா வேலை போய்விட்டது? அவரால் அதற்குமேல் அங்கே தாமதிக்க முடியவில்லை.
“நான் வருகிறேன், நாராயணசாமி! முடிந்தால் நாளைக்கு என் வீட்டுப்பக்கம் வந்துவிட்டுப் போ” என்று அவனிடம் சொல்லிக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார் அவர்.
மறுநாள் காலை நாராயணசாமி அவர் வீட்டுக்குப் போயிருந்தான்.
“நாராயணசாமி! உன்னிடம் சில முக்கியமான விஷயங் கள் பேசவே உன்னை வரச்சொல்லியிருந்தேன். உன் குடும்பத்துக்கு நான் எந்த விதத்திலாவது உபகாரம் செய்யவேண்டு மென்று நீண்ட நாட்களாக எண்ணிக்கொண்டிருக்கிறேன். ஆனால் நீயோ என்னிடமிருந்து எவ்வித உதவியும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறாய். நான் நினைப்பதற்கு நேர்மாறாக என்னால் உன் குடும்பத்துக்குப் பல கஷ்டங்கள் நேர்ந்து விட்டன. முதலில், மில்லில் நஷ்டம் ஏற்பட்டதால் நீ வேலையிலிருந்து விலகும்படி நேர்ந்தது. இப்போது, குவார்ட்டர்ஸை விற்கப்போக அதனால் நீ குடியிருக்கும் வீட்டையே காலி செய்யும்படி ஆகிவிட்டது. போதாததற்கு உங்க மாப்பிள்ளை வடிவேலுக்கும் வாச்மேன் வேலை போய் விட்டது.”
“இதுக்கெல்லாம் நீங்க வருத்தப்படலாமா? உங்க மனசு எனக்குத் தெரியாதா? நீங்க நிம்மதியா இருங்க” என்றான் நாராயணசாமி.
“உன்னிடம் ஒரு முக்கியமான பொறுப்பை ஒப்படைக்கப் போகிறேன். அதாவது மில் தொழிலாளர்களுக்குக் குறைந்த விலையிலே எல்லாச் சாமான்களும் கிடைக்க வழி செய்யறாப்போல் ஒரு ஸ்டோர் ஆரம்பிக்கப் போகிறேன். அந்த ஸ்டோரை நீயும் வடிவேலும்தான் பொறுப்பேற்று நடத்த வேண்டும். வியாபாரத்தைப் பலப்படுத்தி ஸ்டோரை அபிவிருத்தி செய்து முடிஞ்சவரை வேலை யில்லாமலிருக்கிற தொழிலாளர்களுக்கு அதில் வேலை கொடுக்க வழி செய்யணும். இந்த ஸ்டோரை நடத்துவதற்கு எவ்வளவு முதல் தேவையானாலும் நான் போடத் தயாரா யிருக்கிறேன். தொழிலாளர்களுக்கு இந்த ஸ்டோர் மூலம் பல நன்மைகளை நீ செய்ய முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. உன் உழைப்புக்கு ஊதியமாக நீ மாசம் நூறு ரூபாய் எடுத்துக்கொள். சீக்கிரமே ஸ்டோரை ஆரம்பித்து விடலாம். என்ன சொல்கிறாய்?”
“இத்தனை பேருக்கு உபகாரமாக இருக்கும் ஒரு நல்ல காரியத்தைச் செய்யும்படி நீங்க சொல்றபோது நான் ஏன் தடை சொல்லப் போகிறேன்? உடனே ஆரம்பிச்சுடலாம்” என்று மகிழ்ச்சியுடன் கூறினான் நாராயணசாமி. அடுத்த சில தினங்களுக்குள்ளாகவே ஸ்டோர் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளில் தீவிரமாக முனைந்தான் அவன்.
ஒரு நல்ல நாள் பார்த்து ஸ்டோர் ஆரம்பிக்கப்பட்டது. நாராயணசாமி ‘காஷ்’ மேஜை முன் உட்கார்ந்தபடி எல்லாரையும் வரவேற்றுக் கொண்டிருந்தான். வடிவேலு பண்டங்களை ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தான்.
காஷ் மேஜைக்கு நேராகச் சுவரில் மாட்டப்பட்டிருந்த விநாயகர், இலட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று படங்களையும் பூமாலைகள் அலங்கரித்தன. ஊதுவத்தியின் மணம் ‘கம்’ மென்று வீசிக்கொண்டிருந்து. மில் தொழிலாளர்கள் எல்லாரும் ஸ்டோர் வாசலில் கூடி முதலாளியின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். முதலாளி வந்ததும் எல்லாரும் மரியாதையுடன் எழுந்து அடக்கமாக நின்றார்கள். நாராயணசாமி தேங்காய் உடைத்துச் சூடம் கொளுத்தினான். வடிவேலு கற்கண்டு வழங்கினான். “உங்க கையாலேயே ‘போணி’ செய்து ஆரம்பிச்சு வைக்கணும்” என்று விநயமாக முதலாளியைப் பார்த்துக் கேட்டுக் கொண்டான் நாராயணசாமி.
“இல்லை நாராயணசாமி! தொழிலாளருக்காக ஏற்பட்ட கடை இது. ஆகவே நம் மில்லிலே ரொம்ப நாளா வேலை செய்கிற வேலுச்சாமிப் பெரியவரை ஆரம்பித்து வைக்கச் சொல்றதுதான் நியாயம்” என்றார் முதலாளி. வேலுச்சாமிக் கிழவரை அழைத்துப் “பெரியவரே, நீங்க தான். கைராசிக்காரர். உங்க கையாலேயே ‘போணி’ செய்து ஸ்டோரை ஆரம்பிச்சு வையுங்க” என்று கேட்டுக் கொண்டார் சாரங்கபாணி.
வேலுச்சாமி மிக்க மசிழ்ச்சியுடன் தம் கையால் கற்கண்டை விலைக்கு வாங்கி முதல் முதலாக வியாபாரத்தைத் தொடங்கி வைத்தார்.
தொழிலாளர்கள் அனைவரும் உற்சாகத்தோடு கைதட்டி ஆரவாரம் செய்தனர்!
பின்னர் சாரங்கபாணி அந்த ஸ்டோரை ஆரம்பித்ததன் நோக்கத்தை விளக்கிச் சில வார்த்தைகள் பேசினார் :
“நம் மில் தொழிலாளர்களின் சௌகரியத்தையும் நன்மையையும் முன்னிட்டு இன்று இந்த ஸ்டோர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் உங்களுக்கு வேண்டிய எல்லாவிதமான பொருள்களும் குறைந்த விலையில் கிடைக்கும். நாராயணசாமி நம் எல்லாருடைய நம்பிக்கைக்கும் பாத்திரமானவன். அவனுடைய சலியாத உழைப்பாலும் முயற்சியாலும் இந்த ஸ்டோர் வெகு சீக்கிரமே மிகப் பெரிய அளவில் வளர்ந்துவிடும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. இந்த முயற்சிக்கு உங்கள் எல்லாருடைய ஒத்துழைப்பும் ஆதரவும் தேவை என்று கேட்டுக் கொள்கிறேன்.”
பாண்டுரங்கத்தின் குடும்பத்துக்குத் தாம் செய்ய வேண்டியதைச் செய்து விட்டோம் என்ற மனத் திருப்தியுடன் வீட்டுக்குத் திரும்பிச் சென்றார் சாரங்கபாணி. வீட்டை அடைந்ததும் அவருக்கு மார்வலி கண்டுவிட்டது. அப்படியே படுக்கையில் போய்ப் படுத்துக்கொண்டவர்தான். டிரைவரை அனுப்பி டாக்டரை அழைத்து வரச்சொன்னார். டாக்டர் வந்ததும் அவரைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, “தற்போதைய உடல் நிலையில் தங்களுக்கு அதிக சந்தோஷமோ துக்கமோ ஏற்படக்கூடாது. பூரண ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும். யாருடனும் அதிகம் பேசக்கூடாது” என்று எச்சரித்து விட்டுப் போனார்.
முதலாளிக்கு உடம்பு சரியில்லை என்னும் தகவல் இதற்குள் ஆலைத்தொழிலாளிகள் அனைவருக்கும் எட்டிவிட்டது. அவர்கள் எல்லாரும் கூட்டமாகப் பங்களா வாசலில் வந்து கூடிவிட்டனர்.
அன்று மாலையே சாரங்கபாணி ஒரு முடிவுக்கு வந்து விட்டார். தம்முடைய காரியதரிசியை அழைத்து, “இனி நான் அதிக நாள் உயிர் வாழ மாட்டேன். என்னிடம் இத்தனை அன்பும், மதிப்பும், நம்பிக்கையும் வைத்துள்ள தொழிலாளர்களுக்கு என் உயிர் போவதற்குள் ஏதாவது செய்துவிட வேண்டும். நம்முடைய வக்கீலை அழைத்துவரச் சொல்லுங்கள்” என்றார்.
வக்கீல் வந்ததும், “வக்கீல் ஸார்! என் கடைசிக் காலம் நெருங்கி விட்டது. நான் இனி அதிக நாள் இருக்க மாட்டேன். எனவே, வாரிசு இல்லாத என் சொத்துக்களுக்கு வாரிசு ஏற்படுத்த விரும்புகிறேன். என்னுடைய மில்லை, அதில் வேலை செய்யும் எல்லாத் தொழிலாளர்களுக்கும் பொதுச் சொத்தாக்கி அதில் வரும் இலாபத்தை அவர்களே சமமாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். இதற்கு ஒரு ‘டிரஸ்ட்’ ஏற்படுத்திவிட விரும்புகிறேன்.
அடுத்தபடியாக ஸ்டோரை நாராயணசாமிக்கு உரிமையாக்கி அவன் பெயருக்கே மாற்றி எழுதிவிட வேண்டும். நாளைக்கே உயிலை எழுதிக்கொண்டு வந்து விடுங்கள். நான் கையெழுத்துப் போட்டு விடுகிறேன்” என்றார் சாரங்க பாணி.
வக்கீல் எழுந்து போனதும் சாரங்கபாணி மானேஜரை அழைத்துக் “குவார்ட்டர்ஸ் விற்ற பணம் கைக்கு வந்ததும் பம்பாயிலுள்ள இயந்திரங்களைக் கொண்டு வர உடனே ஏற்பாடு செய்யுங்கள். அந்த இயந்திரங்கள் வந்து வேலை செய்யத் தொடங்கிவிட்டால் நம் மில்லிலிருந்து நீக்கப்பட்ட அத்தனை தொழிலாளர்களையும் மறுபடியும் வேலையில் சேர்த்துக் கொண்டு விடலாம்” என்றார்.
“ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க? அதெல்லாம் உங்களுக்கு ஒன்றும் இராது ” என்றார் மானேஜர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் சில தினங்களுக்குள்ளாகவே, வாழ்வின் பயனை அடைந்துவிட்ட மனநிறைவுடன் சாரங்கபாணி கண்களை மூடிவிட்டார். அன்று அந்த ஊரே சாரங்கபாணியின் பங்களாவில் கூடியிருந்தது. சாரங்கபாணியின் அந்திம ஊர்வலம் புறப்பட்டதும் அவ்வளவு பேரும் கண்ணீர் வடித்தபடியே ஊர்வலத்துக்குப் பின்னால் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவருடைய ஈமச் சடங்குகளை நாராயணசாமியே முன்நின்று செய்து முடித்தான். அவன் நெருப்புச் சட்டியுடன் தலைகுனிந்த வண்ணம் முன்னால் செல்ல, தொழிலாளர்கள் தோள்மீது சாரங்கபாணி தமது கடைசி யாத்திரையைச் செய்து கொண்டிருந் தார். அந்தக் காட்சி எல்லாரையும் உலுக்கிவிட்டது.
15
“என்ன, கண்ணம்மா உனக்கு என்ன வேணும்?” என்று கேட்டான் நாராயணசாமி.
“அரிசி.”
“சரி. கியூவிலே நில்லு. யாராயிருந்தாலும் வரிசையிலே நின்னாத்தான் கிடைக்கும்.”
கியூவிலே நின்று அரிசியை வாங்கிக் கொண்டே கண் ணம்மா, வீட்டுக்குப் புறப்பட்டாள். இதற்குள் கூட்டமும் கொஞ்சம் குறைந்தது.
“கண்ணம்மா, எங்கே அதுக்குள்ளே கிளம்பிட்டே? இரு கொஞ்சம். இதோ வந்துடறேன். உங்கிட்டே கொஞ்சம் பேசணும்” என்று கூறிய நாராயணசாமி, வடிவேலுவிடம் ஸ்டோரைக் கவனித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு வெளியே வந்தான்.
“நீங்க எல்லாரும் சேர்ந்து செய்த காரியம் முதலாளியின் உயிருக்கே எமனா முடிஞ்சுட்டுது. இந்த மாதிரி ஒரு பழி ஏற்பட்டது முதல் முதலாளி அதே கவலையாகப் படுத்தவர் தான். அவர் உயிர் போயிட்டுது. நீ இந்த மாதிரிச் செய்ததை என்னாலே பொறுக்கவே முடியவில்லை. என் மேலே உனக்கு அன்பு இருக்கலாம். ஆனால் அதற்காக இப்படியா செய்ய றது. சே!” கோபமும் வெறுப்பும் கலந்த குரலில் பேசினான் நாராயணசாமி. கண்ணம்மா பதில் கூறாமல் கண்ணீர் சிந்தியபடியே நின்றுகொண்டிருந்தாள்.
“ஏன் நிக்கறே? நீ போகலாம். உன்னைப் பார்க்கப் பார்க்க எனக்குக் கோபம்தான் அதிகமாகுது ; நீ போய்விடு. இனி உன் சிநேகமே எனக்கு வேண்டாம்” என்று ஆத்திரத்துடன் சீறினான் அவன்.
“தெரியாமல் செய்துவிட்ட தப்பு இவ்வளவு விபரீதமா ஆகும்னு நான் நினைக்கவில்லை. என் குற்றத்தை நான் இப்பத்தான் உணர்கிறேன். உங்க மேலே இருந்த அன்பிலே கண்மூடித்தனமா செய்துட்டேன். இனி உங்க விருப்பத்துக்கு மாறா ஒரு நாளும் நடக்கமாட்டேன். நான் திருந் திட்டேன். என்னை நீங்க மன்னிச்சுடுங்க… என்னைக் கை விட்டுவிடாதீங்க. மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க…” என்று கதறிக்கொண்டே நாராயணசாமி யின் காலடியில் விழுந்துவிட்டாள் கண்ணம்மா. நாராயண சாமி அவளைத் தூக்கி அணைத்துக் கொண்டான்.
“உனக்குத் தெரியுமா? முதலாளி மில்லை அப்படியே தொழிலாளர்கள் பேருக்கு எழுதி வெச்சிட்டாரு. இந்த ஸ்டோரை என் பேருக்கு எழுதி வெச்சிருக்காரு. அவர் விரும்பியபடி நான் இந்த ஸ்டோரை எப்பாடு பட்டாவது முன்னுக்குக் கொண்டுவந்து தொழிலாளர் சமூகத்துக்கு உதவி செய்யப்போறேன். அப்பத்தான் அவர் ஆத்மா சாந்தி அடையும்” என்றான் அவன்.
நாராயணசாமியின் சலியாத உழைப்பு, ஊக்கம். முயற்சி காரணமாக அந்த ஸ்டோர் ஒரே வருடத்தில் மிகப் பெரிதாக வளர்ந்துவிட்டது. அதில் கிடைத்த இலாபத்தைக் கொண்டே மேலும் மேலும் அதைப் பலப்படுத்தினான் அவன். கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்களில் லேருக்கு அதில் வேலையும் போட்டுக்கொடுத்தான்.
ஆயினும்,அவனுடைய இலட்சியம் இன்னும் பூர்த்தியாக வில்லையே ! வேலை இழந்த மில் தொழிலாளர்கள் எல்லாரும் மீண்டும் போய் மில்லில் சேர்ந்து விட்டார்கள். இருந்தாலும் ஊரில் இன்னும் எத்தனையோ தொழிலாளர்கள் வேலை இழந்து திண்டாடிக் கொண்டிருக்கிறார்களே? ஸ்டோரில் வரும் இலாபத்தைக் கொண்டு அத்தகைய ஏழைத் தொழிலாளர்களுக்கு நிரந்தரமான உதவி அளிக்க விரும்பினான் அவன்.
அதற்காக ஒரு சங்கத்தையே ஆரம்பித்து, வேலையின்றித் தவிக்கும் தொழிலாளர்களை அந்தச் சங்கத்தில் சேர்த்துக்கொண்டான். அவர்களுக்கு உண்ண உணவும், உடுக்க உடையும் கொடுத்து உதவினான். ஆங்காங்கு வேலை கிடைக்கும் போதெல்லாம் அவர்களுக்கு வேலையும் தேடித்தந்தான். ஆனால் அவன் மட்டும் அந்தப் பழைய நூறு ரூபாயே பெற்றுக்கொண்டிருந்தான்.
ஆண்டு விழா தினம். அழகாக அலங்கரிக்கப் பெற்று பந்தலில் ஆயிரக்கணக்கான பேர் அமர்ந்திருந்தார்கள். பிரமுகர்கள், பிரபலஸ்தர்கள், அரசியல் தலைவர்கள் அனை வரும் மேற்படி விழாவுக்கு விஜயம் செய்திருந்தனர். ஆண்டு விழாவை யொட்டி முதலாளி சாரங்கபாணியின் பட த்தைப் பிரபலஸ்தர் ஒருவரைக்கொண்டு திறந்துவைத்தான் அவன். மேற்படி தலைவரின் சொற்பொழிவு முடிந்ததும் நாராயண சாமி சங்கோசத்துடன் எழுந்து நின்று பேசினான் :
“இங்கே கூடியுள்ள தொழிலாளர்களே, பெரியவர்களே! உங்கள் எல்லாருக்கும் என் வணக்கம். இன்று நம்ம சங்கத்திற்கு ஆண்டு விழா. நம்ம மில் தொழிலாளர்களில் ஒருவர்கூட இப்போ வேலையில்லாமலில்லை. இப்ப நம்ப முதலாளி உயிரோடு இருந்தால், ரொம்பச் சந்தோஷப் பட்டிருப்பாரு. கடைசி காலத்திலே அவர் ரொம்ப மனக்கஷ்டத்திற்கு உள்ளாகி இருந்தாரு. அது உங்களுக் கெல்லாம் தெரிஞ்ச சங்கதிதான். இத்தனைக்கும் பல பேருடைய நலனுக்காகத்தான் சில பேரை வேலையைவிட்டு எடுத்தாரு. அப்படி வேலை இழந்தவர்கள்கூட அவங்க வாழ்க்கையைப்பற்றி ரொம்பக் கவலைப்படவில்லை. ஆனால், அதை நினைச்சுநினைச்சு முதலாளிதான் ரொம்ப வருத்தப் பட்டாரு. அவர் செய்யாத குற்றம் நிழல்போல அவருடைய வாழ்நாள் பூராவும் தொடர்ந்து கொண்டிருந்தது. அவர் சாந்தியடையணும் என்பதற்காகவே ஆத்மா சங்கத்தை ஒரு வருடம் முன்னாடி நான் ஆரம்பிச்சேன். இந்தச் சங்கத்தின் நோக்கம் உங்கள் எல்லாருக்கும் தெரியும்னு நம்பறேன். இதில் வேலை இழந்தவர்களுக்கு மட்டுமே இடம் உண்டு. வேலை விருப்பமில்லாதவர்களுக்கு. இங்கே இடம் கிடையாது. அப்படிச் செய்வது சோம்பேறிகளுக்கு இடம் கொடுப்பதாகும். குற்றம் செய்ததற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கும் இதில் இடம் கிடையாது. அப்படிச் செய்வது குற்றவாளிகளுக்கு இடம் கொடுப்பதாகும். ஒரு குற்றமும் புரியாமல் வேலையினின்று விலக்கப்பட்ட தொழிலாளர்கள் எல்லாருக்கும் இங்கே உதவி கிடைக்கும். ஆனால் இதில் சேருகிறவர்கள் எந்த வேலை செய்யவும் தயாராயிருக்க வேண்டும். தொழிலில் உயர்வு தாழ்வு என்கிற வித்தியாசமே பாராட்டக் கூடாது. அப் பொழுதுதான் நம் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் உயரும்; நாட்டின் நிலை உயரும்.
“நம் முதலாளி இந்த ஸ்டோரை என் பெயருக்கு எழுதி வைத்துவிட்டுப்போனார். ஆனாலும் இன்றுவரை இந்த ஸ்டோரை நான் என்னுடைய சொந்தமாகக் கருதவில்லை. இந்தச் சங்கத்தின் வளர்ச்சிக்காகவே அதில் வரும் இலாபத்தைப் பயன்படுத்தி வருகிறேன். முதலாளி உயிரோடு இருந்தால் என்னுடைய இந்தக் காரியத்தை ஆமோதிப்பார் என்ற நம்பிக்கையுடனேயே இதையெல்லாம் செய்து வருகிறேன்.
“அந்த உத்தமரின் நினைவு நம் எல்லாருடைய உள்ளத்திலும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை” என்று சுருக்கமாகவும் உருக்கமாகவும் பேசி முடித்தான்.நாராயணசாமி, அவன் பேச்சு முடிந்ததும் கூட்டத்திலிருந்த அனைவரும் எழுந்து தலை வணங்கி நின்றனர். ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்த கண்ணம்மாவின் கண்களி லிருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.
– திருக்குறள் கதைகள், மங்கள நூலகம், சென்னை.
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு:
கதைப்பதிவு: November 5, 2025
பார்வையிட்டோர்: 45