தோப்புக்கரணம் போட்ட தலைவன்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: December 22, 2022
பார்வையிட்டோர்: 5,559 
 

ஒரு காடு… அந்தக் காட்டுக்குத் தலைவனாக யானை இருந்தது. அது செல்லும் வழியில் எதிர்ப்படும் விலங்குகள் மரியாதையுடன் வணங்கும். புன்னைகையுடன் பேசும்.

இதையெல்லாம் பார்த்த நரி, ‘நான் காட்டுத் தலைவராக இருந்தால் எனக்கும் இப்படி வணக்கம் செய்வார்கள். தலைவராவது எப்படி?’ எனச் சிந்திக்கத் தொடங்கியது.

சீக்கிரமே ஒரு திட்டம் உதித்தது. காட்டு விலங்குகளைத் தனித்தனியே சந்தித்து, தன்னைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்தால், இதைச் செய்வேன். அதைச் செய்வேன் எனச் சொன்னது. நம்பிய விலங்குகளும் நரியின் பின்னால் அணிவகுத்தன.

நரியின் தலைமையில் வந்த விலங்குகளைப் பார்த்த யானை, “கூட்டமாக வந்திருக்கிறீர்களே என்ன விஷயம்?” எனக் கேட்டது.

“உன் ஆட்சியில் காடு கெட்டுவிட்டது” என ஆரம்பித்தது நரி.

“காடு கெட்டுவிட்டதா எப்படி?” எனக் கேட்டது. யானை.

நரி மற்ற விலங்குகளை ஒரு பார்வைப் பார்க்க, ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பித்தன.

“உன் வயிறு தொந்தி பெருகிவிட்டது. நிறைய காட்டுப் புற்களைத் தின்கிறாய். அதனால், மான்களும் முயல்களும் புல் கிடைக்காமல் வறுமையில் வாடுகின்றன.”

“தழைகளைத் தின்பதற்காகத் துதிக்கையினால் கிளைகளை முறிக்கிறாய். அதனால், காட்டு மரங்களின் வளர்ச்சி குறைந்துவிட்டது.”

“இரும்புத் தூண் போன்ற கால்களால் தரையை அழுத்தி நடக்கிறாய். அதனால், காட்டுப் பாதைகள் குண்டும் குழியுமாகி வருகின்றன’’ எனப் புகார்கள் அடுக்கப்பட்டன.

எல்லாம் கேட்ட யானை, “சரி, உங்கள் நோக்கம்தான் என்ன?” என்றது.

“நீ தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும்” என்றது நரி.

“ஆமாம்… ஆமாம்!” என ஆரவாரமிட்டன மற்ற விலங்குகள்.

தலைவர் பதவியிலிருந்து யானை அமைதியாக விலகிவிட்டது.

“அடுத்து யாரைத் தலைவராக்குவது?” எனக் கூட்டத்தைப் பார்த்து கேட்டது காட்டுப்பன்றி.

நரி முன்பே தயார்செய்து வைத்திருந்த காட்டுப்பூனை, “இது என்ன கேள்வி? நரியே தலைவராக இருக்கலாம்” என்றது.

“புதிய தலைவர் நரியார் வாழ்க… வாழ்க” என்ற கோஷம் கானகத்தை அதிரவைத்தது.

தலைவனான நரி, முன்பும் பின்பும் காட்டெருதுகளின் பாதுகாப்புப் படைச்சூழ கம்பீரமாகக் காட்டில் உலாவ ஆரம்பித்தது.

“யானை இப்படி நடந்துகொண்டதில்லை. இந்த நரி ரொம்பவும் அலட்டிக்கிறானே?’’ என்று விலங்குகள் முணுமுணுக்க ஆரம்பித்தன.

ஒரு நாள் நரியைப் பார்க்க வந்த காட்டுப்பூனை, “அண்ணே, நீ யானையைப் பதவியிலிருந்து இறக்கத் திட்டமிட்டதுபோல உன்னை விலக்க யாராவது திட்டமிட்டால் என்ன செய்யறது?” எனத் தூபம் போட்டது.

நரிக்குப் பயம் வந்துவிட்டது. “நீ சொல்வதும் சரிதான்” எனச் சிந்தனையில் ஆழ்ந்தது.

கொம்பு இல்லாத மான் ஒன்றை அழைத்து, “உன்னைச் சேர்ந்தவர்கள் கொம்பு இல்லா வகை. நீங்கள் கொம்பு மான்களுடன் ஏன் சேருகிறீர்கள்? தனி அமைப்பைத் தொடங்கினால் நிறைய சலுகைகள் பெறலாம். நீயே தலைவன். அதற்கு என் அரசு உதவி செய்யும்” என்றது நரி.

கண்களில் ஆசை மின்ன, “சரி” எனப் புறப்பட்டது அந்த மான்.

மான்களை நான்கு வகைகளாகப் பிரித்து, நான்கு தலைவர்களை உருவாக்கியது நரி. அதுபோல குரங்குகளில் சாதாரணக் குரங்கு, சிங்கவால் குரங்கு, நீலகிரி குரங்கு, முகமூடிக் குரங்கு எனப் பிரித்தது.

இப்படி, அந்தக் காட்டு விலங்குகளைப் பிரித்து, பல தலைவர்களை உருவாக்கிவிட்டதால், அங்கே ஒற்றுமை குறைந்தது. இனச் சண்டைகளும் உயிரிழப்புகளும் நடந்தன.

காட்டில் உள்ள விலங்குகளுக்குப் போதுமான உணவு இல்லை. குடிநீர் இல்லை. வறுமையினால் விலங்குகள் வருந்தின.

அன்று புல்லைத் தேடிப்போன புள்ளிமான், எதிரே வந்த முயலைப் பார்த்து, “எங்கேடா போயிட்டு வர்றே?” எனக் கேட்டது.

“அப்புறம் சொல்றேன். இப்போ நீ ஓடு… எல்லா மான்களையும் கூட்டிட்டு வா” என்றது.

“அடேய் குட்டி! நான் இங்கே இருக்கேன்” என மரக்கிளையிலிருந்து குரல் கொடுத்தது குரங்கு ஒன்று.

“நீயும் போ. குரங்குகளைக்் கூட்டிட்டு வா. அப்படியே மற்ற விலங்குகளையும் இங்கே வரச்சொல். மிக முக்கியமான விஷயம்” என்றது.

என்னமோ ஏதோ என்ற ஆர்வத்தில் எல்லா விலங்குகள் வந்துசேர்ந்தன. “என்னோடு வாங்க” எனச் சொல்லிவிட்டு முன்னால் நடந்தது முயல்.

அந்தக் காட்டின் எல்லையில் சில மூட்டைகள் இருந்தன. ஒரு மூட்டையைத் தூக்கிக்கொண்டு அடுத்தக் காட்டுக்குப் சென்றது காட்டுப்பன்றி. சற்று நேரத்தில் காலி பைகளுடன் வந்தது.

பன்றியை மடக்கிய விலங்குகள், “என்ன எடுத்துச் சென்றாய்? என்ன நடக்கிறது இங்கே?” எனக் கேட்டன.

பன்றிக்குப் பயத்தில் உடம்பு நடுங்கியது. “இந்த மூட்டையிலிருந்தது பழங்கள், பசும்புல், தானியங்கள். நரியார் ஆணைப்படி அடுத்தக் காட்டில் விற்றுவிட்டு வருகிறேன். உங்களின் ஒற்றுமையைக் குலைத்து, எங்கள் திட்டத்தைச் செயல்படுத்தினோம்’’ என்றது பன்றி.

சற்று நேரத்தில் முயலுடன் எல்லா விலங்குகளும் திரண்டுவந்ததைப் பார்த்த நரி, “என்ன உணவுப் பஞ்சம் பிரச்னைதனே? விரைவில் தீர்க்கிறேன்’’ என்றது.

“அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். உன்னைப் போகச்சொல்லவே வந்திருக்கோம்” என்றது முயல்.

“ஒற்றுமையாக இருந்த எங்களைத் தனித்தனியாகப் பிரித்த உன்னை, உயிரோடு விடுவதற்காக சந்தோஷப்படு’’ என்று முறைப்புடன் முன்னால் வந்தது காட்டெருமை.

விஷயம் புரிந்துபோன நரி, “என்னை விட்டுவிடுங்கள். கிளம்புகிறேன்” என்றது.

தாவிவந்த குரங்கு, “இரு… சும்மா போனால் எப்படி? 100 தோப்புக்கரணம் போட்டுவிட்டுச் செல்” என்றது.

காதைப் பிடித்துக்கொண்டு முழங்கால் முட்டி தரையில் தேயத் தேய தோப்புக்கரணம் போட ஆரம்பித்தது நரி.

– நவம்பர் 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *