பிணியும் மருந்தும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 12,978 
 

ஓர் ஊரில் ஒரு மனிதன் இருந்தான். அவனுக்கு ஒரு நாள் வயிற்றுவலி கண்டது. சிறுது நேரம் வலித்துக் கொண்டு இருந்து பின் விட்டுவிட்டது. ஏதோ உணவுக்கோளாறு என்று பேசாமல் இருந்து விட்டான். பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் வயிற்றுவலி ஏற்பட்டது. வலிக்கிறவரை வயிற்றை அமுக்கிப் பிடித்துக்கொண்டு இருந்து வலி விட்ட பின் அதைப்பற்றி மறந்தே போய்விட்டான்.

நாளாக ஆக அடிக்கடி வயிற்றை வலித்தது. வலி வந்த போதெல்லாம் துன்பப்பட்டு, விட்ட பிறகு அதைப் பற்றிச் சிந்திக்காமலே இறந்துவிட்டான் அவன். அதனால் வயிற்றுவலி முற்றியது.

ஒரு நாள் மிக அதிகமாக வயிற்று வலித்தது. அந்த வலி பொறுக்க முடியாமல் தான் இறந்து போக நேரிடுமோ என்று கூட அம்மனிதன் அஞ்சினான்.

“என் கூடவே பிறந்த இந்த வியாதி என்னைக் கொல்கிறதே!” என்று அவன் துயரத்தோடு கூறினான்.

அன்று நாள் முழுவதும் வயிற்று வலித்துக் கொண்டே இருந்தபடியால், அவன் எவ்வாறேனும் வயிற்றுவலியை நிறுத்திவிட வேண்டும் என்று, ஒரு மருத்துவன் வீட்டுக்குச் சென்றான்.

மருத்துவன் அவன் உடலைப் பார்த்தான். வயிற்றை அமுக்கிப்பார்த்தான். பின் பல கேள்விகள் கேட்டான். கடைசியில் அவன், “இவ்வயிற்று வலியைத் தீர்க்கக்கூடிய மருந்து ஒன்றே ஒன்று தான். பறம்பு மலையில் உள்ள ஒரு மூலிகையைக் கொண்டு வந்து அரைத்துக் கொடுத்தால் வயிற்று வலி நின்றுவிடும்” என்றான்.

“ஐயா, என்ன செலவு வந்தாலும் சரி, அம்மூலிகையைக் கொண்டுவந்து என் வயிற்றுவலியை நிறுத்துங்கள்” என்று கெஞ்சினான் அம்மனிதன், மருத்துவன் அன்றே பறம்பு மலைக்குப் புறப்பட்டுச் சென்று அம்மருந்து மூலிகையைத் தேடிக்கண்டு பிடித்துக்கொண்டு வந்தான். அதை அரைத்துக் கொடுத்தவுடன், அம்மனிதனின் வயிற்றுவலி நின்று விட்டது.

“என் உடலோடு பிறந்த இவ்வியாதி என் உயிரைக் கொள்ள இருந்தது. ஆனால், எங்கோ மலையில் பிறந்த இம்மூலிகை என்னைக் காப்பாற்றிவிட்டது!” என்று மகிழ்ச்சியோடு கூறினான் அம்மனிதன்.

கருத்துரை: கூடப்பிறந்தவர்களும் சில சமயம் கொல்லத் துணிவார்கள். முன்பின் தெரியாதவர்களும் சில சமயம் துன்பத்தைத் துடைக்க முன் வருவார்கள். அவர்கள் நட்பை உதறிவிடக்கூடாது.

– நல்வழிச் சிறுகதைகள் – முதல் பாகம் – முதற் பாதிப்பு ஜனவரி 1965.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *