ஏதோ ஒன்னு இருக்கு…

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: December 15, 2021
பார்வையிட்டோர்: 66,562 
 

சிந்துவிற்கு எழுத்தாளர் சுஜாதா எழுதிய புத்தகங்கள் மீது மோகம். அன்றும் வழக்கம் போல வாசலில் தன்னை மறந்து “மூன்று குற்றங்கள்” வாசித்துக் கொண்டிருந்தாள்.

“வெளக்கேத்துற நேரமாச்சே.. மூஞ்ச கழுவி பொட்டு வச்சு தலைசீவி லட்சணமா இருப்போம்னுலாம் தோணாது… தொடப்ப கட்ட… போயி அந்த சைலஜாவ பாரு… ” மீண்டும் சிந்துவை வசைப்பாடினாள் அவள் அம்மா விசாலம்.

“சரி நான் போய் அப்ப சைலஜாவ பாத்துட்டு வரேன்… ”

நீல நிற டாப்பின் மீது கறுப்பு நிற துப்பட்டாவை அணிந்து. தன்னுடைய புது டியோ வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் சிந்து.

ஆவடி என். எம் சாலையில் கன்னிகாபுரம் கயல் சூப்பர் மார்க்கெட் தாண்டி நேரே வரும் குறுக்குத் தெருவில் சைலஜாவின் வீடு. டூவிலரில் சென்றால் 20 நிமிடங்களே ஆகும்.

இறங்கினாள்.

தனது மொபைலை எடுத்து சைலஜாவை வெளியே வருமாறு சொல்லலாம் என எடுத்தாள்.

“வாடி சிந்து…. ”

சைலஜாவின் அம்மா.

“ஆன்டி.. சைலூ இல்லயா…?”

“உள்ள இருக்காடி… நீ வா… ”

“இதோ வரேன் ஆன்டி… ”

டியோவை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி. உள்ளே நுழைந்தாள்.

நேர்த்தியாக வகிடு எடுத்து சீராக இடுப்பு வரை நீண்ட கூந்தலில் ஒற்றை பின்னல். வலது காதிற்கு பின் புறமாக பின்னலுக்கு பக்கத்தில் சிறியதாக ஒரு பன்னீர் ரோஜா. வில்லினை போல வளைந்த புருவம். காஜல் இடப்பட்ட பளிச் கண்கள். மெரூன் நிறத்தில் பொட்டு. அதற்கு மேலே மெலிதாக இடப்பட்ட திருநீறு. பார்ப்பதற்கு லட்சணமாய் மஞ்சள் நிற சுடிதாரில் வந்து நின்றாள் சைலஜா.

சிந்துவை பார்த்து மகிழ்ச்சியில், “ஹேய்.. சர்ப்ரைஸ்.. வா வா உள்ள வா.. ” என்று சிந்துவை கைகளை பிடித்து அழைத்துச் சென்றாள்.

“உக்காருடி…”

கிச்சனுக்குள் சென்றவள் ஒரு சிறு கிண்ணத்துடன் வந்தாள்.

“ம்.. இந்தா.. கேசரி எடுத்துக்கோடி.. நானே செஞ்சது. இன்னிக்கு அமாவாசை இல்ல. வீட்ல தாத்தா வுக்கு படையல்.. ” என்றாள் சைலூ.

கிண்ணத்தை வாங்கி ஒரு ஸ்பூன் கேசரியை வாயிலிட்டாள். மென்று விழுங்கினாள். கேசரி உள்நாக்கிலிருந்து தொண்டைக்கு வழுக்கிச் சென்றது.

“நல்லாயிருக்கு.. ஆனா நெய்யில கொஞ்சம் கேசரி கம்மியா இருக்கு.. ” என்று சைலூவை பார்த்து சிரித்தாள். பதிலுக்கு சைலுவும் சிரித்தாள்.

“கேசரின்னா அப்படி தான் நிறைய நெய் போட்டு செய்யனும்டி… ”

“சும்மா சொன்னேன்டி.. கேசரி செம.. உன் கூட பேசனும்… மாடிக்கு போலாமா… ”

“சரி வா போலாம்”

கேசரி கிண்ணத்தை கிச்சன் ஸிங்கில் போட்டுவிட்டு. “நானும் சிந்துவும் மாடில பேசிட்டு இருக்கோம் மா… ”

அம்மாவிடம் சொல்லிவிட்டு இருவரும் மாடிக்கு சென்றார்கள்.

மாடியில் தண்ணீர்த் தொட்டிக்கு மேலேறும் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டார்கள்.

சிந்துவும் சைலஜாவும் பால்ய சிநேகிதிகள். ஒரே பள்ளி ஒரே கல்லூரி படித்தவர்கள். தற்போது ஒரே அலுவலகத்திலும் பணி புரிகிறார்கள். ஏறத்தாழ 18 வருட நெருக்கமான நட்பு. சைலஜா கடவுள் நம்பிக்கை மிகுந்தவள். சிந்து முற்போக்கு சிந்தனை கொண்டவள், இறை மறுப்பாளர். ஆனாலும் இது அவர்களுக்குள் எந்த பிரிவினையும் ஏற்படுத்தவில்லை. இருவரும் அவரவர் சித்தாந்தத்தை மதித்து நல்ல ஆழமான புரிதலுடன் நட்பாக பழகி வந்தவர்கள்.

“ம்.. சொல்லுடி.. என்ன விஷயம்.. ”

“எல்லாம் நம்ம ஆபிஸ் பத்தி தான்”

“அ….அதுவா.. அத ஏன்டி இப்போ ஞாபகப்படுத்துற.. நானே இப்ப தான் அத மறந்து கொஞ்சம் நிம்மதியா இருக்கேன்.. “தொண்டையில் எச்சிலை விழுங்கி கொஞ்சம் பயம் கலந்த உணர்வில் சைலூ.

“அது இல்லடி.. பயப்படாத.. நாளைக்கு அது என்னனு பாத்துடலாம்னு இருக்கேன்.. ”

“உனக்கு ஏன்டி தேவை இல்லாத வேல.. உனக்கு ஏதாச்சும் ஆச்சு னா… ”

“என்ன…? அந்த பேய் என்னை கொன்னுடுமா.. ?”

“ப்ச்.. பேய் எல்லாம் இல்லடி.. அங்க வேற ஏதோ ஒன்னு இருக்கு… அதெப்படி நைட் 11 மணிக்கு மேல கரெக்டா அப்படி சத்தம் வருது. அதுவும் நைட் ஷிப்ட் ல நீ நான் சுந்தர் மட்டும் தான் இருக்கோம்… வாட்ச்மேன் தூங்கிடுறாரு… ”

“ஆங்… அந்த ஏதோ ஒன்னு தான் என்னனு கண்டுபிடிக்கனும்..”

“நம்ம லேடீஸ் டி.. நமக்கு ஏன் ரிஸ்க். நம்ம பாஸ் கிட்ட சொல்லிடலாம்…”

“ஏன் பாஸ் க்கு மட்டும் தலையில ரெண்டு கொம்பு முளைச்சிருக்கா. லேடீஸ் னா ரிஸ்க் எடுக்க கூடாதா? நீ ஏன் இப்படி பயந்துட்டே இருக்க? உனக்கு தான் உன் கடவுள் கூடவே இருக்காருல. அப்புறம் என்ன… ”

“இருந்தாலும்.. கொஞ்சம் யோசிடி”

“நாளைக்கு ரெண்டுல ஒன்னு பாக்க தான் போறேன்டி. நோ அதர் சாய்ஸ்.. ”

“ஏய்.. நீ அடங்க மாட்ட.. சரி தனியா எதுவும் பண்ணாத நான் உன் கூட இருக்கேன்.. ”

“ஹிஹ்ஹி.. நீயா…சரிடி.. நான் கெளம்புறேன். இந்நேரம் எங்கம்மா பத்ரகாளியா மாறி இருக்கும்.. ”

இருவரும் எழுந்து மாடியிலிருந்து இறங்கி வீட்டிற்குள் சென்றார்கள்.

சிந்து டியோவை ஸ்டார்ட் செய்து எடுத்து வீட்டிற்கு கிளம்பினாள்.

மணி இரவு 8:45 ஆகி இருந்தது. நேராக கிச்சனுக்குள் சென்றவள். ஒரு தட்டினை எடுத்து. கடாயில் இருந்த உப்புமாவை போட்டு சாப்பிட்டு விட்டு. தட்டினை கழுவி எடுத்து வைத்து விட்டு. மீண்டும் “மூன்று குற்றங்கள்” ளில் முழ்கி இருந்தாள்.

அப்படியே தூங்கியும் விட்டாள்.

பொழுது விடிந்தது. அன்று ஏனோ சூரியன் அவ்வளவாக பிரகாசிக்கவில்லை. கருமேகங்கள் சூழ்ந்து கருப்பு விடியலாக இருந்தது.

காபியை குடித்துவிட்டு. குளித்து முடித்தவள். அம்மாவிடம் சொல்லிக்கொள்ளாமலே மாலை 8 மணிக்கு அலுவலகத்திற்கு டியோவை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டாள் சிந்து.

இவளுக்கு முன்னால் சைலஜா அலுவலகத்திற்கு வந்து இருந்தாள்.

சைலஜா அன்று சற்று படபடப்புடனே காணப்பட்டாள். சிந்துவோ வழக்கமான நிதானத்துடனே இருந்தாள்.

நேரம் செல்லச் செல்ல சைலூவின் பதைபதைப்பு அதிகமாகிக் கொண்டே இருந்தது.

“ஏன் சைலூ இவ்ளோ டென்ஷனா இருக்க.. வாயேன் கேன்டின் போய் ஒரு டீ குடிச்சிட்டு வரலாம்.. வெளிய வேற செம மழை.. இப்போ டீ வித் சமோசா செமயா இருக்கும்”

“டைம் பாத்தியா சிந்து.. 11 ஆக போகுது. இப்ப கேன்டின் பக்கம் அவசியம் போகனுமா… ”

அவள் சொல்லி முடிக்கவும் மின்சாரம் துண்டித்து இருள் சூழவும் மிகச்சரியாக இருந்தது. எமர்ஜென்சி லைட்டை தேடி எடுப்பதற்குள் கேன்டின் வாசல் அருகே “டமார்” என்ற சப்தம்.

ஸ்டோர் பக்கமாக கதவின் அருகே வைக்கப்பட்டிருந்த பழைய பிரிண்டரின் பின்னே தடதடவென ஏதோ சப்தம்.

சைலூ சிந்துவின் தோளை இறுகப்பற்றிக் கொண்டாள்.

“சிந்து அந்த சப்தம் கேட்டியா.. ஆரம்பிச்சுடுச்சி டி..” அவள் கண்களில் பீதி பிரதிபலித்தது.

சரியாக ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை பிரிண்டரில் தடதடவென சத்தம் கேட்கும். சரியாக 12 மணிக்கு நின்று விடும். தினமும் இப்படி நடப்பது உண்டு.

பல ஆண்டுகளாக பயன்படுத்தபடாமல் இருந்த பிரிண்டர் தினமும் இரவில் ஒரு மணி நேரம் யாரோ பிரிண்ட் செய்ய பயன்படுத்துவது போல தடதடவென சப்தம் கேட்கும். அதிலும் குறிப்பாக 11 முதல் 12 மணி வரை.

அன்றிரவு மழை நின்ற பாடில்லை. எமர்ஜென்சி லைட்டை ஏற்றும் வேளையில் ஜன்னலோரம் ஏதோ ஒரு உருவம் மேலிருந்து கீழாக வேகமாக நகர்வதை இருவருமே உணர்ந்தார்கள்.

இப்போது சிந்துவிற்கும் லேசான ஒரு பயம் தொற்றிக் கொண்டது.

இவர்களிடம் நேரம் சுந்தரும் வாட்ச்மேனும் புகைப்பிடிக்க வெளியில் சென்றவர்கள் வரவேயில்லை.

“பாஸ் க்கு போன் பண்ணுடி… எனக்கு ஏதோ பயமா இருக்கு… ” குரல் தழுதழுக்க கூறினாள் சைலஜா.

போனை எடுத்துப் பார்த்தாள் சிந்து. “மழைக்கு சுத்தமா சிக்னல் இல்லடி. கால் போகாது.. நீ பதட்டப்படாத…”

“சரி இரு… என்னோட போன்ல ட்ரை பண்றேன்… ”

போனை எடுத்துப் பார்த்தாள்.

“எனக்கும் சிக்னல் இல்ல.. இப்ப என்னடி பண்றது. நான் அப்பவே சொன்னேன்ல இந்த ஆராய்ச்சி எல்லாம் வேணாம்னு.. ”

பயத்தில் இருவருக்கும் வியர்க்கத் தொடங்கியது.

“நீ அமைதியா இரு சைலூ…”

மெல்ல அடி மேல் அடி வைத்து இருவரும் அந்த பழைய பிரிண்டர் அருகில் சென்றார்கள். காலில் ஈரமாக பிசுபிசுவென்று தட்டுப்படவே கீழே லைட் அடித்து உற்றுப் பார்த்தார்கள்.

சிவப்பு நிறத்தில் ஒரு திரவம் ஓடிக்கொண்டிருந்தது.

“சிந்து… இரத்தம் டி…” அலறினாள் சைலஜா.

வியர்வையில் நெஞ்சுப்பகுதி முழுவதும் நனைந்துவிட்டது சைலுவிற்கு. உடல் நடுங்கத் துவங்கியது அவளுக்கு.

ஏதோ ஒரு தைரியத்தில் பிரிண்டரை லேசாக அசைத்தாள் சிந்து. பிரிண்டரின் மீது கை வைத்த நொடி ஏதோ ஒன்று சிந்துவின் கைகளின் மீது ஏறி குதித்து சென்றது.

“ஆ… ”

இருவரும் அலறினார்கள்.

சட்டென மின்சார இணைப்பு வந்தது. அலுவலகம் வெளிச்சத்தில் நிரம்பியது.

வெளிச்சம் வந்த மறுவினாடி பெருச்சாளி ஒன்று கிடுகிடுவென்று கேன்டின் கதவு வழியாக வெளியில் சென்றது. உடனே ஒரு பூனை அதை துரத்திக் கவ்வியது.

“இந்த பெருச்சாளி தானா.. ” தலையில் அடித்துக் கொண்டாள் சிந்து.

“அப்போ அந்த இரத்தம்”

“அது இரத்தம் இல்லடி. சுவர் மேல இருந்த சிவப்பு கலர் பெயிண்டை பூனை கீழே தள்ளி இருக்கு. அது சரியா மூடி வைக்கல போல பெயிண்ட் சிந்தியிருக்கு..”

“அப்போ அந்த ஜன்னல் கிட்ட நகர்ந்த உருவம்” அதிர்ச்சி குறையாத சைலு.

“வா.. போய் பார்ப்போம்.. ”

இருவரும் வெளியில் சென்று பார்த்தார்கள். ஜன்னலுக்கு கீழே தரையில் மரத்தின் கிளை ஒன்று காற்றுக்கு ஒடிந்து விழுந்து கிடந்தது.

இருவருக்கும் பெருமூச்சு எழுந்தது.

“இந்த பெருச்சாளிக்கும் பூனைக்கும் ஒடிந்து விழுந்த கிளைக்கும் ஒன்னும் இல்லாத விஷயத்துக்கெல்லாம் நாம இப்படி பயந்தோம்.. சே… ” என்றாள் சைலஜா.

“வாழ்க்கையில் எல்லா மூடநம்பிக்கைக்கு பின்னாடியும் இப்படி ஒன்னும் இல்லாத விஷயம் இருக்க தான் செய்யுது.. ” என்ற சிந்து புன்னகையுடன் அன்றைய ஷிப்ட் முடிந்து இருவரும் டியோவில் புறப்பட்டார்கள்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஏதோ ஒன்னு இருக்கு…

  1. கதையின் இறுதிவரை விறுவிறுப்பு நிறைந்திருக்கிறது. அது என்னவோ ஏதோவென்று கையைப் பிடித்து அழைத்துச் செல்லும் கதையின் நடையழகு சிறப்பு. வாழ்த்துகள் தோழர்..

  2. விறுவிறுப்பு குறையாத கதை… சிறப்பு வாழ்த்துகள் தோழர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *