கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 9, 2019
பார்வையிட்டோர்: 2,923 
 

பீர்பால் அடிக்கடி புகையிலை உபயோகிப்பார். மன்னர் பலமுறை சொல்லியும் அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள அவரால் முடியவில்லை. அக்பரின் மூத்த அமைச்சர் ஒருவருக்கு பீர்பால் புகையிலை உபயோகிப்பது மிகவும் அருவறுப்பாக இருந்தது. நல்ல சந்தர்ப்பம் பார்த்து புகையிலைப் பழக்கத்துக்காகப் பீர்பாலை அவமானப் படுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்.

ஒருமுறை மன்னர் காற்றோட்டமாக அரண்மனைத் தோட்டத்தில் உலவிக் கொண்டிருந்தார். அவருடன் மூத்த அமைச்சரும் பீர்பாலும் சேர்ந்து உலவியவாறு உரையாடிக் கொண்டிருந்தனர்.

அரண்மனைத் தோட்டத்தின் வேலியோரத்தில் புகையிலைச் செடி ஒன்று தானாக முளைத்து வளர்ந்து இருந்தது. தெருவிலே சென்று கொண்டிருந்த கழுதை ஒன்று வேலியின் இடுக்கு
வழியாக முகத்தினை நுழைத்து அந்த புகையிலைச் செடியைத் திண்ணப் பார்த்தது.

இலையில் வாயை வைத்தவுடன் அதன் காரமும் நாற்றமும் பிடிக்காமல் செடியை விட்டுவிட்டு திங்காமல் வெறுப்போடு போய்விட்டது.

அதனைச் சுட்டிக் காட்டிய மூத்த அமைச்சர், “மன்னர் அவர்களே, பார்த்தீர்களா? நம் பீர்பாலுக்கு மிகவும் பிடித்தமான புகையிலை கேவலம் அந்த கழுதைக்குக்கூடப் பிடிக்கவில்லை!” என்றார் சிரிப்புடன். அவர் முகத்தில் இப்போது நிம்மதி.

உடனே பீர்பால் சிரித்துக் கொண்டே, “அமைச்சர் அவர்களே, உண்மையைத்தான் சொன்னீர்கள். புகையிலை எனக்கு மிகவும் பிடித்த பொருள்தான். ஆனால் கழுதைகளுக்குத்தான் புகையிலையைப் பிடிப்பதில்லை!” என்றார் ஒரே போடாக!

தனது வாக்கு வன்மையால் மூக்குடைத்தார் மூத்த அமைச்சரை பீர்பால்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *