கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்  
கதைப்பதிவு: April 8, 2022
பார்வையிட்டோர்: 61,335 
 

“இது உண்மையாக நடந்த சம்பவம்பா. ரொம்ப வருசங்களுக்கு முன்னே நான் வேலை பார்த்த ஊரில் நடந்தது.” —

என்ற பீடிகையோடு பக்கத்து வீட்டு பெரியவர் தான் சொல்லப் போகிற கதையின் அஸ்திவாரத்தை பலமாகப் போட்டார். சுற்றிலும் எங்கள் குடும்பத்தினர்கள் உட்கார்ந்திருக்கிறோம். அவர் கதை சொல்கிற போது, அது ஒரு நாடகம் பார்க்கிற மாதிரியே பாவங்களோடு இருக்கும். நடுவுல தெருவால போற நாய், தோட்டத்தில பறக்கிற பட்டாம்பூச்சிகள், தட்டான்கள், பையனுங்க ஓட்டிக்கிட்டு போற பனங்குடுக்கை வண்டிங்க, அவங்க பேசிக்கிட்டு போகிற, ஒவ்வொரு எழுத்துக்குக்கு முன்னாலும் `க’ போட்டு பேசும் காகா பாஷை என்று ஒன்று தவறாது. எல்லாம் விலாவாரியாக வந்து விழும்.. தனிக்கட்டை, ஓய்வு பெற்ற அரசு ஊழியர். ஒற்றைநாடி சரீரம். அவருக்கு ஒரே பிள்ளை. பொறியியல் பட்டதாரி.

இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கிற சராசரி பொறியியல் பட்டதாரிகளின் வேட்கைக் கனவு போல, அல்லது ஒரு விடியல் போல, சாஃப்ட் வேர் அடிமையாக அமெரிக்க துரைக்கு ஊழியம் பார்க்கப் போகிறேன் என்று, தன் குடும்பத்துடன் அமெரிக்க வாசம் போய்விட, ஹும்! அமெரிக்காவில் மாடு மேய்த்தால் கூட கை நிறைய டாலர் சம்பளம். பாவம் இங்கே தனிமையில் ஏற்படும் வெறுமைக்கு தீர்வாக ஸ்கைப்பில் பேரன் பேத்திகளின் மின்பிம்பங்களுடன் கொஞ்சிக் கொண்டு, போதாமைக்கு எங்களுடன் சிநேக உறவுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டு அடிக்கடி இங்கே வந்து உட்கார்ந்து விடுவார். பாவம் மனிதருக்கு எந்நேரமும் நிறைய மனிதர்களுடன் நிறைய பேச வேண்டும். ஆனால் வாய்த்தது தனிமை. இன்றைக்கு ஞாயிற்றுக் கிழமையானதால் எங்கள் வீட்டில் எல்லோரும் இருந்தோம்.. எந்நேரமும் ஃப்ரண்ட்ஸ் ஃப்ரண்ட்ஸ் என்று டூ வீலரை எடுத்துக்கிட்டு சுத்தும் அர்ஷித்தும், ஆதித்யாவும், சூர்யா,வும் கூட அதிசயமாக வீட்டிலிருந்தார்கள். பக்கத்து தெருவிலிருக்கும் எங்க பெண் வயிற்று பேரன் ஆத்ரேயனும், பேத்தி வினோதினியும் கூட வந்திருந்தார்கள். என்னவர் மூன்றாம் தடவையாக ஹிண்டுவில் இண்டு இடுக்குகளில் விட்டுப் போனவற்றை மேய்ந்துக் கொண்டிருந்தார். சரி..சரி..உஷ்! பெரியவர் கதை சொல்ல ஆரம்பிச்சிட்டார். கப்சிப். தாத்தா எல்லாரையும் ஒருமுறை பார்த்துக் கொண்டார்.

“ வந்தவாசி பக்கத்தில எச்சூருன்னு ஒரு ஊருப்பா. சின்ன கிராமம். மொத்தமே அஞ்சாறு தெருக்கள்தான். அங்க ஆட்டுக்காரன் பெருமாள்னு ஒருத்தன் இருந்தான். அவனுக்கு சொந்தமான ஆட்டுப் பட்டியில இருந்து ராத்திரியில அடுத்தடுத்து தொடர்ச்சியா ஆடுங்க மாயமா போவ ஆரம்பிச்சிது.. யாருக்கும் காரணம் புடிபடல. பூட்டிய படலை பூட்டியபடியே இருக்க காணாம போவுதுன்னா இன்னா அர்த்தம்?. செய்வினையாய் இருக்கும்னு சிலர் அபிப்பிராயப் பட்டாங்க. முதல் நாள் அன்னைக்கு நடுராத்திரி. அப்பத்தான் பெருமாளு டெண்ட்டு கொட்டாய்ல பராசக்தி படத்த பார்த்துப்புட்டு காக்கா பாட்டை பாடிக்கிட்டே வந்து பாயை விரிச்சி படுத்திருக்கான். திடுக்குனு ஆடுங்க அலற்ற சத்தம் கேட்டிருக்கு. உடனே வீட்டிலே எல்லாரும் தடி தாம்புகளுடன் ஓடிப் போய் லைட் அடிச்சி பார்த்திருக்காங்க. ஆடுங்க மிரட்சியுடன் இங்குமங்கும் தாவுதுங்க.

“டேய்! பெருமாளூ! குள்ளநரி உள்ள பூந்துட்ச்சா பார்றா. வுடாத அதும் மண்டைய பொள. டேய் சின்னவனே! பாம்பு கீம்பு இருக்கப் போவுது ஜாக்கிரதை. ச்சீ! தடிய கையில எட்றா கயித.”—பெருமாளின் ஆத்தாக்காரி வெளியே இருந்தபடி கத்திக் கொண்டே இருக்கிறா. பெருமாளும் அவன் தம்பிமார்களும் சுத்திசுத்தி தேடி பார்த்துப்புட்டு ஐயோன்னு தலையில கையை வெச்சிக்கிட்டாங்க.

“உருப்படில ஒண்ணு குறையுது. கெரிச்சல் குட்டிய காணம்மா.”——கிழவி உடனே

ஒப்பாரிக்கு குரலெடுத்தாள். விஷயத்தை கேள்விப்பட்டு அந்நேரத்துக்கே அவனுடைய பங்காளிங்க, கொண்டான் குடுத்தான்னு ஒரு இருபது முப்பது பேர் ஓடி வந்து அக்கம் பக்கத்தில தேடினாங்க. தெரு கோடி வரைக்கும் கூட ஓடிப்போயி பார்த்துட்டு வந்தாங்க. எதுவும் புலம் தெரியல. என்னாச்சோ தெரியலியே. ராத்திரியில எங்கேன்னு தேட்றது?. அன்னைக்கி குழப்பத்தோடவே ராத்திரி பொழுது கழிஞ்சிது..

இது நடந்து மூணாம் நாளு மறுபடியும் ராத்திரி பதினோரு மணிக்கு இன்னொரு ஆடும் போயிட்டுது. இந்த தடவை போனது உருப்படி பெருசு. சில்லியாடு, கிடா. எப்படியும் எட்டு கிலோவுக்கு மேல தாளும். “அது என்ன உருப்படி உருப்படின்னு சொல்றீங்க தாத்தா?.”

“ ஆடு மேய்க்கிறவங்க ஆடுங்களை உருப்படின்னுதான் சொல்றது அவங்க பாஷை. அதுக்கடுத்து மூணாம் நாளு இன்னொரு ஆடும் போயிடுச்சி. அப்புறந்தான் விஷயம் தீவிரமாச்சி. பங்காளிங்கள்லாம் ஒண்ணு சேர்ந்துட்டாங்க. எல்லாருக்கும் ஆடு வளர்ப்புதான் தொழிலு. கூடவே வெள்ளாமை. ஆராய்ஞ்சிப் பார்த்தா மூணு நாளுக்கு ஒரு முறைதான் இந்தத் திருட்டு நடந்து வருது. அடுத்த மூணாம் நாள் ராத்திரி வரப்போற திருடனை புடிச்சிட்றதுன்னு கங்கணம் கட்னாங்க. அன்னைக்கு ராத்திரி பத்து மணிக்கு மேல ஒவ்வொருத்தனும் மூணுசெல்லு டார்ச் லைட்டு, உருட்டுக் கட்டை, கத்தி ன்னு தயாராகி, கருப்பு துப்பட்டாவை போர்த்திக்கிட்டு ஆட்டு பட்டிக்கு எதிர்ல கிணத்துக்குப் பின்னால கமுக்கமா பீடி, வத்திப்பொட்டியோட பதுங்கினாங்க.. யாரும் ஒரு நிமிஷம் கண்ணை மூடல. பார்த்துப் பார்த்து ராத்திரி ரெண்டு மணியும் தாண்டி போச்சி. கொண்டு வந்த பீடிகளை இழுத்துப் போட்டாச்சி. வெள்ளாமை விஸ்தீரணம் ஜாஸ்தியாக இருக்கிற வேலு கவுண்டர் பிள்ளைங்க மூணு பேரும் அந்நேரத்துக்கு தண்ணீர் பாய்ச்ச கழனிக்கு போவுதுங்க. எல்லாருக்கும் தூக்கம் சொக்குது. ஆனா எதுவும் நடக்கல. எதிரி உஷாராயிட்டான் போலன்ற நெனைப்பு வர லேசா கண்ணை இழுத்தும் போச்சி. ப்பே….பே..பே..ஏ..ஏ திடீர்னு ஆடுங்க வீரிட்டு கதறும் கூச்சல் கேட்டது.

டாய்..!டாய்…! கூச்சல் போட்டபடி ஓடிப்போய் சுத்தி வளைச்சிட்டாங்க. ஒவ்வொருத்தனும் தடியை தயாராக ஓங்கியபடிக்கு டார்ச்சுகளை அடிச்சவங்க, ஐயோ! அப்படியே நின்னவங்க நின்னவங்கதான். ஆ…ஆ…..ஆ.ஆ..அதிர்ச்சியில் ஒருத்தரும் இப்படி அப்படி அசையல. குபீர்னு நெஞ்சை அடைச்சிடுச்சி. ஓட்றதுக்கு கை, காலுங்க ஒத்துழைக்கல. குப்னு காதடைக்குது. இவங்க கண்ணெதிர்ல நாலடி தூரத்தில் சேம்பாட்டுக் குட்டியின் கழுத்தை கவ்வியபடி ஐயய்யோ! ஆ.ஆ..அது..அது..புலி…புலி.. இல்லையில்ல சிறுத்தைப்புலி. எம்மா பெருசு?. கண்ணுங்க ரெண்டும் பல்பு மாதிரி மினுக்குது. பார்த்துக்கிட்டு இருக்கும் போதே படலையை ஒரே பாய்ச்சல்ல தாண்டி, அவங்களை உரசுறமாதிரி ஓடுச்சி. ஐயோ! ஆறடி நீட்டு, இடுப்பு உசரம். பார்த்த அந்த செகண்ட்ல அத்தனை பேரும் மிரளு வந்தாப்பல வெறைச்சிக்கிட்டு நிக்கிறான். மயக்கம் போட்டு விழாத குறை. சிலர் பெப்.பெப்.பெப்..பே.. என்று உளற ஆரம்பிச்சானுங்க. ரெண்டு பேர் பயத்தில உச்சா போயிட்ட விஷயம் கூட நடந்து போச்சி. . அது சாவகாசமா குட்டியை கவ்வியபடி போய்கிட்டே இருக்கு. அப்புறம்அவங்க மூலைக்கொருத்தராக சிதறி ஓடி போட்ட கூச்சலில் ஊர் முழிச்சிக்கிச்சி. இப்படி வெட்ட வெளியில் சிறுத்தைப்புலியை அதுவும் இவ்வளவு கிட்டத்தில் பார்த்ததில்லை. அது இம்மாம் பெருசா இருக்கும்னு கூட தெரியாது. அந்த நாள்ல அந்த பக்கங்கள்ல யாரும் சிறுத்தைப்புலியை நேரில் பார்த்ததில்லை. புஸ்தகங்களிலும், சினிமாவிலுந்தான் பார்த்திருப்பாங்க.

இருக்கப் பட்டவங்களும், மெட்ராஸ்ல கொள்வினை குடுப்பினை உள்ளவங்களுந்தான் ஜுவில் கூண்டில் சிறுத்தைப்புலியை பார்த்திருக்காங்க. அதுகூட இம்மா பெருசு இல்லை. இப்பத்தான் மனுஷன் காடுங்களை அழிச்சி அதுங்க எடங்கள்ல வூடு கட்டிப்புட்டான். அதோட காலக் கிரமங்கள்ல பெய்யும் மழையும் அடிக்கடி பொய்த்துப் போவுது. அதனாலதான் யானைகளும், புலிகளும், சிறுத்தைகளும், சிறுத்தைப்புலிகளும், காட்டெருமைகளும் தண்ணீரையும், தீனியையும் தேடி அப்பப்ப காட்டு ஓரங்களில் இருக்கிற ஊருங்களுக்கு வர்றது அன்றாட நிகழ்ச்சியா ஆயிடுச்சி. அப்பல்லாம் எதுவும் வராது. அவங்கவங்க எடத்தில அவங்கவங்க பொழப்புன்னு இருந்த காலம்..

அந்த நாள்ல இம்மா ஜனங்களும் கிடையாதுப்பா, ரோட்ல இம்மா வண்டிகளும் கிடையாது. எல்லாம் சைக்கிள்தான். ரோட்ல எப்பவோ ஒண்ணு ரெண்டு ஹீரோ மெஜஸ்டிக் வண்டிங்க ஓடும். இருக்கப் பட்டவங்கள்ல யாரோ ஒருத்தன்தான் புல்லட், ஜாவான்னு வெச்சிருப்பான். சரி விஷயத்துக்கு வர்றேன் இன்னும் பெருமாள் வீட்டு ஆளுங்களுக்கு உதறல் நிக்கல. ஐயோ! அதுங்கிட்டயிருந்து எப்பிடி நம்ம ஆடுங்கள காப்பாத்தப் போறோமோ?. அது ருசி கண்டுட்ட புலியாச்சே. திருப்பித் திருப்பி நம்ம பட்டிக்குதான் வரும். வீட்ல எல்லாருக்கும் கிலி வந்துட்டுது. புலம்பித் தள்றாங்க. மறு நாள் பக்கத்து ஊரான புரிசை கிராமத்தில ராத்திரி எட்டு மணிக்கு தெருவில சிறுத்தைப் புலி ஓடியதை நிறைய பேர் பார்த்துட்டு பயத்தில கத்தியிருக்காங்க.

அக்கம் பக்கம் ஊருங்கள்ல விஷயம் கிடுகிடுன்னு பரவ ஆரம்பிச்சிது. ஊருக்குள்ள புலி உலாத்துதுன்னு தெரிஞ்சப்புறம் ஊர்ல யாரால நிம்மதியா தூங்க முடியும்?. யாருக்கும் விஷயம் புரியல. சுத்து வட்டாரம் முப்பது நாப்பது கிலோமீட்டர் தூரத்துக்கு எங்கியும் அடர்ந்த காடுங்க கிடையாது. அப்புறம் எப்படி வந்திருக்கும்?. எங்கிருந்து வந்திருக்கும்?. அநேகமாக அது பொலிப்புக்கு இணையை தேடிவந்த ஆம்பள சிறுத்தைப்புலியாக இருக்கும்னு ஹேஷ்யங்கள் வேற. வந்தவாசியை ஒட்டினாப்பல செய்யாறு பாட்டையில ரெண்டு மூணு சதுர மைல் பரப்புல வந்தவாசி காடுன்னு ஒண்ணு இருக்குது. ஆனா சிறுத்தைப்புலி மாதிரி காட்டு மிருகங்கள்லாம் வசிக்கிற அளவுக்கு அடர்ந்த காடு இல்லை. பெரிய புதருங்க கிடையாது. கல்லாஞ்சரடு. காரமுள்ளு, நொச்சி,காட்டு குறுஞ்செடிங்க, வேலஞ்செடிங்க இப்படித்தான் இருக்கும். குள்ளநரி, மொசுலு, கீரிப்பிள்ளை, உடும்பு, மாதிரி சின்ன ஜந்துங்க சிலது இருக்கலாம். காட்டைச் சுத்தி ஊருங்களும், வெள்ளாமை நிலங்களுமாத்தான் இருக்குது. அப்புறம் எப்படி?. ஊர் மேல ஊருன்னு வந்திருக்குமா?. யார் கண்ணிலும் படாம எப்பிடி வந்திருக்க முடியும்?. எல்லார்கிட்டேயும் நிறைய கேள்விங்க இருக்குது. பதில் சொல்லத்தான் யாருமில்லை.

மறுநாள் மதியத்துக்குள்ள செய்தி பரவி சுத்துப் பட்ட கிராமங்கள்ல இருந்து முக்கியஸ்தர்களெல்லாம் ஒண்ணு திரண்டுட்டாங்க. வந்தவாசி போலீஸ் ஸ்டேஷனுக்கும், செய்யாறு போலீஸ் ஸ்டேஷனுக்கும் பிராது கொடுக்க ஓடினாங்க. ரெண்டு ஸ்டேஷன் எல்லைகளின் விளிம்பில்தான் அந்த கிராமங்கள் வருது. அந்தகாலத்தில் ஜனங்களுக்கு போலீஸ்னாலே குளிரெடுக்கும். ஸ்டேஷனுக்குள்ள நுழையவே பயம். இதோ போலீஸ்காரர் வர்றாருன்னு சொல்லி குழந்தைகளுக்கு சோறு ஊட்டின காலம் அது. அதுக்கேத்தாப்பல ஸ்டேஷனுக்குள்ள நுழையும் போதே போலீஸ் மரியாதை அப்படி இருக்கும். எவ்வளவு பெரிய மனுஷங்க வெள்ளையுஞ் சள்ளையுமா போய் நின்னாலும் சரி. எவன்டா அவன்?. டேய்! கெழவா! போய் ஓரமா நில்றா. ஐயா வர்ற நேரம் போய் வெளிய நில்லு. அடீங்! போடான்றேன். மீறி நின்னோம்னா உதை விழும். இப்படித்தான் மரியாதை. ஒவ்வொரு போலீஸ்காரனும் அலட்டி வுட்ருவான். நமக்கு அவங்க மேல இருக்கிற பயத்தை அப்படியே மெயிண்டெய்ன் பண்ணுவாங்க. பிராது குடுக்க உள்ளே போயிட்டா இவனை ரெண்டு தட்டு, அவனை ரெண்டு தட்டுன்னு பிரதிவாதிக்கு மட்டுமில்ல வாதிக்கும் தம் திம்னு உதை விழும். முதல்ல உதை, அப்புறந்தான் விசாரணையே. இவங்க போய் பயபக்தியுடன் பிராது குடுத்தாங்க.

“என்னாதுடா? சிறுத்தைப்புலியா?, உங்க ஊர்லியா?. இன்னாடா கதை கட்றீங்க?.” —எஸ்.ஐ. விலுக்கென்று எழ இவர்கள் பயத்துடன் நாலடி பின்னால் நகர்ந்தார்கள்.

“பொய்யில்லை அய்யா. நெசமா நாங்க பத்துபேரு பார்த்தோம்ய்யா. இதுவரைக்கும் நாலு ஆடுங்களை தூக்கிம் பூடுச்சிங்கய்யா. ஊரே காபராவா கீது சாரு.”—எல்லோரும் சேர்ந்து குரல் குடுத்தாங்க.

“காடு இல்லாத ஊர்ல புலி எங்கிருந்துடா வந்திச்சி?. மானத்தில இருந்து குதிச்சிதா?.

“அதான் தெரியலீங்கய்யா.”

“சரி…சரி..யோவ்! ஏட்டு! இவனுங்களை இன்னான்னு விசாரிச்சி எழுதி வாங்கு. டேய்! எல்லாரும் ஏட்டுகிட்ட போங்கடா. இங்க பொழுதுக்கும் திருட்டுப் பசங்களோட மல்லுக் கட்றதுக்கே நேரம் பத்தல, இவன்க வேற புலி வருது பூனை வருதுன்னு.”——– அங்க சப்-இன்ஸ்பெக்டர் பண்ண ஜபர்தஸ்துல விட்டா போதும்னு மனுவை குடுத்துட்டு ஓடி வந்துட்டாங்க. ஊர் தலைவர் கண்ணபிரான் யோசனையாய், அப்படியே தாசில்தாருக்கும் ஒரு மனு குடுத்துட்டு வந்தார். போலீஸ் அவ்வளவு அலட்டல் குடுத்தாலும், தாசில்தார் கிட்ட குடுத்த மனு வேலை செய்ய ஆரம்பிச்சிட்டுது. தாசில்தார் சும்மா இல்லை. நமக்கெதுக்கு வம்புன்னு உடனடியாக விஷயத்தை கலெக்டர் கவனத்துக்கு கொண்டு போய்விட, மறுநாளே போலீஸ் நடவடிக்கையில இறங்கிடுச்சி. அப்போதெல்லாம் காட்டிலாகா அவ்வளவு பலமாக இல்லை. ரெண்டு ஸ்டேஷன்களும் அலர்ட்டாகி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில ஜாயிண்ட் டீம் ஒண்ணை உருவாக்கினாங்க. இரண்டாம் நாள் காலையிலேயே அந்த டீம் கிளம்பி திமு திமுன்னு வந்து எச்சூர் கிராமத்தில இறங்கி முகாம் போட்டுட்ச்சி. உள்ளூர் பள்ளிக் கூடத்தில தங்கறதுக்கு ஏற்பாடாச்சி. சப்-இன்ஸ்பெக்டர் ஒருத்தர் மிடுக்குடன் ஊர் தலைவரை கூப்பிட்டார்.

”யோவ்! கண்ணபிரான்! இங்க வா.” —-தலைவர் பயபக்தியுடன் ஓடி வந்தார் “ஐயா.” “இன்னைக்கு இருபது போலீஸ்கள் கன்களோட உங்க ஊர்ல வந்து எறங்கியாச்சி தெரியுமில்ல?.. இன்னும் பெரிய அதிகாரிங்க, ஃபாரஸ்ட் ஆளுங்கள்லாம் வராங்க. சிறுத்தைப்புலிய நேர்ல பார்த்தவன்க எல்லாரையும் விசாரணைக்கு ஆஜர் படுத்தணும். தெரியுதா?.”

“சரிங்கய்யா.”

“எல்லாருக்கும் ராத்திரி சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணிடு. புலிய சுட்டுப் புடிக்கிற வரைக்கும் உங்க ஊரு சாப்பாடுதான். எப்பவும் மிலிட்டரி சாப்பாடுதான் இருக்கணும் தெரியுமில்ல?. எந்நேரமானாலும் இன்னைக்கு ராத்திரிக்குள்ள சிறுத்தைப்புலியை சுட்ருவோம்.” —எல்லாருக்கும் சற்று தெம்பாக இருந்திச்சி. அவங்க மேல நம்பிக்கை வந்திச்சி.

“ஆகட்டும் சாரு பண்ணிட்றோம். எளம் கிடாவா பார்த்து போட்டுட்றேன்.” —-இது எச்சூர் பஞ்சாயத்துத் தலைவர் கண்ணபிரான்.

“எலும்பு இல்லாம தொடை கறியாப் பார்த்து தனியா எடுத்து அதை காரசாரமா வறுத்து வெச்சிடு. பெரிய அதிகாரிக்கு அதுன்னா இஷ்டம். இங்க பெரியஅதிகாரின்றது பக்கத்து இலைக்கு பாயாசம் .

“சரிங்க.” – வந்த போலீஸ் படை மதியத்துக்கெல்லாம் போய் வந்தவாசி காட்டை முற்றுகையிட்டது. ஒரு டீம் பிரிஞ்சி போய் சத்தமாக பறையடித்துக் கொண்டு துப்பாக்கியை ஃபயர் பண்ண ரெடியாக தூக்கிப் பிடித்தபடி காட்டை ஊடுருவினார்கள். இருட்டும் வரை எதுவும் கண்ணுல சிக்கல. கடைசியாக காட்டுக்குள்ள பல இடங்களில் அதிக சத்தத்துடன் வெடிக்கும் பட்டாசுகளை வெடிக்கவிட்டு காத்திருந்தாங்க. ஊஹும். சிறுத்தைப்புலி இருக்கும் சுவடே தெரியல. எங்க போயிருக்கும்?. அத்துடன் போலீஸ் படை திரும்பி வந்து ஊரார் ஏற்பாடு செஞ்சிருந்த விருந்து போஜனத்தை ஒரு கட்டு கட்டிப்புட்டு, அந்த புலியை சுடாம திரும்பக் கூடாதுன்னு டி.எஸ்.பி. உத்திரவு போட்டுட்டதால அங்கியே தங்கிட்டாங்க. அவர்களில் பொறுக்கி எடுத்த ஐந்து பேர் கொண்ட ஒரு குழு துப்பாக்கிகள், டார்ச் லைட், சகிதம் கிளம்பிப் போய் வந்தவாசி செய்யாறு காட்டுப் பகுதிக்கு அருகில் வரும் வ்ழியில் புலி வரும் என்று இரவு முழுக்க தயாராக காத்திருந்தார்கள். ஒரு புண்ணியமுமில்லை. அதுக்கப்புறம் நாலஞ்சி நாட்களும் தினசரி தேடினதுதான் மிச்சம். புலியை யாரும் பார்க்கல. ஒரு சம்பவமும் நடக்கல. அதிகாரிகளுக்கு புலி நிஜமாகவே வந்துச்சா? என்கிற சந்தேகம் வர ஆரம்பிச்சிது. ஏன்னா பெருமாள் வீட்டு ஆளுங்க மட்டும்தான் அதை பார்த்தவங்க. போலீஸ் பெருமாள் வீட்டு ஆளுங்களை புடிச்சிட்டு போயி மிரட்டி மிரட்டி குடைஞ்சிப் பார்த்தாங்க. அந்த வீட்டு பொம்பளைங்க பாவம் மிரண்டு போயி ஓன்னு அழுவ ஆரம்பிச்சிட்டுதுங்க. அத்துடன் விட்டுவிட்டு மேலும் சில நாட்கள் தேடிப் பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வந்தாங்க. தோதாய் ஃபாரஸ்ட் அதிகாரிங்க ஜனங்க கிட்ட வந்து

“ எல்லோரும் கேளுங்கய்யா அன்னைக்கு போலீஸ் போட்ட வெடி சத்தத்தினால் புலி இடம் பெயர்ந்து போயிட்டிருக்கும். யாரும் பயப்படத் தேவையில்லை. எப்படீன்னா சிறுத்தைப்புலிக்கு சராசரியா ஒரு நாளைக்கு நாலு கிலோ கறி வேணும். கடைசியா அது இழுத்தும் போன ஆட்டுக் குட்டி அஞ்சி கிலோ எடைதான் இருக்கும். ரெண்டு நாளுக்கே எட்டிக்க புட்டிக்கன்னுதான் இருந்திருக்கும். இன்னைக்கி ஆறாம் நாளு. தினசரி தேடிக்கிட்டுத்தான் இருக்கோம். வேற எங்கியும் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கல. அதனால புலி இடம் மாறி போயிடுச்சி தைரியமா இருங்க.”— என்று சொல்லிட்டு சென்றார்கள். அதுக்கேத்தாப்பல அடுத்த ஒரு பத்து நாளு எதுவும் அசம்பாவிதங்கள் நடக்கல. அப்பாடா விட்டது சனியன்னு ஜனங்க தெளிஞ்சி, தைரியமாக வெளியே வந்து உலாத்த ஆரம்பிச்சாங்க. விடிநேரத்தில எழுந்து கழனி காட்டுக்கு போவ வர ஆரம்பிச்சாங்க. போலீஸ் படையும் தன் தலைமை இடத்துக்கு திரும்பபோயிடுச்சி. ஆனால் அந்த வாரத்தில மட்டும் மூணு தெரு நாய்ங்க காணாம போயிருக்கு. ஸ்கூல் வாத்தியார் ஒருத்தரு அப்புறமாத்தான் அந்த விஷயத்தை கண்டுபிடிச்சி சொன்னாரு.

“அப்ப புலி எங்க போச்சி தாத்தா?.” – எங்க பேத்தியும் பேரனும் கோரஸ்ஸா கேட்டாங்க.

“ம்..ம் யாருக்குத் தெரியும்?..” – பெரியவர் சஸ்பென்ஸுடன் நிறுத்தினார்.

“ஒரு நாள் காட்டை ஒட்டி இருந்த புரிசை கிராமத்தில விவசாயி ஒருத்தன் புலி பயம் போயிட்டதில அன்னைக்குத்தான் விடிநேரம் கருக்கல்ல போயி கிணத்தில கமலை போட்டு நீர் இறைச்சிக்கிட்டு இருந்தான். ஒரு வாரமா பயத்தில இறைப்புக்கு போவாததினால காயற வெய்யில்ல பயிரெல்லாம் பழுப்பு தட்டிப் போச்சி. உதவிக்கு அவனுடைய ரெண்டு தம்பிங்க. அலுப்பு தெரியாம இருக்க உரக்க பாட்டு வேற. அப்பல்லாம் வெள்ளாமைக்கு தண்ணீர் இறைக்க ஏத்தமும், கமலையுந்தான். ஏழெட்டு ஏக்கரா கழனி வெச்சிருக்கவன்தான் ஆயில் என்ஜின் இறைப்பு போட்டிருப்பான். அண்ணன் கமலை பிடிச்சி இறைக்க, சின்ன தம்பி மடை மாத்தி நீர் பாய்ச்சிக்கிட்டிருந்தான். அஞ்சாறு தளைக்கு நீர் பாய்ஞ்சி முடிச்சி, இதான் கடைசி தளை. அதுக்கு மடை மாத்தறப்போ பொழுது விடிஞ்சி போச்சி. மடை மாத்திட்டு நிமிர்ந்…..ஆ…ஆ… எதிரே இருபதடி தூரத்தில் அண்ணன் கமலை இறைக்கிற இடத்திற்கு வடவாண்ட மேட்டில சிறுத்தைபுலி படுத்து இரைப்பு வாங்கிக் கிட்டிருக்கு. பீதியில் கத்தறான் சத்தம் வரல. வாய் கோணிக்கிச்சி. அதிகாலைப் பனியிலும் மாலை மாலையாய் வியர்வை ஊத்துது.

“ஐய்யய்யோ! எணா! புலி…புலி..” – தம்பிக்காரன் போட்ட கூச்சலில், அண்ணன் திரும்பி புலியைப் பார்த்துவிட்டு ஐயோ..ஐயோ..என்று அலறி ஓட, புலி அவன் மேல் பாய்ஞ்சிடுச்சி. அப்படியும் மூணு பேரும் போராடி அதை தள்ளி விட்டுட்டு ஓடஆரம்பிச்சாங்க. அக்கம் பக்கம் உதவிக்கு யாருமில்லை. ஒரு எத்துல இருபதடியை சுலபமாக தாண்டக் கூடிய சிறுத்தைப்புலி கிட்ட என்ன பண்ண முடியும்?. மிரண்டு போன மாடுங்க ரெண்டும் கிணத்துல விழுந்து செத்துப் போச்சிங்க. துரத்துன சிறுத்தைப்புலி நிமிஷத்தில அண்ணங்காரனைத் தாக்கி புரட்டிப் போட்டு கழுத்தை கவ்விடுச்சி. அவ்வளவுதான் நிமிஷத்தில அண்ணன்காரன் தலை தொங்கிப் போச்சி. தம்பிகளின் கண்ணேதிரிலேயே அண்ணன் கழுத்தைக் கவ்வி இழுத்துக்கிணு போறத பார்த்துப்புட்டு தம்பிகள் கதறிக் கதறி அழுதிருக்காங்க.

ஊரே அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. ஜனங்க ஆவேசத்துடன் அது போன வழியிலேயே ஓடினாங்க. ஊஹும். எங்கியும் கண்ல படல. அது இருக்குமிடம் தெரியாததினால எல்லாருக்கும் கைகளை பிசையறதைத் தவிர வேறு வழி தெரியல. திடீரென்று எதிரில் வந்திருந்தால் எதிர்த்து நின்னு அதை அடிச்சி கொன்னிருப்பாங்களா?, இல்லை சிதறி ஓடியிருப்பாங்களா? என்பது வேற விஷயம். அது நேரில் வரும்போதுதான் தெரியும். மறுநாள் ஊர் எல்லையில இருக்கிற பெரியாண்டவர் கோவிலாண்ட அந்த அண்ணன்காரன் பாடி கிடந்திருக்கு. மாடு மேய்க்கிற பசங்க ஓடியாந்து சொன்னவுட்டு தெரிஞ்சிது. ஊர் ஜனங்களும் ஓடிப் போயி பார்த்துட்டு கொதிச்சிப் போச்சிங்க. மூஞ்சி தெரியாம கடிச்சி குதறி வெச்சிருக்கு. தொடைங்க, கையிங்க எல்லாம் சதை இல்லாம எலும்புதான் மிச்சமிருந்துச்சி. அவனுக்கு இடது கையில ஆறு விரல் இருக்கும் அதையும், பக்கத்தில கிழிஞ்சி கூளமாய் கிடந்த அவனுடைய பட்டா பட்டி நிக்கரையும் வெச்சி கண்டு பிடிச்சாங்க.

அதற்கடுத்து மூணாம் நாள் சாயங்காலம் எச்சூர் கிராமத்தில குளத்துக்கு போன மேலத்தெரு குப்பன் மவளை புலி அடிச்சி பிணமாக்கி, கோரமா குதறிப் போட்டு, காட்டு பக்கமா இழுத்தும் போனதை ரெண்டு பேர் பார்த்துட்டு ஓடி வந்து ஊர்ல சொன்னாங்க. பொண்ணுக்கு ஒரு பத்து பன்னிரெண்டு வயசிருக்கும். உடனே ஊரு ஜனங்களும் தடி தாம்புடன் இன்னைக்கு ரெண்டுல ஒண்ணு பார்த்திட்றதே சரின்னு புலி போன வழியில வெறியோடு ஓடினாங்க. . ஆனா இப்பவும் அது போன தடமே தெரியல. அலுத்துப் போய் திரும்பிட்டாங்க. மறுநாள் காலங்காத்தால கோயில் குருக்கள் ஈஸ்வரய்யர் குய்யோ முறையோவென்று கத்திக் கொண்டே ஓடி வந்து சொன்னப்புறம்தான் தெரிஞ்சிது. ஊரு ஜனங்களும் ஓடினாங்க. ஊர் ஈஸ்வரன் கோவிலின் பின்னாலிருக்கிற நந்தவனத்தில குப்பன் பொண்ணுடைய உடம்பு கிடந்துச்சி. முகமெல்லாம் சிதைஞ்ச நிலையில, பாதி உடம்பு இல்லை. கட்டியிருந்த பாவாடை கலரை வெச்சி அடையாளம் தெரிஞ்சிது. அந்த கோரத்தை பார்த்த குப்பனும் அவன் பொண்டாட்டியும் அங்கியே மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. அவ்வளவுதான் ஜனங்களுக்கு கொதிப்பேறிப் போச்சி. உபதலைவன் எழுந்து.

“டேய்! எப்ப ஆட்டைக் கடிச்சி, மாட்டைக் கடிச்சி, மனுசன்கிட்ட வந்துடுச்சோ, இனிமே அதை வுடக் கூடாது, அத்த நாமளே அடிச்சிக் கொல்லணும்டா. போலீஸும் வாணாம் ஒரு மசுரும் வாணாம்.”—-அந்த வார்த்தையை சொல்லும்போது மட்டும் அடக்கி வாசித்தான். ராத்திரி எல்லாரும் கூடி புலியை எப்படி கொல்றதுன்னு திட்டம் போட்டாங்க.. தலைவர் கண்ணபிரான் எழுந்தார்.

“கவனமா கேளுங்கப்பா. புலி அடிச்சிக் கொன்ன ரெண்டு பொணங்களும் நம்ம ஊருக்குள்ளதான் கிடைச்சிருக்குது. இதிலிருந்து இன்னா தெரியுது?. அது இங்க எங்கியோதான் ஒளிஞ்சிக்கிணு இருக்குது. இல்லே அக்கம் பக்கம் ஊருங்கள்ல எங்கியாவது பதுங்கி இருக்கணும். நாம ஜாக்கிரதையா இருக்கணும், ஆமாம். புலி நம்மளை பார்த்தவுடனே யாராவது ஒருத்தன் மேலத்தான் பாயும், ஒரே நேரத்தில எல்லார் மேலயும் பாயப் போறதில்லை. வெட்டுபுலி தீப்பெட்டி மேல படம் போட்டிருக்குது இல்லே, அந்த மாதிரி அது நம்ம மேல பாயும் போதே நம்ம வெட்டு அதும் மேல விழணும். பயந்தா எதுவும் நடக்காது. அதேநேரம் மத்தவங்க எல்லாருடைய வெட்டுகளும் சரமாரியா அதும் மேல விழணும் தெரியுதா?. ஒரு செகண்டு லேட் பண்ணாலும் பாய்ஞ்சி ஆளை க்ளோஸ் பண்ணிடும். பயந்து ஓடி உங்கள்ல ஒருத்தனை பலிகாடா ஆகிடாதீங்க. தைரியம் இருக்கிறவன்க மட்டும் போங்கடா.”——ஒருத்தரும் பின்வாங்கவில்லை அந்தளவு வெறியேறிப் போயிருந்திச்சி. எல்லாருக்குள்ளும் குப்பன் மவளின் பாடி கிடந்த கோரக் காட்சிதான் இருந்திச்சி.

மறு நாள் காத்தால சுமார் அம்பது பேரு உருட்டுக் கட்டை, வெட்டு கத்தி சகிதம் வந்தவாசி காட்டை சல்லடை போட ஆரம்பிச்சிட்டாங்க. மத்த வெளி இடங்களையும் ஒரு இடம் விட்டு வைக்கல. ஹும்! எதுவும் நடக்கல. அதே குறிக்கோளோடு தீவிரமாக இரண்டு நாட்கள் அலைந்து தோத்துட்டாங்க. பார்த்த ஒத்திகையும், மனசில் ஏத்திக்கிட்ட வெறியும் விருதாவா போச்சி. ஒரு கட்டத்தில் இன்னா செய்றதுன்னு தெரியாம சோர்ந்து போய் நிக்கிறாங்க.. அவ்வளவு சீக்கிரத்தில எங்க போயிருக்கும்?. யாராலேயும் கண்டு பிடிக்க முடியல.

“சிறுத்தைப்புலி ஊருக்குள் நுழைந்து இரண்டு பேரை கொன்று இழுத்துச் சென்ற கொடூரம். மெத்தனமாக செயல்படும் காவல் துறை”—தினசரியில் கட்டம் கட்டி செய்தி வந்துச்சி. அவ்வளவுதான் அன்றைய முதலமைச்சரின் கவனத்துக்கு இந்த செய்தி போக, அவர் கூப்பிட்டு விட்ட டோஸில் அவசரமாக போலீஸ் படை திரும்பவும் எச்சூருக்கு வந்து இறங்கிடுச்சி.

சிறுத்தைப்புலி எப்பவும் பகலெல்லாம் மறைஞ்சிருந்துட்டு ராத்திரியிலதான் இரை தேடி வெளியே வரும்னு ஃபாரஸ்ட்காரங்க தகவல் குடுத்ததில, எந்த நேரத்திலேயும் சிறுத்தைப்புலி நம்மள தாக்கலாம் என்கிற பயத்தில ஜனங்க குழந்தை குட்டிங்களை பகல்ல கூட வெளியே வுடாம உள்ளேயே அடைச்சி வெச்சாங்க. சுத்து வட்டாரம் ஏழெட்டு ஊருங்கள்ல `சிறுத்தைப்புலி ஊருக்குள்ள நுழைஞ்சிருக்கு, அதனால ராத்திரி ஏழு மணிக்கு மேல யாரும் வெளிய நடமாடக் கூடாது, ஆபத்துன்னு தண்டோரா போட்டாங்க. ஊருக்கு ஊர் இளைஞர்கள் குழு அமைச்சிக்கிட்டு வெட்டு கத்தியுடன் ராத்திரி முழுக்க ஊரைச் சுற்றி வந்து காவல் காத்தாங்க. மாடு கன்னுங்களை வெச்சிக்கிட்டிருக்கிறவங்க நிலைமைதான் திண்டாட்டமா போச்சி. சேர்ந்து முறை வெச்சி காவல் காக்க ஆரம்பிச்சாங்க. தயாராக நிறைய பட்டாசுங்களை வாங்கி வெச்சிக்கிட்டாங்க.

ஊர்ல ஒவ்வொருத்தனும் கத்தி வெச்சிக்க ஆரம்பிச்சான். ஒவ்வொரு வீட்டிலியும் தீவட்டியை தயார் பண்ணி எண்ணையில் நல்லா ஊற வெச்சி தயாரா வெச்சிருந்தாங்க. புலி வந்தா தீவட்டியை கொளுத்தறது. நெருப்பை பார்த்தா ஓடிப்புடும்னு நம்பிக்கை. ஏழுமணிக்கு மேல தவிர்க்க முடியாத காரணத்தினால வெளியே வரணும்னா தீவட்டிய கொளுத்தி கையில புடிச்சிக்கிட்டு போய் வந்தாங்க. இந்த களேபாரத்தில ஊருக்குள்ள திருட்டுப் பயல்களெல்லாம் பயத்தில வெளியே வராம முடங்கிட்டானுங்க. சினிமா கொட்டாய்காரன் ராத்திரி ஷோவை கேன்சல் பண்ணிப்புட்டு சுற்றிலும் துணி மறைப்பை ஏற்படுத்தி மேட்னி ஷோ நடத்த ஆரம்பிச்சான். படம் தூக்குத் தூக்கி. போலீஸ்களும் தினசரி காட்டுக்குள்ள போய் வந்துக்கிட்டுதான் இருந்தாங்க. உதவிக்கு ஃபாரஸ்ட் ஆளுங்களும் டியூட்டி பார்த்தாங்க. ஊஹும். இந்த காட்டைத் தவிர அது அடைறதுக்கு வேற எங்கியும் மறைப்பு இல்லை. ஆனாலும் அது எங்கிருந்து வருது?, எங்க போய் அடையுது?,ன்னு தெரியலயே.

இது இப்படியிருக்க, கிச்சன் செக்‌ஷனிலும், கசாப்பு செக்‌ஷனிலும் ஜரூரா வேலை நடந்துக்கிட்டிருந்திச்சி. இங்க தினசரி கறிசோறுன்ற தகவல் கசிய, விசாரணைன்னு தாசில்தார், ஆர்.ஐ., மணியக்காரர், கணக்குப் பிள்ளை, கூடவே சிப்பந்திங்கன்னு ரெவின்யூ டிபார்ட்மெண்ட்ல ஒருத்தன் பாக்கியில்லை. ஃபாரஸ்ட் டிபார்ட்மெண்ட்லேயும் எல்லாரும் ஆஜர். தினசரி விசிட். எல்லாருக்கும் சாப்பாடு. தலைவரும் கவுன்சிலர்களும், ஊர் ஆளுங்களும் முறை போட்டுக்கிணு மூணு வேளையும் பந்தி வுட்டு பரிமாறுவதில் பிஸியாக இருந்தாங்க. நீதானே பிராது குடுத்தவன், நீதான் ஆவற செலவை ஏத்துக்கணும்னு எத்தனை நாளுக்கு பெருமாள் பிள்ளை தலையில மொளகாய் அரைக்கிறது?. பெருமாளு பாவம் இதுவரைக்கும் புலி முழுங்கினது நாலு ஆடுங்கன்னா போலீஸுக்கு முழுங்கக் குடுத்தது நாலு ஆடுங்க. புலின்றது பெருமாளுக்கு மட்டும் வந்த ஆபத்தில்லையே ஊருக்கே வந்திருக்கிற ஆபத்தும் தானே?. இப்ப ஊர் செலவுல தினசரி ஆடுங்க உலையில வேகுதுங்க.

புலி ஆளை அடிச்சி இழுத்தும்போன செய்தி கலெக்டர் வரைக்கும் போனதில். மறு நாள் கலெக்டர் எச்சூருக்கே வர்றதாக செய்தி வந்துவிட்டது. அதையொட்டி தாசில்தார், ஆர்.ஐ., மணியக்காரர், சிப்பந்திங்க உட்பட, அப்புறம் காட்டிலாகா அதிகாரிங்க எல்லாரும் முதல் நாளே வந்து இங்கியே டேரா அடிச்சிட்டாங்க. தகவலறிஞ்சி ஓடி வந்த தலைவரிடம்

“யோவ் கண்ணபிரான்! நாளைக்கு கலெக்டர் உங்க ஊருக்கு வர்றாரு தெரியுமா?. ”— தலைவரும், மத்த கவுன்சிலர்களும் தெரியும்னு கவலையுடன் தலையாட்டினாங்க. வயித்தில புளி கரைக்குது. ஐயோ! இவனுங்க ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில கண்ணாயிருப்பானுங்களே. கலெக்டரை சாக்கிட்டு நண்டை கொண்டா, நரியைக் கொண்டான்னு இன்னும் என்னென்ன கேட்கப் போறானுங்களோ?.

“வர்றது மாவட்ட கலெக்டருய்யா. அவருக்கு தடபுடலா வரவேற்பு நடத்தணும் தெரியுதா?. அவருக்கு மதிய சாப்பாடு இங்கதான். லஞ்ச்க்கு போட்ற கறி எளசா இருக்கணும்யா பார்த்துக்க.. மெனு சொல்லிட்றேன். மிளகு போட்டு சுக்காவா கறியை வறுத்து வெச்சிடு.. அப்புறம் திக்கா கறிக் குழம்பு, கோழி முட்டை ஆம்லட் போட்ரு, சோறு— கிச்சிலி சம்பா இல்லேன்னா சீரக சம்பா, பச்சரிசியா இருக்கணும். கேட்டுக்கினியா?. சாயந்திரம் அதிகாரிங்களுக்கு மட்டும் ஆட்டுக்கால் சூப்பு சரியா?.”—- தலைவருக்கும் மத்தவங்களுக்கும் மாடுமாதிரி தலையாட்டத்தான் முடிஞ்சிது. சாப்பாடெல்லாம் போடமுடியாதுன்னு சொல்ல அவங்களுக்கு திராணி கிடையாது. பயம். இது அந்த காலத்து ஜனங்க நிலை. போலீஸு, கவர்மெண்ட் ஆளுங்கன்னா அம்மாம் பயம். போலீஸ்காரங்க பொல்லாப்பு ஆகவே ஆகாது. நம்ம மேல எதனா பொய் கேஸு போட்றதுன்றது இரண்டாம் பட்சம், மொதல்ல உள்ள தள்ளி ஆளாளுக்கு லாடங் கட்டிடுவானுங்களே..

கலெக்டர் வந்திறங்க, தொண்ணூறோடு துவரம் பருப்புன்னு நாட்டாமை, தலைவர், மற்றும் ஊர் பிரமுகர்கள் திரண்டு வந்து மேள தாளத்துடன் அவரை வரவேற்று ஊர்வலமாக அழைச்சிக்கிட்டு போனாங்க.. சால்வை போர்த்தி, மாலை மரியாதை செஞ்சி, கும்பிட்டாங்க. பள்ளிக்கூடத்தில் அரை மணி நேரம் அதிகாரிகளுடன் மந்திராலோசனை நடந்தது.

“என்னா மேன்! சிறுத்தைப்புலி அடிச்சி இழுத்தும் போன இரைகளை எங்க வெச்சி சாப்பிடுது?. ரொம்ப தூரத்துக்கு கொண்டு போயிட்டிருக்குமோ?.”— கலெக்டர் தன் பங்குக்கு சந்தேகத்தை கெளப்பினார். அதற்கு காட்டிலாக அதிகாரி

“இல்லீங்க சார். சிறுத்தைப்புலிக்கு அந்த சுபாவம் கிடையாது. கிட்டத்திலதான் அதன் மறைவிடத்தை வெச்சிக்கும். ரொம்ப தூரமெல்லாம் இழுத்துக்கிட்டு போறதில்ல. அதுமட்டுமில்ல சாப்பிட்டு மிச்சமுள்ள இறைச்சிக்காக அந்த இடத்துக்கு மேல காக்காவும், பருந்துகளும், கழுகுகளும் வட்டமிட்டு பறக்கும். அத வெச்சி அதன் இருப்பிடத்தை கண்டுபிடிக்கலாம். அந்த கோணத்திலும் பார்த்தாச்சி சார். அந்த மாதிரியும் எங்கியுமில்ல. இதுதான் அதிசயமா இருக்குது.”

இப்படி பலவாறாக சாத்திய, அசாத்தியங்களை பேசிப் பேசி, கடைசியில கலெக்டர் இன்னும் ரெண்டு நாட்களுக்குள்ள அதை புடிச்சே ஆகணும்னு கறாராக உத்திரவு போட்டுட்டு கெளம்பிட்டார். சிறுத்தைப்புலி எப்பவும் தன் இரையை மர உச்சிக்கு கொண்டுபோய் இருவா கிளைகளிலே பாதுகாப்பா வெச்சிக்கும் என்று அந்த கோணத்திலேயும் எல்லா மரங்களிலும் செக் பண்ணிட்டாங்க.. காட்டிலாகா அதிகாரி மூணு மணி நேரம் காட்டை சுத்தினார். பலன் பூஜ்ஜியம். இப்ப காட்டை விட்டுட்டு வேற இடத்தில தேட்றதுன்னு ஒரு கிலோமீட்டர் தொலைவுல சின்னதா ஒரு குன்று இருக்குது, அங்கேயும் போய் தேடினாங்க. ஊஹும் எதுவும் அகப்படல. சோர்ந்து போயி முகாமுக்கு திரும்பினாங்க. இனிமேல் எங்கேன்னு போய் தேட்றது?. மறுநாள் காட்டுக்கு போற வழியில ஒரு ஆட்டை கட்டி வெச்சிட்டு ரெண்டு ராத்திரி துப்பாக்கியுடன் மறைஞ்சிருந்து பார்த்தாங்க. எந்த வித்தைகளும் பலிக்கல. சிறுத்தைப்புலி தலைகாட்டவே இல்லை.

இந்த கட்டத்தில்தான் ஒரு மதிய நேரம் போலீஸ் முகாமில் எல்லோரும் மதியம் சாப்பாட்டை ஃபுல் கட்டு கட்டிவிட்டு, இரை முழுங்கிய பாம்புபோல புரண்டுக் கொண்டிருந்த நேரம். மணி இரண்டு இருக்கும். கிழவி ஒருத்தி மூச்சிரைக்க போலீஸ் கிட்ட ஓடி வந்து விழுந்தாள்.. கைகால்களெல்லாம் தந்தியடிக்குது. எழுப்பி உட்கார வெச்சி குடிக்க தண்ணீர் குடுத்தாங்க.

“ஐயா சாமீ! காட்ல ஒரு புதர்ல புலி இருக்குதுங்க. வாங்க காட்றேன்.”

யாருக்கும் நம்பிக்கை வரவில்லை. இன்னைக்கு காலையில கூட காடு பூரா ஒரு ரவுண்டு சுத்தியாச்சி.

“ஏய் கெழவி! எப்பிடி உள்ளே புலி இருக்குதுன்னு தெரிஞ்சி போச்சி உனக்கு?.”

“புதரு கிட்ட போனப்போ உறுமுச்சிங்க. பயந்து போய் ஓடியாந்துட்டேன்.”—தடதடவென்று உதறுகிறாள். “நீ ஏன் இந்த நேரத்துக்கு காட்டுக்குப் போன?.”

“சுள்ளி பொறுக்கறதுக்கு சாமீ.” – கிழவி பொய் சொல்ல வில்லை. அவ கூடையில கொஞ்சம் காய்ந்த சுள்ளிங்க இருந்திச்சி. அப்பல்லாம் சமையல் கேஸ் கிடையாது. உடனே ஜீப்பில் கிழவியை ஏத்திக்கிட்டு துப்பாக்கிகளுடன் ஏழெட்டு போலீஸ்களுடன் இன்ஸ்பெக்டர் கிளம்பினார். கிழவி காட்டிய புதரிலிருந்து ஒரு நூறடி துரத்தில ஜீப்பை நிறுத்திட்டாங்க. ஒத்தையாய் நிற்கும் காட்டுவா மரத்திலிருந்து குரங்குகள் அமைதியில்லாமல் பரபரப்பாய் இங்கும்அங்கும் தாவியபடி உச்ச ஸ்தாயியில் கத்திக் கொண்டிருந்தன. புலி இருக்கிறதுக்கான எச்சரிக்கை. ஒருத்தரையொருத்தர் பார்த்துக் கொண்டனர். கிழவியை ஜீப்பை விட்டு இறங்கக்கூடாது என்றுஎச்சரிக்கை செஞ்சிட்டு சத்தம் போடாமல் இறங்கினாங்க. சித்திரை மாசத்து வெய்யில் கொளுத்துது. எல்லாரும் நகர்ந்து போய் அம்பதடி தூரத்தில் நின்னுட்டாங்க. எல்லா துப்பாக்கிகளும் புதரை குறிபார்த்தன. இன்ஸ்பெக்டர் ரகசிய குரலில்

“ராகவா! நீ மட்டும் கிட்ட போயி ஃபயர் பண்ணு.” – அவன் லேட்டஸ்டாக டிரெய்னிங் முடிச்சிட்டு வந்து ஜாயின் பண்ணவன். குறி பார்த்து துப்பாக்கி சுட்றதில லேட்டஸ்டா பயிற்சி எடுத்துக்கிட்டவன். அந்த இளைஞன் கிட்டே நெருங்கி உள்ளே ஊடுருவிப் பார்க்க, எஸ்! உள்ளே மூச்சிரைக்கும் சத்தம் கேக்குது. கட்டை விரலை உயர்த்தி மத்தவங்களுக்கு சிக்னல் குடுத்துட்டு கன்னை எடுத்து தோராயமாய் குறி பார்த்து ட்ரிகரில் கையை வைக்க, குபீரென்று பயங்கர கர்ஜனையுடன் சிறுத்தைப்புலி அவன் மேல் பாய்ஞ்சிடுச்சி. ராகவனின் மண்டையில் ஓங்கி அறைந்து தள்ளியது. அவ்வளவுதான் அவன் மயங்கி கீழே சரிந்தான். அத்துடன் அவனை விட்டுவிட்டு மற்றவர்கள் பக்கம் திரும்ப, அதற்கு முன்னாலயே அவங்க துப்பாக்கியை தூக்கறதை மறந்து அதை கீழே போட்டுவிட்டு மூலைக் கொருத்தராக சிதறி ஓடினாங்க. துப்பாக்கிய எய்ம் பண்ணி ஷூட் பண்ற அவகாச தூரத்தில சிறுத்தைப்புலி இல்லை. அதேசமயம் எல்லாரும் பத்து பதினஞ்சி வருஷம் சர்வீஸ் போட்டவங்க. துப்பாக்கி சுட்றதை டிரெய்னிங்ல பண்ணதோடு சரி. அதுக்கப்புறம் எங்கே?. மறந்தே போயிருக்கும். சுதாரிச்சி சுட நேரம் போறாது. இன்ஸ்பெக்டர் அதுக்கும் மேல. ஷூவை உதறிட்டு சரசரவென்று ஒரு பனை மரத்தில் ஏறினார். சிறுத்தைப்புலி ஓடிவந்து எகிற, அது ஒரு எத்துக்கு பத்தடிக்கு மேல எகிறக் கூடியது. எட்டி அவர் டிரவுசரைப் பிடிக்க, அப்பல்லாம் போலீஸ்ல எல்லாருக்கும் அரை டிரவுஸர்தான்.சில நிமிஷ போராட்டத்தில் டிரவுசர் உருவிக் கொண்டு வந்துடுச்சி. அவர் அப்படியே ஜட்டியுடன் மேலே ஏறிவிட்டார். ராகவன் என்ற அந்த இளம் போலீஸ்காரன் சுதாரிச்சி எழுந்தான். தலையிலிருந்து ஒழுகிக் கொண்டிருக்கும் ரத்தம் பார்வையை மறைத்தது. துடைத்துக் கொண்டு தப்பித்து ஓட எத்தனிக்கையில் புலி திரும்பி வந்து அவனைத் தாக்கியது.

அந்த நிமிஷம் அவனுக்கு வாழ்வா சாவா பிரச்சினை. இனி தப்பிக்க முடியாது. எழுந்த அசாத்திய துணிச்சலில் பாய்ந்து அதன் முதுகின்மேல் தாவி கழுத்தை உடும்புப் பிடியாய் பிடித்துக் கொண்டான். கால்களை அதன் வயிற்றுக்கு அடியில் குடுத்து பின்னிக் கொண்டான். வருடாந்திரம் நடக்கும் மஞ்சுவிரட்டுவில் ராகவன் அவங்க பக்கத்துக்கே தெரிஞ்ச ஜல்லிக்கட்டு சேம்பியன். எருதின் திமிலை பற்றிவிட்டால் மாடு என்ன குதித்தாலும் கொம்பிலிருந்து பரிசை அவிழ்க்கும் வரை விடவே மாட்டான். அந்த லாவகம் இப்ப அவனுக்குக் கை கொடுத்துச்சி. புலியும் அவனும் கிட்டத்தட்ட அரைமணி நேரம் கட்டிப் புரண்டாங்க. அப்படி கட்டிப் புரளும்போதே அவன் ஒரு விஷயத்தை கவனித்துவிட்டான்.

அதன் முகத்தில் ஆழமாக வெட்டுக் காயம். காயத்தில் சீழ் ஒழுகிக் கொண்டிருந்துச்சி. இவன் அந்த காயத்தின் மேல பலமாய் ஒரு குத்துவிட அது வலியில் பயங்கரமாக கர்ஜித்தது. பிடிச்ச பிடியை அவன் விடவில்லை. கடைசியில் ரெண்டு பேரும் களைச்சிப் போயிட்ட சமயம் புலி அவனை உதறித் தள்ளிவிட்டு புதருக்குள் ஓடிட்ச்சி. உடல் முழுக்க புலி அறைந்த, கடித்த, காயங்கள். சில இடங்களில் கொத்து கொத்தாய் சதைகள் பிய்ஞ்சி தொங்குது. ரத்தக்களறி.. நிற்க முடியாமல் தள்ளாடினான். தலையிலிருந்து ஒழுகிய ரத்தம் முகத்தில் தேங்கி கண்களை மூடிட்டிருந்துச்சி. பெத்தவங்களை நெனைச்சிக்கிட்டான். ஒரு தீர்மானத்தோடு முகத்தில் உறைந்திருக்கும் ரத்தத்தை வழித்தான். பார்வை தெரிஞ்சிதுன்னா இப்படியே போயிட்றது, இல்லேன்னா புதருக்குள்ள பூந்திட்றது. அதுவா நானான்னு பார்த்திட்றதே சரி. பார்வை தெளிவாக தெரிந்தது.

அவன் மெதுவாக நடந்து ஜீப்பை நெருங்கி மயங்கி விழுந்தான்., அப்போதுதான் நிலைமை சேஃப் என புரிந்து இன்ஸ்பெக்டர் பனைமரத்திலிருந்து ஜட்டியுடன் இறங்கி ஓடி வந்தார். ராகவனை தூக்கி ஜீப்ல ஏத்தி படுக்க வெச்சிட்டு ஜீப்பைக் கிளப்பினார். கிழவியுடன் ஜீப் பறந்திச்சி. நினைவிழந்து கிடந்த ராகவனைப் பார்த்து ஐயோ எப்பா! என்று கிழவி அழுகிறாள். ஆஸ்பிட்டலில் சேர்த்தாச்சி.. நடந்தவைகள் சுத்து வட்டாரம் பூராவிலும், இலாகா முழுக்கவும் வேகமாக பரவிடுச்சி. ஜனங்க கும்பல் கும்பலாய் ஓடிப்போயி போலீஸ் ராகவனைப் பார்த்துட்டு உணர்ச்சிவசப் பட்டாங்க.

“ஐயோ! எப்பா நீ யாரு பெத்த புள்ளையோ. எங்களுக்கோசரம் வந்து சீரழிஞ்சிட்டியே சாமீ! எம்மா காங்கியாத்தா! இந்த புள்ளைய காப்பாத்துடீயம்மா”

ஜனங்க அம்மனை பிரார்த்தனை பண்ணி தேங்காய் ஒடைச்சாங்க. மெட்ராஸிலிருந்து சில தொப்பை போட்ட போலீஸ் அதிகாரிகள் தத்தம் சகாக்களுடன் படையெடுத்தாங்க. போய் ராகவன் போலீஸைப் பார்த்தாங்க. வந்து பந்தோபஸ்துடன் காட்டை சுத்தினாங்க, ஊர் மக்களை மிரட்டி மிரட்டி கேள்வி மேல் கேள்வி கேட்டாங்க, அப்புறம் இருந்தவங்களுக்கு ஆலோசனை சொல்லிட்டு போஜனத்தை ஒரு கட்டு கட்டிட்டு கிளம்பிட்டாங்க. கும்பலோடு கும்பலாய் கூடவே மந்திரிகளும், எம்.எல்.ஏ.க்களும் தத்தம் கைத்தடிகளுடன் கடமையாய் வந்தாங்க. கரிசனத்துடன் ஜனங்க கிட்ட கரைஞ்சாங்க. அப்புறம் கறி சோத்தை தின்னுட்டு, மினிஸ்டர், எம்.எல்.ஏ.ன்னு நாங்க வந்திருக்கோம் கட்சிகாரந்தான நீ?. பிரியாணி போடக்கூடாதா? ன்னு தலைவரை திட்டிவிட்டு போனாங்க.

அதுதான் கடைசி. அதுக்கப்புறம் சிறுத்தைப்புலியின் நடமாட்டம் எங்கியும் தென்படலே. போலீஸ் படைகள் தேடித் தேடி அலுத்து விட்டன. நாலஞ்சி நாட்கள் பலனில்லாமல் போய்க் கொண்டிருந்தது.

“யோவ் கண்ணபிரான்! சீக்கிரம் வாய்யா. டி.எஸ்.பி. அய்யா கூப்பிட்றார்.” – தலைவர் எழுந்து ஓடினார்.

“என்னய்யா! எவ்வளவு தேடியும் அந்த சிறுத்தைப்புலியை புடிக்க முடியலேய்யா. சுத்து வட்டாரம் பூரா தேடியாச்சி. எங்க ஒளிஞ்சிருக்கும்னு ஊர்க்காரங்க யாருக்காவது ஐடியா இருக்காய்யா?.”—-

“வாணாம் அய்யா இத்தோட முடிச்சிக்கலாம். போதும் சாமி.”

“யோவ்! என்ன உளற்ற?. நாலஞ்சி ஆடுங்க காலியாயிடுச்சி. ரெண்டு பொணம் விழுந்திருக்கு., ஒரு போலீஸ்காரன் ஆஸ்பிட்டலில் குத்துயிரும் குலைஉயிருமா கெடக்கிறான். இப்ப அது ஆட்கொல்லி புலிய்யா. விட்டுவைக்கக் கூடாது. ஃபூல்!. ஊர் தலைவர், ஊரை பாதுகாக்க வேண்டியவன். நீ இன்னான்னா முடிச்சிக்கலாம்னு சொல்ற.”

“அய்யா. இத்தினி நாளு எம்மாம் பேர் தேடினீங்க புடிக்க முடிஞ்சிதா? கண்ணுக்கே ஆப்படலியே. இன்னா பண்ணப் போறீங்க?.அதான் இனிமே நாங்களே பார்த்துக்கறோம்னு சொல்றேன். இப்ப எங்களுக்கே அந்த தைரியம் வந்திடுச்சிய்யா. அன்னைக்கு எங்க ஊரு குப்பன் பொண்ணை புலி சாவடிச்சிதே அன்னைக்கே அத்த தீர்த்திட்டிருப்போம். கொஞ்சத்தில தவறிப் போச்சி. அன்னைக்கி புலி ஏன் அவளை இழுத்தும் போயி பாதியில போட்டுட்டு போச்சி தெரியுமா சார்?. எங்காளுங்க வுடலை. ஒரு பத்துபேரு அத்த சுத்தி வளைச்சிட்டானுங்க. ஒருத்தன் எட்ட இருந்து ஒரு சைஸான கல்லை வலுவா விட்டடிச்சான் பாரு. சரியா அதும் மூஞ்ச பேத்துடுச்சி சாரு. இனிமே நாங்களே அதை தீர்த்துடுவோம் வுட்ருங்க.”—–

“ஆமாங்கய்யா அதை நாங்களே பார்த்துக்கிறோம்.” – கவுன்சிலர்களெல்லாம் சேர்ந்து குரல் கொடுத்தாங்க. அவர் கொஞ்ச நேர யோசனைக்கப்புறம்.

“சரிய்யா. எதனா பிரச்சினை வந்தா கூப்பிடு. நிச்சயமா அது எல்லை தாண்டிடுச்சின்னு ஃபாரஸ்ட் ஆளுங்க உறுதியா சொல்றாங்க. தகவலை கலெக்டருக்கும் ரிப்போர்ட் பண்ணியாச்சி. இருந்தாலும் ரெண்டுல மூணுல எங்காளுங்க விசிட் குடுப்பாங்க சரியா?. மேலிடத்துக்கு ரிப்போர்ட் அனுப்பிட்றேன்.” —–அத்துடன் அன்று மாலை பேக்கப் ஆயிட்டாங்க. ஊர் நாட்டாமை ரங்கசாமி பிள்ளை விஷயத்தைக் கேள்விப்பட்டு வேகமாக வந்து தலைவர்கிட்ட ஆத்திரமாய் கூச்சல் போட ஆரம்பிச்சிட்டார்.

“போலீஸை திருப்பி அனுப்பிட்டியே. அப்புறம் புலியை யார்றா கொல்றது?. துப்பாக்கி வெச்சிருக்கிறவன்களுக்கே அது தண்ணி காட்டுது. நம்ம பசங்க இன்னா கிழிப்பானுங்கன்னு இவங்களை நம்பி போலீஸை அனுப்பிட்ட?. கல்லை விட்டெறிஞ்சா குபீர்னு கலைஞ்சி போற காக்கா கூட்டம்டா இது. இன்னும் நம்ம ஜனங்க ஒவ்வொண்ணா சாவனுமாடா?. எதையும் சொல்றதுக்கு முன்ன நீ ஊரை கலக்கணும் கலந்தியா?.” —-கோபத்துடன் கத்திய நாட்டாமை கிட்ட தலைவர் ஆத்திரமாக பொரிந்து தள்ள ஆரம்பிச்சார்.

“ஹும்! அந்த மசுரான்க சிறுத்தைப்புலியை கொன்னுடுவானுங்கன்னு இன்னும் நம்பறியா நீ?. இன்னா தெரியும் உனுக்கு?. பார்க்கல ஏழெட்டு பேரு துப்பாக்கியை வெச்சிருந்தும் அந்த சின்ன வயசு போலீஸ்காரனை புலிகிட்ட பலிகடாவா வுட்டுப்புட்டு ஓடிப்புட்டாங்களே. இன்ஸ்பெக்டர் இன்னாடான்னா சுட்றதை விட்டுப்புட்டு பனைமரத்தில ஏறிட்டான். என்னைக்கும் இவங்களால புடிக்க முடியாதுபா தெரிஞ்சிக்க.. படுபாவிங்க புலி புடிக்கிறேன் புலி புடிக்கிறேன்னு ஒரு புலிய புடிக்க எம்மாம் பேருடா?. போலீஸ்காரங்க கும்பல், தாசில்தார் கூட ஒரு கும்பல், கலெக்டரு, ஃபாரஸ்ட்காரங்க, மந்திரி, எம்.எல்.ஏ., அவங்களோட கைத்தடிங்கன்னு தேப்பை தேப்பையா வந்து பேசிப் பேசி….த்.த்.தூ..! புலி கூட மூணு நாளைக்கு ஒரு ஆட்டதானய்யா முழுங்கிச்சி. புலியை சாக்கிட்டு புண்ணியவானுங்க தினத்துக்கு ஒரு ஆட்டை முழுங்கினாங்களேய்யா. பேச வந்துட்டீயே ஊரு பெர்தனக்காரர்தான நீ?. இதுக்கோசரம் நீ இன்னா பாடு எடுத்தே விரலை நீட்டு பார்ப்போம்.?.

பத்து பாஞ்சி நாளா வடிச்சி வடிச்சி கொட்டிக்கிணு கீறமே இன்னா செலவாச்சி?, எப்படி சமாளிக்கிறீங்க?, ஒரு வார்த்தை கேட்டியா?. இன்னமோ தாங்கனவனாட்டம் இப்ப வந்துட்டியே த்தூ!.போய்யா அப்பால. போலீஸு வர்றான், கலெக்டர் வர்றான், அதிகாரி வர்றான், மந்திரி வர்றான், எம்.எல்.ஏ. வர்றான்னு இதுவரைக்கும் ஒரு கடை ஆடுங்களுக்கு மேலயே அறுத்தாச்சிபா. (ஒரு கடைன்றது பத்து ஆடுங்க) மொத்தத்தில புலி புடிக்கிற விஷயத்தில புலி பின்னமில்லாம தப்பியோடிப் போயிடுச்சி, புடிக்கிறேன்னு வந்த போலீஸ்காரனும் பின்னமில்லாம போய் சேர்ந்துட்டான். நம்மூர்ல நாமதான்யா பின்னப்பட்டுப் நிக்கிறோம். ரெண்டு பொணம் விழுந்துப் போச்சி. நம்ம ஆடுங்கதான் ஜீரணமாயி பீ யாப் போச்சி. த்தூ!…”——நாட்டாமை மவுனமாகி விட்டார்.

“அவ்வளவுதான் கதை முடிஞ்சிப் போச்சி.”—என்றார் தாத்தா.

“ஐயோ தாத்தா அப்புறம் சிறுத்தைப்புலி என்னதான் ஆச்சி?.”

“அப்புறம் அந்த ஏரியாவிலேயே அந்த சிறுத்தைப்புலி தென்படல. எடம் மாறி வண்டலூர் காட்டு பக்கம் போயிருக்கலாம் இல்லேன்னா போளூர் வழியா ஜவ்வாது மலை பக்கம் போயிட்டிருக்கும்னு ஃபாரஸ்ட்காரன் சொல்லிட்டான். அவ்வளவுதான் கடைசி வரைக்கும் யாராலேயும் அதை கண்டுபிடிக்கவே முடியலடா. அதான் நெசம். “ —அப்போது என் கணவர் குறுக்கிட்டார்.

“அய்யா! இத என்னால நம்ப முடியல. சிறுத்தைப்புலி அடிச்சி இழுத்தும்போன ஆடுகளையும், நாய்களையும் கண்டுபிடிக்க முடியாதபடி அப்படி எங்கதான் வெச்சி தின்னிருக்கும்?.”—-பெரியவர் அவரை ஊன்றிப் பார்த்தார்.

“அம்பது அறுவது வருஷங்கள் கழிச்சி இன்னைக்கு அந்த ஆராய்ச்சி நமக்குத் தேவை இல்லைபா. ஆனாலும் சொல்றேன். இது நடந்து மூணு வருஷங்க கழிஞ்சிதான் ஊர்ல ஒருத்தருக்கும் புரியாமல் இருந்த அந்த ரகசியம் வெளிப்பட்டுச்சி. புரிசை ஏரி ரொம்ப பெருசு ஒரு தடவை கலிங்கல் சாய்ஞ்சா மூணு போகம் கியாரண்டி, சமயத்தில நாலாம்போகம் தாளடி கூட விளைஞ்சிடும். சிறுத்தைப்புலி சம்பவம் நடந்ததுக்கப்புறம் அடுத்த ரெண்டு வருஷம் மழை பெய்யல. பொய்த்துப் போயி ஏரி மொட்டென்று காய்ஞ்சி போச்சி. ஆட்டுக்காரங்க ஏரிக்குள்ள ஆடுமாடுங்களை விட்டு மேய்க்க ஆரம்பிச்சாங்க. நடுஏரியில குன்று ஒண்ணு இருக்கு, அதிலஒரு சின்ன குகை. எல்லா எலும்புக் குவியல்களும் அதுக்குள்ளதான் கிடந்திச்சி.

“அடச்சே! சூப்பரு. உங்க யாருக்கும் அந்த யோசனை வரலியா?.”

“இல்லைபா. அந்த சமயம் புரசை ஏரியில தண்ணி பர்த்தியாக ஊத்தோடிங் கிடந்திச்சி, அதோட சிறுத்தைப் புலி தண்ணியில நல்லா வேகமா நீந்தக் கூடியது என்ற கான்செப்டை யோசிக்க தவறிட்டோம். என்னதான் காரணம் சொல்லிக் கொண்டாலும், மனுஷன் யோசிக்க முடியாத ஒரு இடத்தை அது செலக்ட் பண்ணுச்சி பாரு அதுதான் அது வாழறதுக்கான உத்தி. மொத்தத்தில ஆறறிவுள்ள மனுஷன் அஞ்சறிவு புலி கிட்ட தோத்து போயிட்டான்யா. இதான் இதுல இருக்கிற ஒன் லைன் தீம்.”

அப்போது எங்க பிள்ளைகள் ஆதித்யாவும், அர்ஷித்தும், ஆத்ரூவும் சிரிச்சிக்கிட்டே.

“ஏன் தாத்தா! இது கதை தானே?. நிஜமா நடந்ததுன்னு சொன்னீங்களே அது பொய்தான?.”

“அடப்பாவிங்களே! திடீர்னு ஏண்டா உங்களுக்கு இந்த சந்தேகம்?.நெசம்டா. அம்பது அறுவது வருசங்களுக்கு முன்ன அந்த ஊர்ல நடந்த சம்பவம்டா இது.”

“அப்ப அந்த ராகவன் போலீஸ்காரன் மூஞ்சியில இருந்த ரத்தத்தை வழிக்கும்போது கண்ணு தெரிஞ்சா இப்படியே போயிட்றது, இல்லேன்னா புதருக்குள்ள பூந்துடலாம்னு நெனைச்சான்னு சொன்னியே.”

“ஆமாம்.”

“அவன் நெனைச்சது உனுக்கு எப்பிடி தெரிஞ்சிது?. சொல்லு..சொல்லு….சொல்லு. ஹ..ஹ..ஹா..ஹ..” – வீட்டில் நாங்களெல்லாம் கூட கைத்தட்டி சிரிச்சிட்டோம். தாத்தா டூப் அடிக்கிறாரு டோய்! என்று ஆத்ரேயனும், வினோதினியும் சிரிச்சிதுங்க.

அப்போதுதான் தாத்தா குனிஞ்சி மண்டையைக் காட்டி இதுதான்டா அந்த சிறுத்தைப்புலி அறைஞ்ச வடு என்றார். உச்சந்தலையில் அகலமான நீள வடு. சட்டென்று அந்த இடத்தில் ஒரு அமைதி வந்து விட்டது. நாங்கள் நெகிழ்ந்து போய் அவரைப் பார்க்க, எங்கள் ஆத்ரேயனும், வினோதினியும், தாத்தா என்று ஓடிப் பொய் அவரை கட்டிக் கொண்டார்கள்.

– குவிகம் குறும் புதின போட்டி ஆகஸ்ட் 2021 ல் பரிசு பெற்ற குறுநாவல்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *