வினை விவகாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 6, 2023
பார்வையிட்டோர்: 3,295 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செத்தவரைப் பிழைக்க வைப்பது தவிர மற்ற எல்லாக் காரியமும் சாதிக்கும் சக்தி படைத்தவராம் அந்த அம்மாள்! அவருடைய மந்திர வேலைகளின் மகிமைகளைப்பற்றிப் பரவியிருக்கும் கதைகள் ‘1001 இரவுகள்’ கதைகளையெல்லாம் தூக்கியடிக்கும்…

‘கச்சான் பூத்தே’ என்றால் அந்த வட்டாரத்தில் அவரை எல்லாருக்கும் தெரியும். அவருடைய அசல் பெயர் என்னவென்பதை அடையாளக் கார்டில்தான் பார்க்க வேண்டும்!

அவர் வளர்க்கும் வெள்ளாடுகளில் ஒன்றுக்கு நேற்றிலிருந்து ‘என்னமோ’ ஏற்பட்டுவிட்டது! என்னமோ என்றால்…ஏதோ ஒரு சீக்கு என்றுதான் கச்சான் பூத்தே முதலில் நினைத்தார்.

தண்ணீர் குடிக்கமாட்டேனென்கிறது. தழை இலைகளைத் தின்ன மறுக்கிறது.

கச்சான் பூத்தேக்குக் கவலை கடலளவு. ஒரு கட்டி கச்சான் வாங்கிவந்து வறுத்துப் போட்டுக்கூடப் பார்த் தார். ஆடு அதைத் திரும்பியும் பார்க்கவில்லை! பிறகு அது பூராவையும் அவரே தின்று தீர்த்துவிட்டு ஒரு வைத்தியரைக் கூட்டிவந்து காட்டினார்.

எப்போதோ ஒரு காலத்தில் ஊரில் மிருகங்களுக்கு வைத்தியம் பார்த்தவராம் அவர்!

அவர் ஆட்டைத் தொட்டுப் பார்த்தார். தடவிப் பார்த்தார். பல்லைப் பார்த்தார். தலையைப் பிடித்துத் திருகிப் பார்த்தார். கடைசியாகத் தன் பம்பைத் தலையை வேகமாக ஆட்டிக்கொண்டே பின் வருமாறு சொன்னார்:

‘மருந்து கிருந்து கொடுத்து இதைக் குணப்படுத்த முடியாது. பேசாமல் அறுத்துக் கூறுபோட்டு விற்றுக் காசாக்கிவிடு…

சிமிண்ட் தரையில் விழுந்த கச்சான் மாதிரித் துள்ளிக் குதித்தார் கச்சான் பூத்தே! ‘உன் வேலையைப் பார்த்துக்கிட்டுப் போய்’யா. வாய் கூசாமல் சொல்றியே ஆட்டை அறுக்கணும்னு, படுபாவி என்று சீறிப் பாய்ந்தார்.

எங்கே ஆட்டுக்குப் பதிலாகத் தன்னை அறுத்துத் தொலைத்துவிடுவானோ என்று மிரண்டு தப்பினோம்; பிழைத்தோம் என்று ஓடிவிட்டார் வைத்தியர்!

கச்சான் பூத்தே அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பதை அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

ஆட்டை அறுத்தால் கடனுக்கு இறைச்சி வாங்க லாமே என்பது அவர்கள் திட்டம்.

அவர்களில் ஒருவர் கச்சான் பூத்தேயிடம் வந்து ‘வைத்தியர் என்ன சொல்கிறார்?’ என்று போலியான கவலையோடு விசாரித்தார்.

‘ஒரு சீக்கும் இல்லையாம்’ என்றார் அசலான கவலையுடன் கச்சான் பூத்தே!

‘அப்படியானால் இப்படியிருக்குமோ?’

‘எப்படியிருக்குமோ?’ என்றார் க. பூ. ஆவலோடு! அவர் காதும் இவர் வாயும் நெருங்கின. வாய் அசைந் தது, காது நிமிர்ந்தது உடனே, ‘இருக்கும் இருக்கும்’ என்று பரபரப்போடு, சொல்லிக்கொண்டு ஓட்டமாய் ஓடினார் கச்சான் பூத்தே!


ஒரு பொம்மைப் புலி ‘ஆ’வென்று வாயைப் பிளந்தபடி சீறிக்கொண்டு நின்ற வீட்டிற்குள் பயபக்தியோடு புகுந்தார் கச்சான் பூத்தே.

‘சயாம்கார அம்மா’ என்று பேர் பெற்ற பிரபல மந்திரவாதி அம்மாளின் வீடு அது.

செத்தவரைப் பிழைக்க வைப்பது தவிர மற்ற எல்லாக் காரியமும் சாதிக்கும் சக்தி படைத்தவராம் அந்த அம்மாள்! அவருடைய மந்திர வேலைகளின் மகிமைகளைப்பற்றிப் பரவியிருக்கும் கதைகள் ‘1001 இரவுகள்’ கதைகளையெல்லாம் தூக்கியடிக்கும்!

வீட்டுக்குள், மனிதரின் மண்டை ஓடுகள், பூனை களின் எலும்புக் கூடுகள், பாம்புகளின் தோல்கள் போன்ற பயங்கர வகையறாக்கள் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.

அவற்றைப் பார்த்தாலே யாருக்கும் வயிற்றைக் கலக்கும்!

ரத்தச் சிவப்பான ஆடையும் தலைவிரி கோலமும் கையில் மந்திரக்கோலும் கண்களில் மிரட்டலுமாக அங்கு தோன்றினார் சயாம்கார அம்மாள்.

கச்சான் பூத்தேயைத் தரையில் மண்டியிட்டு உட்காரச் சொன்னார். என்ன விவகாரம் என்கிற விசாரணை நடந்தது.

வெள்ளாடு இரை தின்னாமல் நிற்கும் வேதனைச் சேதியை விக்கி விக்கி அழுதபடி கூறினார் க.பூ.

ஒரு வெள்ளித் தாம்பாளம் அவர் முன்னே வந்தது. அதில் பத்து வெள்ளி வைக்கச்சொன்னாள் மந்திரக்காரி.

கச்சான் பூத்தேயின் தோலை உரிப்பதுபோல் துண்டுத் துணியில் முடிச்சை அவிழ்த்துப் பத்து வெள்ளியை எடுத்து வைத்தார். கச்சான் பூத்தே.

‘ஒரு கோழிமுட்டை வேண்டுமே’என்றாள். ‘முட்டை எடுத்து வரவில்லையே’ என்று விழித்தார் சு. பூ. ‘பரவாயில்லை. அதற்குரிய காசைக்கொடு’ என்று வாங்கிக் கொண்டு ஒரு முட்டையை எடுத்து வைத்தாள்.

அந்த முட்டையின்மீது ஏதோ எழுதினாள். பிறகு அதைக் கூர்மையாக நோக்கியபடி என்னமோ சொல்லிச் சபித்தாள். அப்புறம் அதற்கு எட்டுத் திசைகளை யும் சுட்டிக் காண்பித்துப் பின்னர் மெதுவாக உடைத்து ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் மஞ்சள் கருவை மட்டும் ஊற்றி வைத்துக்கொண்டு உற்றுக் கவனித்தாள்.

அதிலே என்ன தெரிந்ததோ? அவள் முகம் மெல்ல மலர்ந்தது. எதையோ கண்டுகொண்டமாதிரி பெருமிதத்துடன் நிமிர்ந்து கச்சான் பூத்தேயைப் பார்த்துத் தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள்.

கச்சான் பூத்தேயின் விரோதி ஒருத்தன் ‘செய்வினை’ வைத்திருக்கிறானாம்: அதனால் தான் ஆடு உண்ணா விரதமிருக்கிறதாம்! செய்வினையை எடுத்தால்தான் ஆடு பிழைக்குமாம்! இல்லாவிட்டால் ஆட்டுக்கு மட்டுமல்லாமல் கச்சான் பூத்தேக்கும் ஆபத்து காத்திருக்கிறதாம்!

‘அப்படியா சேதி? நான் நினைத்தது சரியாத் தானிருக்கு. அந்த முனியாண்டிதான் இந்த வேலையைச் செய்திருக்கணும். அவனைச் சும்மா விடக்கூடாது’ என்று கருவினார் க. பூ! ஆடு வளர்ப்பதில் இருவருக்கும் போட்டி உண்டு.

அதையடுத்து, நூறு வெள்ளி கைமாறியது. செய்வினையை எடுப்பதற்கு ஐம்பது வெள்ளி, முனியாண்டிக்கு செய்வினை வைப்பதற்கு ஐம்பது வெள்ளி. பதி லுக்குச் செய்யவேண்டாமா என்ன?

நூறு வெள்ளியை வாங்கிக்கொண்டு சயாம்கார அம்மாள் ஓர் அறைக்குள் புகுந்து கொண்டாள். அது பூஜை அறையாம்!

சுமார் ஒருமணி நேரம் கழித்து அவள் வெளியே வரும்போது கையில் ஓர் எலுமிச்சம் பழமும் அவித்த முட்டை ஒன்றும் கொஞ்சம் மலர்களுமிருந்தன.

அந்த முட்டை நெருப்போ தண்ணீரோ இல்லா மல் மந்திரத்தால் அவித்ததாம்!

எலுமிச்சம்பழத்தை இரண்டாக நறுக்கி முனி யாண்டியின் வீட்டுக்குப் பின் புறம் (முன் புறம் போனால் உதை விழலாம்) ! போட்டுவிட வேண்டுமாம். முட்டை யின்மீது குண்டூசிகள் குத்தப்பட்டிருந்தன. அதையும் அங்கே புதைத்துவிட வேண்டுமாம். மலர்களை முனி யாண்டி நடக்கும் பாதையில் தூவிவிட வேண்டுமாம்.

அப்படியே செய்து முடித்தார் கச்சான் பூத்தே.


மறுநாள் முனியாண்டி சயாம்கார அம்மாள் வீட்டை நோக்கி விழுந்தடித்து ஓடினார்!

முனியாண்டி வளர்க்கும் ஆட்டுக் கடாவுக்கு ‘என்னமோ’ நேர்ந்து விட்டதாம்!

கச்சான் பூத்தேயின் ஆட்டைப்போல் இது உண்ணா விரதமிருக்கவில்லை. இலை தழைகளைச் சக்கைபோடு போட்டுவிட்டுத் தண்ணீரையும் ஒரு தொட்டி மண்டுகிறதாம்!

வேறென்ன கோளாறு?

வெறிகொண்டமாதிரி முரட்டுத்தனமாக ஆட்களை முட்டித் தள்ளுகிறதாம்! கட்டிப் போட்டாலும் எப்படியோ கயிற்றை அறுத்துக் கொண்டு விடுகிறதாம். அதன் கிட்ட யாருமே போக முடியவில்லையாம்!

தபால்காரர் அவ்வழியாக வந்திருக்கிறார் முனி யாண்டி வீட்டுக்கு ஏதாவது தபால் கொடுக்கிறாரா என்று கவனித்ததாம். தபால் இருந்தால்தானே கொடுப்பார்? ஒன்றும் கொடுக்காமல் போகவே ஆத் திரத்தோடு கயிற்றை அறுத்துக்கொண்டு விரட்டிச் சென்று ஒரு போடு போட்டதாம்!

தபால் மூலம் ஏதோ ஒரு சேதியை எதிர்பார்க்கிறதோ, என்னமோ? யார் கண்டது?

‘நேற்றுவரை பசுமாதிரி பரம சாதுவாயிருந்த கடா, எவனோ ஏவல் பில்லி சூனியம் வைச்சுட்டான் போலிருக்கும்மா. அதனாலேதான் இப்படியெல்லாம் பண்ணுது…’ என்று சயாம்கார அம்மாளிடம் அழாத குறையாகக் கூறி உதவி கோரினார் முனியாண்டி.

சயாம்கார அம்மாள் மர்மப் புன்னகை பூத்தார். அது மந்திரப் புன்னகையாகத் தோன்றியது முனியாண்டிக்கு!

முனியாண்டியின் முடிச்சு அவிழ்ந்து நூறு வெள்ளி கைமாறியது. அடுத்து, சயாம்கார அம்மாளின் பூஜை அறைப் பிரவேசமும், எலுமிச்சம்பழம், மந்திர முட்டை, மலர்கள் பரிமாறலும் வழக்கம்போல் நடந்தேறின!

மறுநாள் கச்சான் பூத்தேக்கு ஒற்றைத் தலைவலி யாம். அவருக்கு இருந்ததே நல்லவேளையாக ஒரு தலைதான். இல்லாவிட்டால் இரட்டைத் தலைவலி வந்திருக்கும்!

முனியாண்டி மீண்டும் ஏதோ செய்வினை வைத்து விட்டாரென்று சயாம்கார அம்மாளிடம் ஓடினார் அவர்.

அதற்கு மறுநாள் முனியாண்டிக்குக் கழுத்து வலியாம்! தலையணை உயரம் போதாத காரணமாயிருக்கும் என்று அவர் மனைவி சொன்னதையும் ஏற்காமல் சயாம்கார அம்மாளிடமே சென்றார் அவரும்!

இப்படியாக ஒருவர் மாற்றி ஒருவர் மந்திரம் பண்ணி ஒருவருக்கு ஒருவர் செய்வினை செய்துகொண்டார்கள்!

கச்சான் பூத்தேயின் வெள்ளாடு, குணமடையவு மில்லை. முனியாண்டியுடைய கடாவின் முரட்டுத்தனம் மாறவுமில்லை. அப்படியேதானிருந்தன!

இருவருக்கும் பணச் செலவு. சயாம்கார அம்மா ளுக்கு வருமானம்!

ஓரு வாரம் ஆகிவிட்டது.

கச்சான் பூத்தேயின் மகன் தெரியாத்தனமாக வெள்ளாட்டுக்கு விடு தலை வழங்கிவிட்டான். அது ஒரே ஓட்டமாக ஓடியது!

‘ஆட்டை ஏண்டா அவிழ்த்துவிட்டாய்?’ என்று சத்தம் போட்டுக்கொண்டே அதை விரட்டிச் சென்றார், கச்சான் பூத்தே.

அது முனியாண்டியின் வீட்டுப் பக்கமாக விரைந் தோடியது.

அதே சமயத்தில் முனியாண்டியின் ஆட்டுக்கடாவும் எப்படியோ கட்டவிழ்த்துக்கொண்டு வேகமாக வந்துகொண்டிருந்தது. அதன் பின்னால் முனியாண்டி கையில் கயிற்றோடு தொடர்ந்து ஓடி வந்தார்.

நடுவழியில் கடாவும் ஆடும் சந்தித்தன. ஒன்றை யொன்று உரசியவாறு மெய்மறந்து நின்றன!

கொஞ்ச நேரத்துக்குப் பிறகு இரண்டும் மெதுவாக நடைபோட்டுச் செடிகளின் பக்கம் சென்றன. அங்கு ஒரு செடியிலிருந்த இலைகளை வெள்ளாடு தின்னத் தொடங்கியது. அது தின்பதைப் பார்த்துக்கொண்டு கடா மௌனமாக நின்றது.

அந்தக் காட்சியைப் பார்த்துக் கச்சான் பூத்தேயும் முனியாண்டியும் வெட்கித் தலையைத் தொங்கப் போட்டார்கள்!

காதல் ஏக்கமும், காதல் வெறியுமே எல்லாவற்றுக்கும் காரணம் என்பது தெளிவாகியது!

இப்போது முனியாண்டியும், கச்சான் பூத்தேயும் சொல்வது இதுதான்:

‘மந்திரமாவது, செய்வினையாவது, ஏவலாவது? எல்லாம் சும்மா…’

– மீன் வாங்கலையோ, முதற் பதிப்பு: 1968, மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *