கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 8, 2025
பார்வையிட்டோர்: 99 
 
 

காலை முதல் வேலையாய் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவைத்தான் செந்தில்.

போனவாரத்தில் ஒருநாள் தூரத்து உறவினன் பாபு அவனிடம் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது.

அடுத்த புதன் அன்னிக்கு சென்னைக்கு முக்கிய வேலையாய் வரேன். பஸ் விட்டு இறங்கினதும் உனக்கு போன் பண்றேன் என்னைய கொஞ்சம் பிக்கப் பண்ணி இந்த அட்ரஸ்ல விட்டுடு, அட்ரஸ் சொல்றேன் நோட் பண்ணிக்கோ, சரியா?

உன்னை நம்பித்தான் கிளம்பறேன். மறந்துடாத என்று சொல்லியிருந்தான்.

மறக்கவில்லை செந்தில், அதனால்தான் போனை ஆஃப் செய்து வைத்தான்.

பாபு சொன்ன அட்ரஸ் இங்கிருந்து தொலைவு தான். எப்படியும் பெட்ரோல் செலவு 200ரூபாயைத் தாண்டும். எதுக்கு வெட்டிச்செலவு. ஏதாவது ஆட்டோ பிடித்து போகட்டும்.

மனதில் எண்ணியவனாய் விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.

எவ்வளவு நேரம் தூங்கினான் என்று தெரியவில்லை.

ஆட்டோ உறுமலில் தூக்கம் கலைந்தான். ஜன்னலில் பார்த்ததபோது, ஆட்டோவில் இருந்து மல்லிகாவும், குழந்தைகளும் இறங்குவதைக் கண்டான்.

சனியன் பிடித்தவள் நாளைக்குத்தானே வருவதா சொன்னா, திடீர் ன்னு வந்து இறங்குறா அதுவும் ஒரு ஃபோன் கூட பண்ணாம. சுள்ளென்று எழுந்த கோபத்தோடு வெளியே வந்தான் செந்தில்.

அவனைவிட அதீத கோபத்தில் கத்தினாள் அவனது மனைவி மல்லிகா.

நீங்க எல்லாம் எதுக்கு ஃபோனுன்னு வெச்சிருக்கீங்க, காலையில் இருந்து டிரை பண்றேன், சுவிட்ச் ஆப்னே வருது. வேற வழியில்லன்னு ஆட்டோவுல வந்தேன். போய் ஆட்டோவுக்கு 300 ரூபாய கொடுத்து அனுப்புங்க.

பல்லைக் கடித்துக்கொண்டு கேட்டான்.

நாளைக்குதான வர்றதா சொன்ன?

ஏன் இன்னைக்கு வரக்கூடாதா? இடுப்பில் கை வைத்தபடி கண்களை விரித்து அவள் கேட்டவிதத்தைப் பார்த்து அவளோடு மல்லுக்கட்ட முடியாது என உணர்ந்த செந்தில் ஆட்டோவுக்கு தண்டம் கட்டச் சென்றான்.

தன்வினை தன்னைச்சுடும்.

எப்பொழுதோ படித்த பொன்மொழி, சிந்தையில் மின்னலாகவோ, நக்கலாகவோ ஏதோ ஒன்றாக வந்து மோதியது போல் உணர்ந்தான் செந்தில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *