அவரோட ராத்திரிகள்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: November 12, 2021
பார்வையிட்டோர்: 18,006 
 

‘அவரோட ராத்திரிகள்’ – இந்தத் தலைப்பைப் படித்துவிட்டு ஐ.வி.சசியின் அவளோட ராத்திரிகள் மலையாள அடல்ட்ஸ் – ஒன்லியின் சாயலை எதிர்பார்த்து விகல்பமான எண்ணத்தோடு வாசிக்க வருபவர்கள் ஏமாற்றமடைவீர்கள்.

தலைப்பில் உள்ள அவர் மயிலாப்பூரில் உள்ள எங்களது காலனியில் முன்பு குடியிருந்த திருவாளர் ரங்கபாஷ்யம்தான். நம்முடைய ரங்கபாஷ்யம் ராத்திரி நேரங்களில் உறங்குவது இல்லை. காரணம், கள்வர் பயம். எவருடைய இல்லத்துக்கு அதிக தடவை திருடன் வந்துள்ளான் என்று ஒரு கணக்கு எடுத்துப் பார்த்தால் உலக சாதனைப் புத்தகமான ‘கின்னஸில்’ ரங்கபாஷ்யத்தின் பெயர் சேர்க்கப்பட்டாக வேண்டும். கேவலமான கறிவேப்பிலை திருடனில் ஆரம்பித்து ‘கன்னம் வைத்துத் திருடும் கொள்ளைக்காரர்கள்’ வரை பலதரப்பட்ட திருடர்கள் இவர் வீட்டுக்கு விஜயம் செய்தாகிவிட்டது.

எனக்குத் தெரிந்து ரங்கபாஷ்யம் வீட்டுக்கு இதுவரை வருகை தராதவர் பூலான்தேவி மட்டும் தான்!

பூலான் தேவி சரண் அடைந்த செய்தி கேட்ட சந்தோஷத்தில் மனிதர் காலனியில் உள்ள அனைவருக்கும் இனிப்பு வழங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். ஒருவேளை ரங்கபாஷ்யம் போன ஜன்மத்தில் இருளன், ஒற்றைக் கண் காட்டேரி போன்ற ஏதாவது பெயரில் பயங்கரமான தீவட்டிக் கொள்ளைக்காரனாக இருந்து பல அப்பாவிகள் சொத்தைச் சூறையாடியதால் இந்த ஜன்மத்தில் அவரைத் தெய்வம் நின்று கொல்கிறதோ என்னவோ..?

எந்த நேரமும் எந்த இடத்திலும் திருடன் ஒளிந்திருப்பான் என்பது ரங்கபாஷ்யத்தின் அசைக்க முடியாத வாதம். அவரோடு ஒரு நாள் முழுவதும் இருந்து அவரது ‘திருடனைத் தவிர்க்கும் உபாயங்க’ளைக் கவனிப்பவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். பீரோவில் பணம் வைத்தால் திருட்டுப் போய்விடுமே என்ற பயத்தில் கைவசம் காலணா காசு கூட அவர் வைத்துக் கொள்வதில்லை. பிச்சைக்காரனுக்குக்கூட ‘செக்’ வெட்ட வேண்டிய நிலை!

கறிகாய்க்காரியாக இருந்தாலும் சரி. குடை ரிப்பேர்க்காரனாக இருந்தாலும் சரி; எல்லோரிடமும் அக்கவுண்ட் வைத்துக்கொண்டு மாதக் கடைசியில் தான் அவர் ‘செக்’ விநியோகிப்பார்.

தினமும் கனகாரியமாக ‘பாங்க்’குக்குச் சென்று தனது அக்கவுண்ட்டிலிருந்து அன்றைய செலவுகளான பஸ் சார்ஜ் ‘லஞ்ச்’ நேர டிபன், மனைவிக்கு மல்லிகைப்பூ, மகனுக்கு சிலேட்டு பல்பம் முதலியவற்றுக்குத் தேவையான பணத்தை பாங்க்கிலிருந்து எடுத்துக்கொண்டு ஆபீசுக்குச் செல்வது வழக்கம்.

அதுவும் எப்படி…. அந்தப் பணத்தை எவனும் ஜேப்படி அடித்துவிட முடியாதபடி பர்ஸை மேனியில் அவருக்கு மட்டுமே தெரிந்த மர்ம இடங்களில் பதுக்கி வைத்துவிடுவார். கஸ்டம்ஸ் அதிகாரிகள் கூட கண்டு பிடிப்பது கஷ்டம்.

திருட்டுப் போவதைத் தவிர்ப்பதற்காக ரங்கபாஷ்யம் கையாளும் முன்னெச்சரிக்கைகள் நமக்கு முன் ஜாக்கிரதை முத்தண்ணாவை நினைவுபடுத்தும்.

சாதாரணமாக நமது வீட்டில் உள்ள கதவுகள் உள்புறமாகத் திறந்து கொள்ளும். ரங்கபாஷ்யம் ஸ்பெஷலாகத் தச்சனிடம் சொல்லி, கதவுகளை வெளிப்புறம் திறக்குமாறு அமைத்துக் கொண்டிருக்கிறார்.

கதவைத் தட்டுபவன் கள்வனாக இருக்கும் பட்சத்தில் ரங்கபாஷ்யம் படாரென்று கதவை உள்ளிருந்து வெளிப்புறம் திறந்து திருடனைச் சுவரோடு சுவராகத் தேய்த்துவிடுவார்.

ரங்கபாஷ்யத்தை மிகவும் அறிந்தவர்கள் அவர் வீட்டுக்கு வந்தால் கதவைத் தட்டி விட்டு உடனே தொலைவாக ஓடிவிடுவது வழக்கம். இந்தக் கதவு ஆபத்துக்குப் பயந்து விருந்தாளிகள் பலர் வருவதில்லையாதலால் ரங்கபாஷ்யத்துக்கு வீண் செலவுகளும் மிச்சம்.

சாதாரண பூட்டைப் போட்டால் குடைக்கம்பியால் திறந்துவிடுவார்கள் என்ற பயத்தில் பார்த்தசாரதி பெருமாள் கோவில் ஆலய நிர்வாகிகளிடம் விசாரித்துப் பிரமாண்டமான சைஸில் பூட்டு தயாரித்து வைத்திருக்கிறார் ரங்கபாஷ்யம்.

அத்தனை பெரிய பூட்டைப் போட்டுப் பூட்டியும் நம்பிக்கை வராமல் ரங்கபாஷ்யம் ஒவ்வொரு முறை வெளியே செல்லும் போதும் பூட்டைப் பிடித்துத் தொங்கி அரைமணி நேரம் ஊஞ்சல் ஆடிவிட்டுச் சரி பார்ப்பார்.

இரவு நேரங்களில் வீட்டின் ஜன்னல்களுக்குக்கூட ரங்கபாஷ்யம் பூட்டு போடுவதாக ஒரு வதந்தி நம்பகமான வட்டாரங்களில் உலவுகிறது.

இத்தனை பாதுகாப்புகளையும் மீறித் திருடன் வந்தால், அவன் திருடுவதற்கு ரங்கபாஷ்யத்தின் வீட்டின் உள்ளே ஒரு துரும்புகூடக் கிடையாது. தட்டுமுட்டுச் சாமான்களில் ஆரம்பித்து தங்கம், வெள்ளி வரை அனைத்தையும் ரங்கபாஷ்யம் ஒரு பிரபல வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் போட்டு வைத்திருக்கிறார். ஒரு கல்யாணம் கார்த்திகை என்றால் கூடப்பட்டுப்புடவை கட்டிக்கொள்ள ரங்கபாஷ்யத்தின் மனைவி வங்கிக்குச் செல்ல வேண்டும்.

சைக்கிள் திருடர்களுக்குப் பயந்து வீடு திரும்பியவுடன் தன் சைக்கிளின் இரண்டு டயர்களிலும் உள்ள காற்றைப் பிடுங்கி விட்டுவிடுவார். அப்படியும் விடாக் கொண்டனாகத் திருட வரும் போது சைக்கிள் ‘பம்ப்’போடு வந்து டயருக்குக் காற்றடித்துத் திருடும் திருடர்கள் சீட்டில் ஏறி அமர்ந்தவுடன் அலறிப் புடைத்துக் கொண்டு கீழே குதித்து சைக்கிளைப் போட்டுவிட்டு ஓடிவிடுவார்கள்.

ரங்கபாஷ்யம் சமயோசிதமாக சைக்கிள் சீட்டின் அடியில் கண்ணாடித் துண்டுகளைப் பரப்பி வைத்திருப்பது தான் காரணம்!

இருட்டாகவும், அதே சமயத்தில் குறுகலாகவும் இருக்கும் தெருக்கள், புதர் மண்டிக் கிடக்கும் மைதானங்கள் போன்ற இடங்களைக் கூடிய மட்டும் ஒதுக்கிவிடுவார். அப்படி ஒரு வேளை அம்மாதிரி இடங்களுக்குச் செல்லவேண்டிய சந்தர்ப்பங்களில் தனியாகச் செல்லாமல் நண்பரோடு செல்வார். அம்மாதிரி சமயங்களில், பதுங்கியிருக்கும் திருடர்களைப் பயமுறுத்துவதற்காக அனாவசியமாக நண்பரிடம் டெபுடி கமிஷனர், சப்-இன்ஸ்பெக்டர், கான்ஸ்டேபிள் போன்ற வார்த்தைகள் நொடிக்கு ஒரு தரம் உரக்கச் சொல்லிக்கொண்டே வருவார். பார்ப்பவர்களுக்கு ரங்கபாஷ்யத்தின் நண்பர் டமாரச் செவிடோ’ என்று நினைக்கும் அளவுக்கு உரத்துப் பேசுவார். பஸ், டாக்ஸி, ஆட்டோ ஸ்டிரைக் காலங்களில் இரவில் அலுவலகத்திலிருந்து தனியே நடந்து செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் ஜன சந்தடியற்ற வீதிகளை விலக்கி, நடக்கும் சிரமத்தைப் பார்க்காமல் பரபரப்பான பிரதான வீதிகளின் வழியாக வருவதுதான் ரங்கபாஷ்யத்துக்கு வழக்கம்.

நாமெல்லாம் அலுத்துக் கொள்கிற அண்ணா சாலை ஊர்வலங்கள் ரங்கபாஷ்யத்துக்கு அல்வா துண்டு போல இனிக்கும். ஊர்வலத்தோடு ஊர்வலமாகக் கலந்து நிம்மதியாக வீடு வரலாம் அல்லவா?

ஒருமுறை நவராத்திரியின் போது பொம்மைகளைப் பரணிலிருந்து எடுக்கும் போது (பொம்மைகளைப் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்துக்கொள்ள பாங்க் மறுத்ததால்…) ஒருவேலை பரணில் பதுங்கியுள்ள திருடன் பாய்ந்துவிடுவானோ என்ற அச்சத்தில் ரங்கபாஷ்யம் போலீஸ் பந்தோபஸ்தைக்கூட நாடியதாகக் கேள்வி.

ஏன் என்றே தெரியவில்லை, ரங்கபாஷ்யம் குடி வருவதற்கு முன்பு எங்கள் காலனியில் அவ்வளவாகத் திருட்டுப் பயம் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் ரங்கபாஷ்யம் மயிலாப்பூருக்குக் குடி வந்த காரணமே, தாம் முன்பு இருந்த பாலவாக்கத்தில் திருட்டுப் பயம் அதிகமாக இருந்தது என்பதால் தான்.

பாலவாக்கத்தில் இவர் இருந்த போது ஒரு நாள் அலுவலகத்திலிருந்து திரும்பியவர் வாசல் கதவு விரிய திறந்து கிடப்பது கண்டு உள்ளே ஓடியிருக்கிறார்.

நடு ஹாலில் மனைவியும், இரு மகள்களும் வாயில் கர்சீப்போடு கை கால்களில் கயிறு கட்டப்பட்டு ஒரு மூலையில் தஞ்சாவூர் பொம்மை போல புவியீர்ப்புத்தானத்தை எதிர்த்துப் பக்கவாட்டில் தொடர்ந்து ஆடிக்கொண்டிருப்பதைப் பார்த்து வாயைப் பிளந்தவர், மூத்த மகளின் கண் ஜாடை காட்டிய தனது படுக்கை அறையில் சப்தம் போடாமல் நுழைந்திருக்கிறார்.

அங்கு ஒரு திருடன் சுத்தமாக சம்மணமிட்டு அமர்ந்து பீரோவிலிருந்து எடுத்துப் போட்ட பணம், நகைகள், பாத்திரங்களைச் சாவதானமாகப் பிரித்து, தனித்தனியே கூறு போட்டு ஏதோ மறந்துவிட்டு, வைத்ததை எடுத்துச் செல்ல வந்தவன் போல சுவாரஸ்யமாகத் திருடிக் கொண்டிருந்தான். ரங்கபாஷ்யமும் விடாமல் அவன் எதிரில் சென்று அமர்ந்து, “ஏம்பா திருடா, உனக்கே இது நல்லா இருக்கா? இப்படி பட்டப் பகல்ல அநியாயம் பண்ணறியே?” என்று வினவ… அவனும் முகத்தில் எந்தவித அதிர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல், “ஸாரி சார்…. நீங்க வந்ததை நான் கவனிக்கலை… மன்னிச்சுடுங்க” என்று கூறிவிட்டு, எதையும் தொடாமல் நைஸாக நழுவிவிட்டான். இதற்கு மேலும் பாலவாக்கத்தில் குடியிருந்தால் தான் எப்பொழுது ஆபீசிலிருந்து திரும்பினாலும் மனைவியையும் மகள்களையும் எவனாவது மூட்டை கட்டி வைத்துவிட்டு ஒய்யாரமாகக் களவாடிக் கொண்டிருப்பார்கள் என்ற பீதியில் பரபரப்பான மயிலாப்பூருக்கு வந்தார்.

இவர் வந்த நாளிலிருந்து இங்கும் திருட்டு ஜாஸ்தியாகிவிட்டது. வந்த முதல் நாளே எங்களின் இரவு தூக்கத்தை இவரது, “திருடன், திருடன்” என்கிற தீனக்குரல் தான் கலைத்தது.

எழுந்து வந்து பார்த்தால், இவர் தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு கையில் இவரைவிட உயரமாக ஒரு கம்பை வைத்துக் கொண்டு (திருடனை அடிப்பதற்கா, இல்லை அவனுக்குப் பயந்து போல்வால்ட் ஜம்ப் செய்து தப்பிப்பதற்கா. தெரியவில்லை….) “திருடன் திருடன்” என்று கத்திக் கொண்டிருந்தார். மறுநாள் காலை விசாரித்ததில் இருவர் வீடுகளில் சொக்காய் நிஜார்கள், கொல்லைப்புறம் போட்டிருந்த வெந்நீர் தவலை, மரத்தில் காய்த்த இரண்டு பலாப்பழங்கள் திருட்டுப் போனது தெரிந்தது.

இப்படிச் சாதாரணமாக ஆரம்பித்த திருட்டுப் பயம், படிப்படியாக விசுவரூபமெடுத்து எங்கள் காலனியில் உள்ளவர்களைக் கதிகலங்க வைத்தது. ரங்கபாஷ்யத்தைப் போல அத்தனைச் சாமான்களையும் வங்கியின் பாதுகாப்புப் பெட்டகத்தில் போட்டுவிட்டு நம்மால் வேட்டியும் சொக்காயுமாக எளிமையாகத் திரிய முடியவில்லையே என்ற ஏக்கம் எங்களை வாட்டியது.

திடீரென்று ஒரு நாள் திருவாளர் ரங்கபாஷ்யம் தான் புது வீடு சொந்தமாகக் கட்டிக்கொண்டு கே.கே.நகருக்குச் செல்வதாகக் கூறினார். கற்பூரத்தை அணைத்துச் சாத்தியம் செய்கிறேன். அவர் சென்ற நாளிலிருந்து இன்றுவரை எங்கள் காலனியில் எதுவும் திருட்டுப் போகவில்லை.

பி.கு: ரங்கபாஷ்யம் கே.கே நகரில் கிரகப்பிரவேசம் நடத்திய அன்று வெளியான பத்திரிகைகளில் கீழ்க்கண்ட செய்தி பிரசுரமாகியிருந்தது:

‘கேகே நகரில் வழிப்பறி. கே.கே நகருக்கருகே சைக்கிளில் வந்த திருடர்கள்…’

– ஃபைவ் ஸ்டார் பலகாரக் கடை!, விகடன் பிரசுரம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *