கவிதை சொன்னா காதல் வரும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 20, 2022
பார்வையிட்டோர்: 10,073 
 

பேருந்து நிலையத்திலிருந்து வேகமாக வீடு வந்த பிரகாஷ் முதல் வேலையாக தன் கைபேசியில் பிரவீன் எண்ணைத் தேடி அழைத்தான்.

“என்னடா…”

“டேய்.. எனக்கு உடனடியா… ஒரு கவிதை எழுதணும்…”

“என்னமோ சர்வர்கிட்ட சாப்பாடு ஆர்டர் பண்ற மாதிரி சொல்ற..”

“எப்படி வேண்ணா வச்சுக்க…. பட் ஐ நீட் கவிதை அர்ஜென்ட்..”

“என்ன விஷயம்..”

“உனக்கே தெரியும் எனக்கு பிரேமி மேல ஒரு இதுன்னு..”

“அதுக்கென்ன..”

“அவகிட்ட என்னோட லவ்வ சொன்னேன்..”

“வாவ்… கங்கிராட்ஸ்…”

“இல்லடா.. அவ சொல்றா… இப்படியா ப்ரபோஸ் பண்ணுவ.. டீசெண்டா… ரொமான்டிக்கா… ஒரு கவிதை சொல்லி ப்ரபோஸ் பண்ணுவேன்னு நெனைச்சேன்னா …”

“சரி நீ எப்படி ப்ரபோஸ் பண்ண..”

— Flashback —

கேன்டீனில் இருவரும் தேநீர் பருகிக்கொண்டிருக்கும் வேளையில்… ” ப்ரேமி … ரொம்பநாளா மனசுக்குள்ளையே இருக்கு… இப்போ சொல்லணும்னு தோணுது…”

“வாவ்.. என்னது..”

“வந்து…. ஐ லவ் யு…” பட்டென பிரகாஷ் சொல்லிமுடித்ததும் சற்றே ஆடிப்போன ப்ரேமி தட்டுத் தடுமாறி தேநீர் கோப்பையை தன்மீது கவிழ்த்துக்கொள்ள… அவளது ஆடை அதிகமாகவே தேநீர் பருகிவிட்டிருந்தது… “கொஞ்சங்கூட எதிர்பார்க்கல… ஏண்டா லவ் சொல்ற லொகேஷனா இது… எங்க உக்காந்திருக்கோம்…. சட்டுன்னு என்னமோ சாப்பாட்டுல உப்பில்லைங்கிற மாதிரி சொல்லுற…”

“ஏன்… இதுக்காக செட் போட்டு… வைட் டிரஸ் தேவதைங்க ஆறு பேர வரச்சொல்லி சொல்லவா…”

“அவ்வளவு மெனக்கெட வேண்டாம்…”

“தென் வாட்..”

“சி… ரோமியோ ஜூலியட்… அம்பிகாபதி அமராவதி…. அந்தமாதிரி இமாஜினேஷன்ல…. ஒரு ரம்யமான சிச்சுவேஷன்ல என் கை விரல பிடிச்சுக்கிட்டே… அழகா ஒரு கவிதை சொல்லி… ப்ரபோஸ் பண்ணுவேன்னு நினைச்சிருந்தேன்… என் நினைப்புல டீய கொட்டிட்டியே..” சொல்லிவிட்டு கோபமாக விடுவிடுவென எழுந்து நடந்தாள்… பின்னாலேயே வேகமாகத் தொடர்ந்த பிரகாஷ், “அவ்வளவுதானே நாளைக்கே ஒரு கவிதை எழுதிட்டு வரேன்… இதே கான்டீன்ல… ப்ரபோஸ் பண்றேன்…”

“பார்த்தியா மறுபடி இதே கான்டீன்… நீ எல்லாம்…”

“சரி வேற லொகேஷன்…. பார்க்…”

“பாக்கலாம்…பாக்கலாம்…”

“சார் பில்ல பெ பண்ணிட்டு போங்க…” கான்டீன் சிப்பந்தி பிரகாஷை தொடர்ந்தார்.

— Flashback over —

பிரவீனிடம் தொடர்ந்தான் பிரகாஷ்.. “இப்போ சொல்லு…”

“என்ன சொல்ல..”

“கவிதை…”

“அதெல்லாம் நீ நினைக்கிற மாதிரி இல்ல.. tap ப தொறந்து ஒடனே தண்ணி வர்றதுக்கு… கிவ் மீ சம் டைம்…”

“போடா…. நானே எழுதிக்கிறேன்….” போனை வைத்துவிட்டு கவிதை எழுத சிந்தனையில் அமர்ந்தான் பிரவீன்.

“ம்ம்ம்… என்ன சொல்லி ஆரம்பிக்கிறது….. ‘நான் உன்ன நினைச்சேன்…’ ம்ஹூம்… இத ஏற்கனவே எழுதிட்டாங்க… ‘வான் நிலா நிலா அல்ல…’ இல்லையே இதைக்கூட ஏற்கனவே எழுதின மாதிரி இருக்கே… ம்…. பேசாம யுடியூபை பார்க்கிறோம்… ஒரு கவிதையை பிக்கப் பண்றோம்… மொபைல் எடுத்து யூடியூபை திறந்தான் பிரவீன்.

***

பார்க்கில் அங்கும் இங்கும் தேடி.. அதோ இருக்கிறாள் பிரேமி…. கண்டு பிடித்துவிட்டான். “என்ன லுக் ஓவரா இருக்கு….”

“உன்னை எப்படி வர்ணிக்கிறதுன்னு… பாக்குறேன்..”

“அப்டியா… ம்… கேட்டுக்க….” கண்களை மூடிக்கொண்டு ப்ரேமி மெல்லிய குரலில் தொடர்ந்தாள், “நிலாவைப் பாடு அதுல என்னை பத்தி பாடு…”

“கரெக்ட்டா சொல்லணும்…. நிலாவை பத்தியா… உன்னைப் பத்தியா…”

“நீயெல்லாம்… அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட…” சொல்லிவிட்டு எழுந்து நடந்தாள் பிரேமி…

“ஏ…. நில்லு….” நிற்கச்சொல்லிவிட்டு கண்களை மூடி சற்று யோசித்தான்… “கேட்டுக்க… நிலா நிலா ஓடிவா… நில்லாமல் ஓடிவா.. மலைமேலே ஏறிவா பிரேமியத்தான் பார்க்க வா…” சொல்லி முடித்துவிட்டு எதோ பெரிய கவி சொல்லிவிட்ட மமதையில், “பார்த்தியா… நிலால ஆரம்பிச்சேன், ப்ரேமி… உன் பெரும் வருது கவிதை எப்புடி..”

“ம்… நான் ஒன்னும் பாப்பா இல்ல… எனக்கு நீ சோறு ஊட்டுறதுக்கு…” சற்று தூரம் நடந்தாள் ப்ரேமி, தொடர்ந்தான் பிரகாஷ், சட்டென திரும்பினாள் “ஒரு ஷெல்லி மாதிரி கண்ணதாசன் மாதிரி இல்லாட்டியும்..”

“இல்லாட்டியும்..”

“ஒரு வாலி மாதிரி வைரமுத்து மாதிரி இல்லாட்டியும்..”

“இல்லாட்டியும்..”

“ஒரு பொயட் மாதிரியாவது திங்க் பண்ணேண்டா..”

முழித்தான் பிரகாஷ்.. தொடர்ந்தாள் பிரேமி… “சரி நான் சொல்றத எழுதிக்காட்டு…”

“என்ன சொல்லு…”

“மத்தாப்பு..” எழுதினான் பிரகாஷ், “ம த் த ப் பு” எழுதியத்தைக் காட்டினான் பார்த்த ப்ரேமியின் முகம் சிவந்து கொப்புளித்தது, “தப்பு…” சொல்லிவிட்டு
நடந்தாள் பிரேமி தொடர்ந்தான் பிரகாஷ்… “ப்ரேமி … ஒன் மோர் சான்ஸ்” நின்றாள், அங்கே கையைக் காட்டி “அங்க என்ன எழுதியிருக்கு படி..”

“ம்ஹம்… இது.. இத… படிக்க முடியாதா… கிரேட் இன்சல்ட்….” சொல்லிவிட்டு ப்ரேமி காட்டிய இடத்தில் எழுதியிருந்ததை படித்தான் பிரகாஷ். அது ஒரு
பழரசம் விற்கும் கடை, மேலே பழமுதிர்ச்சோலை என்று எழுதியிருந்தது, பிரகாஷ் படிக்கத்துவங்கினான், “ப ழ மு தி ர் ச் சே ர லை.”.

“ஆள விடு நான் உன் பக்கமே வரல…” சொல்லிவிட்டு இடத்தை விட்டு நகர்ந்தாள் ப்ரேமி.

***

தன் வீட்டு டெர்ரசில் அமர்ந்திருந்தான் பிரகாஷ்.. பிரவீன் வருகையைப் பார்த்து, “வாடா..”

“என்னடா சோகமா இருக்க..”

“பின்ன என்னடா எதுவும் தெரியாத மாதிரி கேட்குற..”

“அது… எழுதலாம்…. இல்ல வாங்கலாம்… பட்… கொஞ்சம் செலவாகுமே..”

“எவ்வளவு..”

“ஹேவ் டு ஸ்பென்ட் சம் லாக்ஸ்..”

“டேய்… நான் வைரமுத்துக்கிட்ட கவிதை கேட்கல… நீ ஹெல்ப் பண்ணுடான்னு கேட்டேன்…”

“கவிதை எழுதுறது ரொம்ப சிம்பிள் டா…”

“அத கொஞ்சம் சொல்லிக் கொடுக்குறது..”

“கேளு… இப்போ உனக்கு புடிச்ச பழைய பாட்டு ஒன்னு சொல்லு..” சற்று யோசித்த பிரகாஷ், தொடர்ந்தான், “பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ
கேட்டு..”

“ம்… அவ்வளவுதான் 50 மார்க் எடுத்துட்ட…”

“என்னடா சொல்ற…”

“இப்போ அத பாட்டா பாடாம அப்டியே படிச்ச பார்த்தியா அவ்வளவுதான், அப்பறம் மெயின் அதாவது அதுல இருக்க பவர்புல் வர்ட எடுத்துட்டு அதுக்கு ஈகுவல் ஆர் ஆப்போசிட் வர்ட் போடு…”

“அதெப்படி…”

“அதுல இருக்க பால ரிமூவ் பண்ணிட்டு மோர் சேத்துக்கோ…. குளிர்ச்சி… லவ்வும் குளு குளுன்னு இருக்கும்… அப்பறம் நிலவ தூக்கிட்டு அதுக்கு பதிலா சந்திரனை போட்டுக்க… இப்ப சொல்லு…”

“பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா மோர் சந்திரனை கேட்டு…”

“சி… தட்ஸ் இட்…. இப்ப இது உன்னோட கவிதை….”

“உன் மூஞ்சி… எப்படி எழுதறதுன்னு கேட்டா… எப்படி எழுதக்கூடாதுன்னு சொல்லித்தர்ற…”

யோசித்தான் பிரவீன், “ஓ.கே.டா எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இருக்கார் அவர் சினிமாவுக்கு பாட்டெல்லாம் எழுதுவார் அவர் ஒரு இன்ஸ்டிடியூட் வச்சிருக்கார்… அங்க ஆறு மாசம் ட்ரைனிங் எடு… அப்பறம் பாரு…”

“அப்பறம்…”

“அதுக்கப்பறம் ஒரு கவிதை எழுதற…”

“அப்பறம்…”

“அத ஒரு பேனர் எழுதி நிறைய பேர் வந்து போற இடத்துல வைக்குற…”

“அப்பறம் அந்த நிறைய பேர் என்கிட்டே வந்து எதுக்காக அங்க பேனர் வச்சன்னு கேள்வி கேட்கணும்… அதானே…”

“இல்லடா…இல்லடா…”

“சரி… மொதல்ல அந்த இன்ஸ்டிடியூட் எங்க இருக்கு…”

இருவரும் சென்றனர் ‘இங்கே கவிதை எழுத கற்றுத்தரப்படும்’ என்ற வாசகம் அவர்களை வரவேற்றது.

***

ஆறு மாதங்களுக்குப் பிறகு பிரேமியைச் சந்தித்தான் பிரகாஷ் கடற்கரை மணற்பரப்பில் இருவரும் அமர்ந்திருக்க அலைகள் ஓடிவந்து செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த ப்ரேமி ஆரம்பித்தாள், “பிரகாஷ் எங்க வீட்டில எனக்கு…”

“வெயிட்…மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சுட்டுங்க…. அதான…”

“மூஞ்சி…. எங்க வீட்டில எனக்கு ரொம்பப்புடிச்ச என்னோட பெட், என்னோட பப்பிக்கு உடம்பு சரியில்ல…”

“நான் கொஞ்சம் அவசர பட்டுட்டேன்… சாரி…. இங்க பாரு… நான் முன்னாடி சொன்ன மாதிரி… ஒரு சூப்பர் கவிதையோடு வந்திருக்கேன்… பிளீஸ் அக்செப்ட் மை ஹார்ட்..” கையில் வைத்திருந்த பேப்பரை பிரித்து ப்ரேமியிடம் நீட்டினான். படித்துப்பார்த்த ப்ரேமி சற்று ஆச்சரிமடைந்தாள். “ஐ கான்ட் பிலீவ் இட்.. நீயா எழுதின…. ஸச் அ வொண்டர்புல் போயம்…” மீண்டும் படித்தாள்,

மண்ணில் வந்த பிறை நிலவே
மனதை ஏற்க மாட்டாயா
உன்னில் கரையும் மழைத்துளி நான்
உறவாய் ஏற்க மாட்டாயா !

மனம் மகிழ்ந்த ப்ரேமி சற்று மௌனத்திற்குப் பிறகு “நான் உன்ன ரொம்ப தொந்தரவு பண்ணிட்டேன் பிரகாஷ்.. ரியலி.. ஐ.. ஐ..”

துள்ளிக்குதித்தான் பிரகாஷ், “ஐ..”

சரியாக அதே நேரம் பிரேமின் போன் சிணுங்கலிட எடுத்துக் பார்த்தாள், தோழியிடமிருந்து ஒரு வாய்ஸ் மெசேஜ், எடுத்து ஓபன் செய்தாள், “ப்ரேமி ஏண்டி போனை எடுக்க மாட்டேங்குற.. அதான் இந்த வாய்ஸ் மெசேஜ்.. சரி கேளு.. நான் சொல்லுவேன்ல என் பிரென்ட்.. அவன் இன்னிக்கு என்கிட்டே வந்து ஒரு கவிதை சொல்லி என்ன ப்ரொபோஸ் பண்ரான்பா.. எனக்கு ஒரே குழப்பமா இருக்கு… பட் கவிதை சூப்பர்.. கேளேன்…”

மண்ணில் வந்த பிறை நிலவே
மனதை ஏற்க மாட்டாயா
உன்னில் கரையும் மழைத்துளி நான்
உறவாய் ஏற்க மாட்டாயா !

மெசேஜ் நிறைவானது, கேட்டுக்கொண்டிருந்த பிரகாஷ் செய்வதறியாது விழித்தான். கோபம் பொங்கியது பிரேமிக்கு, “கவிதை எழுத ஆரம்பிச்ச உடனே ஒரே நேரத்துல ரெண்டு பேர ப்ரொபோஸ் பண்றியா.. ”

“அச்சோ… அது நா இல்ல…”

“எது நீ இல்ல…”

“உன் பிரெண்ட நான் ப்ரொபோஸ் பண்ணல….”

“நீ சொல்லமாத்தான் அவ எனக்கு இதே கவிதையை படிச்சுக் காட்டுறாளா…”

“சத்தியமா… உன்கிட்ட மட்டும்தான் ப்ரொபோஸ் பண்றேன்…”

“ஆப் அவகிட்ட யார் ப்ரொபோஸ் பண்ணது..”

சற்றே யோசித்து மென்று விழுங்கி..” அது வந்து… வந்து… உண்மைய சொல்லிடறேன் ப்ரேமி, அது என்னோட கவிதை இல்ல… என் பிரென்ட் பிரவீன் அவன் லவ்வருக்கு எழுதி வச்சிருந்ததை அவனுக்கு தெரியாம எடுத்துட்டு வந்து… வந்து… உன்கிட்ட…. குடுத்து….”

“போடா… உனக்கு கவிதையும் வராது… எனக்கு உன்மேல காதலும் வராது….” சொல்லிவிட்டுத் திரும்பிப்பாராமல் நடந்தாள்.

அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த பிரகாஷ் மணற்பரப்பில் மண்டியிட்டு விழுந்தான், காற்று கொண்டு வந்த பாடல் அவன் காதுகளை நனைத்தது, அவள் பறந்து போனாளே… என்னை மறந்து போனாளே…

– Sep-26-2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *