பாலைவனத்தில் பாச மழை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 9,866 
 

ஒரு பாலைவனத்தின் நடுவில் உயரமான ஒரு மரத்தின் உச்சாணிக் கிளையின் உச்சிக் கொம்பில் கூடு கட்டியிருந்தது ராஜாளி ஒன்று. உயரமான கோபுரத்தின் உச்சியில் அமர்ந்து ஊர் முழுவதையும் கண்காணிக்கும் காவல்காரனைப் போல, அந்த மணற்காடு முழுவதையும் நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும் அந்த ராஜாளி! அதன் பார்வையே அனைவருக்கும் அச்சம் தரும்!

அந்த மரம் முழுவதும் தனக்குத்தான் சொந்தம் என்று வேறு எந்தப் பறவையும் அந்த மரத்தில் கூடு கட்டாமல் பார்த்துக் கொண்டது. காகமோ, குருவியோ கூடு கட்ட வந்தால் துரத்தியடித்து விடும்!அவையும்பக்கத்தில் உள்ள சிறு மரங்களுக்குப் பறந்துவிடும்!

இப்படி தனிமரத்தில் தன்னிகரில்லா தலைவனாக ராஜாளி இறுமாந்து இருந்தபோது, ஒரு நாள் தவறி வந்த ஒரு குயில் அந்த மரத்தில் அடைக்கலம் தேடியது!

வேறு எங்கேயோ தூரத்திலிருந்து பறந்து… பறந்து… பறந்து வந்து களைத்துப் போய் இந்த மரத்தில் உட்கார்ந்து விட்டது!

‘‘அப்பாடா… நல்ல ‘குளுகுளு’ நிழல்! ‘‘யாரையும் காணோம். எந்த பயமும் இல்லாமல் இங்கேயே இருக்கலாம்…’’

அந்த நேரத்தில் ராஜாளி இரை தேடப் போயிருந்தது!

அந்த மரத்தின் கிளையில் ஒரு இடத்தைத் தேடி& சில குச்சிகள், சிறிய கிளைகள், நார் இலைகள் எல்லம் பரப்பி ஒரு கூட்டைத் தயார் செய்து விட்டது.

‘அம்மாடி, இனி நிம்மதியாக ஓய்வெடுக்கலாம்…’

இதமான காற்று, இலைகள் சாமரம் வீச… இனிய உறக்கத்தில் ஆழ்ந்தது குயில்!

இரவு வந்தது. எல்லாம் இருண்டன.

வானத்து நட்சத்திரங்கள்கூட ஓய்வெடுக்கப் போய்விட்டன! நிலவும் வெளிவராது கண்ணயர்ந்து விட்டது.

இயற்கை உறங்குவதில்லை!

மெதுவாக தேய்த்துத் தேய்த்து இருட்டை விலக்குவதற்குள் காலையாகிவிட்டது! கதிரவனை உந்தித் தள்ளி கிழக்குப் பக்கம் எட்டிப் பார்க்க வைத்துவிட்டது!

சூரியனின் ஒளி கண்ணைத் தடவியபோதுதான் குயில் விழித்தது. கண் திறந்து பார்த்தது!

உள்ளும் புறமும் கொள்ளை மகிழ்ச்சி!

‘ஒருபாட்டுபாடவேண்டும்போல இருக்கிறது!’

மெதுவாகத் தாவி பக்கத்திலிருந்த ஒரு கிளையின் நுனியில் அமர்ந்தது. காலைத் தென்றலில் கிளை ஆடி அசைந்து ஊஞ்சலாட்டியது!

‘‘கூக்குக்கூ… கூக்குக்கூ…’’

சத்தமாகக் குரலெழுப்பி கீதம் இசைத்தது குயில்! சத்தம் கேட்ட ராஜாளி சிலிர்த்து எழுந்தது!

‘‘இந்த விடியாதபொழுதில் என்னுடைய மரத்தில் அமர்ந்து கொண்டு யாரடா அவன் பாடுவது?’’ கோபத்தில் அலறியது!

திடீரென்று கேட்ட அலறலில் நடுங்கிப் போனது குயில். இருப்பினும் சுதாரித்துக்கொண்டு ‘‘அண்ணே, நான்தான் குயில்’’ என்றது.

சத்தம் வந்த திசைநோக்கிப் பறந்துவந்த ராஜாளி, சிறிய கரியநிறக் குயிலையும் அருகில் ஒரு சிறிய கூட்டையும் பார்த்தது. கண்களில் கோபத்தின் நெருப்புப் பொறி!

‘‘யாரைக் கேட்டுடா இங்கே கூடுகட்டி இருக்கிறாய்?’’

‘‘அண்ணே… வழிதவறி இங்கே வந்துவிட்டேன். இங்கே யாரையும் எனக்குத் தெரியாது. ஒரு ஓரமாக உட்கார்ந்து கொள்கிறேன்’’ என்று குயில் கொஞ்சும் குரலில் கூறியதைக் கேட்டு ராஜாளி இரக்கப்பட்டது.

‘‘சரி உன் பாட்டு இங்கே கேட்கக்கூடாது. மீறி ஏதேனும் சத்தம் கேட்டால் அடுத்த நொடியே உன்னைத் துரத்திவிடுவேன் புரிந்ததா?’’ என்றது.

ராஜாளியும் குயிலும் ஒரே மரத்தில், அருகருகே & ஆனால் அந்நியர்களாக வாழ்ந்து வந்தன.

மழைக்காலம் வந்தது.

விடாத மழை!

வெளியே செல்ல முடியாமல் தவித்தது குயில். அதற்குப் பசித்தது!

என்ன செய்வது?

அடுத்த நாள் காலை ஒரு மீனைக் கவ்விக் கொண்டு பறந்து வந்தது ராஜாளி.

அருகில் சென்ற குயிலை அலட்சியம் செய்து, முழு மீனையும் தானே விழுங்கிவிட்டது.

ஏமாற்றத்துடன் திரும்பிவந்த குயில் பேசாமல் படுத்துக் கொண்டது.

மழை நின்றது. வானம் முழுவதும் வெளிச்சம்!

மீண்டும் சக்கரம்போல் இயங்கும் வாழ்க்கை!

ஒரு நாள் சீக்கிரமாகவே வந்த குயில், மேலே பார்த்தபோது ராஜாளி அங்கே இருந்தது.

‘அண்ணன் இன்று வெளியே செல்லவில்லையா? என்ன ஆயிற்று?’ குயில் தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டது.

அடுத்த நாளும் அப்படியே…

‘ஐயோ, அண்ணனுக்கு ஏதோ ஆகிவிட்டது…’

மெதுவாக… பயந்து… பயந்து… ராஜாளியின் கூட்டுக்கு அருகே சென்றது!

காய்ச்சலில்நடுங்கிக்கொண்டுகிடந்தது ராஜாளி.

குயில் வேகமாக பறந்து சென்று சில இலைகளை தன் வாயால் கவ்வி மென்று பறந்து ராஜாளியின் நெற்றியில் தடவியது!

மீண்டும் பலமுறை பறந்து பறந்து சென்று தானியமணிகளைப் பொறுக்கி வந்து ராஜாளிக்குத் தின்னக் கொடுத்தது.

இரவு முழுவதும் கண்விழித்து அருகிலேயே இருந்தது.

ராஜாளிக்கு மெல்ல,மெல்ல காய்ச்சல் குறைந்தது. உடல் நடுக்கம் நின்றது.

‘‘அண்ணே… இப்ப எப்படி இருக்கு?’’

பாசமிக்க அந்தக் குரலில், ராஜாளியின் கர்வம் அடங்கி போய்விட்டது.

‘‘சே! எவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டேன்..!

தன்னைத்தானே திட்டிக்கொண்டது.

‘‘என்னை மன்னிச்சிடு குயிலே… இனிமேல் நாம் இருவரும் சகோதரர்கள்… இனி நீ பாடலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உனக்கு நான் நண்பன், எனக்கு நீ…’’ உணர்ச்சியால் வார்த்தை தடுமாறியது!

‘‘கூக்குகூக்கூ… கூக்குக்கூ…’’

அன்பு பிரவாகத்தின் ஆனந்த கீதம் அந்தப் பாலைவனக் காட்டிலும் அலை அடித்தது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *