மெஸ்மரிச மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 27, 2022
பார்வையிட்டோர்: 8,778 
 

ஹலோ !

ஹலோ..,

வணக்கம் சார், “நாங்க குட்டி போடும் வட்டி” என்னும் பைனான்ஸ் கம்பெனியில இருந்து பேசறோம்

பைனான்ஸ் கம்பெனியா? நீங்க எதுக்கு எனக்கு போன் பண்ணனும், அதுவும் பொண்ணு பேசறீங்க.

இல்லை சார், உங்களுக்கு கடன் தர்றதுக்காகவே நாங்க கம்பெனி நடத்தி கிட்டிருக்கோம், உங்களுக்கு பண உதவி தேவைப்பட்டா எங்களை “காண்டாக்ட்” பண்ணுங்க.

எனக்கு இப்ப கடன் ஒண்ணும் தேவைப்படாது

அப்படி சொல்லாதீங்க சார், நமக்கு எப்பவுமே பணம் தேவை படும், அப்படி தேவைப்படறப்போ, நீங்க கண்டிப்பா எங்களை கூப்பிடுங்க. இதே நம்பர்ல கூப்பிட்டாலும் போதும் .

சரிம்மா போனை வை.

யாரு நண்பா போன்ல ?

யாரோ பைனான்ஸ் கம்பெனியாம், பணம் கடன் கொடுக்கறாங்களாம். வேணாம்னுட்டேன்.

அது சரி இன்னும் இப்படியே இருந்தா எப்படி?

ஏன் நல்லாத்தானே என் வண்டி ஓடிட்டு இருக்கு

என்னப்பா இப்படியே காலம் ஓடிடும்னு நினைக்கறியா?

அதில்லை, இப்ப நல்லாத்தானே இருக்குன்னேன்

ஏம்ப்பா, இப்ப உனக்கு வயசு நாப்பது இருக்குமா?

நாப்பத்தி அஞ்சு ஆச்சு

இன்னும் பதினஞ்சு வருசம்தான் இருக்கு, உன் சர்வீஸ் முடிய, பசங்க இப்பத்தான் ‘மிடில் கிளாஸ்ல’ இருக்கறாங்க.நாளைக்கு அவங்க பெரிசா வளர்ந்தா காலேஜூக்கு, இல்லை, கல்யாணம் காட்சி இதெல்லாம் பாக்கணுமா இல்லையா?

அது பாட்டுக்கு நடந்துட்டு போகுது, இப்ப எதுக்கு கவலைப்படணும் ?

கண்ணை மூடி கண்ணை திறந்தா வருசம் ஓடிடும், இப்ப வாடகை வீட்டுலதான இருக்கே.

ஆமா, மாசமானா ஆறாயிரம் டாண்ணு ஒண்ணாம் தேதி வீட்டுக்காரர்கிட்டே கொடுத்துடணும்.

அதுதான் கேக்கறேன், எத்தனை நாள் கொடுக்க முடியும்? நாளைக்கே நமக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா? சும்மா பேச்சுக்குத்தான் சொல்றேன்

என்னப்பா இப்படி பயமுறுத்தறே, நான் நல்லா இருக்கறது உனக்கு புடிக்கலையா?

அதுக்கில்லைப்பா, சுளையா ஆறாயிரம் வாடகை கொடுக்கறதுக்கு, “லோன்” ஏதாவது ஏற்பாடு பண்ணி ஒரு “பிளாட்” வாங்கி போடலாம், இல்லை “சைட்” ஆவது வாங்கி போட்டுட்டா நாம ரிட்டையர்டு ஆகும்போது வர்ற பணத்துல ஒரு வீட்டை கட்டி உட்கார்ந்துக்கலாம்.

உட்கார்ந்துக்கலாம், “லோனுக்கு மாசா மாசம்” பணம் திருப்பி கட்டணுமே, அதுவும் வட்டியோட

ஆமாப்பா, அதுக்கு நீ “பிளாட்டா” வாங்கிட்டா உடனே அதுல குடி போயிடு. மாசா மாசம் வாடகை தர்றதா நினைச்சு “லோன் ரீ பேமண்ட்” பண்ணிட்டே வா. கடைசியில பிளாட் உனக்கு மிச்சமாகும். “சேமிப்பும்” ஆன மாதிரி இருக்கும்.

பேசறதுக்கும், கேட்கறதுக்கும் நல்லாத்தான் இருக்கு, ஆனா நடைமுறையில இதெல்லாம் நடக்கணுமே.

நீ ஒண்ணும் கவலைப்படாதே, எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் “சைட்டோட வீடு கட்டி” வித்துகிட்டிருக்காரு, அவரே “பேங்க் லோனுக்கும்” ஏற்பாடு பண்ணி கொடுத்துடறாரு,

அப்புறம் என்ன? வாங்கி போட்டு மாசா மாசம் கட்டிட்டு இருக்கலாமே.

பார்க்கலாம், யோசிக்கறேன், வீட்டுல எதுக்கும் ஒரு வார்த்தை பேச்சிட்டு.

ஆமா போ, இதை போய் வீட்டுல கேட்டியின்னா தங்கச்சி என்ன சொல்லும், இப்ப வேணாம், இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் அப்படீன்னு சொன்னா, என்ன பண்ணுவே, இப்படி நீங்க இரண்டு பேரும் தள்ளி போட்டே கடைசியில இரண்டு பேரும் சிரமப்படத்தான் போறீங்க.

அதுக்கில்லைப்பா..எதுக்கும் ஒரு வார்த்தை…

நீ முதல்ல இந்த “ஸ்கீமுக்கு ஓ.கே” சொல்லு போதும், மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன். எல்லாம் முடிஞ்சு உன் வீட்டுக்காரியிடம் சொல்லி சந்தோசப்படுத்தேன்.

இல்லைப்பா, அவளும் வேலைக்கு போயிட்டிருக்கா, அவளுக்கும் நாலு நல்லது கெட்டது தெரியும், அதனால இரண்டு வார்த்தை கேட்டுடலாமேன்னு..

ரொம்ப நல்லதா போச்சு, தங்கச்சியும் சம்பாதிச்சா தைரியமா நீ இந்த “பிளாட் ஸ்கீம்” ல சேர்ந்துடு, உன் சம்பளம் லோன் கட்டவும், அவங்க சம்பளம் மாச செலவுக்கும் சரியா இருக்கும், என்ன நான் சொல்றது?

ம்…ம்..சரி இப்ப என்ன பண்ணலாமுங்கறே?

இரு போன் பண்ணி பேசறேன், ஹலோ, “மலை விழுங்கி புரோமோட்டர்ஸ்சா” யாரு ராகியப்பனா? நான்தான் சுந்தர்ராமன் பேசறேன். இப்ப நம்ம “ஸ்கீம்ல” என்னோட நண்பர் ஒருத்தர் சேர்றதுக்கு ஆர்வமா இருக்கறாரு. கூட்டிட்டு வரட்டுமா? என்ன மூணு மணிக்கு வரட்டுமா? வந்துடறேன்.

சார் வாங்க, உங்களுக்கு எங்க “ஸ்கீம” பத்தி சொல்லியிருப்பாரு, நீங்க தைரியமா இதுல ‘புக்’ பண்ணிடலாம், “அமவுண்ட” பத்தி கவலைப்படாதீங்க. நாங்களே ஏற்பாடு பண்ணி கொடுத்துடுவோம். நீங்க எதுக்கும் கவலைப்படாம “புக்”பண்ணிடுங்க.

புக் பண்ணறதுக்கு என்ன பண்ணனும்?

“அட்வான்ஸ் அமவுண்ட்” கொஞ்சம் கட்டி வச்சுட்டீங்கன்னா, “புக்கான” மாதிரிதான்.

அதுக்கு எவ்வளவு கேட்பீங்க?

பத்தாயிரம் கட்டணும், நீங்க நம்ம பிரண்டு கூட வந்திருக்கறதுனால அஞ்சாயிரம் கட்டுங்க போதும். ஆனா.. இந்த பணம் “புக்கிங் சார்ஜ்” தான், நீங்க இந்த “ஸ்கீமை” கேன்சல் பண்ணீட்டிங்கன்னா பணம் திரும்ப கிடைக்காது.

இப்ப எங்கிட்டே அவ்வளவு பணம் இல்லீங்களே, இரண்டாயிரம்தான் கையில இருக்கு.

இங்க கொண்டா அதை, எங்கிட்டே மூணாயிரம் வச்சிருக்கேன், சாயங்காலம் மளிகைக்கு கொடுக்கணும்னு வச்சிருக்கேன், பரவாயில்லை, நண்பனுக்கு இப்ப நல்லது செய்யாம வேற யாருக்கு செய்ய போறேன். இந்த மூணாயிரம் உங்கிட்ட இருந்து நாளைக்கு வாங்கிக்கறேன். இப்ப முதல்ல பணத்தை கட்டி “புக்” பண்ணிக்க.

நாளைக்கே பணம் மூணாயிரம் கிடைக்காதே.

பரவாயில்லை விடு, சம்பளம் வாங்கி கொடு போதும். இந்தாங்க சார் அஞ்சாயிரம், முதல்ல இவன் பேருக்கு “சைட்” புக் பண்ணிடுங்க.

திரும்பி வரும்போது இவன் முழியே சரியில்லாமல் இருந்தது. “கேஸ் சிலிண்டருக்கும், வண்டி பெட்ரோலுக்கும் வைத்திருந்த பணத்தை கட்டி விட்டோம், கூட மூணாயிரம் கடனும் வாங்கியிருக்கிறோம். அடுத்த மாசம் இதை எப்படி திருப்பி கொடுக்கறது?

வீட்டில் இவன் முகம் கறுத்து யோசனையிலேயே இருந்தான். எப்படி பணம் புரட்டுவது ? இந்த இரண்டாயிரம், நண்பன் கொடுத்த மூவாயிரம். அடுத்த மாசம் என்ன செய்வது?

வீட்டுக்கு வேலை முடிந்து உள்ளே வந்த மனைவியின் முகம் கூட சரியில்லாதது போல் இவனுக்கு தெரிந்தது. ஏன் இப்படி இருக்கிறாள்? நமக்கு இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறதே, இவளிடம் யோசனை கேட்கலாமென்றால் அவளும் இப்படி முகத்தை வைத்திருக்கிறாளே..!

அந்த மாதம் எப்படி ஓடியிருந்தது என்று தெரியவில்லை. எப்படியோ “ஓசி” வண்டியிலும், “பஸ்ஸிலும்” சென்று மாதம் முழுவதும் சமாளித்து விட்டான்.

சம்பளம் வாங்கி முதலில் நண்பனின் மூவாயிரத்தை அவனுக்கு கொடுத்து கடனை அடைத்து வீட்டுக்கு வந்தான்.

என்னடி உன் சம்பளத்துல மூணாயிரம் குறையுது?

உங்க சம்பளத்துலயும் மூணாயிரம் குறையுது?

அது வந்து..வந்து நான் ஒரு “சைட்டோட பிளாட்” வாங்கறதுக்கு போன மாசம் நண்பங்கிட்ட கடன் வாங்கி ‘புக்’ பண்ணியிருந்தேன், அந்த பணத்தை அவனுக்கு திருப்பி கொடுத்துட்டேன்.

என்னது “சைட்டோட வீடு” ‘ஐயையோ’ நானும் என் பிரண்டு பிரமிளா சொன்னானு அவகிட்டே அஞ்சாயிரம் வாங்கி மாசமானா பாதி பாதியா கொடுத்திடறேன்னு கடன் வாங்கி கட்டி “புக்”பண்ணிட்டு வந்துட்டேனே..!

எங்க புக் பண்ணியிருக்கே?

“மலை விழுங்கி புரோமோட்டர்ஸ்” அதான் சென்னைக்கு போற மெயின்ரோட்டுல இருக்குதே.

அட கடவுளே நானும் அங்கதான் “புக்”பண்ணிட்டு வந்துருக்கேன்.

அப்ப ஒண்ண கான்சல் பண்ணிடலாமா?

கான்சல் பண்ணா பணம் திரும்ப கிடைக்காதுன்னு சொன்னாங்களே.

இதுக்குத்தான் எதுனாலும் முதல்ல எங்கிட்டே ஒரு வார்த்தை கேட்டுட்டு செய்யணும்ங்கறது.

அதையே நானும் திருப்பி கேட்கறேன், நீயும் எங்கிட்டே இதை பத்தி ஒரு வார்த்தை சொல்லியிருக்கணும்..

அவர்களின் சண்டைக்குள் நாம் நுழையாமல் அப்படியே அவர்களை தாண்டி இவனின் நண்பனிடமும், அவன் மனைவியின் நண்பியான பிரமீளாவும் பேசிக்கொள்வதை கொஞ்சம் காது கொடுத்து கேட்போம்.

என்ன சார் இந்த மாசம் எத்தனை பார்ட்டி உங்களுக்கு சிக்குச்சு?

அதை ஏன் கேக்கறீங்க, ஒருத்தன்தான் சிக்குனான், பரவாயில்லை, முதலுக்கு மோசமில்லை, மூணாயிரம் கமிஷனா வந்துடுச்சு.

எனக்கு கூட ஒருத்திதான் கிடைச்சா, மூணாயிரம்தான் இந்த மாச கமிசனா புரோமோட்டர்ஸ் கொடுத்தான்.

விலங்குகளின் அன்பு

சிலம்பனூர் என்னும் ஊரில் சென்னியப்பன் என்னும் சிறுவன், தன் அம்மாவுடன் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்து கொண்டிருந்தான்.

அவனின் அப்பா சிறுவயதிலேயே இறந்து விட்டதால் இவனும், இவன் அம்மாவும் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வந்தனர்.

சென்னியப்பனும், அவன் அம்மாவும் சிரமத்தில் வாழ்ந்து வந்தாலும் அன்பாக இருப்பார்கள், யாவற்றையும் நேசித்து வாழ்ந்து வந்தனர். விலங்குகளும் கூட அவர்களை மிகவும் நேசித்தன.

சிலம்பனூரின் அருகில் அடர்ந்த காடு ஒன்றிருக்கிறது. இந்த காட்டுக்குள் வந்து இந்த ஊர் மக்கள் சமையல் செய்ய விறகுகள் பொறுக்கி எடுத்து செல்வர்.

ஒரு நாள் அந்த அடர்த்தியான காட்டில் சென்னியப்பன் தனியாக சுள்ளி விறகுகள் பொறுக்கி கொண்டிருந்தான். அவன் அம்மாவுக்கு அன்று உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் இவன் மட்டும் தனியாக சுள்ளி விறகுகள் எடுத்து செல்ல இந்த காட்டுக்கு வந்திருந்தான்.

தனியாக வந்திருந்ததால் அந்த அடர்த்தியான காடு இவனை பயமுறுத்தியது. நண்பர்களை அழைத்தும் அவர்கள் காட்டுக்கு வர மறுத்து விட்டதால் இன்று தனியாக வந்து விட்டான்.

நேரம் போக போக அந்த காட்டில் சூரிய வெளிச்சம் குறைந்து இருள் சூழ்ந்து வந்தது.

சீக்கிரம் சீக்கிரமாக சுள்ளிகளை சேர்த்து கட்டாக கட்டி தலையில் சுமந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான்.

வழியில் திடீரென குரங்கு ஒன்று வழி மறித்து தம்பி தம்பி எங்கே வேகமாய் போகிறாய்? என்று கேட்டது.

குரங்கு ஒன்று தன்னை வழி மறிக்கவும் பயந்து போன சென்னியப்பன், பயத்துடன் நான் வீட்டுக்கு போகிறேன், வழியை விடு என்று சொன்னான்.

எனக்கு இரண்டு சுள்ளி கொடுத்து போ, என்றது குரங்கு.

முடியாது என் அம்மாவுக்கு சுடுநீர் காய்ச்ச எடுத்து போகிறேன், அவர்களுக்கு உடல் சுகமில்லை, அதனால் வழியை விடு, நான் போக வேண்டும் என்றான்.

இரண்டு குச்சியை கொடுத்தால் உனக்கு ஒன்றும் குறையாது, அதனால் இரண்டு குச்சியை கொடுத்து போ என்றது.

சரி சரி இந்தா என்று இரண்டு குச்சியை கொடுத்தான் சென்னியப்பன்.

குரங்கும் தன் கையில் வைத்திருந்த இரண்டு கொய்யா பழங்களை கொடுத்து குச்சிக்கு பதிலாய் இதை எடுத்து போ என்று சென்னியப்பன் கையில் கொடுத்தது.

கொய்யா பழத்தை சட்டை பையில் சொருகி கொண்டு விரைவாய் நடந்தான் சென்னியப்பன்.

யானை குட்டி ஒன்று அவன் வழியை மறித்து நின்றது.

சென்னியப்பன் பயந்து நின்றான். தம்பி தம்பி எங்கே செல்கின்றாய்?

நான் என் வீட்டிற்கு போகிறேன். அங்கே அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லை, இந்த சுள்ளி விறகுகள் கொண்டு போய் சுடு நீர் காய்ச்சி தரவேண்டும். அதனால் வழியை விடு நான் போக வேண்டும் என்றது.

உன் சுள்ளி கட்டில் இருந்து இரண்டு சுள்ளிகள் கொடுத்து போ என்று கேட்டது யானை குட்டி.

என்னிடம் உள்ளது கொஞ்சம்தான் அதனால் உனக்கு தர முடியாது, மறுத்து சொன்னான் சென்னியப்பன்.

இரண்டு குச்சிகள் கொடுத்தால் உன் சுள்ளிக்கட்டு குறையாது அன்புடன் கேட்டது குட்டி யானை.

சரி இந்தா என்று இரண்டு சுள்ளிகள் கொடுத்தான் சென்னியப்பன்.

நானும் பதிலுக்கு உனக்கு இரண்டு வாழைப்பழங்கள் தருகிறேன், பெற்றுக்கொள் என்று கொடுத்தது யானை குட்டி.

வாழைப்பழத்தை வாங்கி தன் சட்டைப்பையில் சொருகியபடி மீண்டும் விரைவாக நடந்தான் சென்னியப்பன்.

ஆனால் போகும் வழியில் அணில் அவனை மறித்து இரண்டு சுள்ளிகள் வாங்கி கொண்டு பாதாம் பருப்பு இரண்டை கொடுத்து சென்றது.

இப்படி வழியில் வரிசையாய் நின்றிருந்த விலங்குகள் இவனை வழியை மறித்து இரண்டிரண்டு குச்சிகளை பெற்றுக்கொண்டு ஏதேனும் இரண்டு பழங்கள், கொட்டைகள் இவைகளை கொடுத்து விட்டு சென்றன.

சென்னியப்பன் வீடு போய் சேரும்பொழுது அவனிடம் நாங்கு சுள்ளிகள் மட்டுமே இருந்தன. அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது. என்றாலும் விலங்குகள் கொடுத்த பழங்களும் கொட்டைகளும் அவன் சட்டைப்பையில் நிறைய இருந்தன.

அம்மா அவனுக்காக காத்திருந்தாள். சென்னியப்பா ஏன் காட்டிலிருந்து வர தாமதம்? என்று கேட்டாள்.

இவன் இப்படி ஒவ்வொரு மிருகங்களாக வந்து தன்னிடம் இரண்டு சுள்ளிகள் பெற்று பழங்களும் கொட்டைகளும் கொடுத்து சென்றன. இதனால் இப்பொழுது என்னிடம் நான்கு சுள்ளிகள்தான் இருக்கிறது. ஆனால் அவைகள் கொடுத்த பழங்கள், கொட்டைகள் நிறைய இருக்கிறது என்று அம்மாவிடம் கொடுத்தான்.

அம்மா சிரித்தபடி நம் குடிசையின் பின் புறம் போய் பார் என்று சொல்லவும் இவனும் குடிசையின் பின் புறம் போய் பார்த்தான்.

அங்கு அவன் விலங்குகளுக்கு கொடுத்த சுள்ளிகள் எல்லாம் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது.

திகைத்தபடி அம்மா யார் இதை எல்லாம் இங்கு வந்து கொடுத்தது என்று கேட்டான்.

அம்மா அவனிடம் குரங்கு ஒன்று வந்து இரண்டு சுள்ளியை என்னிடம் கொடுத்து, ஒரு சிறுவன் கொடுத்தான் என்று சொல்லி சென்றது. அது போன பின்னால் யானை குட்டி ஒன்று வந்து இரண்டு சுள்ளி கொடுத்து, ஒரு சிறுவன் கொடுத்தான் என்று சொல்லி சென்றது. இப்படி வரிசையாய் எல்லா விலங்குகளும் இரண்டிரண்டு சுள்ளிகளை கொண்டு வந்து கொடுத்து சிறுவன் கொடுத்தான் என்று சொல்லி சென்றது.

அப்படியானால் அவைகள் எல்லாம் எங்களுக்காகத்தான் சுள்ளிகள் பெற்று சென்றதா?அன்புடன் அவைகளுக்கு மனதுக்குள் நன்றியை சொன்னான் சென்னியப்பன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *