மனம் திருந்திய மதன்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 28,170 
 

வீட்டுக்குள் தயங்கித் தயங்கி பூனை போல அக்கம் பக்கம் நோட்டம் விட்டபடி உள்ளே நுழைந்து புத்தகப் பையை ஒரு மூலையில் வைத்தான் மதன். பையின் அடியில் இருந்த டிஃபன் பாக்ஸ் சப்தம் கேட்டு சமையல் அறையிலிருந்து “வந்துட்டியா மதன்’ என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்தாள் மதனின் அம்மா அமுதா.

மனம் திருந்தியநம்ம வந்தது அம்மாவுக்கு எப்படித் தெரிந்தது என்று பிரமித்தான் மதன். ஆனால், தன் பிள்ளைகளின் ஒவ்வொரு அசைவையும் தாய் நன்கறிவாள்; அவளை ஏமாற்றவே முடியாது என்பதை அவன் அறியவில்லை. ஆனால் சில நாள்களாக மதன், தன் தாயை ஏமாற்றி வருவதை நினைத்துப் பெருமிதப்பட்டுக் கொண்டிருந்தான்.

“”ஆமா.., ஒரு வாரமா ரொம்ப நேரங்கழிச்சு வரியே.., எங்க போயிட்டு வர்றே..?” என்றாள் அமுதா. அப்போது மாலை 6.30 மணி. 4.30-க்கே பள்ளி முடிந்துவிடும்.

“”ஸ்பெஷல் க்ளாஸ்மா”

“”அப்படின்னா..?”

“”பள்ளிக்கூடம் முடிஞ்சதும், சிலபேருக்கு மட்டும் வாத்தியார் ஸ்பெஷலா பாடம் நடத்துவார், நிறைய மார்க் வாங்கணும்னு. அதுதான் ஸ்பெஷல் க்ளாஸ்.”

“”அதுக்கு எதுனாச்சும் துட்டு கிட்டுக் கட்டணுமா கண்ணு. முன்னாடியே சொல்லிடுப்பா, திடுதிப்புன்னு வந்து பணத்தக் கொண்டான்னு கேட்டீயனா உங்க ஐயா கண்டபடி உன்னைத் திட்டுவாரு” என்றாள்.

“”பணமெல்லாம் ஒன்னும் கட்டவேணாம்மா” பேச்சை அத்தோடு முடித்துக்கொண்டு கை, கால் கழுவக் கொல்லைப்புறம் சென்றுவிட்டான் மதன்.

÷ப்ளஸ் 2 படிக்கும் அவனைப் படிக்க வைக்க, வீட்டுக்கு வீடு பால் போடும் அமுதாவும், ஃபாஸ்ட் புட் கடையில் அடுப்படித் தணலின் வெக்கையில் வேகும் மதனின் தந்தை முத்துவும் படாத கஷ்டம் இல்லை. அவன் பத்தாம் வகுப்பையாவது தாண்டுவானா என்று கவலைப்பட்டவர்களுக்கு அவன் ப்ளஸ் 2 வரை வந்தது, ஏதோ டாக்டர் படிப்பு படிப்பது போன்றதொரு பெருமிதத்தைத் தந்தது. ஆனால் சில நாள்களாக மதனின் நடவடிக்கையில் மாற்றம் இருந்ததை அமுதா கவனிக்காமல் இல்லை.

÷மழையோ, புயலோ, பணியோ, இடியோ, வெயிலோ எந்தப் பருவம் வந்து எத்தனை இடைஞ்சல் கொடுத்தாலும், அமுதா வீட்டுக்கு வீடு பால் போடுவது மட்டும் ஒருநாள்கூட தவறவே தவறாது. விடியற்காலை 4 மணிகெல்லாம் கை சைக்கிளை எடுத்துக்கொண்டு பால்போடக் கிளம்பி விடுவாள். கணவனையோ, பிள்ளையையோ ஒருநாள் கூட எழுப்பி, துணைக்கு அழைத்ததில்லை. பால் போடுவதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு சிறுகச் சிறுகச் சேர்ந்து வைத்து மதன் படிப்புக்கு உதவி வருகிறாள்.

“”பெண்ணைப் பெத்தாதான் கஷ்டமுன்னு நினைக்காதே அமுதா, பெண் பிள்ளைகளால சில கஷ்டம்னா, ஆண் பிள்ளைங்களால பல கஷ்டம். நீ ஆம்பளப் புள்ளையப் பெத்திருக்கியே… ரொம்ப ஜாக்கிரதையா வளக்கனும்டி. வயசாக ஆக கெட்ட பசங்களோடு சகவாசம், கெட்ட பழக்கம், தகாத உறவுன்னு போகத் தொடங்கிடுவானுங்க. வீட்டுக்கு அடங்க மாட்டானுங்க; வூடு தங்க மாட்டானுங்க. ஜாக்கிரதையா பாத்துக்கோ, என்னோட நெலம உனக்கும் வந்துடக்கூடாது” – அமுதாவோடு சேர்ந்து பால் போடும் அலமேலு அக்காதான் இப்படி அங்கலாய்த்து அமுதாவை எச்சரித்தாள்.

“”எம் புள்ள சொக்கத் தங்கம்ல. அப்படியெல்லாம் போகமாட்டான். பெத்தவங்க பட்ற கஷ்டம் தெரிஞ்சு நடந்துக்குவான்” என்று கூறி ஆறுதல் அடைந்தாள் அமுதா. மதன் மேல் முழு நம்பிக்கை வைத்திருந்தாள் அந்த அப்பாவி.

“”யாரங்கே…?” என்ற குரல் கேட்டு, மாலை 6.30 மணி இருட்டில், ஒரு பாழடைந்த மண்டபத்துக்குப் பின்னால் சூழ்ந்திருந்த நாலைந்து இளைஞர்கள் கலையத் தொடங்கினர். அதில் ஒருவன் மட்டும் கேள்வி கேட்டவரிடம் பிடிபட்டுவிட்டான். பட்டென்று அவன் சட்டைக் காலரைப் பிடித்து இழுத்துக்கொண்டு, வெளியே வந்து முகத்தைப் பார்த்தவர் அதிர்ந்து போனார். “”நீ…. முத்துவோட மகன்தானே..?”

“”ஆமா சார்…’ தயங்கித் தயங்கிக் கூறினான் மதன்.

“”உன்னை சின்ன வயசுல பார்த்தது. நல்லா வளந்துட்டியே… ஆமா, இந்த இருட்டுல அந்தப் பசங்களோட என்ன பண்ற? யாரவங்கெல்லாம்? பள்ளிக்கூடம் விட்டா நேரா வீட்டுக்குப் போறதில்லையா?” என்று தொடர்ந்து கேள்வி கேட்கவும் மதனுக்கு உடம்பெல்லாம் வியர்த்தது. அப்பாவுக்குத் தெரிந்தவர் என்கிறாரே… அப்பாவிடம் சொல்லிவிடுவாரோ… என்ற பயம் மதனைச் சூழ்ந்துகொண்டது. பேசாமல் இருந்தான். கையில் இருந்ததை மெதுவாக அவருக்குத் தெரியாமல் பின்பக்கமாக நழுவவிட்டான்… என்றாலும் வாசனை காட்டிக்கொடுத்தது.

“”சொல்லு, இந்த வேளையில் உனக்கு இங்கென்ன வேலை? அந்தப் பசங்க எல்லோரும் உன்னோட ஃபிரண்ட்ஸô…?”

“”ஆமா சார்… அப்பாகிட்ட….. என்று கூறமுடியாமல் தவித்தவனைத் தடுத்து, “”சரி சரி வா…. வீட்டுக்குப் போகலாம். நேரமாவுது, அம்மா தேடுவாங்கல்ல.. பிறகு பேசிக்கலாம்” என்று கூறி எதுவும் பேசாமல் அவனை அழைத்துச் சென்றார். பளார் பளார் என்று கன்னத்தில் அடித்திருந்தால்கூட தேவலை போல இருந்தது. ஆனால் அவருடைய மெüனம் மதனை என்னவோ செய்தது. “என்ன நடக்குமோ’ என்று மனம் குழம்பியபடி அவரைப் பின்தொடர்ந்தான். தன் மேல் பாசத்தைப் பொழியும் அப்பா-அம்மாவிடம், தான் நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட் பிடிப்பதையும், பாக்கெட் தண்ணி அடிப்பதையும் கூறிவிடுவாரோ என்று பயந்தான்.

இன்று, நாளை என்று ஒருவாரம் ஓடிப்போய்விட்டது. அம்மாவும் அப்பாவும் வழக்கம் போலவே பாசத்தைப் பொழிந்தனர். மதனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அவர் நம் அப்பாவிடம் எதுவும் கூறவில்லையோ, என நினைத்து மனம் சற்று ஆறுதல் அடைந்தாலும், என்றைக்காவது ஒருநாள் சொல்லிவிட்டால்… என்ற பயம் உள்ளூர அரித்துக்கொண்டிருந்து. தூங்க முடியாமல் தவித்தான்.

அன்று இலக்கிய மன்ற விழா. மாணவர்கள் எல்லோரும் அங்கும் இங்குமாக மகிழ்ச்சியாக உலா வந்துகொண்டிருந்தனர். ஆனால், மதன் மட்டும் அந்தப் பயத்திலிருந்து மீளமுடியாமல், உட்கார்ந்த இடத்திலேயே அமர்ந்திருந்தான்.

“”இன்றைய இலக்கிய மன்ற விழாவுக்குத் தலைமையேற்றுப் பேச, சென்னையில் உள்ள ஒரு மாணவர் அனாதை இல்லத்தில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் வந்திருக்கிறார். அவர் அனுபவப் பாடம் குறித்து சிலமணி நேரம் பேசுவார். அவர் கூறும் நல்லுரைகளை அமைதியோடு அனைவரும் கேட்டு, மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்” என்று தலைமையாசிரியர் சொல்லிவிட்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்தவுடன், அவர் அறிமுகப்படுத்திய அந்த ஆசிரியர் விழா மேடைக்கு வந்தார். முதல் வரிசையில் அமர்ந்திருந்த மதனின் இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது. அன்று தன்னைக் கையும் களவுமாகப் பிடித்த அந்தப் பெரியவர்தான் அவர்.

“”மாணவர்கள் அனைவருக்கும் வணக்கம்” என்று கூறி அவர் பேசத்தொடங்கினார். “”மாணவச் செல்வங்களே, இந்தப் பருவம்தான் நல்ல விதைகள் ஊன்றி பயிர் செய்யக்கூடிய பருவம். இளம் வயதில் நீங்கள் மேற்கொள்ளும் நற்செயல்கள்தான் பின்னாளில் உலகம் உங்களைத் திரும்பிப் பார்க்க வைக்கும். “கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு’ என்றார் ஒüவைப் பாட்டி. இந்த உலகிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் – படிக்க வேண்டிய பாடங்கள் இன்னும் ஏராளம் உள்ளன. அதிலும் ஒருவன் வாழ்வில் அவனுக்கு உதவக்கூடியது அவன் கற்கும் கல்விதான் என்றாலும், அதைவிட வாழ்க்கைக்கு தக்க நேரத்தில் பயன்தரக்கூடியது அனுபவப் பாடம்தான். அதுதான் காலத்துக்கும் அவனைக் காக்கும்.

÷அனுபவப் பாடத்தைப் புத்தகத்தைப் படித்துத் தெரிந்துகொள்ள முடியாது. அது அவரவர் அனுபவத்துக்கு வரவேண்டும். இன்ப-துன்பங்களை அனுபவித்த பிறகுதான் வாழ்க்கை என்றால் என்ன என்பது புரியும். இன்பத்தை மட்டுமே அனுபவிக்கும் இளைஞர்களுக்கு அது புரியாது. வாழ்க்கையில் முன்னுக்கு வந்தவர்களின் வாழ்க்கையைப் பின்னோக்கிப் பார்த்தால், அவர்களது அனுபவங்கள் பிரமிப்பூட்டுவதாக இருக்கும். திருவள்ளுவர் மக்களுக்குத் தேவையான அருமையான கருத்துகளைக் கூறியிருக்கிறார். அவை பின்பற்ற வேண்டிய அறிவுரைகள். மாணவர்களான உங்களுக்குத் தேவை, கல்வி மட்டுமல்ல, கல்வியோடு கூடிய நல்லொழுக்கம், பணிவு, பெரியோருக்கு அடங்கி நடத்தல், தன்னடக்கம், அனைவரிடத்திலும் அன்போடிருத்தல், நல்ல நட்புறவு.

திருவள்ளுவர், சுவாமி விவேகானந்தர், பாரதியார் முதலிய பெரியோர்கள் இத்தகைய அறிவுரைகளை அனுபவமில்லாமலா கூறியிருப்பார்கள்? வீரத் துறவி விவேகானந்தர் சொன்னபடி வாழ்ந்தும் காட்டிய மகான். அவர் சொன்ன வழியில் சென்றாலே போதும் வெற்றி நிச்சயம்.

மனம் சிதறக்கூடிய பருவமும், கண்டபடி மனம் அலைபாயக் கூடிய பருவமும் இந்த இளைமைப் பருவம்தான். ஆனால், இந்தப் பருவம்தான் நல்ல மற்றும் தீய எண்ணங்கள் முளை விடக்கூடிய பருவமும் கூட. அதனால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். “நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம், தீயொழுக்கம் என்றும் இடும்பைத் தரும்’ என்றார் வள்ளுவர். நல்லொழுக்கம் நன்மைக்கு வித்தாகும், தீயொழுக்கம் துன்பத்திற்கு வித்தாகும். இளமையில் நல்ல செயல்களை நீங்கள் செய்தால் நன்மையே அடைவீர்கள். அதனால் தீய வழியில் அழைத்துச் செல்லும் நண்பர்கள் சகவாசத்தைத் தவிர்த்து நல்லொழுக்கம் பேணி, நல்லவர்களின் நட்பையே நாடுங்கள். அவ்வாறு உள்ளவர்களைத் தாய்-தந்தையர் மட்டுமல்ல, சான்றோரும் போற்றுவர். உன் நண்பன் யார் எனச் சொல், நீ யார் என்பதைச் சொல்கிறேன் என்றார் ஓர் அறிஞர். அதனால் நண்பனைத் தேர்ந்தெடுப்பதில் மிகமிகக் கவனமாக இருங்கள். வாழ்க்கையில் எதை இழந்தாலும் திரும்பப் பெற்றுவிடலாம், ஆனால் ஒழுக்கம் தவறினால் வாழ்க்கையே இல்லை.

உங்களுக்கு ஒரு சின்ன சம்பவத்தைக் கூற ஆசைப்படுகிறேன். மகாத்மா காந்தியும் நேருவும் ஒருசமயம் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தார்கள். அப்போது வழியில் ஒரு சிறிய வாய்க்கால் குறுக்கிட்டது. அதைக் கடந்து செல்வதற்கு ஒரு பெரிய கல் போடப்பட்டிருந்தது. ஆனால், நேரு மாமா, பின்னால் சிறிது தூரம் சென்று அந்தக் வாய்க்காலை ஒரே பாய்ச்சலில் தாண்டி மறுபக்கம் சென்றார். ஆனால், காந்தியோ, முன்னேறிச் சென்று அந்தக் கல்லின் மீதேறி நடந்து சென்று கடந்தார்.

இதைக் கண்ட நேரு, “”நீங்களும் என்னைப் போல தாண்டி இந்தப் பக்கம் வந்திருக்கலாமே….” என்று கேட்டார். அதற்கு காந்தியடிகள், “”இந்தக் கால்வாயைக் கடக்க நான்கு அடிதூரம் பின்னே சென்றுதானே நீங்கள் தாண்டினீர்கள்? நான் நேராகச் சென்று கடந்தேன்” என்றாராம் சிரித்துக்கொண்டே. காந்தி செய்ததுபோல, எதுவும் நேர் வழியில் வரவேண்டும். குறுக்குப்பாதை என்றைக்கும் ஆபத்தையே விளைவிக்கும். காந்தி நமக்கு நேர்வழியில் சென்றே சுதந்திரத்தை வாங்கித் தந்திருக்கிறார். மாணவர்களே, பெரியோர்களின் அனுபவப்

பாடம்தான் நமக்குப் பாடம். அந்தப் பாடத்தை ஒருநாளும் மறக்கக்கூடாது. நம் அனுபவப் பாடம் அதைவிட உயர்ந்தது. பெற்றோருக்குப் பெருமை தேடித்தரும் நற்செயல்களையே செய்யுங்கள்; பெற்றோரின் மனதை நோகவிடாத பிள்ளைகளாகத் திகழுங்கள். உங்களை நல்வழிப்படுத்தும் நல்ல நண்பர்களுடனேயே பழகுங்கள்” – அந்த ஆசிரியர் தன் பேச்சை முடித்துக்கொண்டு அனைவருக்கும் நன்றி கூறினார்.

மதன் இருப்புக் கொள்ளாமல் தவித்தான். அவன் மனம் அவரிடம் மன்னிப்புக் கேட்கத் துடித்தது. வெளியே வந்த மதனை நோக்கி கோபால் ஓடிவந்து, மூச்சிறைக்க இறைக்க…. “”டேய் மதன்… போன வாரம் நாம அந்த மண்டபத்துக்குப் பின்னால சிகரெட் பிடிச்சதும், பாக்கெட் தண்ணி அடிச்சதும், நம்ம பாபுவோட அம்மா-அப்பாவுக்குத் தெரிஞ்சிடுச்சாண்டா.. அதனால, கஷ்டப்பட்டுப் படிக்க வைக்கிற நம்ம புள்ள கெட்டுப்போயிட்டானேன்னு நினைச்சு அவனோட அம்மா-அப்பா தற்கொலை பண்ணிக்கிட்டாங்களாண்டா…. பாவம்டா பாபு, “இனிமே செய்யமாட்டேம்மா, திரும்பி வாம்மான்னு’ கதறிக்கதறி அழுவுறான்டா…. நான் அவங்க வீட்டுலேருந்துதான் வரேன்…” அவன் குரல் தழுதழுத்தது. இதைக்கேட்ட மதன் உறைந்துபோய் நின்றான்.

அறையை விட்டு அந்த ஆசிரியர் வெளியே வந்ததும் அவர் காலில் சட்டென்று விழுந்து, “”இனிமேல் அந்தப் பசங்களோட சகவாசம் வச்சுக்க மாட்டேன் சார், என்னை மன்னிச்சுடுங்க சார்… என்னோட அப்பா-அம்மாகிட்ட சொல்லிடாதீங்க சார். எனக்கு என்னோட அப்பா அம்மா வேணும் சார்…” என்று கதறி அழுதான்.

“”மதன், தவறு செய்கிறவர்களையும் கெட்ட வழியில் செல்கிறவர்களையும் திருத்தி நல்வழிப்படுத்துவதுதான் ஆசிரியரோட கடமை. தண்டனை கொடுப்பதோ, தாய்-தந்தையரிடம் காட்டிக் கொடுப்பதோ அல்ல. நீ நல்லாப் படிக்கிற பையன் என்பதை நான் ஊருக்கு வந்த அன்னிக்கே பள்ளியில் கேட்டுத் தெரிந்துகொண்டேன். உன்னோட கெட்ட சகவாசம்தான் உன்னை இப்படியெல்லாம் செய்ய வைக்கிறது. அதிலிருந்து நீ விலகி இருந்தால் நல்லவனாக வருவாய். கவலைப்படாதே, இனிமேலாவது அவர்களது நட்பைக் கைவிட்டு நல்லாப் படிச்சு உன் தாய்-தந்தைக்கும் பள்ளிக்கும் பெருமை தேடிக் கொடுக்கப் பாரு. அதுபோதும் எனக்கு” என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்தார்.

“”என்னடா மதன், இன்னிக்கு பெசல் கிளாஸ் கிடையாதா? சீக்கிரமா வந்துட்டியே…” அப்பாவியாகக் கேட்டாள் அமுதா.

“”முடிஞ்சிடுச்சும்மா… இனிமேல் லேட்டா வரமாட்டேன். நல்லாப் படிச்சு நிறைய மார்க் வாங்குவேம்மா…”

“இனிமே இவன் சட்டைப் பாக்கெட்டில் அந்தக் கருமமெல்லாம் இருக்காது’ என்று அமுதா மனதுக்குள் சொல்லி அகமகிழ்ந்தாள்.

– இடைமருதூர் கி.மஞ்சுளா (செப்டம்பர் 2013)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *