இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்…எல்லாம் சௌக்யமே…!!!

4
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 5, 2021
பார்வையிட்டோர்: 8,603 
 

இந்த உலகத்திலேயே இலவசமாக கிடைக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் உபதேசம் மட்டுமே.அது கேட்காமலேயே தாராளமாகக் கிடைக்கும்.

“ஒரு வாரமாக பசியே எடுக்கல.”

இப்படி சொல்லிப் பாருங்கள்..

“ஸார்.இது கண்டிப்பா கேஸ் டிரபிள் ‘ தான்.நீங்க என்ன பண்றீங்க… வெறும் வயத்தில ஒரு கிளாஸ் தண்ணில.. இரண்டு மூணு இஞ்சி துண்டு..கொஞ்சம். ..பட்டை..பொடிச்சு போட்டு…”என்று ஆரம்பித்து..

“ஸார்..இது வெறும் அஜீரணக் கோளாறுதான்… சாப்பிட்டதும் ஒரு வெத்தலைல ஒரு சின்ன பூண்டு பல்லை வச்சு … மென்னு முழுங்கி பாருங்க…மூணேநாள்தான்” என்று சொல்லுவது வரை நிறையவே ஆலோசனைகள், அறிவுரைகள். இன்னும் சிலர் ஒரு படி மேலேயே போய் விடுவார்கள்.

“ஸார். உடனே போய் ஒரு gastroenterology ஸ்பெஷலிஸ்ட்ட பாத்துடுங்க.இப்படித்தான் என் மாமனாருக்கு ஆரம்பிச்சது”

பூடகமாக சொல்வார்கள், என்ன ஆரம்பிச்சது என்பதை சஸபென்ஸில் விட்டு விடுவார்கள், என்னவாயிருக்கும் என்று அவர் தலையைப் பிய்த்துக் கொள்வதுதான் மிச்சம். அருணாச்சலமும் கிட்டத்தட்ட இது மாதிரியான ஒரு சுபாவக்காரர் தான்.ஆனால் அவருடைய அணுகுமுறை ஒரு வித்தியாசமான ஒன்று. என்னவோ தான் இந்த உலகத்தையே மாத்திவிடலாமென்ற எண்ணம். அது சில நேரங்களில் சரியாக இருந்தாலும் பல தடவை வாங்கிக் கட்டிக் கொள்வார். ஆனாலும், கூடப் பிறந்த குணம், லேசில் மாறுமா?.

***

தினமும் எது எப்படி போனாலும் ராணியிடம் ஒரு கட்டு கீரை வாங்கியாக வேண்டும்.அவளும் அரைக்கீரை… சிறுகீரை.. முளைக்கீரை..பொன்னாங்கண்ணி.. என்று வித விதமாய் கொண்டுவந்து தருவாள்…

“ராணி இதெல்லாம் நல்ல தண்ணில தானே வெளையுது…?? எங்கயாவது சாக்கட தண்ணில மொளச்சிருக்க போகுது…!!”

ராணியிடம் இந்த பாச்சாவெல்லாம் பலிக்காது.

“சாமி..கீரைக்கு குலம் கோத்திரமெல்லாம் பார்த்துக்கிட்டு இருந்தா எவியாவாரம் அம்புட்டு தான்..

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காலைல மூணு மணிக்கெல்லாம் எந்திரிச்சு போவணும்.. உன்னப் பிடி..என்னப்பிடின்னு ..கீரக்கட்ட எடுக்கறதுக்குள்ளாறவே பாதி உசிரு போயிரும்..

இதில எங்க வெளையுது…என்ன தண்ணின்னு கேட்டோம்னு வச்சிக்க மீதி உசிர எடுத்துப் புட்டு தான் விடுவாங்க..காசக் குடுத்தோமா. கீரையவாங்கினோம்மான்னு இருக்கணும்..வரட்டா..”

***

அருணாச்சலத்துக்கு சாப்பாடு விஷயத்தில் கொஞ்சம் நப்பாசை உண்டு.. பஜ்ஜி…வடை..போண்டா.. இது போன்ற சமாசாரங்களை அவர் ஒரு கை பார்த்து விடுவார்.

அதற்காகவே பங்களூர்.. கோயமுத்தூர் பயணம் அநேகமாய் AC சேர்காரில்தான். முதலில் வடையில் ஆரம்பித்து. வரிசையாய், கட்லெட், தக்காளி சூப், போளி, உளுந்து போண்டா, கீரை வடை என்று ஒன்றையும் விடமாட்டார். முதலில் வருவது வடை.

“ஏம்பா, இது இப்ப போட்ட வடையா?”

“ஆமா ஸார். தொட்டுப் பாருங்க. சுடச்சுட இருக்கும்”

“ஏம்பா, நேத்து ராத்திரி மீந்த வடய சூடு பண்ண எவ்வளவு நேரம் ஆகப்போகுது?”

“இன்னா ஸார்.என்னமோ கிச்சனண்ட பூந்து பாத்த மாதிரி பேசற, வேணும்ன்னா வாங்கு. இல்லாட்டி விட்டுடு. மத்த பேஸஞ்சர் முன்னாடி இப்படி பேசாத”

***

ஆனால் எப்பவுமே இப்படி வாங்கிக் கட்டிக் கொள்வார் என்று எண்ணி விடாதீர்கள். அருணாச்சலம் வீட்டில் சமைக்க முடியாத அசர்பந்தங்களில் சங்கரி மாமி வீட்டிலிருந்து லன்ச் பாக்ஸ் தருவழித்து விடுவார்கள். மாமியின் சமையல் அம்ருதமாய் இருக்கும்.அதுவும் மாமியின் வெங்காய சாம்பாரும்… மொறு…மொறு… உருளைக்கிழங்கு கறியும்…சான்ஸே இல்ல. மாமியிடம் போன் பண்ணும் போதெல்லாம் அருணாச்சலம் மாமியைப் பாராட்ட தவறவே மாட்டார். அதோடுதான் நிற்க மாட்டாரே.

“மாமி, உங்க கை ருசி உங்களுக்கே தெரியல… நீங்க பெரிய லெவல்ல வரவேண்டியவங்க. பேசாம ஒரு கேட்டரிங் சர்வீஸ் ஆரம்பிச்சிடுங்க. சும்மா பிச்சிட்டு போகும்.அதுக்கு எத்தனை டிமாண்ட் இருக்கு தெரியுமா?”

ஒரு நாள் தம்பதி சமேதராய் சங்கரி மாமியும், ஹரிஹரன் மாமாவும் ஒரு பத்திரிகை, வெற்றிலை பாக்கு, பழம் சகிதமாய் வீட்டிற்கு வந்தார்கள். அருணாச்சலத்தையும், காவேரியையும் நமஸ்கரித்து விட்டு பத்திரிகையை நீட்டினார்கள்.

‘அம்மன் கேட்டரிங் ஸர்வீஸஸ்’ என்று போட்டிருந்தது. தீபாவளிக்கு ‘அம்மன் கேட்டரிங் ஸர்வீஸஸி’ லிருந்து ஒரு பெரிய பெட்டி நிறைய இனிப்பு வகைகள், தவறாமல் வந்து விடும்.

***

இன்னொரு சம்பவம்….

அருணாச்சலம் ஒரு சான்ட்ரோ வைத்திருக்கிறார்.பழைய மாடல்தான்.ஆனாலும் நேற்றுதான் வாங்கின மாதிரி ஒரு மினுமினுப்பு..தொட்டாலே போதும்.காற்றில் பறப்பது மாதிரி ஒரு உணர்வு..

எல்லாத்துக்கும் காரணம் மெக்கானிக் சோமு தான்.வண்டி வாங்கின நாளிலிருந்து இன்றுவரை சோமுவைத்தவிர யாரும் அதில் கை வைத்ததே இல்லை..

ஆனால் சோமு அதிகம் ஆசைப் பட மாட்டான். அதுவும் ஒரு நாளும் காசுக்காக ஆசைப்படமாட்டான் . கார் மீது அத்தனை காதல்… பக்தி..

“சோமு… இவ்வளவு தொழில் தெரிஞ்சு வச்சிருக்கியே… வருமானம் பத்துதா…???”

“எங்க ஸார்… மூணு பிள்ளைகளை வச்சிக்கிட்டு சமாளிக்கவே முடியல…நிறைய பேர் ஹுயுண்டாய் ஒர்க் ஷாப்பில குடுத்துடறாங்க
உங்கள மாதிரி சில பேர்தான் என்னிய நம்பி குடுக்கறாங்க…”

“சோமு.. நான் ஒண்ணு சொல்வேன்…கேப்பியா….”

“என்ன ஸார்… எதுவானாலும் சொல்லுங்க ஸார்…!”

“நீ பேசாம ஒரு ஏஜென்ஸி எடுத்திடு… உன்ன மாதிரி திறமைசாலிகளை கம்பெனி விடவே விடாது…”

“ஸார்.. அதெல்லாம் நமக்கு கட்டுப்படியாகுங்களா..நிறைய செலவு செய்யணும் ஸார்…பணத்துக்கு நான் எங்க போவேன்..???”

“சோமு.. உனக்கு சின்ன வயசு…காரியத்தில கெட்டிக்காரன்..துணிஞ்சு இறங்கு.. நான் கொஞ்சம் பணம் தரேன்.. கொஞ்சம் லோன் போடு.. யோசிக்காத..!!”

இன்று சோமு ஒரு ஹுயுண்டாய் ஏஜென்ஸி உரிமையாளன் .

அவனுடைய ‘ மகிமா ஆட்டோ ஸர்வீஸஸ் ‘ ல் அப்பாயின்மென்ட் வேண்டுமென்றால் ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்… ஆனால் அருணாச்சலத்துக்கு அவன் பழைய சோமு தான்….

இது மாதிரி சந்தர்ப்பங்களில் அவருடைய ஈகோ மேலே போவதில் என்ன தவறு..??
இனிமேல்தான் கிளைமேக்ஸ் ஆரம்பம்….

***

அருணாச்சலம் எது தவறினாலும் வெள்ளிக்கிழமை காலை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் போவது தவறாது…..

வெளியில் வரிசையாக உட்கார்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள் எல்லோருக்கும் தலா ஐந்து ரூபாய் வீதம் குடுத்து விடுவார்.இதற்காகவே சில்லரையாக மாற்றி வைத்துக் கொள்ள மறக்க மாட்டார்.

அதில் ஒரு பிச்சைக்காரன் இவருக்கு நண்பனாகி விட்டான்….

விடுவாரா… ஐந்து நிமிடம் நின்று அவனுடன் பேசிவிட்டுத்தான் நகருவார்…..

ஒரு நாள் வாசலில் அவன் மட்டும்தான் உட்கார்ந்திருந்தான்…..

“என்னப்பா… யாரையுமே காணம்… எங்க போனாங்க..??”

“இன்னிக்கு முண்டகண்ணி அம்மன் கோவில்ல விசேஷம் போல.அங்க சாப்பாடு கூட போடுவாங்க சாமி…அதான் எல்லாம் அங்க டேரா போட்றுப்பானுங்க…..”

“ஏம்பா…. நீயும் போயிருக்கலாமில்ல…??””

“இந்த கபாலி வேற கோவில் வாசப்படி மிதிக்க மாட்டான்…பட்டினி கெடந்தாலும் சரி….”

“ஆனா.. இன்னிக்கு உனக்கு யோகம் தான்..இந்தா…அம்பது ரூபாயும் உனக்குத்தான்..”

“டேங்ஸ்..சாமி..நல்லாருப்ப…”

“கபாலி… உங்கிட்ட கொஞ்சம் பேசணுமே…”

“சாமி… இந்த பிச்சைக்காரன் கிட்ட பேச என்ன இருக்கு…. பேசலாம் சாமி.”

“வா… அந்த மரத்தடிக்கு போகலாம்…

***

இரண்டு பேரும் மரத்தடியில் நின்று கொண்டார்கள்….

“கபாலி… உனக்கு சுமார் ஒரு நாளைக்கு எவ்வளவு தேறும்..??”

“இன்னா சாமி..income tax கட்ட சொல்லப் போறியா…??”

பெரிதாகச் சிரித்தான் கபாலி.. பற்கள் முத்துப்போல் பளீரென்று மின்னியது…

“என்ன கபாலி….பயந்திட்டியா…???”

“சும்மா .. ஒரு டமாசு… பண்டிக நாளுன்னா நூறு..நூத்தம்பதுக்கு குறையாது.மத்த நாள்ல அம்பது … அறுபதுன்னு வச்சிக்கயேன்…

ஒரு தபா வள்ளிசா ஐநூறுன்னா பாத்துக்கோயேன்..சரி.. எதுக்கு கேக்குற …அத்த சொல்லு முதல்ல…!!”

“நீ காலம் முழுசும் பிச்சையெடுத்துதான் சாப்பிடப் போறியா …??”

“ம் ம்ம்… தவறாம லாட்டரி சீட்டு வாங்கிடுவேன்..விழுந்சிச்சுன்னு வை… சத்தியமா பிச்சை எடுக்க மாட்டேன்…!!”

மறுபடியும் பெரிதாகச் சிரித்தான்….

“ஏன் கபாலி.. உனக்கு வேல பாக்க ஆசையில்லையா….??”

“அதானே பாத்தேன்…அங்க சுத்தி..இங்க சுத்தி…இதக் கேக்கவா இம்மா நேரம்….முதல்லையே பளிச்சினு கேக்கவேண்டியதுதானே…”

“நா சொல்ல வந்ததே வேற கபாலி..நா உனக்கு மொத்தமா இருநூத்தம்பது ரூபா தருவேன்.. ஒரு நாள் பிச்சையெடுக்காம நான் சொன்னபடி செய்யணும்…!!”

“எதுக்கு சாமி…விவரமா சொல்லு… ஒண்ணுமே புரியல…”

“நீ உக்காந்த இடத்திலேயே சுகமா சம்பாதிச்சு பழகிட்ட..வேல பாத்து சாம்பாதிச்சு சாப்பிடும் போது அதோட அருமை… அப்பத்தான் புரியும்.. உனக்கு அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரிய வேண்டாமா…??”

ஏதோ சொல்ல வாயெடுத்தான் கபாலி. ஒரு நீண்ட மௌனத்துக்கப்புறம் ஏதோ தீர்மானத்துக்கு வந்தவனாய்….

“இப்போ…இன்னான்ற… முழுசும் சொல்லு…”

“நா உனக்கு இருநூத்தம்பது ரூபா எதுக்கு தரேன் தெரியுமா…???

“இன்னா… டீலா….??”

“டீல்னுதான் வச்சிக்கயேன்…

முதல்ல கடைக்குப் போய் ஒரு நல்ல சட்டையும் , வேட்டியும் வாங்கிக்க… அப்புறமா சலூனுக்கு போய் முடி வெட்டி…நல்லா சோப்பு போட்டு குளிச்சு ..சுத்த பத்தமா..

காலைல ஏழு மணிக்கு இதே மரத்தடியண்ட வந்து நில்லு..மீதிய காலைல சொல்றேன்.. செய்வியா….???”

“ஏதோ பிளானோடதான் வந்திருக்க.. அதான் துட்டு தரியே..செஞ்சுபுட்டா போச்சு….”

காலையில் சரியாக ஏழு மணிக்கு மரத்தடிக்கு வந்தார் நமது வாத்தியார்..

கபாலி இன்னும் வரவில்லையா…???

“சாமி… எங்க தேடிட்டிருக்க …?ஆறு மணிக்கே வந்திட்டேன்…!!”

ஆள் அடையாளமே தெரியவில்லை…

“எப்பிடி கெட்டப்பு….இது கூட நல்லாத்தான் இருக்கு….”மறுபடியும் சிரிப்பு…

“கபாலி..நானே ஏமாந்துட்டேன்…ஆளே டோட்டலா மாறிட்டியே…உன்ன பாத்தா யாராவது நீ பிச்சையெடுக்கிறன்னு சொன்னா நம்புவாங்களா…. ஆள் பாதி…ஆடை பாதி..கபாலி…”

‘அங்கதானே இடிக்குது….’ கபாலி மனசுக்குள் நினைத்துக் கொண்டான்….

“நட.. எங்கூட…!”

கபாலிக்கு இது கூட பிடித்திருந்தது…

‘ஒரு நாள் கூத்துக்கு மீசைய செரச்சானாம்…’ தனக்குத் தானே சிரித்துக் கொண்டான்.

***

நேராய் மயிலாப்பூரில் இருக்கும் ஒரு சின்ன…. ஆனால் பிரபலமான ஓட்டலுக்கு கூட்டிக்கொண்டு போனார் அருணாச்சலம்…

ஒரு வேளை காப்பி.. டிபன்…வாங்கித்தரப்போகிறாரோ…??

நேராக கல்லாப் பெட்டி முதலாளியிடம் போனார்…

“வாங்க அருணாச்சலம்… எப்படி இருக்கீங்க…??”

“ஸார்.. நேத்து சொன்னேனே…க்ளீனிர் வேலைக்கு….!!”

“ஆமா… ஞாபகம் இருக்கு… நம்ப க்ளீனர் பையன் ஒரு வாரம் லீவு… நாள் கூலிக்கு ….நான்..நீ..ன்னு போட்டி போட்டுகிட்டு வரிசல நிக்கிறாங்க… நீங்க சொன்னீங்கன்னுதான்…..

யாரு…இவனா…ஆளு பாக்க ஷோக்கா இருக்கானே…க்ளீனர் வேலைக்கு சரிப்படுமா…??”

கொஞ்சம் பழைய சட்டையே போட்டிருக்கலாமோ…??…

அருணாச்சலம் மனதில் நினைத்துக் கொண்டார்… கபாலி கவலையே படாமல் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்…

“உம்பேரு என்னப்பா…??”

“கபாலி… ஸார்…”

“ஸார் உங்கிட்ட எல்லா விவரமும் சொல்லியிருப்பாரே…”

“இல்ல ஸார்….”

“நிச்சயமாக தெரிஞ்சுகிட்டு சொல்லலாம்னு….”

“அதுவும் சரிதான்.இன்னிக்கு ஒரு நாள் இங்க க்ளீனர் வேல செய்யணும்… உனக்கு ஆறு டேபிள்.. டக் டக்னு சாப்பிட்டதும் தட்டு.. டம்ளர் எடுத்துட்டு …டேபிள நீட்டா துடைக்கணும்..

எல்லா விவரமும் ஆறுமுகம் காட்டித் தருவான்.. மூணு வேளை இங்க சாப்பிட்டுக்கலாம்… சம்பளம் இருநூத்தம்பது..வேல சுத்தமா இருக்கணும்…இப்பவே ஆரம்பிச்சிடு… ஏற்கனவே லேட்டு….”

“சரி ஸார்..!!”

“என்ன கபாலி…..வரட்டா…??”

“ரைட்…. நீங்க கவலப்படாம போங்க…”

கபாலி ஏகக் குஷியில் இருந்தான்..

***

சரியாக ஏழு மணிக்கு அருணாச்சலம் ஓட்டல் வாசலில் காத்திருந்தார்.

‘பாவம்…முகமெல்லாம் வாடி …வேர்த்து விறுவிறுத்து வருவான் கபாலி… இத்தனை நாளும் சொகுசாக வேலை பார்க்காமலே பழகிவிட்டானே’ மனதுக்குள் நினைத்துக் கொண்டார் அருணாச்சலம்..

“சாமி…வந்திட்டியா….படு டமாசா இருந்திச்சு சாமி…!!”

போகும் போது இருந்த மாதிரியே ஃபிரஷ்ஷாக ஆகத் தெரிந்தான் கபாலி…

“என்ன கபாலி…வேல சக்கையா பிழிஞ்சிருக்குமே….”

“அதேல்லாம் இல்லை சாமி… நேரம் போனதே தெரியல…இந்தா..பிடி.. இருநூத்தம்பது…!!”

“ஐய்யய்யே….எனக்கெதுக்கு.. இது நீ உழச்சதுக்கு கெடச்ச கூலிப்பா”…!!”

“நேத்து நீ எனக்கு குடுத்தியே..அத திருப்பித் தர வேண்டான்றியா…???”

“ஓ அதுவா… எப்படியும் கோவில் வாசல்ல நீ உக்காந்தா சம்பாதிச்சிருப்பியே…நாந்தானே கெடுத்தேன்….

அது சரி…உனக்கு எப்பிடி இருந்திச்சு… கஷ்ட்டப்பட்டு வேல செஞ்சு சம்பாதிச்சோமேன்னு பெருமையா இருந்திருக்குமே….”

சொல்லப்போனால் கபாலியைவிட தான் எதையோ சாதித்து விட்ட பெருமை அருணாச்சலம் முகத்தில் தெரிந்தது….

கபாலி மௌனமாகவே நடந்து வந்தான்…

“என்ன கபாலி…சைலன்ட்டாயிட்ட…..இனிமே பிச்சையெடுக்கக் கூடாதுன்னு தோண ஆரம்பிச்சிருக்குமே……!!!”

“சாமி….உன்னோட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு… அந்த மரத்தடியில் நின்னு பேசலாமா..??”

***

அருணாச்சலத்துக்கு ஒரே சந்தோஷம்..பரவாயில்லையே..

ஒரே நாளில் பிச்சையெடுப்பதை விட்டு விட்டு புது ஆளாக மாறுவதென்றால்.. தனக்கு தானே ஒரு சபாஷ் போட்டுக் கொண்டார்…

“சாமி…நா ஒண்ணு கேட்டா தப்பா நெனெக்கமாட்டியே….ஏன்னா டீல்னா டீல் தான்…கரீக்கட்டா இருக்கணும்..

நீ சொன்ன மாதிரி நா ஒரு நாள் முச்சூடும் இருந்து காமிச்சிட்டேன்… என்ன சரிதானே…சொல்லு சாமி…!!”

“சரிதான் கபாலி…எனக்கு உன்ன நெனச்சு எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு தெரியுமா….??”

“அத்த விடு…அது முடிஞ்சு போன கதை..இப்போ நான் சொல்றத நீ செய்யணும்…செய்வியா..?”

“நிச்சயம் செய்வேன்….”

“அப்பறம் பால் மாற மாட்டியே….”

அப்படி என்ன கேட்டுவிட்டு போகிறான்..??

“சத்தியமா செய்வேன்….சொல்லு…”

“ஒரு நாள் இந்த கோவில் வாசல்ல உக்காந்து பிச்சையெடுக்கணும்…முடியுமா…??”

அருணாச்சலத்துக்கு சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது.இதே கேள்வியை வேறு யாராவது கேட்டிருந்தால் பல்லைக் கழட்டி கையில் குடுத்திருப்பார்….கேட்டது கபாலி..சும்மா தான்பாட்டுக்கு பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவனை …..

ம்ம்… அவரால் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை…

“என்ன சாமி…அரண்டு போய்ட்ட…. இந்த கேள்விக்கே இப்படின்னா…??

என்னடா… வெள்ளையும் சொள்ளையுமா நிக்கிற நம்மள பாத்து இந்த பிச்சக்காரன்…என்ன தைரியம் இருந்தா இப்பிடி ஒரு கேள்வி கேப்பான்…அதானே மனசுல ஓடுது….

என்ன நீ அடிச்சாலும் தப்பில்ல…

ஆனா ஒரு நாள் பிச்சக்காரனா நினச்சு பார்த்தாலே…. எவ்வளவு கேவலமா இருக்கு…???

பிச்சக்காரனா இருக்கிற மாதிரி கொடும இந்த உலகத்திலேயே கெடையாது…மானங் கெட்ட பொழப்பு…

சின்ன வயசில படிக்காத பசங்கள ‘ நீ பிச்ச எடுக்கத்தான் லாயக்குன்னுதான் திட்டுவாங்க….

பொண்ணு சரியா வாழலைனா..
‘ உனக்கு கட்டி வச்சதுக்கு ஒரு பிச்சைக்காரனுக்கு கட்டி வச்சிருக்கலாம்னு அப்பன் சொல்லுவான்..

ஆக மொத்தத்துல பிச்சைக்காரன் பொழப்பு எல்லாத்திலேயும் வச்சு கேவலமான பொழப்பு…

இத ஆசப்பட்டு யாராவது செய்வாங்கன்னு தோணுதா சாமி….??

ஒரு டேபிள் க்ளீனருக்கே சிபாரிசு வேண்டியிருக்கு… அதுவும் ஒரே நாள் வேலைக்கு…இதுல இருநூத்தம்பது செலவு வேற..

அதுக்கதுக்கு ஒரு வேசம் கட்டணும்..பிச்சக்காரனா போய் நின்னா எவன் வேல குடுப்பான்…??

அது போலத்தான் சாமி.. நீங்க இந்த கெட்டப்புல போய் உக்காந்தா நாலணா காசுகூட தட்ல விழாது..

‘ ஆளப்பாரு…பிச்சையெடுக்க வந்திட்டாங்க..வேல பாக்க துப்பில்ல….’இந்த வசவேல்லாம் வேற கேக்கணும்..என்னிய மாரி அழுக்கு வேட்டி…கந்த சட்ட..பரட்ட முடி…உன்னால முடியுமா…???

காலையிருந்து பொழுது சாயற வரைக்கும் ஒரே இடத்தில குந்திகிட்டு…போறவரவுங்க கிட்ட கைய நீட்டி நீட்டி… உடம்பும்.. மனசும்.. வலிக்கும் பாரு..சொன்னா புரியாது..
சாமி…!!!!!!

எனக்கும் பொண்டாட்டி..பிள்ளைங்க இருக்குன்னா நம்புவியா..?? இஸ்கோலுக்கு போவுதுங்கன்னா நம்புவியா..?? அப்பா பிச்சைக்காரன்னு அதுங்களுக்கு தெரியாது….

அவளுக்கு தெரியும்..நான்பட்ட கஷ்ட்டமெல்லாம் புரிஞ்சவ….

நாங்க பரம்பர பிச்சக்காரங்க கிடையாது.. எப்படி பிச்சைக்காரனானேன்…… பெரிய கத….. நிச்சயமா ஒரு நா உங்கிட்ட சொல்றேன்…. ஆனா எம்பசங்கள சத்தியமா பிச்சையெடுக்க விடமாட்டோம்…

சாமி..ஓவரா பேசிப்புட்டேன். ஒரு பலூன்ல சின்னதா ஊசி எடுத்து குத்தினா டமார்னு வெடிக்கிறாப்புல…எங்கியோ குத்திப் போட்ட….!!!!

பொத்துக்குணு கொட்டிடுச்சு சாமி…

சாமி..நீ இருக்கற இடத்திலேயே சௌக்யமா இருக்கணும்… அப்பத்தான் என்ன மாதிரி ஆளுங்க பொழப்பு ஓடும்..

ஒண்ணு தெரிஞ்சுக்க… இந்த பிச்சக்காரன்…..பிக்பேக்கட்காரன்…
காசுக்கு உடம்ப விக்கிற பொண்ணுங்க….இவுங்களோடா நதி மூலம்…ரிஷி மூலம்…..ஆராஞ்சு பாக்காத…!!!!

ஏதோ கோவிலுக்கு வந்தோமா…உண்டியல்ல நாலு காசு போடறமாதிரி …. பிச்சைக்காரன் தட்ல நாலு காசு போட்டோமான்னு.. .

இஷட்டமில்லையா…போய்க்கிட்டே இரு….!!!

என்ன சாமி….எம்மேல கோவமில்லியே…..???

அருணாச்சலத்துக்கு பேச்சே வரவில்லை…

“கபாலி… இது நா கேக்கவேண்டிய கேள்வி….அடுத்த வெள்ளிக்கிழமை பாக்கலாம்….”

இரண்டு கபாலிக்கும் சேர்த்து ஒரு பெரிய கும்பிடாய் போட்டார்…

“சாமி… எனக்கு முழு கலெக்க்ஷன் வர ஒரு வாரம் ஆகும்….”

என்று மழுமழுவேன்று சிரைத்த தன் தாடையைத் தடவி விட்டுக் கொண்டு பெரிதாகச் சிரித்தான் கபாலி…..

Print Friendly, PDF & Email

4 thoughts on “இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்…எல்லாம் சௌக்யமே…!!!

  1. வித்தியாசமான இணைய தளம்.
    தரமான சிறுகதைகள்.
    வாழிய பல்லாண்டு.
    அன்புடன்,
    சாராபா,
    திண்டுக்கல்

  2. எழுத்தாளர் இந்த கதையை வித்தியாசமான பார்வையில் கொண்டுச்சென்றது அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் திருமதி. சரசா சூரி அவர்களே. இந்த கதையை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி

  3. எழுத்தாளர் இந்த கதையை வித்தியாசமான பார்வையில் கொண்டுசென்று அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள் திருமதி. சரசா சூரி அவர்களே. இந்த கதையை பதிவிதமைக்கு மிக்க நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *