தாயை ஏமாற்ற நினைத்தான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: March 1, 2022
பார்வையிட்டோர்: 4,213 
 

=ஒரு ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் படிக்கவில்லை. வேலை எதுவும் பார்க்கவில்லை. அவன் தந்தை இறந்து விட்டான். தாய் மட்டுமே இருந்தாள். அவள் தன்னிடம் இருந்த பணத்தை அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு வட்டிக்குக் கொடுப்பாள். அந்த வட்டியைக் கொண்டு வாழ்ந்து வந்தாள்.

“எனக்குப் பிறகு, உனக்கு யார் சோறு போடுவ. ஏதாவது வேலை செய்து பிழைத்தால் நல்லது என்று எவ்வளவோ சொல்லியும் அவன் அதை பொருட்படுத்துவதே இல்லை. மகன் மீது உள்ள பாசத்தால், தினமும் உணவு அளிப்பாள். அவ்வப் போது தாயிடம் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் கேட்டு வாங்கிக் கொண்டு போய் சூதாடுவான் ஒரு நாள், “எனக்கு இரு நூறு ரூபாய் கொடு நான் ஒரு வியாபாரம் செய்யப் போகிறேன் ஒரு மாதத்தில், திருப்பி தந்து விடுவேன்” என்று கெஞ்சிக் கேட்டான். தாய் கொடுக்க மறுத்து விட்டாள்.

அடுத்த நாள் அவன், ஒரு காவலரிடம் ரகசியமாக ஒரு செய்தி சொன்னான். (கிடைப்பதில் ஆளுக்குப் பாதி என்பது ரகசிய திட்டம்) அன்று இரவு காவலர் ஒருவர் அவனைப் பிடித்துக் கொண்டு, அவன் தாயிடம் வந்து, “அம்மா! உன் மகன் சூதாடினான். அவனைப் பிடித்து நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றோம். நூறு ரூபாய் அபராதம் போட்டிருக்கின்றனர். அதைக் கட்டாவிடில், மூன்று மாதம் சிறையில் இருக்கவேண்டும். என்ன சொல்கிறாய்? என்றார் காவலர்.

“ஐயா, என்ன சொல்லியும் அவன் வேலை செய்யாமல் ஊரைச் சுற்றித் திரிகிறான். நானோ இருப்பதைக் கொண்டு சிக்கனமாக வாழ்கிறேன். அதோடு பெற்ற கடனுக்காக அவனுக்குச் சோறு போடுகிறேன். இப்பொழுது நூறு ரூபாய் அபராதம் செலுத்தினால், மீண்டும், மீண்டும் சூதாடி விடுவான். ஆகையால், மூன்று மாதம் சிறையில் அவன் இருந்தால், புத்தியாவது வரும். எவ்வளவோ பெரிய மனிதர்கள், தேசபக்தர்கள் சிறைக்குப் போகவில்லையா? செயலில் வேறுபாடு இருந்தாலும் சிறைச்சாலை பொதுதானே?” என்று கூறி முடித்தாள் அவன் தாய்

அவனைக் கூட்டிக் கொண்டு காவலர் வெளியே சென்றார். தங்கள் திட்டம் தோல்வி அடைந்ததில் இருவருக்கும் ஏமாற்றம்.

– சிறுவர் சிறுமியருக்கு நீதிக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1997, முல்லை பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *