தேரை தீங்கு விளைவிக்குமா?

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கோகுலம்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 29, 2023
பார்வையிட்டோர்: 6,321 
 

(1996 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நம்பி வாழை மரத்தில் கால்வைத்தான்.

“ஜாக்கிரதை அண்ணா. வழுக்கப் போகிறது. கீழே, மரத்தைச் சுத்தித் தண்ணி, மண்ணு கொள கொளன்னு இருக்கு” என்றாள் திவ்யா.

காலை அகட்டி வைத்து, சறுக்கி விழுந்து விடாமல் உறுதியாக நின்று கொண்ட நம்பி,

“கத்தியைக் கொடு” என்று கையை நீட்டினான். திவ்யா கத்தியைக் கொடுத்தாள்.

அம்மா, பூதொடுக்க நார் கேட்டாள். அதற்காகவே அண்ணனும் தங்கையும் தோட்டத்திற்கு வந்திருந்தனர். திவ்யா கொடுத்த கத்தியால், வாழை மரத்தில் கீழ்ப்பட்டையில் காய்ந்து தொங்கிய வாழை நாரை வெட்டினாள் நம்பி, வெட்டும் போது மட்டை விரிந்தது. அதிலிருந்து ‘பொல பொல’ வென்று குட்டித் தவளைகள் துள்ளிக் குதித்தன! இரண்டொன்று திவ்யாவின் மேலும் விழுந்தன!

“அண்ணா, தவளைக் குட்டிங்க!” என்று குரல் கொடுத்தாள் திவ்யா.

“ஆமாம். வாழைப் பட்டைக்குள்ள நிறைய தவளைக் குட்டிங்க இருக்கு” என்று நாரைக் கொடுத்தான் நம்பி.

“தத்தித் தத்தி நடந்து செல்லும் தவளை யாரே!” என்று பாடிக் கொண்டே உள்ளே ஓடினாள் திவ்யா.

காலில் அப்பிய மண்ணைக் கழுவிக் கொள்ள நம்பி கிணற்றுக்குப் போனான். காலைக் கழுவிக் கொண்டு அவள் திரும்பிய போது, கிணற்றை ஒட்டியிருந்த தாழ்வாரச் சுவரில் ஏராளமாகக் குட்டித் தவளைகள் ஒட்டியிருந்தன! கூரைக்கு அருகே கூட அத்தனை உயரத்தில் ஒன்று! திவ்யா, நாரைத் தண்ணீரில் நனைக்க வத்தவள், கூரை உயரத்திற்குப் போய்விட்ட குட்டித் தவளையை அதிசயத்துடன் பார்த்தான்.

“கூரை நோக்கி உயரே போகும்
தவளையாரே!”
குட்டை குளம் அலுத்துப் போச்சா
தவளையாரே!”

என்று உடனே பாட்டுக் கிளம்பியது. திவ்யாவின் பாட்டுச் சத்தத்தைக் கேட்டு அங்கே வந்த அப்பா. சுற்றுமுற்றும் பார்த்தார்.

“என்னப்பா பார்க்கறீங்க?”

“ஏம்மா, நீ தவளையைப் பத்திப் பாடினியே…? தவளை எங்கேன்னு பார்க்கறேன்?”

“இதோ இந்த சுவர் முழுக்கக் குட்டித் தவளையார் இருக்காரே! அதோ ஒரு குட்டித் தவளையார் சுவர் உச்சிக்குப் போயிட்டாரே?”

“வாழை மரத்துல, பட்டைக்குள்ள கூட நிறைய குட்டித் தவளைகள் இருக்குப்பா.”

“இதெல்லாம் தவளையே இல்லே! எல்லாம் தேரைகள்” என்றார் அப்பா.

“என்னப்பா இது! பார்த்தா குட்டித் தவளைங்க மாதிரியே இருக்கே?”

“தவளை மாதிரியே குதிச்சுது அப்பா!”

“தேரையும் கூடத் தவளை இனம்தான். ஆனால் தவளை தனிப் பிரிவு, தேரை தனிப் பிரிவு. இரண்டுமே பார்க்க ஒரே மாதிரித்தான் இருக்கும். ஆனால் நிறைய வித்தியாசம் இருக்கு, தவளை தத்தும். தேரை துள்ளிக் குதிக்கும்; பாயும். தவளை கள் நீர் நிலைகளில் அதிகம் இருக்கும். தேரைகள் சதுசதுப்பான வாழைத் தோட்டங்களில் அதிகம் இருக்கும். தவளை இரை பிடிக்க நாக்கை அதிகம் பயன்படுத்தும். தேரை முன் கைகளைப் பயன்படுத்தும், தவளை மழைக் காலத்தில் ‘கொடகொட’ சத்தம் போடும். தேரை போடாது. தேரை நூற்றுக்கணக்கில் முட்டை இடும். தவளை இந்த அளவுக்கு இடாது. தவளைக்கு துருத்திய கண்கள், தேரைக்கு ஒளிவீசும் கண்கள்,”

“என்னால் நம்பவே முடியலேப்பா! நீங்க சொல்லலை என்றால் இவைகளைத் தவளைகள் என்றுதான் நாங்கள் எண்ணிக் கொண்டிருப்போம்” என்றாள் திவ்யா.

“ஆமாம்பா, பல்லி மாதிரி சுவத்திலே ஒட்டிக்குதே? இது எப்படி?”

“சுவர் என்ன? தேரைகள் மரத்திலேயே கூட வாழும். இதற்கு ஏற்றபடி. இவை களின் விரல் நுனியில் உறிஞ்சிகள் (ADHESIVE DISCS) இருக்கும். இவைகளின் உதவியால் இவை மரமேறும்; சுவர்களிலும் ஏறும்.”

“அப்பா, இவை எங்கே முட்டை இடும்?”

“மரங்களிலும், நீர் நிலைகளுக்கு அருகேயும் வசித்தாலும் இவை முட்டை இடுவது நீர் நிலைகளில் தான், தவளை களைப் போலவே கொழகொழப்பான ஜெல்லிகளில் முட்டைகளிட்டு விடும். தவளைகளைப் போலவே தலைப் பிரட்டையாகி கடைசியில் தேரைகளாக மாறும்.”

“கல்லுக்குள் தேரை இருக்கும் என்பார்களே? அது உண்மைதானா?”

“தேரைகள் நீர்வளம் மிக்க பகுதிகளில் இடுக்குகளில், மரங்களில், வாழைத் தோட்டங்களில் வாழும், வறண்ட இடங்களில் இவை உயிர் வாழ முடியாது. அதனால் பாறைகளில் இவை உயிர் வாழும் என்பதை அறிவியல் அடிப்படையில் ஏற்க முடியாது.”

“தேரை ஓடியகாய் என்று அம்மா, அடிக்கடி கூறுவாளே? அது உண்மை தானா?”

“தென்னையில் குருத்து விடும் பருவத்தில், தேங்காயின் பருப்பாகும் பகுதியை வண்டுகள் தின்று விடும். அதனால் தேங்காயின் பருப்புகள் வளர்ச்சி குன்றி இருக்கும். இதைத்தான் தேரை ஓடியகாய் என்பார்கள். உண்மையில் இதற்கும் தேரைக்கும் சம்பந்தமே இல்லை. இதற்குக் காரணம் வண்டுகளே!”

“குழந்தைகன்மேல் தேரை விழுந்து விட்டால் அவை வளர்ச்சி குன்றி மெலித்து விடும் என்கிறார்களே?” என்று கேட்டுக் கொண்டே வந்தாள் அம்மா.

“குழந்தைகளின் உடல் மெலிவுக்குந் தேரைக்கும் சம்பந்தமே இல்லை, தேரையின் உடலில் மேல் தோலில் சுரப்பிகள் உண்டு, இவை, பட்டாலே அரிக்கும். நீரைச் சுரக்கும். மெல்லிய தோல் படைத்த குழந்தைகளின் மேல் தேரை விழுந்தால், அதிகமாகப் போனால் தோல் அரிப்பு நோய் வரலாம். அவ்வளவே ஆனால் தேரை அத்தனை எளிதில் விழுந்து விடாது. தேரைகளைப் பகைவர்களிடமிருந்து காப்பவை இந்தச் சுரப்பிகளே.”

“தேரைகளின் இரை என்ன”

“தவளைகளைப் போலவே இவை புழு. பூச்சிகள் எல்லாவற்றையும் பிடித்துத் தின் னும். அடிக்கடி சட்டை உரித்து, அதை உருட்டித்தானே தின்று விடும்” என்றார் அப்பா.

“அருவருப்பான தேரையால் யாருக்கு என்ன பயன்?” என்று மூகத்தைச் சுளித்தாள் அம்மா.

“தேரைகள் காண அருவருப்பாக இருந்தாலும் விவசாயிகளுக்கு உண்மையான நண்பள், பயிர், செடிகளுக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சி புழுக்களை இவை இரவில் இரையாக்கித் தின்று மனிதனுக்கு நன்மைபுரிகின்றன. தினமும் சுமார் நூறு பூச்சிகளையாவது ஒவ்வொரு தேரையும் அழிக்கின்றன. நாம் பயப்படுவது போல் தேரை தீங்கு இழைக்கக்கூடியவை அல்ல” என்றார் அப்பா.

“தேரை மாமா வாருங்க. எங்கள்
தோட்டம் செழிக்க வாழுங்க”

என்று பாடினாள் திவ்யா. எல்லோரும் சிரித்தனர்.

-01-07-1996

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *