கதையாசிரியர்: , ,
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை  
கதைப்பதிவு: August 7, 2012
பார்வையிட்டோர்: 15,768 
 

உட்கார்ந்துகொண்டு தூங்குவது ஒரு சுகம். ஒரு யோகம்! அதைப் பல பேர் ஏன் கேலி செய்கிறார்களோ தெரியவில்லை. எத்தனையோ பேருக்குப் படுத்துக்கொண்டாலும் தூக்கம் வருவதில்லை. நண்பன் நாராயணன் அடிக்கடி சொல்வான்… ‘‘செத்தாக்கூட எனக்குத் தூக்கம் வராதுடா!’’

பிள்ளை இல்லாதவர்களுக்குதான் பிள்ளையின் அருமை தெரியும்.

உட்கார்ந்துகொண்டே தூங்குவது யோகிகளின் தியானத்தைவிடவும் உசத்தி என்றுகூடச் சொல்லலாம்.

உட்கார்ந்துகொண்டு தூங்கும் பாக்கியம் எல்லோருக்கும் கிடைத்து விடாது.

இட நெருக்கடி காரணமாக விஸ்தாரமான பரப்பில் வீடுகள், பங்களாக்கள் அருகி வருகின்ற ஒரு கால கட்ட(ட)த்தில் நாம் இருக்கிறோம்.

‘கையைக் காலை வீசிக்கொண்டு படுக்கவெல்லாம் எதிர்காலத்தில் நிச்சயம் நமக்கு இடம் கிடைக்கப் போவதில்லை’ என்பதை உணர்ந்த ஞானிகளும், ரிஷி புங்கவர்களும் கண்டுபிடித்த ஒருவகை யோகமே, ஒக்காண்டே தூங்குவது!

மனிதர்களுக்கு நேரம் முக்கியம்; காரியமும் முக்கியம். பஸ் பிடித்து ஆபீஸ் போவது என்பது ஒரு காரியம். காலை வேளையில், பஸ்ஸில் வசதியாக இடம் கிடைத்து உட்கார்ந்ததுமே சிலர் அந்த ஒக்காண்டே தூங்கும் யோக நிலைக்கு வந்துவிடுவார்கள். அதுவும், நீண்ட தூர பஸ் பயணத்துக்கு உட்கார்ந்து தூங்கும் நிலை ரொம்பவும் இதமானது.

நம்மைத் தாங்க யாருமே இல்லையே என சுய கழிவிரக்கப்படுகிறவர்கள் பஸ்ஸிலோ, ரயிலிலோ பயணிகளாக உட்கார்ந்து தூங்கினால், தன்னைத் தாங்குகிறவர்கள் அக்கம்பக்கம் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பதை நிச்சயம் உணர்ந்து ஆறுதல் பெறுவார்கள்.

உட்கார்ந்து தூங்கும்போது, நமது தலை மதில்மேல் பூனை மாதிரி இடப் பக்கமும் சாயலாம்; வலப் பக்கமும் சாயலாம். பின்புறமோ, முன்புறமோகூட சாயலாம்.

சர்க்கஸ்காரன் கம்பி மேல் அநேக வித சேஷ்டைகள் செய்தாலும், கீழே விழுந்துவிட மாட்டான். உட்கார்ந்து தூங்கும் தூக்கமும் அப்படித்தான்! என்னதான் சாய்ந்தாலும், தொபுக்கடீரென அச்சு கழன்று ஒரேயடியாகக் கீழே சாய்ந்து விட மாட்டார்கள். சாய்வது போலிருக்கும்… ஆனால், அந்த அசைவே வெடுக்கென்று ஒரு உணர்வைத் தந்து விழிக்கச் செய்துவிடும். அது ஓர் அதிசயமான டூ&இன்&ஒன் மெகானிஸம்.

மனிதனது உடல்கூறும், மெடபாலிஸம் எனப்படும் உள்விவகார விநோதமும் எந்த சுஜாதாவுக்கும் எட்டாத அதிசயம்!

ஆசாமி தன்னை மறந்து தூங்கிக்கொண்டு இருக்கிறானே… இறங்க வேண்டிய இடத்தில் இறங்குவானோ, மாட் டானோ என்றெல்லாம் யாரும் கவலைப்படத் தேவையில்லை. இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் வந்ததும், ஒரு மேஜிக் போல் அந்தத் தூக்கம் சட்டென்று கலைந்து, விழிப்பு உணர்வு உண்டாகி, கூட்டத்தைப் பிளந்துகொண்டு வெளியேறி விடுவான்.

படுத்துத் தூங்குகிறவர்களுக்கு இந்த சென்ஸிடிவ்னெஸ் குறைவு. ரயிலில் தான் பார்க்கிறோமே… ‘சேலம் வந்ததும் கொஞ்சம் எழுப்பிவிடறீங்களா?’ என்று கேட்பார்கள். ‘‘நான் முழிச்சிட்டிருந் தால் எழுப்பறேன்’’ என்று பதிலாளிகள் சாமர்த்தியமாகக் கூறுவார்கள்.

சில பர்த் கேஸ்கள் இறங்க வேண்டிய இடத்தைத் தாண்டியும் தூங்கிப் போய்விடுவது உண்டு. ஆனால், உட்கார்ந்துகொண்டே தூங்குகிறவர்கள் ஒருநாளும் தூரம் கடந்து தூங்கிவிட மாட்டார்கள்.

இயற்கை அப்படி ஒரு இன் & பில்ட் விழிப்பு உணர்ச்சியை, பொறுப்பு உணர்ச்சியை உட்கார்ந்து கொண்டே தூங்குகிறவர்களுக்கு வழங்கியிருக்கிறது.

உட்கார்ந்த நிலையில், டி.வி. பார்த்த படியே உறங்குவது போன்ற சுகத்துக்கு ஈடானது உலகத்தில் எதுவுமே இல்லை. டி.வி. நிகழ்ச்சிகளால், முக்கியமாக மெகா தொடர்களால் ஏற்படும் ரத்தக் கொதிப்பு, டென்ஷன் போன்ற வியாதிகள், டி.வி. முன்னே உட்கார்ந்துகொண்டு தூங்குகிறவர் களை அணுகுவதில்லை என்பது அனுபவரீதியான உண்மை.

ஆனால், பாவம்… உட்கார்ந்து தூங்கும் வழக்கத்தில், பெண்கள் சற்றுப் பின்தங்கியவர்களே!

காந்தி, சர்ச்சில், பெரியார் இவர்கள் எல்லாம்கூட காரில் செல்லும்போது சட்டென்று உட்கார்ந்தவாறே தூங்கி விடுவார்களாம். அரசியல் தலைவர்களில் இப்போது கர்நாடகத்தைக் கதிகலக்கி வரும் தேவகௌடா முன்னாளில் பிரதமராக இருந்தபோதும் சரி, தற்காலத்தில் கர்நாடக அரசில் முக்கியப் பங்கு வகித்துக் கொண்டிருக்கும்போதும் சரி, உற்சாகத் தின் உறைவிடமாக (உறங்குமிடமாக என்று தூக்கக் கலக்கத்தில் படித்துவிட வேண்டாம்) இருப்பதற்குக் காரணமே அவரது ஒக்காண்டே தூங்கும் வழக்கம்தான் என்கிறார்கள்.

உட்கார்ந்து தூங்கும் பழக்கம் நாட்டில் பரவினால், இன்னும் சில பொது நன்மைகளும்கூட ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசியல் கூட்டங்களில் கலாட்டாக்களும், கலவரங்களும் குறையும்.

ஆகவே, உட்கார்ந்துண்டே தூங்குகிறவர்களை யாரும் கேலி பண்ண வேண்டாம். வாயை ரொம்பவும் அகலமாகத் திறந்து கொண்டோ, அக்கம்பக்கம் அதிர்வுகள் ஏற்படுமாறு ஹை&டெஸிபலில் குறட்டை விட்டுக்கொண்டோ தூங்க வேண்டாம்என ஒரே ஒரு சின்ன வேண்டுகோளை வேண்டு மானால், அவர்களுக்கு விடுக்கலாம்!

– மே 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *