தலை யெழுத்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 2, 2024
பார்வையிட்டோர்: 1,480 
 
 

(1961ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

இந்த மனுஷாளைக் கணடாலே எனக்குப் பிடிக்கல்லே. ரொம்ப நல்லவன்கள் மாதிரி வேஷம் போடறா. 

இந்த வண்டிக்காரன் இருக்கிறானே, அவனும் இந்த மாதிரி மனுஷன்தான். அவன் மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு வந்த ஜோரைப் பார்க்கவேண்டுமே! மாட்டுக்கோ ஒரு கொம்பு ஒடிசல். அதில் எண்ணெய்த் துணி சுத்தியிருக்கு. கழுத்திலோ புண். வண்டிக்குள்ளே ஜரிகை வேஷ்டி மிராசுதார். ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகத் தாரளமாய் இரண்டணா சத்தம் கொடுக்கிறே னென்று பேசியிருப்பார். வண்டிக்காரன் இடுப்பிலே நாலுமுழ வேஷ்டி. அது கப்பிரோட் நிறம். தலையிலே கந்தல் முண்டாசு. கையில் – அதென்ன? சாட்டைக் குச்சியா, தார்க் குச்சியா? அவன் முகத்தில் ஒரு நாளைக்கு எட்டணா சம்பாதிக்கற களை. மாட்டு உடம்பிலே தேங் காய் உறிக்கலாம். அதன் வாலோ கார்க்குத் திருகி மாதிரி இருக்கு. மூச்சுக் கொருதரம் அந்த வாலைப் பிடிச்சுக் கடிச்சால் அதில் முப்பத்தஞ்சு முடிச்சு விழாமல் என்ன செய்யும்? பாவம்! 

மாடுபாட்டுக்கு மலைப்பாம்பு வேகத்தில் வந்து கொண்டிருந்தது. நான் தேமேன்னு ரோட்டிலே வண்டிக்கு எதிர்ப்பக்கமாக வந்துகொண் டிருந்தேன்.நான் சரியாக எச்சில் இலை சாப்பிட்டு எட்டு நாள் இருக்கும்; அகப்படவே இல்லை. இந்தப் பெரிய நாய்கள் எச்சில் இலைக்கு விழுந்தடிச்சுக் கடிச்சுக்கற ரகளையிலே எனக் கென்ன கிடைக்கப்போறது? ஒடம்பு அரை ஓடம்பாய்ப் போச்சு. வேணா என் கண்ணைப் பாருங்கோ-குழி விழுந்து கறுத்துப் போயிருக்கோ, இல்லையோ? எல்லாம் வயத்துக் கில்லாமதான். காது கும்முன்னு இருந்தது. கண் பூச்சி பறந்துது. பசியோ பிச்செடுத்தது. இப்படி வந்தேன்.கால் ஒண்ணோடெ ஒண்ணு பின்னிக்கிண்டுது. வண்டிக்குள்ளே இருந்த எஜமான் என்னவோ நெய்ப் பக்ஷணம் திங்கறார் இன்னு என் மூக்குச் சொல்லித்து. கேட்டுத்தான் பார்க்கலாமே இன்னூட்டு வாலைக் கொஞ் சம் தழைச்சுக்கொண்டு குழைச்சுக்கொண்டு வண்டி கிட்டெ போனேன். 

நான் எதிர்த்தாப்போலே போனேனா. வண்டிக் காரன் என்னைப் பார்த்தூட்டான். நான் ஏர்க்காலடி யிலே வந்தப்போ, என் மூக்குக்கு எதிரே சக்கரம் வந் கொண்டிருந்தது. என்னைப் பார்த்தானோ இல்லையொ, ”செத்துப்போகணும்னு உனக்கு ஆசையா?” இன் னூட்டு இரக்கப்பட்டான். ஐயோ பாவம்! ஏழை ஏழை யைப் பார்த்துத்தானே இரக்கப்படுவான்னு நெனச்சுக் கிண்டிருக்கறப்பவே நாயுண்ணி கடிக்கிறாப்பலே முதுகிலே சுரீர் இன்னுது. வலி தாங்கல்லெ.’வாள்,வாள்!’ இன்னு என் சின்னக் குரல்லே அழுதுகொண்டே அந்தண்டை போய்த் திரும்பிப் பார்த்தேன். வண்டிக்காரன் என்னைச் சவுக்காலெ அடிச்சான்னு தெரிஞ்சுது. நெய்ப் பக்ஷண ஞாபகம் சிட்டாய்ப் பறந்து போயிடுத்து. முரட்டுப் பயல்! வண்டிக்காரன் என்ன சொல்லிக்கொண் டிருந்தான் தெரியுமா? ‘சாகாமெ காப்பாத்திவிட்ட உசுருக்குச் சவுக்கடி வலிக்குதோ? நன்னி கெட்ட நாய்!’ இன்னு என்னைத் திட்டிக்கொண்டிருந்தான். 

இவனுக்குப் புத்தி யிருக்கான்னு நான் கேக்கறேன். வண்டிச் சக்கரத்திலெ அம்பிட்டுக்கொண்டா இவனுக் கென்ன நஷ்டம்? எனக்குன்னா லாபம்! அரையணாவுக்கு எனக்குப் பால் வாங்கிக்கொடுக்க யோக்கியதை உண்டா? முழு எச்சல்கலையா ரெண்டு சம்பாதிச்சுத் தர முடியுமா? வேண்டாம். அந்த நெய்ப் பக்ஷணத்தையாவது எனக்கு ஒரு வாய் சிபார்சு செய்யச் சாமர்த்தியம் உண்டோ? இந்த வயத்துக்குப் பறக்கற பரப்பைவிடச் சக்கரத் தடியிலெ மாட்டிக்கொண்டு உசிர் போனால்தான் என்ன மோசம்? என்னைத் தப்பிச்சு விட்டூட்டானாம்! அதுக்காகச் சவுக்கடி அடிக்கப் பாத்தியம் வந்தூட்டுதாம்!… பேச்சுப் பேசறான்,பேச்சு! 

”பொத்! பொத்!! பொத்!!!” 

இதென்ன, இவ்வளவு எச்சில் இலை விழறது! அதிர்ஷ்டம்தான். இருங்கோ, இதோ வந்துவிட்டேன். அடெடெ! அரை டஜன் பெரிய சனியன்கள் வந்தூட்டுதே! இப்பொ என்ன செய்யறது? இனிமே வெறும் இலைகூடக் கிடைக்காது. 

இந்தப் பாழாய்ப்போன வண்டிக்காரனாலே ஜன்மம் வளர்றது! நல்ல தலையெழுத்து! 


இப்பிடி வந்து தெரு ஒரமாய்ப் படுத்துக்கிண் டிருந் தேன். கண்ணைக் கொண்டுபோய்ச் சொருகித்து. கண்ணைத் திறந்த போதெல்லாம் ஒண்ணு கண்ணுலெ பட்டது. ரொம்பச் சிரிப்பு வந்தது. ஆனால் பயம் சிரிக்க; அடக்கிக் கிட்டேன். 

என்ன தெரியுமா? பெரிய நாயிலெ நாலு. ஒண்ணு சொறிபிடிச்சுக் கிழப் பாட்டி மாதிரி இருந்தது. பின்னெ பெருங்காயத்தை ஜமாய்ச்சாக்கெ! பாக்கி மூணும் குதிரை மாதிரி நன்றாக வளர்ந்திருந்தன. ஒன்றுக்கொன்று எச்சில் இலையைத் திங்க விடாமெ அடிச்சுக்கிண்டு கடிச்சுக்கிண்டு கிடந்தது. ஆள்கள் குஸ்தி போட்டால் இப்படித்தான் இருக்குமோ என்று நினைச்சுக்கிண்டேன். அப்பிடி முன் காலைத் தூக்கிச் சண்டை போட்டன. இருந்தாலும் அந்தச் சொறி நாய்க்குத்தான் ரொம்பரோஷம். சிணுங்கிக் கிண்டு சிணுங்கிக்கிண்டு கடிச்சதைப் பார்த்தால் காத்து, விட்டு விட்டுச் சீறுமே அதுமாதிரி இருந்தது. அதோடெ நடுவுலே நடுவுலே ஓடம்பை வேறெ சொறிந்துகொண் டது. எவ்வளவுக் கெவ்வளவு அதுக்கு ஸ்வாரச்யம் இருந் ததோ அவ்வளவுக் கவ்வளவு ரத்தக்களரி! சொறிநாயைப் பார்த்தா வருத்தமாய்த்தான் இருந்தது. 

இப்பிடி நான் இரக்கப்பட்டுக்கிண் டிருக்கிறப்பொ ஒரு தமாஷ் நடந்தது. பெரிய மாடு – ஒரு கோவில் மாடு. அது நன்னா வளர்ந்து இருந்துது என்கிறத்துக்காக நான் சொல்ல வரல்லே. நெஜம்மாகவே அது கோவில் மாடு தான்னு அதனுடைய வயத்து மேலே போட்டிருந்த சூலம் சொல்லிக்கிண் டிருந்தது. எனக்கு இடையில் மனக் கணக்கு வேறெ வந்துட்டுது: ஒரு ஒரு கோவில் மாட்டை அழிச்சால் எத்தனை நாய்க் குட்டி என்னைப் போலெ பண்ணலாம்னூட்டு. இந்தக் கணக்கைத் தள்ளி விட்டுப் பெரிய மாட்டைக் கவனிச்சுக்கிண் டிருந்தேன். பெரிய நாய்கள், சண்டை மும்முரத்திலெ இருக்கிறப்பொ மாடு பாட்டுக்குப் புகுந்து எச்சில் இலையை ஜமாய்க்க ஆரம்பிச்சூட்டுது. அநேகமா ஒழிஞ்சே போச்சு,இலை கூட. அப்பொத்தான் இதுகளெல்லாம் முழிச்சுக்கிண் டதுகள். எல்லாமாய் மாட்டண்டெ திரும்பித்து.ஆளுக்கு ஒரு பக்கமாய் நின்னுக்கிண்டு கொலைச்சுது. மாடு மொதல்லெ கவனிக்கவே இல்லை. காரியத்திலேயே கண்ணா யிருந்தது. இப்பிடி இருக்கும்போது அந்தச் சொறி நாய் ஒரு தரம் குப்புன்னு பாஞ்சுது. மாடு பெரிய மனுஷன் மாதிரி தலையை ஆட்டித்து. பாக்கி நாய் களுக்கும் தைரியம் வந்துட்டுது. எல்லாமாய்ச் சேர்ந்து ஒரு தரம் பாஞ்சுது. மாடு ஒரு தரம் கொம்பைச் சாச்சுக் கிண்டு புஸ் இன்னுது. சொறி நாய் பயத்துலெ கீழே விழுந் தூட்டுது. பெரிய நாயெல்லாம் தாத்தாப் பூச்சி பறக்குமே அதுமாதிரி எங்கெயோ ஓடிப் போச்சு. என்னுத்தைப் பெரிய நாய் பிடுங்கினால் பெரிய நாய்கிட்டெ இருந்து மாடு பிடுங்கப்படாதோ? 

அப்பொத்தான் யாரோ என் கிட்டே வந்தாப்பிலெ இருந்தது. கண்ணை முழிச்சுப் பார்த்தேன். சின்னப் பயல் ஒத்தன் -நிஜார் போட்டுக்கிண் டிருந்தான். ஒரு கையிலெ கோலிக் குண்டும் காட்டாமணிப் பாலும் இன் னொரு கையிலெ காட்டாமணிக் கொம்பு. அதன் நுனி யிலெ இருந்து காட்டாமணிப் பால் பலூன் ஜோராய்க் கிளம்பிக்கிண்டிருந்தது. 

என்னைப் பார்த்ததும் அவனு க் கு என்ன தோணித்தோ! ‘த்ஸ், தஸ் புலியா!” என்றான். நான் வாலைப் பூமியிலெ போட்டு அடிச்சுச் சுழட்டிக்கிண்டே அவன் கால் கிட்டெ போனேன். அதுக்குள்ளே இன் னொரு பையன் வந்து சேர்ந்தான். “ஏண்டா சோமு! இது உன் நாக்குட்டியா?” என்றான். 

“இல்லேடா மணி. இப்பொத்தான் வீட்டுக்கு எடுத்துக்கிண்டு போகலாமின்னு பார்க்கறேன். அச்சு நாய்க்குட்டி மாதிரி அழகாய் இருக்கோ இல்லியோ?” 

“அழகாயிருக்கு சரி. அசடோ இல்லியோன்னு பரீட்சை பண்ணாமெ எப்பிடிடா எடுத்துக்கிண்டு போறது?’ 

“ஆமாண்டா, ஆமாண்டா” இன்னூட்டுச் சோமு என் காதைப் பிடிச்சுத் தூக்கினான். பிராணனே போயிட் டுது. ‘வாள் வாள்!’ இன்னு கத்தினேன். 

“சூரப் புலிடோய்!” இன்னான் மணி. 

”பாவம்டா! கொஞ்சம் வேகமாகவே தூக்கிப்பிட் டேன்’ இன்னு என்னைச் சோமு தூக்கிக்கிண்டு சமா தானம் செய்ய ஆரம்பிச்சுட்டான். என்ன இருந்தாலும் எனக்கு உள்ளூறப் பயம்தான்- அடுத்தாப்பிலெ என்ன பண்ணிப்பிடுவானோ இன்னூட்டு. ஒருதரம் அவன் முஞ்சியைப் பார்த்தேன். என் கண்ணிலே ஜலம் வந் தூட்டுது போல இருக்கு. “அதுக்குப் பசிபோலெ இருக் குடா” என்று சொல்லிப்பிட்டு என்னை எடுத்துக்கிண்டு சோமு சந்து வழியாலே நேரே அவன் வீட்டுக் கிணத்தங் கரைக்குப் போனான். 

கிணத்தங் கரையிலெ விட்டதும் அலங்க மலங்கப் பாத்துக்கிண் டிருந்தேன். அதுக்குள்ளே சோமு உள்ளே போய் ஒரு கொட்டாங்கச்சியில் சாதம் எடுத்துக்கிண்டு வந்தான். கோரப் பசியா? அபுக் அபுக்குன்னு மூணே வாயிலெ ஒழிச்சுப்புட்டுத் திருப்பியும் அவன் மூஞ்சியைப் பார்த்தேன். 

“என்ன புலியா! இன்னும் வேணுமா?’ இன்னான். அவன் காலை நக்கினேன். “அப்பிடியா சமாசாரம்?” இன் னூட்டு இன்னொரு கொட்டாங்கச்சி சாதம் கொண்டு வந்தான். அதையும் ஒழிச்சுப் பிட்டேன். உடனே காலெல்லாம் துரு துரு இங்க ஆரம்பிச்சூட்டுது. கொல்லைப் பக்கத்தாலே கிளம்பி ஓடப் பார்த்தேன். “அடேடே! கம்பி நீட்டப் பார்க்கின்றதுடோய்!” இன் னுட்டு என்னைப் பிடிச்சு ஒரு பாக்கு மரத்திலே கட்டிப் பிட்டு அவனும் பக்கத்திலே உட்காந்தூட்டான். அப்புறம் நான் பாட்டுக்கு ஈ பிடிச்சுக்கிண்டே தூங்கிப் போயிட்டேன். 

நல்ல தூக்கம்போலெ இருக்கு. ஏன்னா முழுச்சுக் கிண்டப்பொ கிட்டெ ஒத்தரும் இல்லை. என்னைக் கட்டிப் போட்டிருந்ததா; ஓடி யாடித் திரிஞ்சவனை ஜெயில்லெ போட்டாப்பிலெ இருந்துது. எங்கம்மா பாவம்! முனிசி பாலிட்டிக்காரன் ஒருநாள் பிடிச்சுக்கிண்டு போனானே அவதான் – அவள் சொல்லுவர்- 

‘தலைவலி போச்சாம்; திருகுவலி வந்ததாம்; 
சொதந்தரம் போச்சாம் சோறு வந்ததாம்.’

அந்தமாதிரித்தான் இருக்கு என் பொழைப்பு இன்னு நெனைச்சுக்கிண் டிருக்கிறப்பவே வீட்டுக்குள்ளே பேச்சுக் குரல் கேட்டது. 

‘அந்தச் சனியன் என்னத்துக்குடா சோமு? தொட்டாக்கூட ஸ்நானம் பண்ணணுமேடா.’ 

சோமு சொல்றான்: “நீ வேணத் தொடவேண்டாம். எனக்கு வேணும்.” 

“தொத்தல் நாயைக் கொண்டுவந்து எழவெடுக் கறயே!” 

“ஒனக்குத் தெரியாதுடீ அம்மா. ஒண்ணாம் நம்பர் அச்சு நாய். கோடியாத்துக் கோபாலனைக் கேளு; இல்லேன்னா மூலையாத்து மணியைக் கேளு.” 

“எப்படியானும் தொலைஞ்சு போ.” 

“கோவிச்சுக்காதே. கிட்ட வந்து நாய்க் குட்டியைப் பாத்தூட்டு அப்பறம் சொல்லு. வா, காண்பிக்கறேன்.” 

இப்படிச் சொல்லிக்கொண்டே பொடவைத் தலைப் பைப் பிடிச்சு இழுத்துக்கிண்டே நான் இருக்கிற இடத் துக்கு வந்தான். அப்பொத்தான் தூங்கி எழுந்திருந் தேனா? சோம்பல் முறிச்சுக்கிண்டிருந்தேன். 

”அடே பாவி! கழுத்துலெ கயத்தைப் போட்டுக் கட்டி யிருக்கியேடா! நாய்க் குட்டி செத்துப் போயிடப் போறது!’ இன்னா அம்மா. 

“எனக்குத் தெரியும்டீ” இன்னு அதிகாரம் பண்ணிப்பிட்டு, “என்னமா இருக்கு நாய்” இன்னு கேட்டான். 

“எச்சல்கலை நாய்! நான் இருக்கற சவரணை யோடெதான் அதுவும் இருக்கு!” இன்னு சொல்லிச் சிரிச்சுப்பிட்டு அம்மா உள்ளே போயிட்டாள். 

அம்மா திரும்பி வராமெ இருந்தால் தேவல்லைன்னு நான் நெனைச்சுக்கிண் டிருக்கிறப்பொவே அவள் திரும்பி வந்து எத்தையோ எலும்புத் துண்டைப்போல் எனக்கு முன்னே எறிஞ்சாள். அதைக் கடுக்கு முடுக்குன்னு தின் னேன். அதனாலேதான் அதுக்குப் பெயர் முறுக்கு இன்னு வச்சிருக்காப்போலெ இருக்கு! 

எனக்குச் சோமு மேலெ ரொம்ப ஆசை வந்துட்டுது. அவன் கையையெல்லாம் நக்கினேன். பொய்க்கடி கடிச் சேன். ‘ஒன்னோடெ கொஞ்சி விளையாடற சாமான் ரொம்ப அழகாயிருக்குடா!” இன்னு பரிகாசம் பண்ணிப் பிட்டு அவன் அம்மா உள்ளே மறுபடியும் போயிட்டா. நான் விளையாடினதுலெ சோமுவுக்குச் சந்தோஷம் தாங் கல்லே. “பிலியா! வெளியிலே போவோம் வா” இன்னுட்டு என்னை அவுத்து விட்டுட்டான். எனக்கு ஓடிப்போக ணும்னே தோணல்லே. 

உடனே போனேன். தெருவிலே அங்கே இங்கே நின்ன தொத்தல் நாயெல்லாம் என்னை வெறிக்க வெறிக்கப் பார்த்ததுகள்; வயத்தெறிச்சப்பட்டதுகள்; நான் பாட்டுக்குத் தெரு நாயோடெ நமக்கென்ன பேச்சுன்னு போய்க்கிண் டிருந்தேன். 

கடைசியிலே காவேரிக்கு வந்து சேர்ந்தோம். சோமு மணல்லே விளையாடிக்கிண் டிருந்தான். நானும் காவேரி மணல்லே கிடந்த கிழிஞ்ச துணிகளைக் கடிச்சுக் கொதறி விளையாடிக்கிண் டிருந்தேன். இந்த எழவுக்குக்கூட ஒரு பெரிய நாய் போட்டிக்கு வந்துட்டுது; சே! அப்பிடிச் சொல்லப்படாது. அதுவும் நானுமா அந்தத் துணியை வச்சுக்கிண்டு விளையாடினோம். ஆனால் பெரிய நாயோன்னோ! அது துணியைக் கவ்விக்கிண்டு காவேரி யெல்லாம் ஓடும். நான் எடுத்துக்கிண்டு ஓடறத்துக்குச் சமயம் ஒரு தரம்தான் வாச்சுது, பாத்துக்கோங்கோ! இருந்தாலும் பெரிய நாய் காவேரி மணல்லே நாலுகால் பாச்சல்லே போறதே ஒரு தனி அழகு – அதன் ஒடம்பு ஒரு குச்சிமாதிரி ஆயிடறது. 

விளையாட்டு முடியற சமயம் பசங்களெல்லாம் என்னவோ பக்ஷணம் வாங்கிக்கொண்டு வந்து சாப்பிட் டான்கள். எனக்கும் கிடைச்சுதுன்னு சொல்லணுமா? ‘பாதகமில்லெ. தலையெழுத்து அவ்வளவு மோசமில்லெ’ இன்னு நெனைச்சப்பொ ஒரு தரம் உடம்பு சந்தோஷத் திலெ சிலுத்தது. 

ராத்திரி ஆச்சு. ஆத்தோரம் விளக்கெல்லாம் கண் சிமிட்ட ஆரம்பிச்சூட்டுது. ஹோ ஹோன்னு கத்திக் கிண்டு பசங்கள் வீட்டுக்குக் கிளம்பினான்கள். நானும் சோமுகூடக் கிளம்பினேன். 

வீட்டுக்கு வந்தோமோ இல்லியோ. அவன் உள்ளே போய் ஒரு இலையிலே பாலும் சாதமுமா எடுத்துக்கிண்டு வந்து கிணத்தங் கரையில் வச்சான். நான் சாப்பிட்டுக் கிண்டு இருக்கறப்பவே; ‘நானும் சாப்பிட்டுவிட்டு வரேன்’ னூட்டு அவன் உள்ளே போயிட்டான். போர போக்குலே பாக்கு மரத்திலே கட்டிப்பிட்டான் அசட்டுப் பயல்! 

ரொம்ப நாழியாச்சு. ஒரே குளுர் காத்து. உடம்பு வேறெ சிலுத்துப் போச்சு. சுத்தியும் இருட்டு; சோமு வர வழியாயில்லை. என்ன பண்றதுன்னு தெரியலே. ஓடிப்போறதுக்கும் தோணல்லே. எனக்கும் தெரியாமெ என் தொண்டையிலிருந்து மெதுவா அழுகை எட்டிப் பார்த்துக்கிண் டிருந்தது. இன்னும் நாழியாச்சு. தூத்தல் போட்டுது மெதுவாக் கொல்லைத் தாவரத்திலே போய் ஒண்டிக்கிண்டேன். கூரையிலே சரியாகக் கீத்து இல்லாமெ அங்கேயும் என்மேலே தூத்தல் விழுந்தது. வீட்டுக் குள்ளே வேணாப் போய்ப் பார்க்கலாம்னு கதவைப்போய்ச் சுரண்டினேன். ஏன்னு கேப்பாரில்லெ. மெதுவாகக் கத்தினேன். அதுக்குள்ளே மழை வலுத்துப் போச்சு. ஓடம்பு வேறெ சாரல் காத்துலெ நனைஞ்சு போச்சு. என் குரல் கூடக் குளுரிலே நடுங்கித்து. 

மழை விட்டதும் கொஞ்சம் பலமாகக் கத்தினேன். அப்பவும் சோமு வரல்லே; ஆனால் உள்ளே யாரோ ஆண் பிள்ளை சோமுவின் அம்மாவோட சிள்ளுப் புள்ளின்னு பேசினது காதுலே விழுந்தது. 

“எழவு! நாய் ஊளையிடறது கொல்லையிலெ!” இன்னுது ஆண்பிள்ளைக் குரல். 

“இருக்கும்” இன்னுது பெண்பிள்ளைக் குரல். 

“சனியன்! இந்தத் தெருவிலேயே நாய் அதிகம். முனிசிபாலிட்டிக்கானும் எழுதிப் போடணும் – இன்னும் நாய்த் தொல்லை ஒழியவே இல்லை. அப்படியே இருக்கு இன்னுட்டு.” 

எனக்கு வயத்துலெ புளியைக் கறைச்சுது. விடிஞ்ச தும் எப்படியேனும் ஓடிப் போய்விட்டால்தான் பொழைச் சோம்னு நெனைச்சுக்கிண்டேன். 

காலம்பர விடிஞ்சும் விடியாததுமாய் இருந்துது. பெரியவராய் ஒத்தர் கொல்லைப் பக்கம் வந்தார். என்னைப் பார்த்தாரோ இல்லியோ, ‘இந்தப் பொணந்தான் போலே இருக்கு! ராத்திரித் தூங்கவிடாமல் பிராணனை வாங்கிப் பிட்டுது!’ இன்னார். நான் வாலைக் குழைச்சுப் பார்த் தேன். அவர் மசியல்லே. “சு! சு!’ இன்னு சொல்லிக் கொண்டே என்னத்தையோ எடுக்கக் கீழே குனிஞ்சார். கட்டிப் போட்டிருக்கிற நாயைக் கல்லாலடிச்சா ஓடப் பண்ண முடியுமா? இது தெரியல்லே அந்தப் பெரியவ ருக்கு!வாலைப் பின் ரெண்டுகால் நடுவிலே வச்சுக்கிண்டு பயந்துபோய் நின்னேன். 

அதுக்குள்ளே சோமுவும் வந்துட்டான். “என் நாய்க் குட்டி அப்பா, விறட்டாதே” இன்னான். 

“நாய்க் குட்டியாவது கீக் குட்டியாவதுடா, கழுதை! ராத்திரி, தூக்கம் குட்டிச் சுவராயிடுத்து; பேசறயா?” 

“இல்லே அப்பா; நான் ராத்திரிச் சாப்பிட்ட ஒட னேயே தூங்கிப் போயிட்டேனோ இல்லியோ! மழையிலே யும் குளிரிலேயும் அது கிடந்து கத்தியிருக்கு, அவ்வளவு தான். ரொம்ப சாது” இன்னு சோமு கெஞ்சினான். 

“நீயும் சாதுதான்; ஒன் நாய்க்குட்டியும் சாதுதான். கொண்டாடி பெரம்பை” இன்னு உள்ளே பார்த்து ஒரு கத்தல் பொட்டுட்டு என்னைக் கயத்தோடே அவுத்து வெறட்டி விட்டார். 

செத்தேன், பொழைச்சேன்னு கொல்லை வேலியாலே நுழைஞ்சு கம்பி நீட்டிப்பிட்டேன். தலை யெழுத்து அழியல்லேன்னு தெரிஞ்சிதா! 

மறுபடியும் ராஜவீதிக்கே வந்து சேந்துப் புட்டேன் பார்த்தேளா? என்ன இருந்தாலும் மனிசங்க முக்கால் வாசிக்கு மேலே கெட்டவங்கதான். சரிதானே ; சொல்றது? அப்புறம் கசப்பு வரலாமா படாதா நீங்களே யோசி யுங்கோ. சும்மா சும்மா வீடுகளிலே இருந்து விறட்டிப் புடறதுன்னா எனக்கு என்னமா இருக்குத் தெரியுமா? மார்கழி மாசத்துலே பனிக்குப் பயந்து தெருத்திண்ணை யிலே பள்ளம் பண்ணிக்கிண்டு படுத்துத் தூங்கறது பாருங்கோ எங்க கோஷ்டி, அதுகள் தலையிலே திடீருன்னு வீட்டுக்காரன் வந்து ஒரு குடம் ஜலத்தைக் கொட்டி விரட்டினால் எப்பிடி இருக்கும்? அதே மாதிரிதான் எனக் கும் இருக்கு, இவாளெல்லாம் திடீர் திடீரென்று வீட்டை விட்டு விரட்டறது. இனிமேல் மனுசன் வீட்டுக்கே போகப் படாது; செத்தா போயிடுவோம்னு நெனைச்சு நடையைச் கட்டினேன். 

ஒரு சந்து நிறைய இலை கிடந்தது.எங்க பெரிய கோஷ்டி ஒண்ணுகூடக் காணோம். ஆச்சரியமாக இருந் தது!முனிசிபாலிடிக் காரங்க செஞ்சதும் கூட ஒரு விதத் திலே தேவல்லை யோன்னு நெனைச்சுப் புட்டேன். கஷ்டம் வந்தால் புத்தி எப்பிடி யெல்லாம் ஓடறது ‘சை! மன சே’ன்னு கண்டிச்சுப்பிட்டு இலை யெல்லாம் மண்ட ஆரம் பிச்சேன். நிறைய இட்லித் துணுக்கு, தோசைத் துணுக்கு! எவ்வளவு ஜோரா யிருந்தது தெரியுமா? ஆனால் ஒரு சின்னப் பிசகு நடந்துபோச்சு; மொளகாப் பொடீன்னா எனக்கு என்ன தெரியும்? எதிலேயோ சேர்ந்து கிடந்த தைத் தின்னுவிட்டேன்போல் இருக்கு. நாக்குத் துடிச்சுப் போச்சு; வாயிலே ஜலம் ஜலமாகக் கொட்டித்து. எப் பிடியோ அப்புறம் சமாளிச்சுக் கிண்டேன். வயறு விண் ணிட்டுப் போச்சு, அடுத்தாப்போல் தாகமெடுத்தூட் டுது. என்ன செய்யலாம்னு பார்த்தேன். 

கொல்லை வாசல் ஒண்ணு திறந்திருந்துச்சு: மெது வாக உள்ளே நுழைஞ்சு கிணத்தங்கரைக் கிட்டேப் போனேன். ஒத்தரையும் காணோம். வாழை மரத்தடியில் கொஞ்சம் ஜலம் தேங்கிக் கிடந்துது. அதைக் குடிக்கலாம்னு நெனைச்சுக்கிண் டிருக்கிறப்பவே கம்முன்னு ஒரு வாசனை வந்தது. மறுபடியும் கவனிச்சப்பொ கிணத்தங்கரைக் கிட்டே பாத்திரங்கள் கிடந்துது. ஒண்ணுலே பால்மாதிரி இருந்துது. மூஞ்சியைப் பாத்திரத்துக்குள்ளே விட்டு நக்கிப் பார்த்தேன். அது பாலில்லை; ஆனால் அதைவிட இன்னும் ரொம்ப நன்னாயிருந்தது. அந்தமாதிரி நாலஞ்சு பாத்திரத்திலே அம்புட்டுது. 

இப்படி இருக்கிறப்போ ஒரு குரல் உள்ளே யிருந்து கத்தித்து, ‘நாயர்! காபி டபரா அலம்பிக்கொண்டுவா; எத்தனை நாழி?” 

“இதோ வருது” இன்னான் ஓர் ஆள். அப்போத் தான் அங்கே ஒரு வீடுகூட்டி இருந்தது எனக்குத் தெரிஞ் சுது.”ஒன்னாலே வேலை கெட்டுப் போவுதுன்னு’ அவளைப் பொய்க்கானும் ஒரு அடி அடிச்சுட்டு டபராவை அலம்ப வந்தான். 

எனக்குப் பியமாய்ப் போயிடுத்து. அந்தண்டை போனேன். என் மூக்கில் இருக்கிற தித்திப்பை நாக்காலே நக்கிக்கொண் டிருக்கிறப்போ அவன் என்னைப் பார்த் தான், அப்புறம் பாத்திரத்தைப் பார்த்தான். “இந்த நாக்குட்டி சுத்தமா நக்கி விட்டிடுச்சு. பாவம், ஆசையைப் பாத்தியா?’ இன்னான். 

“ஆமாம் ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு ஆசை” இன்னுட்டுப் பெண்பிள்ளை கோணலாய்ச் சிரிச்சாள். 

“புரியுது, புரியுது” இன்னுட்டு அவ்வளவு பாத்திரத் தையும் ஒரு தரம் தண்ணித் தொட்டியிலே போட்டு எடுத் துக்கொண்டு ஓடியே போயிட்டான் அந்த ஆள். 

ருசிகண்டநாயாச்சா? கொல்லை வாசல் கிட்ட முன்னங் காலை ஊனி நிமிந்து டபரா இன்னும் வராதா என்கிறாப்போலே பார்த்துக்கிண்டு உட்கார்ந்திருந்தேன். மறுபடி நாயர் கொல்லைப் பக்கம் வந்தப்பொ ஒரு டபரா நிறையக் காபி கொண்டுவந்து வீடு கூட்டிக் கிட்டக் குடுத்தான். அவள் சாப்பிட்டாள். பாத்திரத்திலே பாக்கி இருந்திருக்கும் போல இருக்கு. த்ஸ், த்ஸ் இன்னு என்னைக் கூப்பிட்டு ஒரு கொட்டாங்கச்சியில் மிச்சத்தை ஊத்தி என் முன்னே வச்சான். வாலைக் குழச்சுக்கிண்டு போய்ச் சாப்பிட்டேன். 

அப்பவே பிடிச்சு அங்கேயே இருக்கலாம்னு யோசிச் சுப் பிட்டேன். நாயர் எனக்குச் சிநேகமாயிட்டான். அப்பப்பொ கொல்லையிலே ஏதாவது கிடக்கிறதைச் சாப்பிடறது. பாக்கிப் பொழுதெல்லாம் விறகு அடுக்கி யிருக்கிற இடத்துக்கு அடுத்தாப்போலே வாலைச்சுருட்டிக் கிண்டு படுத்திருக்கிறது.இப்படியே பொழுதைப் போக்கி னேன். கிளப்புக்காரன் என்னைப் பார்க்காமல் இல்லை. இருந்தும் தொலைஞ்சு போகட்டும்னு விட்டுட்டாப் போல இருக்கு. 

இப்பிடி யோகம் அடிச்சுது. என் உடம்பு கோளி குண்டுமாதிரி உப்பிப் போச்சு. முதுகிலே ஒரு சொட்டு ஜலம் விழுந்தால்கூட உடனே கால் நகத்துக்கு வழிஞ்சு வந்துடும். அவ்வளவு மதமதப்பா ஆயிட்டுது உடம்பு, ஆனால் உடம்பு சமாசாரம் எனக்கு நேராக எப்படித் தெரியும்? தெருவிலே ஒரு பிச்சைக்காரன் தினம் போயிண்டிருந்தான். என்னை எப்பிடி உத்து உத்து அவன் பார்ப்பான் தெரியுமா? இந்த மாதிரி பாத்தப்பொ என் னைப்பத்தி அவன் சொன்ன பேச்சு அது. 

யோகம்னா கொஞ்ச நாளைக்குத்தான். ஒருநாள் ராத் திரி வழக்கம்போல் படுத்துத் தூங்கிக்கொண் டிருந்தேன். என்னவோ திடீருன்னு என் மேலே விழுந்தது. அது ஒரு ஆளுடைய கை. அப்பறம் என் வாயை யாரோ கெட்டி யாப் புடிச்சுக்கிண்டுட்டா. கத்தக்கூட முடியல்லே. பயம் பயமாய் வந்துது. அம்மாவைப் பிடிச்ச முன்ஸிபாலிடி எமன் நம்மையும் பிடிச்சுக்கிடூட்டுது இன்னு தீர் மானம் செய்தேன். ஆனால் ராத்திரி, முனிஸிபாலிடிக் காரன் வரமாட்டானே இன்னு ஒரு நம்பிக்கை. ஆனபடி ஆகட்டும்னு கண்ணை மூடிக்கொண்டேன். ஒரு ஆள் என்னை எங்கேயோ எடுத்துக்கொண்டு போனான். அவ் வளவு பயத்திலேகூடக் கிளப்புக்காரனும் நாயரும் வீடு கூட்டியும் நாளைக்குக் காலம்பர நம்மைத் தேமேனு தேடு வாளே இன்னு துக்கம். நல்லவாள் சகவாஸம் நெடுநாள் நிக்காதுபோல இருக்கு! 

இருந்தாலும் சுவாமி என் பக்கத்தில்தான் இருக்கு. இந்த மனசுதான் கிடந்து தெரியாமல் அடிச்சுக்கொள் றது. எல்லாம் அஞ்சுக்கு இரண்டு பழுதில்லாமல் நடக் கிறது. என்ன சொல்றேள்? 

ஊருக்கு வெளியே சுடுகாட்டுக்குக் கொஞ்சதூரங் தள்ளி ஒரு பிள்ளையார் கோவில் இருக்கு. அதுக்குப் பக்கத்தில் ஒரு பரதேசி மடம், அங்கே போய்ச் சேர்ந்தப் போத்தான் என்னைத் தூக்கிக்கொண்டு வந்தவன் ஒரு குரங்காட்டீன்னு தெரிஞ்சுது. அவன் கிட்டே சின்னக் குரங்கா இரண்டு இருக்கு. ஒண்ணுக்கு சட்டை, நிஜார். குல்லா எல்லாம் தெச்சுப்போட்டிருக்கிறான். இன்னொண் ணுக்கு ரவிக்கையும் பாவாடையும் தெச்சிருக்கான். இங்கே வந்த ஒருவாரம் வரையில் எனக்குக் காலம்பர எழுந் திருந்ததும் ஒரு ரொட்டித்துண்டு வாங்கித் தந்து கொண் டிருந்தான். மத்தியான்னமும், ராத்திரியும் வயிறு நிறையச் சாப்பாடு: பிச்சைக்காரன் கிட்டெ சோத்துக்கா பஞ்சம்! 

இப்பிடி ஒரு பதினைஞ்சு நாள் ஆச்சு. அப்பறம் அப்பறம் என்ன பண்ணினான்னா, ரொட்டிக்கடைக்கு என்னை அழைச்சுக்கொண்டுபோய் ரொட்டியை வாங்கிக் கொடுத்து என்னைக் கவ்வி எடுத்துக் கொண்டுவரப் பழக்கித் தந்தான்; முதல் ஒருவாரம் பாதி ரொட்டியை வழி யிலேயே முழுங்கிவிட்டேன். அதுக்காக அவன் குடுத்த பூசையையும் முழுங்கினேன். வேறே வழி? 

இந்த வித்தை வந்தப்புறம் பிச்சைக்காரன் என் வாயிலே ரொட்டியைக் குடுத்துத் தெருத்தெருவாய் அழச்சுக்கிண்டு போக ஆரம்பித்தான். என்ன இருந்தா லும் மனசு ரொட்டியைத் திங்க முடியல்லியே இன்னு தவிச்சுக்கிண்டு கிடக்கும். வாய் மாத்திரம் திங்காது. கண் பிச்சைக்காரனையே பரிதாபமாப் பார்க்கும். இப்பிடி ஊரைச் சுத்திவிட்டு மடத்துக்கு வந்தவுடனேயே ரொட் டியைத் திங்கலாம் இன்னு உத்தரவு. தெருவிலே ரொட் டியைத் தூக்கிக்கிண்டு போரப்பொ எனக்குப் பின்னாலே எவ்வளவு கூட்டம் தெரியுமா? பசங்களிலே எவ்வளவு பேர் தெரியுமா? எங்க ஜாதிக்காரனைத் தவிர பாக்கிப் பேரெல்லாம் என்னைப் பார்த்து மூக்கிலெ விரலை வச்சு ஆச்சரியப்படுவா.என்னாலே என் எஜமானனுக்கு வரும் படி வலுத்துப் போச்சு. 

இரண்டு மாசம் மஜாவாய்ப் போச்சு.என் எஜமான னுக்கு இரண்டு பரதேசி சிநேகிதம். அவன்கள் தினம் ராத்திரி அன்னக்காவடி எடுத்துக்கிண்டு போய்ச் சோறு சம்பாதிச்சுக்கிண்டு வருவான்கள். ராத்திரி இருட்டுலே இவாள் காவடிமணி ‘நிணுங் ஙிணுங்’ இன்னு சத்தம் போடறதைக் கேட்டால் என்னவோ மாதிரி ரொம்ப ஜோராயிருக்கும். 

இந்தப் பரதேசியிலெ ஒத்தனுக்கு ஒரு குருட்டு யோசனை தோணித்து. அவன்கள் அன்னக்காவடி எடுத்துக்கொண்டு போறபொழுது கூடவே ஒரு சின்னத் தொங்கு விளக்கைக் கடிச்சுத் தூக்கிக்கிண்டு போகக் கத்துக் கொடுத்தான். ஆனால் இந்த வித்தையும் ஒரு நாளிலெ வந்தூடல்லே. இரண்டு மூணு தரம் விளக்கைச் கீழே போட்டு, ஒரு தரம் கிளாஸை ஒடைச்சப்பறம்தான் வித்தை வந்துது. வித்தை வந்தப்பறம் கொஞ்சம் மண்டைக் கொழுப்பு உண்டாயிடுத்து. ஏன்னா ராத்திரியிலே தெரு வீட்டுக்காராளில் மூடின கதவைத் திறந்துகொண்டு என்னை மெனக்கெட்டுப் பார்க்க வராத பேரே கிடையாது. இருந்தாலும் ரெண்டொத்தர் சொன்னது எனக்குப் பிடிக்கல்லே. “என்னவோ பிரமாதப் படுத்த ரான்கள்! சர்க்கஸ்லே ஒவ்வொரு நாயும் செய்யற வேலை யைப் பார்க்கணும்!” 

இந்த எழவெடுத்த பேச்சை என் எஜமான் காதிலே போட்டுட்டான் காவிப்பண்டாரம். பிச்சைக்காரனுக்கு வெக்கமாப் போச்சு. வெக்கம் வெறுமனே போகுமா? என் மேலே பாஞ்சுது. பலன் எனக்குச் சிகப்பு வர்ணச் சட்டை ஒண்ணும், கடிவாளம் மாதிரி ஒரு வாய்ப்பூட்டும் வந்து சேர்ந்தது. அவ்வளவுதான், நான் குதிரை ஆகிவிட்டேன்! அப்புறம் எனக்காக ஒரு வண்டி ஏற்பட்டது. 

அந்த முறையிலே எனக்கு எஜமான் யார் தெரியுமா? பெரிய குரங்கு ரெண்டு. ஒண்ணு,ராஜா ஒண்ணு.ராணி. அவா அந்த வண்டியிலெ காலை நீட்டிக்கிண்டு உட்காருவா; நான் குதிரை மாதிரி வண்டியை இழுத்துக்கிண்டு போகணும் இதிலே வேறே ஒரு குட்டித் தமாஷ் எனக்கு ஒரு காசாரி உண்டு. அது ஒரு குரங்கு. அதுக்குச் சட்டை கிட்டை ஒண்ணும் கிடையாது. 

இந்தமாதிரி தெருவிலே ஒரு ஊர்கோலம் போனால், கூட்டத்துக்குக் கேட்பானேன்? கூட்டம்னா சும்மா இருக் கான்களா? நடுவிலே நடுவிலெ மணியா முறுக்குக் கல்லைப் போட்டால் ராஜாராணியாய் இருந்தால்கூட சும்மா இருக்க முடியுமா? கும்பலைப் பார்த்து ரெண்டு பேருமா குர் இன்னு கடிக்கிறாப்போல் பாயுவா. இந்தத் தாமா ஷைச் சாக்கிட்டுப் பிச்சைக்காரனுக்கு ஒரு யோகம். 

இப்படியே நாள் போச்சு. பிச்சைக்காரன் கிட்டெ வந்து என்னை ரெண்டொத்தர் விலை கேட்க ஆரம்பிச்சு விட்டார்கள். “இந்தக் கட்டை இருக்கிற வரையில் அந் தப் பேச்சுக் கிடையா தய்யா!” இன்னு பிச்சைக்காரன் சொல்லுகிறப்பொ எனக்கு எப்படி உச்சி குளுந்து போகும் தெரியுமா? 

இந்தப் பேச்சு நடந்த ஒரு வாரத்துக்குள்ளேயே பிச்சைக்காரன் கடைக்குக் கேடு வரும்னு யாருக்குத் தெரியும்? ஒரு நாள் ராத்திரி பரதேசி மடத்துலெ ஒரு மூலையிலே ராஜா ராணியைக் கட்டிப் போட்டிருந்தது. நான் தூங்கி வழிஞ்சுகிண் டிருந்தேன். பண்டாரம் ஒவ் வொத்தனும் அமுதுபடி செஞ்சுட்டுக் கஞ்சா அடிச்சுக் கிண்டிருந்தான். கஞ்சாப்புகையோடே பாட்டும் கிளம்பும். அதெல்லாம் வேதாந்தமாம். 

அப்பறம் நான் தூங்கிப் போயிட்டேன். பாதி ராத்திரியிலே என்னவோ வெடிக்கறாப் போலெ சத்தம் கேட்டு முழிச்சுக்கிண்டேன். பிச்சைக்காரன் துணி மூட்டையிலே ஒரே நெருப்பு. ளொள் ளொள் இன்னு குலைச்சேன். பரதேசி யெல்லாம் மலைப்பாம்பு மாதிரி அசைஞ்சு எழுந்திருந்தான்கள். லபோ லபோ இன்னு அடிச்சுக்கிண்டான்கள். ரெண்டொத்தன் பிள்ளையார் கோவில் கிணத்திலேயிருந்து ஜலத்தைக் கொண்டுவந்து நெருப்பை அணைச்சான். என்னப்பா காலிலே சுடு தூன்னு சொல்லிக்கொண்டே பிச்சைச்காரன் எழுந்திருந்தான். அப்பொத்தான் தெரிஞ்சுது—இவன் காலிலே நெருப்பு நன்னாப் பட்டு இருந்ததூன்னு. கஞ்சா மயக்கம்னா ஒண் ணும் உறைக்காது போல இருக்கு. ஆமாம்! எங்களைப் போல் ஒத்தவாளுக்குக்கூடச் சில சமயம் இந்தமாதிரி ஆகிறதோ இல்லியோ! சாம்பல் மோட்டுலெ படுத்துக்கிண்டு வேதாந்தமா? தூங்குகிறப்போ தொப்புன்னு தலையிலே அடுப்புச் சாம்பல் தணல் உள்பட வந்து விழறதோ இல்லியோ! அடெ! நடுவிலே எங்க கதை வேறே வந்து குறுக்கிடறது! 

என் எஜமானுக்கு ஆளுக்கொரு மருந்து சொன்னா: “இலுப்பை வேரை அறைச்சு மூணு வேளை போட்டால் வெந்த இடம் சுக்காய்க் காஞ்சு போவுதா இல்லியா பாரு!”

“அடபோ சாமி! வெறும் தேங்காய் எண்ணெய்க்கு ஈடு உண்டா?” 

இந்த வைத்தியத்தை யெல்லாம் கேட்டுப் பிச்சைக் காரனுக்கு வருத்தமாய்ப் போயிடுச்சு. ஆள் மிச்சப் பட்டுப் போயிட்டேன். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி யிருந்தால் சாம்பலாகி யிருப்பேன். பாலூத்திக் கரைக்க வேண்டிய வேலை ஏற்பட்டிருக்கும்… நல்ல வேளை இதோடே போச்சு… சிவன் விட்ட வழி. அப்பவே நெனச்சேன். இன்னிக்குக் கஞ்சாவிலே கஞ்சாவே இல்லை இன்னு. பாவி மகன் ஊமத்தை இலையை வித்துவாரான்!!” 

இப்படிப் பேசிக்கொண்டே ஒரு துணியைத் தேங்காய் எண்ணெயிலே நனைச்சுப் போட்டுக்கிண்டான். 

அதுக்குள்ளே நெருப்பு அணைஞ்சு போச்சு. வெறும் துணி மூட்டையிலே பிடிச்சுக்கிண்டதுதானே? பண்டா ரங்கள் கஞ்சா அடிச்ச பொழுது ஏதோ பொறி பறந்து துணியிலெ விழுந்திருக்காப் போலே தெரியுது. 

இவ்வளவுக்கும் பிச்சைக்காரனுக்குப் புத்தி வந்துச்சா? கால்லே எண்ணெய்த் துணியைப் போட்டுக் கொண்டு மறுபடியும் எல்லாருமாகச் சேர்ந்து ஒரு தம் அடிச்சுட்டு வேல்முருகன் மேலே பாரத்தைப் போட்டுட் டுத் தூங்கிப்போயிட்டான்கள். நான் மாத்திரம் முழிச்சிக் கிண்டு என்ன பண்றது? நானும் தூங்கிப் போயிட்டேன். 

மறு நாளைக்குக் காலம்பர, பிச்சைக்காரன் ஆஸ்பத்தி ரிக்குப் போய் வைத்தியம் செஞ்சுகொள்ள ணும்னு கிளம் பிப் போனான்.நானும் கூடவே போனேன். அவன் டாக்டர் கிட்டெ போய்க் காலைக் காண்பித்துக்கொண் டிருந்த பொழுது நானும் உள்ளே போனேன். என் மேலே யாரோ ஜலத்தைக் கொட்டின பொழுதுதான் நான் உள்ளே போயிருக்கப்படாது இன்னு தெரிஞ்சுது. 

பிச்சைக்காரன் உள்ளே இருந்து வெளியிலே வந்து, போ மட் த்துக்கு! நான் இங்கியே இருக்கணுமாக்கும். ஒன்னைப் பரதேசி பார்த்துப்பான்கள்” இன்னான். நான் தயங்கினேன்; பரதேசிகள் மேலே எனக்கு நம்பிக்கை இல்லை. பிச்சைக்காரன், “போறயா இல்லியா!”இன்னு அதட்டிக்கிண்டே என்னை முழிச்சுப் பார்த்தான். சரிதான் இன்னூட்டு மடத்துக்குத் திரும்பி வந்தேன். 

அன்னிக்கு உருமத்திலே சோறு கிடைச்சுது.சாயங் காலமாய்ப் பரதேசிகளெல்லாம் என்னவோ மூட்டை முடிச்சுங்கள் கட்டிக்கொண்டு கிளம்பி விட்டான்கள். எங்கேயோ என்னவோ உத்சவமாம்; குரங்கைக்கூட அவுத்துக்கொண்டு போயிட்டான்கள். என்பாடு புரிய வில்லை. நடுச்சந்தி நாயானேன். இப்போ வழி? 

– மாங்காய்த் தலை (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: டிசம்பர் 1961, கலைமகள் காரியாலயம், சென்னை.

ந.பிச்சமூர்த்தி வாழ்க்கைக்குறிப்பு: இயற்பெயர் : ந.வேங்கட மகாலிங்கம் புனைபெயர் : ந.பிச்சமூர்த்தி காலம் : 15.08.1900 – 04.12.1976 ஊர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொழில் : 1924 – 1938 வரை வழக்கறிஞர், 1938 – 1954 வரை கோவில் நிர்வாக அலுவலர். எழுத்துப்பணி, கதைகள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், ஓரங்க நாடகங்கள். முதல் கவிதை : காதல் (1934) முதல் சிறுகதை : விஞ்ஞானத்திற்கு வழி சிறப்பு பெயர்கள்:…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *