இந்த நாள் இனிய நாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 30, 2021
பார்வையிட்டோர்: 18,602 
 

தனுசு ராசி அன்பர்களே! உங்களுக்கு இன்று.. பிரபல ஜோதிடர் வாய் திறக்கவும், என் மனைவி டிவியை ஆப் செய்யவும் சரியாக இருந்தது.

பார்த்துகிட்டு இருக்கேன்’ல..என்றேன் கோபமாக. தினமும் இதை கேட்காவிட்டால் எனக்கு அந்த நாளே ஓடாது.

நேரமாச்சு..நான் பதிவு செய்து அனுப்பறேன்..பொறுமையா ஆபீஸ்’ல உக்கார்ந்து கேளுங்க என்றாள் கிண்டலாக.

வழியில் பைக் பஞ்சராக, சரி செய்து கொண்டு அலுவலகம் வருவதற்கு காலை பத்து மணியாகி விட்டது. பார்க்கிங் ஏரியாவில் பைக்கை நிறுத்திவிட்டு நான் வேலை செய்யும் பில்டிங்கை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.

டேய் மஹா.. உன்னோட தனுசு ராசிக்கு என்ன சொல்லியிருக்காங்கன்னா? ஒருவர் போனில் பேசி கொண்டே என்னை முந்தி நடந்தார். நான் சற்று ஆர்வமாகி அவர் வேகத்திற்கு ஈடு கொடுத்து நடக்க ஆரம்பித்தேன்.

அவர் போனில், இன்றைக்கு உனக்கு.. என்று ஆரம்பித்த போது, டிர்ர்ர்..டப் டப்..டிர்ர்ர்ர்ர்ர்ர்.. அலுவலக தோட்ட தொழிலாளி புல் வெட்டும் இயந்திரத்தை கொண்டு பக்கவாட்டு புல் தரையை சமன் செய்து கொண்டே வந்தார்.

என்னடா சோதனை.. என்று நினைத்து கொண்டே, என் முன் செல்லும் நடமாடும் ஜோதிடரை சற்று நெருக்கமாக பின் தொடர்ந்தேன். ஆனால் இயந்திர சத்தத்தில் ஒன்றும் கேட்கவில்லை.

அவ்வளவு தான்டா மஹா..என்று அவர் முடிக்கவும், தோட்ட தொழிலாளி இயந்திரந்தை ஆப் செய்யவும் சரியாக இருந்தது.

இன்று யார் முகத்தில் விழித்தேனோ? என்று நினைத்து கொண்டே பில்டிங்கிற்குள் நுழைந்தேன். டிங்.டிங்..வாட்ஸாப் மெசேஜ் சத்தம் கேட்டது. என் மனைவி இரண்டு வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பி இருந்தாள். அதில் முதல் மெஸேஜை ஓபன் செய்தேன்.

அன்பான, உயரமான, லன்ச் பாக்ஸை விட்டு சென்ற தனுசு ராசி அன்பர்களே! கிண்டலாக என் மனைவியின் குரல் ஒலித்தது. எனக்கு சற்று கோபம் அதிகமாகியது. போனை செக்கியூரிட்டியிடம் கொடுத்து லாக்கரில் வைக்க சொல்லிவிட்டு முதல் மாடிக்குள் நுழைந்தேன். நாங்கள் வேலை செய்யும் இடத்தில் யாரும் கேமரா போன் உபயோகிக்க கூடாது, அனைவருக்கும் தனித்தனியாக தொலைபேசி வசதி இருக்கிறது.

என் இருக்கையில் அமர்ந்து கம்ப்யூட்டரை ஆன் செய்தேன். திரையில் ஒளி வரவில்லை. மீண்டும் கம்ப்யூட்டரை ரீ-ஸ்டார்ட் செய்தேன். எந்த பலனுமில்லை. உடனே சப்போர்ட் டீமிற்கு போன் செய்தேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்து பார்க்கிறோம் என்றார்கள்.

சிறிது நேரத்தில் டெலிபோன் ஒலித்தது. மறுமுனையில் என் மனைவி, என்ன ராசி பலன் எப்படி?

போனை வச்சிடு..சரியான கடுப்பில் இருக்கேன்..

ஹி ..ஹி.. இன்றைக்கு உங்களுக்கு..டப்பென்று போனை வைத்தேன்.ரிசீவரை எடுத்து தனியாக வைத்தேன். இப்ப எப்படி கூப்பிடுவான்னு பாக்குறேன்..

சிறிது நேரத்தில் எங்கள் ப்ராஜக்ட் மேனேஜர் சுரேஷ் வந்தார். என்ன போன் ரொம்ப நேரமா பிசியா இருக்கு?

இல்லைங்க..ரிசீவரை யாரோ சரியா வைக்கல..

பதினோரு மணிக்கு மீட்டிங் இருக்கு, நீங்க மெயில் பார்க்கவில்லையா?

சாரி..என் சிஸ்டம் ஸ்டார்ட் ஆகவில்லை..

சரி மீட்டிங் ரூமிற்கு வாங்க..முக்கியமான விஷயம் பேசனும்..

எழுந்து அவரை பின் தொடர்ந்தேன். ரூமிற்குள் ஏற்கனவே அனைவரும் அமர்ந்திருந்தனர். அட! காலையில் பார்த்த மஹாவின் நண்பரும் நின்று கொண்டிருந்தார். இவரை இதற்கு முன் இங்கு பார்த்ததில்லயே என்று யோசித்தேன். அவரும் என்னை லேசாக முறைத்து பார்த்து கொண்டிருந்தார்.

ஓகே டீம்.. ஹி ஐஸ் Mr. ராம்.. நம்முடைய புது க்ளெயன்ட் மானேஜர். காலையிலேயே எல்லாருக்கும் மெயில் வந்திருக்கும். சுரேஷ் சொன்னதை கேட்டு எல்லாரும் சிரித்தனர்.

சரி சரி.. நான் நேரா விஷயத்துக்கு வரேன் என்றார். பிறகு என்னை பார்த்து, நீங்க இந்த வீக்கெண்ட்…

அவர் வாக்கியத்தை முடிக்கும் முன் நான் சத்தமாக, சாரிங்க..என்னால எல்லா சனி ஞாயிறும் வேலை செய்ய முடியாது. டெஸ்டிங் பண்ண ஆள் வேணும்னா இவங்க சும்மா தான இருக்காங்க..அங்கிருந்த வேறு இருவரை கை காட்டினேன்.

அவர்களிருவரும் என்னை முறைத்தனர்.

அது என்ன.. எப்ப பார்த்தாலும் என்னையே வாரக்கடைசியில வர சொல்றீங்க.. ஏனோ என் குரலும் உடலும் நடுங்கியது.

சுரேஷ் சிரித்தார். நீங்க தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கீங்க.. நான் சொல்ல வந்தது என்னன்னா..

சட்டென்று ராம், சுரேஷை இடைமறித்தார். பின்னர் என்னை பார்த்து, நீங்க உங்க இடத்துக்கு போங்க.. என்றார். தேங்க்ஸ்.. என்று கூறி விட்டு என் இருக்கையில் வந்து அமர்ந்தேன்.

என்னை பார்த்தால் எல்லாருக்கும் இளிச்சவாயன் போல தெரிகிறதா? இனி பொறுப்பது இல்லை. எதுவாக இருந்தாலும் நேருக்கு நேர் கேட்டு விட வேண்டியது தான். இப்படி யோசித்து கொண்டே இருக்கும் போது, சப்போர்ட் டீமில் இருந்து ஆள் வந்தார்கள்.

கொஞ்சம் சீக்கிரம் பாருங்க,,என்றேன். அவர்கள் கம்ப்யூட்டரை செக் செய்து கொண்டிருக்கும் போது..ராமும் சுரேஷும் என்னருகில் வந்தார்கள்.

அப்போது சப்போர்ட் டீம் ஆள் சத்தமாக, என்ன சார்..மானிட்டர் (திரை ) ப்ளக்கை ஆன் செய்யவே இல்லை..இப்ப பாருங்க..ஒர்க் ஆகும்..

எனக்கு முகத்தில் ஈயாடவில்லை.

நான் சொன்னேனில்லை..என்றார் ராம், சுரேஷிடம்.

சுரேஷும், ஆமாம்..நானும் கவனித்தேன்.. என்றார்.

இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று யோசித்து கொண்டிருக்கும் போது, Fire Drill அலாரம் அடித்தது. இந்த அலாரம் அடித்தால், எல்லோரும் பில்டிங்கை விட்டு பாதுகாப்பான இடத்திற்கு உடனே போக வேண்டும்.

இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் என் இருக்கைக்கு வந்தேன். எங்கள் HR நின்று கொண்டிருந்தார். என்னை பில்டிங் ஐந்திற்கு போய் மிஸ்.சப்னா சிங்கை பார்க்க சொன்னார்.

யார் அவங்க? என்ன விஷயம்? என்றேன்.

உங்க அடுத்த ப்ராஜக்ட் பற்றி பேசுவார் என்றார்.

இந்த ப்ராஜக்ட்டே இன்னும் முடியவில்லையே என்று நினைத்து கொண்டு பில்டிங் ஐந்திற்கு போனேன். இரண்டாம் மாடிக்குள் நுழைந்து அங்கிருந்த செக்கியூரிட்டியிடம் மிஸ்.சப்னா? என்றேன். அங்க லெப்ட் கார்னர்ல ஆரஞ்சு கலர் கேபின்.. என்றார்.

நேராக ஆரஞ்சு கேபினுக்கு சென்று மிஸ்.சப்னா.. என்றேன்.

சப்னா நிமிர்ந்து என்னை பார்த்தார். அவர் முன் சைக்காலஜி கவுன்சிலிங் என்ற போர்டு இருந்தது. அவர் இருக்கைக்கு பின்னால் சுவற்றில் ஒரு பெரிய ஓவியம் வரைந்திருந்தார்கள். அதில் ஒரு மனிதத்தலை அரை பாதியாக வெட்டப்பட்டு, பாதி மனித மூளை வெளியே தெரிய,அதை இரண்டு நிழலுருவங்கள் (ஆண், பெண்) தனித்தனியாக பூத கண்ணாடியை வைத்து பார்த்து கொண்டிருந்தன.

இந்த துறையில் நமக்கு அனுபவமில்லையே என்று நினைத்து கொண்டே, Good Afternoon..என்றேன்.

யா..என்றார் சப்னா..

நைஸ் பெயின்டிங்..என்றேன் நான்.

பெயின்டிங்கையும், என்னையும் திரும்ப திரும்ப பார்த்தாள். ப்ளீஸ் உட்காருங்க..

தேங்க்ஸ்..என்று கூறிவிட்டு அவள் எதிரில் அமர்ந்தேன்.

HR உங்களை பார்க்க சொன்னார்..

யெஸ்..நீங்க ரொம்ப மனஉளைச்சல்ல இருக்கீங்கன்னு சுரேஷ் சொன்னார்..

நான் பதறியபடியே..இல்லைங்க..நான் நல்லா தான் இருக்கேன்.

ஓகே..இது ஜஸ்ட் பார்மாலிட்டி தான்.. நாம் இன்று நடந்த சில விஷயங்களை பேசுவோம்..

சரிங்க..ஓகே.ங்க..வார்த்தை தடுமாறியது. ஒரு சிறிய நோட்புக் எடுத்து அதில் ஏதோ எழுதினாள். நான் மனதிற்குள், திக்குவாயன் என்று எழுதுகிறாளோ? என்று நினைத்து கொண்டேன். ஆர்வம் தாங்காமல் எட்டி பார்த்தேன். ஸ்கூல் எக்ஸாமில், பேப்பரை காட்ட சொன்னால், மறைப்பார்களே..அப்படி வேகமாய் மறைத்தாள்.

ஓகே..நீங்க ஏன் காலையில பார்க்கிங் ஏரியாவில் இருந்து Mr.ராமை நெருக்கமா பாலோ செஞ்சீங்க? அதுவுமில்லாம அவர் சட்டை பாக்கெட்டை வேற எட்டி பாத்திருக்கீங்க..

சத்தியமா இல்லைங்க.. ராசி பலன் கேட்க தான் என்று சொன்னால் கண்டிப்பாக நம்ப மாட்டாள்..என்ன செய்யலாம்..யோசித்தேன். ஆங்..அவரு போன் புதுசான்னு எட்டி பார்த்தேன்..

ஒன்றும் சொல்லாமல் வேகமாக எழுதினாள். நான் மனதிற்குள், என்ன எழுதுகிறாள்? திக்குவாயன் + திருடன் அல்லது ஆண்களை.. அய்யோ..

நெக்ஸ்டு..உங்க போனை..அதுவும் யாரோ பேசிகிட்டு இருக்கும் போதே உங்க பில்டிங் செக்கியூரிட்டியிடம் தூக்கி போட்டிருக்கீங்க..

தூக்கியா போட்டேன்..எப்படி யோசித்தும் ஞாபகம் வரவில்லை..எல்லாம் அந்த கடன்காரியால..கடங்காரி..

சப்னா, சற்று பின் நகர்ந்து உட்கார்ந்தாள். அவளுக்கு லேசாக வியர்த்தது.

அய்யய்யோ..என்னை மறந்து சத்தமாக கூறி விட்டேனா? போனை எடுத்து எந்த நம்பரையோ அழுத்தினாள். எட்டி பார்த்தேன், அவள் ஏழரை என்ற நம்பரை அழுத்தியது போல் இருந்தது. சில வினாடிகளில் இரண்டு செக்கியூரிட்டிகள் என் பின்னால் வந்து நின்றனர்.

அவர்களிடம் பார்வையாலேயே சைகை செய்து விட்டு, மீண்டும் ஏதோ எழுதினாள். இப்பொழுது என்ன எழுதுகிறாள்? நான் ஒரு திக்குவாயன் + திருடன் + சைக்கோ என்றா?

ஓகே லாஸ்ட் ஒன். முடிஞ்சி போன ப்ரொஜெக்ட்டுக்கு,வீக்கெண்ட் வேலை செய்ய முடியாதுன்னு சத்தம் போட்டீங்களாமே?

எனக்கு மனநிலை பாதித்தவர்களை கொண்டு செல்லும் ஆம்புலன்ஸ், பில்டிங் ஐந்திற்கு வெளியில் வந்து நிற்பது போல் சத்தம் கேட்டது. செக்கியூரிட்டி லேசாக என் தோளில் கை வைத்தார். சட்டென்று static current (நிலைமின்னோட்டம்) என் உடம்பில் பாய, வேகமாய் உடல் அதிர்ந்தது.

சீக்கிரம் பிடிங்க என்று சப்னா சத்தமிட, இரண்டு செக்கியூரிட்டிகளும் என்னை இறுக பிடித்தார்கள்..

இவர் காலையில் இருந்து இப்படி தான் ஏதேதோ செய்கிறாராம்.. டெலிபோன் ரீசீவரை தூக்கி எறிந்திருக்கிறார், மானிட்டர் ப்ளக்கை ஆப் செய்து விட்டு சப்போர்ட் டீமிடம் சண்டை போட்டிருக்கிறார்.. என்று சப்னா செக்கியூரிட்டிகளிடம் கூறினாள்.

நான் மிரண்டு விட்டேன். வாட்டர் ப்ளீஸ்.. என்றேன். சப்னா கொடுத்த பாட்டிலை மெதுவாக திறந்து வாய் படாமல் தூக்கி குடித்தேன். எச்சில் வாயன் என்று எழுதி விட்டால் என்ன செய்வது?

என் கை, அளவுக்கு மீறி நடுங்கியதால், பாதி தண்ணீர் வாய்க்குள்ளும் மீதி சட்டையிலும் சிந்தியது.

நான் சற்று ரிலாக்ஸ் ஆனவுடன், ஓகே.. நீங்க உங்க பில்டிங்கிற்கு போங்க..ஆனா இன்னைக்கு நீங்க எந்த வேலையும் செய்ய கூடாது, ஓகேவா..

தலையை எல்லா கோணத்திலும் ஆட்டினேன், விட்டால் போதும் என்று ஓட்டமும் நடையுமாக வெளியில் வந்தேன். நேராக என் இருக்கைக்கு சென்று கம்ப்யூட்டரை ஆன் செய்தேன். இப்பொழுது திரை ஒளிர்ந்தது. மெயில்களை ஒவ்வொன்றாக படித்தேன். எங்கள் ப்ராஜக்ட்டை நிதி வருவாய் பற்றாக்குறையால் உடனே நிறுத்த சொல்லி விட்டார்கள். காலையிலேயே மெயில் வந்திருந்தது. தலையில் வேகமாக பட்..பட்டென்று அடித்து கொண்டேன்.

பாருங்க..பாருங்க..நான் சொன்னேனில்லை..

சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன். சுரேஷும் வேறு சிலரும், பயம் கலந்த பார்வை பார்த்தார்கள்.

உம்ஹும்.. இதற்கு மேல் இங்கு இருந்தால், கல்லால் அடித்தாலும் அடிப்பார்கள்.. என்று நினைத்து கொண்டே வெளியில் வந்தேன்.

செக்கியூரிட்டியிடம், ஏண்ணே..நானா போனை தூக்கி போட்டேன்?

ஆமா சார்..நீங்க காலைல ரொம்ப கோபமா வேகமா வந்தீங்க..யாரோ அந்த பக்கம் போன்’ல அழுதுகிட்டு இருந்தாங்க..

யோவ்..அவ சிரிச்சிகிட்டு இருந்தாயா..

இல்ல சார்..உங்களுக்கு தெரியாது..நீங்க ரொம்ப கோபமா இருந்தீங்க..அப்படியே போனை தூக்கி வீசுனீங்க பாருங்க..

இவனுக்கு சப்னா எவ்வளவோ பெட்டர் என்று நினைத்து கொண்டு.. போனை குடுங்கண்ணே..என்றேன்.

இந்தாங்க சார்..நல்ல வேளை..நான் டக்குன்னு தாவி பிடிச்சதுனால இப்ப உருப்படியா இருக்கு..

எனக்கு என் போனை வேகமாக சுவற்றில் எறிய வேண்டும் போல் இருந்தது. வேண்டாம்.. அப்புறம் இவன் அதை சொல்லி சொல்லியே இந்தியன் கிரிக்கெட் டீமில் சேர்ந்தாலும் சேர்ந்து விடுவான் என்று நினைத்தபடியே பில்டிங்கிற்கு வெளியில் வந்து அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தேன். காற்று இதமாக அடித்தது.

போனை எடுத்தேன்.மொத்தம் எட்டு மிஸ்ட் கால் என்று இருந்தது. அத்தனையும் என் அருமை மனைவியிடமிருந்து.

வாட்ஸாப்பில் இருந்த இரண்டாவது வாய்ஸ் மெசேஜை ஓபன் செய்தேன். காலையில் வந்த ஜோதிட ஒளிபரப்பை அனுப்பியிருந்தாள். போன் ஸ்பீக்கரை ஆன் செய்து கேட்டேன்.

“தனுசுராசிஅன்பர்களே! இன்றுஉங்களுக்குசந்திராஷ்டமம். வாழ்க்கைதுணையின்சொல்கேட்டுநடப்பதுஉத்தமம். முன்பின்தெரியாதவர்களிடம்அளவாகபழகுங்கள்! மின்சாதனங்களைகவனமாககையாளுங்கள். அலுவலகத்தில்மேலதிகாரியுடன்மோதல்ஏற்படலாம். அதிகபதற்றத்தைதவிர்க்கவும், முடிந்தால்நாள்முழுவதும்பேசாமல்இருங்கள். இன்றுஉங்களின்ராசியானநிறம்ஆரஞ்சு, அதிர்ஷ்டஎண்கள்ஒன்றுஇரண்டுமற்றும்ஐந்து”

ஓஹோ! நீங்க தனுசு ராசியா? சத்தம் கேட்டு திரும்பி பார்த்தேன், ராம் நின்று கொண்டிருந்தார்.

குடு குடுவென்று அவரிடம் ஓடினேன்.ஆமாங்க..காலையில் நீங்க மஹா கிட்ட பேசிகிட்டு இருந்தீங்க..அதை கேட்க தான் வந்தேன். அப்போ புல் வெட்டும் இயந்திர சத்தத்தில் ஒன்றும் கேட்கவில்லை.. அதனால் தான் அருகில் நெருங்கி வந்தேன்..என்று காலை முதல் மாலை வரை நடந்த அனைத்தையும் ஐந்தாம் வகுப்பு மாணவன் போல் கையை கட்டி கொண்டு ஒப்புவித்தேன்.

விழுந்து விழுந்து சிரித்தவர்.. கம் வித் மீ என்று மீண்டும் பில்டிங்கிற்குள் அழைத்து சென்றார்.

செக்கியூரிட்டி, ராமிடம்..இவரை திரும்ப உள்ள விட வேண்டாம்னு சொல்லி இருக்காங்க..

நோ ப்ராபளம்..என்று கூறி உள்ளே அழைத்து சென்றார். அடுத்த அரை மணி நேரத்தில் நான் காலையில் பில்டிங்கிற்குள் வரும் வீடியோ பதிவை பார்த்தார்கள். நான் கோபமாக, ஆனால் மெதுவாக தான் போனை வைத்திருகின்றேன். ஹவுஸ் கீப்பிங் ஆளை அழைத்தார்கள். கரையான் மருந்து அடிப்பதற்காக மானிட்டர் ப்ளக்கை கழட்டி வைத்ததாகவும், பின்னர் மறந்து விட்டதாகவும் சொன்னார்கள். மெயில் பார்க்காதது, Static கரண்ட் அதிர்வு அனைத்திற்கும் விளக்கம் கிடைத்தவுடன் ராம், சுரேஷ் மற்றும் சப்னா மூவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

ராம் கிளம்பும் போது, நம்ம மஹாக்கு நான் தனியா ஸ்பெஷல் ட்ரீட் கொடுக்கறேன்னு சொல்லுங்க.. என்றேன். சட்டென்று சிரிப்பு மறைந்து என்னை முறைத்தவர். மஹா என் மனைவி என்றார்.

அய்யய்யோ..நீங்க காலையில் டேய் மஹா’ன்னு கூப்பிட்டதால, அவங்கள ஆம்பளைன்னு..

சப்னா சிரித்து கொண்டே குறிப்பெடுத்து கொண்டிருந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *