மாஸ்டர் கோபாலன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2021
பார்வையிட்டோர்: 2,349 
 

Master
“கோபாலா?”

“ஏன் சார்!”

“நேற்று நான் சொல்லித் தந்த பாடத்தின் பெயர் என்ன?”

“அல்லாவுதீனும் அதிசய விளக்கும்”

“எங்கே, அந்தக் கதையைச் சொல். பார்க்கலாம்”

“சரியாக நினைவில்லை சார்”

அவ்வளவுதான். ஆசிரியருக்கு வந்தது கோபம். எடுத்தார் பிரம்பை. அடித்தார் கோபாலனை. நன்றாக அடித்தார். கோபாலனுக்கு அடிப்பட்ட இடமெல்லாம் புடைத்துத் தழும் பறிவிட்டது. கத்தினான், கதறினான், கூவினான், அழுதான், கண்ணீர் கசிந்தது, உருண்டது, கன்னத்தில் வழிந்தது.

“கழுதை! கதை கூட உன் புத்தியில் ஏறவில்லை, வேறு பாடம் எப்படிப் பதியப்போகிறது?” என்று கோபத்தோடு கூறி, அவன் கண்ணீரைக் கண்டு பரிதாபத்தோடு அடிப்பதை நிறுத்திக் கொண்டார் ஆசிரியர், பிறகு பக்கத்தில் இருந்த ரஹீமைச் சொல்லச் சொன்னார். அவன் அழகாகச் சொன்னான். வீட்டில் பாட்டி கதை சொல்வது போல அருமையாகச் சொன்னான்.

“டேய் கோபாலா? ரஹீம் எவ்வளவு அழகாகக் கதை சொல்கிறான் கவனித்தாயா?” என்று ஆசிரியர் ரஹீமைத் தூக்கிப் பேசினார்.

“நீங்கள் சொல்லித்தந்து நான் தெரிந்து கொள்ள வில்லை சார். வீட்டில் எங்க மாமா அடிக்கடி இந்தக் கதை சொல்வார். மாமா கதை சொன்னால் தெளிவாகப் புரிகிறது. சார். நீங்கள் சொல்வது அவ்வளவு தெளிவாக…” என்று சொல்லிக்கொண்டு வந்த ரஹீம் ஆசிரியர் மீசை ஆடிக்காற்றில் சிறகடித்துப் பறக்கும் காகத்தின் இறக்கை யைப்போல் படபடவென்று துடிப்பதைப் பார்த்ததும் நிறுத்திக் கொண்டான்.

அதே சமயம் மணியடித்தது. ஆசிரியர் வகுப்பை விட்டு வெளியேறினார். மாணவர்கள் துள்ளிக் குதித்துக் கொண்டு விளையாட்டு மைதானத்தை நோக்கி ஓடினார்கள்.

கோபாலனுக்கு விளையாடப் பிடிக்கவில்லை. அழுது கொண்டே வீடு நோக்கி நடந்தான். வீட்டுக்குப் போகும் வழியில் எதிரில் அவன் தங்கை மீனா வந்தாள்.

“மீனா! மீனா! எங்கே போகிறாய்?”

“கடைக்குப் போகிறேன்”

“கடைக்கு எதற்கு?”

“ரொட்டி வாங்க!”

“ரொட்டி எதற்கு?”

“பிட்டுத் தின்ன!”

“யாரு தின்ன?”

“நீயும் நானும்!”

இதைக் கேட்டவுடன் கோபாலனுடைய அழுகை மாறி விட்டது. அவனும் மீனாவுடன் கடைக்குப் போனான். வழியிலே போகும்போதே வீட்டுக்குப் பாட்டி வந்திருக்கிறாள் என்ற விஷயந்தெரிந்தது. பாட்டி கொடுத்த காசு தான், மீனாவைக் கடைக்கு அனுப்பியிருக்கிற தென்ற விவரமும் புரிந்தது. பாட்டி கோபாலனுக்கு எத்தனை எத்தனை கதைகள் சொல்லியிருப்பாள். அத்தனையும் மறந்து மறந்து போயிருக்கிறான் கோபாலன்.

ரொட்டி வாங்கியவுடன் அண்ணனும் தங்கையும் சிட்டுக் குருவிகள் போல வீட்டுக்குப் பறந்தோடி வந்தார்கள். பாட்டியைப் பார்த்தார்கள். பாட்டி அவர்களை மகிழ்ச்சியோடு கட்டிக்கொண்டாள். அருகிலே இழுத்து அணைத்துத் தன் பொக்கை வாயால் இரண்டு முத்தங் கொடுத்தாள்.

“ கோபாலா?”

“அம்மா!”

“காட்டுக்குப் போய்ச் சுப்பி பொறுக்கி வா. காலையிலே ஆப்பம் சுடப் போறேன்”

“ஆப்பமா? ஆகா! அம்மா இதோ போகிறேன்” என்று குதித்தோடினான் கோபாலன்.

“டேய்! ரொம்ப தூரம் போகாதே காட்டிலே இருக்கே பெரிய முருங்கை மரம் அதுக்கிட்டேப் போகாதே. வேதாளம் புடிச்சு போயிடும்” என்று பாட்டி எச்சரிக்கை செய்தாள்.

“சரி பாட்டி” என்று கூறி விட்டுக் கோபாலன் பறந் தான். கொஞ்ச தூரம் ஓடினான். பிறகு நடந்தான். நடந்து நடந்து காட்டுக்குள்ளே வந்து சேர்ந்தான். காய்ந்து கிடந்த சுப்பிகளைப் பொறுக்கினான். அங்குமிங்குமாக ஓடியும் நடந்தும் சுப்பி பொறுக்கினான். கடைசியாகச் சுப்பியெல்லாம் நிறையச் சேர்ந்த பிறகு அதைக் கட்டுவதற்காக ஒரு மரத்தடிக்குப்போனான். மரப்பட்டையால் சுப்பிகளை ஒரு கட்டாகக் கட்டினான். கட்டி முடித்த பிறகு குனிந்த தலை நிமிர்ந்த போது அவன் கண்ணெதிரே ஒரு முருங்கைக்காய் கிடந்தது. உச்சியில் நிமிர்ந்து பார்த்தான். ஆகா! அவன் அந்தப் பெரிய முருங்கை மரத்தடியிலே நின்று கொண்டிருந்தான்.

பாட்டி சொன்னது நினைவுக்கு வந்தது. ‘வேதாளம் பிடித்துப் போய்விடும்’ அவன் சிறிது பயந்தான். அதே சமயம் அவனுக்கு அல்லாவுதீனின் கதை நினைவுக்கு வந்தது. அல்லாவுதீனுக்கு வேதாளம் அடிமை வேலை செய்தது. அதே போல் எனக்கும் அடிமை வேலை செய்யச் சொல்வேன்.

பாட்டி வீணாகப் பயமுறுத்தி விட்டாள் அது சுத்தப் பொய். வேதாளம் என்னைப் பிடிக்க வந்தால் நான் அதை அடக்குவேன். பிறகு அடிமை வேலை செய்யச் சொல்வேன். வரட்டும் அந்த வேதாளம் ! என்று காத்துக் கொண்டிருந் தான். நின்று நின்று அவன் கால்கள் கடுத்து விட்டன. தரையில் உட்கார்ந்து கொண்டான். களைப்பாக இருந்தது. தரையிலே படுத்துக் கொண்டான்.

சடச் சடச் சட

முருங்கை மரக்கிளைகளின் இடையே சத்தம் கேட்டது. கோபாலன் நிமிர்ந்து பார்த்தான். கருப்பாக ஏதோ ஒன்று படக்கென்று தரையில் குதித்தது. கோபாலன் அரண்டு எழுந்திருந்தான். அந்தக் கருப்பு உருவம் திடுதிடுவென்று வளர்ந்தது. ஆகாயம் வரைக்கும் வளர்ந்தது. கோபாலன் எட்டி உச்சியில் பார்த்தான். தலை தெரியவில்லை. குனிந்து பார்த்தான் கால் தெரியவில்லை. கால் தரைக்குக் கீழே மிகுந்த ஆழம் வரை பதிந்திருந்தது. எதிரில் பார்த்தான் ஒரே கருப் பாக இருந்தது. கோபாலன் பார்த்துக்கொண்டே இருக்கும் போது வானம் அதிரும்படியாக ஒரு குரல் கேட்டது.

“சிறுவனே நீ யார்?” என்று கேட்டது. கோபாலன் பலம் கொண்ட மட்டும் இரைந்து “நீ யார்?”என்று கேட்டான்.

என்ன அதிசயம் அவன் எதிரே ஒரு குள்ள வேதாளம் நின்றது. ஆகாயம் வரை வளர்ந்திருந்த அந்த வேதாளம் சட்டென்று சுருங்கிக் குள்ளமாக மாறிவிட்டது. அதைப் பார்க்கப் பார்க்க பயமாக இருந்தது. அந்த வேதாளத்தின் முகம் சினிமாவில் வருகிற எமதூதனுடைய முகம் போல் இருந்தது. அதன் கண்கள் எரிகின்ற கொள்ளிக்கட்டை போல் தகதகவென்று இருந்தன. அதன் மூக்கோ குடை மிளகாய் போல் நீண்டிருந்தது. வாய் அகண்டு விரிந்து உதடு தடித்து மிக விகாரமாக இருந்தது. காதே இல்லாதது போல் தோன்றிய அந்த வேதாளத்திற்கு வயிறு வண்ணான் சால்போல் பெருத்து , அகப்பட்டதை அப்படியே கபளீகரம் செய்து விடக்கூடிய மாதிரி இருந்தது. மொத்தத்தில் பார்ப் பதற்கு அசிங்கமாகவும், சிறுவர்கள் பயப்படும்படியாகவும் விளங்கியது அந்த வேதாளம்.

கோபாலன் அதைக் கண்டு கொஞ்சங் கூடப் பயப்பட வில்லை. தட்டென்று தரையைக் காலால் உதைத்து,”ஏய்! நீ யார்?” என்று அதட்டினான் கோபாலன்.

“தயவு செய்து கோபித்துக் கொள்ளாதீர்கள். நான் உங்கள் அடிமை, முருங்கை மரத்து வேதாளம் . நீங்கள் என்னை என்ன செய்யச் சொல்கிறீர்களோ அதைச் செய்யக் காத்துக் கிடக்கிறேன்” என்றது வேதாளம்.

“ஓகோ! சரி சரி! நீ இங்கே எப்படி வந்தாய் ? அதைச் சொல் முதலில்!” கோபாலன் பெரிய நீதி மன்றத் தலைவனைப் போல, துப்பறியும் சப்-இன்ஸ்பெக்டரைப்போல அதட்டிக் கேட்டான்.

“இந்த மரத்திலே நான் குடியிருப்பது தெரிந்தும் யாரொருவர் கொஞ்சங்கூடப் பயப்படாமல் தைரியமாக வந்து இங்கே இந்த மரத்தடியில் படுத்துக்கொண்டு கவலையில்லா மல் தூக்குகிறார்களோ அவர்கள் என் தலைவர் ஆவார். அதன்படி தாங்கள் என் தலைவர். நான் தங்கள் அடிமை என் வீரத்தலைவரே! என்னால் தங்களுக்காக வேண்டிய காரியம் ஏதாவது இருக்கிறதா?”

வேதாளம் பணிந்து பேசப் பேசக் கோபாலனுடைய குரல் தடித்தது. இளைத்தவனைக் கண்டால் எதிர்த்துப் பாய்கிற கோபாலனுக்கு இது என்ன சொல்லித் தர வேண்டிய பாடமா?

“ஏய் வேதாளம்? உன்னால் என்ன என்ன செய்ய முடியும்?” ஒரு முதலாளி போல் இருந்தது கோபாலனின் மிடுக்கான பார்வை.

“தலைவரே! நான் வானில் பறப்பேன். வண்ணக் கடலில் மூழ்குவேன். இந்த உலகம் முழுவதும் சுற்றுவேன். பெரிய உருவமாய் வளர்ந்து விளங்குவேன். தேவையான போது அணுவாகவும் மாறிக்கொள்வேன். நீங்கள் நினைத்த பொருளை எடுத்து வருவேன். நீங்கள் நினைத்த இடத்திற்கு உங்களை எடுத்துச் செல்வேன். இன்னும் எப்படி எப்படி நீங்கள் கட்டளை இடுகிறீர்களோ அப்படி அப்படி முடித்துக் கொடுக்க என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன்”.

“சரி! முதலிலே எங்காவது போய் ஒரு சுருட்டுக்கட்டு எடுத்துவா!”

“தலைவரே! தாங்கள் சொன்னதைச் செய்கிறேன். ஆனால் இவ்வளவு சின்ன வயதில் சுருட்டுப் பிடிக்கக் கூடாது.”

“சட்! சொன்னதைச் செய் ! அதிகப் பேச்சுப் பேசாதே!” என்று கோபாலன் மிரட்டியவுடன் வேதாளம் பயந்து நடுநடுங்கி,

“இதோ ! நொடியில் கொண்டு வருகிறேன்”என்று சொல்லிவிட்டு மறைந்தது. சிறிது நேரத்தில் மறுபடியும் கோபாலன் எதிரில் வந்து நின்றது. அதன் கையில் ஒரு பெரிய சுருட்டுக்கட்டு இருந்தது.”இதோ நீங்கள் கேட்ட பொருள்”என்று கோபாலனிடம் கொடுத்தது. அதை வாங்கிக் கொண்ட கோபாலன், மகிழ்ச்சியுடன் வேதாளத் தைத் தட்டிக்கொடுத்து,”இலண்டன் மாநகரில் முதலமைச்சராக இருக்கும் சர்ச்சிலைத் தெரியுமல்லவா? அவருடைய மாளிகைக்கு என்னைத் தூக்கிக்கொண்டு போ!” என்றான். வேதாளம் சற்று யோசித்தது. “என்ன யோசிக்கிறாய்?” என்று கோபாலன் சுருட்டுக்கட்டு வைத்திருந்த கையை அந்த வேதாளத்தை அடிக்க ஓங்கினான். உடனே வேதாளம்,”ஓகோ! அந்தச் சுருட்டுக் குடிக்கும் சர்ச்சில் துரையா? சரி சரி ! இதோ போய்விடுவோம்” என்று கூறிக்கொண்டே கோபாலனைத் தூக்கித் தன் தோளில் வைத்துக் கொண்டது. விர்ரென்று காற்றில் பறந்தது. மேக மண்டலத்தை யெல்லாம் கடந்து கொண்டு அரைமணி நேரத்தில் தேம்ஸ் நதி பாயும் இலண்டன் பட்டணம் வந்து விட்டது. சர்ச்சில் மாளிகையின் உள் வாசலில் கொண்டு போய் கோபாலனை இறக்கி விட்டு, அவன் கையைப் பிடித்துக்கொண்டே அவருடைய தனி அறைக்கு அழைத்துச் சென்றது. அப்போது ஆனரபிள் மிஸ்டர் சர்ச்சில் அவர்கள் சுருட்டுப் பிடித்துக்கொண்டு ஏதோ கோட்டையைப் பிடிக்கத் திட்டம் போடுபவர் போல யோசித்துக் கொண்டிருந்தார். அவர் எதிரிலே கோபாலன் சென்று நின்று கொண்டு “குட் ஈவினிங் மிஸ்டர் சர்ச்சில்! இதோ உங்களுக்காகக் கொண்டு வந்த இந்தியா சுருட்டு” என்று தன் அன்பளிப்பைக் கொடுத்தான். திடீரென்று யோசனை கலைந்ததால், பொங்கி வரும் கோபத்தோடு கோபாலனை ஒரு பார்வை பார்த்தார் மிஸ்டர் சர்ச்சில்!

“யாரிது நான்சென்ஸ்? சிறுவனே! என் தனி அறைக்குள் நீ எப்படி வந்தாய்? என் சிந்தனையைக் கலைத்து ஏன் இடைஞ்சல் செய்கிறாய். போ வெளியே!”

“மேன்மை சான்ற சர்ச்சில் அவர்களே! ஆறாயிரம் மைலுக்கப்பால் உள்ள இந்தியாவிலிருந்து அவசரமாக உங்களைப் பார்க்கப் புறப்பட்டு வந்தேன். வரவேற்பளிக்க வேண்டிய நீங்களோ என்னை விரட்டியடிக்கிறீர்கள். இது நீதியா? நேர்மையா? நியாயந்தானா?”

“அது சரி. அனுமதியில்லாமல் நீ எப்படி வந்தாய்?”

“எங்கும் நினைத்தவுடன் செல்லக் கூடிய எனக்கு அனுமதி வாங்க நேரமேது? நீங்களே சொல்லுங்கள்!”

“அது சரி, இந்தியாவிலிருந்து எப்பொழுது வந்தாய்?”

“அரைமணி நேரத்திற்கு முன் புறப்பட்டேன். இப்பொழுது உங்கள் எதிரிலே நிற்கிறேன்!”

“ஏய்! பொய் சொல்லாதே! பறவைக் கப்பலில் பறந்து வந்தாலும் ஐந்து நாட்களாகும். அரைமணி நேரத்தில் வந்ததாக யாரிடம் கதை கூறுகிறாய்?”

“கதையில்லை மந்திரியாரே! இதோ உங்கள் கண் முன்னே வந்து நிற்கிறேன் நீங்கள் ஏன் நம்ப மறுக்கிறீர்கள்?”

“அது சரி நீ எதற்காக இங்கு வந்தாய்?”

“ஒன்றுமில்லை, தங்கள் நினைவு வந்தது, பார்த்துவிட்டுச் செல்வோமே, நாம் தான் நினைத்தபோது நினைத்த இடத்திற்குப் போக முடிகிறதே என்று இங்கே பறந்து வந்தேன்.”

“ஸ்டுப்பிட்! மீண்டுமீண்டும் பொய்யான வார்த்தைகளே பேசுகிறாய். வெளியே போய்விடு. என் வேலையைக் கெடுக்காதே” என்று மிகுந்த கூச்சல் போட்டு அதட்டினார்.

“துரையவர்களே, நான் தங்களைச் சில கேள்விகள் கேட்கலாமென்று நினைக்கிறேன். தயவு செய்து பதில் சொல்வீர்களா?”

“போகிறாயா இல்லையா? ஏய் அதாரங்கே காவல்!” என்று இரைந்தவுடன் இனி இங்கிருப்பது சரியில்லை. மரியாதையாக வெளியேறி விடவேண்டுமென்று கோபாலன் நினைத்தான்.

அப்படியே வேதாளத்தைக் கூப்பிட்டு,”என்னைத் தூக்கிச் செல்” என்றான்.

“எங்கே தூக்கிச் செல்லவேண்டும்?” என்று வேதாளம் கேட்டது .

“இரு யோசிக்கிறேன்” என்று சொல்லிவிட்டுத் தலையை மேலே தூக்கி உச்சியில் பார்த்தபடி இருந்தான். அதற்குள்ளே சர்ச்சில் அவர்களின் மெய்க்காப்பாளர் இருவர் அங்கே வந்துவிட்டனர்.

“பையா உன்னைத் தூக்கிச்செல்ல இதோ ஆட்கள் வந்துவிட்டனர் புறப்படு. பிறகு யோசிக்கலாம்” என்று அவர் சொல்லிவாய் மூடுமுன் கோபாலனைத் தூக்கிக்கொண்டு வேதாளம் கிளம்பியது.

சர்ச்சிலுக்கோ, அவருடைய மெய்க்காப்பாளர்களுக்கோ வேதாளம் கண்ணுக்குத் தெரியவில்லை போலிருக்கிறது. அதனால்தான் அவர்கள், இதென்னடா பையன் பறக்கிறான் என்று அண்ணாந்து பார்த்து அதிசயித்திருக்கிறார்கள்.

வேதாளம் கோபானைத் தூக்கிக்கொண்டு பறக்கும் பாதையிலே ஒரு பெரிய பொட்டல் இருப்பதைக் கண்டான். வேதாளத்திடம் அந்தப் பொட்டலில் இறக்கும்படி கோபாலன் கூறினான். வேதாளம் நேரே அந்தப் பொட்டலில் இறங்கியது. இறங்கும் பொழுதே அங்கு பல பறவைக் கப்பல்கள் வரிசை யாக நிற்பதைக் கோபாலன் பார்த்தான். அது பறவைக் கப்பல் இறங்கும் இடம்தான். கல்கத்தா நகரில் உள்ள ‘டம் டம்”திடல் தான் அது. கோபாலன் கீழே இறங்கும்போது, பல மனிதர்கள் ஓடி வந்தனர். அவர்கள், கோபாலன் ஏதோ ஒரு பறவைக் கப்பலிலிருந்து குதித்து வருகிறான் என்று எண் ணியிருக்க வேண்டும். அவர்கள் கண்ணுக்கும் வேதாளம் தெரியவில்லை. கோபாலன் கீழே இறங்கி நின்றவுடன், அருகிலே ஓடிவந்த விமானி ஒருவர் அவனை அணுகிவந்து,

“காயம் ஒன்றும் இல்லையே” என்று விசாரித்தார் . அவருடைய கேள்வியின் பொருள் விளங்காமல் அவன் திருதிரு இவன் விழித்தான்.

“எந்தப் பறவைக் கப்பலில் நீ, சென்றாய்? குடையில்லாமல் எப்படி இறங்கினாய்?” என்றெல்லாம் அந்த விமானி கேட்கக் கேட்க அவன் ஒன்றும் புரியாமல் விழித்தான் கடைசியாக, “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று விமானி கேட்டார்.

“நான் இலண்டனிலிருந்து வருகிறேன். இது எந்த ஊர்?” என்றான் கோபாலன்.

“இது கல்கத்தா. அது சரி. இலண்டனிலிருந்து எதன் மூலம் வருகிறாய்?”

“இதோ இந்த வேதாளம் தூக்கிக்கொண்டு வந்தது” என்று வேதாளம் இருந்த பக்கம் கையைக் காட்டினான். எல்லோரும் அவன் கைகாட்டிய பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். ஒன்றும் தெரியவில்லை. விமானி மறுபடியும் “வேதாளம் என்று எதைச்சொல்கிறாய்?” என்று கேட்டார்.

“இதோ இதைத்தான்”என்று மறுபடியும் கைகாட்டி னான். அந்தத் திசையில் அவர்கள் கண்ணுக்கு ஒன்றும் தெரியவில்லை.

அவர்கள் தன்னை நம்பவில்லை என்பதைக் கோபாலன் புரிந்துகொண்டான். உடனே வேதாளத்தை நோக்கி ‘என் னைத் தூக்கிக் கொண்டு இந்தத் திடலை ஒரு சுற்றுச் சுற்று”என்று கட்டளை யிட்டான். உடனே வேதாளம் அவன் கட்ட ளையை நிறைவேற்றியது. திடலிலே மக்கள் திரளாகக் கூடி விட்டார்கள்.

கப்பலில்லாமல், சிரகில்லாமல் காற்றிலே பறக்கும் அதிசயச் சிறுவனைப் பற்றிய செய்தி நகரெங்கும் பரவிவிட்டது.

மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த வேடிக்கையைக் காண பறவைக் கப்பல் இறங்கும்”டம்டம்” திடலுக்கு வந்து கூடி விட்டனர்.

கோபாலனை, ஒரு சுற்றுச் சுற்றியவுடன் வேதாளம் மறுபடி கீழே இறக்கிவிட்டது. அந்த விமானி அருகில் வந்தார். “சிறுவனே நீ இப்பொழுது எப்படிப் பறந்தாய்?” என்று கேட்டார்.

“என்னுடைய அடிமையாக விளங்கும் வேதாளம் என்னைத் தூக்கிக்கொண்டு பறந்தது” என்று சொன்னான்.

“இன்னும் வேறு என்ன செயல்கள் உன்னால் செய்ய முடியும்?” என்று அந்த விமானி கேட்டார். “வேண்டியதை வேண்டியபடி செய்யலாம். இப்பொழுது உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டான் கோபாலன்.

“இதோ இந்த விமானத்திடல் நிறைய விமானங்கள் வந்து குவியவேண்டும். இதைச் செய்ய முடியுமா?”

உடனே கோபாலன் வேதாளத்தை ஏவினான்.

“இதோ” என்று கூறிவிட்டு மறைந்த வேதாளம் ஐந்து நிமிடத்தில் ஒரு விமானத்துடன் பறந்து வந்தது. காற்றாடி சுற்றாமலே அந்த விமானம் காற்றில் மிதந்து வருவதைக் கண்டு மக்கள் வியப்படைந்தார்கள். இப்படியாக ஐந்து நிமிடத்திற்கு ஒரு விமானமாக வந்து இறங்கிக் கொண்டே இருந்தது. கடைசியில் அந்தத் திடல் முழுவதும் விமானங்களாக வந்து நிறைந்துவிட்டன. கோபாலன் வேதாளத்திற்கு வேலை கொடுப்பதை நிறுத்திக்கொண்டான்.

விமானியும் மற்ற மக்களும் அதிக அதிசயத்துடன் கோபாலனைக் கவனித்தார்கள். விமானி கோபாலனிடம் “சிறுவனே, இத்தனை சின்ன வயதில் நீ எப்படிக் குறளி வித்தை கற்றுக்கொண்டாய்?” என்று கேட்டார்.

“இது குறளி வித்தையல்ல, எனக்கொரு வேதாளம் அடிமையாயிருக்கிறது. அது எதையும் செய்யவல்லது அது தான் இப்பொழுது தாங்கள் விரும்பிய காரியத்தைச் செய்து காட்டியது. அது என் ஒருவன் கட்டளைக்குத்தான் பணியும்” என்று கூறிக்கொண்டே வரும்போது, “சிறுவனே, நீ எப்படி அந்த வேதாளத்தை அடிமை கொண்டாய்?” என்று விமானி கேட்டார். கோபாலன் பதில் சொல்லவாய் எடுத்த போது, வேதாளம் அவன் வாயைப் பொத்திவிட்டது அவனால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.

அவன் என்ன கேட்டும் பதில் சொல்லாமல் இருப்பதைக் கண்ட விமானி, விஷயம் புரியாமல் மறுபடி மறுபடி கேட்டுக் கொண்டே இருந்தார்.

அவர் கேட்பதை நிறுத்தமாட்டார் போல் தோன்றிய தால் வேதாளம் கோபாலனை விட்டுவிட்டு அவருடைய வாயைப் பொத்திவிட்டது. கண்ணுக்குத் தெரியாத ஒரு இரும்புக் கை தன் வாயைப் பொத்தியதை உணர்ந்த விமானி துடித்துக் துள்ளிக் குதித்து ஓட்டம் எடுத்துவிட்டார். இதை வேடிக்கையாகப் பார்த்துக் கொண்டிருந்த கோபாலன் வேதாளத்தை யடக்கி “ஏன் எங்கள் வாயைப் பொத்துகிறாய்?” என்று அதட்டினான். அதற்கு வேதாளம்.”என் தலைவரே! பரம ரகசியமான என் விஷயத்தைப்பற்றி அவர் கேட்டார். நான் எப்படி உங்களுக்கு அடிமையானேன் என்று கேட்டார், எங்கே சொல்லிவிடப் போகிறீர்களோ என்று பயந்து உங்கள் வாயைப் பொத்தினேன். கேட்பதை நிறுத்தாமல் அவர் வாயைப் பொத்தினேன்” என்று விளக்கம் கூறியவுடன் “பயப்படாதே நான் சொல்லவில்லை” என்று அதன் முதுகிலே தட்டிக் கொடுத்தான்.

பிறகு விமானியை அழைத்துப் பயப்படாமல் இருக்கும்படி தைரியப்படுத்தினான். அவரும் கோபாலனுடைய சொல்லை நம்பி அருகில் வந்து பயப்படாமல் மறுபடி பேசத் தொடங்கினார்.

மாஸ்டர் கோபாலன் அவர்களே! தங்களைப் போன்ற மாயாவித்தைக் காரர்கள் இருப்பது இந்திய நாட்டின் தவப் பயனாகும். என்றாலும் இருப்பது தெரியாமல் மூலை முடுக்கு களில் இருப்பது இந்த நாட்டின் துரதிர்ஷ்ட மாகும். எனினும், இன்று நான் தங்களைச் சந்திக்க நேர்ந்தது பாரத நாட்டின் பாக்கியமாகும்:

முதலாவதாக நமது நாட்டின் அரிசிப் பஞ்சம் ஒழிய வேண்டும். அதற்குத் தங்கள் ஒத்தாசை வேண்டும். அதைத் தீர்த்து வைப்பீர்களானால் ஆகா! நாற்பது கோடி மக்களும் மாஸ்டர் கோபாலன் நீடூழி வாழ்க! என்று கூவி முழக்கமிடுவார்கள்! எவ்வளவு இன்பமான காட்சி!” என்று அந்த விமானி பேசிக் கொண்டு நிற்கும்போதே, வேதாளத்திடம் கோபாலன் சொல்லி; அது அங்கே, ஒரு மலைபோல் அரிசி யைக் குவித்துவிட்டது. உடனே அங்கிருந்த மக்கள் அரிசியை அள்ளி அள்ளி விமானங்களுக்குள் கொட்டினார்கள். பிறகு பல விமானிகள் வந்து அந்த விமானங்களை ஓட்டிக் கொண்டு இந்தியாவின் பல பாகங்களுக்கும் புறப்பட்டுச் செல்லலானார்கள்.

கோபாலனுடன் பேசிக்கொண்டிருந்த தலைமை விமானி, கோபாலனின் உதவிக்காக மிகவும் மெச்சிக்கொண்டு, ‘மாஸ்டர் கோபாலன்! தாங்கள் அவசியம் என்னுடன் டில்லி வர வேண்டும் அங்கே நமது இந்திய நாட்டு மந்திரி களுக்குத் தங்களை அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும். பூமிக்கடியிலே தண்ணீரைக் கண்டுபிடிக்கும் ஒரு மகானுக்கு இந்திய சர்க்கார் சம்பளம் கொடுத்து வைத்திருக்கிறார்கள். தங்களுக்குச் சம்பளம் பெரிதல்ல என்றாலும் தேசத்துக்குத் தங்கள் உதவி மிகமிக இன்றியமையாதது. ஆகவே தாங்கள் அவசியம் என்னுடன் புறப்படவேண்டும்” என்றார் விமானி.

கோபாலனும் சரி புறப்படுங்கள் என்றான். இருவரும் வெகு வேகமாக நடந்து ஒரு விமானத்தில் ஏறிக் கொண்டார்கள். விமானி, ஓட்டிக்கொண்டு டில்லி நோக்கிப் பறந்தார். கோபாலன் டில்லி சென்று மந்திரிகளைப் பார்க்கப் போகும் அவசரத்தில், வேதாளத்தைக் கூடக் கூட்டிக்கொண்டு போக மறந்துவிட்டான். வேதாளத்தையே மறந்துவிட்டான்.

போகும் வழியிலே விமானத்தில் எண்ணெய் தீர்ந்து விட்டது. எனவே அது பறக்க மறுத்தது. நேராகத் தலை குப்புறக் கீழே விழுந்தது. கோபாலனும் விமானியும் சிதறி எங்கோ உள்ள இடமொன்றில் விழுந்தார்கள். கோபாலன் தான் முதலில் தரையில் விழுந்தான். விமானி அவன் மேல் விழுந்தார். கப்பல் தூரத்தில் எங்கோ விழுந்து சுக்கு நூறாக உடைந்து கிடந்தது.

பறவைக் கப்பலிலிருந்து விழுந்தவுடன் கோபாலன் மயக்கமுங் கிறுகிறுப்பும் வந்து கண்களை மூடிக்கொண்டு விழுந்து விட்டான். மறுபடியும் சிறிது சிறிதாக உணர்வு வந்தபோது அவன் ‘வேதாளம்! வேதாளம்! என்னைத் தூக்கு!” என்று கூவினான். மென்மையான இரண்டு கைகள் அவன் கையிரண்டையும் பிடித்துத் தூக்கிவிட்டன. வேதாளத்தின் கைகள் முரடாக இருக்குமே, இப்பொழுது மென்மையாக இருப்பதன் காரணம் என்ன? ஒரு வேளை அடிபட்ட உடம்பை மெதுவான கையால் தூக்க வேண்டுமென்று வேதாளம் தன் கையை மென்மையாக்கிக் கொண்டதோ என்று நினைத்துக்கொண்டே கோபாலன் தன் கண்களைத் திறந்தான்.

ஆ ! அவன் எதிரே அவனுடைய அருமைத் தங்கை மீனா நின்று கொண்டிருந்தாள். சுற்று முற்றும் பார்த்தான். பழைய முருங்கை மரத்தடியிலே தான் நிற்பதைக் கண்டான். டில்லி செல்லும் வழியில் விழுந்தவன் எப்படி முருங்கை மரத்தடியில் வர நேர்ந்தது என்று அவனுக்குப் புரியவில்லை. முருங்கை மரக்கிளைப் பக்கம் தன் தலையை நிமிர்த்தி, “ஏ வேதாளம்! என் அடிமை வேதாளம்! வா இங்கே!” என்று கூவினான் வேதாளம் வரவும் இல்லை, பதிலும் இல்லை.

“ஏ வேதாளம் வருகிறாயா? இல்லையா?” என்று கதறினான்,

மீனா பயந்து போய்த் திரும்ப வீட்டுக்கு ஓடி, பாட்டியிட மும் அம்மாவிடமும் அண்ணனுக்கு வேதாளப் பைத்தியம் பிடித்து விட்டது”என்று சொன்னாள். உடனே பாட்டி, அம்மாவை ஓடிப் பார்க்கும்படி அவசரப்படுத்தினாள். அம்மா வும் தனக்குத் தெரிந்த நாலைந்து ஆட்களைக் கூட்டிக் கொண்டு, கோயில் பண்டாரத்தையும் கூட்டிக் கொண்டு காட்டு முருங்கை மரத்துக்கு ஓடி வந்தாள். கோபாலன் அப்பொழுது தான் “ஏ வேதாளம்! நீ இப்பொழுது வருகிறாயா இல்லையா? வராவிட்டால் உன்னைக் கட்டிப் போட்டு விடுவேன்” என்று கூறிக் கொண்டிருந்தான்.

“சரியாகப் பிடித்துக்கொண்டு விட்டது. நல்ல பூசை போட்டால் தான் விடும்” என்று சொல்லிக்கொண்டே பண்டாரம் கோபாலனைப் போய்க் கெட்டியாகப் பிடித்துக்கொண்டான். வந்திருந்த நாலைந்து ஆசாமிகளும் கோபாலனைக் கயிற்றால் கட்டி வீட்டுக்குத் தூக்கி வந்தார்கள். அம்மா அவன் பின்னால் அழுதுகொண்டே வந்தாள். ஊருக்குள் வரும்பொழுது நன்றாக இருட்டி விட்டது.

அடுத்த நாள். ‘கோபாலனை வேதாளம் பிடித்துக் கொண்டது’ என்ற செய்தி ஊர் எங்கும் பரவி விட்டது. இதைக் கேள்விப் பட்ட பள்ளிக்கூடத்து ஆசிரியர் கோபாலனைப் பார்ப்பதற்காக வந்து சேர்ந்தார்.

கோபாலன் முதல் நாள் மாலை தான் காட்டுக்குச்சுப்பி பொறுக்கச் சென்றது முதல் கனவில் கண்ட செய்திகளையும் கடைசியில் பண்டாரம் கட்டித் தூக்கி வந்த விவரத்தையும் சொன்னான்.

உடனே ஆசிரியர், கோபாலனுடைய அம்மாவை அழைத்து, அவனை அவிழ்த்து விடும்படி கூறி, வேதாளம் பிடிக்கவில்லை யென்று சமாதானப்படுத்தினார். முதல் நாள் பள்ளியில் தான் வேதாளக் கதை கூறிய விவரமும், பையன் தினசரிப் பத்திரிகை படித்து வந்ததால் அறிந்த விவரமும், சுப்பிபொறுக்கப் புறப்படும்போது பாட்டி பயமுறுத்தியனுப்பியதும் எல்லாம் சேர்ந்து மூளையைக் குழப்பி விட்டதென்றும், அவன் முருங்கை மரத்தடியில் தூங்கும் போது அவன் மூளையிலே ஏற்பட்ட கற்பனையே கனவாக மாறிவிட்டதென்றும் விளக்கமாக எடுத்துக்கூறினார் ஆசிரியர். அப்பொழுதே விபூதி மந்திரித்த பண்டாரம் சொல்லிக் கொள்ளாமல் கோயிலுக்கு நடையைக் கட்டி விட்டார்.

அவனுடைய கதையைக் கேள்விப்பட்ட பள்ளி மாணவர்கள் அன்று முதல் அவனை “மாஸ்டர் கோபாலன்” என்று நையாண்டி செய்யலானார்கள்.

– மாஸ்டர் கோபாலன், கலைப் பிரசுரம் வெளியீடு, தேவகோட்டை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *