இருபத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பங்கஜா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 2,044 
 

இருபத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் பங்கஜா சொன்ன ஒரு கூஜா கதை

“கேளாய், போஜனே! ஒரு நாள் இரவு மிஸ்டர் விக்கிரமாதித்தர் தம்முடைய நண்பர் ஒருவரை ‘நீலகிரி எக்ஸ்பிர’ஸில் ஏற்றிவிட்டு வருவதற்காக ஸென்ட்ரல் ஸ்டேஷனுக்குச் செல்ல, அதுகாலை யாரோ ஒரு சிறுவன் அங்கிருந்த பிளாட்பாரத்தில் கையில் கூஜாவுடன் குழாயடியில் நின்று ‘ஓ’வென்று அழுதுக்கொண்டிருக்க, ‘என்ன தம்பி, என்ன?’ என்று விக்கிரமாதித்தராகப்பட்டவர் அவனை விசாரிக்க, ‘அதோ போகிறார் பார், அவர் என்னை அடித்துவிட்டுப் போகிறார், ஸார்!’ என்று சிறுவனாகப் பட்டவன் சற்றுத் தூரத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு டெரிலின் சட்டை ஆசாமியைச் சுட்டிக் காட்ட, ‘அவர் எதற்காக அடித்தார் உன்னை?’ என்று விக்கிரமாதித்தர் பின்னும் கேட்க, ‘கதையைக் கேளுங்கள், ஸார்!’ என்று அவன் பின்னும் சொன்னதாவது:

‘நான் இந்தக் குழாயடிக்கு வந்து கூஜாவில் தண்ணிர் பிடித்துக் கொண்டிருந்தேன். அதுகாலை என்னைப்போல் இன்னொரு சிறுவன் இரண்டு கூஜாக்களுடன் இங்கே வந்தான். அவன் முதலில் ஒரு கூஜாவில் தண்ணீர் பிடித்துக் கீழே வைத்தான்; பிறகு இன்னொரு கூஜாவில் தண்ணீர் பிடித்தான். கடைசியில் கீழே வைத்த கூஜாவை மறந்து விட்டுக் கையிலிருந்த ஒரே கூஜாவுடன் அவன் தன்னைச் சேர்ந்தவர்கள் இருந்த பெட்டியை நோக்கி ஓட, அவனை நான் அவன் பெயர் தெரியாததால், ‘டேய், கூஜா! கூஜா!’ என்று கத்தி அழைக்க, அதைக் கேட்டதும் அதோ போகிறவர் ஓடிவந்து என் கன்னத்தில் ‘பளார், பளார்’ என்று அறைந்து விட்டார், ஸார்!’

இந்த விதமாகத்தானே சிறுவன் தன் கதையைச் சொல்லி முடித்ததும் எங்கள் விக்கிரமாதித்தர் மீண்டும் ஒரு முறை அவன் காட்டிய ஆசாமியை உற்றுப் பார்க்க, அந்த ஆசாமியின் கையிலும் ஒரு வெள்ளிக்கூஜா இருந்ததைக் கண்ட அவர், ‘சந்தேகமேயில்லை; அவர் ஒரு நட்சத்திரக் கணவராய்த்தான் இருக்கவேண்டும்’ என்று தீர்மானித்து, ‘இது அழவேண்டிய விஷயமில்லை தம்பி, சிரிக்கவேண்டிய விஷயம்! ‘கூஜா’ என்பது வெறும் கூஜா மட்டுமல்ல; அப்படி ஒரு ‘சிறப்புப் பெயர்’ சினிமா நட்சத்திரங்களின் கணவன்மாருக்கும் உண்டு. ஆகவே, நீ அந்தப் பையனைக் ‘கூஜா’ என்று அழைத்ததும் அவர் தன்னைத்தான் அப்படி அழைத்ததாக நினைத்துக் கொண்டுவிட்டார். அதனால் வந்த ஆத்திரத்தில் அவர் தன்னை மறந்து ஓடி வந்து உன் கன்னத்தில் அறைந்திருக்கிறார்!’ என்று விளக்க, சிறுவன் சட்டென்று அழுவதை நிறுத்திவிட்டு, ‘அப்படியென்றால் தன்னுடைய நட்சத்திர மனைவி இருக்கும் பெட்டிக்குத்தான் அவர் இப்போது போய்க்கொண்டிருக்க வேண்டும் இல்லையா?’ என்று ஆவலோடு கேட்க, ‘ஆமாம்’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, ‘டோய், நட்சத்திரம் டோய்!’ என்று அந்தச் சிறுவன் தன்னையும், தான் பட்ட அடியையும் மறந்து கத்திக் கொண்டே நட்சத்திரத்தைப் பார்க்க ‘ஓடு, ஓடு’ என்று ஓடுவானாயினன்.”
இருபத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான பங்கஜா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; இருபத்து மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் அபரஞ்சி சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதி தேவனும் வழக்கம்போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கி வருவது காண்க… காண்க… காண்க…..

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *