குடத்திலிட்ட கின்னஸ்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 30, 2022
பார்வையிட்டோர்: 15,314 
 

நம்மால் பொறுத்துக்கொள்ள முடியாத, அதே சமயத்தில் வீறுகொண்டு ஆவேசப்படவேண்டிய விஷயம்… இந்த உலகச் சாதனையாளர்கள் பற்றிய கின்னஸ் குறிப்பேடு புத்தகம்…!

இந்த நியூயார்க் பதிப்பாளர் சில்மிஷம் செய்து சூழ்ச்சியாக நம்மவர்களைத் தனது கின்னஸ் புத்தகத்தில் குடியேறவிடாமல் குழி தோண்டிப் புதைத்திருக்கிறார்.

சரி, போனால் போகிறது … கலை, கல்வி, விளையாட்டு, விஞ்ஞானம், வீரம் போன்ற அல்பத்தனமான துறைகளில் நாம் அனாவசியமாக நேரத்தை வீணடிக்காததால் கின்னஸில் இது சம்பந்தப்பட்ட அத்தியாயங்களில் நம்மவர்கள் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை என்று கொள்ளலாம்.

ஆனால், கின்னஸில் தனி மனிதனின் சாதனைகள் என்று ஒரு அத்தியாயம் இருக்கிறது.

இதில் கூட நமது கண்மணிகள் குப்புசாமி, ராமசாமியைக் காணவில்லை ! என்ன அப்படிப் புடலங்காய் தனி மனிதனின் சாதனைகள் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன், கேளுங்கள்.

ஜப்பானைச் சேர்ந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணும் தம்பதி சமேதராய் தண்ணீ ருக்கடியில் இரண்டு நிமிடம் பதினெட்டு செகண்டுகள் சத்தம் போடாமல் முத்தம் கொடுத்தது உலகச் சாதனையாம்….வெட்கக்கேடு!

பப்ளிக்காக இச் கொடுக்கப் பயந்து தண்ணீருக்கடியில் திருட்டு முத்தம் (திருட்டு தம்முக்குச் சமம்…) கொடுத்த அந்த ஜப்பான் ஜோடியின் மீது நியாயமாகப் பார்த்தால் தள்ளல் கேஸ்’ (அதுவும் தண்ணீருக்கடியில்….) சுமத்தித் தாணாக்காரரிடம் ஒப்படைக்க வேண்டும்.

சரி, பாவம் போனால் போகிறது என்று பார்த்தால்…. ராபர்ட் போஸ்டர் என்பவர் தண்ணீருக்கடியில் பதின்மூன்று நிமிடங்கள் நாற்பத்திரண்டு புள்ளி ஐந்து நொடிகள் ஒன்றுமே செய்யாமல் அமர்ந்து அழிச்சாட்டியம் செய்ததை ‘கின்னஸ்’ தலையில் வைத்துக் கூத்தாடுகிறது.

யோவ் கின்னஸே, கேள்! சென்ற மாதம் எனது பக்கத்து வீட்டுக்கு இரவில் திருடவந்த சூளை ஜலமணியின் சாதனைக்கு முன் உனது ராபர்ட் போஸ்டர் எம்மாத்திரம்..? சூளை ஜலமணியின் வரவை அறிந்து நாங்கள் விளக்குகளைப் போட… ஜலமணியும் எங்களுக்குப் பயந்து பக்கத்து வீட்டுக் கிணற்றில் (தூர் எடுத்து ஒரு மாமாங்கம் ஆகிறது ….) விடிய விடியப் பதுங்கி இருந்து …. விடியற்காலையில் பக்கத்து வீட்டு மாமா நீர் சேந்தும் போது வழக்கம் போல குடம் நழுவி, பதுங்கிய ஜலமணியின் தலையை ‘ணங்’ என்று பதம் பார்க்க….. பாவம், வலியால் அலறி மாட்டிக்கொண்ட சூளை ஜலமணியை போலீஸிடம் ஒப்படைத்தோம். கின்னஸில் இருக்கவேண்டிய சூளை ஜலமணி இப்பொழுது சென்ட்ரல் ஜெயிலில் இருக்கிறான். தூர் எடுக்காத கிணற்றில் விடியவிடியப் பதுங்கி இருந்த சூளை ஜலமணி ஒரு சாதனையாளன் இல்லையா…?

என்னைக் கேட்டால், அந்தக் கிணற்றுத் தண்ணீரை இதுநாள் வரை தைரியமாகத் தொடர்ந்து உபயோகிக்கும் பக்கத்து வீட்டுத் தாத்தாவிலிருந்து கடைக்குட்டி கிச்சு’ வரை எல்லோரையும் கின்னஸில் சேர்த்துக் கொள்ளலாம்.

இன்னொரு பக்கத்தைப் புரட்டினால் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி , நூற்றிருபது மணி நேரங்கள் தொடர்ச்சியாகக் குளித்தார் என்று ஒரு குறிப்பு. இது ஒரு சாதனையாம் – கின்னஸ் பீற்றிக் கொள்கிறது! எனது ஒன்றுவிட்ட அத்தையின் மாமியார் மகா ஆசாரம். தொட்டதற்கெல்லாம் தீட்டு (அவளது வலது கை இடது கையில் பட்டாலே அவளுக்குத் தீட்டு…) என்று சொல்லிக்கொண்டு சதா சர்வகாலமும் பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கும் இவள் உலகச் சாதனையாளியா, இல்லையா?

என் வாதம் என்னவென்றால், ஆஸ்திரேலியாவில் தண்ணீர் நிறைய கிடைக்கிறது என்ற தெனாவட்டில் குளிப்பதைச் சாதனையாக்குவது பேத்தல் ….. குளிப்பது சாதனை என்றால் நான் வாய் வழியா புகை விடுறது என்ன பிரமாதம்…. பக்கத்து வீட்டு பத்மாவோட தீபாவளி பட்ஜெட்டை பார்த்து அவ புருஷன்காரன் காது வழியா விட்ட புகையை படமெடுத்து கின்னஸுக்கு அனுப்புங்க!

தொடர்ந்து பல நாட்களாகத் தற்சமயம் சென்னையில் குளிக்காமல் இருக்கும் நபர்கள் சாதனையாளர்கள் இல்லையா…?

ஓய் கின்னஸே! தெலுங்கு கங்கா வரட்டும். தண்ணீரில் கரைந்து போகும் வரை குளித்துக் காட்டுகிறோம்.

கின்னஸின் மற்றுமொரு கொக்கரிப்பைக் கேளுங்கள்!

டென்மார்க்கைச் சேர்ந்த ஒருவர், சிகரெட்டை ஒரே இழுப்பு இழுத்து முன்னூற்றைம்பத்தைந்து வளையங்கள் விட்டாராம்! சல்பேட்டா கபாலி தாக சாந்திக்குப் பிறகு துண்டு பீடி அடிப்பதை கின்னஸ் பார்க்கவேண்டும். டென்மார்க் பறக்காவட்டியைப் போல கபாலி முன்னூற்றைம்பத்தைந்து வளையங்கள் விடமாட்டான். ஒரே இழுப்பு… மூன்றே மூன்று வளையங்கள் ! ஒவ்வொரு புகை வளையமும் சராசரி ஆறு அல்லது ஏழு அடி விட்டத்துக்கு வளரும்.

ஓர் அற்புதமான ஐடியா! இந்த கின்னஸுக்குப் போட்டியாக நாமே ஓர் உள்ளூர் கின்னஸ் தயாரித்துக் குடத்திலிட்ட விளக்குகளாய் இருக்கும் நம்மவர்களைப் பிரபலப்படுத்தினால் ஓஹோ என்று இருக்கும் அல்லவா!

அண்டப்புளுகு மன்னன், ஆயிரம் மணிபர்ஸுகள் அடித்த அட்டகாச ஜேப்படிச் சக்கரவர்த்தி, குறைந்தபட்ச காலத்தில் அதிகபட்ச தடவை கட்சி மாறிய அரசியல் மன்னன், கிசுகிசுக்களில் அதிகமாக இடம்பெற்ற வெள்ளித்திரை இளவரசி போன்றவர்களை நாம் தயாரிக்கும் கின்னஸில் இடம்பெற வைக்கலாம். நாம் தயாரிக்கப் போகும் இந்தப் போட்டி கின்னஸில் இடம்பெற நினைப்பவர்கள் எப்படிப்பட்ட சாதனைகள் புரிந்திருக்க வேண்டும் என்பதை விளக்க நான் மனதில் வைத்துள்ள சிலவற்றைக் கூறுகிறேன், கேளுங்கள்…

தற்கொலை தண்டபாணி. வயது முப்பத்தினான்கு. எட்டு வயதிலிருந்து தற்கொலை செய்து கொள்ள முயலும் இவர், இதுவரை சுமார் நூற்றெழுபத்தெட்டு தடவை தற்கொலை செய்து கொண்டு அசம்பாவிதமாக (சில சமயம் தெய்வாதீனமாக) கடைசி நிமிடத்தில் காப்பாற்றப்பட்டு இருக்கிறார்.

அரளி, ஆமணக்கு, மூட்டைப்பூச்சி மருந்து (ஒரு தடவை விரக்தியில் ஐம்பது மூட்டைப்பூச்சிகளையே சாப்பிட்டார்.) கருநாகப் புற்றில் வலது கையை அரைமணி நேரம் வைத்திருந்தது. சயனைட், யூரியா பாஸ்பேட் – இப்படிப் பலதரப்பட்ட விஷயங்களோடு தண்டபாணி விளையாடி இருக்கிறார். இவர் தூக்குப் போட்டுக்கொண்டு தொங்காத மரக் கிளைகளே (அடையாறு ஆலமரம் தவிர ) மதராஸில் கிடையாது.

ஒருமுறை ஒரு பிடி தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டுவிட்டு உயிரும் போகாமல், அன்று இரவு சரியாகத் தூக்கமும் வராமல் தண்டபாணி திண்டாடியிருக்கிறார். சகாய விலையில் தற்கொலை செய்து கொள்வது எப்படி என்று ஒரு புத்தகமே போட்டார். புத்தகம் விற்காமல் தேங்கிப்போன வருத்தத்தில் போன மாதம் கெரஸின் ஊற்றிக்கொண்டு ஒலிம்பிக் ஜோதியாக எரிந்த தண்டபாணியைக் கம்பளியில் புரட்டிக் காப்பாற்றினார்கள். தண்டபாணியை அழிக்கத் தண்டபாணியாலேயே முடியவில்லை.

எனது அடுத்த ‘சாம்பிள்’ வாதிராஜ ராவை அழிக்க ஆண்டவனாலேயே முடியவில்லை. இத்தனைக்கும் வாதிராஜ ராவுக்குக் கால் விரல் நகச்சுத்தியிலிருந்து தலையில் பொடுகுவரை சகல வியாதிகளும் உண்டு.

நண்பர்கள் அவரை வியாதி ராஜராவ் என்று அழைப்பார்கள். எனக்குத் தெரிந்து ராவுஜிக்குப் பதினைந்து தடவை ஹார்ட் அட்டாக் வந்திருக்கிறது. ஒவ்வொரு தடவையும் டாக்டர்கள் ராவுஜியின் மார்பின் மீது ஏறி நின்று ஆர்டிபிஷியல் ரெஸ்பிரேஷன் என்ற பெயரில் ருத்திர தாண்டவமே ஆட, பழையபடி சுவாசம் வந்துவிடும்!

அன்று சாயங்காலம் ராவுஜி , குடும்பத்தோடு உட்லண்ட்ஸில் மசால் தோசை சாப்பிட்டுக் கொண்டிருப்பார்!

ராவுஜியை , என்சைக்ளோபீடியா ஆஃப் வியாதிகள், என்ற பெயரில் அறிமுகப்படுத்தலாம். எப்பொழுது தெர்மா மீட்டரை வைத்தாலும் சுடச்சுட நூத்திரெண்டு காட்டுவார். ஒரு மாதிரியாக என்ன…

உஷ்ணத்திலேயே இருந்து டிராபிகலைஸ் ஆகிவிட்டார் என்றே கூறலாம். ராவுஜி, டாக்டர்களுக்கு ஒரு புதிர்!

ஒரு முறை, பல்லெல்லாம் சொத்தையாகிப் பல் டாக்டரிடம் பிடுங்கிக்கொண்டு பல்செட் போட்டுக் கொண்டார். பல்செட் சரியாகப் பொருத்தமுடியாமல் தவித்த ராவுஜி, கண்ணாடியில் ஒரு நாள் வாயைப் பரிசோதித்தபோது புதிதாக இரண்டு பல் முளைத்திருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தார்.

இரண்டே மாதத்தில் முப்பத்திரண்டு பற்களும் ராவுஜிக்கு முளைத்துவிட்டன… இந்த அழகில் பல் முளைக்கும் போது ராவுஜிக்கு, குழந்தைகளுக்கு ஆவது மாதிரி ‘டயோரியா’ வேறு. பட்டமரம் துளிர்ப்பது போல இத்தனை வியாதிகளுக்கிடையே விநோதமான ஆரோக்கியத்தோடு வாழும் வாதிராஜராவுக்கு, போட்டி கின்னஸில் ஒரு பக்கமே ஒதுக்க எண்ணியுள்ளேன்.

போட்டி கின்னஸின் அமைப்பு உங்களுக்கு ஓரளவு புரிந்திருக்கும் என நம்புகிறேன். போட்டி கின்னஸில் போடக்கூடிய அளவுக்கு சாமுத்ரிகா லட்சணங்கள் உடையவர்கள், சாதனையாளர்கள் யாராவது உங்களுக்குத் தெரிந்திருந்தால் தயவு செய்து உடனடியாக எழுதுங்கள்.

ஆனால், ஒரே ஒரு கண்டிஷன் – அவர்கள் நம் மண்ணின் மைந்தர்களாக இருக்கவேண்டும்!

– ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *