கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 14, 2012
பார்வையிட்டோர்: 9,514 
 

“தோழரே… தோழரே”

இரண்டாவது முறையும் குரலைக் கேட்க அதிர்ச்சியுற்று எழுந்தான். கட்டிலில் அமர்ந்தபடியே சுற்று முற்றும் பார்த்தான். தெரு வெறிச் சென்றிருந்தது. பக்கத்தில், தொலைவில், கட்டிலுக்கடியில், வீட்டு முகப்பில் எங்கும் எவரையும் காணவில்லை. மனதில் கிலிபடர பகுத்தறிவு, மூடநம்பிக்கை எதிர்ப்பு என்பதெல்லாம் கேள்விக்குறியாகி விடுமோ என்கிற குழப்பத்தோடு மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்னா தோழர் பயந்துட்டீங்களா”.

இவனுக்கு என்ன சொல்தென்று தெரியவில்லை. பேசாமலிந்தான்.

“உங்களோட உங்க ஒடம்புல ஒரு உறுப்பா இருந்தும் எங்களையெல்லாம் ரொம்ப நாளா மறந்துட்டீங்களே” என்று கேட்டது கை.

இவனுக்குப் புரியவில்லை.

“மறந்துட்டனா. என்ன சொல்ற”

“நீங்க ஏன் தோழர் இப்ப முன்ன மாதிரி மாநாடுங்கள்லாம் நடத்தறதில்ல..”

“மாநாடா..”

“அதான் தோழர், கோரிக்கை மாநாடு, எழுச்சி மாநாடு, ஆதரவு மாநாடு, எதிர்ப்பு மாநாடுன்னு அடிக்கடி நடத்துவீங்களே”

“ஆமா. அதுக்கென்னா…”

“அந்த மாதிரி மாநாடெல்லாம் இப்ப நீங்க நடத்தறதில்லண்றத்தான் எங்க கொறையே…”

“கொறையா..”

“ஆமா தோழர். அடிக்கடி இப்பிடி மாநாடு நடந்துக்னு இருந்தாதான் எங்களுக்கும் வேல இருக்கும். மனுசுக்கும் ஒரு உற்சாகம் இருக்கும். அதஉட்டுட்டு நீங்க பாட்டுனு இப்படி மாசக் கணக்கா எந்த மாநாடும் நடத்தாம சும்மா இருந்தா எங்க கதி என்னா ஆவுறது சொல்லுங்க”

இவனுக்கு புதிராயிருந்தது. “உங்களுக்கென்னா கொறை இதுல”

“என்னா தோழர் இப்பிடி கேட்டுட்டீங்க. மாநாட்டுல எங்களோட பங்கு ரொம்ப முக்கியமில்லியா”

“ஒங்களோட பங்கா”

“சரியாப் போச்சி போங்க.” கை அலுத்துக் கொண்டது. “எப்பவுமே கூட இருக்கிறதப் பத்தி தெரியாது அதன் அரும, இல்லாட்டி போனாத்தான் தெரியும் அதன் பெருமன்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரிதான் இருக்குது நீங்க கேக்கறது”

“என்னா பெரும”

“எங்களோட பெரும கைகளோ பெரும. இதும் பெரும என்னான்னு இன்னும் பலபேருக்கு சரியா தெரியாமலே இருக்குது. நாங்க இல்லண்ணாதான் தெரியும் எங்க பெரும”

கை வருத்தத்தோடு சொல்வது போல் தோன்றியது. இவனுக்கும் ஏதோ குற்றவுணர்வு ஏற்பட “உங்க பெரும தெரியாமலா இருக்கிறோம்” என்றான்.

“என்னா தெரியும். சொல்லுங்க பாப்பம்” என்றது கை.

இவன் இப்போது தான் முதன்முறையாக கைகளின் பயன்பாடு பற்றி யோசிக்கத் தொடங்கினான். “உண்ண, உடுக்க, எடுக்க, பிடிக்க, குடிக்க, புகைக்க, கழுவ, துடைக்க, வணங்க, வரவேற்க, வழியனுப்ப, கைகுலுக்க, டாடா காட்ட, அடிக்க, அணைக்க, இடிக்க, வெட்ட, குத்த, தாக்க, தடுக்க, முழக்கமிட முஷ்டியை உயர்த்த இப்படி கைகளால் தான் எத்தனை பயன்…” நினைக்க நினைக்க இவனுக்கே மலைப்பாயிருந்தது. அனைத்தையும் ஒன்று விடாமல் சொன்னான்.

எல்லாவற்றையும் கேட்ட கை சற்று ஏளனமாய்ச் சிரித்தது. “இதெல்லாம் தினப்படி அன்றாடப் பயன்பாடுகள் தோழர். குறிப்பாக மாநாடுங்கள்ல எங்களோட பயன் என்னான்னு சொல்லுங்க”

“மாநாட்டுலயா” யோசித்தான் தட்டிகட்ட, விளம்பரம் எழுத, சுவரொட்டி ஒட்ட, துண்டறிக்கை விநியோகிக்க, உண்டி குலுக்க, துண்டு ஏந்த, மேடை போட, பந்தல் அலங்காரம் செய்ய, தோரணம் கட்ட, தலைவர்களை அழைக்க, ஒலிபெருக்கி அமைக்க, மைக் பிடிக்க.. இப்படி எவ்வளவோ பயன்பாடுகள் நினைவுக்கு வர ஏதோ மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்தியது போன்ற பெருமிதத்துடன் ஒவ்வொன்றாகச் சொன்னான்.

இருந்தும் கை திருப்தியடையவில்லை.

“எல்லாம் சரிதான் தோழர், ஆனா முக்கியமான ஒண்ண உட்டுட்டீங்களே”

“எத…”

“நீங்க சொன்னதெல்லாம் மாநாட்டுக்கான ஏற்பாடுகள். ஆனா மாநாடு நடக்கும்போது அதுல எங்களோட பங்கு என்னா அதச் சொல்லுங்க…”

“இவனுக்குப் புரியவில்லை”

“நல்ல யோசனைப் பண்ணிப் பாத்து சொல்லுங்க தோழர். மைக்வரிக்கும் வந்துட்டிங்க. அதைத்தாண்டி வாங்க” கை புதிர் போட்டது.

“மைக்கைத் தாண்டியா” எதுவும் பிடிபடாமல் குழப்பத்துடன் யோசனையில் ஆழ்ந்தான்.

கை “க்ளு” கொடுத்தது. “மைக்க புடிச்ச என்ன தோழர் பண்ணுவாங்க”

“பேசுவாங்க…”

“அவங்கள யார் பேச வைக்றது”

“வாய் பேசப் போவுது” என்றான் இவன். “இதுல கைக்கு என்னா வேல”. சில பேர் கைய ஆட்டி, சொழட்டி, முழக்கி, பாவன பண்ணி பேசவாங்க அதச்சொல்றியா”.

“ஐயோ அது இல்ல தோழர்” கை அலுத்துக் கொண்டது “என்னா தோழர் இது கூட தெரியாம இருக்கிறீங்க”

“எத…”

“கை தட்றது தோழர், கை தட்றது தெரியாது. மாநாடு நடக்கும் போது தலைவர்கள் பேசும் போது அப்பப்ப கை தட்டுவாங்களே. இந்த கை தட்டல் இல்லாம எந்த மாநாடாவது நடந்தது உண்டா”

“ஓ.. அதுவா” என்றான்.

“என்னா தோழர் அவ்வளோ அலட்சியமா சொல்லிட்டீங்க. கை தட்டலோட அருமை என்னா, அதன் முக்கியத்துவம் என்னான்னு புரியாம பேசறிங்க நீங்க” என்றது கை.

நேரம் என்ன இருக்கும் என்ற தெரியவில்லை. நல்ல உறக்கத்தில் எழுப்பி இப்படி ஒரு விசாரணையில் ஈடுபடுத்தியதில் உற்சாகமின்றி கம்மென்று குந்தியிருந்தான்.

பொதுவாக கைத்தட்டல்கள் பற்றி இவனுக்கு அவ்வளவாக நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை. இதனால் கைதட்டல்களே இவனுக்குப் பிடிக்காது என்று சொல்ல முடியாது. கை தட்டல்கள் சிறப்பாக ஏதாவது பாராட்டப்படவேண்டிய இடங்களில் அரிதாக மட்டும் அமைந்தால் பரவாயில்லை. அல்லது எதற்கெடுத்தாலும் கை தட்டுவது அல்லது அற்ப விஷயங்களுக்கெல்லாம் கை தட்டுவது என்பதில் இவனுக்கு உடன்பாடு இல்லை. எடுத்துக்காட்டாக “தமிழர்கள் மானம் காக்கும் மறவர்களாக வீறு கொண்டு எழுவார்கள்” என்றாலும் கைதட்டல் “அவர்கள் சூடு சொரணையற்ற இளித்தவாய்ச் சோதாக்களாகத் திரிகிறார்கள்” என்றாலும் கை தட்டல். “தங்கத் தம்பி தாண்டவராயன்” என்றாலும் கைதட்டல். “அருமை அண்ணன் அம்பலவாணன்” என்றாலும் கைதட்டல் என இப்படி எடுத்ததற்கெல்லாம் கைத்தட்டல்கள் மலிந்திருந்த சூழல் கைத்தட்டல்கள் மேல் இவனுக்கு ஒரு மரியாதைக் குறைவை ஏற்படுத்தியிருக்க சுவாரஸ்யமின்றி “அப்படியா” என்றான்.

கை லோசகக் கோபடைந்தது போல் தோன்றியது. “கைதட்டல்கள் பற்றி இவ்வளவு இளப்பமான கருத்து கொண்டிருக்கிறாய். சின்ன வயதில் கைத்தட்டல்கள் பற்றி படித்தில்லையா நீ” என்றது.

“சரியாய் நினைவில்லை…” என்றான்.

“இதற்குள்ளாகவா எல்லாவற்றையும் மறந்து விட்டாய்” என்ற கை

“கல்விக்கழகு

கசடற மொழிதல்

செல்வர்க்கழகு

செழுங்கிளை தாங்குதல்

உண்டிக்கழகு

விருந்தோடு உண்டல்

கைகளுக்கழகு

கரவொலி எழுப்பல்”

என்று ஏதோ ஒரு செய்யுளைச் சொல்லி “படித்ததில்லையா” என்று கேட்டது.

முதல் மூன்று வரிகளை மட்டும் படித்ததாக ஞாபகம், நாலாவது தொடர்பற்றி ஏதும் நிச்சயமில்லை. இருந்தாலும் எதற்கு சர்ச்சை என்று “ம்” என்றான்.

“இதையெல்லாம் படித்திருந்துமா கைத்தட்டல்கள் பற்றி அக்கறையில்லாமல் இருக்கிறாய்” என்று கேட்டது.

“பேசுவது வாய்தானே இதில் கைகளுக்கென்ன பங்கு இருக்கிறது என்று கைத்தட்டல் பற்றி பொறுப்பில்லாமல் இருக்கிறாய் நீ. ஆனால் அந்த வாய்களைப் பேசவைப்பதும் பேச விடாமல் முடக்கிப் போடுவதும் எல்லாம் இந்தக் கைகள் தான் என்பதை மறந்து விடாதே” என்றது கை. கூடவே கைத்தட்டல்களின் பெருமைகள் சாகசங்களின் அதன் வகைப்பிரிவுகள் பற்றியெல்லாம் பிராபலிக்கத் தொடங்கியது.

“தட்டுவது கைகளையோ கைகளாலோ எப்படியும் நிகழலாம். எனில் கைகளால் தட்டுவது சட்டமன்றம், கைகளைத் தட்டுவது கவியரங்கம், மாநாடு, பொதுக் கூட்டம், பட்டி மன்றம், சில சமயம் கடைத்தெருவும்”

“கடைத்தெருவில் எதற்கு” என்றான்.

“நண்பர்கள், தெரிந்தவர்கள் போனவர்களை அழைக்க, தெருவோடு செல்கிறவர்களைத் திரும்பிப் பார்க்க வைக்க, பல சமயம் சம்பந்தப்படாதவர்களையும்….” என்றது கை.

“கைத்தட்டல்களுக்கு பல வல்லமையுண்டு, மாநாடுகளில் அவை பேச்சாளர்களுக்குப் போதையூட்டி பேச்சின் போக்கையே திசைமாற்றும். முதலில் பேசுகிறவர் பெறும் கைத்தட்டல் அடுத்துப் பேச இருப்பதைத் திணற அடிக்கும். திகைப்பூட்டும், கஷ்டப்பட்டுத் தயாரித்து வந்த குறிப்புகளையெல்லாம் காணாமலாக்கும். கிடப்பில் வீழ்த்தும். போட்டிக்கு நிற்கும் பள்ளி மாணவனைப் போல கைத்தட்டலுக்காக பாயிண்டுகளைத் தேடித் தவிக்கவைக்கும் திணற அடிக்கும் திண்டாடச் செய்யும் ஏங்கி அலைய வைக்கும். சிற்றுரையோ, பேருரையோ சுவை குன்றா வரிகளுக்கு சொற்சிலம்ப சதிராட வசியம்வைத்துக் களம் இறக்கும். எதிர்பார்த்த கைத்தட்டல் கிட்டாதபோது சோர்வூட்டும், கவலைப்படுத்தும், விரக்தியளிக்கும். சில சமயம் தற்கொலைக்குத் தூண்டுவதுமுண்டு. மாநாடுகளில் மட்டுமல்ல பொதுக்கூட்டம் கருத்தரங்கம் கவியரங்கங்களிலும் கைகளின் பங்கு இவ்வாறே.”

இவன் களைப்போடு கேட்டுக் கொண்டிருந்தான். வேறு யாராவதாயிருந்தால் விடைகொடுத்து வழியனுப்பி வைக்கலாம் அல்லது விலகி அப்பால் செல்லலாம். உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்பது போல் உடம்பின் ஒரு உறுப்பாகவே இருந்து உயிரை எடுத்தால் மீள வழியின்றி பார்த்துக் கொண்டிருந்தான்.

கை தொடர்ந்து “தட்டும் கைகளிலும் பல வகையுண்டு. தட்டும் வாய்ப்பிற்காகவே காத்து தவம் கிடக்கும் கைகள். கிடைத்த வாய்ப்பை தழுவ விடாது காற்றுள்ள போதே தூற்றி மகிழும் கைகள், நமைச்சலெடுத்தவன் சொரிவது போல் தட்டுவதையே தொழிலாகக் கொண்ட கைகள், தட்டித் தட்டியே உரமேறி காப்புக் காய்த்த கைகள். பழக்க தோஷத்தால் ஒலிப்பான்களை அழுத்தும் வாகன ஓட்டிகள் போல் நொடிக்கொருதரம் தட்டுவதே வாடிக்கையாய் வழக்கப்பட்டுப் போன கைகள், உடையவன் விருப்பமின்றியே அனிச்சை செயலாய் தானாக இயங்கி தவணை முறையில் விட்டு விட்டுத் தட்டித் தீர்க்கும் கைகள். தட்டும் சந்தர்ப்பங்களுக்காகவே எப்போதும் தயாராய்த் தலைதூக்கிக் காத்து விழித்திருக்கும் கைகள். இப்படி கைகளில் தான் எத்தனை வகை” என்றது கை. “கூடவே கைத் தட்டலின் வகைகளை விவரிக்கவா” என்றது.

பல மாநாடுகளில் பார்த்ததுதான். இது என்பதனால் ‘வேண்டாம்’ என்றான்.

“சரி, ஆனால் கைகளைப் பற்றி இளப்பமான மதிப்பீடு மட்டும் கொள்ளாதே. கைகளுக்கும் தன்மான சுயமரியாதை உணர்ச்சிக்ளெல்லாம் உண்டு” கை சொன்னது.

எப்படி என்று இவனுக்குக் கேட்கத் தோன்றவில்லை.

கை அதுபாட்டுக்குத் தொடர்ந்தது. “கைகளுக்குக் காதுகளுமுண்டு. கிளர்ச்சியூட்டும் உரைகளுக்காகவே செவிகளைத் தீட்டி வைத்து காத்திருக்கும் கைகள், அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களையே அழங்காத சவத்துப்போன உரையைக் கேட்டு அலுத்த கடுப்பாய் உடையவனையே கேட்கும் ‘வேலையற்ற இடத்திற்கெல்லாம் என்னை எதற்கடா அழைத்து வந்தாய முட்டாளே’ நீ மட்டும் வந்து தொலைவதுதானே என்று”

நடந்து முடிந்த மாநாட்டு நிகழ்ச்சிகள் பல மனக்கண் முன் ஓட இவன் மெல்ல சிரித்துக் கொண்டான்.

கை முடிவாய்ச் சொன்னது… “எனவே தோழரே மாநாடுகளுக்கு கைதட்டல்கள் முக்கியம். மாநாடுகளை கட்ட, நிகழ்ச்சிகளுக்கு உயிர் கூட்ட கேட்போர் களி கொள்ள அரங்கு அதிர விண்ணைப் பிளக்கும் தரவொலிகள் மிக மிக முக்கியம். தவிர கைகளின் பிறவிப் பேறும் அது”

மங்கிய நட்சத்திர வெளிச்சத்தில் அமைதியாயிருந்தது. கை தொடர்ந்து பேசிக் கொண்டிருக்க மௌனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தான். கை இறுதியாய்ச் சொன்னது.

“அதுதான் தோழரே. இதனால் கைகளுக்கு அஞ்சி யாரும் அதை வீட்டில் வைத்து விட்டு வந்து விடக்கூடாது என்பதால் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் கட்சிகள் கைகளின் முக்கியத்துவம் கருதி அதற்கும் தனியாக சிறப்பு அழைப்பு அனுப்ப வேண்டும்”.

இவன் “சரி” என்றான்.

கை ஒரளவு திருப்தியடைந்தது போல் தோன்றியது. பிறகு சற்று யோசனையோடு அது கேட்டது.

“ஆமாம் அடுத்த மாநாடு எப்போது”

“கூடிய விரைவில் இருக்கலாம் இன்னும் தேதி நிச்சயமாகவில்லை” என்றான்.

“தேதி முடிவானதும் மறக்காமல் தெரிவி” என்று பழைய நிலைக்கு சுருண்டது கை.

சற்று நேரம் அதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டுப் படுத்தான். கனவு போல் நடந்து முடிந்த இந்நிகழ்வின் பாதிப்பில் ஏதோதோ யோசனைகளோடு கிடந்தவன் எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை. காலை வழக்கம் போல் விழிப்பு கண்டு எழுந்து பல் துலக்கி செய்தித்தாளை விரிக்க ஒரு சின்ன அதிர்ச்சி. 7 ஆம் பக்கம் உலகச் செய்திகள் இடம் பெறும் பகுதியில் ஒரு தகவல் ‘கை தட்டினால் ஆயுள் கூடும். ஆராய்ச்சியாளர்கள் முடிவு’ என்கிற தலைப்பில் “கைத்தட்டல் இரத்த ஓட்டத்தை சுறுசுறுப்பாக்குகிறது, இதயத்தை வலுப்படுத்துகிறது ஆகவே நீண்ட ஆயுளோடு வாழ தாராளமாக கைதட்டுங்கள்” என்று தெரிவித்திருந்தது.

பலகாலம் முன்பு சிரிப்பு பற்றி இப்படி ஒரு செய்தி வந்து, சிரிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அது பதட்டத்தைத் தணிக்கிறது. மனஅழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது ஆகவே தாராளமாக மனம்விட்டு சிரியுங்கள் என்றெல்லாம் மருத்துவர்கள் கூறியிருந்ததை இதழ்களில் பார்த்திருந்தான். கைத்தட்டலுக்கும் இப்படி ஒரு பலன் இருக்கிறது என்று அறிய இவனுக்கு விசித்திரமாயிருந்தது. நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை பயக்கும், உடலுக்கும் மனத்திற்கும் ஊட்டம் அளிக்கும் கைத்தட்டல் பற்றி இவ்வளவு காலமும் குறைவான மதிப்பீடு கொண்டிருந்ததற்காக வருத்தமடைந்தான்.

அடுத்து வரக் கூடிய மாநாடுகளிலிருந்தாவது இனி கைத்தட்டலுக்கு உரிய முக்கியத்துவம் தரவேண்டும் என்று கருதினான்.

இனிவரும் மாநாட்டிற்கான திட்டமிடல் பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் போது ஒரு கருத்தைச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து சுவரொட்டி போடும்போது இப்படி போடச் சொல்லி கருத்து தெரிவிப்பது பொருத்தமாயிருக்கும் போல் தோன்றியது.

“அணி அணியாய்த் திரண்டு வருக! அலைகடலென ஆர்ப்பரித்து வருக! மாநாடு சிறக்க வேனெடுத்து வருக. மறக்காமல் உங்கள் கைகளுடனும்….”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *