ஆகாயத்தில் போன சனியன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 20, 2023
பார்வையிட்டோர்: 3,413 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

[ ‘சுளீர் சுளீர்’ என்ற பிரம்படி நாதமும் ‘ஆ ஊ என்ற ‘பீட்டில்ஸ்’ பாணி அலறல் சங்கீதமும்………]

அழகும் கலகலப்பும் இல்லாத வீட்டைக் குறிப் பிடுவதற்கு, உண்மை நயத்தோடு பின் வருமாறு எழுதினார் ஒரு மலேசிய எழுத்தாளர்.

‘தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத வீடு போலச் சோபையிழந்திருந்தது…’

அப்படியானால், தொலைக்காட்சிப் பெட்டி உள்ள வீடு எப்படியிருக்கும்?

எங்கள் வீடே ஓர் உதாரணம்!

பட்டணவாசிகளான எங்கள் வீடு வீடா அது? அறை! நான்கு சுவர்கள் கொண்ட ஓர் எட்டடி அறை!

‘எட்டடிக் கோயிலிலே, சண்முகா, எப்படி நீ இருக்கே?’ என்று நண்பர் ஒருவர் அடிக்கடி வேடிக்கையாகப் பாடுவதுண்டு.

அதிலே நான் மட்டுமா இருக்கிறேன்? என் மனைவி, குழந்தைகள்…மொத்தம் எத்தனை பேர் என்பதைச் சொல்லத் தயக்கமாயிருக்கிறது, போங்கள்!

ஒளவைப் பாட்டி எனக்காகத்தான் பாடி வைத்தாரோ என்னமோ—’சிறுகக் கட்டிப் பெருக வாழு’ என்று!

பெருக-அதாவது, குழந்தை குட்டிகள் பெருக வாழ்ந்ததால் எங்கள் வீட்டில் போர்க்கள முழக்கம் கேட்டுக்கொண்டே யிருக்கும்! பாத்திரம் பண்டங்கள் விழுந்து நொறுங்கும் ‘இனிய ஓசை’க்குப் பஞ்சமே இராது! அதனைத் தொடர்ந்து ‘சுளீர் சுளீர்’ என்ற பிரம்படி நாதமும், ‘ஆ ஊ’ என்ற ‘பீட்டில்ஸ்’ பாணி அலறல் சங்கீதமும் காதைத் துளைக்கும்! ஆர்ப்பாட் டங்களென்ன,அடிதடிகளென்ன, ஆரவாரங்களென்ன, …சுருக்கமாகச் சொன்னால் எங்கள் எட்டடி வீட்டுக்குள் ‘கலகலப்பு’ நிரம்பி வழியும்!

கலகலப்பு மட்டும் இருந்தால் போதுமா? ஒரு கவர்ச்சி இருக்க வேண்டாமா? தொலைக்காட்சிப் பெட்டி இல்லாத வீடு சோபை இல்லாத வீடு என்று எழுத்தாளரே சொல்கிறாரே! ‘அது ஒன்றை வாங்குங் கள்’ என்று மனைவியும் வற்புறுத்த ஆரம்பித்தாள்.

என்ன பெயருள்ள பெட்டி வாங்கலாம் என்று நண்பர்களிடம் புலன் விசாரணை தொடங்கினேன். இதன் பலன் என்னவென்றால்…யார் செய்த புண் ணியமோ எனக்குப் பைத்தியம் பிடிக்காமல் தப்பிப் பிழைத்தேன். என் மூளையை அப்படிக் குழப்பி விட்டார்கள் நண்பர்கள்!

முதலை மார்க் ‘டி வி’-யை எடுத்துப்போடு. விலை கொஞ்சம் அதிகம் என்றாலும் அதற்குத் தக்கபடி உழைக்கும். மற்ற பெட்டிகள் எல்லாம் மகா மட்டம்’ என்பார் ஒரு நண்பர்.

‘முதலை மார்க் பெட்டியா வாங்கப் போகிறாய்? ஐயோ அது பாடாவதியாயிற்றே! வாங்கிய மூன்றாம் நாளே கெட்டுப் போகுமே வேண்டாம். நான் சொல்கிறபடி கேள். பேசாமல் உடும்பு மார்க் பெட்டியை வாங்கு. விலையும் மலிவு, படமும் தெளிவாயிருக்கும்’ என்று இன்னொரு நண்பர் கூறுவார்!

‘முதலை மார்க்கும் வேண்டாம். உடும்பு மார்க்கும் வேண்டாம். அதெல்லாம் படுமட்டம். பணம் பாழா கிப் போகும். நேரே நான் சொல்கிற கடைக்குப் போ. நான் சொன்ன தாகச் சொல். ‘பாம்பு மார்க்’ பெட்டி தருவான். வாங்கிக்கொண்டு வந்து வீட்டில் வைத்துப் பார். படமும் சத்தமும் என்ன அருமையாயிருக்கும் தெரியுமா? இன்றைக்கு மார்க்கட்டிலே கிராக்கியுள்ள ஒரே பெட்டி பாம்பு மார்க் பெட்டிதான்’ மற்றொரு நண்பரின் கூற்று இப்படி.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயருள்ள பெட்டி யைச் சிபாரிசு செய்தார்கள். ஒருவர் புகழ்ந்து பேசும் பெட்டியை மற்றவர் மகாப் பாடாவதி என்று இகழ்ந்து பேசுவார்.

இவர்களின் பேச்சைச் செவிமடுத்தால் தொலைக் காட்சிப் பெட்டியே வாங்க முடியாமல் போய்விடும். வாங்கினால், ஒரே ஒரு நண்பர் தவிர, மற்ற நண்பர் எல்லாருமே மன வருத்தப்பட நேரிடும்- ‘நான் சிபாரிசு செய்த பெட்டியை வாங்கவில்லையே’ என்று நல்ல வேளையாக, ஒரு புதிய பெயருள்ள பெட்டி வெளிவந்தது. நண்பர்களில் ஒருவர்கூடச் சிபாரிசு செய்யாத பெயர் அது! அந்தப் பெட்டிக்கு ‘ஆர்டர்’ கொடுத்துவிட்டு நிம்மதியாகத் திரும்பினேன்.

அழகான-எடுப்பான – கம்பீரமான—பளபளப்பான தொலைக்காட்சிப் பெட்டி ஒன்று எங்கள் வீட்டுச் சின்ன அலமாரிமீது ‘ஜம்’மென்று வந்து உட்கார்ந்து கொண்டது!

‘பொடிசு’களுக்கு ஒரே கொண்டாட்டம்! என் மனைவிக்கு ஏகப்பட்ட பூரிப்பு! எனக்கு எக்கச்சக்கமான பெருமை!

முதல் நாள்…எப்போது மணி ஆறு ஆகும் என்று ஆவலுடன் காத்துக் கிடந்தோம்.

பிள்ளைகள் கைகட்டி வாய் பொத்திப் பயபக்தி யோடு அமர்ந்திருந்தன. இப்படி ‘அதுகளை’ அமர்ந் திருக்கச் செய்யும் மகத்தான சாதனையை தொலைக் காட்சிப் பெட்டி ஒன்றினால் மட்டுமே சாதிக்க முடிந்தது!

எல்லாருடைய கண்களும் தொலைக்காட்சிமீது மொய்த்திருக்க, கடிகாரம் மணி ஆறடிக்க நான் பெட்டியின் விசையைத் திருகினேன். சில வினாடிகளில் படம் தோன்றியது. செய்தி வாசிக்கும் படம். வாசிப்பவர் வாய் மட்டுமே அசைந்தது. சத்தமே இல்லை. அதற்காக மற்றொரு விசையைத் திருகினேன். அப் போதும் சத்தமில்லை. அதற்குப் பதிலாக செய்தி வாசித்தவர் வெகு வேகமாக மேல்நோக்கிப் ‘படபட’ வென்று உருண்டோடினார்! தடுமாறிப் போய் இன் னொரு சின்ன விசையை அழுத்தினேன். என்ன ஆச்சரியம்! செய்தி வாசித்தவர் கோணல் மாணலாக நெளிந்து வளைந்து தேய்ந்து மறைந்தே போனார்! ‘பளிச் பளிச்’சென்று வெளிச்சம் மட்டும் இருந்தது. அதற்குப் பின்னணி ஓசையாக ‘சோ’வென்று மழை பொழிகிற இரைச்சல் பலமாகக் கேட்டது!

அதன் பின்னர் ஒவ்வொரு விசையையும் எப்படி யெப்படியோ திருகிப் பார்த்தேன். என் பாச்சா பலிக்கவில்லை. பெட்டியை மூடிவிட்டுப் பேசாமல் நாற்காலியில் சாய்ந்தேன்.

பிள்ளைகள் முகத்திலே ஏமாற்றம். பார்க்கப் பரிதாபமாயிருந்தது!

இல்லாளின் முகத்திலே ஆத்திரம். பார்க்கப் பயமாயிருந்தது!

‘போயும் போயும் கெட்டுப்போன பெட்டியை வாங்கினீங்களே’ என்று சீறினாள்.

மறுநாள் கடைக்காரன் வந்து பார்த்துவிட்டு பெட்டியில் கோளாறு எதுவும் கிடையாது என்று தெளிவு படுத்தினான். பெட்டியை இயக்குவதில் நான் தான் கோளாறு செய்திருக்கிறேன் என்ற குட்டை உடைத்து என்னை அசட்டு, விழி விழிக்க வைத்தான்!

அதிலிருந்து படம் தெளிவாகவும் சுத்தமாகவும் காட்சி தந்தது! சத்தமோ கணீர், கணீர்!

‘எங்கள் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியைப் போல் உண்டா’ என்று என் மனைவி அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள்-மன்னிக்கவும், வீட்டுக்காரிகளிடம் பெருமையடித்துக் கொண்டாள்.

என் பிள்ளைகள் ஆகாயத்தில் பறக்காத குறையாகப் பீத்திக்கொண்டன, அக்கம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளிடம்!

தொலைக்காட்சிப் பெட்டி வாங்கியதையும் அதன் அருமை பெருமைகளையும் எனக்குத் தெரிந்தவர்களின் காதுகளில் பேச்சுவாக்கில் சொல்லி வந்தேன்.

எங்கள் வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியின் புகழ் பரவியது! ஆனால், அதன் காரணமாக இப்படி யொரு தொல்லை விளையும் என்பது அப்போது தெரியவில்லை! தெரிந்தால் சேதியை வெளியே சொல்லியிருக்கவேமாட்டோம்!

கம்பத்துப்பக்கம் குடியிருக்கும் என் உறவினர் ஒருவர் அன்று கடை வீதியில் என்னைப் பார்த்துப் புன்னகை பூத்தார், அது பெரிய மர்மப் புன்னகை என்பது பிறகுதான் தெரிந்தது.

‘டெலிவிஷன்’ பெட்டி எடுத்திருக்கிறீங்களாமே!’ என்று கேட்டார். கேட்டார். அது ‘பொடி வைத்த கேள்வி’ என்பது அப்புறம்தான் புரிந்தது.

‘ஆமாம், எடுத்து ஒரு வாரம் ஆகுது. பிரமாதமான பெட்டி. படம் ரொம்பத் தெளிவு. எந்தப் பெட்டியிலும் இந்தமாதிரிச் சுத்தமாகப் படம் தெரியாது’ என்றேன்.

“கேள்விப்பட்டேன். அதிர்ஷ்டம் இருந்தால் தான் அந்தமாதிரிப் பெட்டி அமையும். சிலபேர் இரண்டாயிரம் மூவாயிரம் வெள்ளிக்குக்கூடப் பெட்டி எடுக்கிறாங்க. ஆனால், ஏதாவதொரு கோளாறு இல்லாத நல்ல பெட்டியாக அமைகிறதில்லை’ என்று குளிர்ச்சியாகப் பேசினார்.

அவர் ‘ஐஸ்’ வைக்கிறார் என்பது தெரியாமல், ‘அதெல்லாம் உண்மை தான். நீங்க நாளைக்குக் குடும் பத்தோடு எங்க வீட்டுக்கு வாங்க. தமிழ்ப் படம் இருக்கு. பார்க்கலாம்’ என்று அப்பாவித்தனமாக அழைப்பு விடுத்தேன்.

‘அதுக்கெல்லாம் நேரம் எங்கே கிடைக்குது?’ என்று அலுத்துக்கொண்டார். இது வெறும் ‘பிகு’ என்று அறியாத நான், ‘நேரம் கிடைக்கும்போது வாருங்களேன்’ என்று சொல்லித் தொலைத்தேன்.

மறுநாளே அவருக்கும் அவருடைய குடும்பத்துக்கும் நேரம் கிடைத்துவிட்டது!

எங்கள் குடும்பத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு பெரிதான அந்தக் குடும்பம் மாலை ஆறு மணிக்கே வருகை புரிந்தது.

எங்களுக்கே இடம் போதாத எட்டடி வீடு, தாராளமாக உட்கார்ந்தால் பத்துப் பேருக்கு இட மிருக்காது. அதிலே கிட்டத்தட்ட முப்பது உருப் படிகள் அமர்ந்து படம் பார்க்க வேண்டும், என்ன செய்வது?

விருந்தினர்க்கு முதலிடம் கொடுத்து உட்கார்ந்து படம் பார்க்கச் செய்தோம். நானும், என் மனைவியும், பெரிய பிள்ளைகளும் வீட்டுக்கு வெளியில் நடைபாதையில் கால்கடுக்க நின்று படம் பார்த்தோம்.

படம் முடியும்போது இரவு சுமார் பன்னிரண்டு மணியிருக்கும்.

படத்தையும், தொலைக்காட்சிப் பெட்டியையும் வெகுவாகப் பாராட்டிவிட்டு விருந்தாளிக் குடும்பம் வெளியேறிச் சென்றபின் வீட்டில் என் மனைவிக்கு ஒரு மணி நேர வேலை காத்திருந்தது.

எல்லாம் அவர்களுடைய பிள்ளைகள் செய்துவைத்த வேலை. சிறுநீரும்…மூக்குச் சளியும்.. கண்றாவியும்…!

முதல் நாளே இந்த அதிர்ச்சிமிக்க அனுபவம். முதல் வாரம் முழுவதும் இதே நிலைமை தான். மறு வாரம்-? அந்த அநியாயத்தை எப்படிச் சொல்வது?

மறுவாரம் அந்த உறவினர் குடும்பத்தோடு ஒரு பெரிய பட்டாளமே திரண்டு வந்தது படம் பார்க்க! அவருடைய அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களாம்! வந்ததும், ‘இவர்களெல்லாரும் சொந்தக்காரர்களைப் போல் பழகியவர்கள், ரொம்ப நல்லவர்கள்’ என்று அறிமுகம் வேறு செய்துவிட்டார்!

‘அப்படியா? வாங்க வாங்க!’ என்று வரவேற்ப தைத் தவிர எனக்கு வேறு வழி தெரியாமல் போய் விட்டது.

இந்தக் கூட்டத்தைப் பார்த்துப் பயந்து போனதால் கைகள் உதறல் எடுத்து அடுப்பங்கரையில் என் மனைவி பானை சட்டிகளைத் ‘தடால் மடால்’ என்று போட்டு உடைத்துக்கொண்டிருந்தாள்!

எதையுமே பொருட்படுத்தாமல் அவர்கள் அத்தனை பேரும்—சுமார் ஐம்பது பேர் இருக்கலாம்-‘திமு திமு’வென்று எங்கள் சின்னஞ்சிறு எட்டடி வீட்டிற்குள் நுழைந்தார்கள். நெருக்கியடித்துக்கொண்டும், ‘காச் மூச்’சென்று சத்தமிட்டுக்கொண்டும் உட்கார்ந்தபடி படம் பார்த்தார்கள்!

‘ஒரே புழுக்கமாயிருக்கு. விசிறியைச் சுத்த விடுங்க’ என்று இடையில் அவர்களில் ஒருவர் கேட்டுக் கொண்டபடி அதையும் சுழலவிட்டேன்.

ஏதோ தெரியாமல் வந்துவிட்டார்கள். நம் வீடு இவ்வளவு சிறியது என்பது தெரிந்திராது. இட நெருக்கடியைக் கருதி இனிமேல் வரமாட்டார்கள் என்று நாங்கள் நினைத்தது இமாலயத் தப்பு ஆகி விட்டது.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் வந்து படம் பார்க்கத் தலைப்பட்டார்கள்!

மாலை ஆறு மணிக்கெல்லாம் ரத கஜ துரக பதாதி களான அந்தப் பட்டாளம் எங்கள் வீட்டுக்குப் படை எடுப்பதும், இரவு பதினொரு மணிவரை அவர்களின் முற்றுகை நீடிப்பதும் வாடிக்கையாகிவிட்டது!

வீடு நிரம்பக் கூட்டம் பெருகி விடுவதால், எங்க ளுக்கு ஏற்படும் அசௌகரியம் கொஞ்ச நஞ்சமல்ல.

சின்னக் குழந்தைகளுக்கு உணவு புகட்ட முடி யாமல் என் மனைவி ஒரு பக்கம் தவிப்பாள்.

பெரிய பிள்ளைகள் வீட்டுப் பாடம் படிக்க வசதி யில்லாமல் கைவிட்டன. அதன் பலனாகப் பள்ளிக்கூடத்தில் பெஞ்சுமேல் ஏறி நிற்க நேர்ந்து அழுதன!

நேரத்தோடு சாப்பிடாமலும் காலா காலத்தில் தூங்காமலும் தடுமாறிப்போய் நான் வேலை நேரத்தில் தூங்காமல் தூங்கி விழுந்து அதிகாரிகளின் கோபத்துக்கு அடிக்கடி ஆளானேன்!

நானாகக் கூப்பிட்டுத் தொலைத்த உறவினர் குடும்பம், முகத்தைச் சுளிக்கக்கூடத் தைரியமில்லை-அல்லது தெரியவில்லை எங்களுக்கு!

‘தமிழ்ப்படம் இருக்கும்போது மட்டும் வந்து பார்க்கச் சொல்லுங்க’ என்று என் மனைவி சொல்கிறாள். அதை அவர்களிடம் சொல்வதற்குத் துணிவில்லையே!

‘நேரம் கிடைக்கும்போது வாருங்களேன்’ என்று தான் முன்பு நான் அவரிடம் சொன்னேன். அவருக்குத் தெரிந்த இன்னுஞ் சில குடும்பங்களுக்கும் அன்றாடம் இவ்வளவு தாராளமாக நேரம் கிடைக்கும் என்று முன்பு தெரியவில்லையே!

ஆகாயத்தில் போன சனியனை ஏணி வைத்து இறக்கிக்கொண்ட கதையாகிவிட்டதே…!

என்ன செய்வது ஒன்று எங்களுக்கு ஒன்றுமே புரியாமல் விழிக்கிறோம். இந்தக் கூட்டத்திடமிருந்து எப்படித் தப்புவதென்று அல்லும் பகலும் சிந்தித்துக் குழம்பித் தவிக்கிறோம்.

டெலிவிஷனைத் திரும்பக் கடைக்காரனிடமே கொடுத்துவிடலாம் என்றால், ‘தவணைக்கு எடுத்த பெட்டி போலும், ஒழுங்காகப் பணம் கட்டாததால் தூக்கிப் போய்விட்டான்’ என்ற ஏளனப் பேச்சு எழுமோ என்றும் அச்சமாயிருக்கிறது.

எதற்காகத் தொலைக்காட்சியைக் கண்டு பிடித்தார்கள்? எதற்காக இங்கே அதைத் தொடங்கினார்கள்? நாங்கள் இப்படிக் கவலைப்பட்டுக் கலங்கவேண்டும் என்பதற்காகவா?

இந்தப் பொல்லாத ‘ஆக்கிரமிப்பாளர்கள்’ இடமிருந்து நாங்கள் தப்பிப் பிழைக்க யாராகிலும் ஒரு வழி சொல்லுங்கள்!

– மீன் வாங்கலையோ, முதற் பதிப்பு: 1968, மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *