கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: November 7, 2022
பார்வையிட்டோர்: 4,606 
 

(1942ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாடெங்கும் மழைவளம் சிறந்தது; பச்சைப் பசேலென்று பசும் பயிர் எங்கும் காணப்பட்டது. நெல் பாக்குமரம் போல் வளர்ந்தது. நாடு எல்லா வளங்களும் பெற்றது. ஒவ்வொருவரும் செல்வராயினர். இன்மை என்பது தலைகாட்டா தொழிந்தது. பசியைப் போக்கும் நெல் முதலிய தானியங்களை ஒவ்வொருவரும் தம் வீட்டில் நிரப்பி வைத்திருந்தனர்; ஆதலின், பிச்சை எடுக்க வேண்டிய தன்மை யாருக்கும் இல்லாம லொழிந்தது. ஆமகனுக்கும் சோறு இடும் தொழில் இல்லாதொழிந்தது.

ஒவ்வோர் ஊராய்ச் சென்று அங்குள் ளோரை “உண்ணுகின்றீரா?” என்று அவன் கேட்டான். முன்னே பலர் “எமக்குத் தாய் இவரே! எம் தந்தையும் இவரே! எமக்கு உறவினர் இவரே! உணவிடும் கடவுள் இவரே!” என்று சொல்லிச் சூழ்ந்திருந்தார்கள். இப்போதோ “இவன் யார்? அறிவில்லாதவனாகக் காணப்படுகின்றானே! உண்ணுவோருண்டோ என்று கேட்கின்றானே! இவன் அறிவு ஒழுங்கான நிலையில் இல்லையோ!” என்று கூறிப் பரிகசித்தார்கள்.

ஆமகனைச் சுற்றிலும் கூனரும் குருடரும் ஏழைகளும் எப்போதும் இருப்பார்கள். அவர் களிடையில் சந்திரனைப்போல் அவன் மகிழும் முகத்தோடு நின்றுகொண்டிருப்பான். இப்போதோ தனியாக இருந்தான். முகமோ வாடிய மலரைப்போல் வதங்கி இருந்தது. பெருஞ் செல்வன் ஒருவன் தன் செல்வத்தை எல்லாம் இழந்தால் எவ்வாறு இருப்பான்? அவனைப் போல நம் நல்ல சிறுவனும் வருந்தினான்.

ஒரு நாள் வேற்று நாட்டிலிருந்து வந்த பலர் சாலிமகனைக் கண்டார்; வணங்கினர். “அன்பரே! சாவக நாட்டில் மழை இல்லாமல் போயிற்று. ஆதலினால் பஞ்சம் வந்தது. மக் கள் பசியால் துன்புற்று வாடுகின்றனர். நீவிர் அங்குச் செல்லின் நலமாக இருக்கும். உடனே எழுந்தருள வேண்டுகின்றோம்,” என்று கூறினார்கள்.

இச்செய்தி அவனுக்குக் கட்டுக்கடங்கா மகிழ்வை உண்டாக்கிற்று. “நாள் நல்ல நாள் தானா? இன்று புறப்படலாமா?” என்றெல்லாம் அவன் கேட்கவில்லை. உடனே புறப் பட்டுப்போகலாம் என்றான். சாவகம் செல்லும் கப்பலில் ஏறினான்.

“பட்டகாலிலே படும் ; கெட்ட குடியே கெடும்,” என்பது பழமொழி அல்லவா? தீவினை தொடர்ந்து வரும் என்பர் பெரியோர். கப்பல் சென்றுகொண்டிருக்கும்போது பெரும் புயல் காற்று வீசிற்று. கப்பலிலிருந்தோர் மிகுதியும் துன்புற்றார்கள். இடையில், புயல்காற்றின் கொடுமை ஓயும் வரையில் ஒரு தீவில் தங்க வேண்டும் என்று கப்பல் தலைவன் நினைத்தான். ஆகவே மணிபல்லவம் என்ற தீவுக்கருகில் கப்பல் நிறுத்தப்பட்டது.

தீவைப் பார்க்க வேண்டும் என்று பலர் ஆசைகொண்டார்கள். ஆகவே பலர் கப்பலினின்றும் இழிந்து தீவினுள் சென்றனர். அவருடன் நம் இளைஞனும் சென்றனன். அங்குத் திக்குக் கொருவராகப் பல காட்சிகளைக் கண்டுகொண்டே சென்றனர்.

கப்பலோட்டி கப்பல் புறப்படப்போவதை அறிவித்தனன். எல்லோரும் கப்பலேறினர். பசுமகன் ஒரு மர நிழலில் தங்கி இயற்கைக் காட்சியில் ஈடுபட்டிருந்தான். அவனுக்குக் கப்பல் புறப்படுவது தெரியாது. கப்பல் தலை வனும் எல்லோரும் ஏறிவிட்டார்கள் என்று தவறாக நினைத்துப் புறப்பட்டுச் சென்றான். ஆமகன் தீவில் தனித்து விடப்பட்டான்! ஐயோ! தீவினையே!

மணிபல்லவம் என்ற அத்தீவு மனிதர் இல்லாதது. மக்கள் நடுவில், தமிழ்நாட்டில், தனியாக இருந்தவன்; இப்போது மனிதர் வாழாத தீவில் தனியாக ஆயினேன். இனிமேல் அவ்வோடு – கலைமகள் பிற உயிரின் பசியைப் போக்கத்தந்த ஓடு – அவன் ஒருவனுக்கே பயன் படும்! “என்ன துன்பம்! அறக் கடவுளே! யான் இப்படி வருந்த என்ன தீச்செயல் செய்தேன். யான் ஒருவன் தனித்துக் கொழுத்து வாழ இவ்வோட்டினைக் கொள்ள மாட்டேன். இஃது உலகத்து மக்கள் உயிரைக் காப்பதற்கே பயன்பட வேண்டும். யான் இனி உயிர்வாழேன். சாதலே இனி இனிமையானது,” என்று வருந்தினான்.

எங்கும் நிறைந்த இறைவனை வணங்கி னான். அத்தீவில் இருந்த கோமுகி என்ற பொய்கையை அடைந்தான், “என்னுயிரனைய ஓடே! பசியை ஒழிக்கும் பண்பு சிறந்த பொருளே ! ஏழைகளின் கண்ணீரைப்போக்கிய என் உயிர்ப்பொருளே ! நாமகள் தந்த நன்கலமே! நின்னை இந்தப் பொய்கையில் விடுகின்றேன். ஆண்டுக்கு ஒருமுறை நீ வெளியில் தோன்று வாயாக. அருள் உருவத்துடன் அறச்செயலை மேற்கொண்டவர் எவரேனும் உன்னெதிர் வரின் அவர் கையில் புகுவாய். மீண்டும் உலகத்து ஏழைகளின் பசித் தீயை உன் உணவாகிய நீரால் ஒழிப்பாயாக! நீ நீடு வாழ்க!” என்று சொல்லி ஓட்டினைப் பொய்கையில் விடுத்தான்.

அன்று தொடங்கி ஒன்றும் உண்ணாது கடவுளை நினைந்து கொண்டிருந்தான். உணவு தானே உயிரை உடலில் வாழச் செய்கின்றது. உணவு இல்லையேல் இறக்க வேண்டியது தானே! சின்னாளில் ஆமகன் அறக்கடவுள் திருவடிகளை அடைந்தான்.

அன்பர்களே! உங்களை ஒத்த சிறுவன் ஒருவனின் வரலாற்றினைக் கேட்டீர்கள். இவன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டில் வாழ்ந்தவன். இவனுடைய வரலாறு மணிமேகலை என்ற அழகிய நூலிலே சொல் லப்பட்டிருக்கின்றது. நீங்களும் இவனைப் போல் அறச்செயலில் ஈடுபடுவீர்கள் அல்லவா?

– சங்க இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: ஜனவரி 1942, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *