புத்தர் பொம்மை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: April 26, 2022
பார்வையிட்டோர்: 5,780 
 

(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எதிரே பயங்கரமாக உறுமிய வண்ணம் பாயத் துடிக்கும் வேங்கை – பின்னால் படமெடுத்தாடும் பாழும் நாகம் – தலைக்கு மேலே கூரிய நகங்கள் விரித்துக் கொத்திடப் பறக்கும் கழுகுக் கூட்டம் – இதற்கிடையில் ஒரு பச்சிளம் பாலகன் சிக்கிக்கொண்டால்?….

“அப்பப்பா! நினைக்கும் போதே நடுக்கம் பிறக்கிறதே! எதற்காகவாம் இப்படியொரு பயங்கரமான கற்பனை?” என்று கேட்கிறீர்களா?

அதோ பாருங்கள், நடுங்கும் கால்கள் – கலங்கும் கண்கள் அவற்றிலிருந்து வழிந்தோடும் கண்ணீர் வெள்ளம் – இந்தப் பரிதாபமான கோலத்தோடு நிற் கிறானே ஒரு சிறுவன், அவனது வேதனையான நிலையை விளக்கத்தான் இந்தக் கற்பனை! அவனுக்கு ஏன்தான் இந்த நிலை வந்தது? இத்தனைக்கும் அங்கே வேங்கை, பாம்பு, கழுகு எதுவுமே இல்லையே! இல்லைதான் – உண்மைதான்! ஆனால் அவை அனைத்தும் ஒன்றாக உருவானதோ என்று நினைக்கும் வண்ணம் அவன் எதிரில் கோபத்தோடு நிற்கிறார், ஒரு கரிய உருவ பெரிய மனிதர்!

“ஏண்டா ஊமை போல் நிற்கிறாய்?… சொல்லுடா; எங்கே அந்தப் பொம்மை?” – அந்த மனிதர் பேசினார். இல்லை; வேங்கை போல் உறுமினார். பாம்பு போல் சீறினார். அவருடைய குரல் அவ்வளவு ‘இனிமை’யாக இருந்தது!

முத்து – அவன் தான் அந்தச் சிறுவன் ஒரு முறை தன் நடுங்கும் கைகளால் கண்களில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டான்.

“சொல்லித் தொலையேண்டா!…” என்று அவர் மீண்டும் கத்தினார்.

“வந்து… வந்து…அதை நான்…” முத்துவால் பேச முடியவில்லை. வார்த்தைகள் தொண்டைக் குழியைவிட்டு வெளியே வர மறுத்தன. அவன் ஏன் தான் அப்படி உளறுகிறான்? அவன் செய்துவிட்ட தவறுதான் என்ன?

எதிரே நின்றுகொண்டிருந்த முரட்டு மனிதர் இந்தக் காரணங்களுக்கெல்லாமா, காத்துக்கொண்டிருப்பார்? அவர் முதலாளி ஆயிற்றே! முன்யோசனை இல்லாமையும் மூர்க்க குணமும் அவரது உடன் பிறப்பாயிற்றே! வேகமாக அவன் எதிரே பாய்ந்தார். மறுகணம், முத்து “ஐயோ” என்று அலறிவிட்டான்

அவன் சிறுவன் தானே! முதலாளியின் கோபம் பார்வையை – கொடூரப் பேச்சை அவன் தாங்கிக் கொள்ளும் சக்தி எப்படி இருக்க முடியும்?

“கத்துடா கழுதை! எவ்வளவு அழகாக இருந்தது அந்த புத்தர் பொம்மை!.. அதை விற்றுக் கிடைத்த பணத்திற்கு என்ன வாங்கி தின்றுத் தொலைத்தாய்?… திருட்டுப் பயலே!” என்று அந்த மனிதர் மீண்டும் இரைந்தார்.

“ஐயோ! நான் திருடனா?….” – தன்னையும் மீறி இப்படிக் கத்திவிட்டான் முத்து. பயந்து நடுங்கிக் கொண்டிருந்த அவனது குரலுக்கு அத்தனை பலம் எங்கிருந்துதான் வந்தது? சற்றும் எதிர்பாராத வண்ணம் தன்மீது அபாண்டப்பழி சுமத்தப்படும் போது குற்றமற்ற தூயவன் எப்படித் துடிப்பான்; துவளுவான்! தாங்கிக்கொள்ள முடியுமா, அந்த சுடுசொற்களை! ‘நான் திருடனா?’ என்று கேட்டுவிட்டு விக்கி விக்கி அழுகிறானே அந்த நல்ல தம்பி; அவனும் குற்றமற்றவன் தான்!…

ஆனால், அன்று காலையில் நிகழ்ந்த அந்தக் சம்பவம்…

“பொம்மை வாங்கலையோ – புதிய பொம்மை வாங்கலையோ…?” பொம்மைகள் அடங்கிய ஒரு தள்ளுவண்டியை நகர்த்திய வண்ணம் இப்படிப் பாடிக்கொண்டு சென்றான் முத்து. ஆமாம்; அவன் முதலாளி ஒரு பொம்மை வியாபாரி. அவன் – அந்த அனாதைச் சிறுவன் – கூலிக்கு பொம்மை விற்கும் ஓர் அடிமை!

சீமான்கள் வாழும் தெருவொன்றில் அவன் நுழைந்தான். ஓரிடத்தில் நின்றான். வழக்கம் போல் பாட ஆரம்பித்தான். அவனது இனிமையான குரலுக்குப் பலன் இல்லாமலா போகும்? குழந்தைகளின் கண்ணோரத்தில் ஒரு துளி கண்ணீரைக் கண்டாலும் துடித்து விடுவார்களே, பெற்றவர்கள்! அதுவும் பணம் படைத்தவர்களைப் பற்றி கேட்கவா வேண்டும்? அன்று நல்ல வியாபாரம்! வண்டியிலே இருந்த கண்ணைப் பறிக்கும் பல வண்ணப் பொம்மைகள் ஒவ்வொன்றாகப் பறந்தன. காசு குவிந்தது. முத்துவுக்குக் கொள்ளை மகிழ்ச்சி! வண்டியைத் தள்ளிக்கொண்டு நகரத் தொடங்கினான்.

ஆனால், அவன் கால்கள் ஏனோ திடுக்கிட்டு நின்று விட்டன. வண்டியின் பக்கத்திலே நின்று கொண்டு, பொம்மைக் குவியலுக்கிடையே கிடந்த ஒரு புத்தர் பொம்மையை வெறிக்கப் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி ஒருவள் தான் அவன் கவனத்தைக் கவர்ந்து விட்டாள், அப்போது! கிழிந்த உடை – பரட்டைத் தலை -‘பாவமான தோற்றம் – இவை அந்தச் சிறுமியை ‘ஏழை’ என்று எடுத்துக்காட்டின. அவளது ஏக்கப் பார்வை முத்துவை என்னவோ செய்தது.

“என்ன பாப்பா; என்ன வேண்டும்?” என்று கேட்டான் பரிவோடு.

புத்தர் பொம்மையின் மேல் நிலைகுத்தி நின்ற கண்களை நகர்த்தினாள் அந்தப் பாப்பா. முத்துவை நோக்கினாள். அவளது கண்களிலே கலங்கி நிற்கும் கண்ணீர்…அதற்கு என்ன பொருள்?

“பாப்பா! ஏன் பாப்பா அழுகிறாய்?…” – முத்துவின் குரலிலே பாசம் கலந்திருந்தது.

“பொம்மை” என்று கையைக் காட்டி மழலை பேசினாள் அந்தப் பாப்பா.

“எந்தப் பொம்மை?”

“அதோ, அந்த புத்தர் பொம்மை! அவரைப் பத்தி நான் புத்தகத்திலே படிச்சிருக்கேனே!…ம்…எனக்குத் தர்றியா?…” என்று ஆவலுடன் கேட்டாள் அவள்.

“ஓ, தாராளமா…காசை எடு!…”

“காசா..?” – பரிதாபத்தோடு இப்படிச் சொல்லிய அந்தப் பாப்பா தன் உதடுகளைப் பிதுக்கிக் காட்டினாள். அவள் கண்கள் கலங்கின. அழுகையும் கிளம்புவதற்குத் தயாராக நின்றது. பாவம், தன்னைப் போன்ற சிறுமிகள் ஆளுக்கொரு பொம்மை வாங்கி, சிரித்துக் களித்துச் செல்வதைக் கண்ட பிஞ்சு நெஞ்சல்லவா; ஆசை தோன்றத்தானே செய்யும்? கிடைக்காவிட்டால் அழுகையும் வரத்தானே செய்யும்?

முத்துவின் மனம் வேதனையால் நிரம்பியது. தனக்கு ஒரு தங்கை இருந்து – அவளும் இதைப்போல் பொம்மைக்கு ஆசைப்பட்டு, கண்ணீரை மட்டுமே பதிலுக்குப் பெற்றால் அவன் என்ன செய்வான்? உயிரைக் கொடுத்தாவது தங்கையின் ஆசையை நிறை வேற்றி வைக்க மாட்டானா? இதோ , கண்ணீர் விட்ட படி நிற்கிறாளே அவள் ‘உடன் பிறக்காத தங்கை’ – இப்போது அவன் என்ன செய்ய வேண்டும்?

ஏழையைக் கண்டு ஏழைதானே இரங்க வேண்டும்! முத்து அந்தப் பொம்மையைப் பார்த்தான். புத்தர் புத்தர்! ‘அன்பு’ பற்றி உலகுக்கு உரைத்த மேதை! அப்போதும் அவனுக்கு அன்பைப் போதித்து விட்டார்! முத்து, தான் அப்போது என்ன செய்யவேண்டும் என்பதைக் கண நேரத்தில் உணர்ந்து கொண்டுவிட்டான். மறுகணம் அந்த புத்தர் பொம்மையை எடுத்தான். கணக்கு பார்த்துக் காசு வாங்கும் போது முதலாளி கோபிப்பாரே என்று நினைக்கவே இல்லை. அதை அந்தப் பாப்பாவிடம் கொடுத்தான். அவளும் வாங்கிக் கொண்டாள்

அப்பப்பா…அவள் முகத்திலேதான் எவ்வ ளவு களிப்பு! சிரித்துக் கொண்டே ஓடினாள். பக்கத்திலிருந்த தன் குடிசைக்குள் நுழைந்தாள்.

முத்துவும் கலகலவென்று சிரித்தான். கவலையால் வாடிக்கொண்டிருந்த ஒரு தங்கையின் கண்ணீரைத் துடைக்க முடிந்ததல்லவா ; அந்த மகிழ்ச்சி அவனுக்கு! பெருமை அவனுக்கு! ஆனால் அந்த அன்புச் செயல் தான் அவனை சொல்ல முடியாத சோக நிலைக்கு இழுத்துக் கொண்டு சென்று விட்டது….திருடன் என்ற தீய பட்டம் சுமத்தி துடித்திடச் செய்து விட்டது!-

“நான் திருடவில்லை எசமான்! என்னை மன்னித்து விடுங்கள ….அந்த பொம்மையை அழுது கொண்டிருந்த ஒரு பாப்பாவுக்கு இனாமாகக் கொடுத்து விட்டேன்! நான் திருடவில்லை…தயவு செய்து இன்னுமொரு முறை அப்படிச் சொல்லாதீர்கள்! என்னால் தாங்கவே முடியாது!” உண்மையைச் சொல்லிவிட்டான் முத்து, தனது முதலாளியிடம்.

முதலாளி மகிழவில்லை. இரக்க நெஞ்சமில்லா அந்தக் கோபக்காரருக்கு அன்பைப்பற்றி என்ன தெரியும்? முத்துவின் தூய உள்ளத்தை – தயாள குணத்தைக் கிண்டல் செய்தார்; கேலி புரிந்தார்; ‘அடுக்குமா இந்த அநியாயம்’ என்று சீறிப் பாய்ந்தார்.

“இனாம் கொடுத்தாயா, முட்டாளே! எவன் வீட்டு சொத்து? வியாபாரத்திற்குத் தான் உன்னை அனுப் பினேனே தவிர; வீதியிலே இரைத்து விட்டு வருவதற்கா ?…”

“தவறென்று தெரிகிறது எசமான் எனக்கும்! ஆனால் தவிர்க்க முடியவில்லையே ; என்ன செய்வேன்? என்னை மன்னித்து விடுங்கள்! அதற்கான தொகையை என் சம்பளத்திலாவது பிடித்துக் கொண்டு விடுங்கள்!” என்று கெஞ்சினான் முத்து.

“இது ஒரு ரூபாய் விவகாரம் – சம்பளம் இருக்கிறதே என்கிறாய்! முட்டாளே, நாளைக்கு இதுபோல் பத்து ரூபாய் பொருளைத் தானம் தந்துவிட்டு வந்து என் எதிரே தலை குனிந்து நின்றால்….நான் என்ன செய்வேன்? இப்போது நான் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்! ஓடு வெளியே! அதிகப் பிரசங்கியே, இனிமேல் இங்கில்லை வேலை உனக்கு!” கோபம், கொடூரம் இவற்றின் துணையோடு முதலாளியின் கட்டளை இப்படிப் பிறந்து விட்டது!

முத்து வெளியே ஓடினான். வேகமாக நடந்தான். “என்ன உலகம் இது! ஐயோ, நான் என்ன பயங்கரமான குற்றம் செய்து விட்டேன்? அன்பு கொண்டது தவறா? அன்பு என்ன அத்தனை ஆபத்தான ஒன்றா?” என்று குழம்பினான். சொல்லடிப்பட்ட அவனது உள்ளம் ‘வலி’ தாங்காது துடித்தது. அவன் நடந்தான்; நடந்து கொண்டே இருந்தான்.

வெகு தூரம் நடந்துவிட்டான், அவன்.

ஓரிடத்தில் நின்றான். எங்கே வந்துவிட்டோம் என்று பார்த்தான். பாப்பாவுக்கு பொம்மை கொடுத்தானே; அந்த இடம்தான் அது! முத்து எதுவோ யோசித்தான். ‘அவளுக்கு சிரிப்பு தந்தேன், நான்! எனக்கு அழுகைதான் கிடைத்தது பதிலாக! போகட்டும்; அந்தத் தங்கத் தங்கை மகிழ்வதை – எனது அன்பில் விளைந்த அந்த அற்புதக் காட்சியையாவது கண்டு களிப்போம்!’ என்று எண்ணினான். அவளது குடிசையை நெருங்கினான். மெதுவாகத் தலையை உள்ளே நீட்டினான்.

அதே சமயம்…

வேகமாக வீசி எறியப்பட்டு பாய்ந்து வந்த ஏதோ ஒன்று அவன் தலையைத் தாக்கியது; கீழே விழுந்தது. அதைச் சற்றும் எதிர்பாராத முத்து “ஐயோ” என்று அலறினான். கீழே பார்த்தான். புத்தர் பொம்மை! மாலையில் அவன் அன்பளிப்பாக தங்கை ஒருவளுக்குத் தந்தானே அந்தப் புத்தர் பொம்மைதான்! ஆனால் இப்போது சுக்கல் சுக்கலாக உடைந்து கீழே சிதறிக் கிடந்தது!

முத்துவுக்கு ஒன்றுமே புரியவில்லை! அப்போது உள்ளேயிருந்து எழும்பியது ஒரு கோபக்குரல் . “இனாம் கொடுத்தானாம் இனாம்! ஏழை சிந்தும் கண்ணீருக்கு எவன் மதிப்பு கொடுப்பான்? இந்தக் காலத்தில் எவன் இனாம் கொடுப்பான்? முளைக்கும் போதே ஏன் நாயே பொய் சொல்லுகிறாய்? பொம்மை வாங்க ஏது காசு? எங்கே திருடினாய்?” என்று அதட்டியது

அந்தக் குரல். அதைத் தொடர்ந்து அடிக்கும் ஒலியும், அந்தப் பாப்பா அலறும் சப்தமும் எழும்பியது.

முத்துவுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. அவனுக்கு வாய்விட்டுக் கதற வேண்டும் போலிருந்தது. சிதைந்து கிடந்த புத்தர் பொம்மையை நோக்கினான்.

அவர் போதித்த அன்பு எங்கே போயிற்று?

“அன்பு கொள்வீர்; அறமொடு வாழ்வீர்” என்று அவர் போதித்த அறிவுரைகள் என்னவாயிற்று?

முத்துவுக்கு வாய்த்த முதலாளி – அந்தப் பாப்பா வுக்கு வாய்த்த அப்பா – இப்படியாக இந்த உலகத் துக்கு வாய்த்த அன்பற்றவர்கள் எத்தனையோ பேர்!

முத்து தன் தலையில் வழிந்த இரத்தத்தைத் துடைத் தான். செந்நிறமான கையை வெறிக்கப் பார்த்தான். ஏனோ சிரித்தான். அந்தச் சிரிப்பிலே அடங்கியிருக்கும் பொருள் என்ன? அந்தக் கேள்வியை முத்துவிடமே கேட்டு விட்டால் என்ன? ஆனால், அதற்குள் அவன் நடக்கத் துவங்கி விட்டானே! அவன் எங்கே போகிறான்? “ஐயோ , உலகமே ! அன்பு நெஞ்சம் கொண்டோர் பரந்து கிடக்கும் உன் மேனியில் எந்த மூலையில் இருக்கிறார்கள்?” என்று தேடிக்கொண்டு செல்கிறானோ? இருக்கலாம் ; இருக்கலாம் ! எனினும் மிக மிகக் கடினமான பயணமல்லவா, அது!

ஆனால் தம்பிகளே! தங்கைகளே! அந்தப் பரிதாபத்திற்குரிய முத்து நண்பன் உங்களிடையே உலவுவான்; உங்களிடமும் வரலாம்; வருவான். அப்படி வந்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? “அன்புள்ள முத்துத் தம்பியே! உன் கதை எனக்குத் தெரியும்! நீ எங்கு நடந்து கொண்டேயிருக்கிறாய் என்றும் நான் அறிவேன்! நீ தேடிச் செல்கிறாயே, அந்த அன்பு நெஞ்சம் இதோ என்னிடம் இருக்கிறது ! நான் படித்திருக்கிறேனே…

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”

என்ற திருவள்ளுவரின் பொன்மொழிகளை அதன் உள்ளே புதைந்து கிடக்கும் உட்பொருளை அன்பின் வலிமையை – நான் உணர்ந்திருக்கிறேன்!” என்று பெருமையோடும் பூரிப்போடும் சொல்லுங்கள்!

அன்பு பூண்டு வாழுங்கள்!

– புத்தர் பொம்மை, முதற் பதிப்பு: நவம்பர் 1957, தமிழ் நிலையம், புதுக்கோட்டை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *